பதிற்றுப்பத்து/இரண்டாம்பத்து
பாடப்பட்டோன்: இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன்
பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார்
பாட்டு - 11
[தொகு]- வரைமருள் புணரி வான்பிசிர் உடைய
- வளிபாய்ந்(து) அட்ட துளங்குஇருங் கமஞ்சூல்
- நளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி
- அணங்(கு)உடை அவுணர் ஏமம் புணர்க்கும்
- சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக்
- 5 கடுஞ்சின விறல்வேள் களி(று)ஊர்ந் தாங்குச்
- செவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப
- அருநிறம் திறந்த புண்உமிழ் குருதியின்
- மணிநிற இருங்கழி நீர்நிறம் பெயர்ந்து
- மனாலக் கலவை போல அரண்கொன்று
- 10 முரண்மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை
- பலர்மொசிந்(து) ஓம்பிய திரள்பூங் கடம்பின்
- கடியுடை முழுமுதல் துமிய வேஎய்
- வென்(று)எறி முழங்குபணை செய்த வெல்போர்
- நாரரி நறவின் ஆர மார்பின்
- 15 போர்அடு தானைச் சேர லாத
- மார்புமலி பைந்தார் ஓடையொடு விளங்கும்
- வலன்உயர் மருப்பின் பழிதீர் யானைப்
- பொலன்அணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்தநின்
- பலர்புகழ் செல்வம் இனிதுகண் டிகுமே
- 20 கவிர்ததை சிலம்பின் துஞ்சும் கவரி
- பரந்துஇலங்(கு) அருவியொடு நரந்தம் கனவும்
- ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
- தென்னம் குமரியொ(டு) ஆயிடை
- மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்தே. (11)
- பெயர் - புண்ணுமிழ் குருதி (அடி 8)
- துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
- தூக்கு - செந்தூக்கு
- வண்ணம் - ஒழுகு வண்ணம்
பாட்டு - 12
[தொகு]- வயவர் வீழ வாளரின் மயக்கி
- இடங்கவர் கடும்பின் அரசுதலை பனிப்பக்
- கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின வேந்தே
- தார்அணி எருத்தின் வாரல் வள்உகிர்
- 5 அரிமான் வழங்கும் சாரல் பிறமான்
- தோடுகொள் இனநிரை நெஞ்(சு)அதிர்ந் தாங்கு
- முரசுமுழங்கு நெடுநகர் அரசுதுயில் ஈயாது
- மாதிரம் பனிக்கும் மறம்வீங்கு பல்புகழ்
- கேட்டற்(கு) இனிதுநின் செல்வம் கேள்தொறும்
- 10 காண்டல் விருப்பொடு கமழும் குளவி
- வாடாப் பைம்மயிர் இளைய வாடுநடை
- அண்ணல் மழகளி(று) அரிஞிமி(று) ஓப்பும்
- கன்றுபுணர் பிடிய குன்றுபல நீந்தி
- வந்(து)அவண் நிறுத்த இரும்பேர் ஒக்கல்
- 15 தொல்பசி உழந்த பழங்கண் வீழ
- எஃகுபோழ்ந்(து) அறுத்த வாள்நிணக் கொழுங்குறை
- மைஊன் பெய்த வெண்நெல் வெண்சோறு
- நனைஅமை கள்ளின் தேறலொடு மாந்தி
- நீர்ப்படு பருந்தின் இருஞ்சிற(கு) அன்ன
- 20 நிலத்தின் சிதாஅர் களைந்த பின்றை
- நூலாக் கலிங்கம் வால்அரைக் கொளீஇ
- வணர்இரும் கதுப்பின் வாங்(கு)அமை மென்தோள்
- வசைஇல் மகளிர் வயங்(கு)இழை அணிய
- அமர்புமெய் ஆர்த்த சுற்றமொடு
- 25 நுகர்தற்(கு) இனிதுநின் பெரும்கலி மகிழ்வே. (12)
- பெயர் - மறம்வீங்கு பல்புகழ் (8)
- துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
- தூக்கு - செந்தூக்கு
- வண்ணம் - ஒழுகு வண்ணம்
பாட்டு - 13
[தொகு]- தொறுத்தவயல் ஆரல்பிறழ்நவும்
- ஏறுபொருதசெறு உழாதுவித்துநவும்
- கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல்
- இருங்கண் எருமையின் நிரைதடுக் குநவும்
- 5 கலிகெழு துணங்கை ஆடிய மருங்கின்
- வளைதலை மூதா ஆம்பல் ஆர்நவும்
- ஒலிதெங்கின் இமிழ்மருதின்
- புனல்வாயில் பூம்பொய்கைப்
- பாடல் சான்ற பயம்கெழு வைப்பின்
- 10 நாடுகவின் அழிய நாமம் தோற்றிக்
- கூற்(று)அடூஉ நின்ற யாக்கை போல
- நீசிவந்(து) இறுத்த நீர்அழி பாக்கம்
- விரிபூங் கரும்பின் கழனி புல்எனத்
- திரிகாய் விடத்தரொடு காருடை போகிக்
- 15 கவைத்தலைப் பேய்மகள் கழு(து)ஊர்ந்(து) இயங்க
- ஊரிய நெருஞ்சி நீ(று)ஆடு பறந்தலைத்
- தா(து)எரு மறுத்த கலிஅழி மன்றத்(து)
- உள்ளம் அழிய ஊக்குநர் மிடல்தபுத்
- துள்ளுநர் பனிக்கும் பாழா யினவே
- 20 காடே கடவுள் மேன புறவே
- ஒள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன
- ஆறே அவ்வனைத்(து) அன்றியும் ஞாலத்துக்
- கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக்
- குடிபுறம் தருநர் பாரம் ஓம்பி
- 25 அழல்சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது
- மழைவேண்டு புலத்து மாரி நிற்ப
- நோயொடு பசிஇகந்(து) ஒரீஇப்
- பூத்தன்று பெருமநீ காத்த நாடே. (13)
- பெயர் - பூத்த நெய்தல் (3)
- துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
- தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
- வண்ணம் - ஒழுகு வண்ணம்
பாட்டு - 14
[தொகு]- நிலம்நீர் வளிவிசும்(பு) என்ற நான்கின்
- அளப்பரி யையே
- நாள்கோள் திங்கள் ஞாயிறு கனைஅழல்
- ஐந்(து)ஒருங்கு புணர்ந்த விளக்கத்(து) அனையை
- 5 போர்தலை மிகுத்த ஈர்ஐம் பதின்மரொடு
- துப்புத்துறை போகிய துணி(வு)உடை யாண்மை
- அக்குரன் அனைய கைவண் மையையே
- அமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர்
- போர்பீ(டு) அழித்த செருப்புகல் முன்ப
- 10 கூற்றுவெகுண்டு வரினும் ஆற்றுமாற் றலையே
- எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்து
- நோன்புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை
- வான்உறை மகளிர் நலன்இகல் கொள்ளும்
- வயங்(கு)இழை கரந்த வண்டுபடு கதுப்பின்
- 15 ஒடுங்(கு)ஈர் ஓதிக் கொடுங்குழை கணவ
- பலகளிற்றுத் தொழுதியொடு வெல்கொடி நுடங்கும்
- படைஏர் உழவ பாடினி வேந்தே
- இலங்குமணி மிடைந்த பொலங்கலத் திகிரிக்
- கடல்அக வரைப்பின்இப் பொழில்முழு(து) ஆண்டநின்
- 20 முன்திணை முதல்வர் போல நின்றுநீ
- கெடாஅ நல்லிசை நிலைஇத்
- தவாஅ லியரோஇவ் வுலகமோ(டு) உடனே. (14)
- பெயர் - சான்றோர் மெய்ம்மறை (12)
- துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
- தூக்கு - செந்தூக்கு
- வண்ணம் - ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
பாட்டு - 15
[தொகு]- யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத்(து) இறுத்து
- முனைஎரி பரப்பிய துன்னரும் சீற்றமொடு
- மழைதவழ்பு தலைஇய மதில்மரம் முருக்கி
- நிரை களிறுஒழுகிய நிரைய வெள்ளம்
- 5 பரந்(து)ஆடு கழங்(கு)அழி மன்மருங்(கு) அறுப்பக்
- கொடிவிடு குரூஉப்புகை பிசிரக் கால்பொர
- அழல்கவர் மருங்கின் உருஅறக் கெடுத்துத்
- தொல்கவின் அழிந்த கண்அகன் வைப்பின்
- வெண்பூ வேளையொடு பைஞ்சுரை கலித்துப்
- 10 பீர்இவர்பு பரந்த நீர்அறு நிறைமுதல்
- சிவந்த காந்தள் முதல்சிதை மூதின்
- புலவுவில் உழவின் புல்லாள் வழங்கும்
- புல்லிலை வைப்பின் புலம்சிதை அரம்பின்
- அறியா மையான் மறந்துதுப்(பு) எதிர்ந்தநின்
- 15 பகைவர் நாடும் கண்டுவந் திசினே
- கடலவும் கல்லவும் யாற்றவும் பிறவும்
- வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்நாட்டு
- விழ(வு)அறு(பு) அறியா முழ(வு)இமிழ் மூதூர்க்
- கொடுநிழல் பட்ட பொன்உடை நியமத்துச்
- 20 சீர்பெறு கலிமகிழ் இயம்பு முரசின்
- வயவர் வேந்தே பரிசிலர் வெறுக்கை
- தார்அணிந்(து) எழிலிய தொடிசிதை மருப்பின்
- போர்வல் யானைச் சேர லாத
- நீவா ழியர்இவ் வுலகத் தோர்க்(கு)என
- 25 உண்(டு)உரை மாறிய மழலை நாவின்
- மென்சொல் கலப்பையர் திருந்துதொடை வாழ்த்த
- வெய்துற(வு) அறியாது நந்திய வாழ்க்கைச்
- செய்த மேவல் அமர்ந்த சுற்றமோ(டு)
- ஒன்றுமொழிந்(து) அடங்கிய கொள்கை என்றும்
- 30 பதிபிழைப்(பு) அறியாது துய்த்தல் எய்தி
- நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர்
- மேயினர் உறையும் பலர்புகழ் பண்பின்
- நீபுறந் தருதலின் நோய்இகந்(து) ஒரீஇய
- யாணர்நன் நாடுங் கண்டுமதி மருண்டனென்
- 35 மண்உடை ஞாலத்து மன்னுயிர்க்(கு) எஞ்சா(து)
- ஈத்துக்கை தண்டாக் கைகடும் துப்பின்
- புரைவயின் புரைவயின் பெரிய நல்கி
- ஏமம் ஆகிய சீர்கெழு விழவின்
- நெடியோன் அன்ன நல்இசை
- 40 ஒடியா மைந்தநின் பண்புபல நயந்தே. (15)
- பெயர் - நிரைய வெள்ளம் (4)
- துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
- தூக்கு - செந்தூக்கு
- வண்ணம் - ஒழுகு வண்ணம்
பாட்டு - 16
[தொகு]- கோ(டு)உறழ்ந்(து) எடுத்த கொடுங்கண் இஞ்சி
- நாடுகண் டன்ன கணைதுஞ்சு விலங்கல்
- துஞ்சுமரக் குழாஅம் துவன்றிப் புனிற்றுமகள்
- பூணா ஐயவி தூக்கிய மதில
- 5 நல்எழில் நெடும்புதவு முருக்கிக் கொல்லு(பு)
- ஏனம் ஆகிய நுனைமுரி மருப்பின்
- கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி
- மரங்கொல் மழகளிறு முழங்கும் பாசறை
- நீடினை ஆகலின் காண்குவந் திசினே
- 10 ஆறிய கற்பின் அடங்கிய சாயல்
- ஊடினும் இனிய கூறும் இன்நகை
- அமிர்துபொதி துவர்வாய் அமர்த்த நோக்கின்
- சுடர்நுதல் அசைநடை உள்ளலும் உரியள்
- பாயல் உய்யுமோ தோன்றல் தாவின்று
- 15 திருமணி பொருத திகழ்விடு பசும்பொன்
- வயங்குகதிர் வயிரமோ(டு) உறழ்ந்துபூண் சுடர்வர
- எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்துப்
- புரையோர் உண்கண் துயிலின் பாயல்
- பாலும் கொளாலும் வல்லோய்நின்
- 20 சாயன் மார்பு நனிஅலைத் தன்றே. (16)
- பெயர் - துயிலின் பாயல் (18)
- துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
- தூக்கு - செந்தூக்கு
- வண்ணம் - ஒழுகு வண்ணம்
பாட்டு - 17
[தொகு]- புரைவது நினைப்பின் புரைவதோ இன்றே
- பெரிய தப்புநர் ஆயினும் பகைவர்
- பணிந்துதிறை பகரக் கொள்ளுநை ஆதலின்
- துளங்குபிசிர் உடைய மாக்கடல் நீக்கிக்
- 5 கடம்(பு)அறுத்(து) இயற்றிய வலம்படு வியன்பணை
- ஆடுநர் பெயர்ந்துவந்(து) அரும்பலி தூஉய்க்
- கடிப்புக் கண்உறூஉம் தொடித்தோள் இயவர்
- அரணம் காணாது மாதிரம் துழைஇய
- நனம்தலைப் பைஞ்ஞிலம் வருகஇந் நிழல்என
- 10 ஞாயிறு புகன்ற தீதுதீர் சிறப்பின்
- அமிழ்துதிகழ் கருவிய கணமழை தலைஇக்
- கடும்கால் கொட்கும் நன்பெரும் பரப்பின்
- விசும்புதோய் வெண்குடை நுவலும்
- பசும்பூண் மார்ப பாடினி வேந்தே. (17)
- பெயர் - வலம்படு வியன்பணை (5)
- துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
- தூக்கு - செந்தூக்கு
- வண்ணம் - ஒழுகு வண்ணம்
பாட்டு - 18
[தொகு]- உண்மின் கள்ளே அடுமின் சோறே
- எறிக திற்றி ஏற்றுமின் புழுக்கே
- வருநர்க்கு வரையாது பொலம்கலம் தெளிர்ப்ப
- இருள்வணர் ஒலிவரும் புரிஅவிழ் ஐம்பால்
- 5 ஏந்துகோட்(டு) அல்குல் முகிழ்நகை மடவரல்
- கூந்தல் விறலியர் வழங்குக அடுப்பே
- பெற்ற(து) உதவுமின் தப்(பு)இன்று பின்னும்
- மன்உயிர் அழிய யாண்டுபல துளக்கி
- மண்உடை ஞாலம் புர(வு)எதிர் கொண்ட
- 10 தண்இயல் எழிலி தலையாது மாறி
- மாரி பொய்க்குவ(து) ஆயினும்
- சேர லாதன் பொய்யலன் நசையே. (18)
- பெயர் - கூந்தல் விறலியர் (6)
- துறை - இயன்மொழி வாழ்த்து
- தூக்கு - செந்தூக்கு
- வண்ணம் - ஒழுகு வண்ணம்
பாட்டு - 19
[தொகு]- கொள்ளை வல்சிக் கவர்கால் கூளியர்
- கல்உடை நெடுநெறி போழ்ந்துசுரன் அறுப்ப
- ஒண்பொறிக் கழல்கால் மாறா வயவர்
- தின்பிணி எஃகம் புலிஉறை கழிப்பச்
- 5 செங்கள விருப்பொடு கூலம் முற்றிய
- உருவச் செந்தினை குருதியொடு தூஉய்
- மண்ணுறு முரசம் கண்பெயர்த்(து) இயவர்
- கடிப்(பு)உடை வலத்தர் தொடித்தோள் ஓச்ச
- வம்புகளை(வு) அறியாச் சுற்றமோ(டு) உடம்புதெரிந்(து)
- 10 அவ்வினை மேவலை ஆகலின்
- எல்லும் நனிஇருந்(து) எல்லிப் பெற்ற
- அரிதுபெறு பாயல்சிறுமகி ழானும்
- கனவினுள் உறையும் பெருஞ்சால்(பு) ஒடுங்கிய
- நாணுமலி யாக்கை வாள்நுதல் அரிவைக்(கு)
- 15 யார்கொல் அளியை
- இனம்தோ(டு) அகல ஊருடன் எழுந்து
- நிலம்கண் வாட நாஞ்சில் கடிந்துநீ
- வாழ்தல் ஈயா வளன்அறு பைதிரம்
- அன்ன ஆயின பழனம் தோறும்
- 20 அழல்மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து
- நெல்லின் செறுவில் நெய்தல் பூப்ப
- அரிநர் கொய்வாள் மடங்க அறைநர்
- தீம்பிழி எந்திரம் பத்தல் வருந்த
- இன்றோ அன்றோ தொன்றோர் காலை
- 25 நல்லமன் அளிய தாம்எனச் சொல்லிக்
- காணுநர் கைபுடைத்(து) இரங்க
- மாணா மாட்சிய மாண்டன பலவே. (19)
- பெயர் - வளனறு பைதிரம் (18)
- துறை - பரிசிற்றுறைப் பாடாண்பாட்டு
- தூக்கு - செந்தூக்கு
- வண்ணம் - ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
பாட்டு - 20
[தொகு]- நும்கோ யார்என வினவின் எம்கோ
- இருமுந்நீர்த் துருத்தியுள்
- முரணியோர்த் தலைச்சென்று
- கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின முன்பின்
- 5 நெடுஞ்சேர லாதன் வாழ்கஅவன் கண்ணி
- வாய்ப்(பு)அறி யலனே வெயில்துகள் அனைத்தும்
- மாற்றோர் தேஎத்து மாறிய வினையே
- கண்ணின் உவந்து நெஞ்(சு)அவிழ்பு அறியா
- நண்ணார் தேஎத்தும் பொய்ப்(பு)அறி யலனே
- 10 கனவினும், ஒன்னார் தேய ஓங்கி நடந்து
- படியோர்த் தேய்த்து வடிமணி இரட்டும்
- கடாஅ யானைக் கணநிரை அலற
- வியல்இரும் பரப்பின் மாநிலம் கடந்து
- புலவர் ஏத்த ஓங்குபுகழ் நிறீஇ
- 15 விரிஉளை மாவும் களிறும் தேரும்
- வயிரியர் கண்ணுளர்க்(கு) ஓம்பாது வீசிக்
- கடிமிளைக் குண்டுகிடங்கின்
- நெடுமதில் நிலைஞாயில்
- அம்(பு)உடை யார்எயில் உள்அழித்(து) உண்ட
- 20 அடாஅ அடுபகை அட்டுமலர் மார்பன்
- எமர்க்கும் பிறர்க்கும் யாவர் ஆயினும்
- பரிசில் மாக்கள் வல்லார் ஆயினும்
- கொடைக்கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்
- மன்உயிர் அழிய யாண்டுபல மாறித்
- 25 தண்இயல் எழிலி தலையா(து) ஆயினும்
- வயிறுபசி கூர ஈயலன்
- வயிறும்ஆ(சு) இலீயர்அவன் ஈன்ற தாயே. (20)
- பெயர் - அட்டுமலர் மார்பன் (20)
- துறை - இயன்மொழி வாழ்த்து
- தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
- வண்ணம் - ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
பதிகம்
[தொகு]- மன்னிய பெரும்புகழ் மறுஇல் வாய்மொழி
- இன்இசை முரசின் உதியஞ் சேரற்கு
- வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்றமகன்
- அமைவரல் அருவி இமையம் வில்பொறித்(து)
- 5 இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத்
- தன்கோல் நிறீஇத் தகைசால் சிறப்பொடு
- பேர்இசை மரபின் ஆரியர் வணக்கி
- நயன்இல் வன்சொல் யவனர்ப் பிணித்து
- நெய்தலைப் பெய்து கைபின் கொளீஇ
- 10 அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு
- பெருவிறல் மூதூர்த் தந்துபிறர்க்(கு) உதவி
- அமையார்த் தேய்த்த அணங்(கு)உடை நோன்தாள்
- இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக்
- குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப்பாட்டு.
- 15 அவைதாம்: புண்ணுமிழ் குருதி, மறம்வீங்கு பல்புகழ், பூத்த நெய்தல்,
- சான்றோர் மெய்ம்மறை, நிரைய வெள்ளம், துயிலின் பாயல்,
- வலம்படுவியன்பணை, கூந்தல் விறலியர், வளனறு பைதிரம், அட்டுமலர்மார்பன்
- இவை பாட்டின் பதிகம்.
- பாடிப்பெற்ற பரிசில்: உம்பற்காட்டு ஐந்நூறூர் பிரமதாயம் கொடுத்து
- 20 முப்பத்தெட்டுயாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகம் கொடுத்தான்.
- இமைய வரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டுயாண்டு வீற்றிருந்தான்.
- [பிரமதாயம் = அந்தணர்களுக்கு விடப்படும் இறையிலி நிலம்]