பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60


157. ஆளுநராக அமர்த்தப் பெறுவதற்கான தகுதிப்பாடுகள் :

ஒருவர், இந்தியாவின் குடிமகனாகவும், முப்பத்தைந்து வயது முடிந்தவராகவும் இருந்தாலன்றி, அவர் ஆளுநராக அமர்த்தப்பெறுவதற்கான தகுமையுடையவர் ஆகார்.

158. ஆளுநரின் பதவிக்கான வரைமுறைகள் :

(1) ஆளுநர், நாடாளுமன்ற ஈரவைகளில் எதிலுமோ முதலாம் இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள மாநிலம் ஒன்றன் சட்டமன்ற அவை ஒன்றிலோ உறுப்பினராக இருத்தல் ஆகாது; மேலும், நாடாளுமன்ற ஈரவைகளில் ஒன்றன் அல்லது ஒரு மாநிலச் சட்டமன்ற அவை ஒன்றன் உறுப்பினராகவுள்ள ஒருவர் ஆளுநராக அமர்த்தப்பெறுவாராயின், அவர் ஆளுநராகப் பதவி ஏற்கும் தேதியன்று அந்த அவையிலுள்ள தம் பதவியிடத்தை விட்டகன்றவராகக் கொள்ளப்பெறுவார்.

(2) ஆளுநர், பிற ஊதியப்பதவி எதனையும் வகித்தல் ஆகாது.

(3) ஆளுநர், தம் பதவிக்குரிய உறைவிடங்களில் வாடகை ஏதுமின்றி உறைவதற்கு உரிமைகொண்டவர் ஆவார்; நாடாளுமன்றம் சட்டத்தினால் தீர்மானிக்கும் பதவியூதியங்கள், படித்தொகைகள், மதிப்புரிமைகள் ஆகியவற்றிற்கும் அவர் உரிமைகொண்டவர் ஆவார்; அவ்வாறு அதன்பொருட்டு வகைசெய்யப்படும் வரையிலும், இரண்டாம் இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள பதவியூதியங்கள், படித்தொகைகள், மதிப்புரிமைகள் ஆகியவற்றிற்கு அவர் உரிமைகொண்டவர் ஆவார்.

(3அ) ஒருவரே இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட மாநிலங்களின் ஆளுநராக அமர்த்தப்பெறுமிடத்து, ஆளுநருக்கு வழங்கத்தகுமான பதவியூதியங்களையும் படித்தொகைகளையும், குடியரசுத்தலைவரால் ஆணையின் வழித் தீர்மானிக்கப்படும் வீதத்திற்கேற்ப, அந்தந்த மாநிலங்கள் பகிர்ந்தளித்தல் வேண்டும்.

(4) ஆளுநருக்குற்ற பதவியூதியங்களையும் படித்தொகைகளையும் அவருடைய பதவிக்காலத்தின் போது குறைத்துவிடுதல் ஆகாது.

159. ஆளுநருக்குற்ற ஆணைமொழி அல்லது உறுதிமொழி :

ஆளுநர் ஒவ்வொருவரும், ஆளுநரின் பதவிப்பணிகளை ஆற்றிவரும் ஒவ்வொருவரும், தாம் பதவி ஏற்பதற்கு முன்பு, அந்த மாநிலம் தொடர்பாக அதிகாரம் செலுத்தும் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் முன்னிலையில் அல்லது அவர் இல்லாதபோது, ஆங்கிருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதிகளில் மிக்க முதுநிலையராக உள்ள ஒருவரின் முன்னிலையில், ஓர் ஆணைமொழியை அல்லது உறுதிமொழியைப் பின்வரும் சொன்முறையில் உள்ளபடி ஏற்றுக் கையொப்பமிடுதல் வேண்டும்: அதாவது-

"அ.ஆ. ஆகிய நான் உண்மையான பற்றுடன் •••••••••••••••••••• (மாநிலத்தின் பெயர்) ஆளுநர் பதவிப் பொறுப்பை நிறைவேற்றி வருவதோடு (அல்லது ஆளுநருக்குள்ள பதவிப்பணிகளை ஆற்றிவருவதோடு) அரசமைப்பு முறையினையும் சட்டநெறியினையும் என் முழுத்திறன்கொண்டு புரந்தும் பேணியும் புறங்காத்தும் நிற்பேன் என்றும் •••••••••••••••••••• (மாநிலத்தின் பெயர்) மக்கள் நற்பணிக்கும் நல்வாழ்வுக்கும் முற்றுமாக என்னை நான்

ஆட்படுத்திக் கொள்வேன் என்றும் கடவுளை முன்னிறுத்திஆணைமொழிகின்றேன்”
உள்ளார்ந்து உறுதிமொழிகின்றேன்."

160. குறித்தசில எதிருறு நிகழ்வுகளில் ஆளுநரின் பதவிப் பணிகளை ஆற்றிவருதல் :

இந்த அத்தியாயத்தில் வகைசெய்யப்பட்டிராத எதிருறு நிகழ்வு எதிலும், மாநில ஆளுநரின் பதவிப்பணிகளை ஆற்றிவருவதற்கு, குடியரசுத்தலைவர் தாம் தக்கதெனக் கருதும் ஏற்பாட்டினைச் செய்யலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/85&oldid=1468519" இலிருந்து மீள்விக்கப்பட்டது