பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

(2) அவ்வுரையில்‌ சுட்டப்பட்ட பொருட்பாடுகளைப்‌ பற்றி விவாதம்‌ செய்வதற்கு நேரம்‌ ஒதுக்குவதற்காக, அவையின்‌ அல்லது ஈரவைகளில்‌ ஒவ்வொன்றின்‌ நெறிமுறையை ஒழுங்குறுத்தும்விதிகளின்வழி வகைசெய்தல்‌ வேண்டும்‌.

177. சட்டமன்ற அவைகள்‌ தொடர்பாக, அமைச்சர்களுக்கும்‌ தலைமை வழக்குரைஞருக்கும் உள்ள உரிமைகள்:

மாநிலத்து அமைச்சர்‌ ஒவ்வொருவரும்‌, அந்த மாநிலத்‌ தலைமை வழக்குரைஞரும்‌, அந்த மாநிலச் சட்டமன்றப்‌ பேரவையில்‌ அல்லது சட்டமன்ற மேலவை உள்ள ஒரு மாநிலத்தில்‌, ஈரவைகளிலும் உரையாற்றவும் பிற வகையில் அதன் நடவடிக்கைகளில் பங்குகொள்ளாவும் தாம் உறுப்பினராகப்‌ பெயர்‌ குறிக்கப்பெறும்‌ சட்டமன்றக்‌ குழு எதிலும்‌ உரையாற்றவும்‌ பிறவகையில்‌ அதன் நடவடிக்கைகளில்‌ பங்குகொள்ளவும்‌ உரிமை உடையவர்‌ ஆவார்‌; ஆனால்‌, இந்த உறுப்பின் பயன்திறனை வைத்து அவர்‌ வாக்களிக்கும்‌ உரிமை கொண்டவர்‌ ஆகார்‌.

மாநிலச்‌ சட்டமன்றப்‌ பதவியாளர்கள்‌

178. சட்டமன்றப்‌ பேரவைத்தலைவரும்‌ துணைத்தலைவரும்‌:

மாநிலச்‌ சட்டமன்றப்‌ பேரவை ஒவ்வொன்றும்‌, அந்த அவையின்‌ உறுப்பினர்கள்‌ இருவரை முறையே அதன்‌ தலைவராகவும்‌ துணைத்தலைவராகவும்‌, கூடிய விரைவில்‌ தெரிந்தெடுத்தல்‌ வேண்டும்; மேலும்‌, பேரவைத்‌ தலைவர்‌ அல்லது துணைத்தலைவர்‌ பதவி காலியாகுந்தோறும்‌ மற்றோர் உறுப்பினரைப்‌ பேரவைத்தலைவராக அல்லது, நேர்வுக்கேற்ப, துணைத்‌ தலைவராக அந்த அவை தெரிந்தெடுத்தல்‌ வேண்டும்‌.

179. பேரவைத்‌ தலைவர்‌, துணைத்‌ தலைவர்‌ ஆகியோர்‌ பதவியை விட்டகலுதலும்‌ பதவி விலகுதலும்‌ பதவியிலிருந்து அகற்றப்படுதலும்‌:

பேரவைத்‌ தலைவராகவோ துணைத்‌ தலைவராகவோ பதவி வகிக்கும்‌ ஒர்‌ உறுப்பினர்‌--

(அ) பேரவையின்‌ உறுப்பினராக இருப்பது அற்றுப்போய்விடின்‌, அவர்‌ தம்‌ பதவியை விட்டகலுதல்‌ வேண்டும்‌;
(ஆ) அந்த உறுப்பினர்‌ பேரவைத்தலைவராக இருப்பின்‌, துணைத்‌ தலைவருக்கும்‌, அந்த உறுப்பினர்‌ துணைத்தலைவராக இருப்பின்‌, பேரவைத்‌ தலைவருக்கும்‌, எச்சமயத்திலும்‌, தம்‌ கையொப்பமிட்டு எழுத்துவழித்‌ தெரிவித்து, தம்‌ பதவியை விட்டுவிலகிக்‌ கொள்ளலாம்‌; மற்றும்‌
(இ) பேரவையின்‌ அப்போதைய அனைத்து உறுப்பினர்களில்‌ பெரும்பான்மையினர்‌ அந்த அவையில்‌ நிறைவேற்றும்‌ தீர்மானம்‌ ஒன்றினால்‌ அவருடைய பதவியிலிருந்து அகற்றப்படலாம்‌:

வரம்புரையாக: (இ) கூறினைப்‌ பொறுத்த தீர்மானம்‌ எதுவும்‌, அத்தீர்மானத்தை முன்மொழியவிருக்கும் கருத்தினைத்‌ தெரிவித்துப்‌ பதினான்கு நாட்களுக்குக்‌ குறையாமல்‌ முன்னறிவிப்புக் கொடுத்திருந்தாலன்றி, முன்மொழியப்படுதல்‌ ஆகாது:

மேலும் வரம்புரையாக: பேரவை கலைக்கப்படுந்தொறும்‌, அவ்வாறு கலைக்கப்பட்டதன்‌ பின்பு, அடுத்த பேரவையின்‌ முதல்‌ கூட்டம்‌ தொடங்குவதை ஒட்டிமுன்பு வரையில்‌, பேரவைத்தலைவர் தம்‌ பதவியை விட்டகல வேண்டியதில்லை.

180. பேரவைத்தலைவரின்‌ பதவிக்குற்ற கடமைகளைப்‌ புரிந்துவரவோ தலைவராகச்‌ செயலுறவே துணைத்தலைவருக்கு அல்லது பிறஉறுப்பினருக்கு உள்ள அதிகாரம்‌:

(1) பேரவைத்தலைவரின்‌ பதவி காலியாக இருக்குங்கால்‌, அப்பதவிக்குற்றகடமைகளைப்‌ பேரவைத்தலைவரும்‌, துணைத்தலைவர்‌ பதவியும்‌ காலியாக இருப்பின்‌, ஆளுநர்‌ அதன்பொருட்டு அமர்த்தும்‌ பேரவையின்‌ உறுப்பினர்‌ எவரும்‌ புரிந்துவருதல்‌ வேண்டும்‌.

(2) பேரவையின் அமர்வு எதிலும்‌, பேரவைத்தலைவர்‌ அவையில்‌ இல்லாதபோது துணைத்தலைவரும், அவரும்‌ இல்லாதிருப்பின்‌, பேரவையின்‌ நெறிமுறை விதிகளின்படி தீர்மானிக்கப்பெறும்‌ உறுப்பினர்‌ எவரும்‌, அத்தகையவரும்‌ இல்லாதிருப்பின்‌, அந்தப்‌ பேரவையினால் தீர்மானிக்கப்பெறும்‌ பிற உறுப்பினர்‌ எவரும்‌ பேரவைத்‌ தலைவராகச்‌ செயலுறுதல் வேண்டும்.31-4-24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/93&oldid=1465446" இலிருந்து மீள்விக்கப்பட்டது