உள்ளடக்கத்துக்குச் செல்

பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை/அனைத்து சமூக நீதியின் முகங்கள்

விக்கிமூலம் இலிருந்து


 8
அனைத்து சமூக நீதியின்
முகங்கள்

ரு மாபெரும் வரலாறு நடந்து வந்த காலகட்டத்தை விட்டு இப்போது வெளியே வந்துவிட்டோம். இனி அந்த காலகட்டத்தை மதிப்பிட வேண்டியதுதான் மீதியுள்ள ஒரு பணி. ஏனெனில் வரலாற்றை பயிலும் எந்த ஒரு மாணவனும் அந்த வரலாற்றை மதிப்பிடக்கூடிய ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு வரலாற்று மாணவனுக்கு இது ஒரு கடமையென்றால் விடுதலை இயக்கப் பணிபுரிபவர்கள் மதிப்பிட மட்டும் செய்வதில்லை, அந்த வரலாற்று காலகட்டத்திற்கு நடந்த அநீதிக்கும் சேர்த்து விடுதலையை வென்றெடுக்க வேண்டும். இல்லையெனில் விடுதலையின் உள்ளெழுச்சி முழுமை பெறாது. பண்டிதரின் வரலாற்று காலகட்டத்தை மதிப்பிடுவதற்கு அவரது மதிப்பீடுகளும், முன்வைப்புகளும் சிறந்த ஆய்வுக் கருவிகள், எனவே பண்டிதர் முன்வைத்த இட ஒதுக்கீடு என்றும், விகிதாச்சார உரிமை என்றும் சமூகநீதி என்றும் அழைக்கப்படுவதை தொகுத்துப் பார்க்க வேண்டும் பண்டிதரின் இடஒதுக்கீடு குறித்த கொள்கைகள் இரண்டு கட்டமாக பிரித்துக் கொள்ள வேண்டும் முதலாவது 1890க்கும் 1900க்கும் இடைப்பட்ட காலம், இரண்டாவது மிண்டோ மார்லி சீர்திருத்தம் தொடங்கிய 1905ம் ஆண்டு தொடங்கிய பண்டிதரின் மறைவு நிகழ்ந்த 1914ம் ஆண்டு வரை என பிரித்துக் கொள்ள வேண்டும். இதில்

முதலாவது கட்ட த்தில் அவர் முன் வைத்த கோரிக்கைகள்:

1 தாழ்த்தப்பட்டோருக்கு தனிப் பள்ளிகள் (Seperate schools)

2 மேற்படிப்பிற்கு கல்வி உதவித்தொகை (Scholarship)

3. அரசுப் பணிகளில் ஒதுக்கீடு. (Reservation in Govt Services)

4. கல்விக்கு தக்க அரசு வேலை - பரம்பரை தொழில் கூடாது. (Reservation on merits)

5. முனிசிபல், கிராம சபைகளில் தனி பிரதிநிதித்துவம் (Separate Representation)

6. கிராம நிர்வாகப் பணிகளில் தலித்துகளுக்கு அதிகாரம். (Decentralisation of village Administration)

7. கோவில்களை பொதுவாக அனைவருக்கும் திறந்து விடுதல்.

8 பொது இடங்களில் நுழைய உரிமை.

9. கிராமத்தில் பயன்படுத்தாத நிலங்களை பங்கிட்டு தலித் மக்களுக்கு கொடுப்பது.

10. பொது கிணற்றில் நீர் எடுக்கும் உரிமை

அவரின் இரண்டாம் கட்ட கோரிக்கைகள்:

1. அரசு பணிகளில் தலித்களுக்கான இடஒதுக்கீடு

2. ராணுவத்தில் மீண்டும் தலித்துகள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும், ஒழிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர் ரெஜிமெண்டுகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும்.

3. அரசு பணிகளில் அந்தந்த சாதியாரின் தொகைப்படிக்கு பிரதி நிதித்துவம் (Reservation by populations of castes)

4. மைய, மாகாண சட்ட சபைகளில் தலித் மக்களின் தனிப் பிரதி நிதித்துவம் (Seperate Representations in central and provincial legislation)

5. சகல சாதியருக்கும் அவரவர் தொகைக்கேற்ப சட்டசபைகளில்

நிதித்துவம் (Representation by Reserevation to all castes)

6. சாதிபேதமற்ற திராவிடர்கள், அல்லது ஆறுகோடி தீண்டாதார், இந்துக்கள், முஸ்லீம்கள், யுரேஷியர்கள், இந்திய கிறித்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜைனர்கள். ஐரோப்பியர் என அனை வருக்கும் அவரவர் தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவம்

7. சாதி பேதம் ஒழிக்கப்பட்டால் இந்த ஒதுக்கீட்டு அடிப்படையிலான பிரதிநிதித்துவம் தேவையில்லை.

8. தலித்துகள் பொது இடங்களில், நுழைய, பொது சொத்துக்களை பயன்படுத்த உரிமை

9. கிராம பொது நிலங்கள், பயன்படுத்தாத நிலங்கள் ஆகியவற்றை தலித்துகளுக்கு வழங்க வேண்டும். 10. நிலம் வைத்துக்கொண்டு உழைக்காமல் உட்கார்ந்து தின்னும் சோம்பேறிகளிடமிருந்து நிலத்தை எடுத்து அந்நிலத்தில் உழும் ஏழை குடிகளுக்கு கொடுக்க வேண்டும்.

11. பிஏ, எம்ஏ பட்டம் பெற்றவர்களுக்கே அந்தஸ்தான உத்யோகம், சட்டசபை உறுப்பினர் பதவிகளை வழங்காமல், அந்தந்த குலத்தில் உள்ள கற்ற ஒழுக்கமுள்ளவர்களுக்கு அப்பதவிகள் தருதல் வேண்டும்.

12. சட்டசபைகளில் அந்தந்த மொழி பேசுவோருக்கு மொழி பெயர்ப்பு செய்தல் வேண்டும்.

இவைகளை விளக்க வேண்டிய அவசியமில்லை, இவை ஒவ்வொன்றுமே அதற்கான விளக்கமாக இருக்கிறது. எனினும் வாசகரை கேட்டுக் கொள்வதெல்லாம் இந்த கருத்துக்களை இதற்கு பிற்பாடு வந்த வரலாற்று கட்டங்களோடு பொருத்தி பார்க்க வேண்டும் என்பதுதான்.

ஏனெனில் பண்டிதர் தன் அரசியல் பணியைத் தொடங்கிய காலத்திற்கு முன்பு இந்திய வரலாற்றில் எங்கும் இதுபோன்ற கருத்துக்களை காணமுடியாது. அதேபோல பண்டிதர் வாழ்ந்த காலத்திலும் மற்றவர்களிடமிருந்து இது போன்ற கருத்துக்களை காண முடியாது. பண்டிதர் வாழ்ந்த கால கட்டத்தில் பிற சாதியினர், மதத்தினர் தமக்கான உரிமைகளை - சலுகைகளை மட்டும் கோரினார்களேத் தவிர அனைத்து பிரிவு மக்களுக்கான கோரிக்கைகளை அவர்கள் முன்வைக்கவில்லை. அதுவுமின்றி அனைத்து பிரிவினருக்கான விகிதாச்சாரத்தை (Ratio) பண்டிதர் மட்டுமே முதன் முதலில் முன்வைக்கிறார். இந்திய வரலாற்றில் இது புரட்சிகரமான சமூகநீதி முன்வைப்பு

இந்த கருத்துக்களின் வரலாற்று பாத்திரத்தை மதிப்பிட அது நிறைவேறிய சூழல் நிலவியதா? அதுவும் பண்டிதர் காலத்தில் என கேள்வி எழுப்பப்படலாம். இப்படி ஒரு மறுப்பான கேள்விக்கு பதில்

பண்டிதர் காலத்திலேயே அரசு பணிகளில் தலித்துகளுக்கு வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டதையும், அங்கு அவர்கள் பட்ட இடுக் கண்கள் களையப் பட்டதையும் பலமுறை சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், 1892 முதல் தலித் மக்களுக்கு தனி பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டதையும், கர்னல் ஆல்காட் உதவியுடன் தலித் மக்களுக்கு 3 பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டதும், அரசின் லேபர் துறை சார்பாக தாழ்த்தப்பட்டோருக்கென தொடங்கப்பட்ட பள்ளிகளும் பண்டிதரின் கோரிக்கையின் விளைவுகள்.

அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு என்ற கொள்கைக்கு வடிவம் கிடைக்க முயற்சிகள் 1912ல் அரசுப் பணிகள் குறித்து விசாரித்த ராயல் கமிஷன் முன்பு பண்டிதரின் கருத்துக்களில் தாக்கம் பெற்ற தலைவர்கள் சாட்சியம் அளித்தனர். இந்த குழுவின் முன்பு டாக்டர் நாயர் உள்ளிட்ட பிற்பட்டோர் தலைவர்கள் சாட்சியம் அளித்தும்கூட அந்த கோரிக்கை சட்டப்படி அடைய நீண்டகால மாயிற்று.

சட்டசபைகளில் அனைத்து பிரிவினருக்கும் தனிப் பிரதிநிதித்துவம் கேட்ட பண்டிதர். அதை நியமன முறையிலேயே வேண்டுமென வலியுறுத்தி வந்தார். ஏனெனில் தேர்தல் முறையில் சாதி இந்துக்களின் ஆளுமையில் தலித் மக்கள் வாக்களிக்க முடியாது என்றும், ஊழல் பேர்வழிகளான அவர்களால் தம்முடைய உண்மையான பிரதிநிதித்துவம் கிடைக்காது என்று அஞ்சியதாகும், அதனால்தான் மிண்டோ - மார்லி சீர்திருத்தத்திற்குப் பிறகு மாண்டேகு - செம்ஸ் போட்டு சீர்திருத்தத்தில் நியமன முறையில் தலித் தலைவர்கள் சட்டசபைகளில் நியமிக்க ப்பட்டார்கள். பண்டிதர் காலத்தில் தலித் மக்களுக்கு 6 பேர் என்றும் பின்பு 8 பேராகவும் கோரிக்கை வைக்க, மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தத்தில் அது 12 பேராகவும் உயர்ந்தது. நியமனமும் நடந்தது. இது தாழ்த்தப்பட் டோருக்கானது என்றால், அவர் முஸ்லீம்கள், இந்திய கிறித்தவர், ஐரோப்பியர், ஜைனர், பாரசீகர், சீக்கியர் ஆகியோருக்கும் கோரினார். இவை பின்னாளில் சட்டமாயின. இவை பண்டிதரின் கோரிக்கையினால் விளைந்தது என்பதை ஒப்புக் கொள்ளாமல் போனாலும் அக்கருத்தை முதலில் முன்வைத்தவர் பண்டிதர் என்பதை மறுக்க முடியாது.

பார்ப்பனரல்லாதார் தங்களுடைய கொள்கைகளை முன்வைப்பதற்கு முன்பே பண்டிதர் முன் வைத்தார் எனில் அவரது முன்வைப்புகளையும், பார்ப்பனரல்லாதாரின் முன்வைப்புகளையும் ஒப்பிட்டு பார்ப்பவர்கள் நிறைய வேறுபாடுகளைக் காண முடியும், பார்ப்பனரல்லாதாரின் கோரிக்கை படித்த வர்க்கத்தின் கோரிக்கை என்பதை எடுத்த எடுப்பிலேயே காட்டிவிடும் அதனால்தான் அது அரசு துறைகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்தியது. பண்டிதரின் முன் வைப்புகள் அடித்தட்டிலிருந்து முன்வைத்த கோரிக்கைகள், அதனால்தான் அது விரிவான தளத்தில் இயங்கியது. குறிப்பாக நிலத்தை பகிர்ந்தளிக்க அவர் வலியுறுத்தியதை எந்த பார்ப்பனரல்லாத தலைவரும் வலியுறுத்தவில்லை, ஏனெனில் அவர்களெல்லாம் பெரும் நில உடைமையாளர்களாக, வணிகர்களாக, சிற்றரசர்களாக இருந்ததுதான் காரணம்.

அதனால்தான் அவர்களின் நோக்கம் முழுதும் அதிகாரப் பகிர்வில் நிலைத்திருந்தது. அது என்றும் சமூக - ஜனநாயகத்தை நோக்கி திரும்பவே இல்லை. அம்பேத்கர் வார்த்தைகளை கொண்டு சொன்னால் சமூகத்தை ஜனநாயகப்படுத்த முனையாமல் அரசியல் ஜனநாயகத்தை நோக்கியே இயங்கினார்கள்.