பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59


பகுதி VI
மாநிலங்கள்
அத்தியாயம் I—பொதுவியல்


152. பொருள்வரையறை :

இந்தப் பகுதியில் தறுவாயின் தேவை வேறானாலன்றி, “மாநிலம்" என்னும் சொல், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை உள்ளடக்குவதில்லை.

அத்தியாயம் II
ஆட்சித் துறை
ஆளுநர்

153. மாநிலங்களின் ஆளுநர்கள் :

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஆளுநர் என்று ஒருவர் இருப்பார்:

வரம்புரையாக: ஒருவரையே இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக அமர்த்துவதற்கு இந்த உறுப்பில் உள்ள எதுவும் தடையூறு ஆவதில்லை.

154. மாநிலத்தின் ஆட்சி அதிகாரம் :

(1) மாநிலத்தின் ஆட்சி அதிகாரம் ஆளுநரிடம் உற்றமைந்திருக்கும்; மேலும், அதை அவர் நேரடியாகவோ தமக்கு கீழமைந்துள்ள பதவியாளர்கள் வழியாகவோ இந்த அரசமைப்புக்கு இணங்கச் செலுத்தி வருவார். (2) இந்த உறுப்பிலுள்ள எதுவும்-

(அ) நிலவுறும் சட்டம் ஒன்றினால் பிறவகை அதிகார அமைப்பு எதற்கும் வழங்கப்பட்ட பதவிப்பணிகள் எவற்றையும் ஆளுநருக்கு மாற்றுவதாகக் கொள்ளப்படுதல் ஆகாது; அல்லது
(ஆ) (ஆ) நாடாளுமன்றம் அல்லது மாநிலச் சட்டமன்றம் சட்டத்தினால் ஆளுநரின் கீழமைந்துள்ள அதிகாரஅமைப்பு எதற்கும் பதவிப்பணிகளை வழங்குவதற்குத் தடையூறு ஆவதில்லை.

155. ஆளுநரை அமர்த்துதல் :

ஒரு மாநிலத்தின் ஆளுநர், குடியரசுத்தலைவரால் அவருடைய கையொப்பமும் முத்திரையும் கொண்ட அதிகார ஆணையின்வழி அமர்த்தப்பெறுவார்.

156. ஆளுநரின் பதவிக்காலம் :

(1) ஆளுநர், குடியரசுத்தலைவர் விழையுமளவும் பதவி வகிப்பர்.

(2) ஆளுநர், தம் கையொப்பமிட்டுக் குடியரசுத்தலைவருக்கு எழுத்து வழித் தெரிவித்துத் தம் பதவியை விட்டுவிலகிக்கொள்ளலாம்.

(3) இந்த உறுப்பின் மேலேகண்ட வகையங்களுக்கு உட்பட்டு, ஆளுநர் ஒருவர், தாம் பதவி ஏற்கும் தேதியிலிருந்து ஐந்தாண்டுக் காலத்திற்குப் பதவி வகிப்பார்:

வரம்புரையாக: ஆளுநர் ஒருவர் தம் பதவிக்காலம் கழிவுற்றாலுங்கூட, அவருக்கு அடுத்து வருபவர் பதவி ஏற்கும் வரையிலும் தொடர்ந்து பதவி வகித்து வருவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/84&oldid=1468517" இலிருந்து மீள்விக்கப்பட்டது