பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57


(5) தீர்ப்புரை எதுவும் மற்றும் அத்தகைய கருத்துரை எதுவும் அவ்வழக்கின் விசாரனையின்போது அமர்ந்திருந்த நீதிபதிகளில் பெரும்பான்மையோருடைய ஒருங்கிசைவுடன் அல்லாமல், உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்படுதல் ஆகாது; ஆனால், ஒருங்கிசைவளிக்காத நீதிபதி ஒருவர் தமது மாறுபட்ட தீர்ப்புரையையோ கருத்துரையையோ வழங்குவதை இந்த கூறிலுள்ள எதுவும் தடையூறு செய்வதாகக் கொள்ளுதல் ஆகாது.

146. உச்ச நீதிமன்றத்தின் அலுவலர்களும் பணியாளர்களும் செலவுகளும் :

(1) உச்ச நீதிமன்றத்தின் அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் இந்தியத் தலைமை நீதிபதியாலோ அவரால் பணிக்கப்பெறும் அந்நீதிமன்றத்தின் வேறொரு நீதிபதியாலோ அலுவலராலோ அமர்த்தப்பெறுவர்:

வரம்புரையாக குடியரசுத்தலைவர், தாம் வகுக்கும் விதியின் வாயிலாக, அவ்விதியில் குறித்துரைக்கப்படும் நேர்வுகளில், ஏற்கெனவே அந்நீதிமன்றத்தைச் சேர்ந்தவர் அல்லாத எவரும், ஒன்றியத்து அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைக் கலந்தாய்வு செய்தபின்பல்லாமல், அந்நீதிமன்றம் தொடர்பான பதவி எதற்கும் அமர்த்தப்பெறுதல் ஆகாது என வேண்டுறுத்தலாம்.

(2) நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டம் ஒன்றன் வகையங்களுக்கு உட்பட்டு, உச்ச நீதிமன்ற அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோரின் பணிவரைக்கட்டுகள், இந்திய தலைமை நீதிபதியாலோ அவரால் அதற்கென விதிகள் வகுப்பதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள அந்நீதிமன்றத்தின் வேறு நீதிபதி அல்லது அலுவலர் ஒருவராலோ வகுக்கப்படும் விதிகள் வகுத்துரைக்கின்றவாறு இருக்கும்: வரம்புரையாக: இந்தக் கூறின்படி வகுக்கப்படும் விதிகளில் வரையூதியங்கள், படித்தொகைகள், விடுப்பு அல்லது ஓய்வூதியங்கள் பற்றிய விதிகளுக்குக் குடியரசுத்தலைவரின் ஒப்பேற்பு வேண்டுவது ஆகும்.

(3) உச்ச நீதிமன்றத்தின் அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கும் அவர்கள் பொறுத்தும் வழங்கத்தக்க வரையூதியங்கள், படித்தொகைகள், ஓய்வூதியங்கள் அனைத்தும் உள்ளிட்ட அதன் நிருவாக செலவுகள், இந்தியத்திரள்நிதியத்தின்மீது சார்த்தப்படும்; மேலும் அந்நீதிமன்றம் பெறும் கட்டணங்களும் பிற பணத்தொகைகளும் அந்நிதியத்தை சேர்வன ஆகும்.

147. பொருள்கோள் :

இந்த அத்தியாயத்திலும் VI ஆம் பகுதியின் V ஆம் அத்தியாத்திலும் இந்த அரசமைப்பின் பொருள்கோள் குறித்த செறிவான சட்டப்பிரச்சினை என்று சுட்டப்படுபவை, 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டம். (அந்தச் சட்டத்தைத் திருத்தம் செய்யும் அல்லது அதற்குத் துணையாக அமையும் சட்டம் எதுவும் உள்ளடங்கலாக), ஆட்சியவையின் ஆணை அல்லது அதன்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை அல்லது 1946 ஆம் ஆண்டு இந்திய விடுதலைச் சட்டம் அல்லது அதன்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை ஆகியவற்றின் பொருள்கோள் குறித்த செறிவான சட்டப் பிரச்சினைகளையும் உள்ளடக்குவனவாகப் பொருள் கொள்ளப்படும்.

அத்தியாயம் V
இந்தியக் கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையர்

148. இந்தியக் கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையர் :

(1) இந்தியக் கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையர் என்று ஒருவர் இருப்பார்; குடியரசுத்தலைவர் தம் கையொப்பமும் முத்திரையும் கொண்ட அதிகார ஆணையின்வழி அவரை அமர்த்துவார்; மேலும், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவரை அகற்றுவதுபோல் அதே முறையிலும் அதே காரணங்களின் மீதும் மட்டுமே அவர் பதவியிலிருந்து அகற்றப்பெறுவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/82&oldid=1468513" இலிருந்து மீள்விக்கப்பட்டது