பஞ்ச தந்திரக் கதைகள்/வாயடக்கம் இல்லாத ஆமை

விக்கிமூலம் இலிருந்து

11. வாயடக்கம் இல்லாத ஆமை

இரண்டு அன்னங்களும் ஒர் ஆமையும் ஒரு குளத்தில் இருந்தன. அன்னங்களும் ஆமையும் மிகவும் நட்புடன் வாழ்ந்து வந்தன. இவ்வாறு இருந்து வரும் போது, நெடுநாள் மழை பெய்யாததால் அந்தக் குளத்து நீர் வற்றிப் போயிற்று. இதைக் கண்ட அன்னங்கள் இரண்டும் வேறொரு குளத்துக்குப் போகத் தீர்மானித்தன. அவை தங்கள் நண்பனான ஆமையை விட்டுப் போக மனமில்லாமல், அதை எவ்வாறு அழைத்துப் போவதெனச் சிந்தனை செய்தன. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து, அந்த ஆமையை அழைத்து, ‘நாங்கள் இரண்டு பேரும் இந்தக் குச்சியின் இரு நுனியையும் கவ்விக் கொண்டு பறக்கிறோம். நீ அதன் நடுப்பாகத்தை உன் வாயினால் பற்றிக் கொண்டு வா. இடையில் வாய் திறக்காதே’ என்று கூறின.

ஆமையும் சரியென்று அந்தக் குச்சியை வாயினால் பற்றிக் கொண்டது. அன்னங்கள் இரண்டும், இரண்டு பக்கமும் குச்சியைக் கவ்விக் கொண்டு பறந்தன. வானத்தில் ஆமை பறக்கும் புதுமையைக் கண்ட அந்த ஊரில் இருந்தவர்கள், வியப்புத் தாங்

காமல் கை கொட்டி ஆரவாரம் செய்தார்கள். இதைக் கண்ட அந்த ஆமை,' எதற்காகச் சிரிக்கிறீர்கள்!’ என்று அவர்களைக் கேட்பதற்காகத் தன் வாயைத் திறந்தது. உடனே அது பிடி நழுவித் தரையில் விழுந்து இறந்து போய்விட்டது.