பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55


142. உச்ச நீதிமன்றத் தீர்ப்பாணைகள், ஆணைகள் இவற்றைச் செயலுறுத்துதலும், வெளிக்கொணர்தல் முதலியவை குறித்த ஆணைகளும் :

(1) உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தைச் செலுத்துகையில், தன்முன் முடிவுறாநிலையிலுள்ள வழக்கு அல்லது பொருட்பாடு எதிலும் நிறைவுறு நீதி நிலையுறச்செய்வதற்குத் தேவையாகும் தீர்ப்பாணையை வழங்கலாம் அல்லது எதனையும் பிறப்பிக்கலாம்; அவ்வாறு வழங்கப்பட்ட தீர்ப்பாணை அல்லது பிறப்பிக்கப்பட்ட ஆணை எதுவும், நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டத்தாலோ அதன் வழியாலோ வகுத்துரைக்கப்படும் முறையிலும், அவ்வாறு நாடாளுமன்றம் வகைசெய்யும் வரையில், குடியரசுத்தலைவர் ஆணையின்வழி வகுத்துரைக்கும் முறையிலும், இந்திய ஆட்சிநிலவரை எங்கணும் செயலுறுத்தத் தகுவது ஆகும்.

(2) நாடாளுமன்றத்தால் இதன்பொருட்டு இயற்றப்படும் சட்டம் ஒன்றன் வகையங்களுக்கு உட்பட்டு, உச்ச நீதிமன்றம், இந்திய ஆட்சிநிலவரை முழுவதிலும், எவரையும் தன்முன் வரவழைப்பதற்காக, ஆவணங்கள் எவற்றையும் வெளிக்கொணர்வதற்காக அல்லது முன்னிலைப்படுத்துவதற்காக அல்லது தன்னை அவமதித்த குற்றம் பற்றி விசாரிக்கவோ அது குறித்துத் தண்டனை விதிக்கவோ ஆணை எதனையும் பிறப்பிப்பதற்கான அதிகாரங்கள் அனைத்தையும் உடையது ஆகும்.

143. உச்ச நீதிமன்றத்துடன் கலந்தாய்வு செய்வதற்குக் குடியரசுத்தலைவருக்குள்ள அதிகாரம் :

(1) சட்டவிளக்கம் அல்லது பொருண்மை பற்றி எழுந்துள்ள அல்லது எழக்கூடிய ஒரு பிரச்சினையின் தன்மை அல்லது பொது முக்கியத்துவம் காரணமாக அதன்மீது உச்ச நீதிமன்றத்தின் கருத்துரையைப் பெறுவது உகந்தது என்று குடியரசுத்தலைவருக்கு எச்சமயத்திலேனும் தோன்றுமாயின், அப்பொழுது, அவர் அப்பிரச்சினையை ஓர்வு செய்யுமாறு அந்நீதிமன்றத்திற்குக் குறித்தனுப்பலாம்; அதன்மீது அந்நீதிமன்றம் தான் தக்கதெனக் கருதும் விசாரணைக்குப் பின்பு, தன் கருத்துரையைக் குடியரசுத்தலைவருக்குத் தெரிவிக்கும்.

(2). 131ஆம் உறுப்பின் வரம்புரையில் எது எவ்வாறிருப்பினும், குடியரசுத்தலைவர், அந்த வரம்புரையில் குறிப்பிடப்பட்ட வகை சார்ந்த ஒரு வழக்கை உச்ச நீதிமன்றத்தின் கருத்துரையைப் பெறுவதற்காக அதற்குக் குறித்தனுப்பலாம்; அதன்மீது உச்ச நீதிமன்றம் தான் தக்கதெனக் கருதும் விசாரணைக்குப் பின்பு, தன் கருத்துரையைக் குடியரசுத்தலைவருக்குத் தெரிவிக்கும்.

144.ஆட்சிமுறை மற்றும் நீதிமுறை அதிகாரஅமைப்புகள் உச்ச நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் செயலுறும் :

இந்திய ஆட்சிநிலவரையிலுள்ள ஆட்சிமுறை மற்றும் நீதிமுறை அதிகாரஅமைப்புகள் அனைத்தும், உச்ச நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் செயலுறவேண்டும்.

[1][144அ. ★★]

145. நீதிமன்ற விதிகள் முதலியன :

(1) நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டத்தின் வகையங்களுக்கு உட்பட்டு, உச்ச உள்ளடங்கலாக, நீதிமன்றம், குடியரசுத்தலைவரின் ஒப்பேற்புடன், பின்கண்டவை அந்நீதிமன்றத்தின் நடைமுறையையும் நெறிமுறையையும் பொதுவாறாக ஒழுங்குறுத்துவதற்கான விதிகளை அவ்வப்போது வகுத்திடலாம்—

(அ) அந்நீதிமன்றத்தில் வழக்குரைத்தொழில் புரிபவர்கள் குறித்த விதிகள்;
(ஆ)(ஆ) மேல்முறையீடுகளை விசாரிப்பதற்கான நெறிமுறை, மற்றும் எந்தக் கால அளவிற்குள் மேன்முறையீடுகளை அந்நீதிமன்றத்தில் முன்னிட வேண்டும் என்பது உள்ளடங்கலாக, மேன்முறையீடு தொடர்பான பிற பொருட்பாடுகள் ஆகியவை குறித்த விதிகள்;


  1. 1977ஆம் ஆண்டு அரசமைப்பு (நாற்பத்து மூன்றாம் திருத்தம்)ச் சட்டத்தின் 5ஆம் பிரிவினால் (13-4-1978 முதல் செல்திறம் பெறுமாறு நீக்கறவு செய்யப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/80&oldid=1467768" இலிருந்து மீள்விக்கப்பட்டது