பஞ்ச தந்திரக் கதைகள்/பொன்னாய் எச்சமிடும் பறவை

விக்கிமூலம் இலிருந்து

10. பொன்னாய் எச்சமிடும் பறவை

ஒரு மலையில் ஒரு பறவை இருந்தது. அது எப்பொழுது எச்சமிட்டாலும் அது பொன்னாக இருக்கும். நெடுநாளாக இதைக் கவனித்து வந்த ஒரு வேடன் ஒரு நாள் கண்ணி வைத்துப் பிடித்து விட்டான்.

அதைப் பிடித்த பிறகு, அரசனுக்கு இது தெரிந்தால், தன் உயிரை வாங்கிவிடுவானே என்று வேடனுக்குப் பயம் உண்டாகியது. பலவாறு சிந்தித்துக் கடைசியில் அதை அரசனிடமே தன் காணிக்கையாகக் கொடுத்து விட்டால் வம்பு விட்டது என்று முடிவுக்கு வத்தான். அரசனிடம் போய் அந்தப் பறவையின் சிறப்பை எடுத்துக் கூறி, அதைக் கொடுத்தான்.

அரசன் அந்தப் பறவையை வாங்கிக்கொண்டான். அரண்மனைத் தச்சர்களை வர வழைத்து அதற்கு ஓர் அழகான கூண்டு செய்யச் சொன்னான். அந்தக் கூண்டில் வைத்து அதை வளர்த்து வந்தான்.

இதைக் கண்ட அரசனுடைய அமைச்சன், 'எங்காவது பறவை பொன் எச்சமிடுமா? அந்த வேடன் எதையோ சொன்னான் என்றால் அதை உடனே நம்பிவிடுவதா? யாரும் கேள்விப்பட்டால் சிriப்பார்கள். நம் மதிப்புக்கே கேடு வரக்கூடும். இதை விட்டு விடுங்கள்' என்று சொன்னனன்.

எப்பொழுதும் அமைச்சருடைய சொல்லுக்கு மதிப்புக் கொடுக்கும் அரசன் உடனே கூண்டைத் திறந்து அந்தப் பறவையை விடுதலை செய்து விட்டான்.

விடுதலையான அந்தப் பறவை உடனே நேராக அரண்மனைக் கோபுரத்தின் உச்சிக்குப் பறந்து சென்றது. கோபுரத்தின் உச்சியில் இருந்து கொண்டு எல்லோருக்கும் கேட்கும் படியாக.

'வேடனிடம் தெரியாமல் அகப்பட்டுக் கொண்ட நான் முதல் மூடன். என்னை அடைந்தும் இழத்து விட்ட வேடன் இரண்டாம் மூடன். அது போலவே என்னை விட்டுவிட்ட அரசன் மூன்றாம் மூடன். அவனுக்கு யோசனை சொன்ன அமைச்சன் நான்காம் மூடன்!' என்று இரைந்து கூறியது.


பகைவருக் கிரங்குவதால் பழிவந்து சேரும்.