பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

181. பேரவைத்தலைவரை அல்லது துணைத்தலைவரைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தின் மீது ஓர்வு நிகழும் போது அவர் தலைமை வகித்தல் ஆகாது :

(1) சட்டமன்றப் பேரவையின் அமர்வு எதிலும், பேரவைத்தலைவரை அவருடைய பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தின்மீது ஓர்வு நிகழும் போது பேரவைத்தலைவரும் அல்லது துணைத்தலைவரை அவருடைய பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தின்மீது ஓர்வு நிகழும்போது துணைத்தலைவரும், அவர் அந்த அவையில் இருந்தபோதிலும், தலைமை வகித்தல் ஆகாது; மேலும், அத்தகைய ஒவ்வோர் அமர்வுக்கும், 180ஆம் உறுப்பின் (2)ஆம் கூறின் வகையங்கள், பேரவைத்தலைவர் அல்லது, நேர்வுக்கேற்ப, துணைத்தலைவர் இல்லாதிருக்கிற ஓர் அமர்வுக்குப் பொருந்துறுவன போன்றே பொருந்துறுவன ஆகும்.

(2) சட்டமன்றப் பேரவையில், பேரவைத்தலைவரை அவருடைய பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தின்மீது ஓர்வு நிகழும்போது, பேரவைத்தலைவர் அந்த அவையில் உரையாற்றுவதற்கும் பிற வகையில் அதன் நடவடிக்கைகளில் பங்குகொள்வதற்கும் உரிமை உடையவர் ஆவார்; மேலும், 189 ஆம் உறுப்பில் எது எவ்வாறிருப்பினும், அவர் அத்தகைய தீர்மானத்தின்மீதும், அது தொடர்பான நடவடிக்கைகளில் எழும் பிற எந்தப் பொருட்பாட்டின்மீதும் முதற்கண் மட்டுமே வாக்களிப்பதற்கு உரிமை கொண்டவர் ஆவாரேயன்றி, வாக்குகள் சமன்மையாக அமையும் நேர்வில், வாக்களிப்பதற்கு உரிமைகொண்டவர் ஆகார்.

182. சட்டமன்ற மேலவைத்தலைவரும் துணைத்தலைவரும் : சட்டமன்ற மேலவை உள்ள மாநிலம் ஒவ்வொன்றின் மேலவையும், அந்த அவையின் உறுப்பினர்கள் இருவரை முறையே அதன் தலைவராகவும் துணைத்தலைவராகவும், கூடிய விரைவில், தெரிந்தெடுத்தல் வேண்டும்; மேலும், மேலவைத்தலைவர் அல்லது துணைத்தலைவர் பதவி காலியாகுந்தொறும், மற்றோர் உறுப்பினரை, அதன் தலைவராக அல்லது, நேர்வுக்கேற்ப, துணைத் தலைவராக அந்த மேலவை தெரிந்தெடுத்தல் வேண்டும்.

183. சட்டமன்ற மேலவைத்தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் பதவியை விட்டகலுதலும் பதவி விலகுதலும் பதவியிலிருந்து அகற்றப்படுதலும்:

ஒரு சட்டமன்ற மேலவைத் தலைவராகவோ துணைத்தலைவராகவோ பதவி வகிக்கும் ஓர் உறுப்பினர்-

(அ) மேலவையின் உறுப்பினராக இருப்பது அற்றுப்போய்விடின், அவர் தம் பதவியை விட்டகலுதல் வேண்டும்:
(ஆ)அத்தகைய உறுப்பினர் மேலவைத்தலைவராக இருப்பின், துணைத் தலைவருக்கும் அத்தகைய உறுப்பினர் துணைத்தலைவராக இருப்பின், மேலவைத் தலைவருக்கும், எச்சமயத்திலும், தம் கையொப்பமிட்டு எழுத்துவழித் தெரிவித்து, தம் பதவியை விட்டு விலகிக்கொள்ளலாம்; மற்றும்
(இ) மேலவையின் அப்போதைய அனைத்து உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் அந்த அவையில் நிறைவேற்றும் தீர்மானம் ஒன்றினால் அவருடைய பதவியிலிருந்து அகற்றப்படலாம்:

வரம்புரையாக: (இ) கூறினைப் பொறுத்த தீர்மானம் எதுவும், அத்தீர்மானத்தை முன்மொழியவிருக்கும் கருத்தினைத் தெரிவித்துப் பதினான்கு நாட்களுக்குக் குறையாமல் முன்னறிவிப்புக் கொடுத்திருந்தாலன்றி, முன்மொழியப்படுதல் ஆகாது.

184. மேலவைத்தலைவரின் பதவிக்குற்ற கடமைகளைப் புரிந்துவரவோ தலைவராகச் செயலுறவோ துணைத்தலைவருக்கு அல்லது பிற உறுப்பினருக்கு உள்ள அதிகாரம் :

(1) மேலவைத்தலைவரின் பதவி காலியாக இருக்குங்கால், அப்பதவிக்குற்ற கடமைகளை மேலவைத் துணைத்தலைவரும், துணைத்தலைவர் பதவியும் காலியாக இருப்பின், ஆளுநர் அதன்பொருட்டு அமர்த்தும் மேலவையின் உறுப்பினர் எவரும் புரிந்துவருதல் வேண்டும்.

(2) மேலவையின் அமர்வு எதிலும் மேலவைத்தலைவர் அவையில் இல்லாதபோது துணைத்தலைவரும், அவரும் இல்லாதிருப்பின், மேலவையின் நெறிமுறை விதிகளின்படி தீர்மானிக்கப்பெறும் உறுப்பினர் எவரும், அத்தகையவரும் இல்லாதிருப்பின், மேலவையினால் தீர்மானிக்கப்பெறும் பிற உறுப்பினர் எவரும், மேலவைத்தலைவராகச் செயலுறுதல் வேண்டும்.

31-4-24a

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/94&oldid=1465447" இலிருந்து மீள்விக்கப்பட்டது