பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52


133. உரிமையியல் பொருட்பாடுகள் குறித்து உயர் நீதிமன்றங்களிலிருந்து எழும் மேன்முறையீடுகளில் உச்ச நீதிமன்றத்திற்குள்ள மேன்முறையீட்டு அதிகார வரம்பு:

(1) உரிமையியல் நடவடிக்கை ஒன்றில் இந்திய ஆட்சிநிலவரையிலுள்ள ஓர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புரை, தீர்ப்பாணை அல்லது இறுதியாணை எதுவும்-

(அ) அந்த வழக்கில் பொது முக்கியத்துவம் வாய்ந்த செறிவான சட்டப்பிரச்சினை ஒன்று உள்ளது என்றும்,
(ஆ)(ஆ) அந்தப் பிரச்சினையை உச்ச நீதிமன்றம் தீர்வு செய்வது தேவையாகிறது என உயர்நீதிமன்றம் கருதுகிறது என்றும்

அந்த உயர் நீதிமன்றம், 134அ உறுப்பின்படி உறுதிச்சான்றளிக்குமாயின், உச்ச நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்து கொள்வதற்கு உற்றது ஆகும்.

(2) 132ஆம் உறுப்பில் எது எவ்வாறிருப்பினும், (1) ஆம் கூறின்படி உச்ச நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்துகொள்ளும் தரப்பினர் எவரும், இந்த அரசமைப்பின் பொருள்கோள் குறித்துச் செறிவான சட்டப்பிரச்சினை ஒன்று தவறாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்று அந்த மேன்முறையீட்டிற்கான காரணங்களில் ஒன்றாக வலியுறுத்தலாம்.

(3) இந்த உறுப்பில் எது எவ்வாறிருப்பினும், நாடாளுமன்றம் சட்டத்தினால் பிறவாறு வகைசெய்தாலன்றி, ஓர் உயர் நீதிமன்றத்தின் தனித்த ஒரு நீதிபதியின் தீர்ப்புரை, தீர்ப்பாணை அல்லது இறுதியாணை எதுவும் உச்ச நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்துகொள்வதற்கு உற்றது ஆகாது.

134. குற்றவியல் பொருட்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்றத்திற்குள்ள மேன் முறையீட்டு அதிகாரவரம்பு :

(1) குற்றவியல் நடவடிக்கை ஒன்றில் இந்திய ஆட்சிநிலவரையிலுள்ள ஓர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புரை, இறுதியாணை அல்லது தீர்ப்புத் தண்டனை எதுவும், அந்த உயர் நீதிமன்றம்-

(அ) குற்றஞ்சார்த்தப்பெற்ற ஒருவரைக் குற்றத்தினின்றும் விடுதலை செய்யும் ஆணைமீதான மேன்முறையீட்டில் அதை மாற்றியமைத்து அவருக்கு மரண தண்டனை விதித்திருக்குமாயின், அல்லது
(ஆ) தன் அதிகாரத்தின் கீழமைந்த நீதிமன்றம் எதிலிருந்தும் வழக்கு ஒன்றை விசாரணைக்காகத் தன்முன் எடுத்துக்கொண்டு குற்றஞ்சார்த்தப் பெற்றவரை அந்த விசாரணையில், குற்றவாளி என்று தீர்ப்பளித்து, அவருக்கு மரண தண்டனை விதித்திருக்குமாயின், அல்லது
(இ) ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்யப்படத்தக்கது என 134அ உறுப்பின்படி உறுதியுரையளிக்குமாயின்

உச்ச நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்து கொள்வதற்கு உற்றது ஆகும்:

வரம்புரையாக: (இ) உட்கூறின்படியான மேன்முறையீடு, 145 ஆம் உறுப்பின் (1) ஆம் கூறின்படி அதன்பொருட்டுச் செய்யப்படும் வகையங்களுக்கும் உயர் நீதிமன்றம் வகுத்திடும் அல்லது வேண்டுறுத்தும் வரைக்கட்டுகளுக்கும் உட்பட்டதாயிருக்கும்.

(2) குற்றவியல் நடவடிக்கை ஒன்றில் இந்திய ஆட்சிநிலவரையிலுள்ள ஓர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புரை, இறுதியாணை அல்லது தீர்ப்புத்தண்டனை எதிலிருந்தும் எழும் மேன்முறையீடுகளை ஏற்பதற்கும் விசாரணை செய்வதற்கும் நாடாளுமன்றம் சட்டத்தினால், அத்தகைய சட்டத்தில் குறித்துரைக்கப்படும் வரைக்கட்டுகளுக்கும் வரம்புகளுக்கும் உட்பட்ட கூடுதல் அதிகாரங்களை உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/77&oldid=1467699" இலிருந்து மீள்விக்கப்பட்டது