பதிற்றுப்பத்து
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
முதற் பதிப்பு:1974
மறுபதிப்பு :2005
பதிப்புரிமை : புலியூர்க் கேசிகன்
விலை : ரூ.70.00
அச்சிட்டோர் : மோனார்க் கிராபிக்ஸ் சூளைமேடு,
சென்னை–94, Ph:23621086
தெளிவுரையுடன்
புலியூர்க் கேசிகன்
பாரி நிலையம்
90, பிராட்வே, சென்னை - 600108
தொலைபேசி எண்: 25270795
அமிழ்தினுமினிய செழுந்தமிழ் மொழியின் அவிர்சுடர் மணிகளாகத் திகழ்வன எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் ஆகிய சங்கத் தொகைநூல்கள். அவற்றுள், எட்டுத் தொகையுள் விளங்கும் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல், பதிற்றுப்பத்து, கலித்தொகை, ஐங்குறுநூறு என்னும் எட்டு நூல்களுள், புறநானூறும் பதிற்றுப்பத்தும் புறப்பொருள் பற்றிய நூல்கள்: அகநானூறு முதலாய பிறநூல்கள் ஆறும் அகத்திணை சார்ந்த நூல்கள்.
பழங்காலத் தமிழகத்தின்கண்ணே விளங்கிய ஒப்புயர் வற்ற மறமாண்பும், கொடைப்பண்பும், புலமைச்செறிவும், ஒழுக்கத்திட்பமும், அறநெறிச்சால்புமே இத்தகைய இணையற்ற செறிவான நூல்களின் தோற்றத்திற்குரிய நிலைக்களன்களாக விளங்கின. அத்தகு நூல்கள் பிற்காலத்தே எழாமைக்குக் காரணமும், அத்தகு பண்பட்ட நிலைக்களன்கள் செறிவுகுன்றித் தளர்வுற்றுப் போயினமையே யாகும்.
இலக்கியத் தோற்றமும் இலக்கியப் பயிற்சியும் செம்மையுடன் செழுமையாக வளர்ந்து செழிக்கவேண்டும் என்று விரும்பினால், அதற்கேற்ற சமுதாய நிலைக்களன்களையும் முயன்று மக்கள் உருவாக்கவேண்டும். இதனை உறுதியாக உரமோடு அனைவருமே உளங்கொள்ளலும் வேண்டும்.
அக்காலத்து அரசர்களும் வள்ளல்களும் தலைவர்களுமாகிய பலரையும், சான்றோர் பலரும், பற்பல சமயங்களிற் போற்றுதலாகவும், அறிவுறுத்தலாகவும் பாடிய தனித்தனிச் செய்யுட்களின் தொகுப்பே புகழ்சால் புறநானூற்றுப் பெருநூல். அங்ஙணமல்லாது, பழந்தமிழ் மூவேந்தருள் முதலாவதாக வைத்துக் கூறப்பெறுவோரும், தொன்றுமூத்த தொல்குடியினருமான சேரவரசருள் பதின்மரைப் போற்றுமுகத்தான், பதின்மர் புலவர்கள் பாடிய பத்துப்பத்துப் பாடல்களின் தொகுப்பே இப் பதிற்றுப்பத்து ஆகும்.
ஒரு பொருளைக் குறித்துப் பத்துப் பத்தாகச் செய்யுள் செய்யும் பதிக மரபுக்கு முன்னோடியாகவும், நூறு செய்யுட்களாக ஒரு நூலை அமைக்கும் சதகமரபுக்கு முதனூலாகவும், அந்தாதியாகத் தொடுக்கும் அந்தாதி மரபுக்கு அடிப்படையாகவும் அமைந்து, தமிழிலக்கிய வரலாற்றினைப் புதுப்போக்கில் உருவாக்கிய தனிச்சிறப்பையும் இப் பதிற்றுப்பத்துப் பெற்றிருக்கின்றது.
பிற்காலத்தே தோன்றிய கல்வெட்டுக்களிலும், உலா போன்ற பிறவற்றிலும் காணப்படும் மெய்க்கீர்த்திகளுக்கும் இதுவே முன்னோடியாகும் என்று கருதலாம்.
இனி இந்நூலின் செய்யுட்களுக்கு வகுத்துக் குறிக்கப் பெற்றிருக்கும் வண்ணமும் தூக்கும் இவை இசையோடு, பாடிப் பயிலப்பெற்று வழங்கிய சிறப்பினையும் காட்டும்.
சேரவரசர்களுள், இப் பதிற்றுப்பத்துச் செய்யுட்கள் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனை முதல்வனாகக் கொண்ட குடியினரையும், சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறையை ஆதியாகக் கொண்ட குடியினரையும் பற்றிய செய்திகளையே விரித்துக் கூறுகின்றன.இவர்களையன்றிப் சேரவரசர் பலர் புகழோடு வாழ்ந்திருத்தலும், அவர்களைப் புலமை சிறந்த தமிழ்ச்சான்றோர் பாடியிருத்தலும் கூடும் எனினும், அவற்றை எல்லாம் அறிவதற்கேற்ற வாய்ப்பினை நாம் பெற்றன மில்லேம்.
சேரவரசரின் தலைமைக் கோநகராக வஞ்சி மூலூரே வரலாற்றுக் காலந்தொட்டு விளங்கி வந்தது. அதன்கண் இருந்து அரசியற்றியோர் சேரர்குடியின் தலைமையாளராக விளங்கி வந்தனர். ஆயின் சேரவரசர் குடும்பத்தைச் சார்ந்த பலரும் பிறபிற இடங்களிலும், பெரும்பான்மையும் சுதந்திரமான தனியரசுகளை நிறுவிக்கொண்டு, அதே காலத்தேயேயும் அதன் பின்னரும் மாண்போடு வாழ்ந்திருக்கின்றனர்.
ஒரு கால அளவின் எல்லையிலேயே வாழ்ந்தவரான சிலரையே நாம் இந்நூலால் அறிகின்றோம். இது அக்காலத்தைய அரசியலமைப்பில், பெருநாட்டின் பகுதிகளைத் தம் குடும்பத்தாரின் நேரடியான ஆட்சிக்குள்ளாக முறைப்படுத்திப் பகுத்து வாழ்ந்த அரசியல் நெறியையும் நிர்வாகச் செறிவையும் நமக்குக் காட்டுவதுமாகும்.
கடைச்சங்க காலத்துச் சேரவளநாடு நிலப்பரப்பாலும் ஆட்சியின் எல்லையாலும் மிகமிகப் பரந்து செறிந்த தமிழ்ப் பெருநாடாக விளங்கியது என்பதையும் இப் பதிற்றுப்பத்து விளக்குகின்றது. ஏறக்குறைய இந்நாவலந்தீவின் தென்பகுதி முழுவதையும் தம் நேரடியான ஆட்சிக்கீழ்க் கொண்டுவந்த தோடு, விந்தியப்பெருவரைக்கு வடபாலும் தண்டுகொண்டு சென்று, அங்கிருந்த அக்காலவரசரையும் வெற்றிகொண்டு, வடபால் இமயம்வரைக்கும் தமிழருடைய மறமேம்பாட்டைச் சேரமன்னர்கள் நிலைபெறுத்திப் புகழ்பெற்றிருக்கின்றனர். இதன்மேல், வடமேற்கு எல்லைப்பகுதிகளுள் வந்து புகுந்து, அப் பகுதிகளுட் சிலவற்றைக் கைப்பற்றியிருந்த யவனர்களையும் வென்று, நிலத்தை மீட்டு வெற்றி கொண்ட சிறப்பினையும் செந்தமிழ்ச் சேரர்கள் அன்று பெற்றிருக்கின்றனர்.இவ்வாறு, சேரவரசர்கள் பெற்ற வெற்றிகளுக்குக் காரணமாக அமைந்தன, அந் நாளையத் தமிழ்மறவர்களின் மறமேம்பாடும், கட்டுப்பாட்டுச் செறிவும், இனவுணர்வுப் பெருமிதமும், அவர்களைத் தலைமையேற்று நடத்திய தமிழரசர்களின் மனவலிமையும், சால்பும், போர்ப்பயிற்சி நலமும், தமிழகத்தின் வற்றாத பெருவளமுமே யாகும். இவற்றையும் இச்செய்யுட்கள் நன்றாக உணர்த்துகின்றன.
சேரவரசர்களின் அளவுகடந்த தமிழ்ப்பற்றையும், தமிழறிந்த சான்றோரை அவர்கள் போற்றிப் புரந்துவந்த பெருஞ்சால்பையும். நினைத்தால், வியப்பால் விம்மிப் பெரு மிதமடையலாம். அத்தகைய தமிழ்ப்பற்றும் புரக்கும் தன்மையும் கொண்ட தலைவர்கள் பிற்காலத்தே தோன்றாமையான ஊழ்க்கேட்டையும் அடுத்துக் கண்ணிரோடு நினைக்கின்றோம். இச்செய்யுட்களைப் பாடிய புலவர்க்குச் சேரமன்னர்கள் அளித்த பெரும் பரிசில்களும் பெரும்பாராட்டுகளுமே இத்தகைய எண்ணத்தை நம்பால் எழுப்புகின்றன!
தளராத தமிழ்ப்பற்றும், தமிழறம் பேணும் தகைமையும் கொண்டோராயினும், புதியராக வந்து வாழ்வுகண்ட வேற்றினத்தாரின் வழிபாட்டு மரபுகளையும் இவர்களுட் சிலர் பேணிப்புரந்தனர் என்பதையும் இந் நூலாற் காணுகின்றோம். இதுவும் இவர்களது பெருமாண்பு ஆகும். இதன் பின் விளைவுகள் விபரீதமாயின செய்தியும் உண்மையே!
‘இவன் இன்னாரின் மகன்' எனத் தந்தையின் பெயரையே குறித்துச் சொல்லப்படும் மரபினுக்கு மாறாக 'இன்னன் இன்னவனுக்கும் இன்னவளுக்கும் பிறந்த மகன்' எனத் தாயின் பெயரையும் சேரவே சொல்லும் சிறந்த குடிமரபு உரைக்கும் மரபையும் பதிற்றுப்பத்துப் பதிகங்கள் நமக்கு உணர்த்துகின்றன. சேரநாட்டாரிடைத் தாய்மையைப் போற்றும் இந்தத் தலையாய பண்பு பண்டே நிலவியதனையும் வியப்புடன் காண்கின்றோம். -
இப்போது, இப் பதிற்றுப்பத்து நூலின் முதற்பத்தும் பத்தாம் பத்தும் கிடைக்கப் பெறவில்லை. இரண்டு முதலாக ஒன்பதாம்பத்து வரையுமுள்ள 80 செய்யுட்களே கிடைத்துள்ளன. ஆனால், தொல்காப்பிய உரையாசிரியரான ஆசிரியர் நச்சினார்க்கினியரின் காலத்தில் இந்நூல் முழுமை யாகவே கிடைத்திருக்கிறது. இதனை அவரது உரையுள் வரும் ‘பதிற்றுப்பத்து நூறும் இவ்வாறே வருதலின் பாடாண் திணை ஆயிற்று’ என்னும் உரைக் குறிப்பால் அறியலாம்.
பதிற்றுப்பத்துச் சார்ந்த செய்யுட்களாகச் சில தொல்காப்பிய உரைகளுக்கு இடையிலும், புறத்திரட்டிலும் காணப் பெறுகின்றன. அவை இந்த இரண்டுமுதலாக ஒன்பதுவரை யுள்ள பத்துக்களிற் சேராதவை. அவை நூலிறுதியில் தனியாகத் தரப்பட்டுள்ளன. அவை முதற்பத்தையோ பத்தாம் பத்தையோ சேர்ந்த செய்யுட்களாகவும் இருக்கலாம்.
வரலாற்றுச் செய்திகள் பல இந்நூலால் அறியப்படுகின்றன. அவை வாய்மையாதலைப் பிற சங்கநூற் செய்திகளும், வரலாற்றாளர்தம் கூற்றுக்களும் அரண் செய்கின்றன. ஆகவே, பழந்தமிழர் வரலாற்றை உணர்த்தும் வரலாற்று நூலாகவும் இதனைக் கொள்வது பொருத்தமாகும்.
இந் நூலுக்குப் பழைய உரைக்குறிப்புக்கள் அமைந்த தொகுப்பு ஒன்றும் இருந்தது. அதுவே, இதன் பொருள் வளத்தை அறியவும், அதனைச் சார்ந்தும் தழுவியும் பல உரை விளக்கங்கள் தோன்றவும் ஊற்றுக்களனாகிய சிறப்புடைத்து. அதனை இயற்றிய ஆசிரியர் பெயரும் காலமும் அறியப்பட வில்லை; எனினும், அவர்தம் புலமைச் செவ்வியைமட்டும் அக் குறிப்புக்கள் நமக்கு நன்கு காட்டி உணர்த்துகின்றன.
இந் நூலின் பதிகங்களைப் பிற்காலத்துச் சான்றோருள் ஒருவரோ அன்றிப் பலரோ செய்திருக்கலாம் எனவும், அல்லது நூலைத் தொகுத்த தொகுப்பாசிரியரே செய்திருக்கலாம் எனவும் கருதுவர். அவர் யாவராயினும், அவை மிகவும் சிறப்புடையவை என்பது அவற்றைக் கற்பவர் எளிதிற் காணக் கூடியதாகும்.இந் நூலின் திணை முற்றவும் பாடான் திணையே என்பது நச்சினார்க்கினியர் கருத்தாயினும், பிற திணைகளையும், துறை களையும் சான்றோர் சிலர் வகுத்திருக்கின்றனர். அவற்றையும் அவற்றின் விளக்கங்களையும் நூலினுள்ளே காணலாம்.
தமிழரின் பொற்காலப் பெருமிதநிலையையும், தமிகத்தின் பழங்காலத்து வளமையின் வற்றாத ஏற்றத்தையும், தமிழ்ச் சமுதாயத்தின் சால்பு நிரம்பிய தனித்தன்மையோடு அமைந்த ஒழுகலாறுகளையும், தமிழ்நலம் பாரிக்கும். தன்னிகரற்ற ஆர்வப்பெருக்கையும் நாம் மனங்கொண்டு பூரிப்படையவும், இன்றைய நிலையோடு ஒப்பிட்டுக் கண்டு தெளிவும் புத்துணர்வும் செம்மாப்பும் புத்தூக்கமும் பெறவும், இப் பதிற்றுப்பத்துச் செய்யுட்கள் உதவக் கூடியன.
வடபுல அரசர்களின் வலிமையை அழித்து வென்றி கொண்டு, வடவிமயத்தும் தமிழ்க் கொடியைப் பறக்கவிட்ட தமிழரின் மறமாண்பை நினைத்துப் பெருமிதங்கொள்வதோடு, அந்த மறமாண்பு சிதைவுற்று மழுங்கியதற்கான காரண காரியங்களையும் ஆய்ந்து தெளிந்து, நம்மைச் செம்மைப் படுத்திக் கொள்வதற்கும் இச்செய்யுட்கள் சிறந்த தூண்டுதல்களாக விளங்குவன.
உலக வரலாற்றிலே மாபெரும் வெற்றியாளர்களாக மதிக்கப்பெறும் கிரேக்கத்து அலெக்சாந்தருக்கும், மற்றும் பிறருக்கும் மேலான வெற்றியாளராகத் திகழ்ந்தவர்கள் சேரமன்னர்களான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், சேரன் செங்குட்டுவனும் ஆவர்!. இதனைச் சான்றுகாட்டி உலகின்முன் உறுதிப்படுத்தத் தமிழ் அறிவாளர்கள் முன்வர வேண்டும்.
இன்னொரு வரலாற்று உண்மையையும் நாம் பதிற்றுப் பத்தால் அறிகின்றோம். அஃது, இந்நாளிற் கேரளத்தாராகவும், மலையாள மொழியினராகவும் தனித்தன்மை பெற்று விளங்குவோர் அனைவரும், பண்டைத் தமிழகத்துத் தமிழ்ப் பெருங்குடிகளுள் ஒருவரான சேரர் வழிவந்த பழந்தமிழ்ப் பரம்பரையினரே என்பதாகும்.காலப்போக்கிலேயும் வேற்றார் ஊடுருவலாலேயும் நிகழ்ந்துவிட்ட மொழி மாற்றத்தால் இவர்கள் தனிமொழியினராக வாழ்ந்தபோதும், பழந்தமிழ்ப் பெருங்குடியினரின் வழித்தோன்றல்களே தாமும் என்று அவர்களும் பெருமிதங் கொள்வதை நாம் வரவேற்கவேண்டும். அதற்கேற்ற தமிழ்ப் பணியையும் மேற்கொள்ள வேண்டும். அதற்கான ஊக்கத் தையும் உதவிகளையும் செய்யவேண்டும். இதற்கும் இப் பதிற்றுப்பத்துச் செய்யுட்கள் நம்மைத் தூண்டுவனவாகும்.
இறுதியாக, ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' எனவும், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனவும் எழுந்த உலகஒருமை முழக்கங்களின் நினைவோடு, இப் பழந்தமிழ் நூலின் பெருமையைப் பார்முழுதும் கற்றுப்போற்றவும் வகை செய்யவேண்டும் என்னும் விருப்பத்தோடு, இதனைத் தமிழ் அன்பர்களின், தமிழார்வமிக்கவும் வரலாற்றார்வமிக்கவுமான உள்ளங்களுக்கு நல்விருந்தாக அளிக்கின்றேன்.
இச் செய்யுட்களைப் பாடியோர் பற்றிய சிறு வரலாற்றுக் குறிப்புக்களும், இச் செய்யுட்களாற் பாடப்பெற்றோரைப் பற்றிய சிறு வரலாற்றுக் குறிப்புக்களும் இந் நூலின் இறுதியில் தரப்பட்டுள்ளன. அவை கற்பவருக்கு உதவுமென்பது தெளிவு.
இத்துணை நலம்பல செறிந்த இத் தமிழ்த் தொகை நூலைத் தேடி எடுத்துச் செப்பமாக முதற்கண் அச்சேற்றி வழங்கிய பெருமை, 'தமிழ்த் தாத்தா' எனப் பெரும் புகழோடு நிலவும் டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்களையே சாரும். இதன் பின்னர்ப் பேருரையாசிரியர் திரு. ஒளவை சு. துரைசாமிப் பிள்ளையவர்களின் அகலவுரைப் பதிப்பும், யாழ்ப்பாணத்துப் பண்டித திரு சு. அருளம்பலம் அவர்களின் ஆராய்ச்சியுரைப் பதிப்பும், திரு. மீ. பொன் இராமாாதன் செட்டியாரவர்களின் உரைப்பதிப்பும் வெளிவந்தன. இதன் மூலபாடத்தைத் திரு. எஸ். வையாபுரிப் பிள்ளையவர்கள் தமது சங்கநூல் தொகுதிகளில் செப்பனிட்டு வெளியிட்டார்கள்: மர்ரே கம்பெனியார் தனி நூலாக இதனை வெளியிட்டார்கள்.
இவ்வாறு வெளிவந்துள்ள பல பதிப்புக்களாலும் இதன் செழுமையையும் சீர்மையையும் தமிழன்பர்கள் அறிந்து இன்புறலாயினர். தெளிவுரையமைப்பு ஒன்றும் வெளிவரின் அது தமிழன்பர்களிடையே மிகவும் பரவி, அதனால் தமிழ்நலம் பெருகும் என்னும் ஆர்வத்துண்டுதலாலேயே இப் பதிப்பினை யான் விரும்பி அமைத்துள்ளேன்.
தெளிவுரையும், அருஞ்சொற் பொருளும், இன்றியமையாத சில விளக்கக் குறிப்புக்களும் கொண்ட கையடக்கமான ஒரு பதிப்பாக இப் பதிற்றுப்பத்துத் தெளிவுரை நூல் வெளி வருகின்றது.
இதனைத் தங்கள் வெளியீடாக ஏற்று வெளியிட்டுள்ள பாரி நிலையத்தினரின் ஒத்துழைப்புக்கும் தமிழன்புக்கும் யான் மிகப் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். ‘பைந்தமிழ் புரக்கும் பாரி’ என்று போற்றப்பெறும் அவர்களின் பெரும்பணியிற் பங்குபெறும் இந் நல்ல வாய்ப்புக் கிடைத்தமைக்கும் பெரிதும் மகிழ்கின்றேன்.
இதனை மிகவும் விரைவாகவும் அழகாகவும் அச்சியற்றித் தந்த மாருதி அச்சகத்தாருக்கும் என் நன்றி உரியதாகும்.
தமிழார்வம் மிகுந்த தமிழன்பர்களிடையே இத் தெளிவுரைப் பதிப்பும் என் பிற எட்டுத் தொகை நூல்களின் பதிப்புக்களைப் போலவே நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புகின்றேன்.
புலியூர்க் கேசிகன்
பொருளடக்கம்
பக்கம்
13 |
17 |
65 |
109 |
141 |
177 |
213 |
247 |
277 |
313 |
315 |
327 |
335 |