உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்ச தந்திரக் கதைகள்/கிடைத்த குரங்கைக் கைவிட்ட முதலை

விக்கிமூலம் இலிருந்து

பஞ்ச தந்திரக் கதைகள்
பகுதி 4
1. கிடைத்த குரங்கைக் கைவிட்ட முதலை

ஓர் ஆற்றங்கரையில் ஒரு குரங்கு இருந்தது. அந்தக் குரங்கு ஒரு நாள் பழம் பறித்து உண்பதற்காக ஆற்றின் ஒரத்தில் இருந்த ஒரு மரத்தின் மேல் ஏறியது. அது பழம் பறித்துத் தின்று கொண்டிருக்கும் போது கை தவறிச் சில பழங்கள் ஆற்றுக்குள் விழுந்தன. அம்படி அவை விழுந்த போது கள கள வென்ற ஓசை உண்டாயிற்று. அது ஒரு வேடிக்கையாகத் தோன்றவே, அந்தக் குரங்கு ஒவ்வொரு கிளையாகத் தாவி மரத்தில் இருந்த பழங்களை உதிர்த்து விட்டுக் கொண்டிருந்தது. அப்போது முதலையரசன் அந்தப் பக்கமாக வந்தது. அது மரத்திலிருந்து உதிர்ந்த பழங்களைத் தின்றது. அந்தப் பழங்கள் மிகச் சுவையாக இருந்தபடியால் அது அந்த இடத்திலேயே நின்று விட்டது. குரங்கைப் பார்த்து அந்த முதலை, "நண்பனே, “நான் உன்னைப் பிரியவே மாட்டேன். ஏனென்றால் நீ எனக்கு மிகச் சுவையான பழங்களை உதிர்த்துக் கொடுத்தாய்" என்று சொல்லியது.

நாள் தோறும் குரங்கு பழங்களை உதிர்த்துக் கொடுக்க, முதலை அதைத் தின்றுகொண்டு அந்த இடத்திலேயே இருந்தது. அது தன் இருப்பிடத்திற்குத் திரும்பிச் செல்லாததால் அதன் மனைவியான முதலையரசி மிகவும் கவலை கொண்டது. அது தன் தோழியான ஒரு முதலையை அழைத்துக் கணவனிடம் தூது போய் வரும்படி அனுப்பியது. அந்தத் தூதி முதலையரசனிடம் வந்து "மன்னவா, தங்களைக் காணாமல் அரசியார் மெலிந்து போய் விட்டார்கள். அவர்களுடைய காதல் நோய் வெப்பு நோயாக மாறி உடலை இளைக்கச் செய்து விட்டது. தாங்கள் வந்து நோய் தீர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று கூறியது.

“ஏ தூதியே, குரங்கோ எனக்கு உயிர் நண்பனாகி விட்டது. அதைப் பிரிந்து வருவதோ என்னால் முடியாது, நீயோ என் மனைவி நோயாய் இருக்கிறாள் என்று சொல்கிறாய். அதைக் கேட்டதும் என் மனமோ மிகவும் வருந்துகிறது. புறப்படவும் முடியவில்லை நான் என்ன செய்வேன்" என்று வாய்விட்டுச் சொல்லி முதலை வருந்தியது. 'இந்தக் குரங்கு என்ன சொக்குப் பொடி தூவியதோ, நம் அரசர் இதை விட்டுவர மறுக்கிறார். இந்தக் குரங்கைத் கொன்றால்தான் இதற்குப் புத்தி தெளியும்’ என்று நினைத்தது அந்தத் தூதி முதலை. அது முதலையரசனைப் பார்த்து, “மன்னவா, அரசியாருக்கு நாங்கள் எத்தனையோ மருந்து கொடுத்துப் பார்த்து விட்டோம். நோய் தீர வில்லை. குரங்கின் ஈரல் கொண்டு வந்து கொடுத்தால்தான் பிழைப்பாளென்று பெரிய மருத்துவர் சொல்கிறார். நீங்கள் அதற்கு வேண்டிய ஏற்பாட்டுடன் உடனே வர வேண்டும். இல்லா விட்டால் அரசி உயிருக்கே ஆபத்தாய் முடியும்’ என்று சொல்லியது.

இதைக் கேட்டதும்‌‌ முதலையரசனின் மனம் குழம்பியது. குரங்கின் ஈரலுக்கு அது எங்கே போகும். அதற்குத் தெரிந்தது ஒரே ஒரு குரங்கு தான். தினமும் பழம் பறித்துப் போடும் உயிர் நண்பனான அந்தக் குரங்கைக் கொல்வது பாவம். அதைக் கொல்லாமல் இருந்தால் முதலையரசி இறந்து போய் விடும். நண்பனைக் கொல்வதா, அரசியை இழப்பதா? என்று எண்ணிக் கடைசியில் அரசியைக் காப்பது தான் முக்கியம் என்று முடிவுக்கு வந்தது.

இப்படி அது வருத்தத்தோடு இருக்கும் போது எங்கோ போயிருந்த குரங்கு அங்கு வந்து சேர்ந்தது. அது முதலை கவலையாய் இருப்பதைப் பார்த்து அதன் துயரத்திற்கு என்ன காரணம் என்று

கேட்டது. "நண்பா, இதுவரை நான் உன்னைப் பிரியாமல் இருந்தேன். இப்போதோ என் மனைவி நோயாகக் கிடப்பதால் உன்னைவிட்டுப் பிரிந்து போக வேண்டி இருக்கிறது. அதுதான் கவலையாக இருக்கிறது” என்றது முதலையரசன்.

"இப்போதே போய்வா. இதற்கெல்லாம் யோசித்துக் கொண்டிருக்க முடியாது!" என்று குரங்கு பதில் அளித்தது.

"உடனே போகத்தான் வேண்டும். ஆனால் உன்னைப் பிரிந்து என்னால் ஒரு கணமும் இருக்க முடியாது. ஆகையால் நீயும் என்னோடு வரவேண்டும்?" என்று முதலை கேட்டுக் கொண்டது.

“நீயோ நீரில் இருப்பவன்; நானோ தரையில் வாழ்பவன். நான் எப்படி உன்னோடு வர முடியும்?” என்று கேட்டது குரங்கு.

“என் முதுகில் ஏறிக் கொண்டு வா. போய் விரைவில் திரும்பி விடலாம்" என்றது முதலை.

அவ்வாறே குரங்கு முதலையின் முதுகில் ஏறிக் கொள்ள அது தன் இருப்பிடத்தை நோக்கிப் புறப்பட்டது. போகும் வழியெல்லாம் முதலையின் மனம் குழம்பிக் கொண்டே இருந்தது.

"பொன்னின் தரத்தைக் கல்லில் உரைத்துக் காண்பார்கள். மனிதனின் தரத்தை அவர்களின் சொல்லைக் கொண்டு தெரிந்து கொள்வார்கள். அறிவில்லாத வஞ்சகர்களின் தரத்தோடு ஒப்பிட்டு உயர்ந்தவர்களின் மதிப்பை அறிந்து கொள்வார்கள். ஆனால் இந்தப் பெண்களின் மனத்தைப் புரிந்து கொள்வதற்கு வழியே இல்லை. உயிருக் குயிரான இந்தக் குரங்கு நண்பனைக் கொல்ல நான் முடிவு செய்தேன். இது என் மனைவி செய்த வஞ்சகமா? இல்லை இடையில் வந்த இந்தத் தூதி செய்த கபடமா? ஒன்றும் புரியவில்லையே" என்று பேசாமல் இருந்தது முதலை. அதன் குழப்ப நிலையைக் கண்ட குரங்கு, “நண்பா, இன்றெல்லாம் உன் முகம் மிக வாடி இருக்கிறதே என்ன காரணம்? உன் மனைவி மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறாளா? எதையும் ஒளிக்காமல் சொல்’’ என்று கேட்டது.

"நண்பா, நான் என்ன சொல்வேன்! என் மனைவியோ சாகும் நிலையில் இருக்கிறாளாம். வானரத்தின் ஈரல் கொடுத்தால்தான் அவள் பிழைப்பாளென்று மருத்துவர்கள் சொல்லுகிறார்களாம். அதற்கு நான் எங்கே போவேன்?'என்று சொல்லி முதலைக் கண்ணிர் வடித்தது முதலை.

முதலையின் மன நோக்கத்தைக் குரங்கு புரிந்து கொண்டது. "பூ! இதற்குத்தானா இவ்வளவு கவலைப்படுகிறாய்? வானர ஈரல் எத்தனை வேண்டும்? நூறு வேண்டுமா?" என்று கேட்டது.

"அவ்வளவு வேண்டாம். ஒன்று இருந்தால் போதும்" என்றது முதலை.

"அதோ அந்த நீண்ட மரத்தின் கிளைகளில் வரிசையாக தொங்கிக் கொண்டிருக்கிறதே! முன்பே நீ எனக்குச் சொல்லியிருக்கக் கூடாதா? இத்தனை தூரம் வந்த பிறகு சொல்கிறாயே! சரி, சரி, நண்பா திரும்பு. போய் ஈரல்களில் ஒன்றிரண்டு எடுத்துக் கொண்டு, உன் மனைவிக்குக் கொடுக்கப் பழங்களும் பறித்துக் கொண்டு திரும்புவோம்" என்று கூறியது குரங்கு.

முதலையும் அதன் சொல்லை நம்பி உடனே திரும்பி புறப்பட்ட கரைக்கே கொண்டு வந்து விட்டது. கரை நெருங்கியவுடன் ஒரே பாய்ச்சலாக பாய்ந்து, மரத்தின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டது குரங்கு.

மரத்தின் மேல் ஏறிய குரங்கு இறங்காததைக் கண்டு எதிர்பார்த்துக் கொண்டிருந்த முதலை, நெடுநேரமான பின் "நண்பா, ஈரலை எடுத்துக் கொண்டு விரைவில் வா!" என்று அழைத்தது.

" ஏ முதலையே, இன்னும் ஆசை வைத்துக் கொண்டு ஏன் காத்துக் கொண்டிருக்கின்றாய்? பசி யோடிருப்பவனுடைய நட்பில் ஆசை வைத்தால், பாம்பை நண்பனாக்கிக் கொண்ட தவளையைப் போல் துன்பப்பட வேண்டித்தான் வரும். உனக்கும் எனக்கும் உள்ள நட்பு இத்தோடு போதும். இனியும் நான் ஏமாறுவேன் என்று எதிர் பார்க்காதே.

"பெண்கள் பேச்சுக்குக் காது கொடுத்தவர்கள் ஏளனத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். நீயோ உன் பெண்டாட்டிக்காக என்னைக் கொன்று விடவே நினைத்து விட்டாய். இது மிகவும் தீது.”

இவ்வாறு குரங்கு சொல்லிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த முதலையொன்று, "அரசி முதலை இறந்து விட்டது” என்று சொல்லியது.

தன் பிரிவால் தன் மனைவி இறந்து விட்ட செய்தியறிந்து முதலைக்குத் துக்கம் தாளவில்லை. அது குரங்கைப் பார்த்து, "நான் ஒரு பாவி. அருமை மனைவியையும் இழந்தேன். உன்னைக் கொல்ல நினைத்து உன் அருமையான நட்பையும் இழந்தேன்" என்று சொல்லி வருந்தியது.

"என்னைக் கொல்லும்படி சொன்ன உன் மனைவி பொல்லாதவன், அப்படிப்பட்ட தீயவள் இறந்ததற்காக நீ இவ்வளவு துயரப்பட வேண்டாம், கவலையை விடு. உன் இருப்பிடத்திற்குப் போ’ என்று குரங்கு கூறியது.

முதலையரசன் தன் இருப்பிடத்திற்குப் போய்ப் பார்த்தது. அங்கு வேறொரு முதலையிருக்கக் கண்டு, திரும்பி வந்தது. குரங்கைப் பார்த்து "என் இருப்பிடத்தில் வேறொரு முதலை வந்து இருந்து கொண்டு விட்டது. அதனை விரட்ட வழி சொல்ல வேண்டும்" என்று கேட்டது.

"தீயவர்களுக்கு வழி சொன்னால் தீமையே உண்டாகும்" என்று குரங்கு கூறியது.

"நான் உனக்குத் தீமை நினைத்தவன் தான். இருந்தாலும் நீ என்னிடம் இரக்கம் காட்டி ஓர் யோசனை சொல்ல வேண்டும்?’ என்று முதலை கெஞ்சியது.

நேரே சென்று உன் பகைவனாகிய அந்த முதலையிடம் போர் செய், சண்டையில் ஒரு வேளை நீ தோற்றால் வீர சுவர்க்கம் கிடைக்கும். எப்போதும் உரிய இடத்தில் வாழ்வதே நன்மை உண்டாக்கும். புதிய இடத்திற்குப் போனால் அதனால் துன்பங்கள் பல ஏற்படும். ஆகையால், உன் இடத்தை நீ அடைவதே சிறந்தது. நியாயம் உன் பக்கம் இருப்பதால் உனக்கே வெற்றி ஏற்படும். போ" என்று குரங்கு ஆலோசனை கூறியது.

முதலையரசன் தன் இருப்பிடத்திற்குச் சென்று அங்கு வந்து தங்கியிருந்த முதலையோடு போரிட்டு, அதைக் கொன்றது.

பிறகு அது தன் இடத்தில் இருந்து கொண்டு முதலைகளுக்கெல்லாம் ஓர் ஒப்பற்ற அரசனாக விளங்கிப் பல நாட்கள் இன்பமாக வாழ்ந்தது.