பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71


189. சட்டமன்ற அவைகளில் வாக்களித்தல், காலியிடங்கள் இருந்தபோதிலும் செயலுறுவதற்கு அவைகளுக்குள்ள அதிகாரம் மற்றும் குறைவெண்:

(1) இந்த அரசமைப்பில் பிறவாறு வகைசெய்யப்பட்டிருப்பது நீங்கலாக, ஒரு மாநிலச் சட்டமன்ற அவை ஒன்றன் அமர்வில் எழும் வினாக்கள் அனைத்தும், பேரவைத்தலைவர் அல்லது மேலவைத்தலைவர் அல்லது அத்தகையவராகச் செயலுறுகின்றவரைத் தவிர்த்து, வந்திருந்து வாக்களிக்கும் ஏனைய உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளால் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

பேரவைத்தலைவரோ மேலவைத்தலைவரோ அல்லது அத்தகையவராகச் செயலுறுகின்றவரோ முதற்கண் வாக்களித்தல் ஆகாது; ஆனால், வாக்குகள் சமன்மையாக அமையும் நேர்வில், அவருக்கு அறுதிசெய் வாக்கு ஒன்று உண்டு; அதனை அவர் அளித்தலும் வேண்டும்.

(2) ஒரு மாநிலச் சட்டமன்றத்தின் ஓர் அவையின் உறுப்பினர் பதவியில் காலியிடம் எதுவும் இருந்தபோதிலும், அந்த அவை செயலுறுவதற்கு அதிகாரம் உடையது ஆகும்; மேலும், சட்டமன்ற நடவடிக்கைகளின்போது அவையில் அமர்ந்திருக்கவோ வாக்களிக்கவோ பிறவாறாகப் பங்குகொள்ளவோ உரிமை கொண்டிராத எவரும் அவ்வாறு செய்தார் எனப் பின்பு தெரிய வந்தபோதிலும், அந்நடவடிக்கைகள் செல்லுந்தன்மையுடையன ஆகும்.

(3) ஒரு மாநிலச் சட்டமன்றம் சட்டத்தினால் பிறவாறு வகைசெய்கிற வரையில், அந்த மாநிலச் சட்டமன்ற அவையின் கூட்டம் அமைவுறுவதற்கான குறைவெண், பத்து அல்லது அந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு, இவற்றுள் எது மிகுதியோ அந்த எண்ணாக இருத்தல் வேண்டும்.

(4) ஒரு மாநிலச் சட்டமன்றப் பேரவையின் அல்லது சட்டமன்ற மேலவையின் கூட்டம் நடைபெறும்போது எச்சமயத்திலேனும், குறைவெண் இல்லாதிருப்பின், அந்த அவையை ஒத்திவைப்பதோ, குறைவெண் அமைவுறுகிற வரையில் அந்தக் கூட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதோ பேரவைத்தலைவரின் அல்லது மேலவைத்தலைவரின் அல்லது அத்தகையவராகச் செயலுறுகின்றவரின் கடமை ஆகும்.

உறுப்பினர்களின் தகுதிக்கேடுகள்

190. பதவியிடங்களை விட்டகலுதல்:

(1) எவர் ஒருவரும் ஒரு மாநிலச் சட்டமன்றத்தின் ஈரவைகளிலும் உறுப்பினராக இருத்தல் ஆகாது; ஒருவர் ஈரவைகளுக்கும் உறுப்பினராகத் பெற்றிருப்பாராயின், அவர் அவ்விரு அவைகளில் ஏதாவது ஒன்றில் தம் பதவியிடத்தை தெரிந்தெடுக்கப் விட்டகலுவதற்கு மாநிலச் சட்டமன்றம் சட்டத்தினால் வகைசெய்தல் வேண்டும்.

(2) எவர் ஒருவரும், முதலாம் இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட மாநிலங்களின் சட்டமன்றங்களில் உறுப்பினராக இருத்தல் ஆகாது; இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கு ஒருவர் தெரிந்தெடுக்கப்பெற்றிருப்பாராயின், அப்போது, குடியரசுத்தலைவரால் வகுக்கப்படும் விதிகளில் குறித்துரைக்கப்படும் காலஅளவு கழிவுறுவதற்கு முன்னரே, அவர் அந்த மாநிலங்களில் ஒன்று தவிர, பிற மாநிலச் சட்டமன்றங்கள் அனைத்திலுமுள்ள தம் பதவியிடங்களை விட்டு விலகியிருந்தாலன்றி, அத்தகைய மாநிலங்கள் அனைத்தின் சட்டமன்றங்களிலுள்ள அவருடைய பதவியிடங்கள் அக்காலஅளவு கழிவுற்றதும் காலியாகிவிடும்.

(3) ஒரு மாநிலச் சட்டமன்ற அவை ஒன்றன் உறுப்பினர் ஒருவர்-

(அ)191ஆம் உறுப்பின் (1) ஆம் கூறில் அல்லது (2)ஆம் கூறில் குறிப்பிடப்பட்ட தகுதிக்கேடுகளில் எதற்கேனும் உள்ளாகிவிடுவாராயின், அல்லது
(ஆ) பேரவைத்தலைவருக்கோ, நேர்வுக்கேற்ப, மேலவைத்தலைவருக்கோ தம் கையொப்பமிட்டு எழுத்துவழி, பதவிவிலகுவதாகத் தெரிவித்து, அவ்வாறு அவர் பதவிவிலகுதல் பேரவைத்தலைவராலோ, நேர்வுக்கேற்ப, மேலவைத்தலைவராலோ ஏற்றுக் கொள்ளப்படுமாயின்

அதன்மேல் அவருடைய பதவியிடம் காலியாகிவிடும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/96&oldid=1465449" இலிருந்து மீள்விக்கப்பட்டது