பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61


161. குறித்தசில நேர்வுகளில் குற்றமன்னிப்புகள் முதலியன அளிப்பதற்கும் மற்றும் தீர்ப்புத்தண்டனைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கு, இறுத்தல் செய்வதற்கு அல்லது மாற்றிக்குறைப்பதற்கும் ஆளுநருக்குள்ள அதிகாரம் :

ஒரு மாநில ஆளுநர், மாநிலத்தின் ஆட்சி அதிகாரம் அளாவும் பொருட்பாடு குறித்த சட்டத்திற்கு எதிரான ஒரு குற்றசெயலுக்காகக் குற்றத்தீர்ப்பளிக்கப்பெற்ற ஒருவரின் தண்டனையைப் பொறுத்துக் குற்றமன்னிப்புகள் அளிக்கவும் தண்டனையை நிறுத்திவைக்கவும் தண்டனையை அதை நிறைவேற்றுவதைத் தள்ளிவைக்கவும் அல்லது எஞ்சிய இறுத்தல்செய்யவும் அல்லது தீர்ப்புத்தண்டனையைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க, இறுத்தல்செய்ய அல்லது மாற்றிக்குறைக்கவும் அதிகாரம் உடையவர் ஆவார்.

162. மாநில ஆட்சி அதிகாரத்தின் அளாவுகை :

இந்த அரசமைப்பின் வகையங்களுக்கு உட்பட்டு, சட்டங்களை இயற்றுவதற்கு ஒரு மாநிலச் சட்டமன்றம் அதிகாரம் கொண்டுள்ள பொருட்பாடுகளை மாநில ஆட்சி அதிகாரம் அளாவி நிற்கும்:

வரம்புரையாக: ஒரு மாநிலச் சட்டமன்றமும் நாடாளுமன்றமும் சட்டங்களை இயற்ற அதிகாரம் கொண்டுள்ள பொருட்பாடு எதனையும் பற்றிய மாநிலத்தின் ஆட்சி அதிகாரம், இந்த அரசமைப்பினாலோ நாடாளுமன்றம் இயற்றிய சட்டம் ஒன்றினாலோ ஒன்றியத்துக்கு அல்லது அதன் அதிகாரஅமைப்புகளுக்கெனக் குறித்து வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்டதாகவும் அதன் வரம்பிற்குள் அடங்கியதாகவும் இருக்கும்.

அமைச்சரவை

163. ஆளுநருக்கு அமைச்சரவை உறுதுணையாக இருத்தலும் தேர்வுரை வழங்குதலும் :

(1) ஆளுநர், இந்த அரசமைப்பினாலோ அதன் வழியாலோ தம் உளத்தேர்வின்படி செயலாற்றவேண்டிய பதவிப்பணிகளை அல்லது அவற்றுள் எதனையும் தவிர, பிற பதவிப்பணிகளை ஆற்றுகையில், அவருக்கு உறுதுணையாக இருப்பதற்கும் தேர்வுரை வழங்குவதற்கும் முதலமைச்சரைத்தலைவராக கொண்ட அமைச்சரவை ஒன்று இருத்தல் வேண்டும்.

(2) ஒரு பொருட்பாடு இந்த அரசமைப்பினாலோ அதன் வழியாலோ ஆளுநர் தம் உளத்தேர்வின்படி செயலாற்றவேண்டிய ஒரு பொருட்பாடா இல்லையா என்பதைப் பொறுத்துப் பிரச்சினை எதுவும் எழுமாயின், ஆளுநர் தம் உளத்தேர்வின்படி செய்யும் முடிபே அறுதியானது ஆகும்; ஆளுநர், தம் உளத்தேர்வின்படி செயற்பட்டிருக்க வேண்டும் அல்லது கூடாது என்பதைக் காரணமாக காட்டி, அவர் செய்த எதனின் செல்லுந்தன்மையையும் எதிர்த்து வாதிடுதல் ஆகாது.

(3) ஆளுநருக்கு அமைச்சர்கள் தேர்வுரை எதுவும் வழங்கினார்களா, அவ்வாறாயின் அது யாது என்பது பற்றி நீதிமன்றம் எதிலும் விசாரிக்கப்படுதல் ஆகாது.

164. அமைச்சர்களைப் பற்றிய பிற வகையங்கள் :

(1) முதலமைச்சர், ஆளுநரால் பதவியில் அமர்த்தப் பெறுவார்; பிற அமைச்சர்கள், முதலமைச்சரின் தேர்வுரையின்படி ஆளுநரால் பதவியில் அமர்த்தப்பெறுவர்; அமைச்சர்கள், ஆளுநர் விழையுமளவும் பதவி வகிப்பர்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/86&oldid=1468520" இலிருந்து மீள்விக்கப்பட்டது