பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53


134அ. உச்ச நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்துகொள்வதற்கான உறுதியுரை :

132ஆம் உறுப்பின் (1) ஆம் கூறில் அல்லது 133 ஆம் உறுப்பின் (1) ஆம் கூறில் அல்லது 134ஆம் உறுப்பின் (1) ஆம் கூறில் சுட்டப்பட்ட தீர்ப்புரை, தீர்ப்பாணை, இறுதியாணை அல்லது தீர்ப்புத் தண்டனை எதனையும் வழங்கும் அல்லது பிறப்பிக்கும் உயர் நீதிமன்றம், அவ்வாறு வழங்கிய அல்லது பிறப்பித்த பின்பு, கூடியவிரைவில், அவ்வழக்கினைப் பொறுத்து, 132ஆம் உறுப்பின் (1) ஆம் கூறில் அல்லது 133 ஆம் உறுப்பின் (1) ஆம் கூறில் அல்லது 134 ஆம் உறுப்பின் (1) ஆம் கூறின் (இ) உட்கூறில் சுட்டப்பட்ட தன்மையுடைய உறுதியுரை ஒன்றை அளிக்கலாமா என்ற பிரச்சினையைப் பற்றி-

(அ) தானே முனைந்து முடிவு செய்வது பொருத்தமெனக் கொள்ளுமாயின், தானே முடிவு செய்யலாம்; மற்றும்
(ஆ) அத்தகைய தீர்ப்புரை, தீர்ப்பாணை, இறுதியாணை அல்லது தீர்ப்புத் தண்டனை வழங்கப்பட்டதும் அல்லது பிறப்பிக்கப்பட்டதும் உடனடியாக, குறையுற்ற தரப்பினரால் அல்லது அவர் சார்பில் வாய்மொழியாக விண்ணப்பம் ஒன்று செய்துகொள்ளப்படுமாயின், அதன்மீது முடிவு செய்தல் வேண்டும்.

135. நிலவுறும் சட்டத்தின்படி கூட்டாட்சிய நீதிமன்றத்திற்குள்ள அதிகாரவரம்பும் அதிகாரங்களும் உச்ச நீதிமன்றத்தாலும் செலுத்தத்தகுவன ஆகும் :

133ஆம் உறுப்பின் அல்லது 134 ஆம் உறுப்பின் வகையங்கள் பொருந்துறாத பொருட்பாடு எதனையும் பொறுத்த அதிகாரவரம்பும் அதிகாரங்களும், நிலவுறும் சட்டம் ஒன்றன்படி இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு கூட்டாட்சிய நீதிமன்றத்தால் செலுத்தத்தகுவனவாக இருந்திருப்பின், நாடாளுமன்றம் சட்டத்தினால் பிறவாறு வகைசெய்கிறவரையில், அந்தப் பொருட்பாடு தொடர்பான அதிகாரவரம்பு, அதிகாரங்கள் ஆகியவற்றையும் உச்ச நீதிமன்றம் உடையது ஆகும்.

136. உச்ச நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்துகொள்வதற்கு அதன் தனியுறு அனுமதி:

(1) இந்த அத்தியாயத்தில் எது எவ்வாறிருப்பினும், உச்ச நீதிமன்றம், தனது உளத்தேர்வின்படி, இந்திய ஆட்சிநிலவரையிலுள்ள ஒரு நீதிமன்றத்தால் அல்லது தீர்ப்பாயத்தால் வழக்கு அல்லது பொருட்பாடு எதிலும் வழங்கப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புரை, தீர்ப்பாணை, அறுதித்தீர்வு, தீர்ப்புத் தண்டனை அல்லது ஆணை எதிலிருந்தும் மேன்முறையீடு செய்துகொள்வதற்குத் தனியுறு அனுமதி அளிக்கலாம்.

(2). (1)ஆம் கூறிலுள்ள எதுவும், ஆயுதப்படைகள் தொடர்பான சட்டம் ஒன்றினாலோ அதன் வழியாலோ அமைக்கப்பட்ட நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் ஒன்றினால் பிறப்பிக்கப்பட்ட அல்லது வழங்கப்பட்ட தீர்ப்புரை, அறுதித்தீர்வு, தீர்ப்புத் தண்டனை அல்லது ஆணை எதற்கும் பொருந்துறுவதில்லை.

137. உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்புரைகளை அல்லது ஆணைகளை மறு ஆய்வு செய்தல் :

உச்ச நீதிமன்றம், தான் பகர்ந்த தீர்ப்புரை அல்லது பிறப்பித்த ஆணை எதனையும் தானே மறு ஆய்வு செய்வதற்கு நாடாளுமன்றம் இயற்றும் சட்டத்தின் வகையங்களுக்கும் 145 ஆம் உறுப்பின்படி வகுக்கப்படும் விதிகளுக்கும் உட்பட்டு, அதிகாரம் உடையது ஆகும்.

138. உச்ச நீதிமன்ற அதிகாரவரம்பை விரிவாக்குதல் :

(1) உச்ச நீதிமன்றம், ஒன்றியத்துப் பட்டியலிலுள்ள பொருட்பாடுகளில் எதனையும் பொறுத்து நாடாளுமன்றம் சட்டத்தினால் வழங்கும் கூடுதல் அதிகாரவரம்பையும் அதிகாரங்களையும் உடையது ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/78&oldid=1467700" இலிருந்து மீள்விக்கப்பட்டது