பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65


வரம்புரையாக: இந்த விளக்கத்தில் தொகை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ள கடைசிமுறை மக்கள் கணக்கெடுப்பு என்பது, [1][2026]ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதலாவதாக எடுக்கப்படும் மக்கள் கணக்கெடுப்பின்படியாகும் தொகை விவரங்கள் வெளியிடப்படும் வரையில் [2][2001]ஆம் மக்கள் கணக்கெடுப்பைச் சுட்டுவதாகவே பொருள்கொள்ளப்படுதல்வேண்டும்.

(3) ஒவ்வொரு முறையும் மக்கள் கணக்கெடுப்பு முடிவடைவதன்மேல் மாநிலம் ஒவ்வொன்றின் சட்டமன்றப் பேரவையிலுமுள்ள பதவியிடங்களின் மொத்த எண்ணிக்கையும் மாநிலம் ஒவ்வொன்றையும் நிலவரைத் தேர்தல் தொகுதிகளாகப் பிரித்தலும், நாடாளுமன்றம் சட்டத்தினால் தீர்மானிக்கும் அதிகாரஅமைப்பாலும் முறையிலும் மறுநேரமைவு செய்யப்படுதல்வேண்டும்:

வரம்புரையாக: அத்தகைய மறுநேரமைவு, அப்போது நிலவுறும் சட்டமன்றப் பேரவை கலைக்கப்படும் வரையில், அந்தப் பேரவையிலுள்ள சார்பாற்றத்தைப் பாதிக்காது:

மேலும் வரம்புரையாக: அத்தகைய மறுநேரமைவு, குடியரசுத்தலைவர் ஆணையின்வழி, குறித்துரைக்கும் தேதியிலிருந்து செல்திறம் பெறும்; அத்தகைய மறுநேரமைவு செல்திறம் பெறும்வரையில், அந்தச் சட்டமன்றப் பேரவைக்கான தேர்தல் எதுவும், அத்தகைய மறுநேரமைவுக்கு முன்பு நிலவிய நிலவரைத் தேர்தல் தொகுதிகளின் அடிப்படையில் நடத்தப்பெறலாம்:

இன்னும் வரம்புரையாக: 1[2026]ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதலாவதாக எடுக்கப்படும் மக்கள் கணக்கெடுப்பின்படியாகும் தொகை விவரங்கள் வெளியிடப்படும் வரையில்—

[3][(i) 1971ஆம் ஆண்டு மக்கள்கணக்கெடுப்பின் அடிப்படையில் மறுநேரமைவு செய்யப்பட்டவாறு, மாநிலம் ஒவ்வொன்றின் சட்டமன்றப் பேரவையிலுள்ள பதவியிடங்களின் மொத்த எண்ணிக்கையையும்;
(ii) [2][2001] ஆம் ஆண்டு மக்கள்கணக்கெடுப்பின் அடிப்படையில் மறுநேரமைவு செய்யப்பட்டவாறு, அந்த மாநிலத்தை நிலவரைத் தேர்தல் தொகுதிகளாகப் பிரிப்பதையும்,

இந்தக்கூறின்படி மறுநேரமைவு செய்யவேண்டியத் தேவையில்லை.]

171. சட்டமன்ற மேலவைகளின் கட்டமைப்பு :

(1) சட்டமன்ற மேலவை உள்ள ஒரு மாநிலத்தில் அம்மேலவையிலுள்ள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை, அந்த மாநிலச் சட்டமன்றப் பேரவையிலுள்ள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேற்படுதல் ஆகாது:

வரம்புரையாக: ஒரு மாநில சட்டமன்ற மேலவையிலுள்ள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை, எந்நேர்விலும், நாற்பதுக்குக் குறைவாக இருத்தல் ஆகாது.

(2) நாடாளுமன்றம், சட்டத்தினால் பிறவாறு வகைசெய்கிற வரையில், ஒரு மாநிலச் சட்டமன்ற மேலவையின் கட்டமைப்பு (3)ஆம் கூறில் வகை செய்யப்பட்டுள்ளவாறு இருக்கும்.


  1. 2001ஆம் ஆண்டு அரசமைப்பு (எண்பத்து நான்காம் திருத்தம்)ச் சட்டத்தின் 5ஆம் பிரிவால் “2000" என்பதற்கு மாற்றாக (21-2-2002 முதல் செல்திறம் பெறுமாறு) அமைக்கப்பட்டது.
  2. 2.0 2.1 2001ஆம் ஆண்டு அரசமைப்பு (எண்பத்து நான்காம் திருத்தம்)ச் சட்டத்தின் 5ஆம் பிரிவால் “1971” என்பதற்கு மாற்றாக (21-2-2002 முதல் செல்திறம் பெறுமாறு) அமைக்கப்பட்டு, மீண்டும் 2003ஆம் ஆண்டு அரசமைப்பு (எண்பத்து ஏழாம் திருத்தம்)ச் சட்டத்தின் 5ஆம் பிரிவால் "1991" என்பதற்கு மாற்றாக அமைக்கப்பட்டது.
  3. 2001ஆம் ஆண்டு அரசமைப்பு (எண்பத்து நான்காம் திருத்தம்)ச் சட்டத்தின் 5ஆம் பிரிவால் குறிப்பிட்ட சில சொற்களுக்கு மாற்றாக (21-2-2002 முதல் செல்திறம் பெறுமாறு) அமைக்கப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/90&oldid=1468526" இலிருந்து மீள்விக்கப்பட்டது