பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை/இடைவெளி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
7
இடைவெளி . . .

இனி, இந்த வரலாற்றை ஒப்பிட்டு ஆய்வு செய்யவேண்டும். வழக்கமாக வகுப்பாரி உரிமை எனும் கோட்பாடு தோன்றிய காலத்தைக் குறித்து இந்திய வரலாற்றை குறிப்பாக தமிழக வரலாற்றை அறிந்தவர்கள் அக்கொள்கை பார்ப்பனரல்லாதாரின் இயக்கத்தினால் விளைந்தது என சொல்கிறார்கள்.

பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் வகுப்புரிமை தோன்றிய வரலாற்றைக் குறித்து கூறும்போது.

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைக் கோருவதே பார்ப்பனரல்லாத சமூகங்களின் (ஜஸ்டிஸ் கட்சி) அரசியல் கிளர்ச்சியாகவும், வகுப்புவாதி பிரதிநிதித்துவத்தை எதிர்ப்பதே பார்ப்பன சமூக (காங்கிரஸ் கட்சி) அரசியல் கிளர்ச்சியாகவும் இருந்து வருகின்றது என்பதை அநேக ஆதாரத்துடன் எடுத்துச் சொல்லலாம்.

இன்று இந்நாட்டின் மதங்களின் பேரால் உள்ள இந்து, முஸ்லீம், சீக்கிய, கிறித்துவ ஸ்தாபனங்களும் வகுப்புகளின் பேரால் உள்ள மேல்சாதி, நடுசாதி, கீழ்சாதி என சொல்லப்படும் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார், தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லப் பட்ட வகுப்பு ஸ்தாபனங்களும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தையே கண்ணாகக் கொண்டு கிளர்ச்சிகள் செய்வதை யாரும் மறுக்க முடியாது (குடியரசு - தலையங்கம் - 19, 1935)

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை வேண்டுமென்பதற்காகவே ஜஸ்டிஸ் கட்சி தோன்றியது. (குடியரசு - 23.6.1935)

"நம்முடைய நாட்டிலே 1916, 1917ல் தான் வகுப்புவாரி கோரிக்கை ஆரம்பமானது. என்றாலுங்கூட வட நாட்டில் வகுப்பு வாரி உரிமை முழக்கம் 1900லிருந்தே எழுப்பப்பட்டது. தங்களு டைய வகுப்பின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு தங்களுக்கு விகிதாச்சாரப்படி எல்லாத் துறைகளிலேயும் சேர்க்கப்பட வேண்டும் என்று 1900லிருந்தே முஸ்லீம்கள் கிளர்ச்சி செய்து வந்தார்கள். நம்மில் பலருக்கு இந்த சங்கதி தெரியாதிருந்திருக்கலாம். கொஞ்சம் வயதானவர்களுக்கு இதைப் பற்றி நன்றாகத் தெரிந்திருக்கும். (விடுதலை 158.1950).

பெரியார் அவர்களின் இந்தக் கருத்துக்களை மதிப்பிடுவது நோக்கமல்ல, ஆனால் ஒரு வரலாற்று கட்டத்தை அது தோன்றிய விதத்தை அவர் கூறியதைக் கொண்டு அவருக்குப் பின் வந்தவர்கள், அல்லது திராவிட இயக்க வரலாற்றை எழுதிய யாரும் விதிவிலக்கின்றி தமிழகத்தில் வகுப்புவாரி உரிமை எனும் கோட்பாடு தோன்றிய காலத்தை 1916 என்றே குறிப்பிடுகின்றனர். திராவிடர் கழகத்தின் தலைவரான கி. வீரமணி எழுதிய வகுப்புரிமை வரலாறு எனும் நூலில்கூட இதேதான் குறிப்பிடப் பட்டுள்ளது. இதைக் குறிப்பிடும் ஏராளமான நூல்கள் இருக்கிறது. அவைகளிலிருந்து ஆதாரங்களைத் தருவது சொல்வதை திரும்ப சொல்வது போலிருக்கும்.

பார்ப்பனரல்லாதார் என்ற நிலைபாடு இடைநிலை சாதிகளிடமிருந்து 1909ம் ஆண்டு இறுதியிலேயே முளைவிடத் தொடங்கியது என்பதும், தெளிவற்ற நிலையிலே பிரச்சாரம் நடந்தது என்பதும் திராவிடர் இயக்க அறிவாளிகள். அறியாத செய்தி 1909ம் ஆண்டிலே இந்த பார்ப்பனரல்லாத இயக்கத்தை நோக்கி தன் விமர்சனத்தை பண்டிதர் முன்வைத்தார். இந்த பார்ப்பனரல்லாதார் என்போர்கள் பார்ப்பனரை தவிர்த்து அவர்களது சாமிகளையும், சாதிகளையும் பிடித்துக் கொண்டிருக்கும் இயக்கமா அல்லது இதையெல்லாம் விட்டொழித்த இயக்கமா என கேட்டிருந்தார். இதே கருத்தை பிற்காலத்தில் அம்பேத்கர் முன்வைத்து, பார்ப்பனரல்லாதார் இயக்கம் வீழ்ந்து போனதற்கு அது பார்ப்பனியத்தை விட்டொழிக்காதது தான் என்று அவர் கூறியது எதேச்சையானதல்ல. எனவே எது எப்படி இருந்தபோதலும் திராவிட இயக்க அறிஞர்கள் ஆய்வுபடி:

20-11-1916ல் நடைபெற்ற பிராமணரல்லாதார் மாநாட்டை தொடர்ந்து, தென்னிந்திய மக்கள் சங்கம் என்ற கூட்டு வியாபாரிகள் சங்கம், தென்னிந்திய நலஉரிமை சங்கம் என்ற கட்சி தோற்றுவிக்கப் பட்டது. இந்த சங்கம் பிராமணரல்லாதார் அறிக்கையை (Non Braminan Manifesto)வெளியிட்டது. அந்த அறிக்கையில் பார்ப்பனரல்லாதாருக்கான விகிதாச்சார கோரிக்கைகள் இருந்த பிரிவுகள் வருமாறு.

1. அரசாங்க அலுவல்கள், 2 பொது நிறுவனங்கள் (நகரவை, மாவட்ட கழகம், சட்டசபை, பல்கலை செனட் மற்றும் பிற) மற்றும் 3. கல்வித்துறை ஆகிய துறைகளில் பிரதிநித்துவத்தை கோரியது. அந்த பிரநிதித்துவமானது

"அரசியல் அமைப்பு எப்படி இருக்க வேண்டுமென்றால் உண்மையான உரிமைகள் விரிவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு இனத்தினருக்கும் வகுப்பினருக்கும் அவரவர்களுக்கு நாட்டில் உள்ள செல்வாக்கையும், தகுதியையும் எண்ணிக்கையையும் மனதிற் கொண்டு அவரவர்களுக்கு உரிய பொறுப்பு கொடுக்க வேண்டும் (1992–25–32)

(Indian has earned the right to demand that the basis of her constitution should be broadened and deepened. That her sons representively every class, caste, and community according to their acknowledged positions in the country and their respective numerical strength." (1992–23)

நீதி கட்சி தன்னுடைய கொள்கையை முன் வைத்து அதை நடைமுறைப்படுத்த எடுத்துக் கொண்ட இடைப்பட்ட காலத்தில் அரசுக்கு கோரிக்கைகளை விட்ட வண்ணம் இருந்தது. 1920ல் நீதிகட்சி ஆட்சி பிடித்த பிறகு தனது விகிதாச்சார கொள்கையை அறிவித்தது. 1922ல் அறிவிக்கப்பட்ட வகுப்புவாரி ஆணையின் படி;

அரசு பணிகளில் மொத்தம் 12 இடங்கள் என்றால், அதில்

பார்ப்பனரல்லாதார் (இந்துக்கள்) 5 இடங்கள்

பார்ப்பனர்கள் 2 இடங்கள்

முகமதியர் 2 இடங்கள்

ஐரோப்பியர் உட்பட கிறிஸ்தவர்கள், ஆங்கிலோ இந்தியர் 2 இடங்கள்

தாழ்த்தப்பட்டவர்கள் 1 இடம்

இந்த 12 இடங்களையும் சுற்றுமுறைபடி கடைபிடிக்க வேண்டும்.

1. பார்ப்பனரல்லாத இந்து

2. முகமதியர்

3. பார்ப்பனரல்லாத இந்து

4. ஆங்கிலேயர் இந்தியர் அல்லது கிறிஸ்தவர் 5. பார்ப்பனர்.

6. பார்ப்பனரல்லாத இந்து

7. மற்றவர்கள் (தாழ்த்தப்பட்டவர் உட்பட)

8. பார்ப்பனரல்லாத இந்து.

9. முகமதியர்

10. பார்ப்பனரல்லாத இந்து.

11. ஆங்கிலோ இந்தியர் அல்லது இந்திய கிறிஸ்தவர்.

12. பார்ப்பனர்.

இந்த விகிதாச்சார ஆணையை, அதன் செயல்படுத்தும் முறையையும் வாசகர்கள் கவனிப்புடன் படிக்க வேண்டும். நீதிகட்சி மக்கள் தொகை அடிப்படையில் கேட்டதற்கும், அது நடைமுறைப் படுத்தியதற்கும் இடையிலுள்ள இடைவெளி யாருடைய கவனத்தையும் கவரும்.

எனினும் நம்முடைய நோக்கம் வகுப்புரிமை, இடஒதுக்கீடு, விகிதாச்சார உரிமை எனும் சமூக நீதிக் கொள்கையின் தோற்றுவாயை அறிவதுதான். பார்ப்பனரல்லாதாரைப் பொருத்தவரையில் அது 1916ல் தோன்றி 1922ல் வடிவம் பெற்று விட்டது என்பதை மட்டும் இங்கும் போதும், பிறகு.