பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62


வரம்புரையாக: [1][சட்டிஸ்கர், ஜார்கண்ட்] மத்தியபிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் பழங்குடியினர் நல்வாழ்வைத் தம் பொறுப்பில் கொண்டுள்ள அமைச்சர் ஒருவர் இருத்தல் வேண்டும்; அத்துடன், பட்டியலில் கண்ட சாதியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோரின் நல்வாழ்வை அல்லது வேறு பணி எதனையுங்கூட அவர் தம் பொறுப்பில் கொண்டிருக்கலாம்.

[2][(1-அ) ஒரு மாநில அமைச்சரவையில், முதலமைச்சர் உள்ளடங்கலாக, அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கையானது, அந்த மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் பதினைந்து விழுக்காட்டிற்கு மேற்படுதல் ஆகாது:

வரம்புரையாக: ஒரு மாநிலத்தில் முதலமைச்சர் உள்ளடங்கலாக, அமைச்சர்களின் எண்ணிக்கையானது, பன்னிரண்டிற்குக் குறைவாக இருத்தல் ஆகாது.

மேலும் வரம்புரையாக: 2003ஆம் ஆண்டு அரசமைப்பு (தொண்ணூற்று ஒன்றாம் திருத்தம்) சட்டத் தொடக்கத்தில் மாநிலம் எதிலுமுள்ள அமைச்சரவையில், முதலமைச்சர் உள்ளடங்கலாக, அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கையானது, மேற்சொன்ன பதினைந்து விழுக்காட்டிற்கு அல்லது, நேர்வுக்கேற்ப, முதல் வரம்புரையில் குறித்துரைக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேற்படுகிறவிடத்து, அந்த மாநிலத்தில் அமைச்சர்களின் மொத்த எண்ணிகையானது, குடியரசுத்தலைவர், பொது அறிவிக்கை வாயிலாகக் குறித்திடும் தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள், இந்தக் கூறின் வகையங்களுக்கிணங்கியதாகச் செய்யப்படுதல் வேண்டும்.

(1-ஆ) ஒரு மாநிலச் சட்டமன்றப்பேரவையின் அல்லது பத்தாம் இணைப்புப்பட்டியலின்(2)ஆம் பத்தியின்படி சட்டமன்றப்பேரவையின் உறுப்பினராக இருப்பதற்குத் தகுதிக்கேடுற்று, அரசியல் கட்சி எதனையும் சார்ந்திருந்து சட்டமன்ற மேலவையைக்கொண்டிருக்கிற மாநில சட்டமன்றத்தின் ஏதாவது ஓர் அவையின் உறுப்பினர் ஒருவர், அவர் தகுதிக்கேடுற்ற தேதியிலிருந்து தொடங்கி, அத்தகைய உறுப்பினராக அவரது பதவிக் காலஅளவு முடிவுடையும் தேதி, அல்லது அந்தக் காலஅளவு முடிவடைவதற்கு முன்பு, அவர் ஒரு மாநிலச் சட்டமன்றப்பேரவையின் அல்லது நேர்வுக்கேற்ப, சட்டமன்ற மேலவையைக் கொண்டிருக்கிற ஒரு மாநிலச் சட்டமன்ற ஈரவைகளில் ஒன்றின் தேர்தல் எதிலும் போட்டியிடுகிறவிடத்து, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக விளம்பப்பட்ட தேதி, இவற்றில் எது முந்தையதோ அதுவரையுள்ள காலஅளவின்போது (1)ஆம் கூறின்படி ஓர் அமைச்சராக அமர்த்தப்படுவதற்குத் தகுதிக்கேடுற்றவராதலும் வேண்டும்.)

(2) அமைச்சரவை, மாநிலச் சட்டமன்றப் பேரவைக்குக் கூட்டுப்பொறுப்புடையதாக இருக்கும்.

(3) அமைச்சர் ஒருவர் தம் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, ஆளுநர் அவரைப் பதவியும் மறைகாப்பும் பற்றிய ஆணைமொழிகளை, மூன்றாம் இணைப்புப்பட்டியலில் அதற்கென உள்ள சொன்முறைகளுக்கு இணங்க ஏற்கச் செய்தல் வேண்டும்.

(4) அமைச்சர் ஒருவர் மாநிலச் சட்டமன்றத்தில் தொடர்ச்சியாக ஏதேனும் ஓர் ஆறு மாதக் காலஅளவிற்கு ஓர் உறுப்பினராக இல்லாவிடில், அந்தக் காலஅளவு கழிவுற்றதும் தம் அமைச்சர் பதவியை இழந்தவர் ஆவார்.

(5) அமைச்சர்களின் வரையூதியங்களும் படித்தொகைகளும், மாநிலச் சட்டமன்றம் அவ்வப்போது சட்டத்தினால் தீர்மானிக்கிறவாறு இருக்கும்; மாநிலச் சட்டமன்றம் அவ்வாறு தீர்மானிக்கிற வரையில், அவை இரண்டாம் இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ளவாறு இருந்துவரும்.


  1. 2006ஆம் ஆண்டு அரசமைப்பு (தொண்ணூற்று நான்காம் திருத்தம்)ச் சட்டத்தின் 2ஆம் பிரிவால் (12-6-2006 முதல் செல்திறம் பெறுமாறு) 2ஆம் பிரிவினால் மாற்றாக அமைக்கப்பட்டது.
  2. 2003ஆம் ஆண்டு அரசமைப்பு (தொண்ணூற்று ஒன்றாம் திருத்தம்)ச் சட்டத்தின் 3ஆம் பிரிவால் (1-1-2004 முதல் செல்திறம் பெறுமாறு) புகுத்தப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/87&oldid=1468521" இலிருந்து மீள்விக்கப்பட்டது