பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63


மாநிலத்தின் தலைமை வழக்குரைஞர்

165. மாநிலத்தின் தலைமை வழக்குரைஞர் :

(1) ஒவ்வொரு மாநிலத்தின் ஆளுநரும், உயர் நீதிமன்றம் ஒன்றன் நீதிபதியாக அமர்த்தபெறுவதற்குத் தகுதிப்பாடுடைய ஒருவரை அந்த மாநிலத்தின் தலைமை வழக்குரைஞராக அமர்த்துவார்.

(2) ஆளுநரால் அவ்வப்போது குறித்தனுப்பப்படும் சட்டப்பொருட்பாடுகளைப் பொறுத்து மாநில அரசாங்கத்திற்கு ஆய்வுரை அளிப்பதும் அவரால் தமக்குக் குறித்தளிக்கப்படும் சட்டப்பாங்குடைய பிற கடமைகளைப் புரிவதும் இந்த அரசமைப்பினாலோ அதன் வழியாலோ அல்லது நிகழுறு காலத்தில் செல்லாற்றலிலுள்ள பிற சட்டத்தாலோ அதன் வழியாலோ தமக்கு வழங்கப்படும் பதவிப்பணிகளை ஆற்றுவதும் மாநிலத் தலைமை வழக்குரைஞரின் கடமை ஆகும்.

(3) தலைமை வழக்குரைஞர், ஆளுநர் விழையுமளவும் பதவி வகிப்பார்; ஆளுநர் தீர்மானிக்கும் பணியூதியத்தைப் பெறுவார்.

அரசாங்க அலுவல் நடத்துமுறை

166. மாநில அரசாங்கத்தின் அலுவல் நடத்துமுறை :

(1) மாநில அரசாங்கத்தின் ஆட்சிதுறை நடவடிக்கைகள் அனைத்தும், ஆளுநரின் பதவிப்பெயரால் எடுக்கப்படுவதாக இயம்பப்பெறுதல் வேண்டும்.

(2) ஆளுநரின் பதவிப்பெயரால் பிறப்பிக்கப்படும் ஆணைகளும் ஆக்கப்படும் முறையாவணங்களும், ஆளுநர் வகுக்கும் விதிகளில் குறித்துரைக்கப்படும் முறையில் உறுதிச்சான்றிடப்படுதல் வேண்டும்; அவ்வாறு உறுதிச்சான்றிடப்பட்ட ஆணை அல்லது முறையாவணம் ஆளுநரால் பிறப்பிக்கப்பட்ட ஆணை அல்லது ஆக்கப்பட்ட முறையாவணம் அன்று என்னும் காரணம் காட்டி, அதன் செல்லுந்தன்மையை எதிர்த்து வாதிடுதல் ஆகாது.

(3) ஆளுநர், மாநில அரசாங்கத்தின் அலுவல்கள் மேலும் இசைவுற நடைபெறுவதற்காகவும் இந்த அரசமைப்பினாலோ அதன் வழியாலோ ஆளுநர் தம் உளத்தேர்வின்படி செயலாற்ற வேண்டிய அலுவலாக இல்லாத பிற அலுவல்களை அமைச்சர்களிடையே பகிர்ந்தொதுக்குவதற்காகவும் விதிகளை வகுப்பார்.

167. ஆளுநருக்குத் தகவல் தருவது முதலியவை பொறுத்து முதலமைச்சருக்குள்ள கடமைகள் :

பின்வருவன ஒவ்வொரு மாநில முதலமைச்சரின் கடமை ஆகும்-

(அ) மாநிலத்து அலுவல் நடவடிக்கைகளை நிருவகித்தல் தொடர்பாக அமைச்சரவையின் முடிபுகள் மற்றும் சட்டமியற்றுவதற்கான செயற்குறிப்புகள் அனைத்தையும் மாநில ஆளுநருக்குத் தெரிவித்தல்;
(ஆ) மாநிலத்து அலுவல் நடவடிக்கைகளை நிருவகித்தல் மற்றும் சட்டமியற்றுவதற்கான செயற்குறிப்புகள் தொடர்பாக ஆளுநர் கேட்டனுப்பும் தகவலைத் தருதல்; மற்றும்
(இ) ஓர் அமைச்சரால் முடிபு எடுக்கப்பட்டு, ஆனால் அமைச்சரவையால் ஓர்வு செய்யப்பட்டிராத பொருட்பாடு எதனையும் ஓர்வுக்காக அமைச்சரவையின் முன்வைக்குமாறு ஆளுநர் வேண்டுறுத்துவாராயின், அவ்வாறு செய்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/88&oldid=1468523" இலிருந்து மீள்விக்கப்பட்டது