பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70


185. மேலவைத்தலைவரை அல்லது துணைத்தலைவரைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தின்மீது ஓர்வு நிகழும்போது அவர் தலைமை வகித்தல் ஆகாது :

(1) சட்டமன்ற மேலவையின் அமர்வு எதிலும், மேலவைத்தலைவரை அவருடைய பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தின்மீது ஓர்வு நிகழும் போது மேலவைத்தலைவரும் அல்லது துணைத்தலைவரை அவருடைய பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தின்மீது ஓர்வு நிகழும்போது துணைத்தலைவரும், அவர் அந்த அவையில் இருந்தபோதிலும், தலைமை வகித்தல் ஆகாது; மேலும், அத்தகைய ஒவ்வோர் அமர்வுக்கும், 184-ஆம் உறுப்பின் (2)-ஆம் கூறின் வகையங்கள், மேலவைத்தலைவர் அல்லது நேர்வுக்கேற்ப, துணைத்தலைவர் இல்லாதிருக்கிற ஓர் அமர்வுக்குப் பொருந்துறுவன போன்றே, பொருந்துறுவன ஆகும்.

(2) சட்டமன்ற மேலவையில் மேலவைத் தலைவரை அவருடைய பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தின்மீது ஓர்வு நிகழும்போது மேலவைத்தலைவர் அந்த அவையில் உரையாற்றுவதற்கும், பிறவகையில் அதன் நடவடிக்கைகளில் பங்குகொள்வதற்கும் உரிமை உடையவர் ஆவார்; மேலும், 189-ஆம் உறுப்பில் எது எவ்வாறிருப்பினும், அவர் அத்தகைய தீர்மானத்தின்மீதும், அது தொடர்பான நடவடிக்கைகளில் எழும் பிற எந்தப் பொருட்பாட்டின்மீதும் முதற்கண் மட்டுமே வாக்களிப்பதற்கு உரிமை கொண்டவர் ஆவாரேயன்றி, வாக்குகள் சமன்மையாக அமையும் நேர்வில், வாக்களிப்பதற்கு உரிமை கொண்டவர் ஆகார்.

186.பேரவைத் தலைவர், துணைத்தலைவர், மேலவைத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோரின் வரையூதியங்களும் படித்தொகைகளும் :

சட்டமன்றப் பேரவைத் தலைவர், துணைத்தலைவர், சட்டமன்ற மேலவைத் தலைவர், துணைத்தலைவர் ஆகியோருக்கு முறையே மாநிலச் சட்டமன்றம் சட்டத்தினால் நிருணயிக்கும் வரையூதியங்களும் படித்தொகைகளும் வழங்கப்படும்; அவ்வாறு அதன்பொருட்டு வகைசெய்யப்படும் வரையில், இரண்டாம் இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள வரையூதியங்களும் படித்தொகைகளும் வழங்கப்பட்டு வரும்.

187. மாநிலச் சட்டமன்றத்தின் செயலகம் :

(1) ஒரு மாநிலச் சட்டமன்றத்தின் அவை அல்லது அவை ஒவ்வொன்றும் தனித்தனியே செயலகப் பணியாளர் தொகுதி ஒன்றைக் கொண்டிருக்கும்: வரம்புரையாக: இந்தக் கூறிலுள்ள எதுவும், சட்டமன்ற மேலவை உள்ள ஒரு மாநிலச் சட்டமன்றத்தைப் பொறுத்தவரை, அத்தகைய சட்டமன்றத்தின் ஈரவைகளுக்கும் பொதுவான பதவிகள் உருவாக்கப்படுவதைத் தடையூறு செய்வதாகப் பொருள்கொள்ளப்படுதல் ஆகாது.

(2) மாநிலச் சட்டமன்றத்தின் அவையின் அல்லது அவைகளின் செயலகப் பணியாளர் தொகுதிக்கு ஆளெடுப்பதையும் அதற்கு அமர்த்தப்பெறுபவர்களின் பணிவரைக்கட்டுகளையும் அந்த மாநிலச் சட்டமன்றம் சட்டத்தினால் ஒழுங்குறுத்தலாம்.

(3). (2) ஆம் கூறின்படி மாநிலச் சட்டமன்றம் வகைசெய்கிற வரையில், ஆளுநர், சட்டமன்றப் பேரவைத்தலைவருடன் அல்லது, நேர்வுக்கேற்ப, சட்டமன்ற மேலவைத்தலைவருடன் கலந்தாய்வு செய்தபின்பு, சட்டமன்றப் பேரவையின் அல்லது சட்டமன்ற மேலவையின் செயலகப் பணியாளர் தொகுதிக்கு ஆளெடுப்பதையும் அதற்கு அமர்த்தப்பெறுபவர்களின் பணிவரைக்கட்டுகளையும் ஒழுங்குறுத்தும்விதிகளை வகுக்கலாம்; மற்றும், அவ்வாறு வகுக்கப்படும் விதிகள் மேற்சொன்ன கூறின்படி இயற்றப்படும் சட்டத்தின் வகையங்களுக்கு உட்பட்டு செல்திறம் உடையன ஆகும்.

அலுவல் நடத்துமுறை

188.உறுப்பினர்களுக்குற்ற ஆணைமொழி அல்லது உறுதிமொழி:

ஒரு மாநில சட்டமன்றப் பேரவையின் அல்லது சட்டமன்ற மேலவையின் உறுப்பினர் ஒவ்வொருவரும், தம் பதவியினை ஏற்று அமரும் முன்பு, ஆளுநரின் அல்லது அதன்பொருட்டு அவரால் அமர்த்தப்பெறும் ஒருவரின் முன்னிலையில், மூன்றாம் இணைப்புப்பட்டியலில் அதற்கென உள்ள சொன்முறையில் ஓர் ஆணைமொழியை அல்லது உறுதிமொழியை ஏற்றுக் கையொப்பமிடுதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/95&oldid=1465448" இலிருந்து மீள்விக்கப்பட்டது