பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66


(3) ஒரு மாநிலச் சட்டமன்ற மேலவையிலுள்ள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில்

(அ)கூடுமான வரையில் மூன்றில் ஒரு பகுதியினர், நகராட்சிகள், மாவட்டக் கழகங்கள், நாடாளுமன்றம் சட்டத்தினால் குறித்துரைக்கும் அந்த மாநிலத்திலுள்ள பிற உள்ளாட்சி அதிகாரஅமைப்புகள் ஆகியவற்றின் உறுப்பினர்களைக் கொண்ட வாக்காளர்தொகுதிகளால் தேர்ந்தெடுக்கப்பெறுதல் வேண்டும்;
(ஆ) கூடுமானவரையில், பன்னிரண்டில் ஒரு பகுதியினர் இந்திய ஆட்சிநிலவரையிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகப் பட்டம் பெற்றவர்களாகவும் அல்லது அத்தகைய பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம்பெற்ற ஒருவரின் தகுதிப்பாடுகளுக்கு நிகரானவை என நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தாலோ அதன் வழியாலோ வகுத்துரைக்கப்படும் தகுதிப்பாடுகளைக் குறைந்தது மூன்று ஆண்டுகளேனும் உடையவர்களாகவும் அந்த மாநிலத்தில் வாழ்கின்றவர்களைக் கொண்ட வாக்காளர் தொகுதிகளால் தேர்ந்தெடுக்கப்பெறுதல் வேண்டும்;
(இ) கூடுமானவரையில், பன்னிரண்டில் ஒரு பகுதியினர் நாடாளுமன்றம் இயற்றும் சட்டத்தாலோ அதன் வழியாலோ வகுத்துரைக்கப்படும் உயர்நிலைப் பள்ளித் தரத்திற்குக் குறையாத அளவில் அமைந்த மாநிலத்திலுள்ள கல்வி நிறுவனங்களில் குறைந்தது மூன்று ஆண்டுகளேனும் ஆசிரியராக இருந்தவர்களைக் கொண்ட வாக்களார் தொகுதிகளால் தேர்ந்தெடுக்கப்பெறுதல் வேண்டும்;
(ஈ) கூடுமானவரையில், மூன்றில் ஒரு பகுதியினர், மாநிலச் சட்டமன்றப் பேரவை -உறுப்பினர்களால் அந்தப் பேரவையின் உறுப்பினர்களாக இல்லாதவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பெறுதல் வேண்டும்;
(உ) எஞ்சியோர், (5) ஆம் கூறின் வகையங்களுக்கு இணங்க ஆளுநரால் நியமனம்செய்யப்பெறுதல் வேண்டும்.

(4). (3)ஆம் கூறின் (அ), (ஆ), (இ) ஆகிய உட்கூறுகளின்படி தேர்ந்தெடுக்கப்பெற வேண்டிய உறுப்பினர்கள், நாடாளுமன்றம் இயற்றும் சட்டத்தாலோ அதன் வழியாலோ வகுத்துரைக்கப்படும் நிலவரைத் தேர்தல் தொகுதிகளிலிருந்து தெரிந்தெடுக்கப்பெறுதல் கூறின் (ஈ) வேண்டும்; மேலும், மேற்சொன்ன உட்கூறுகளின்படியும், மேற்சொன்ன உட்கூறின்படியும் நடைபெறும் தேர்தல்கள், ஒற்றைமாற்றுவாக்கு வழியிலான வீதச்சார்பாற்றமுறைக்கிணங்க நடத்தப்பெறுதல் வேண்டும்.

(5). (3) ஆம் கூறின் (உ) உட்கூறின்படி ஆளுநரால் நியமனம் செய்யப்பெறும் உறுப்பினர்கள் பின்வருவன போன்ற பொருட்பாடுகளைப் பொறுத்துச் சிறந்த தனியறிவோ, செயலுறு பட்டறிவோ உடையவர்களாக இருத்தல் வேண்டும்:-

இலக்கியம், அறிவியல், கலை, கூட்டுறவு இயக்கம் மற்றும் சமுதாயப்பணி.

172. மாநிலச் சட்டமன்றங்களின் காலவரை:

(1) ஒவ்வொரு மாநிலத்தின் சட்டமன்றப் பேரவையும், அது முன்னதாகவே கலைக்கப்பட்டாலன்றி, அதன் முதல் கூட்டத்திற்காகக் குறிக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்தாண்டுகள் தொடர்ந்து இருக்கும்; அதற்குமேல் நீடித்தலாகாது; மேற்சொன்ன ஐந்தாண்டுக் காலஅளவு கழிவுறுங்கால் அந்த அவை கலைக்கப்பட்டதாக ஆகிவிடும்:

வரம்புரையாக: நெருக்கடிநிலைச் சாற்றாணை ஒன்று செயற்பாட்டில் இருக்குங்கால், மேற்சொன்ன காலஅளவை, ஒரு தடவையில் ஓர் ஆண்டுக்கு மேற்படாமலும், எந்நேர்விலும், அந்தச் சாற்றாணை செயற்பாடு அற்றுப்போன பின்பு ஆறு மாதக் காலஅளவிற்கு மேற்படாமலும் நாடாளுமன்றம் சட்டத்தினால் நீட்டிக்கலாம்.

(2) ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவை கலைப்புக்கு உள்ளாவதில்லை; ஆனால், நாடாளுமன்றம் சட்டத்தினால் இதன்பொருட்டு வகுக்கும் வகையங்களுக்கு இணங்க, ஒவ்வோர் இரண்டாம் ஆண்டும் கழிவுறுவதன்மேல், கூடியவிரைவில், அந்த அவையின் உறுப்பினர்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் விலகிவிடுதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/91&oldid=1465051" இலிருந்து மீள்விக்கப்பட்டது