பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58


(2) இந்தியக் கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையராக அமர்த்தப்பெறும் ஒவ்வொருவரும் தாம் பதவி ஏற்பதற்கு முன்பு, குடியரசுத்தலைவரின் அல்லது அதன்பொருட்டு அவரால் அமர்த்தப்பெறும் ஒருவரின் முன்னிலையில், மூன்றாம் இணைப்புப்பட்டியலில் அதற்கென உள்ள சொன்முறையில், ஓர் ஆணைமொழியை அல்லது உறுதிமொழியை ஏற்றுக் கையொப்பமிடுதல் வேண்டும்.

(3) கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையரின் வரையூதியமும் பிற பணிவரைக்கட்டுகளும் நாடாளுமன்றம் சட்டத்தினால் தீர்மானிக்கிறவாறு இருக்கும்; அவ்வாறு தீர்மானிக்கப்படுகிற வரையில் அவை இரண்டாம் இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ளவாறு இருந்துவரும்:

வரம்புரையாக: கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையரின் வரையூதியமோ வாராமை விடுப்பு, ஓய்வூதியம் அல்லது ஓய்வுபெறும் வயது பொறுத்த அவரது உரிமைகளோ அவர் அமர்த்தப்பெற்றதன் பின்பு அவருக்குப் பாதகமான வகையில் மாற்றப்படுதல் ஆகாது.

(4) கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையர், தாம் பதவி வகிப்பது அற்றுப்போனபின்பு, இந்திய அரசாங்கத்தின்கீழோ மாநிலம் ஒன்றின் அரசாங்கத்தின்கீழோ மேற்கொண்டும் பதவி வகிக்கத் தகுமையுடையவர் ஆகார்.

(5) இந்த அரசமைப்பு, நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டம் ஆகியவற்றின் வகையங்களுக்கு உட்பட்டு, இந்தியத் தணிக்கைக் கணக்குத் துறையில் பணிபுரிபவர்களின் பணிவரைக்கட்டுகளும் கணக்காய்வர் தலைமைத் தணிக்கையரின் நிருவாக அதிகாரங்களும் அவரைக் கலந்தாய்வு செய்த பின்பு குடியரசுத்தலைவரால் வகுக்கப்படும் விதிகளின்வழி வகுத்துரைக்கப்படுகிறவாறு இருக்கும்.

(6) கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையரின் அலுவலகத்தில் பணி புரிபவர்களுக்கோ அவர்கள் பொறுத்தோ வழங்கத்தக்க வரையூதியங்கள், படித்தொகைகள், ஓய்வூதியங்கள் அனைத்தும் உள்ளடங்கலான அந்த அலுவலகத்து நிருவாகச் செலவுகள் இந்தியத் திரள்நிதியத்தின்மீது சார்த்தப்படும்.

149. கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையரின் கடமைகளும் அதிகாரங்களும் :

ஒன்றியம், மாநிலங்கள், பிற அதிகார அமைப்பு அல்லது குழுமம் ஆகியவற்றின் கணக்குகள் தொடர்பாக, நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டத்தாலோ அதன் வழியாலோ வகுத்துரைக்கப்படும் கடமைகளைக் கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையர் புரிவார், அதிகாரங்களைச் செலுத்துவார்; அதன் பொருட்டு, அவ்வாறு வகைசெய்யப்படும் வரையில், இந்தியத் தன்னாட்சியம், மாகாணங்கள் ஆகியவற்றின் கணக்குகள் தொடர்பாக, இந்த அரசமைப்பிள் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு, இந்தியத் தலைமைத் தணிக்கையருக்கு முறையே ஒன்றியம், மாநிலங்கள் ஆகியவற்றின் கணக்குகள் தொடர்பாக வழங்கப்பட்டதான அல்லது அவரால் செலுத்தத்தகுமான கடமைகளைப் புரிந்தும், அதிகாரங்களைச் செலுத்தியும் வருவார்.

150. ஒன்றியம், மாநிலங்கள் ஆகியவற்றின் கணக்குகளின் அமைவுமுறை :

ஒன்றியம், மாநிலங்கள் ஆகியவற்றின் கணக்குகள் இந்தியக் கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையரின் தேர்வுரை மீது, குடியரசுத்தலைவர் வகுத்துரைக்கும் அமைவுமுறையில் வைத்துவரப்படுதல் வேண்டும்.

151. தணிக்கை அறிக்கைகள் :

(1) ஒன்றியத்தின் கணக்குகளைப் பொறுத்த இந்தியக் கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையரின் அறிக்கைகள், குடியரசுத்தலைவருக்குப் பணிந்தனுப்பப்படுதல் வேண்டும்; அவற்றை அவர் நாடாளுமன்ற அவை ஒவ்வொன்றின் முன்பும் வைக்கும்படி செய்வார்.

(2) ஒரு மாநிலத்தின் கணக்குகளைப் பொறுத்த, இந்தியக் கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையரின் அறிக்கைகள், அந்த மாநிலத்தின் ஆளுநருக்குப் பணிந்தனுப்பப்படுதல் வேண்டும்; அவற்றை அவர் அந்த மாநிலச் சட்டமன்றத்தின் முன்பு வைக்கும்படி செய்வார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/83&oldid=1468514" இலிருந்து மீள்விக்கப்பட்டது