பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை/இடஒதுக்கீடு

விக்கிமூலம் இலிருந்து
6

இடஒதுக்கீடு எனும்

சமூகநீதிக் கொள்கை முகிழ்த்தது

மார்லியவர்கள் பிரதிநிதித்துவ ஏற்பாட்டை ஏற்றுக் கொள் வதால் கனம் கவர்னர் அவர்கள் அந்த ஏற்பாட்டை கீழ் வரும் இடங்களிலும் நிறைவேற்ற வேண்டும்: அவை -

ராஜாங்க ஆலோசனை சங்கங்கள், (Legislatives)

முனிசிபல் சங்கங்கள், (Municipalities)

இராஜாங்க உத்யோக சாலைகள், (Govtoffices)

இராணுவ வகுப்பு (Defence departments)

வைத்திய இலாக்காக்கள் (Health departments)

போலிஸ் இலாக்காக்கள்(Police departments)

இரயில்வே இலாக்காக்கள் (Railway departments)

கல்வி இலாக்காக்கள் (Educational Departments)

அந்தந்த இலாக்காவின் மொத்த தொகைபடிக்கு இவ்வகுப்பார் பிரிவினைபடி சேர்த்து விடுவார்களானால் சகல சாதியாரும் சீரும் சிறப்பும் அடைவார்கள்.

இந்த விகிதாச்சாரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக இராஜாங்க ஆலோசனை சங்கத்தில் பின்வரும் விகிதாச்சாரத்தை கடைபிடிக்க வேண்டும்.

இராஜாங்க ஆலோசனை சங்கத்தில் 100 பேரை நியமிப்பதானால்

சாதி பேதமற்ற திராவிடர்களாம் இந்தியர்கள் 25 பேர் 25%
சாதிபேதமுள்ள இந்தியர்கள் 25 பேர் 25%
மகமதியர்கள் 25 பேர் 25%
யூரேஷியர் 13 பேர் 13%
இந்திய கிறித்தவர் (Native christian) 12 பேர் 12%
மொத்தம் 100 100%

இந்த ஆலோசனைகள் நிறைவேற்றுவதானால் சகல குடிகளும் சுகம் பெறுவார்கள் என்று பண்டிதர் குறிப்பிட்டதுடன்

இராஜாங்க உத்தியோக சாலைகளிலும் இதை நடைமுறை படுத்த வேண்டும் என்று அரசு அலுவல்களில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தினார், மேலும், முக்கியமாக:

இராஜங்க எக்ஸிகூட்டிவ் மெம்பர் (Executive council member) ஒருவரை தெரிந்து எடுத்துக் கொள்ள வேண்டுமாயின்

ஆண்டுக்கு ஒருவரைத்தான் நியமிக்க வேண்டும்.

அந்த நியமனமும்

திபேதமற்ற திராவிடர் ஒருவரை ஓர் ஆண்டுக்கும்
சாதி பேதமுள்ள இந்தியர் ஒருவரை ஓர் ஆண்டுக்கும்
மகமதியர் ஒருவரை ஓர் ஆண்டுக்கும்
யுரேஷியர் ஒருவரை ஓர் ஆண்டுக்கும்
இந்திய கிறித்தவர் ஒருவரை ஓர் ஆண்டுக்கும்

என முறையாக நியமித்து காரியங்களை நடத்த வேண்டும். இந்த நியமனம் சுழற்சி முறையானது என்பது சொல்லாமலே விளங்கும்.

பண்டிதர் தன் திட்டத்தை வெளியிட்டவுடன் கடும் எதிர்ப்பு சாதி இந்துக்களிடமும், பிறரிடமும் உருவானது. தன்னுடைய திட்டத்தை பண்டிதர் மாற்றியமைக்கும்படி அந்த எதிர்ப்பு இருந்ததாகத் தெரிகிறது. அதுவும் ஒரு வாரத்திலேயே தன் ஆலோசனைகளை மாற்றியமைக்கும்படி அது இருந்தது. அதைப் பற்றி பண்டிதர் கூறும்போது

"நமது பத்திரிக்கையில் சென்றவாரம் எழுதியுள்ள ஆலோசனை சங்கத்தோர் தொகை நியமனத்தைப் பற்றி சில இந்துக்கள் விரோத சிந்தையால் துரற்றியதாகக் கேள்வியுற்று மிக்க விசனிக்கிறோம்."

சாதி வித்தியாசப் பிரிவினைகளும், சமய வித்தியாசப் பிரி வினைகளும் நிறைந்த இத்தேசத்தில் எடுத்த காரியத்தை ஒற்றுமையில் நடத்துவது மிக்க கஷ்டமேயாகும்." (1:06)

என்று தன் வருத்தத்தை கூறி பின் தன்னுடைய மாற்று ஆலோசனையை முன்வைத்தார்:

ஆலோசனை சங்கத்திற்கு 100 பேரை நியமிப்பதானால்

சாதிபேதமுள்ள இந்தியர் 20 பேர் 20%
சாதிபேதமில்லா பூர்வபெளத்தர்

எனும் சாதிபேதமில்லா திராவிடர்

20 பேர் 20%
மகமதியர் 20 பேர் 20%
யூரேஷியர் 20 பேர் 20%
இந்திய கிறித்தவர் 20 பேர் 20%
மொத்தம் 100 பேர் 100%

இப்படி நியமிப்பதானால் சகல குடிகளும் சுகம் பெறு வார்கள். மேலும் கமிஷன் நியமனத்தில் தெரிந்தெடுக்கும் கலாசாலைக்கு 500 பேரை நியமிப்பதானால் கீழ்கண்ட வகையில் நியமனம் இருக்க வேண்டும்.

சாதிபேதமில்லா பூர்வ பெளத்தர்கள்

(சாதி பேதமில்லா திராவிடர்கள்)

100 பேர் 20%
சாதிபேதமுள்ள இந்துக்கள் 100 பேர் 20%
மகமதியர் 100 பேர் 20%
யுரேஷியர் 100 பேர் 20%
இந்திய கிறித்தவர் 100 பேர் 20%
மொத்தம் 500 பேர் 100%

இப்படி நியமிக்கப்படுபவர்கள் எப்படி தெரிந்தெடுக்கப்பட வேண்டும் என்பதையும் பண்டிதர் தெளிவுபடுத்தினார். அதன்படி,

அந்தந்த வகுப்பார் நூறு பேரு தங்களுக்குள் உள்ள விவேகிகளைத் தெரிந்தெடுத்து ஆலோசனைகளை சங்கத்திற்கும் அனுப்புவார்கள் அதனால்,

இந்துக்கள் சம்பந்த நியமனத்திற்கு மகமதியர் பிரவேசிக்க மாட்டார்கள்.

மகமதியர் சம்பந்த நியமனத்திற்கு இந்துக்கள் பிரவேசிக்க மாட்டார்கள்.

சாதிபேதமில்லா பூர்வ பெளத்தர்கள் நியமன சம்மதத்தில் சாதி பேதமுள்ள இந்துக்கள் பிரவேசிக்க மாட்டார்கள்.

எனவே காரியாதிகள் அந்தந்த வகுப்பார் பிரியசித்தம் போல் நிறைவேறிவரும் சகல ஏழை குடிகளும் இடுக்கமில்லா சுக வாழ்க்கைகளை அடைவார்கள். (1:107)

பண்டிதரின் இந்த கருத்துக்கள் வெளிவந்து அதன் மீதான கருத்துகளும் சமூகத்தில் விவாதிக்கப்பட்டது. இருந்தபோதும், மார்லி தன்னுடைய திட்டத்தில் உறுதியாக இருந்தார். அவரது திட்டங்கள் பலத்த எதிர்ப்புக்குள்ளாகிய நிலையில் இந்திய கவுன்சில் மசோதாவை 1909 ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் நாள் பிரபுக்கள் அவையில் முன் வைத்தார் மார்லி. தொடர்ந்து அதன் மீதான இரண்டாம் கட்ட விவாதத்திற்காக பிப்ரவரி 23ம் நாள் வைத்தார். தொடர்ந்து அந்த மசோதா பிப்ரவரி 24ம் நாள் நாடாளுமன்ற குழு விவாதத்திற்கு அனுப்பி அங்கும் மார்ச் 4, 9 ஆகிய நாட்களில் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் மார்லி பிரபுக்களை தன் கருத்துக்கு இணங்க வைக்க செய்த முயற்சிக்கு கர்சன் பிரபு கடுமையாக சாடிப் பேசி மசோதாவை கடுமையாகக் குறை கூறி பேசியதோடு சபையின் கணிசமான ஆதரவை தம் பக்கம் ஈர்த்துக் கொண்டார். எனவே மசோதா கடுமையான எதிர்ப்பில் அவையில் இருந்தது.

இப்படி மசோதாவானது மார்லியின் திட்டப்படியே முன் வைக்கப் பட்டதானது முஸ்லிம் மற்றும் பிற பிரிவுகளிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கியிருந்தது. மார்லியை ஆதரித்து எழுதிவந்த பண்டிதர் தனது தொனியை மாற்றி எழுதினார். 1909 மார்ச் 3ம் நாள் தமிழனில் எழுதும் போது:

ஏழாவது எட்வர்ட் அவர்கள் அனைத்து சாதியினருக்கும் அவர்கள் கேட்டுக் கொண்டபடி பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என தனது அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறார். ஆனால் மார்லியவர்கள் அரசரின் ஆலோசனையை முற்றும் கவனிக்காத போக்காக இருக்கிறது என்று தனது வருத்தத்தை தெரிவித்ததுடன் நில்லாமல்,

"சக்ரவர்த்தியார் கருணை நிறைந்த அமுதவாக்கை லார்ட் மார்லியவர்கள் கவனியாமல் இந்து தேசத்திலிருந்து கமிஷன் விஷயமாக பல வகுப்பார் அனுப்பியிருக்கும் விண்ணப்பங்களை கருணை கொண்டு ஆலோசியாமலும், தனது விசாரணைக் கெட் டிய வரையில் இந்து தேசத்தில் வாசஞ் செய்பவர்கள் யாவரையும் இந்துக்கள் என்ற எண்ணம் கொண்டு நூதன சட்டங்களை நிரு பிக்க ஆரம்பித்துக் கொண்டார். அத்தகைய எண்ணம் கொண் டவர் இந்து தேசத்தில் வாசஞ் செய்யும் மகமதியர்களையும் இந்துக் களாக பாவிக்காது மகமதியர்கள் வேறு இந்துக்கள் வேறு என்று பிரிக்க ஆரம்பித்துக் கொண்டார். ஆனால் இந்துக்களுள் இடி பட்டு நசிந்து வரும் முக்கிய வகுப்பாரை கவனித்தாரில்லை. லார்ட் மார்லியவர்கள் இந்து தேசத்துள் வந்து இந்துக்களுடன் பழகி ஒவ்வொரு வகுப்பர்களின் குணா குணங்களையும் நன்கு ஆராய்ந்தி ருப்பாராயின் சாதிபேதம், சமயபேதம் பாஷைபேதம், குண பேதம் நிறைந்துள்ள இந்துக்களை பேதமற்றவர்கள் போலெண்ணி இந்துக்களில் ஒருவரை எக்சிகூட்டிவ் மெம்பரில் சேர்க்கலாம் என்னும் அவசர வாக்களித்திருக்கமாட்டார்.

ஈதன்றி கமிஷனென்று வெளிவந்த சட்டத்தை கொண்ட - எண்ணப்படி குறிப்பிடாமல் சாதிபேதம் நிறைந்துள்ளவர்கள் வசம் எக்சிகூட்டிவ் மெம்பர் அலுவலை நியமிக்குஞ் சட்டத்தை ஆலோசித்தபடியால் இந்தியர்களின் குணாகுணங்களை அறிந்தோர்களும் பார்லிமெண்ட் மெம்பர்களும் ஆகிய கனவான்கள் தற்கால பார்லிமெண்டில் லார்ட் மார்லியவர்களின் ஆலோசனைகளுக்கு மறுப்பு கூறும்படி ஆரம்பித்துக் கொண்டார்கள். (1:106)

மேலும், மார்லியின் திட்டத்தை காங்கிரஸ் ஆதரித்து வந்தது. ஏனெனில் இந்துக்களின் தயவில் முஸ்லீம்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருந்ததை அது புரிந்து கொண்டு அது அதை ஆதரித்தது. ஆனால் காட்சி கள் வேகவேகமாக மாறத் தொடங்கின.

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கீழவையிலும் (House of Common) மசோதா பலத்த எதிர்பிற்குள்ளாகி அம் மசோதாவின் அடிப்படையே திருத்தப்பட்டது. மார்லியின் திட்டம் தேர்தல் முறையெல்லாம் மாற்றியமைக்கப்பட்டு, விவாதத்தில் இருந்தது. இந்த இடைபட்ட காலத்தில் பண்டிதர் தன்னுடைய முயற்சிகளை கைவிடவில்லை. தமிழனில் தொடர்ந்து எழுதுவதன் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கியும் இந்துக்களின் அதிகார மோகத்தை தாக்கியும் வந்தார். இந்துக்களுக்கு உயர் அதிகாரப் பதவிகளைக் கொடுப்பது சமூகத்திற்கு ஆபத்தானது என்றும் அவர் கருதினார்.

"மார்லி கருத்துப்படி நிர்வாகக் குழுவில் இந்தியரை சேர்க்கும் திட்டம் பற்றி ஒரு முப்பது அல்லது முன்னுறு பேருக்குத் தான் தெரியும் மீதமுள்ள முப்பது கோடி பேருக்கு அதன் பொருளே விளங்காது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் நீ என்ன சாதி? அவனென்ன சாதி? நான் உயர்ந்த சாதி, அவன் தாழ்ந்த சாதி என்பவைகள் தான் அவர்களுக்கு தெரியும். அதுவும் கற்றவர்கள் என்று கூறிக்கொள்ளும் பிராமணர்களுக்கு அந்த பதவியை கொடுக்கலாம் என இடைநிலை சாதிகள் சொல்லுவதை சாதி பேதமற்ற திராவிடர்களும், சுதேச கிறித்துவர்களும், மகமதியர்களும், யுரேஷியர்களும் சிற்றரசர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அந்த பதவியில் அமரும் பிராமணரால் சாதி நிலைப்பதுமின்றி அவனது சாதியே அவனது ஆச்சாரமே வாழும்"

என்று தன்னுடைய கடுமையான எதிர்ப்பைபண்டிதர் கூறிவந்தார்.(1:109)

பண்டிதரின் எதிர்ப்பிற்கு இந்த அம்சம் மட்டுமே காரணமில்லை அதை விடவும் முக்கியமான மக்கள் தொகை அடிப்படையிலான அரசி யல் பிரச்சினை காரணமாய் இருந்தது. ஏனெனில் சாதி இந்துக்கள் இந்துக் கள் என்ற ஒற்றை அடையாளத்திற்குள் தலித்துகளையும் சேர்த்து தமது பிரதிநிதித்துவ எண்ணிக்கை அதிகரிக்க விழையும் மோசடியினால் கொதிப்படைந்தார்.

"இந்துக்களோ இத்தேசத்தில் முக்கால் பாகம் இருக்கிறோமென்றும் சகலரையும் பொதுவாக இந்துக்களென்றே கொள்ள வேண்டியதென்றும் சம்யுக்த வார்த்தையாடி வருகிறார்கள்" (1:111)

"சாதிபேதமுள்ள இந்துக்களென்னும் பிராமண மதஸ்தர்களுக்கும் சாதிபேதமற்ற திராவிடர்களாம் பெளத்த மதஸ்தர்களுக்கும் யாதொரு சம்பந்தம் கிடையாது (1:111)

என்று தம்முடைய எதிர்ப்பை கூறியதுடன் தென்னகத்தில் அறுபது லட்சம் சாதிபேதமற்ற திராவிடர்களும் இந்தியா முழுக்க ஆறு கோடி பேராக இருப்பதுடன் மக்கள் தொகையில் ஐந்து பாகத்தில் ஒரு பாகமாக சாதிபேதமற்ற திராவிடர்களாம் பூர்வ பெளத்தர்கள் இருக்கிறார்கள். எனவே இவர்களுக்கு பிரத்தியோகமான நியமனம் (Separate Representation) இருக்க வேண்டும் (1:111) என்று தன்னுடைய ஆலோசனையை சொன்னார்.

மார்லியின் சீர்திருத்த நடவடிக்கையின் போது தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனிப் பிரதிநிதித்துவம் கோரும் இந்த கோரிக்கை முதன் முறையாக வெளிப்பட்டதுடன், அதை தொடர்ந்து வளப்படுத்தும் விதமாகவும் எழுதி வந்தார்.

மேலும் இந்துக்களின் ஒற்றை அடையாள மோசடியை அம்பலப் படுத்துவதோடு நில்லாமல், அதுவரை தான் முன் வைத்த சாதிபேதமற்ற திராவிடர்கள், இந்துக்கள், இந்திய கிறித்துவர், யுரேஷியர், மகமதியர், என்ற பிரிவுகளுக்கு மட்டுமின்றி பாரசீகர் (பார்சி) சீக்கியர் ஆகியோ ருக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இராஜாங்க உத்யோக சாலை களில் இவ்வகுப்பாருக்கு அவர்களின் தொகைக்கு தக்கவாறு இடம் ஒதுக்குவதுடன், அரசின் அந்தஸ்தான உத்யோகங்களை சாதிபேதம், சமய பேதம் அற்றவர்களுக்கே கொடுக்க வேண்டும். (1:112) என்று கோரினார்.

பண்டிதரின் கருத்துபடி அனைத்து மதத்தவருக்கும் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என முன்வைப்பு அதுவரை இருந்து வந்த முன்வைப்புகளிலிருந்து புதியதொரு அடியை எடுத்து வைத்தது. இந்த நேர்மையான முன்வைப்புகளுக்கு பிறரிடமிருந்து என்னவிதமான எதிர் வினைகள் என்பது குறித்து போதிய தகவல்கள் நம்மிடம் இல்லை. எனி னும் பின்வந்த காலங்களில் பண்டிதரின் இந்த வரையறுப்பு படிதான் நடந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

இப்படி பண்டிதரின் பணிகள் வேகம் பிடித்திருந்த காலத்திலே தாழ்த்தப்பட்டோரின் பிற அமைப்புகளும் சமூக முன்னேற்றத்திற்கான பணிகளை செய்து வந்தன. இந்நிலையில் மார்லியின் அரசியல் சீர்திருத்தத்தில் பறையர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டுமென ரெட்டமலை சீனிவாசன் தொடங்கியிருந்த பறையர் மகாஜன சபையின் அங்கத்தினர்கள் தம்முடைய கோரிக்கைகளை எழுதி மனுவாக கவர்னருக்கும், இங்கிலாந்திலுள்ள அரசருக்கும், மார்லிக்கும் அனுப்பியிருந்தார்கள். இந்த செய்கை பண்டிதருக்கு மிகுந்த மனகஷ்டத்தை உண்டாக்கிவிட்டது. ஏனெனில் திராவிட மகாஜன சபை மூலம் கொடுத்த மனு மீதான விசாரணை நிலுவையிலிருந்து அதன்மீது சாதகமான பதிலை அரசர் தெரிவித்திருப்பது நடந்துள்ள நிலையில் இந்த மனுவானது தாழ்த்தப்பட்டோருக்குள் ஒற்றுமையில்லை என்பதாக தோற்றமளிக்கும் என கருதி அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

"வீணே ஏழை குடிகளுக்குள் பிரிவினை உண்டு படுத்துவதுடன் இராஜாங்கத்தோடும் தங்கள் விண்ணப்பத்தைத் திருப்பியனுப்பும் வழியைத் தேடிக் கொள்ளாதிருக்க வேண்டுகிறோம்.

சாதிபேதமற்ற திராவிட மஹாஜன சபையோர் அனுப்பி யுள்ள விண்ணப்பத்தால் உண்டாவதும், உண்டாகப் போவதுமாகிய சுக பலன்களை தெரிந்துக் கொள்ள வேண்டியவர்கள். 1908 நவம்பர் 4ம் நாள் அரசர் ஏழாவது எட்வர்ட் இந்திய மன்னர் களுக்கு எழுதிய கடிதத்தில் எட்டாவது, ஒன்பதாவது வசனங்களைப் பாருங்கள் (1:ll4)

இந்த வேண்டுகோளை 1909ம் ஆண்டு மே மாதம் 26ம் நாள் தமிழனில் எழுதினார். ஆனால் இதழ் வெளிவருவதற்குள் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காட்சிகள் மாறியிருந்தன. மக்களவையில் விவாதங்கள் முடிந்து மார்லி முன்வைத்த மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட்டு 1909 மே மாதம் 25ம் நாள் மசோதா சட்டமாக சட்டமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. சட்டத்தில் முக்கியமான அம்சங்கள் வருமாறு:

கவுன்சில் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

தேர்தல் முறை ஏற்றுக் கொள்ளப்படும்.

வகுப்புகளின் நலன் கருதி தனிப் பிரதிநிதித்துவம் வழங்கப்படும். சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் முஸ்லீம்களுக்கு தனி பிரதிநிதித்துவம் மற்றும் தனி தொகுதி முறை (Seperate Representation and Seperate Electorate) வழங்கப்படும்.

இந்த அம்சங்களை உள்ளடக்கிய மசோதாநிறைவேறி சட்டமாக்கப்பட்ட பிறகு விதிகள் வகுக்கப்படவும், அது அரசிதழில் வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டிய இடைப்பட்ட கால அவகாசம் இருந்தது. எனினும் இந்த தகவல் இந்தியாவிற்கு வந்து சேர்வதற்கு வழக்கமான கால அவகாசம்தான் பிடித்தது.

தகவல் முழுதும் வந்து சேர்ந்தவுடன் பழைய காட்சிகள் மறைந்து தலைகீழான காட்சிகள் தோன்றின. முதலில் மார்லியின் தொடக்க திட்டத்தை காங்கிரஸ் தவிர மற்ற அனைத்து அமைப்புகளும் எதிர்த்தன. ஆனால் இந்த முறை முஸ்லீம் லீக் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளைத் தவிர மற்ற அனைவரும் எதிர்த்தார்கள். முஸ்லிம் மக்கள் அதிகாரத்தை கைப்பற்றும் தனது முயற்சியில் வெற்றிபெற்றனர். ஆனால் காங்கிரஸ் தோற்றதாக பொருளில்லை. ஏனெனில் பொதுப் போட்டிகளில் உயர்சாதி வர்க்கம்தான் நிரம்பி இருந்தது. இந்த பொது அதிகார பிரிவினையில் முஸ்லீம்கள் கொஞ்சம் பங்கு போட்டுக் கொண்டது உயர்சாதியினருக்குப் பிடிக்கவில்லை. எனவே எதிர்ப்புகள் கடுமையாக வெளிப்பட்டன.

இந்நிலையில் தலித் மக்களின் முன்னோடித் தலைவரான பண்டிதர் நடைமுறை பொருத்தத்தோடு இப்பிரச்சினையை அணுகினார். முஸ்லீம்களுக்கு தனி பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டதை வரவேற்றார். அத்துடன் நில்லாமல் காங்கிரசாரின் மாய்மாலங்களுக்கு மயங்காமல் தம்முடைய உரிமையை விட்டுவிடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று முஸ்லீம்களுக்கு ஆலோசனையும் சொன்னார்.

மார்லியவர்களின் நடவடிக்கைகள் யாவும் இந்தியாவிலிருந்து மிண்டோ அவர்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கைகளாலும், லண்டனில் அவரை சந்தித்த காங்கிரஸ் பிரமுகர்களான சுரேந்திர நாத் பானர்ஜி, கோபால கிருஷ்ண கோகலே உள்ளிட்ட காங்கிரசின் தலைவர்கள் மற்றும் இசுலாமிய தலைவர்கள் ஆகியோரினால் சித்தரிக்கப்பட்ட சித்திரத்தாலேதான் பெரும்பாலும் உருவானது. அவர் இந்தியாவிற்கு வந்து எந்த நேரடி சாட்சியமும், விசாரணையும் செய்யாமல் தனது திட்டத்தை முன்வைத்து, அது பல மாற்றங்களுக்கிடையில் சட்டமாக்கப் பட்டது. மார்லியின் இந்த நடவடிக்கையின் மூலம் முஸ்லீம்களுக்கு தனி பிரதிநிதித்துவம் கிடைத்தது போலவே, அரசு உயர் பதவிகளில் இந்தியர் களை நியமிக்கும் முடிவை அவர் எடுத்திருந்தார். இந்த தகவல் பண்டித ருக்கு பெருத்த அதிர்ச்சியை உண்டாக்கியதால் தனது எதிர்ப்பை காட்டி னார். 1909 ஜூன் 30ம் நாள் தமிழனில் .

இத்யாதி வித்யாசங்களையும் இந்துக்களின் குணா குணங் களையும் நன்காராய்ந்து அறியாத லார்ட் மார்லியவர்கள் இந்துக்களுக்கு பெருத்த உத்யோகங்களை அளிக்கலாமென்றாலோசிப்பது உள்ள ஏழை குடிகள் ஒருவரையுந் தலையெடுக்க விடாமல் நசித்துவிட்டு சாதித் தலைவர்களை மட்டும் சுகமடையச் செய்வதற்கேயாம். ஆதலின் நமது பிரிட்டிஷ் ஆட்சியின் ஆலோச னையதிபர்கள் இந்திய குடிகளை இடுக்கத்திற்கு ஆளாக்காமல் காக்க வேண்டியதவர்கள் கடனாகும் (1:158)

"இத்தகைய உத்தேசம் அவர் இந்தியாவை வந்து பாராததிரையும், இந்துக்களுடன் பழகாத குறையுமேயாம்

கண்டும் பழகியும் இருப்பாராயின் அப்பா! அப்பா!! இந்துக்களுக்கும் அந்தஸ்தான உத்யோகங்களுங் கொடுக்கப்போமோ வென்று குப்புறப் படுத்துக் கொள்ளுவார். காணாதவரும், பழகா தவரும் ஆதலின் அவர் கருத்துக்கள் யாவும் விருத்தமாக விளங்குகிறது.

ஒரு ஆபிஸில் பெரிய உத்யோகஸ்தர் ஒரு ஐயங்கார் சேர்வாராயின் ஐந்து வருஷத்துள் அவ்வாபிசிலுள்ள முதலி, செட்டி, நாயுடு மற்றுமுள்ளவர்கள் எல்லாம் மறைந்து போய் எல்லாம் ஐயங்காரர்கள் மயமாகவே தோன்றுவதியல்பாம்.

அங்ஙனமிருக்க நமது கனம் தங்கிய லார்ட் மார்லியவர்கள் இந்தியாவிற்கு வந்து தேச நிலைகளையும், கிராம நிலைகளையும் கண்டவருமன்று, பெரியசாதி சின்னசாதி எனும் குடிகளுடன் பழகியவருமன்று.

மார்லியவர்கள் ஏற்பாடு எந்தவிதத்திலும் இந்துக்களைத் திருப்தி செய்யவில்லை சட்டசபைகளில் 75% இடம் கிடைக்குமென நம்பியிருந்தவர்களுக்கு அரசு பணிகள் மட்டுமே கிடைப்பது அவ்வளவு உவப்பானதாக இல்லை. எனவே காங்கிரஸ் பெருந்தலைவர்கள் சுய ராஜ்ஜிய கோரிக்கையை உயர்த்தி பிடித்துக் கொண்டிருந்தார்கள். ஏற்கெனவே 1907ம் ஆண்டு சூரத்தில் நடந்த காங்கிரசில் மிதவாதிகளுக்கும் - அமித வாதிகளுக்கும் கலகமுண்டாகி காங்கிரஸ் இரண்டு பிரிவாக பிரிந்து விட்டதுடன் தொடர்ந்து அமிதவாதிகளின் செல்வாக்கு ஓங்கி வந்தது. இடையில் மிண்டோ - மார்லி சீர்திருத்த நடவடிக்கைகளில் எல்லோர் கவனமும் இருந்தது மட்டுமின்றி எப்படியாவது அதிகாரத்தை கைப்பற்றிவிட துடித்துக் கொண்டிருந்த நேரத்தில் லண்டனில் நிறைவேறிய மசோதாவானது இந்துக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவ ஒதுக்கீடு வழங்காததால் - எதிர்ப்பாளர்களின் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியது. இந்த எதிர்ப்பு வட்டம் வளர்வது சமூகத்திற்கு ஆபத்தானது என்று பண்டிதர் கருதினார். எனவே அவர்களை ராணுவத்தைக் கொண்டு அடக்க வேண்டுமென கோரியதுடன்

"வங்காள கவுன்சிலில் ஒர் மிலிட்டரி அதிபதியை நியமிப்பதுடன், சென்னை, பம்பாய் ராஜதானி கவுன்சில்களிலும் ஒவ்வோர் மிலிட்டரி அதிபதிகளை நியமித்து ஆலோசினை சங்கங்களை வலுச் செய்ய வேண்டும்.

ஈதன்றி ஒவ்வோர் ராஜதானியிலும் பிரிகடியர் ஜெனரல்களும் ஜெனரல்களும் அவர்களுக்குப் போதுமான இராணுவ வீரர்களும் இருக்க வேண்டும்.

நூறு குடிகளைக் கெடுத்து தாங்கள் ஒரு குடி சுகமடையக்கோறும் சாதித் தலைவர்களின் கொடியச் செயல்களை அடக்கியாளுவதற்கு அறக் கருணையாம் செங்கோலுதவாது, மறக்கருணையாம் கொடுங்கோல் கிஞ்சித் திருந்தே தீரல் வேண்டும்." (1.1.59)

இந்துக்களின் மீதான எதிர்ப்பில் பண்டிதர் தீவிரமாக இருந்ததற்கு காரணத்தை விளக்கத் தேவையில்லை. இந்திய தேசிய போராட்ட வரலாற்றை உள்ளபடியே அறிந்த யாவரும் பண்டிதரின் கருத்துக்களுடன் உடன் படாமலிருக்க முடியாது. பண்டிதரின் எதிர்ப்புகளுக்கு அவரின் விகிதாச்சார கொள்கையும், சமூகநீதி கொள்கையும்தான் அடிப்படையானவை என்பதை யாரும் மறுக்க முடியாது.

எனவே பண்டிதர் மார்லியவர்கள் இந்தியாவிற்கு வந்து விசாரிணை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்ததோடு இட ஒதுக்கீடு கோரிக்கையையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

லண்டன் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறிய பிறகு எதிர்ப்புகளை கணக்கில் கொண்ட அரசாங்கம், இனி இந்துக்கள் எனும் ஒற்றைப் பிரிவை ஏற்றுக் கொள்வதில்லை என முடிவு செய்து சகல பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் அளிப்பதென முடிவு செய்திருப்பதாக அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்பானது எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியமுள்ளது என்பது குறித்த வரலாற்று குறிப்புகள் தமிழனில் மட்டுமே கிடைக்கிறது. அரசின் இந்த அறிவிப்பை பண்டிதர் வரவேற்றார். 1909 ஜூலை 28ம் நாள் தமிழன் இதழில்.

கருணைதங்கிய ராஜாங்கத்தார் இந்தியர்களென்று பொதுவாக காரியாதிகளை நடத்தவிடாமல் அவர்கள் எவ்வகையாகப் பிரித்துக் கொண்டு போகின்றார்களோ அது போலவே இராஜாங்க ஆலோசனைச் சங்கத்திலும், சாதிப் பிரிவு, மதப்பிரிவு, பாஷைப் பிரிவு முதலியவைகளில் பெருந்தொகையாய் உள்ளவர்களுக்குத் தக்கவாறு ஒவ்வொருவரை நியமித்து அவரவர்களுக்குள்ள குறைகளை இராஜாங்கத்தோருக்கு விளக்கி சகல சாதியோடும் சகல மதஸ்தரும், சகல பாஷைக்காரர்களும் சமரச சுகம் அனுப விக்கும் படியான பேரானந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள்...

ஆதலின் நமது கருணை தங்கிய ராஜாங்கத்தார் எடுத்த நோக்கத்தை சோர்வடையாமல் நடத்தி சகல சாதியோரிலும் பெருந்தொகையினராயிருந்து பலவகைக் கஷ்டங்களை அனுபவித்து வரும் ஏழைக் குடிகளை சகலரைப் போலும் சுகமடையுஞ் சட்ட திட்டங்களை முன்னுக்குக் கொண்டு வருவார் களென்று நம்புகிறோம் (1:165)

என்று சகல மதசாதியரின் பிரதிநிதித்துவத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்த்தார். அதுவுமின்றி மாகாண சட்டசபை தேர்தல்கள் நடத்த வேண்டிய முறை குறித்தும் தனது கருத்துக்களை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்தியர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் முறை கூடாது என்பது பண்டிதரின் கொள்கையாக இருந்தது. ஏனெனில் கூட்டு வாக்களிப்பு முறையானது மீண்டும் இந்துக்களுக்கே வாய்ப்பளித்து விடும் என்பது பண்டிதரின் உறுதியான கருத்து. முனிசிபாலிட்டி (Municipality) தேர்தல் களில் நடக்கும் ஊழலை சுட்டிக்காட்டி

"ஒட்டு வாங்குவதற்கு இவ்வளவு பெரிய ஐயர் வந்தால் எப்படி மாட்டேனென்று சொல்லுகிறது. இவ்வளவு பெரிய முதலியார் வந்தால் எப்படி மாட்டேனென்று சொல்லுகிறதெனப் பேசிக் கொண்டே கோச்சு வண்டியிலேறிக் கொண்டு ஒட்டு வாங்கிக் கொள்ளுகின்றவர்கள் எவ்வகை எழுதிப் பெட்டியிற் போடும்படிச் சொல்லுகின்றார்களோ அம்மேறையே நடந்து வருவது இக்குடிகளின் அநுபவமாயிருக்கிறது.

இத்தகையாய் முனிசிபல் கமிஷனர் நியமனங்களே இன்ன வையாயது, யாதென்று அறியாதப் பெருந்தொகைக் குடிகளுக்கு சட்ட நிருபண சங்க நியமனம் யாது விளங்கி அங்கங்களை நியமிக் கப்போகின்றார்கள். குடிகளே நியமிப்பார்களென்பது வீண் முயற்சியேயாகும்.

சட்ட நிரூபண சபைக்கு குடிகளே அங்கங்களை நியமிப்பதைப் பார்க்கிலும் கருணைத் தங்கிய கவர்ன்மெண்டாரே ஒவ்வோர் அங்கங்களையுந் தெரிந்தெடுத்து சங்கத்திற்கு சேர்த்து விடுவது அழகாகும். (1:179)

பண்டிதரின் இந்த யோசனைக்கு அவர் கண்ணாரக் கண்டு வந்த முனிசிபாலிட்டி தேர்தலில் நடக்கும் தில்லுமுல்லுகள் மட்டும் காரணமில்லை. பணம் படைத்த உயர்சாதியினர் அந்த பதவிகளில் உட்கார்ந்து கொள்வதில் மூலம் சகல மக்களின் குரலை ஒலிக்க விடாமல் இருப்பதுதான். எனவே அந்தந்த சமூகங்களில் உள்ள படித்த கனவான் களை நியமிப்பதனால் அச்சமூகத்தின் கஷ்டத்தை உணர்ந்த அவர்கள் மூலம் மக்கள் குரல் சபையேறும் என கருதியதால்தான் இந்த திட்டத்தை முன்வைக்கிறார். எனினும் இந்த கருத்தில் பின்னாளில் அவருக்குள் மாற்றம் நிகழ்ந்தது.

இக்காலகட்டத்தில், மிண்டோ - மார்லியின் திட்டங்களினால் நாட்டில் கொந்தளிப்பான சூழல் நிலவியது. இசுலாமியருக்கு தனி பிரதி நிதித்துவமும், தனி வாக்காளர் முறையும் அளிக்கப்பட்டதால் இந்துக்கள் முஸ்லீம்களிடையே பிரிவினையை உண்டாக்கிவிட்டதாக இந்துககள் கூச்சல் போட்டு அத்திட்டத்தை கைவிடும்படி தொடர்ந்து வற்புறுத்தினார்கள். இந்திய வரலாற்றை எழுதும் பல வரலாற்றாசிரியர்கள் இத்திட்டம்தான் இந்து முஸ்லீம் பிரிவினையை உருவாக்கி நிலைபடுத்திய பிசாசு (evil) என வர்ணிக்கிறார்கள்.

இந்த பிரிவினை கூச்சல்களை பண்டிதர் தொடர்ந்து மறுத்து வந்ததோடு, அதை சொல்லக்கூடிய தகுதி இந்துக்களுக்கு கிடையாது. என்றும், மாறாக இந்துக்களுக்குள் உள்ள சாதியாச்சார பிரிவினைகள் துவேஷங்களாய் வெளிபடும் அவலங்களை சுட்டிக்காட்டினார்.

"பிச்சைக் கொடுப்பதில் தங்கள் சாதியோரை மட்டிலும் பார்த்து பிச்சைக் கொடுப்போர் வசம் இராஜாங்கப் பார்வை யையுங் கிஞ்சித்து விட்டுவிடுவார்களாயின் யாருக்கு சுகமளித்து யாரைப் பாழாக்கி விடுவார்கள் என்பதற்கு சாட்சியம் வேண்டுமோ

வேண்டுவதில்லை. ஆதலின், கருணை தங்கிய இராஜாங்கத்தார் தாங்கள் ஏற்படுத்தும் ஆலோசினை சங்கத்தில் சகல சாதியோர்களையும் சேர்த்து அவரவர் குறைகளை தேற விசாரித்து தேச சீர்திருத்தம் செய்வதே சிறப்பாகும்" (1:183)

என்று 1909, செப்டம்பர் 15ம் நாள் தமிழன் இதழில் எழுதினார். பண்டிதர் தமது அடிப்படைக் கருத்துக்களை தொடர்ச்சியாக முன் வைத்துக் கொண்டும், அதற்கு எதிரான கருத்துக்களை எதிர்த்துக் கொண்டும் வந்தார். இந்த நிலையில்தான் 1909ம் ஆண்டு நவம்பர் 15ம் நாள் லண்டனில் மிண்டோ - மார்லியின் அரசியல் சீர்திருத்த "இந்திய கவுன்சில் சட்டம் 1909ன் விதிகள் வெளியானது. இதில் அச்சீர் திருத்தத்தின் முழு வடிவமும் விளக்கப்பட்டது. அத்திட்டத்தின் படி :

  • மாகாண சட்ட சபைகள் விரிவுபடுத்தப்படும்.
  • கவர்னர் ஜெனரல் கவுன்சில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 60ஆக

இருக்கும்.

  • இராஜாங்க சட்டசபை (imperial council)க்கு 37 அதிகாரிகள்

உறுப்பினர்களும், 23 அதிகாரிகள் அல்லாதவர்களும் நியமிக்கப்படுவார்கள். இதில் 37 அதிகாரிகளில் 28 பேரை கவர்னர் ஜெனரல் நியமிப்பார். மீதமுள்ளவர்கள் முன்னாள் அதிகாரிகள் மட்ட உறுப்பினர்கள் (Ex.officio)

எனப்படுபவர்கள் இவர்களில்

                    கவர்னர் ஜெனரல் 1 நபர்

                    சாதாரண உறுப்பினர்கள் 6 பேர்

                    சிறப்பு உறுப்பினர்கள் 2 பேர்

என இருப்பார்கள்.

மேலும் அதிகாரிகள் அல்லாத உறுப்பினர்களில் 23 பேரில் 5 பேரை கவர்னர் ஜெனரல் நியமிப்பார். மீதமுள்ளவர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.

        சென்னை மாகாணத்தைப் பொருத்தவரையில்

        மொத்த உறுப்பினர்கள் 47 பேர்

1. அதிகாரிகள் மட்ட உறுப்பினர்கள் 21 பேர்

        முன்னாள் அதிகாரிகள் மட்ட
        உறுப்பினர்களில் (Ex-officio members)

        கவர்னர் 1 நபர்

        நிர்வாக குழு உறுப்பினர்களில் 3 பேர்

        தலைமை வழக்கறிஞர் 1 நபர்

        மீதமுள்ளவர்கள் 16 பேர்

        இவர்களை கவர்னர் நியமிப்பார்.

2. அதிகாரிகள் அல்லாத உறுப்பினர்களில்,

        கவர்னரால் நியமிக்கப்படுபவர்கள் 5 பேர்

        தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் 21 பேர்

3. இப்படி தேர்ந்தெடுக்கப்படும் 21 உறுப்பினர்கள்

    கீழ்கண்டவாறு இருப்பார்கள்.

        முகமதியர்கள் 2 பேர்

        ஜமீன்தார்கள் 2 பேர்

        நிலப்பிரபுக்கள் 3 பேர்

        தோட்ட வகுப்பினர் 1 நபர்

        சென்னை மாநகராட்சியிலிருந்து 1 நபர்

        மெட்ராஸ் சேம்பர் ஆப் காமர்ஸில் 1 நபர்

        மெட்ராஸ் வணிகர்கள் முனைவோர்

        கூட்டமைப்பின் மூலம் 1 நபர்

        முனிசிபல், மாவட்ட மற்றும் தாலுகா

        போர்டுகளின் மூலம் 19 பேர்

        என்ற பிரிவுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

  • தேர்தல் முறையானது நிலப்பரப்பு அடிப்படையில் அல்லாமல், வகுப்புகளின் நலனை அடிப்படையாகக் கொண்டி ருக்கும். பல்வேறு வகுப்புகள், வர்க்கங்களுக்கு தனி வாக்காளர் தொகுதி (Separate electorate) அல்லது சிறப்பு வாக்களர் தொகுதி (Special electorate) அடிப்படையில் பிரதிநிதிகள் தேர்வு செய்யப் படுவார்கள்.
  • மீதமுள்ளவை பொதுத் தொகுதிகள் (General Electorate) என அழைக்கப்படும். (1983:280)

இந்த திட்டம் தான் மிண்டோ - மார்லி சீர்திருத்தம் என்றும், இந்திய கவுன்சில் சட்டம் 1909 என்றும் அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தை முஸ்லிம் லீக் தவிர பிறர் அனைவரும் எதிர்த்தார்கள். காங்கிரஸில் கோகலே இதை வரவேற்றார். பிரதிநிதித்துவ அரசியலில் மாபெரும் முன்னேற்றம் என்று அவர் வர்ணித்தார் (2006:188)

இத்திட்டம் கடுமையான எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டது. ஆனால் எதிர்ப்பாளர்களின் அப்பட்டமான சாதி உணர்வை, அதிகார வெறியை வெளிச்சம் போட்டு காட்டியது. சாதி இந்து பத்திரிக்கைகள் தமது வெறுப்பை காட்டியதை பற்றி மிக காட்டமாக பதில்களை பண்டிதர் எழுதினார். வங்காள இதழொன்றுக்கு அப்படியான ஒரு பதிலை அளித்தார். நவம்பர் 24, 1909 தமிழன் இதழில்

"இந்தியர்களுக்கு தற்காலம் கொடுத்துள்ள கெளன்சல் மெம்பரை யாங்கள் கேட்கவில்லை. ஐரோப்பியர்கள் இந்தியர்களை சமமாக நடத்தாமல் அதிகேவலமாக நடத்துகிறார்களே அதை நீக்கும் படி கேட்டுள்ளோம்.

அவற்றை இராஜாங்கத்தோர் சீர்திருத்தாது கெளன்சல் மெம்பரை அதிகப்படுத்தினாலும் படுத்திக் கொள்ளட்டும். இந்தியர்களை மட்டிலும் ஐரோப்பியர் சமமாக நடத்த வேண்டுமென்று கேட்கிறீர். அவ்வகை சமரசங்கேட்போர் தென்னிந்தியாவில் பார்ப்பானென்றும் பறையனென்றும் வகுத்துள்ள பொய் சாதிக் கட்டுக்களை ஏன் அகற்றினீரில்லை. பார்ப்பானென்பவனும் இந்து தேச மனித வகுப்பைச் சார்ந்தவன், பறையனென்பவனும் இந்துதேச மனித வகுப்பைச் சார்ந்தவன். இவ்விருவரும் ஒரு தேசக் குடிகளாக இருந்துக் கொண்டு ஒருவர் சுகமடைவதுப் போல் மற்றவர்கள் சுகமடையப் போகாதென்று சகல விஷயங்களிலுந் தாழ்த்தி சீர்கெடுத்து வந்ததையும், வருவதையும் உணராது ஐரோப்பியர் மட்டிலும் சமரச சுதந்திரங் கொடுப்பதில்லையென்று கேட்பது நியாயமாகுமோ? (1:207)

பண்டிதர் தன் கருத்துக்களை முன் வைத்து வந்ததானது பெருத்த எதிர்ப்பை சம்பாதித்து கொண்டது. ஏற்கெனவே தேர்தல் முறை வேண்டாமென்றும், சகல சாதியாருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று கோரியது கடும் எதிர்ப்பிற்கு உள்ளாகி இருந்தது. எனினும் தன் கருத்தில் பண்டிதர் உறுதியாக இருந்தார். இதற்கு பதில ளித்து 1909 டிசம்பர் 29ம் நாள் தமிழனில்

"சென்னை ராஜதானியில் ஐயர், முதலி, ராவ், செட்டி நாயுடு, பிள்ளை, நாயர், ரெட்டி எனும் வகுப்பாருள் ஒவ்வொரு வகுப்பினருள்ளும் நன்கு வாசித்தவர்களும், பட்டாதாரர்களும், பெருந்தொகையான வரி செலுத்துபவர்களும் இருக்கின்றபடியால் அந்தந்த வகுப்பாருள் விவேக மிகுந்த பெரியோர்களை கண்டெடுத்து கவுன்சில் மெம்பரிற் சேர்ப்பது சகல வகுப்பாருக்கும் சுகத்தை விளைவிப்பதுமன்றி அந்தந்த வகுப்பார்களுக்கு நேரிட்டுள்ள குறைகளையும் அகற்றி வாழ்வதற்கு ஆதாரமென்றுங் கூறியிருந்தோம்.

அவற்றை கண்ணுற்ற சுயப்பிரயோசன சோம்பேறிகள் அத்தகைய வகுப்பைப் பிரித்து ஒட்டு கொடுக்கப் படாதென்றும், சில மூடர்கள் அவ்வகையான அபிப்பிராயங் கொடுக்கின்றார்கள்.

இவ்வகை பிரிக்கலாகாதென்று கூறுவோர் பிரிக்கத்தக்க தொடர் மொழிகளாகும் ஐயர், முதலி செட்டி, நாயுடு, நாயர் என்னும் ஈற்றிலுள்ள சாதிப்பெயர்களை எடுத்துவிட்டு முத்துசாமி இராமசாமி, கோவிந்தன், கோபாலனென வழங்கி வருவாராயின் பிரிவினையாக்கும் யாதோர் வகுப்பும் இல்லையெனக் கருதி சகலரையும் இந்தியரென்றே கூறலாம்." (1:219)

இப்படி இந்துக்களை எதிர்த்ததோடு, தன் திட்டங்களுக்கு ஜனநாயகத் தன்மை வழங்கும் முயற்சியில் அணியமாக்கும் திட்டத்தில் மேலும் கூடுதலாக ஜைனர்களை சேர்த்தார். அவர்கள் அதுவரையில் அரசியல் கோரிக்கை ஏதும் முன் வைக்காமலிருந்ததை பண்டிதர் சுட்டிக் காட்டி அதே நாளிட்ட இதழில் எழுதினார்.

"இத்யாதி கவுன்சில் கூச்சலில் நமது ஜைன மத சோதிரர்கள் வெளித்தோன்றாமலிருப்பது மிக்க விசனமே. இத்தென்னிந்தியாவில் பூஸ்தியுள்ளவர்கள் அனந்தம் (நிறைய) பேரிருக்கின் றார்கள். கல்வியில் பி.ஏ. எம்.ஏ. முதலிய கெளரதா பட்டம் பெற்றுமிருக்கிறார்கள். இவர்களுக்குள் யாரையேனும் தெரிந்தெடுத்து கவுன்சில் மெம்பரில் சேர்த்து விடுவார்களாயின் அக்கூட்டத்தாருக்குள்ளக் குறைகளை இராஜாங்கத்தோருக்கு விளக்கி சுகம் பெறச் செய்வார்கள். ஆதலின் ஜைன சோதிரர்கள் உடனே வெளி வந்து தங்களுக்குள் ஒர் பிரதிநிதியை கவுன்சிலுக்கு அனுப்புவார்களென்று நம்புகிறோம் (l:219)

பண்டிதரின் திட்டத்தில் ஏறக்குறைய அனைத்து மதத்தவருக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கை முழுமையடைந்தது. அவரது கருத்துக்களில் துல்லியத்தன்மை மிளிந்தாலும், அதை மேலும் மேலும் வளப்படுத்தினார்.

மிண்டோ - மார்லி திட்டம் வெளியாகி அதன்மீதான வாதப் பிரதி வாதங்கள் நடந்து வந்த நிலையில் 1910 ஜனவரி முதல் வாரத்தில் லாகூரில் காங்கிரசின் வருடாந்திர கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் மீது கடும் எதிர்ப்பு காட்டப்பட்டது. காங்கிரசைப் பொருத்தவரையில் மிண்டோ - மார்லி திட்டத்தில் பிரதி நிதித்துவம் கொடுக்கப்பட்ட பிரிவினரைவிட முஸ்லீம்களுக்கு கொடுக்கப் பட்டதுதான் கண்டனத்திற்குள்ளானது. இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே பெரிய ஒர் மதில் சுவரை பிரிட்டிஷ் அரசு எழுப்பி விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள். ஆனால் அவ்வாறு கவலைப் படுமளவிற்கு காங்கிரஸ் நேர்மையான அமைப்பா? என பண்டிதர் கருதினார்.

"கவுன்சிலர் நியமனத்தை இந்தியருக்கென்று பொதுவான உத்திரவு கொடுத்திருப்பார்களாயின் அந்தக் கவுன்சிலில் மகமதியர்களையே சேர்த்திருக்கமாட்டார்கள் என்பது திண்ணம்.

தற்காலம் சென்னை ராஜதானியில் சேர்த்திருக்கும் கவுன்சில் மெம்பர்கள் 47 பெயர்களில் மகமதியர்களை 23 பேர்களையேனும் சேர்த்துவிட்டார்களா? இல்லையே! 47 மெம்பர்களில் மகமதியர் இரண்டு பேரைத்தானே நியமித்திருக்கிறார்கள். இவ்விரண்டு பேர் நியமனத்தில் இவ்வளவு மனஞ்சகியாத காங்கிரஸ் கூட்டத்தார் இன்னும் 4 மகமதியர்களை சேர்த்துவிட்டால் என்ன கூச்சலிடு வார்களோ தெரியவில்லை. மகமதியர்க்கு மட்டும் 16 பெயருக்கு ஒருவரிருக்கிறாரென்று கணக்கெடுத்து பேசியவர் தாங்கள் எவ்வளவு பெயர் இருக்கிறோமென்று கணக்கெடுக்கவில்லை போலும்" (1:219-20) முஸ்லீம்களுக்கான ஆதரவை மட்டும் இதில் பண்டிதர் முன் வைக்கவில்லை. அதே கண்டன பத்தியில்

"காங்கிரஸ் கூடும் இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு கனந்தங்கிய பரோடா ராஜனவர்கள் தீண்டப்படாதென்னும் ஆறுகோடி மக்கள் படும் அவமதிப்பையும், அவர்கள் முன்னேற வழியில்லா இடுக்கங்களையும் எடுத்தோதி முன்பு இவர்களை சீர் திருத்தும் வழிகளைத் தேடுங்கோளென்று கூறியுள்ளவற்றை தங்கள் காங்கிரஸ் கூட்டத்தில் எடுத்துப் பேசி ஆறுகோடி மக்களின் அல்லலை நீக்கும் வழி தேடியிருப்பார்கள்.

அத்தகைய பொதுநலமற்று சுயநலங் கருதுவோர்களாதலின் ஆறுகோடி ஏழைகளின் அவமதிப்பைக் கருதாது தங்கள் சுகங்களை மட்டும் மேலெனக் கருதி, மகமதியருக்கு கொடுத்துள்ள இரண்டு பேர் சுதந்திரத்தையும் மனஞ்சகியாது வீணே கூச்சலிட்டிருக்கிறார்கள்" (1:220)

பண்டிதர் தன் எதிர்ப்புகளையும், கருத்துக்களையும் தீவிரமாக முன்னிருத்திக் கொண்டிருந்த நேரத்தில் அரசின் போக்கில் புது மாறுதல் உண்டாகி இருந்தது. ஏற்கெனவே மிண்டோ - மார்லி திட்டப்படி வழங்கப்பட்ட பிரதிநிதித்துவத்தை விரிவாக்கும் நோக்கில் யுரேஷியருக்கும், இந்திய கிறித்தவரும் 1910 ஜனவரியில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது. இந்த பிரதிநிதித்துவம் நியமன அடிப்படையில் இருந்தது. இந்த நிகழ்ச்சி பண்டிதரின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி போலத் தெரிந்தது. எனவே அவர் அதை வரவேற்றார். 1910 ஜனவரி 12ம் நாள் தமிழன் இதழில்,

"சென்னை ராஜதானியில் தற்காலம் ஆரம்பித்திருக்கும் ஆலோசினை சங்கத்தில் மகமதியருக்குள்ளும், இந்துக்களுக்குள்ளும் அங்கங்களை நியமித்ததுமின்றி யுரேஷியருக்குள் ஒருவரையும், சுதேச கிறித்தவருக்குள் ஒருவரையும் நியமித்துள்ளது கண்டு மிக்க ஆனந்தித்தோம் (1 :221)

யுரேஷியருக்கும், இந்திய கிறித்தவருக்கும் தம்முடைய ஆதரவை தெரிவித்ததுமில்லாமல், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தம்முடைய கோரிக்கையையும் அதில் சேர்த்து வலியுறுத்தினார். அதில்,

சில இங்கிலீஷ் துரைகளினால் சிலர் (தலித்) முன்னுக்கு வந்திருந்தார்கள். இப்போதும் சிலர் (தலித்) போதுமான கல்வி யடைந்து சில உத்யோகங்களில் இருக்கிறார்கள்.

அவர்களில் ஒருவரை தெரிந்தெடுக்கும் எண்ணம் கவர்ன்மெண்டாருக்கு இருக்கும் பட்சத்தில் நாம் அவர்களுடைய பெயர்களையுங் கொடுப்போம். அப்படி கொடுக்கும்படியான பெயர்கள் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் நடக்கும் விஷயங்களை தெரிந்துக் கொள்வதுமின்றி, எவ்விதமாக பேச வேண்டும் என்னும் பகுத்தறிவும் இருக்குமென்பதற்கு யாதொரு ஆட்சேபணையுமில்லை. மெட்ராஸ் பிரசிடென்சியில் ஜாதிபேதமற்ற திராவிடர்கள் அநேகமாக இருக்கிறபடியால் அவர்களுக்குள்ளக் குறைகளை சங்கத்தில் விளக்குவதற்கு அவர்களுடைய மரபிலேயே ஒரு லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் மெம்பர் இருக்க வேண்டியது அவசியமென்பது நமது கருத்து.

இந்த விஷயத்தைப் பற்றி 1908ம் வருடம் கவர்னர்வர்களுக்கு விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. அக்காலத்தில் எலக் ஷன் சிஷ்டத்தைப் பற்றி அதிகமான விளம்பரமிருந்தபடியால் இக்குலத்தாரைப் பற்றி பேசுவதற்கு ஒரு யூரோப்பியன் அல்லது யுரோஷிய கணவானை நியமனம் செய்யும்படி கேட்டுக் கெள்ளப் பட்டது.

இப்போது கவர்னர்கள் யுரேஷியன் வகுப்பையும், இந்தியன் கிறிஸ்டியன் வகுப்பையும் பிரதிநிதித்துவம் செய்வதற்காக அக்கூட்டத்தார்களில் இருவரை நாமிநேட் செய்திருக்கிறதாகத் தெரிகிறபடியால் இக்குலத்திலிருந்தும் ஒருவரை நாமினேட் பண்ணுவதில் மற்ற இந்துக்களுக்கும், மகமதியர்களுக்கும் யாதொரு ஆட்சேபனை செய்வதற்கு இடமில்லையென்பது நம்முடைய பூர்த்தியான அபிப்பிராயமானபடியால் நமது கவர்னர் கனந்தங்கிய ஸ்ர் ஆர்த்தர் லாலி அவர்கள் அன்பு கூர்ந்து ஏழை குடிகளிலிருந்து ஒருவரை நாமிநேட் செய்வாரென்பது நம்முடைய தாழ்மையான கோரிக்கை" (1:222)

கவுன்சில் நியமனங்களில் கல்வி கற்றவர்களையே உறுப்பினர்களாக சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை சாதி இந்துக்கள் தொடர்ந்து முன்வைத்தனர். இப்படி முன்வைப்பதற்கு காரணமிருந்தது. தீண்டத்தகாத மக்களில் எம்.ஏ. பி.ஏ. பட்டம் பெற்றவருள் குறைவு எனவே இக்கோரிக்கையின் மூலம் அவர்களை விலக்கி வைக்க முடியும் என அவர்கள் கருதினார். இந்த போக்கை கடுமையாக எதிர்த்து பி.ஏ. எம்.ஏ பட்டம் பெற்றவர்கள் சுயசாதி அபிமானிகளாகவும், தம் குடும்பத்தையும், தன்சாதியையும் மட்டுமே கம்பெனிக்கு சுய நலவாதிகளாக இருக்கிறார்கள் எனவே இது போன்ற தகுதிகளை முன்வைக்காமல், அந்தந்த சாதிகளில் எவர் திறமையானவர் - ஒழுக்கமுள்ளவர் என்பவரை கண்டெடுத்து ஆலோசினை சங்கத்திற்சேர்க்க வேண்டும் (1:224) என பண்டிதர் பதிலடித் தந்தார்.

அதே நேரத்தில் தலித்தல்லாதவர்களில் உள்ள நேர்மையான சக்திகள் என்று தான் கருதியவர்களுக்கு தமது ஆதரவை பண்டிதர் எப்போதும் வெளிபடுத்தி வந்தார். பரோடா ராஜா கெய்க்வாட், சர்வ சாலை இராமசாமி முதலியார், டி.எம். நாயர், பொப்பிலி அரசர் ஆகியோர் மீது உயர்ந்த அபிப்ராயத்தை பண்டிதர் வைத்திருந்தது மட்டுமின்றி, அவர்கள் சட்டசபையிலும், நிர்வாக குழுவிலும் நியமிக்கப் பட்ட போது அதைப் பெரிதும் வரவேற்று எழுதினார். இப்படி தன் கருத்துக்களை வெளிப்படுத்துயதின் மூலம் தலித்தல்லாத பிற சமூக மக்களில் முற் போக்கு சிந்தனையுள்ளவர்களில் கணிசமானவர்கள் ஆதரவு அவருக்கு இருந்ததை தமிழன் இதழைப் புரட்டும் யாவருக்கும் புலப்படும்.

பண்டிதரின் பணிகள் முன்னேற்றமான திசையில் நகர்ந்த நிலையில் அவரது கோரிக்கைகளில் சில மட்டுமே அரசினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அரசியல் பிரதிநிதித்துவ கோரிக்கை மட்டுமே நிலுவையிலிருந்தது. எனவே அவர் தம் கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். 1910 சூலைமாதக் கடைசியில் இந்திய கவர்னர் ஜெனரல் மிண்டோ பிரபுவும், சென்னை மாகாண ஆளுநராயிருந்த ஆர்த்தர் லாலி பிரபுவும் தம் பதவிகாலம் முடிந்து இங்கிலாந்து போவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. அவர்கள் பதவிக்கு மற்றவர் வரும்வரை அவர்கள் இருக்க வேண்டிய நிலையில் அப்போதும் தம் கோரிக்கைகளை நினைவுபடுத்த மறக்கவில்லை.

"ஏறக்குறைய ஆயிரம் வருடங்களாக தாழ்ந்த சாதியர்களாக நசுக்கப்பட்டு வந்த பூர்வ சாதி பேதமற்ற திராவிடக் குடிகள்மீது கிருபா நோக்கம் வைத்து தற்கால பிரிட்டிஷ் ஆட்சியின் கருணையால் முன்னுக்கு வந்து விவேக மிகுந்தவர்களா யிருப்பவர்களிற் சிலரைக் கண்டெடுத்து லெஜிஸ்லேட்டிவ் சங்கத்தில் சேர்த்துவிட்டு போய்விடுவார்களாயின் ஆயிர வருடகாலம் அல்லலடைந்திருந்த அறுபது லட்சத்திற்கும் மேற்பட்ட குடிகளை அல்லலிருந்து ஆதரித்து முன்னேறச் செய்தவர்கள் கவர்னர் ஜெனரல் மின்டோ பிரபுவும், கவர்னர் ஆர்த்தர் லாலி பிரபுவுமென்றே இந்திர தேசப் பூர்வகுடிகள் கொண்டாடுவர்" (1:268)

என தம் ஆதங்கத்தை வெளியிட்டார். ஆனால் இருவருமே தமக்கு வந்த மனுவின் மீது விசாரணை செய்துவிட்டு அதை கிடப்பில் போட்டுவிட்டார்கள். மிண்டோவிற்கு பிறகு ஆர்டிஞ்ச் பிரபு இந்த கோரிக்கையை நிறைவேற்றுவார் என பண்டிதர் எதிர் பார்த்து தமது வேண்டுகோளை பத்திரிக்கை மூலம் வெளியிட்டு வந்தார் (9.11.1910)

இக்காலகட்டத்தில் பண்டிதர் இடஒதுக்கீட்டினை நிரப்ப வேண்டிய துறைகளாக அரசுப்பணி, கல்வி, மாகாண சட்டசபை, மற்றும் நிலம், இந்த நான்கு அம்சம் தான் பிரதானமானது. என வலியுறுத்தி வந்ததோடு, நிலத்தை எப்படி பங்கிட வேண்டும் என்பது குறித்து அவர் கூடுதல் கவனத்தை செலுத்த முனைந்தார்.

1890களிலிருந்து பண்டிதர் அரசியல் செயல் திட்டத்தில் நிலம் பெறுவதும் இருந்து வந்தது என்பதை தொடர்ந்து பார்த்து வருகிறோம். நிலம் வைத்துக் கொண்டு உழைக்காமல் வீணாக சோம்பித் திரியும் சாதி இந்துக்களுக்கு நிலத்தைக் கொடுக்காமல், உழைக்கும் ஏழைக் குடிகளுக்கு நிலத்தை கொடுப்பதின் மூலம் விவசாயத்தை பெருக்கி வளமாக்க முடியும் என்பது பண்டிதர் யோசனை. (1910 அக்டோபர் 19) இந்து கருத்துக்களை விளக்கும் முத்தாய்ப்பை இன்னொரு தருணத்தில் வரிசைப்படுத்தினார். 16-ஜனவரி 19llம் நாள் தமிழனில்;

"வாசித்து பட்டம் பெற்றவர்களுக்கே இராஜாங்க உத்யோகங் கொடுக்கப் படுமென்னும் நிபந்தனையால் தேசத்திற்கு கால்பாக சுகமும், முக்கால்பாக துக்கமுண்டாகின்றபடியால் அத்தகைய நிபந்தனைகளை அகற்றி கருணை நிறைந்த ஆளுகைக்குட்பட்ட சகல குடிகளும் சுகம்பெற வேண்டுமென்பதையே நாடியுள்ளோமாதலின் வித்யா விஷயத்திலும், விவசாய விஷயத்திலும், வியாபார விஷயத்திலும், இராஜாங்க உத்யோக விஷயத்திலும் சமரச பாதை அளிப்பதே ஆனந்தமாகும் (2:319)

என விளக்கினார். பண்டிதரின் கோரிக்கைகளும் செயல்பாடுகளும் மெச்சத் தகுந்த அளவில் நடந்து வந்த போதிலும் அரசிடமிருந்து எதிர்பார்க்கும் அளவிற்கு சாதகமான பதில்களைப் பெற முடியவில்லை, இந்நிலையில் 1912ம் ஆண்டு ஜூன் மாத வாக்கில் சட்டசபையில் சில மாறுதல்கள் வரும் என பரவலான பேச்சிருந்தது. அதேவேளை சட்டசபையில் உறுப்பினர்களாயிருந்தவர்களைப் பற்றின அதிருப்தியும் உருவாகியிருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அந்த ஆலோசனையை தம் கொள்கைக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பண்டிதர் முனைந்தார். சட்டசபையில் இருக்கும் உறுப்பினர்கள் பெரும்பாலோர் பேச திராணியற்று இருந்தனர் இவர்களை பண்டிதர் 'மெளன. மெம்பர்கள்" என்று வர்ணித்தார். அந்த மெளன மெம்பர்கள் ஏன் மெளனமாய் சபையில் வீற்றிருக்கிறார்கள் என்பதற்கு காரணமாக

- அவர்களுக்கு ஆங்கில மொழி சரிவர தெரியாதது.

- மக்கள் பிரச்சினை பற்றி அறிமுகம் இல்லாதது என இரண்டு காரணத்தை கட்டிக் காட்டி இதற்கு தீர்வாக மொழி பெயர்ப்பு உதவி வேண்டுமென கூறினார்.

"சாதிபேதமற்ற ஏழைக் குடிகளாய் ஆறுகோடி மக்களுக்கென்று ஓர் சட்டசபை மெம்பர் இருந்தே தீரல் வேண்டும்.

அதனுடன் சட்டசபையில் தமிழழையும், தெலுங்கையும் மொழி பெயர்க்கும் ஒர் டிரான்ஸ்லேட்டரும் கன்னடத்தையும் மலையாளத்தையும் மொழிபெயர்க்கும் ஒர் டிரான்ஸ்லேட்டரும்.

துலுக்கையும், மராஷ்டத்தையும் மொழிபெயர்க்கும் ஒர் டிரான்ஸ்லேட்டரும் இருப்பார்களாயின் சகல பாஷைக் குடிகளின் கஷ்ட நஷ்டங்கள் யாவும் இராஜாங்கத்திற்கு விளங்கிப்போம், மக்கள் சுகமடைவார்கள் (I:413)

பண்டிதரின் இடஒதுக்கீடு கோரிக்கைகள் இப்படி கூர்மைடைந்து, துல்லியமடைந்து நிலைத்தது. மட்டுமின்றி, அவரது இறுதிக்காலம் 1914 வரை இக்கருத்துக்களை அவர் பரப்பி வந்தார். அவை எல்லாவற்றையும் தொகுத்தளிப்பது என்பது இனி தேவையற்றது. ஏனெனில் 1912ம் ஆண்டு கடைசியிலேயே இடஒதுக்கீடு பற்றின அவரது கருத்துக்கள் முழுமையடைந்து விட்டன என்பதால்தான், இனி மீதமிருப்பது அவரது கருத்துக்களை ஒப்பிட்டு ஆய்வதின் மூலம் அவரது கொள்கையின், கொடையின் முக்கியத்துவத்தை, கால கட்ட முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள வேண்டும். அப்படி நிர்ணயிப்பதில் ஒதுக்கீடு எனும் சமூக நீதிக் கொள்கையை இச் சமூகத்திற்கு வழங்கிய புரட்சிகர முன்னோடியாய் எப்படி மிளிர்கிறார் என்பதை அறிய முடியும். எனவே வாசகரை ஒப்பீட்டாய் தளத்திற்கு அழைக்கிறேன்.