பக்கம் பேச்சு:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/238

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

பதிற்றுப்பத்து : பாடல் 23[தொகு]

“மருதுஇமிழ்ந்து ஓங்கிய நளிஇரும் பரப்பின்
 மணல்மலி பெருந்துறை ததைந்த காஞ்சியொடு
 முருக்குத்தாழ்பு எழிலிய நெருப்புறழ் அடைகரை
 நந்து நாரையொடு செவ்வா஢ உகளும்
 கழனி வாயிற் பழன படப்பை
 அழல்மருள் பூவின் தாமரை வளைமகள்
 குறாஅது மலர்ந்த ஆம்பல்
 அறாஅ யாணர்அவர் அகன்தலை நாடே.”


துறை: வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு.
வண்ணம்: ஒழுகுவண்ணம்.
தூக்கு: செந்தூக்கு.
பெயர்: ததைந்த காஞ்சி.

உரை: மருது இமிழ்ந் தோங்கிய-மருத மரங்கள் தம்பால் பல புள்ளினம் தங்கி ஒலிக்க, ஓங்கி நிற்கும்; நளி இரும் பரப்பின்- செறிவினையுடைய பெரிய பரப்பிடமாகிய; மணல் மலி பெருந் துறை-மணல் மிக்க பெருந்துறைக்கண்; ததைந்த காஞ்சியொடு- சிதைந்த காஞ்சி மரங்களுடன்; முருக்குத் தாழ்பு எழிலிய நெருப்புறழ் அடை கரை-முருக்க மரங்கள் தாழ்ந்து பூக்களைச் சொரிதலால் உயர்ந்த நெருப்புப் போலத் தோன்றும் அடைகரையில்; நந்து நாரை யொடு செவ்வரி உகளும்-சங்குகளும் நாரைகளும் செவ்விய வரிகளையுடைய நாரையினத்துப் புள்ளினங்களும் உலவும்; கழனி வாயில் பழனப் படப்பை- கழனிகட்கு வாயிலாக உள்ள பொய்கையைச் சார்ந்த விளை நிலத்தில்; அழல் மருள் பூவின் தாமரை-நெருப்புப்போலும் பூவினையுடைய தாமரையும்; வளை மகள் குறாது மலர்ந்த ஆம்பல்-வளையணிந்த விளையாட்டு மகளிர் பறிக்காமையால் தானே மலர்ந்த ஆம்பலும்; அறாஅ யாணர்-நீங்காத புது வருவாயுமுடைய; அவர் அகன்றலை நாடு-அப் பகைவருடைய அகன்ற இடத்தையுடைய நாடுகள் எ-று.

பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு முருக்குத் தாழ்பு எழிலிய அடைகரையில் நாரையொடு செவ்வரி உகளும் படப்பைக் கண் தாமரையும் ஆம்பலும் அறாயாணருமுடைய அவர் அகன்றலை நாடு காடாயின எனக் கூட்டி முடிக்க. பகைவரது நாடு மருத வளம் சான்ற மாண்புடைய நாடு என்பது, “மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின்” என்பதனாற் பெறப்படும். கிளி முதலிய புள்ளும், வண்டினமும் இனிது இருந்து மகிழும் நன்மரம் என்றற்கு, “மருதிமிழ்ந்” தென்றார். சிறப்புடைய மருதினைக் கூறினமையின், ஏனை மரவும், தெங்கும், பிறவும் கொள்ளப்படும். இவற்றாற் செறிவும், இடப்பரப்பும் ஒருங்குடைமை தோன்ற, “நளியிரும் பரப்பெ”னச் சிறப்பித்துரைத்தார். பரப்பினையுடைய பெருந்துறை என்னுமாம். முன்னைய முடிபிற்கு இன்னென்பது சாரியை. பெருந்துறைப் பரப்பில் நிற்பனவும், நிகழ்வனவும் கூறி, அதன் நில இயல்பை மணல் மிக்க துறையென்று கூறினார்.

மாவும் மாக்களும் வழங்குதலால், பூ முதலியன இன்றி மணலே விளங்கித் தோன்றுமாறு நாட்டுவார் “மணல்மலி பெருந்துறை”யென்றார். காஞ்சியும் முருக்க மரம் போலத் தாழ நின்று, மாலை போலப் பூக்கும் இயல்பிற்றாதலின், அதன் பூவும், தளிரும் விளையாட்டு இளமகளிரால் பறிக்கப்படுதலால் “ததைந்த காஞ்சி” என்றும், முருக்கம்பூ அவ்வாறு கொள்ளப்படுவ தன்மையின், அது வீழ்ந்து கிடக்குமாறு தோன்ற, “முருக்குத்தாழ் பொழிலிய நெருப்புறழ் அடைகரை” என்றும் கூறினார். ததைதல், சிதைதல்; “அருஞ்சமந் ததைய நூறி” (புறம். 18) என்றாற் போல. பழையவுரைகாரர், “ததைந்த காஞ்சி” என்றது, “விளையாட்டு மகளிர் பலரும் தளிரும் முறியும் தாதும் பூவும் கோடலாற் சிதைவு பட்டுக் கிடக்கின்ற காஞ்சி யென்றவாறு” என்றும் “இச் சிறப்பானே இதற்குத் ததைந்த காஞ்சி யென்று பெயராயிற்று” என்றும் கூறுவர். அடைகரை துறை யன்மையின், அங்கே முருக்கின் கிளை தாழ்ந்து பூக்களைச் சொரிதலால், அப் பூக்களே பரந்து கிடத்தலாலும் அவற்றின் நிறம் நெருப்புப் போன்று இருத்தலாலும், “நெருப்புறழ் அடைகரை” என்றும், முருக்க மரங்கள் மிக ஓங்கி வளராது, தாழ நின்று கிளை பரந்து, நெருப்பெனப் பூத்துள்ள பூக்களைச் சொரிதலால், அடைகரை நீரும் நெருப்பும் தம்முள் உறழ்ந்து காட்சி வழங்குவது போறலின், “முருக்குத்தாழ் பொழிலிய நெருப்புற ழடைகரை” என்றும் குறித்தார். முருக்கம்பூ நெருப்புப் போல்வது என்பதனைப் பிறரும், “பொங்கழல் முருக்கி னொண்குரன் மாந்திச், சிதர் சிதர்ந்துகுத்த செவ்வி” (அகம், 277) என்பர். நீர் இடையறாமையின் தமக்கு வேண்டும் இரையை நிரம்பப் பெறுதலின், ஆக்கமுறும் நாரை இனத்துடன் செவ்வரியென்னும் நாரை இனமும் கலந்து உறையும் என்பார், “நந்து நாரையொடு செவ்வரி யுகளும்” என்றார்; “பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை” (புறம், 351) என்பதனால், செவ்வரி நாரையாதல் காண்க.

பழனம் கழனிக்கு வாயில் போறலின்,“கழனிவாயிற் பழனம்” என்றார்; “வயலமர் கழனிவாயிற் பொய்கை” (புறம். 354) எனப் பிறரும் கூறுதல் காண்க. இனிப் பழனத்தின் வாயிலாகக் கழனிக்கு நீர் பாய்தலின் இவ்வாறு கூறினார் என்றுமாம். பழனத்தைச் சார்ந்த படப்பைக்கண் தாமரை மிக்கிருத்தல் தொன்றப் “பழனப் படப்பை யழன் மருள் தாமரை” என்றார். படப்பை, பழனத்தைச் சார்ந்த தோட்டக்கால், படப்பையில் மலர்ந்த தாமரைப் பூவைப் பறித்துத் தலையில் சூடி அதன் நாளத்தை வளையாக அணிந்து மகளிர் விளையாடுப வாகலின், அவ்வாறு விளையாடும் இளமகளை “வளைமகள்” என்றும், அவள் பழனத்தில் மலர்ந்த ஆம்பலைப் பறிக்க மாட்டாது விடுப்ப, அது தானே மலரும் என்பார் “குறாது மலர்ந்த ஆம்பல்” என்றும் கூறினார். விளையாடும் பருவத்து இளமகளிரை “வளையவர்” என்பது பண்டையோர் வழக்கு; “வளையவர் வண்டல்போல் வார்மணல் வடுக்கொள” (கலி.26) என்றவிடத்து, வளையவர் என்றதற்கு நச்சினார்க்கினியர் “வளையினையுடைய இளையோர்” என்று உரைப்பது காண்க. இவ்வளைமகள் குறுதற் கெட்டு, மளவில் இருப்பின், நீரிடத்தே அதனை மலர விடாது பறித்திருப்பள் என்றவாறு. பழையவுரைகாரரும், “வளைமகள் குறாஅது மலர்ந்த ஆம்பல்” என்றது, “விளையாட்டு மகளிர் குறுதற் கெட்டாமையாலே மலர்ந்த ஆம்பல் என்றவாறு” என்பர். இன் புது நலங்கள் இடையறாத நாடுகள் என்றற்கு “அறாஅ யாணர்” என்றார்.

இனி, அவர் நாட்டு இளையவர் மலர்ந்த தாமரையைப் பயன் கொண்டு குவிந்த ஆம்பலை வாளாது விடுவர் என்றது,செல்வத்திற் சிறந்தாரைப் பயன் கொண்டு மெலிந்தாரைப் புறக்கணித்தனர்; அதுவும் அவர் நாட் டழிவுக்குக் காரணமாம் என்பது கூறியதாகக் கொள்க. வளையோர் மலர்ந்த தாமரையைப் பயன் கொண்டது போல, இந்நாட்டரசராகிய பகை வேந்தர் நின்னை வணங்கிப் பயன் கொள்ளாது, மகளிர் தமக்கு எகெட்டாத ஆம்பலைக் குறாது விட்டது போலத் தமக்கு எய்தலாகாத வென்றியை எய்த முயன்று கெடடனர் என வேறோர் ஏதுக் காட்டி நின்றது எனினுமாம்.

காண்க : பதிற்றுப்பத்து - மூலமும் ஔவை துரைசாமிப் பிள்ளை விளக்க உரையும்

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 05:05, 18 பிப்ரவரி 2023 (UTC)