பக்கம்:Humorous Essays.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

ஹாஸ்ய வியாசங்கள்

ஒரு மனிதன் தன் சொந்த விஷயங்களைப் பற்றி உறுதியாய் எதையும் கூறலாம்-ஆனால் வயதைப் பற்றி மாத்திரம் ஊர்ஜிதமாய்க் கூற முடியாது. ஏன்? தான் பிறந்த விஷயத்தைப் பற்றி தனக்குச் சொந்த ஞாபகம் சிறிதும் கிடையாதல்லவா? இன்ன வருஷம் இன்ன மாசம் இன்ன தேதியில் நீ பிறந்தாய் என்று மற்றவர்கள் சொல்லக் கேட்டதுதானே! மற்றவர்கள் சொல்லக் கேட்டதைச் சொன்னால் நியாய சபையில் சாட்சியமாகக் கூட ஒப்புக் கொள்ளப்படாது. இது காரணம் பற்றிதான் நூற்றில் தொண்ணுாற்றொன்பது பெயர்கள் தங்கள் வயதைப் பற்றி உண்மையை உரைப்பதில்லை போலும்! உங்களுடைய அத்யந்த நண்பர்களையெல்லாம் அவர்கள் வயதென்னவென்று கேட்டுப் பாருங்கள்; பாதி பெயர் அதற்கு பதிலே உரைக்க மாட்டார்கள்; மற்ற பாதிப் பெயர் - மிகவும் வற்புறுத்தினால்-உண்மையை உரைத்திடாது-குறைத்தே சொல்வார்கள்.

இவ்வாறு நம்முடைய வயதைக் குறைத்துச் சொல்லும் வழக்கம் நமது தொட்டிலிலிருந்தே நமது உடலில் ஊறி வருகிறது. கைக்குழந்தைகளை ரெயில் மார்க்கமாய் எடுத்து செல்வதென்றால் அவர்களுக்கு மூன்று வயது முடியும் வரையில் டிக்கட்டுகள் வாங்க வேண்டியதில்லை. இக்காரணத்தினால் நமது தேசத்து கைக்குழந்தைகள் மூன்று வயது வந்தவுடன் இரண்டொரு வருடங்கள் வளராமலே யிருக்கின்றன. சுமார் ஐந்து வயது வரையில் அவர்களை ரெயிலில் கொண்டு போகும் போதெல்லாம் இாண்டரை வயதுதான்! உங்களுக்கு இதைப் பற்றி ஏதாவது சந்தேகமிருந்தால் ரெயில்வே டிக்கட் பரீட்சகர்களைக் கேட்டுப் பாருங்கள். இந்த வழக்கம் நம்முடைய தேசத்தில்தான் என்று நாம் வெட்கப்பட வேண்டாம்; எல்லாத் தேசங்களிலும் இந்த வழக்கம் மிகவும் சாதாரணம்.

பிறகு சாதாரணமாக நம்மவர்கள் நமது குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு ஐந்து வயதில் அனுப்புவது வழக்கம் பள்ளிக்கூடங்களில் சேர்க்கும் பொழுதே அவர்கள் தந்தைமார்கள்-முக்கியமாக.அவர்கள் கவர்ன்மென்ட் உத்யோகஸ்தர்களாக இருந்தால்-ஒரு வருஷம் ஒன்றரை வருஷம் குறைத்தே எழுதி வைப்பார்கள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/36&oldid=1352476" இலிருந்து மீள்விக்கப்பட்டது