பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64


அத்தியாயம் III
மாநிலச் சட்டமன்றம்
பொதுவியல்

168. மாநிலச் சட்டமன்றங்களின் அமைப்பு :

(1) ஒவ்வொரு மாநிலத்திற்குமென சட்டமன்றம் ஒன்று இருக்கும்; அது ஆளுநரையும்—

(அ) பீகார், மகாராஷ்டிரம், கர்நாடகம், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இரண்டு அவைகளையும்,
(ஆ)பிற மாநிலங்களில் ஓர் அவையினையும்
கொண்டதாக இருக்கும்.

(2) ஒரு மாநிலச் சட்டமன்றத்தில் இரண்டு அவைகள் இருக்குமிடத்து, ஒன்று சட்டமன்ற மேலவை என்றும், மற்றொன்று சட்டமன்றப் பேரவை என்றும் வழங்கப்பெறும்; ஓரவை மட்டுமே இருக்குமிடத்து, அது சட்டமன்றப் பேரவை என்று வழங்கப்பெறும்.

169. மாநிலங்களில் சட்டமன்ற மேலவைகளை ஒழித்தல் அல்லது உருவாக்குதல் :

(1). 168 ஆம் உறுப்பில் எது எவ்வாறிருப்பினும், சட்டமன்ற மேலவை உள்ள ஒரு மாநிலத்தில், அந்தச் சட்டமன்ற மேலவையை ஒழிப்பதற்கோ அத்தகைய சட்டமன்ற மேலவை இல்லாத ஒரு மாநிலத்தில் மேலவையை உருவாக்குவதற்கோ அந்த மாநிலத்தின் சட்டமன்றப் பேரவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மையும், மேலும், பேரவை உறுப்பினர்களில் வந்திருந்து வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கிற்குக் குறையாத பெரும்பான்மையும் கொண்ட உறுப்பினர்களால் தீர்மானம் ஒன்று அந்தப் பேரவையில் நிறைவேற்றப்படுமாயின், அவ்வாறு ஒழிப்பதற்கு அல்லது உருவாக்குவதற்கு நாடாளுமன்றம் சட்டத்தினால் வகைசெய்யலாம்.

(2). (1) ஆம் உறுப்பில் சுட்டப்பட்ட சட்டம் எதுவும், அச்சட்டத்தின் வகையங்களைச் செல்திறப்படுத்துவதற்குத் தேவையானவாறு, இந்த அரசமைப்பினைத் திருத்துவதற்கான வகையங்களைக் கொண்டிருத்தல் வேண்டும்; மேலும் நாடாளுமன்றம் தேவையெனக் கொள்ளும் துணைவுறு, சார்வுறு மற்றும் விளைவுறு வகையங்களைக் கொண்டதாகவும் இருக்கலாம்.

(3) மேற்சொன்ன சட்டம் எதுவும், 368 ஆம் உறுப்பைப் பொறுத்தவரை, இந்த அரசமைப்பின் திருத்தமெனக் கொள்ளப்படுதல் ஆகாது.

170. சட்டமன்றப் பேரவைகளின் கட்டமைப்பு:

(1). 333 ஆம் உறுப்பின் வகையங்களுக்கு உட்பட்டு, மாநிலம் ஒவ்வொன்றின் சட்டமன்றப் பேரவையும், அந்த மாநிலத்தின் நிலவரைத் தேர்தல் தொகுதிகளிலிருந்து நேரடித் தேர்தல் வாயிலாகத் தெரிந்தெடுக்கப்பெறும் ஐந்நூற்றுக்கு மேற்படாத, ஆனால் அறுபதுக்குக் குறையாத உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும்.

(2). (1) ஆம் கூறினைப் பொறுத்தவரை, மாநிலத்தின் தேர்தல் தொகுதி ஒவ்வொன்றின் மக்கள் தொகைக்கும் அதற்குப் பகிர்ந்தொதுக்கப்படும் பதவியிடங்களின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதம், இயலுமளவு, மாநிலம் எங்கணும் ஒருபடித்தாய் இருக்கும் வண்ணம், மாநிலம் ஒவ்வொன்றும் நிலவரைத் தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்படுதல் வேண்டும்.

விளக்கம். இந்தக் கூறில், "மக்கள் தொகை” என்னும் சொல், தொகை விவரங்கள் கண்டறிந்து வெளிடப்பட்டுள்ள கடைசிமுறை மக்கள் கணக்கெடுப்பின்படியாகும் மக்கள்தொகை என்று பொருள்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/89&oldid=1468525" இலிருந்து மீள்விக்கப்பட்டது