உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்ச தந்திரக் கதைகள்/சிங்கத்தைக் கொன்ற முயல்

விக்கிமூலம் இலிருந்து

6. சிங்கத்தைக் கொன்ற முயல்

ஓர் அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று இருந்நது அது அந்தக் காட்டில் இருந்த மற்ற விலங்குகளை எல்லாம் கண்டபடி வேட்டையாடிக் கொன்று தின்று கொண்டிருந்தது. இவ்வாறு நாளுக்கு நாள் அதன் வெறிச் செயல் அதிகமாகிக் கொண்டு வந்தது. இதைக் கண்ட மற்ற விலங்குகளெல்லாம் ஒன்றாகக் கூடி அந்தச் சிங்கத்தினிடம் சென்றன.

'சிங்கம், இந்தக் காட்டில் உள்ள விலங்குகளை எல்லாம் கண்டபடி வீணாகக் கொன்று கொண்டிருக்க வேண்டாம். இப்படிச் செய்து கொண்டிருந்தால் விரைவில் இந்தக் காட்டில் விலங்குகளே இல்லாமல் போய்விடும். ஆகையால் நாங்கள் இதற்கு ஒர் ஏற்பாடு செய்கிறோம். நாள் ஒன்றுக்கு ஒரு விலங்கு ஆக உனக்கு இரையாக அனுப்பிக் கொண்டிருக்கிறோம்' என்றன.

சிங்கம் இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக் கொண்டது. அதுபோல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலங்காக வந்து சிங்கத்திற்கு இரையாகிக் கொண்டிருந்தன.

ஒரு நாள் ஒரு முயலின் முறை வந்தது.' இனி நாம் பிழைக்க முடியாது. இருந்தாலும் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம். இதில் நாம் வெற்றி பெற்றால் காட்டு விலங்குகளை எல்லாம் காப்பாற்றிய பெருமை நமக்குச் சேரும். நாமும் சாவினின்று தப்பலாம்’ என்று அந்த முயல் ஒரு சிந்தனை செய்தது.



சிங்கத்தின் பசி வேளைக்குச் செல்ல வேண்டிய முறைப்படி செல்லாமல், நெடுநேரம் கழித்துச் சென்றது முயல். வேளை தப்பி வந்த முயலைக் கண்ட சிங்கத்திற்குக் கோபம் வந்து விட்டது.

‘ஏ, அற்ப முயலே, பெரிய மதயானை கூட என் பசி வேளைக்குத் தப்பி வந்ததில்லை. நீ ஏன் பிந்தி வந்தாய்?’ என்று சீறியது.

ஐயா, கோபம் கொள்ளாதீர்கள். உங்கள் பசி வேளைக்குச் சரியாக வந்து சேர வேண்டும் என்று சரியான நேரத்தில்தான் புறப்பட்டேன். ஆனால் வழியில் மற்றொரு கொடிய சிங்கத்தைக் கண்டு, எங்கே அதன் கண்ணில் பட்டால் அதற்கு இரையாகி விடுவோமோ என்று பயந்து ஓரிடத்தில் ஒளிந்து கொண்டிருந்தேன். மெல்ல மெல்ல அந்தச் சிங்கம், அங்கிருந்த ஒரு பெரிய குகைக்குள் நுழைந்து சென்றதைக் கண்ட பிறகு, வெளிப்பட்டு வேகமாக உங்களிடம் வந்து சேர்ந்தேன்’ என்றது அந்த முயல்.

‘என்னைத் தவிர இன்னொரு சிங்கமும் இந்தக் காட்டில் இருக்கிறதா? எங்கே அதைக் காட்டு பார்க்கலாம்! 'என்றது சிங்கம்.

உடனே முயல் சிங்கத்தை அழைத்துக் கொண்டு போய்ப் பக்கத்தில் இருந்த ஒரு பாழுங் கிணற்றைக் காட்டியது. சேறும் நீருமாக இருந்த அந்தக் கிணற்றுக்குள் சிங்கம் எட்டிப் பார்த்தது. தெளிவாகக் கிடந்த அந்தக் கிணற்று நீரில் சிங்கத்தின் நிழல் தெரிந்தது.

முயல் சொல்லிய மற்றொரு சிங்கம் அது தான் என்று எண்ணிய அந்த மூடச் சிங்கம், ஆத்திரங் கொண்டு கிணற்றுக்குள்ளே பாய்ந்தது. கிணற்றுக்குள் இருந்த சேற்றில் சிக்கி அது வெளியில் வர முடியாமல் உயிரிழந்தது.

சூழ்ச்சியினால் யாரையும் வெல்லலாம் என்பதற்கு இந்தக் கதை நல்ல எடுத்துக் காட்டாகும்.