பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56


(இ) III ஆம் பகுதியின்படி வழங்கப்பட்ட உரிமைகளில் எதனையும் அந்நீதிமன்றம் செயலுறுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்த விதிகள்;
(இஇ) 139அ உறுப்பின்படி அந்நீதிமன்றத்தின் முன்புள்ள நடவடிக்கைள் குறித்த விதிகள்;
(ஈ) 134ஆம் உறுப்பின் (1) ஆம் கூறின் (இ) உட்கூறின்படி மேன்முறையீடுகளை ஏற்று எடுப்பது குறித்த விதிகள்;
(உ) அந்நீதிமன்றத்தால் பகரப்பட்ட தீர்ப்புரையோ பிறப்பிக்கப்பட்ட ஆணையோ எந்த வரைக்கட்டுகளுக்கு உட்பட்டு மறுஆய்வு செய்யப்படலாம் என்பது குறித்த விதிகள்; மேலும் அத்தகைய மறுஆய்வு செய்வதற்கு எந்தக் காலஅளவிற்குள் அந்நீதிமன்றத்திற்கு விண்ணப்பங்கள் முன்னிடப்பட வேண்டும் என்பது உள்ளடங்கலாக, அத்தகைய மறுஆய்வு செய்தற்குரிய நெறிமுறை குறித்த விதிகள்;
(ஊ) அந்நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும், அவற்றைச் சார்ந்தவற்றிற்குமான செலவடைகள், அவற்றைப் பொறுத்து விதிக்கப்பட வேண்டிய கட்டணங்கள் ஆகியவை குறித்த விதிகள்;
(எ) பிணையத்தில் விடுவிப்பது குறித்த விதிகள்;
(ஏ) நடவடிக்கைகளை நிறுத்திவைப்பது குறித்த விதிகள்;
(ஐ) அற்பமானது அல்லது அலைக்கழிப்பதாகவுள்ளது அல்லது காலங்கடத்துவதற்கென்றே கொணரப்பட்டுள்ளது என்று அந்நீதிமன்றத்திற்குத் தோன்றும் மேன்முறையீடு எதனையும் குறுகு முறையில் அறுதித்தீர்வு செய்வதற்கு வகைசெய்யும் விதிகள்;
(ஒ)317 உறுப்பின் (1) ஆம் கூறில் சுட்டப்பட்டுள்ள விசாரணைகளுக்கான நெறிமுறை குறித்த விதிகள்.

(2). (3)ஆம் கூறின் வகையங்களுக்கு உட்பட்டு, எந்த வகையான விசாரணைக்காகவும் அமரவேண்டிய நீதிபதிகளின் எண்ணிக்கை குறைந்தது எத்தனை இருக்கவேண்டும் என்பதை இந்த உறுப்பின்படி வகுக்கப்பட்ட விதிகள் நிருணயிக்கலாம்; தனித்தமர் நீதிபதிகளுக்கும் நீதியர் ஆயங்களுக்கும் உள்ள அதிகாரங்களுக்கு இவ்விதிகள் வகைசெய்யலாம்.

(3) இந்த அரசமைப்பின் பொருள்கோள் குறித்த செறிவான சட்டப்பிரச்சினை ஒன்று அடங்கியுள்ள வழக்கு எதனையும் தீர்வு செய்வதற்கோ 143ஆம் உறுப்பின்படி குறித்தனுப்பப்படும் எதனையும் விசாரிப்பதற்கோ அமரவேண்டிய நீதிபதிகளின் எண்ணிக்கை குறைந்தது ஐந்தாக இருத்தல் வேண்டும்:

வரம்புரையாக: 132ஆம் உறுப்பு நீங்கலாக, இந்த அத்தியாயத்தின் பிற வகையங்களில் ஒன்றன்படி மேன்முறையீட்டை விசாரிக்கும் நீதிமன்றம் ஐவருக்குக் குறைவான நீதிபதிகளைக் கொண்டிருந்து, அந்த மேன்முறையீட்டை விசாரிக்கையில் இந்த அரசமைப்பின் பொருள்கோள் குறித்த செறிவான சட்டப்பிரச்சனை அந்த மேன்முறையீட்டில் அடங்கியுள்ளது என்றும், அதைத் தீர்மானிப்பது அந்த மேன்முறையீட்டை முடிவு செய்வதற்குத் தேவையாகவுள்ளது என்றும் தெளிவுறக்காணுமிடத்து, அந்நீதிமன்றம், அந்த பிரச்சினை அடங்கியுள்ள வழக்கு ஒன்றைத் தீர்வுசெய்வதற்காக இந்தக் கூறில் வேண்டுறுத்தப்பட்டுள்ளவாறு அமைக்கப்படும் ஒரு நீதிமன்றத்திற்கு, அதன் கருத்துரையைக் கோரி, அப்பிரச்சினையைக் குறித்தனுப்புதல் வேண்டும்; அக்கருத்துரையைப் பெற்றதன்மேல், அத்தகைய கருத்துரைக்கிணங்க, அந்த மேன்முறையீட்டை முடிவு செய்தல் வேண்டும்.

(4) உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்புரை எதுவும் நீதிமன்றப் பொதுவில் அல்லாமல் வழங்கப்படுதல் ஆகாது; அவ்வாறே, நீதிமன்றப் பொதுவில் வழங்கப்பட்ட கருத்துரையின்படி அல்லாமல், 143ஆம் உறுப்பின்படி அறிக்கை எதுவும் அளிக்கப்படுதல் ஆகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/81&oldid=1468512" இலிருந்து மீள்விக்கப்பட்டது