பஞ்ச தந்திரக் கதைகள்/வாழ்வு தந்த கிழட்டு வாத்து
அந்த ஆலமரத்தின் அடியில் புதிதாக ஒரு கொடி முளைத்தது. அந்தக் கொடி இலேசாகப் படரத் தொடங்கியது. அதைக் கண்ட ஒரு கிழட்டு வாத்து மற்ற வாத்துகளைப் பார்த்து, இந்தக் கொடி, மரத்தைப் பற்றிக் கொண்டு சுற்றிப் படருமானால் நமக்கு ஆபத்து ஏற்படும். யாராவது இதைப் பிடித்துக் கொண்டு மரத்தின் மேல் ஏறி வந்து, நம்மைப் பிடித்துக் கொன்றுவிடக் கூடும். இப்பொழுதே நாம் இந்தக் கொடியை வேரோடு பிடுங்கி எறிந்துவிட வேண்டும் என்று சொன்னது.
ஆனால் மற்ற வாத்துக்கள் அந்தக் கிழட்டு வாத்தின் பேச்சை மதிக்கவில்லை. 'இது என்ன வேலையற்ற வேலை’ என்று அலட்சியமாகப் பேசி விட்டு அதைப் பற்றிக் கவலைப் படாமலேயே இருந்து விட்டன. அந்தக் கொடியோ நாளுக்கு நாள் வளர்ந்து பெரிதாக நீண்டு மரத்தைச் சுற்றிப் படர்ந்தது.
'ஒரு நாள் எல்லா வாத்துக்களும் இரை தேடப் போயிருந்தன. அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேடன் அந்த வாத்துக்களைப் பிடிக்க நினைத்தான். மரத்தைச் சுற்றிப் படர்ந்திருந்த கொடியைப் பிடித்துக் கொண்டு மிக எளிதாக அதன் மேல் ஏறினான். ஏறிக் கண்ணி வைத்து விட்டு இறங்கிச் சென்று விட்டான்.இரை உண்டும், விளையாடியும், திரும்பிய வாத்துக்கள் எதிர்பாராமல் அந்தக் கண்ணியில் சிக்கிக் கொண்டன.
கிழட்டு வாத்து மற்ற வாத்துக்களைப் பார்த்து நான் சொன்னதைக் கேட்காததால் இவ்வாறு அகப்பட்டுக் கொள்ள நேர்ந்தது. இனி எல்லோரும் சாக வேண்டியதுதான்’ என்று சொன்னது.
மற்ற வாத்துக்க ளெல்லாம் அந்தக் கிழட்டு வாத்தை நோக்கி, 'ஐயா, பெரியவரே! ஆபத்துக்கு நீங்கள் தான் அடைக்கலம். இனி என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். எப்படியும் நம் உயிர் தப்பினால் போதும்' என்று கூறின.
அறிவும் நல்லெண்ணமும் கொண்ட அந்தக் கிழட்டு வாத்துக்குத் தன் இனத்தினர் அழிந்து போகக் கூடாது என்று தோன்றியது. அத்தோடு மற்ற வாத்துக்களைப் பார்க்க இரக்கமாகவும் இருந்தது. 'சரி, நான் சொல்வதைக் கேளுங்கள், வேடன் வரும்போது எல்லாரும் செத்த பிணம் மாதிரிச் சாய்ந்து விடுங்கள். செத்த வாத்துக்கள்தானே என்று அவன் எச்சரிக்கையற்று இருக்கும் போது தப்பி விடலாம் என்று வழி கூறியது.
விடிகாலையில் வேடன் வந்தான். வேடன் தலையைச் சிறிது தொலைவில் கண்டதுமே எல்லா வாத்துக்களும் செத்ததுபோல் சாய்ந்து விட்டன. மரத்தின் மேல் ஏறிப்பார்த்த வேடன் உண்மையில் அவை இறந்து போய்விட்டன என்றே எண்ணினான். உயிருள்ள வாத்துக்களாயிருந்தால் அவன் அவை ஒவ்வொன்றின் கால்களையும் கயிற்றால் கட்டிப் போட்டிருப்பான். ஆனால், அவை செத்த வாத்துக்கள் தானே என்று கால்களைக் கட்டாமலே,கண்ணியிலிருந்து எடுத்துத் தரையில் போட்டான்.
ஒவ்வொன்றாக மரத்தின் மேலேயிருந்து தரையில் வீழ்ந்ததும் அவை வலியைப் பொறுத்துக் கொண்டு செத்த மாதிரியே கிடந்தன. எல்லா வாத்துக்களையும் அவன் கண்ணியிலிருந்து எடுத்துக் கீழே போட்டு முடித்தவுடன், கீழே இறங்கினான்.
அவன் பாதி வழி இறங்கும்போது, கிழட்டு வாத்து குறிப்புக் காட்டியது. உடனே எல்லா வாத்துக்களும் படபட வென்று அடித்துக் கொண்டு பறந்து மரத்தின் மேல் ஏறிக் கொண்டன.
வேடன் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றான்.
அனுபவமும், நல்லறிவும், நல்லெண்ணமும் உள்ள பெரியோர் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் எப்போதும் நன்மை யுண்டு.