பதிற்றுப்பத்து/கடவுள் வாழ்த்து
கடவுள் வாழ்த்து
திணை : பாடாண் திணை. துறை : கடவுள் வாழ்த்து. வண்ணம் : ஒழுகு வண்ணம், தூக்கு : செந்தூக்கு.
[தொல்காப்பியப் புறத்திணையியல் உரையில், நச்சினார்க்கினியரால் எடுத்துக் காட்டப்படுவது இது. இச் செய்யுளைப் பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்தாகக் கொள்வார்கள் தமிழ்ச் சான்றோர்கள். முதற்பத்தும் அதற்கு முற்பட்ட பகுதியும் மறைந்து போயினதால், கடவுள் வாழ்த்தையும் எதுவெனக் காணுமாறில்லை. ஆதலின், இதனைக் கொள்வது ஓரளவுக்கு ஆறுதல் தருவதாகும். இதனைப் பாடியவர் பெயரும் தெரிந்திலது.]
எரியெள்ளு வன்ன நிறத்தன்; விரியிணர்க்
கொன்றையம் பைந்தார் அகலத்தன்; பொன்றார்
எயிலெரி பூட்டிய வில்லன்; பயிலிருள்
காடமர்ந் தாடிய ஆடலன்; நீடிப்
புறம்புதை தாழ்ந்த சடையன்; குறங்கறைந்து
5
வெண்மணி யார்க்கும் விழவினன்: நுண்ணூற்
சிரந்தை யிரட்டும் விரலன்; இரண்டுருவாய்
ஈரணி பெற்ற எழிற்றகையன்; ஏரும்
இளம்பிறை சேர்ந்த நுதலன்; களங்கனி
மாறேற்கும் பண்பின் மறுமிடற்றன்; தேறிய
10
குலம் பிடித்த சுடர்ப்படைக்
காலக் கடவுட்கு உயர்கமா வலனே!
தெளிவுரை : எரிதீயையும் எள்ளி நகையாடுவதுபோல அமைந்த ஒளிரும் செந்நிறத்தை உடையவன்; விரிந்த பூங்கொத்துக்களையுடைய கொன்றை மலராலே தொடுக்கப் பெற்ற பசுமையான மாலை விளங்கும் மார்பகத்தைக் கொண்டவன்;
எதனாலும் கெடாத வரம்பெற்றவராகிய அவுணரது திரிபுரக் கோட்டைகளுக்கு எரியினை ஊட்டியழித்த வில்லினை ஏந்தியவன்; செறிந்த இருளையுடைய யுகாந்தகாலப் பேரிருளிலே, சுடுகாட்டை விரும்பியவனாக, அங்குநின்றும் ஆடிய ஊழிக்கூத்தை யுடையவன்;
நெடிய முதுகுப் புறத்திலேயும் தாழ்ந்து வீழ்ந்தபடி அதனையே மறைத்துக் கொண்டிருக்கும் தாழ்ந்த செஞ்சடையினை உடையவன்; வெண்மையான மணிகள் தொடைப் பக்கத்தே மோதி ஒலிக்கின்ற ஆடல் விழவினைக் கொண்டவன்;
நுண்ணிய நூலாற் கட்டப்பெற்ற உடுக்கை என்னும் துடியினை மாறிமாறி ஒலித்தபடியிருக்கும் விரலினைக் கொண்டவன். ஆணும் பெண்ணுமாகிய சிவசக்தி என்னும் இரண்டு உருவமும் ஒன்றாகி ஓருருக் கொண்டோனாகத் திகழ்ந்து, அதற்கேற்ப இருவகை அணிகளாலும் அழகுபெற்று விளங்கும் அழகிய உருவினன்;
‘வளர்கின்ற இளம்பிறை’ சேர்ந்திருக்கும் நுதலையுடையவன்; களங்கனியும் மாறாக நிறத்தாலே ஒவ்வாதபடி கருமையை ஏற்று விளங்கும் கருமைக்கறை பொருந்திய கழுத்தைக் கொண்டவன்;
தெளிந்த ஒளியையுடைய குலப்படையைத் தன் திருக்கரத்திலே தாங்கியும்,மற்றும் ஒளிசிதறும் படைகளையும் தாங்கியும் விளங்குபன்; அவனே காலக்கடவுளாகிய சிவ பெருமான்! அவனுக்கு வெற்றியானது நாளும் நாளும் மிகுதியாக உயர்வதாக! சொற்பொருளும் விளக்கமும் : எரி - எரியும் தீ: செம்மை நிறத்தைக் கொண்டது. ‘உயர்க மாவலனே’ என வென்றி வாழ்த்தாக முடியும் இச்செய்யுள் ‘எ’ கரத்திலே தொடங்கி ‘ஏ’ காரத்திலே முடிகின்றது. வழிபாட்டிலே ‘எரி’யோ எரிசுடரோ கொண்டு தொடங்குவது மரபு. அது கட்டவே இது ‘எரி’ எனத் தொடங்குகின்றது. பயில்தல் - செறிதல். வெண்மணி - பளிங்குமணி. சிரந்தை - சிரற்பறவைச் சிறகு போல அசையும் உடுக்கை. இரட்டுதல் - மாறி மாறி ஒலித்தல். ஈரணி - இருவகை ஒப்பனை; அது, சக்தியும் சிவமுமாக, பெண் ஆணாகச் செய்யப் பெறும் வேறுவேறான ஒப்பனைகள். காலக் கடவுள் - காலங்கடந்து நின்று காலத்தையும் வகுக்கும் மூலமுதற் கடவுள். சிவனை ஈமக்காட்டின் இறையாக இன்றும் போற்றிவரும் தென்பாண்டி மரபையும், சமாதி மேலாகச் சிவலிங்கம் நிறுவும் தொடர்ந்த நாட்டு வழக்கையும் இங்கே கருதுக.
சிவபிரானது செம்மேனிவண்ணமும், அளவில் ஆற்றலும், அவன் கூத்தியற்றும் அற்புதப் பாங்கும், அவன் சக்தியோடும் கலந்திருக்கும் அந்தத் தனித்தன்மையும், அவன் அருளின் செவ்வியும், பிறவும் கூறி வியந்து போற்றுகின்றனர்.
‘எரியையும் எள்ளுவது போன்ற நிறம்’ என்றது, எரி நெருப்பினுங் காட்டில் செம்மையும் வெம்மையும் ஆற்றலும் ஒளியும் கொண்டதான செம்மேனி வண்ணம் என்றதாம்.
அந்தத் திருமேனி உடையானின் திருமார்பிடத்தே கொன்றைப் பைந்தார் அழகுசெய்தபடி விளங்கும் என்றது, அவனது தண்மையையும் அழகுணர்வையும் நினைந்து மகிழ்ந்ததாம்.
‘பொன்றார் எயில் எரியூட்டிய வில்லன்’ என்றது, அடியவர்க்கு அமைந்து அடியவனாகி அவர்க்கு ஊறு இழைப்பாரின் ஆணவத்தை தீய்த்தொழிக்கும் சினத்தோடு செயற்பட்டு அருளுகின்ற உளப்பாங்கும் உடையவன் என்று கூறியதாகும்.
‘பயிலிருள் காடமர்ந்து ஆடிய ஆடலன்’ என்றது. சர்வ சங்கார காலத்துப் பேரிருளில் அனைத்தையும் ஒடுக்கி யாடுகின்ற ஊருப்பெருங்கூத்தினை. இது, அவனே அனைத்துக்கும் ஆதியும் அந்தமும் ஆனவன் என்பதனையும், அனைத்தும் அவன் அருள்விளக்கமே என்பதனையும், அவன் அழிக்கத் திருவுளம் பற்றுங்காலத்தே அனைத்தும் அழிந்தொழிந்து மறையும் என்பதும் உணர்த்துவதாம்.
‘சிரந்தை இரட்டும் விரலன்’ என்றது, உடுக்கையினின்று தோன்றும் ‘ஓம்’ என்னும் ஆதிநாதமான பிரணவ ஒலியைத் தோற்றுவித்து, அதனின்று அனைத்தையும் முறையே பூத்தெழுமாறு தோற்றுவிப்பவன் அவனே என்றற்காம்.
இளம் பிறை சேர்ந்த நுதலும், களங்கனி மாறேற்கும் பண்பின் மறுமிடறும் அவனது அளப்பில் பெருங்கருணையை வியந்ததாம்; அளவில் ஆற்றலையும் நினைந்ததாம்.
‘சூலம் பிடித்தவன்’ என்று கூறியது முத்தொழிற்கும் தானே முதல்வனாகவும், முச்சக்திகட்கும் தானே முதல்வனாகவும் விளங்குபவன் அவன் என்று உணர்த்துதற்காம். இது முத்தலைச் சூலம் எனவும் கூறப்பெறும்.
‘காலக் கடவுட்கு’ என்றது. அவன் காலத்தைக் கடந்து நிற்பவன் எனவும், அவனே காலமாக அமைபவன் எனவும், அவனே ஆதி முழுமுதல் எனவும் உணர்த்துதற்காம்.
‘அனைத்துமாகிய அவன் பெருவெற்றி உலகெங்கும் உயர்ச்சிபெறுக’ என்றது. உலகமாந்தர் அனைவரும் அவன் செயலே அனைத்துமென்பதை உணர்ந்து, அவன்பாலே தம்மையும் ஒன்றுபடுத்தி உயரவேண்டும் என விரும்பி உரைப்பதாம். அதற்கான கோட்பாட்டிலே உலகோர் சித்தத்தைத் தீவிரப்படுத்த நினைந்து கூறியதுமாம்.
சிவனை உமையொரு பாகம் உடையவனாகக் கொண்டு வழிபட்டு வாழ்வுபெறும் மரபு பண்டைக்காலத்துத் தமிழ் மரபே என்பதனையும் நாம் இதனால் அறிதல் வேண்டும்.
‘அனைத்துமாகியவனின் மாவலன் உயர்க’ என்று போற்றலால், அனைத்தும் இனிதே நிறைவெய்த, அவ்வாறு போற்றுவாரும் மாவலன் உயரப் பெற்றவராகி மாண்படைவர் என்பதாம்.