பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை/இடஒதுக்கீட்டின் தொடக்கம்

விக்கிமூலம் இலிருந்து

2

இடஒதுக்கீட்டின்
தொடக்கம்


எப்போதும் விவாதத்திற்குரிய ஒன்றாகத்தான் விகிதாச்சார அரசியல் இருந்து வருகிறது. நம் காலத்தில் சமூக நீதி என்று பேசப்படுவது, விகிதாச்சார பிரதிநிதித்துவம் அல்லது இடஒதுக்கீடு எனும் அரசியலின் வேறு சொற்களாகவும், தோற்ற மயக்கமாகவும் இருக்கிறது. அதனால் அதன் தோற்றுவாயையும், அடிப்படையையும் அறிந்து கொள்வதில் எப்போதும் ஒரு சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. இந்த சிக்கலை உருவாக்கியவர்கள் எப்படி பார்த்தாலும் தலித்துகள் அல்ல. காரணம் அந்த சிக்கலான இடத்தில்கூட அவர்கள் மறைக்கப்பட்டும். மறுக்கப்பட்டும் வந்துள்ளனர் என்பதால் நிலைமையை வேறுவிதமாக அணுக வேண்டியுள்ளது. அதாவது இடஒதுக்கீடு அல்லது விகிதாச்சாரம் எனும் சமூக நீதி கொள்கையின் தோற்றத்திற்கு மூல கர்த்தா யார்?

இது ஒரு சிக்கலான கேள்வி? விடை அளிப்பதற்கு காலச் செலவு பிடிக்கும் கேள்வியும் கூட.

விகிதாச்சார, ஒதுக்கீட்டு அரசியல் என்பது உடைமை சமூகம் தோன்றிய காலத்திலிருந்து தொடர்ந்து வருகிற ஒன்று. இதற்கான ஆதாரங்களை பண்டைய இலக்கியங்களில் ஏராளமாகப் பார்க்க முடியும், சொல்லப் போனால் பண்டைய சமூக வரலாற்றை தெரிந்து கொள்பவர் யாரும் இதிலிருந்து தான் தொடங்க வேண்டியிருக்கும். இந்தோ - ஆர்ய இலக்கியங்களில் ரிக் வேதம் தொடங்கி கெளடில்யம் மனுஸ் மிருதி என வளர்ந்து. கோயில்களில் காணப்படும் தற்கால கல்வெட்டுகள்வரை சான்றுகளைக் காணமுடியும் அதேவேளை, இன்றைக்கு நாம் காணும் இடஒதுக்கீட்டுக் கொள்கையை அவைகளில் காண முடியாது ஏனெனில், அதில் பார்ப்பனருக்கு முதலிடமும், தொடர்ந்து பிற சாதிகளுக்கான ஒதுக்கீடுகளும் இருக்கும். கூடுதலாக, பார்ப்பனர்களுக்கு கொடுக்க வேண்டிய சலுகைகளையும் ஏராளமாக காணமுடியும் எல்லோரும் உணர்ந்த இந்த சலுகையை திரும்பவும் விளக்குவது என்பது சலிப்பூட்டக்கூடிய அளவிற்கு அது நிந்தனைக்குள்ளாகியிருக்கிறது. எனினும் அந்த வகையான இடஒதுக்கீடு தொடரத்தான் செய்தது.

இந்த ஜம்புதீவக் கண்டத்தில் சின்னஞ்சிறு குறுநில அரசு தொடங்கி, பேரரசுகளாய் விளங்கிய அரசுகள் வரையில் இதில் விதிவிலக் கில்லை, வாளைக்கொண்டு கொடிநாட்டிய மொகலாயர், சுல்தான்கள் முதல் நவீன கருத்துகளோடும், நவீன கருவிகளோடும் வந்த ஐரோப்பியர் ஆட்சிவரை தொடரத்தான் செய்தது.

ஆனால், பிரிட்டிஷ் அரசாங்கம் இக்கொள்கையில் முதலில் கலப்புகளை துழைத்தது. தம் படைப் பிரிவில் பறையர் ரெஜிமெண்ட் (விக்டோரியா ரெஜிமென்ட்) மகர் ரெஜிமென்ட், கூர்க்கா ரெஜிமென்ட். என பல ராணுவப் பிரிவுகளை அது வைத்திருந்தது இந்த பிரிவுகள் அப் பிரிவை சேர்ந்தவர்களுக்கு சலுகை வழங்கும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப் பட்டதல்ல, மாறாக அவர்களது வீரத்தை பயன்படுத்திக் கொள்வதற்காக தொடங்கப்பட்டவை. இந்த பிரிவுகளும் 1857 சாதி இந்து ராணுவ வீரர்களின் கலகத்திற்கு பிறகு கலைக்கப்பட்டது. ரெஜிமெண்ட் ராணுவ வீரர்களுடன் கலந்துறவாட சாதி இந்து ராணுவ வீரர்கள் மறுத்ததால் தொடங்கிய கலகம் 1858ல் தீண்டத்தகாதவர்களை ராணுவத்தில் சேர்த்துக் கொள்வதில்லை எனும் விக்டோரியா பேராணையோடு முடிவுக்கு வந்தது. இந்த பின்னடைவை டாக்டர். அம்பேத்கர் மற்றும் பண்டிதர் அவர்களைத் தவிர வேறு யாரும் வெளிப்படுத்தாதது ஒன்றும் யதேச்சையானதல்ல. எனினும் இழப்பு தொடரத்தான் செய்தது. தீண்டத்தகாதவரை ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்தவர்களில் அம்பேத்கரின் தந்தையும் ஒருவர் என பின்னாளில் அவர் நினைவுகூர்ந்தது இதனது தாக்கத்தை உணர்த்துகிறது. தமிழகத்தின் இந்த கோரிக்கையை முன் வைத்தவர் பண்டிதர்

அந்த புறக்கணிப்பை குறித்து மிகுந்த ஆதங்கத்தை பண்டிதர் வெளிப்படுத்தி. அந்த படைப்பிரிவுகளின் முக்கியத்துவத்தையும் எழுதினார்.

செகன்றாபாத்திலிருந்து ஓர் ஜெனரல் சாதிபேதமற்ற திராவிடர்களில் தக்க சுகதேகிகளாயிருப்பவர்களை பொறுக்கி எடுத்து ஆர்டில்லேரி உண்டு செய்யும்படி செய்தார், அவ்வகை ஆரம்பித்தவர் குதிரைகளையேறி சவாரி செய்யும் விஷயத்திலும பீரங்கிகளைத் திருப்பி மாற்றுவதற்கும், நிறுத்துவதற்கும், மருந்துகளை கெட்டித்து சுடுவதற்கும் உள்ள வல்லபத்தையும், தைரியத்தையும், யுக்தியையும், இராஜ விசுவாசத்தையும் ஆராய்ச்சி செய்தே ஆரம்பித்தார்.

வங்காளத்தில் இராணுவ கலகம் நடந்த காலத்தில் ஒவ்வோர் துறை மக்களுக்கும் அரண்மனை உத்யோகஸ்தர்களாய் சென்ற வர்கள் சாதிபேதமற்ற திராவிடர்களே.

அம் மியுட்டினியிலிருந்த துறை மக்கள் யாவருக்கும் இது தெரிந்த விஷயமாதலின் இராஜ விசுவாசமும், நன்றியும் உள்ளவர் களென்றறிந்த அந்த ஜெனரல் இவர்களையே ஒன்று கூட்டி இராயல் ஆர்ஸ் ஆர்டில்லேரி (Royal HorseArtillery- ராயல் குதிரை பீரங்கிப் படை ) சேர்க்கும்படி ஆரம்பித்தார்.

அக்காலத்திலிருந்து படைத் தலைவராகும் லார்ட் ராபர்ட் துறையவர்களாலோ மற்றவர்களாலோ அப்பட்டாளம் சேர்க்கப் படாமல் தவிர்க்கப்பட்டது." (1:161-2)

எனவே மீண்டும் அந்த படை உருவாக்க வேண்டும், இராணுவ வீரர்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று 1909 ஜூலை 21ம் நாள் தமிழனில் வேண்டுகோள் விடுத்தார்.

எனினும், பின்வந்த காலங்களில் பிரிட்டிஷ் அரசானது அரசு நடத்த தேவைப்பட்ட அளவிலான சமூக மாற்றத்திற்காக சீர்திருத்தங் களை தொடங்கி இருந்தது கல்வி சமூகம், பராமரிப்பு நிர்வாகத் துறைகள் ஆகியவற்றில் சிறிய மாற்றங்களை அனுமதித்தது. அது அனுமதித்ததற் கான வரலாற்றுப் பின்னணியை ஆய்வது இங்கு முக்கியமல்ல, அது அனு மதித்த மாற்றங்கள் மட்டுமே இங்கு கணக்கிலெடுக்கப்படுகிறது.

பிறகு 1887ல் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் முறையை வெள்ளை அரசு அறிமுகப்படுத்தி, அதில் இந்தியர்களை குறிப்பிட்ட சதவிகிதம்வரை அனுமதித்ததின் மூலம் முதன் முறையாக இந்தியர்களுக்கு இடஒதுக்கீட்டு சலுகை வழங்கப்பட்டது. அரசிடமிருந்து சலுகைகளைப் பெற்று வியாபாரத்தையும், செல்வத்தையும் காத்துக் கொள்ளவும், அரசுடன் இணக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ளவும் 1884ல் சென்னை மகாசபை உருவாக்கப்பட்டிருந்தது. இதில் பார்ப்பனர்கள், வியாபாரிகள், முதலாளிகள். பண்ணையார்கள் உள்ளிட்ட மேல்தட்டு வர்க்கத்தினரே இடம் பெற்றிருந்தார்கள். இச்சங்கத்தின் நோக்கமும் அவர்களது நலனை காத்துக் கொள்வதுதான், இந்த சங்கம்தான் பின்பு காங்கிரஸ் என்ற அகில இந்திய அளவிலான பேரமைப்பைத் தொடங் கியது. இந்த அமைப்பிலிருந்தவர்களே காங்கிரஸின் முதன்மைத் தலைவர்களாய் இருந்தார்கள். 1885ல் தொடங்கப்பட்ட காங்கிரஸின் முதல் கோரிக்கையே - விக்டோரியா பேரரசை போற்றிப் புகழ்ந்து அது நிலை பெற வேண்டும் என பிராத்தித்தது. இப்படி அவர்கள் பிராத்திக்கு மளவிற்கு சென்றதற்கு சுதேசி நலன் ஒன்றும் காரணமில்லை, அவர்களது சுயநலன் தவிர வேறில்லை.

எனவே, காங்கிரஸ் தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து ஒன்று தெளி வாகிவிட்டது. சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளும் பிரிட்டிஷ் ஆட்சியை அகற்றுவது எளிதல்ல என்றும், அதனை அண்டி அனுகூலங்களை பெற் றுக் கொள்வதே நல்லது என்பதை உணர்ந்து கொண்டன. அதற்கு ஏற்றாற் போல் பிரிட்டிஷ் அரசும் இந்தியர்களுக்குச் சலுகைகளை அளித்து வந்தது. அந்த சலுகைகளையும், பதவிகளையும் பெறுவதற்கு கல்வி கற்ற பார்ப்பன, வியாபார, வேளாண் உயர்குடிகளிடையே கடுமையான போட்டி நிலவி யதில், ஒடுக்கப்பட்ட மக்கள் கேட்பாரற்று இருந்தனர். ஆனாலும் அதன் தலைவர்கள் தங்களால் இயன்ற முயற்சிகளைச் செய்தார்கள்.

இந்த நிலையில் கவர்னர் ஜெனரலாகவும், வைஸ்யராகவும் இருந்த டஃப்ரின் பிரபு நாட்டில் சீர்திருத்தங்களை மேலும் வளர்த்தெடுக்கும் நோக்கில் இந்தியர்களுக்கு மாகாண சட்ட சபைகளில் பிரதிநிதித்துவம் கொடுப்பதைப் பற்றி ஆய்வு செய்ய 1888ல் அட்சிசன் பிரபு தலைமையில் ஒரு குழுவை நியமித்தார். இக்குழுயார் யாருடைய நலனை (interest) கவனத் தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை அக்குழுவிற்கு குறிப்பிட்டு சொல்லப்பட்டது. அவை;-

அ) நாட்டில் நிலையான தாக்கத்தை கொண்டுள்ள பாரம்பரிய பேர்பெற்ற குடியமர்ந்த வகுப்பினர் நலன்.

ஆ) வியாபாரம், தொழில் முனைவோர், மற்றும் வேளாண் வகுப்பினர் நலன்.

இ) வணிகம் ஐரோப்பிய மற்றும் தோட்டத் தொழில் சார்ந்த நலன்.

ஈ) நிலையான மற்றும் சிறப்பான நிர்வாகிகள்.

ஆகியோரின் நலன்களை பாதுகாப்பது, அவர்களுக்கான அரசியல் முக்கியத்துவத்தையும், பிரதிநிதித்துவத்தையும் உறுதி செய்யவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. (1964:128)

அந்த கமிட்டியில் சர், சார்லஸ் அட்சிசன் அவர்களுடன் ஜெ. வெஸ்ட்லேண்ட் சர். அந்தோனி மெக்டோனால்ட் ஆகியோர் இருந்தனர். இந்த குழுவினர் நிலைமைகளை ஆராய்ந்து 1888ம் ஆண்டு அக்டோபர் 10ம் நாள் தம்முடைய அறிக்கையை அரசுக்கு சமர்பித்தனர். அந்த அறிக்கையை பரிசீலிக்கும் படியும், விவாதித்து அதனை சட்டமாக்கும்படியும் கேட்டு வைஸ்ராய் டஃப்ரின் 1888ம் ஆண்டு நவம்பர் 6ம் நாள் இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார். அந்த அறிக்கையின் மீது விவாதம் நடைபெற்றது. நார்த் புரூக் பிரபு, சாலிஸ்பரி பிரபு உட்பட பலர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் இந்த மசோதா சட்டமாக நிறைவேறியது. அதுதான் 1892ம் ஆண்டு 'இந்திய கவுன்சில் சட்டம்' எனப்படுகிறது. இச்சட்டம் டஃரின் பிரபு விரும்பிய பிரிவினர்களுக்கு மாகாண சட்ட சபைகளில் பிரதிநிதித்துவத்தை வழங் கியது. சட்ட சபைகளிலும் அரசு கவனத்திற்கும் பிரச்சினைகளை இனி அவர்களால் கொண்டு செல்ல முடியும் இப்படி கிடைத்த பிரதிநிதித்துவத்தை யார் கைப்பற்றுவார்கள் என்பது புரிந்து கொள்ளக் கூடியதுதான். ஒன்று சென்னை மகா ஜன சபையினர் இப்பதவிகளில் உட்காரலாம் அல்லது காங்கிாஸ் பிரமுகர்கள் இப்பதவிகளில் உட்காரலாம். இந்த இரண்டு அமைப்புகளிலும் டஃப்ரின் பிரபு யார் நலனை பாதுகாக்க வேண்டுமென விரும்பினாரோ அவர்கள்தான் நிறைந்திருந்தார்கள். எனவே இவ்விரு அமைப்புகளும் அதிகாரத்தை கைக்கொள்ளும் அமைப் புகள் என்பது உறுதியாகிவிட்டது.

இந்த பின்னணியில்தான் பண்டிதரின் முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சீர்திருத்த முயற்சிகள் எப்படி பார்த் தாலும் தாழ்த்தப்பட்டோருக்கு சாதகமானதாக இல்லை. எனவே தம்மை அமைப்பாக்கிக் கொள்ள முயன்று வந்தனர். அப்படி ஒரு சில அமைப்புகள் உருவாகி இருந்தன. இதில் வீச்சாக எழுந்தது "சாதிபேதமற்ற திரா விட மகாஜன சங்கம்" இச்சபையை 1890ல் பண்டிதர் தொடங்கினார். அதன் தலைவரும் அவரே. இச் சங்கத்தின் முதல் மாநாடு 1.12.1891 அன்று நீலகிரியில் கூட்டப்பட்டது. இம் மாநாடுதான் நவீன இந்தியா கண்ட முதல் மாநாடு ஆகும். இந்த மாநாட்டில்தான் ஒடுக்கப்பட்ட மக்களுக் கான விகிதாச்சார உரிமை எனும் கோரிக்கை முன்வைக்கப் பட்டது.

இம் மாநாட்டில் பல்வேறு சமூக - அரசியல் நடப்புகள் விவாதிக்கப்பட்டு, அதனடிப்படையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்கள் கோரிக்கைகளாக அரசிடம் முன்வைக்கும் நோக்கில் காங்கிரஸுக்கு அனுப்ப வேண்டும் என முடிவாகி இருந்தது. எனவே அந்த கோரிக்கை மனு பண்டிதரால் தயாரிக்கப்பட்டது. அதில் 10 கோரிக்கைகள் இருந்தன, அந்த கோரிக்கைகளில் : கோரிக்கை : 2

இக்குலத்து ஏழைகள் விருத்தி அடையும்படி கல்விச் சாலைகள் பிரத்யேகமாய் அமைத்து உபாத்யாயர்களையும் இக் குலத்தோரில் நியமித்து மாணாக்கர்களின் சம்பளங்களையும் அரை பாகமாய் குறைக்க வேண்டியது.

கோரிக்கை : 3

இக்குலத்து பிள்ளைகளுள் பிரவேச மெட்ரிக்குலேஷன் பரிட்சையில் தேறிய மூன்று பிள்ளைகளுக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்க வேண்டியது.

கோரிக்கை : 4

இங்ங்னம் கல்வியில் தேரினோர்களில் ஒவ்வொருவரையும் இத்தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு கவர்ன்மென்ட் ஆபீசுகளிலும் உத்யோகமளித்து ஆதரிக்க வேண்டும்.

கோரிக்கை : 5

இவர்கள் கல்வி நல்லொழுக்கத்திற்கு தக்கவாறு எத்தகைய உத்யோகங்களையும் தடையின்றி கொடுத்து வரவேண்டியது.

கோரிக்கை : 6

முனிசிபல் சங்கங்களிலும், கிராம சங்கங்களிலும் இக்குலத்தோரின் கஷ்ட நஷ்டங்களை அறிந்து பேசுவதோடு சகல டிஸ்ட்ரிக்குகளிலும் ஜில்லாக்களிலும் ஒருவர் பெருந்தொகையான வரி செலுத்தக்கூடாத வராயினும் கல்வி, நல்லொழுக்கங் கண்டு இக்குலத்தோர் யாரை நியமிக்கிறார்களோ அவர்களை ஓர் அங்கமாக ஏற்றுக்கொண்டு காரியாதிகளை நடத்த வேண்டும்.

கோரிக்கை 10 இக்குலத்தோர் பெருந்தொகையார் வாசஞ் செய்யும் கிராமங்களில் மணியக்காரன், முனிசிப்பு அலுவலர்களில் இவர்களில் (தலித்) பொறுப்பானவர்கள் ஒவ்வொருவரை நியமிப் பதுடன் கலெக்டர். தலைவர்கள் கிராமங்களுக்குள் வருங்கால் நேரில் இவர்களை விசாரித்து நீதி அளிக்க வேண்டும். ( 76.77) இந்த 6 கோரிக்கை அடங்கிய 10 கோரிக்கைகளை காங்கிரஸ் செயலாளரான ஸ்ரீ வீரராகவச்சாரியாருக்கு பண்டிதர் அனுப்பினார். மனுவை பெற்றுக் கொண்ட ராகவாச்சாரியார் காங்கிரஸ் கூட்டத்தில் வைத்து பதில் சொல்வதாக பண்டிதருக்கு பதில் எழுதினார்.

எனினும், காங்கிரஸ் தாமதம் செய்தது. இந்நிலையில் சென்னை மகாஜன சபையின் மாநாடு சென்னையில் கூடுவதாகவும், அதில் கோரிக்கை உள்ளவர்கள் தம் கோரிக்கைகளை முன் வைக்கலாம் என அனைத்து மாவட்டங்களுக்கும் செய்தி அனுப்பியது. அந்த விளம்பரத்தை கண்ட பண்டிதர் சாதி பேதமற்ற திராவிட மகாஜன சங்கத்தை கூட்டி ஆலோசனை செய்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை மகா ஜன சபை கூடுகைக்கு பண்டிதரை பிரதிநிதியாக அனுப்புவதென முடிவானது. அதன்படி அவர் சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

1892 ஏப்ரல் மாதம் கூடிய அந்த கூடுகை சென்னை விக்டோரியா டவுன் ஹாலில் (சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் ரிப்பன் கட்டிடத்திற்கும் இடையிலுள்ள உயரமான கோபுரமுள்ள சிவப்பு கட்டிடம், அதன் முதல் தளத்தில் ) கூடுகை நடைபெற்றது. கூடுகைக்கு சபையின் தலைவர் பி அரங்கைய நாயுடு தலைமை தாங்கினார். கூட்டத் தில் பல்வேறு தரப்பினர்களின் பிரச்சினைகள் அலசப்பட்டாலும் தாழ்த்தப்பட்டோரின் பிரச்சினைகள் விவாதிக்கப்படத் தேவையில்லை என தலைவர் அறிவித்தார். எனினும் மகாஜன சபையின் முக்கிய பிரமுகரும், பண்டிதரிடமிருந்து கோரிக்கை மனுவை பெற்றவருமான காங்கிரஸ் செயலர் வீரராகவாச்சாரியார் எழுந்து நீலகிரியிருந்து கோரிக்கையோடு பண்டிதர் வந்திருப்பதை அறிவித்தார். எனவே பிரதிநிதியாக வந்தவரை தட்டிக் கழிக்க முடியாமல் பண்டிதர் தம் கோரிக்கைகளை விளக்க அழைக்கப் பட்டார், பண்டிதர் எழுந்து

"உங்களாலே இம்மக்கள் தாழ்த்தப்பட்டு சீர்குலைந்து கிடக் கிறார்கள், எனவே நீங்கள் தான் சீர்தூக்கி விட வேண்டும்" என்றார்.

அதற்கு சபாநாயகர் "இது உள் சீர்திருத்த சங்கமாதலின் உங்களுக்கு என்ன வேண்டும் " எனக் கேட்டார். அதற்கு பண்டிதர்.

ஐயா  : உலகத்திலுள்ள சகல சாதியோருக்கும் பொது கோயில் என்றும் பொது தெய்வமென்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அங்கனமிருக்க இக்குலத்தோரிலுள்ள வைணவ மதத்தோர்களை விஷ்ணுவின் கோயில்களுக்குள்ளும், சைவ மதத்தோரை சிவன் கோவில்களுக்குள்ளும் ஏன் சேர்க்கப்படாது. அப்படி சேர்ப்பதினால் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வாழ்க்கை சுகமடையமாட்டார்களா? மதங்களும் பிரபலமடை யாதா? என்றார்.

உடனே சபையார் எல்லோரும் ஏகமாய் எழுந்து நின்று "அப்படியே கோயிலுக்குள் சேர்க்கப்படாது என்று கூச்சலிட்டனர். இதில் வந்திருந்த தஞ்சாவூர் பிரதிநிதி பூரீ சிவராம சாஸ்த்திரியவர்கள் எழுந்து ;

உங்கள் குலத்தோருக்கு மதுரை வீரசாமி, காட்டேரி சாமி, கருப்பண்ண சாமி கொடுத்திருக்கிறோம். சிவன் சாமியும், விஷ்ணு சாமியும் உங்கள் குலத்தோருக்கு உரியதல்ல என ஆட்சேபித்தார்.

ஆட்சேபனையை பார்த்துக் கொண்டிருந்த பண்டிதர் அவரை நோக்கி ;

ஐயா, அங்ஙணமிருக்குமாயின் உங்கள் சாமிகள் எமக்கு வேண்டாம், அதை விடுத்து இக்குலத்து பிள்ளைகள் படிப்பதற்கு கிராமந்தோறும் கல்வி சாலைகள் வைத்து நான்காம் வகுப்பு வரை இலவசமான கல்வி கற்பிக்க வேண்டும்.

இக்குலத்து கிராமவாசிகளுக்கு அங்கங்கு வெறுமனேயுள்ள பூமிகளைக் கொடுத்து ஆதரிக்க வேண்டும். என்று கருணை தாங்கிய ராஜாங்கத்தோருக்கு உதவிகூறு. (Recommandation) பத்திரமாவது கொடுக்க வேண்டும் என்று கோரினார்.

பண்டிதரின் கோரிக்கையை ஆதரித்து எல்லூரிலிருந்து வந்திருந்த பிரதிநிதி ஸ்ரீ சங்கரன் என்பவர் விரிவாக பேசினார். நாட்டின் முதுகெலும்பு போல் உள்ள இம்மக்களை கைதூக்கி விட வேண்டும் என கோரினார்.

இவரை ஆதரித்து ஸ்ரீ ராஜா சர்வலை இராமசுவாமி முதலியார் பேசி அரசுக்கு இக்கோரிக்கையை வலியுறுத்தி கேட்க வேண்டும் என கூறினார். எனவே இவரும் பண்டிதரை ஆதரித்து பேசியதால் ஆதரவு கருத்துக்கள் பலமாக எழவே சபையோர் மறுப்பேதும் சொல்லவில்லை.

இதற்கு மூன்றாம் நாள், பல பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு, மீண்டும் பண்டிதர் முன்வைத்த கல்வி - நிலம் கோரிக்கைகள் மீது சபையோர் கருத்து கேட்க அவர்கள் மூவர் கருத்தையும் ஏற்றுக் கொண்டார்கள், பின்பு அது கோரிக்கையாக அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டதின் பேரில் தென்னிந்தியாவெங்கும் கலாசாலைகள் ஏற்படுத்தப்பட்டன, சில இடங்களில் நிலங்களும் கொடுக்கப்பட்டன. (தொகுதி : 1-80-81).

நிகழ்ச்சிகள் இப்படி இருக்க, சாதிபேதமற்ற திராவிடர் மகாஜன சபை மூலம் காங்கிரஸ்-க்கு பண்டிதர் கொடுத்த விண்ணப்பம் என்ன வானது? காங்கிரஸ் 17 ஆண்டுகளாகியும் அதற்கு பதில் சொல்லவில்லை, என்று பண்டிதர் 14, அக்டோபர் 1908 அன்று குறிப்பிட்டாலும், அவரது மறைவு வரை அம்மனுவுக்கு பதிலேதும் காங்கிரஸ் எழுதவில்லை.

எனினும் இந்த வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டு நாம் என்ன முடிவுக்கு வரமுடியும்? இதில் இரண்டு கேள்விகள் எதிர்ப்படுகின்றன.

1. பண்டிதர் ஏன் அரசிடம் நேரிடையாக கோரிக்கைகளைக் கொடுக்காமல் காங்கிரஸுக்கும், சென்னை மகாஜன சபைக்கும் அனுப்பினார்?

2. அவர் கோரிக்கைகளின் முக்கியத்துவம் என்ன? முதல் கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.

1885ல் பம்பாயில் நடந்த காங்கிரஸின் முதல் கூட்டத்தில் கலந்து கொண்ட மொத்தப் பிரதிநிதிகள் 72 பேர் மட்டுமே. இது காங்கிரசின் பலவீனத்தைக் காட்டுவதாகத் தோன்றினாலும், படித்தவர்களும் பணமுள்ளவர்களும் 1887ல் உள்ளாட்சி அமைப்புகளில் நிறைந்திருந் தார்கள். இவர்கள் காங்கிரஸ் பக்கம் திரும்புவார்கள் என பிரிட்டிஷ் அரசு எதிர்பார்த்ததோடு அவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்ய நினைத்தது. எனவே அன்றைக்கு இருந்த வைஸ்ராய் டஃப்ரின் பிரபு படித்த வர்க்கத்தினருக்கு சலுகைகள் அளிப்பதின் மூலம் நிர்வாகத்தை சீர்பட நடத்த முடியும் என நம்பினார். பம்பாயின் கவர்னராயிருந்த ரேய் பிரபு அன்பிற்குரிய "நடுநிலைவாதிகள்" என்று காங்கிரசை வர்ணித்தார். எனினும் காங்கிரஸ் மீது அரசுக்கு அதிருப்தி இல்லாமலில்லை, 1888 நவம்பர் 30ம் தேதி வைஸ்ராய் டஃப்ரின், பேசும்போது "காங்கிரஸ் ஒரு நுண் சிறுபான்மை" என வர்ணித்தார். டஃப்ரினை தொடர்ந்து வைஸ் ராயாக பொறுப்பேற்ற லான்ஸ்வோன் பிரபு (1888-1893) காங்கிரசை "விநோதமான ஒரு நல்ல நகைச்சுவை" என்று குறிப்பிட்டிருந்ததோடும் காங்கிரசை சமாளித்துவிட முடியும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

இந்த கருத்துக்கள் விளக்குவது என்னவெனில் காங்கிரஸ் மீது அரசின் கவனம் இருந்துகொண்டு இருக்கிறது என்பதுதான். அதனால் காங்கிரஸ் எதாவது ஒரு கோரிக்கையை முன்வைக்குமானால் அது உடனே அரசின் கவனத்திற்கு போவதற்கான வாய்ப்பு இருந்தது. அதே வேளையில், படித்த மற்றும் சொத்துள்ள உயர்சாதி வர்க்கத்தின் நலனை இந்திய நகரங்களில் குறிப்பாக கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய நகரங் களில் காங்கிரஸ் பிரதிபலித்ததைப் போல சென்னையில் கூடுதலாக சென்னை மகாஜனசபை பிரதிபலித்தது. ஏற்கெனவே பிரிட்டிஷ் அரசின் புறக்க னிப்பினால் ஒரு கவனத்தை கவரக்கூடியதாக இல்லாமல் போன தாழ்த்தப் பட்டோர்கள் கல்வியில் குன்றியும், சொத்துடைமையில் பின்தங்கியும் கரண்டலுக்குள்ளாகி இருந்ததால் அரசின் கவனம் இவர்கள் மேல் திரும்பாததில் வியப்பேதுமில்லை.

இந்த சூழலை நன்கு புரிந்திருந்த பண்டிதர் காங்கிரசுக்கும். சென்னை மகாஜனசபைக்கும் தம் கோரிக்கைகளை முன்வைப்பதின் மூலம் தம் கோரிக்கைகளுக்கு உடனே அரசு செவிசாய்க்கும் என நம்பி னார். ஏனெனில் தமது கோரிக்கைகளை படித்த பணம் பெருத்த சாதி களின் கோரிக்கைகளாக மாற்றுவதின் மூலம் அக்கோரிக்கைகளை நிறை வேற்றிக் கொள்ள முடியுமென எதிர்பார்த்தார். இதில் அவர் ஒரளவு வெற்றியும் பெற்றார், எனவே பண்டிதரின் அரசியல் கணக்கு தெளிவா கவே இருந்தது.

இனி, இரண்டாவது கேள்விக்கு வருவோம். காங்கிரசுக்கு அனுப் பிய கோரிக்கை மனுவை திரும்ப படித்துப் பார்த்தால் கீழ்கண்ட விஷ யங்கள் தெளிவாகிறது.

கோரிக்கை 2ன்படி : "பிரத்யேகமான கல்விச் சாலைகளை இக் குலத்தாருக்கு அளிக்க வேண்டும். இதை இன்றைய நிலையோடு ஒப்பிட் டால் தமிழகச் சூழலில் ஆதி திராவிட நலப்பள்ளிகள் என்பதும், மற்ற இடங்களில் பட்டியல் சாதியினர் பள்ளிகள் என்பதும் விளங்கும். எனவே பண்டிதரின் கோரிக்கையின் தொடர்ச்சிதான் இன்றைய பள்ளிகள்.

கோரிக்கை 3ன் படி : இக்குலத்து பிள்ளைகளின் மேற்படிப்புக்கு ஸ்காலர்ஷிப் தொகை

கோரிக்கை 4ன் படி : அரசு அலுவலகங்களில் இக்குலத்தோருக்கு பணி நியமனம் - அதாவது தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு

கோரிக்கை 5ன் படி : தாழ்த்தப்பட்டோரின் கல்விக்குத் தக்க உத்யோகம், அதாவது பரம்பரை சாதித் தொழிலை விடுத்து தகுதி அடிப் படையில் பணி நியமனம் - கோரிக்கை 6ன் படி : முனிசிபல், கிராம சங்கங்களில் இக்குலத்தார் யாரை நியமிக்கிறார்களோ அவர்களை அங்கமாக ஏற்றுக் கொள்வது. இது தனிப்பிரதிநிதித்துவம் என்பதாகும். 1909ல் முஸ்லீம்களுக்கு அளிக்கப் பட்ட தனி பிரதிநிதித்துவம் (Separate Representation) என்பதைப் போன்றது. இந்த தனி பிரதிநிதித்துவம்தான் பின்பு தனித்தொகுதியாக இரட்டை வாக்குரிமையாக மலர்ந்தது.

கோரிக்கை 10ன் படி : கிராம நிர்வாகப் பணிகளில் இக்குலத்தா ருக்கு அதிகாரம்.

... . இந்த விளக்கங்கள் போதுமானவை. தலித் இயக்கங்கள் பின்னாளில் எவையெல்லாம் முன்வைத்தனவோ அவையெல்லாம் பண்டிதரால் முன் வைக்கப்பட்டவை என்பது ஒப்பிட்டுப் பார்ப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும்.

மேலும் டஃரின் பிரபு அட்சிசன் குழுவுக்கு ஆலோசனை வழங் கியதில் படித்த பணம் படைத்த உயர்சாதியினருக்கு இடஒதுக்கீடும் முன் னுரிமையையும் வழங்க வேண்டும் என்று 1888ல் சொன்னதோடு, பண்டி தரின் மேற்கண்ட முன்வைப்புகளை ஒப்பிட்டு பார்க்கும்போது இட ஒதுக்கீடு எனும் கருத்தில் தலைகீழ் மாற்றத்தை முன்வைக்கிறார். மேலி ருந்து கீழாக அல்லாமல் கீழிருந்து மேலாக என்ற நிலையை முதன் முதலாக முன்வைத்தவராக பண்டிதர் இருக்கிறார்.

இருப்பினும் ஒர் அம்சம் மீதமுள்ளது. சென்னை மகாஜன சபைக்கு முன்வைத்த கோரிக்கைகளில் இரண்டினைப் பார்க்க வேண்டும்.

சிவன், விஷ்ணு கோயில்களில் நுழைய உரிமை என்ற கோரிக்கை.

இந்த சாதி இந்து கோயில்களில் நுழைய பண்டிதர் அனுமதி கேட்டதும் அது எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்கப்பட்டது. இக்காலத்தில் பண்டிதர் பெளத்தத்தை முழுவதும் உள்வாங்கி இருந்தாலும், ஒடுக்கப் பட்ட மக்களுக்கான கோரிக்கையாக இந்து கோயில்களில் நுழைவதற்கான உரிமை கேட்டு அது மறுக்கப்பட்ட உடன் அதை விவாதப் பொரு ளாக்காமல் பொருளாதாரக் கோரிக்கையில் கவனத்தை குவித்தார். உண்மையில் கோயில் நுழைவில் தாழ்த்தப்பட்டோரின் தலைவர்கள் பின் னாளில் கூட அக்கறை காட்டாதது எதேச்சையானதல்ல.

அடுத்ததாக, பயன்படுத்தாத நிலங்களை இக்குல மக்களுக்கு கொடுக்க வேண்டும் எனக் கோரியது. இந்த கோரிக்கை இன்றுவரை தொடர்ந்து வரும் ஒரு கோரிக்கையாக இருப்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம், பஞ்சமி நிலம், தரிசு நிலம், மூன்று சென்ட் நிலம், ஐந்து ஏக்கர் நிலம் என இன்றைக்கு கேட்கப்படுவதெல்லாம் பண்டிதரின் கோரிக்கையின் வெளிப்பாடுதான்.

எனவே, ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படையான கோரிக்கைகளை பண்டிதர் வடிவமைத்துள்ளதை அறிந்து கொள்ளும் அதேவேளை, இதை மேலும் துல்லியப்படுத்தினாரா என்பதை இனி பார்ப்போம்.