பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67


173. மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கான தகுதிப்பாடு :

ஒருவர்-

(அ) இந்தியாவின் குடிமகனாக இருக்கிறார் என்பதுடன், தேர்தல் ஆணையத்தால் அதன்பொருட்டு அதிகாரமளிக்கப்பெற்றுள்ள ஒருவர் முன்னிலையில், மூன்றாம் இணைப்புப்பட்டியலில் உள்ள சொன்முறைகளுக்கிணங்க ஓர் ஆணைமொழியை அல்லது உறுதிமொழியை ஏற்றுக் கையொப்பமிட்டவராகவும்,
(ஆ)சட்டமன்றப் பேரவையிலுள்ள பதவியிடமாக இருப்பின், இருபத்தைந்து வயதுக்குக் குறையாதவராகவும், சட்டமன்ற மேலவையிலுள்ள பதவியிடமாக இருப்பின், முப்பது வயதுக்குக் குறையாதவராகவும்,
(இ)நாடாளுமன்றம் இயற்றும் சட்டத்தாலோ அதன் வழியாலோ அதன்பொருட்டு வகுத்துரைக்கப்படும் பிற தகுதிப்பாடுகளை உடையவராகவும்

இருந்தாலன்றி, அவர் ஒரு மாநிலச் சட்டமன்றப் பதவியிடம் ஒன்றில் அமர்வதற்கெனத் தெரிந்தெடுக்கப்பெறுவதற்குத் தகுதிப்பாடு உடையவர் ஆகார்.

174. மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தொடர்கள் அக்கூட்டத்தொடர்களை இறுதி செய்தல் மற்றும் கலைத்தல் :

(1) ஆளுநர் தாம் தக்கதெனக் கருதும் காலத்திலும் இடத்திலும் கூடுமாறு அவ்வப்போது மாநிலச் சட்டமன்ற அவைக்கு அல்லது அவை ஒவ்வொன்றுக்கும் அழைப்பாணை விடுப்பார்; ஆனால், ஒரு கூட்டத்தொடரின் கடைசி அமர்வுக்கும், அடுத்த கூட்டத்தொடரின் முதல் அமர்வுக்கெனக் குறிப்பிடப்படும் தேதிக்கும் இடையேயுள்ள காலஅளவு ஆறு மாதங்களுக்குக் குறைவாகவே இருத்தல் வேண்டும்.

(2) ஆளுநர், அவ்வப்போது—

(அ)அவையின் அல்லது ஈரவைகளில் ஒன்றின் கூட்டத் தொடரினை இறுதிசெய்யலாம்;
(ஆ)சட்டமன்றப் பேரவையைக் கலைத்துவிடலாம்.

175. சட்டமன்ற அவையில் அல்லது அவைகளில் உரையாற்றவும் அவற்றிற்குச் செய்தியுரை அனுப்பவும் ஆளுநருக்குள்ள உரிமை :

(1) ஆளுநர், சட்டமன்றப் பேரவையில் அல்லது சட்டமன்ற மேலவை உள்ள ஒரு மாநிலத்தில், அந்த மாநிலச் சட்டமன்ற ஈரவைகளில் ஒன்றில் அல்லது ஈரவைகளின் ஒருங்கமர் கூட்டத்தில் உரையாற்றலாம்; மேலும், அதற்காக உறுப்பினர்களின் வருகையை வேண்டுறுத்தலாம்.

(2) ஆளுநர், சட்டமன்றத்தில் அப்போது ஓர்விலுள்ள ஒரு சட்டமுன்வடிவைப் பொறுத்தோ பிற எதனையும் பொறுத்தோ மாநிலச் சட்டமன்றத்தின் அவைக்கு அல்லது அவைகளுக்குச் செய்தியுரை அனுப்பலாம்; அவ்வாறான செய்தியுரையினைப் பெற்றுள்ள அவை, அச்செய்தியுரையில் ஓர்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென வேண்டுறுத்தப்பட்ட பொருட்பாட்டை, ஒல்லும் விரைவுடன், ஓர்வுசெய்தல் வேண்டும்.

176. ஆளுநரின் சிறப்புரை :

(1) சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தல் ஒவ்வொன்றுக்கும் பின்பு நடைபெறும் முதல் கூட்டத்தொடரின் தொடக்கத்திலும், ஒவ்வோர் ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் தொடக்கத்திலும், சட்டமன்றப் பேரவையில் அல்லது சட்டமன்ற மேலவை உள்ள ஒரு மாநிலத்தில், ஈரவைகளின் ஒருங்கமர் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றி அதனைக் கூட்டியதற்கான காரணங்களையும் சட்டமன்றத்திற்குத் தெரிவிப்பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/92&oldid=1465048" இலிருந்து மீள்விக்கப்பட்டது