பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54


(2) எந்தப் பொருட்பாடு பொறுத்தேனும் இந்திய அரசாங்கமும் ஒரு மாநில அரசாங்கமும் செய்துகொள்ளும் தனியுறு உடன்பாட்டின் வழியாக உச்ச நீதிமன்றத்திற்குக் கூடுதல் அதிகாரவரம்பையும் அதிகாரங்களையும் வழங்கி, உச்ச நீதிமன்றம் அவற்றைச் செலுத்துவதற்கு நாடாளுமன்றம் சட்டத்தினால் வகைசெய்யுமாயின், உச்ச நீதிமன்றம், அத்தகைய கூடுதல் அதிகாரவரம்பையும் அதிகாரங்களையும் உடையது ஆகும்.

139 .குறித்தசில நீதிப்பேராணைகளைப் பிறப்பிக்கும் அதிகாரங்களை உச்ச நீதிமன்றத்திற்கு வழங்குதல் :

32ஆம் உறுப்பின் (2) ஆம் கூறில் குறிப்பிடப்பட்டவை அல்லாத பிற எந்த நோக்கங்களுக்காகவும் பணிப்புரைகளை, ஆணைகளை அல்லது ஆட்கொணர்விப்பு, செயலுறுத்து, தடையுறுத்து, தகுதிவினவு, நெறிமுறைக்கேட்பு ஆகியவற்றின் தன்மைகொண்ட நீதிப்பேராணைகளை அல்லது அவற்றில் எதனையும் பிறப்பிக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றம் சட்டத்தினால் உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கலாம்.

139அ. குறித்தசில வழக்குகளை மாற்றுகை செய்தல் :

(1) ஒரே மாதிரியான அல்லது உட்பொருளில் ஒரே மாதிரியான சட்டப் பிரச்சினைகள் அடங்கிய வழக்குகள், உச்ச நீதிமன்றம், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்கள் இவற்றின் முன்போ, இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களின் முன்போ முடிவுறாநிலையிலிருக்குங்கால், உச்ச நீதிமன்றம், தானே முனைந்தோ இந்தியத் தலைமை வழக்கறிஞரால் அல்லது அத்தகைய வழக்கு ஒன்றின் தரப்பினர் ஒருவரால் செய்யப்பட்ட விண்ணப்பத்தின்மீதோ, அத்தகைய பிரச்சினைகள் பொது முக்கியத்துவம் வாய்ந்த செறிவான பிரச்சினைகளாக இருக்கின்றன எனத் தெளிவுறக்காணுமாயின், அந்த உயர் நீதிமன்றத்தின் அல்லது உயர் நீதிமன்றங்களின் முன்பு முடிவுறாநிலையிலுள்ள வழக்கு அல்லது வழக்குகளை உச்ச நீதிமன்றம் தன்முன்னர் எடுத்துக் கொண்டு அந்த வழக்குகள் அனைத்தையும் தானே முடிவு செய்யலாம்:

வரம்புரையாக: உச்ச நீதிமன்றம் மேற்சொன்ன சட்டப் பிரச்சினைகளை அறுதியாகத் தீர்வு செய்தபின்பு, தன்முன்னர் எடுத்துக்கொண்ட வழக்கினை, அத்தகைய பிரச்சினைகளின்மீது தான் அளித்த தீர்ப்புரையின் படியுடன், அந்த வழக்கு எந்த உயர் நீதிமன்றத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதோ அந்த உயர் நீதிமன்றத்திற்கு அதைத் திருப்பியனுப்பும்; அதனைப் பெற்றுக்கொண்டதன்மேல் அந்த உயர் நீதிமன்றம் அத்தகைய தீர்ப்புரைக்கிணங்க அந்த வழக்கினை முடிவு செய்ய முற்படுதல் வேண்டும்.

(2) ஓர் உயர் நீதிமன்றத்தின் முன்பு முடிவுறாநிலையிலுள்ள வழக்கு, மேன்முறையீடு அல்லது பிற நடவடிக்கை எதனையும், பிறிதோர் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுகை செய்வது நீதிவழுவா நெறிமுறைக்கு உகந்ததாக இருக்கும் என உச்ச நீதிமன்றம் கருதுமாயின், அது அவ்வாறே மாற்றலாம்.

140. உச்ச நீதிமன்றத்தின் சார்பியல்வான அதிகாரங்கள் : இந்த அரசமைப்பினாலோ அதன் வழியாலோ வழங்கப்பட்ட அதிகாரத்தை மேலும் திறம்படச் செலுத்த உச்ச நீதிமன்றத்தை இயல்விப்பதற்குத் தேவையாக அல்லது ஏற்புடையவையாக உள்ளவையும், இந்த அரசமைப்பின் வகையங்களில் எதற்கும் முரணாக இல்லாதவையுமான துணைவுறு அதிகாரங்களை அந்நீதிமன்றத்திற்கு வழங்குவதற்கு நாடாளுமன்றம் சட்டத்தினால் வகை செய்யலாம்.

141. உச்ச நீதிமன்றத்தால் விளம்பப்படும் சட்ட நெறி, நீதி மன்றங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் :

உச்ச நீதிமன்றத்தால் விளம்பப்படும் சட்டநெறி, இந்திய ஆட்சிநிலவரைக்குள் உள்ள நீதிமன்றங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/79&oldid=1467761" இலிருந்து மீள்விக்கப்பட்டது