உள்ளடக்கத்துக்குச் செல்

பதிற்றுப்பத்து/ஒன்பதாம் பத்து

விக்கிமூலம் இலிருந்து



பெருஞ்சேரல் இரும்பொறையைப்
பெருங்குன்றூர்கிழார் பாடியது.


ஒன்பதாம் பத்து


பதிகம்



குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழாஅன்
வேண்மாள் அந்துவஞ் செள்ளை ஈன்ற மகன்
வெருவரு தானையொடு வெய்துறச் செய்துசென்று
இருபெரு வேந்தரும் விச்சியும் வீழ
அருமிளைக் கல்லகத்து ஐந்தெயில் எறிந்து 5

பொத்தி ஆண்ட பெருஞ்சோ ழனையும்
வித்தை ஆண்டஇளம் பழையன் மாறனையும்
வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று
வஞ்சி மூதூர்த் தந்துபிறர்க் குதவி
மந்திர மரபின் தெய்வம் பேணி 10

மெய்யூர் அமைச்சியல் மையூர் கிழானைப்
புரையறு வேள்விப் புரோசு மயக்கி
அருந்திறல் மரபின் பெருஞ்சதுக் கமர்ந்த
வெந்திறல் பூதரைத் தந்திவண் நிறீஇ
ஆய்ந்த மரபின் சாந்தி வேட்டு 15

மன்னுயிர் காத்த மறுவில் செங்கோல்
இன்னிசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறையைப்
பெருங்குன்றூர் கிழார் பாடினார் பத்துப்பாட்டு!

பாட்டுகளின் பெயர்கள்: 1. நிழல்விடு கட்டி, 2. வினை நவில் யானை, 3. பஃறோற்றொழுதி. 4. தொழில் நவில்யானை, 5. நாடுகாண் நெடுவரை, 6. வெந்திறல் தடக்கை, 7. வெண்டலைச் செம்புனல், 8. கல்கால் கவணை, 9. துவராக் கூந்தல், 10. வலிகெழு தடக்கை.

பாடியவர்: ஆசிரியர் பெருங்குன்றூர்க் கிழார். பாடப்பட்டோன்: இளஞ்சேரல் இரும்பொறை. பாடிப்பெற்ற பரிசில்: 'மருளில் இல்லார்க்கு மருளக் கொடுக்க' என்று, உவகையின் முப்பத்தீராயிரங் காணம் கொடுத்து, அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் படைத்து, ஏரும் இன்பமும் இயல் வரப் பரப்பி, எண்ணற்கு ஆகர அருங்கல வெறுக்கையொடு பன்னூறாயிரம் பாற்பட வகுத்துக், காப்பு மறம் தான் விட்டான் அக்கோ. இரும்பொறை அரசு வீற்றிருந்த காலம்: பதினாறு ஆண்டுகள்.

தெளிவுரை: இன்னிசையாக முழங்கும் வெற்றிமுரசினைக் கொண்டவன் இளஞ்சேரல் இரும்பொறை என்பவன். இவன்றான் குட்டநாட்டு அரசகுடியினனான இரும்பொறைக்கும், மையூர் கிழான் மகளான வேண்மாள் அந்துவஞ்செள்ளைக்கும் மகனாகப் பிறந்தவன். பகைவருக்கு அச்சம்வரச் செய்தலையுடைய பெருந்தானையோடு, அவரையும் பகைவர்மேற் கடுஞ்சினம் கொள்ளச் செய்தவனாக, அவரோடும் களத்தை நோக்கிச் சென்றான். இருபெரு வேந்தராகிய பாண்டியரும் சோழரும், விச்சிக் கோமானும் வீழ்ச்சிபெறுமாறு, கடத்தற்கரிய காவற் காடுகளையுடையவும், மலையிடத்தவுமான அவர்க்குரிய ஐந்து கோட்டைகளையும் அழித்தவன்.

'பொத்தியார்' என்னும் புலவர் பெருமானைப் புரந்து வந்தோனாகிய கோப்பெருஞ் சோழனையும், போர்வித்தைகளை யெல்லாம் ஆள்பவன் என்னும் சிறப்புப் பெற்றவனாகிய இளம் பழையன்மாறனையும், அவர்களுக்கு எதிராக வைத்த தனது வஞ்சினம் உண்மையாகுமாறு வெற்றிகொண்டவன்.

வெற்றியாற் பெற்ற செல்வங்களை எல்லாம் வஞ்சி மூதூர்க்கண்ணே கொண்டு சேர்த்து, அவற்றைப் பிறர்க்கும் உதவி மகிழ்ந்தவன். மந்திரங்களோடு வழிபாடியற்றும் மரபினுக்கு இசையத் தெய்வங்களையும் வழிபட்டவன்.

மெய்ம்மை பொருந்திய அமைச்சியல் மரபுகளில் வழுவாதவனாகிய மையூர்கிழானைக், குற்றமற்ற வேள்விகளியற்றும் புரோகிதனாக, அவரினும் சிறந்தோனாக மாற்றியவன். அரிதான திறலைக் கொண்டதென்னும் மரபினை உடையவும், பெருஞ் சதுக்கத்தே வீற்றிருந்தவுமான, வெம்மையான பிறனுடைய பூதர்களைக் கொணர்ந்து, தன் வஞ்சி மூதூர்க்கும் காவல் தெய்வங்களாக நிலை பெறுத்தியவன். சான்றோர் ஆய்ந்து கூறிய மரபுகளின்படியே அப்பூதர்களுக்குச் சாந்திகளும் செய்வித்தவன்.

இவையனைத்தும் செய்ததுடன்,

தன் நாட்டகத்தே பொருந்தியிருந்த குடிகளைப் பாதுகாத்த, குற்றமற்ற செங்கோன்மை உடையவனாகவும் விளங்கினான். இந்த இனிய புகழையெல்லாம் எடுத்து முழக்கும் முரசினை உடையவனாகவும் விளங்கினான்.

இவனைப் பெருங்குன்றூர் கிழார் பத்துப் பாட்டுகளாற் பாடிப் போற்றினார் . சொற்பொருளும் விளக்கமும்: குட்டுவன் – குட்ட நாட்டினன்; குட்டநாடு சேரநாட்டுப் பகுதிகளுள் ஒன்று; சேரவரச குடியினருள் குட்டநாட்டு அரசகுடியிற் பிறந் தோனுமாம். இரும்பொறை என்பது பெயராகலாம்; அல்லது இரும்பொறை நாட்டுப் பகுதியையும் ஆண்டவன் என்பதும் பொருந்தும். 'மையூர்' ஓர் ஊர்; மையூர்கிழான்- மையூர்க்கு உரியவனாகிய வேளிர்குலத் தலைவன். வேண்மாள் அந்துவஞ் செள்ளை என்பாள் குட்டுவன் இரும்பொறையின் கோப்பெருந் தேவியாவாள்.'விச்சி' ஓர் ஊர்; இதற்குரியவன் விச்சிக்கோன் என்பான்; இது மலைநாட்டகத்தது. பாரி மகளிரை இவன் மரபினருள் ஒருவன்பாற் கொண்டு சென்று கபிலர் பெருமான் பாடிய செய்யுளால் (புறம் 200) இவன் குடியைப்பற்றி அறியலாம். ஐந்தெயில் - ஐந்து கோட்டைகள்: இவை இருபெரு வேந்தர்க்கும் விச்சிக்கோனுக்கும் உரியவாக லாம். 'ஏழெயில்' என்றாற் போல, ஐந்து கோட்டைகளைக் கொண்டு விளங்கிய ஒரு காவலரணும் ஆம். மிளை-காவற் காடு. பொத்தி - பொத்தியார். வித்தை- போர்க்கலை; ஓர் ஊரும் ஆம்; ஒரு புலவரும் ஆகலாம். 'பழையன் மாறன்’ பாண்டியர் படைத்தலைவருள் ஒருவன்; பாண்டிநாட்டு மோகூர்க்குத் தலைவன்; இவனுக்குரிய காவல்மரம் வேம்பு. சோழனையும் பழையன் மாறனையும் இணைத்துக் கூறியுள்ள தனால், இவனைச் சோணாட்டு மோகூர்ப் பழையன் எனவும் கொள்ளலாம்; இவன் முன்னோனைச் செங்குட்டுவன் வென்ற செய்தியைப் பதிற்றுப்பத்தின் ஐந்தாம்பத்துப் பதிகத்தால் அறியலாம். வஞ்சினம் - சபதம். மந்திர மரபு - மந்திர உச்சாடனங்களால் தெய்வங்களை அழைக்கும் மரபு. மையூர் கிழான் - மையூர்வேள்; இவனுக்குத் தாய்மாமன்; இவனுக்கு அமைச்சனாகவும் குலகுருவாகவும் வீற்றிருந்த சிறந்த கல்வி உடையோன். புரோசு மயக்கி - புரோகிதரினும் சிறந்தோனாக, வேள்வித் தலைவனாகச் செய்து என்பதாம். 'பெருஞ் சதுக்கத்தமர்ந்த வெந்திறல் பூதரைத் தந்து இவண் நிறீஇ’ என்றது, புகார்க்கண் காவல் தெய்வங்களாக இருந்து, புகார் அழிவுக்குப்பின் மறைந்திருந்த பூதர்களை, மந்திரமரபினால் அழைத்துத் தன் வஞ்சிநகரிடத்தே நிலைபெறச்செய்து என்பதாம். சாந்தி - தெய்வங்களுக்குப் படையலிட்டுப் போற்றும் விழா. பெருங்குன்றூர் கிழார்: வேளாண்குடிப் பெரும் புலவருள் ஒருவர். வையாவிக்கோப் பெரும்பேகன், சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி ஆகியோர் காலத்தவர்.

81. நிழல்வீடு கட்டி!

துறை: முல்லை. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: நிழல்விடு கட்டி. இதனாற் சொல்லியது: காமவேட்கையிற் செல்லாத இளஞ்சேரலின் வென்றி வேட்கை.

[பெயர் விளக்கம்: பகை நாட்டுள் கொள்ளைகொண்ட பொன்னை உருக்கிக் கட்டிகளாக வார்த்து, ஒளிவிடும் அப்பொற்கட்டிகளைத் தானைவீரர்க்கு அளித்தனன் எனக் கூறிய சிறப்பால் இப்பெயர் அமைந்தது. 'அழல் வினை அமைந்த’ என்னும் அடைச் சிறப்பானே 'நிழல் விடு கட்டி' என்று பெயராயிற்று என்பது பழைய உரைக் குறிப்பு.]


உலகம் புரக்கும் உருகெழு சிறப்பின்
வண்ணக் கருவிய வளங்கெழு கமஞ்சூல்
அகலிரு விசும்பின் அதிர்சினம் சிறந்து
கடுஞ்சிலை கழறி விசும்படையூஉ நிவந்து
காலை யிசைக்கும் பொழுதொடு புலம்புகொள 5

களிறு பாய்ந்து இயலக் கடுமா தாங்க
ஒளிறுகொடி நுடங்கத் தேர்திரிந்து கொட்ப
அரசுபுறத் திருப்பினும் அதிர்விலர் திரிந்து
வாயில் கொள்ளா மைந்தினர் வயவர்
மாயிருங் கங்குலும் விழுத்தொடி சுடர்வரத் 10


தோள்பிணி மீகையர் புகல்சிறந்து நாளும்
முடிதல் வேட்கையர் நெடிய மொழியூ உக்
கெடாஅ நல்லிசைத் தங்குடி நிறுமார்
இடாஅ ஏணி வியலறைக் கொட்ப
நாட்டிப் படுத்தலின் கொள்ளை மாற்றி 15

அழல்வினை யமைந்த நிழல்விடு கட்டி
கட்டளை வலிப்பநின் தானை உதவி
வேறுபுலத் திறுத்த வெல்போர் அண்ணல்!
முழவின் அமைந்த பெரும்பழம் மிடைந்து
சாறயர்ந் தன்ன காரணி யாணர்த் 20

தூம்பகம் பழுனிய தீம்பிழி மாந்தித்
காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்
கலிமகிழ் மேவலர் இரவலர்க் கீயும்
சுரும்பார் சோலைப் பெரும்பெயல் கொல்லிப்
பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து 25

மின்னுமிழ்ந் தன்ன சுடரிழை ஆயத்துத்
நன்னிறம் கரந்த வண்டுபடு கதுப்பின்
ஓடுங்கீர் ஓதி யொண்ணுதல் அணிகொளக்
கொடுங்குழைக் கமர்ந்த நோக்கின் நயவரப்
பெருந்தகைக் கமர்ந்த மென்சொற் றிருமுகத்து 30

மாணிழை யரிவை காணிய வொருநாள்
பூண்க மாளநின் புரவி நெடுந்தேர்
முனைகை விட்டு முன்னிலைச் செல்லாது
தூவெதிர்ந்து பெறாஅத் தாவில் மள்ளரொடு
தொல்மருங் கறுத்தல் அஞ்சி யரண்கொண்டு 35

துஞ்சா வேந்தரும் துஞ்சுக
விருந்து மாக நின்பெருந் தோட்கே!

தெளிவுரை : உலகத்தைக் காக்கின்ற சிறப்புடையதும், அச்சம் பொருந்திய சிறப்பினைக் கொண்டதும், அழகியலும், தொகுதி கொண்டதும், வளம்கெழுமிய நிறைந்த நீரைக் கொண்டதுமாகிய மேகமானது, அகன்றதும் பெரியதுமான வானத்திடத்தே அதிரலைச் செய்யும் தன் சினத்திலே மிக்கதாகிக், கடுமையான முழக்கத்துடன்கூடி இடித்துக்கொண்டு மேலெழுந்து விசும்பினை அடைந்து, கார்காலத்தை அறிவிக் கின்றதான பருவத்தின் தோற்றத்தையும் செய்தது. அதனால். உலகுயிர்கள் எல்லாம் வருத்தங் கொள்பவாயின.

களிறுகள் நாற்புறம் பரந்தவாகச் சென்று கொண்டிருக்கின்றன. விரைந்த செலவையுடைய குதிரைகளை அவற்றின்மேல் ஏறிச்செலுத்துவோர் இழுத்துப்பிடித்து அடக்கிச் செலுத்தியபடி இருக்கின்றனர். ஒளி செய்யும் கொடிச் சிலைகள் அசைந்தாடத் தேர்கள் எப்புறமும் திரிவனவாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. இத்தகைய போர் முயற்சிகளுடன் பகையரசு நினக்குப் புறத்தே வந்து பாசறையிட்டுத் தங்கியுள்ளது. எனினும், இதனால் சற்றும் அதிர்வற்றவராக விளங்குகின்றனர் நின் மறவர்கள். ஓரிடமென அமைந்திராராய் பாசறையைச் சுற்றித் திரிந்தபடி காத்துவரும் வலிமை கொண்டோராய்த் திகழ்கின்றனர். மிகக் கரியதான அந்த இரவுப் பொழுதினும், அவரணிந்துள்ள வீரவளைகள் ஒளி செய்த வண்ணம் திகழ்கின்றன. அவற்றைத் தோள்களிற் செறித்தவராகக் கைகளை உயரத் தூக்கியவராகப், போர்செய்தலில் விருப்பஞ் சிறந்தவராக. ஒவ்வொருநாளும் தாம் செய்யும் போர் அன்றைக்குள்ளேயே முடிதல் வேண்டும் என்னும் வேட்கையினராக அவர்கள் விளங்குகின்றனர். தம் மறமாண்புகளை ஒருவருக்கொருவர் நெடுநேரம் சொல்லிக் கொள்பவராகக், கெடுதலற்ற நற்புகழை கொண்ட தம் மறக்குடியின் புகழை நிலைநிறுத்தும் பொருட்டாக, எல்லையிட்டுக் கூறவியலாத பரந்த நின் பாசறைக்கண்ணே சுழன்று திரிந்தபடி விளங்குகின்றனர். அவ்வாறே அவர் விளங்க -

நீயும் பகை நாட்டார்மேற் சென்றனையாய், அவர் நாடுகளை வென்று நின் அடிக்கீழ்ப்படுமாறு அவற்றை வெற்றி கொண்டனை. அடிப்பட்ட நாடுகளை வென்றோர் கொள்ளையிடுதல் என்னும் வழக்கத்தினை மாற்றினை. வெற்றி தேடித் தந்தவரான நின் மறவர்க்கு அழல்வினையிலே அமைந்த ஒளிவிடுகின்ற கட்டிகளாக உருக்கி வார்த்துக்கொண்ட தங்கக் கட்டிகளை, அத்தானை மறவர்களின் மேம்பாடுகளை அறிந்தார் எடுத்துக்கூற, அதற்கேற்ப அவர்க்கு வழங்கி உதவினை! இவ்வாறாக வேற்று நாட்டிடைப் பாசறையில் தங்கிய, வெல்லும் போராற்றலில் மிகுந்த தலைவனே!

முழவினைப் போன்றதாகத் தன் உருவத்தால் பெருத்து விளங்கிய பலாப்பழத்தினை உண்டு விழாவயர்ந்தாற் போலக், கருமை பொருந்திய அழகிய மூங்கிற் குழாயிடத்தே இடப்பெற்று முற்றிய இனிதான கள்ளைப் பருகியவராய்க், காந்தளின் அழகிய தலைக்கண்ணியைச் சூடியவரான செழுமைகொண்ட குடிப்பிறந்தோருமான செல்வர்கள், மிகுதியான மகிழ்ச்சியைக் கொண்டவர்களாய், தம்மை வந்து இரந்தவர்களுக்கும் அக்கள்ளை உண்ணத் தந்து மகிழ்வர். அத்தகைய சிறப்பினதும், சுரும்பினம் ஆரவாரிக்கும் பெரும் பெயலைக்கொண்டு விளங்குவதுமான சிறப்பினை யுடையது நினக்குரிய கொல்லிமலை.

இருவாட்சி மலரோடும் பச்சிலை மலர்களான செண்பக மலர்களையும் மகிழ்வோடு சூடிக் கொண்டவர்; மின்னல் ஒளியுமிழ்ந்தாற்போல ஒளி பரப்பும் அணிகலங்களைப் பூண்டவர், ஆயமகளிர். அவரிடத்தே நின் பிரிவால் மாறுபட்ட தன் நிறத்தை மறைத்தவளாக, வண்டு மொய்க்கும் கூந்தலையும், அதன்கண் முடிக்கப்பெற்ற சுருளென்னும் அணியையும் அழகமையப் பூண்டவளாக, வளைந்த குண்டலங் களையும், அவற்றோடு பொருதுநின்ற கண்களையும், விருப்பமுண்டாகத் தன் பெருந்தகைமைக்குப் பொருத்தமாகப் பேசும் மென்மையான சொற்களையும், அழகிய திருமுகத்தினையும், மாட்சிமைப்பட்ட அணிகளையும் கொண்டவளாக விளங்குபவள் நின் சேரமாதேவி. அவளைச் சென்று காணும் பொருட்டாக, ஒருநாளேனும் தலைவனே, நின் குதிரைகள் நின் நெடுந்தேரின்கண் பூட்டப் பெறுவனவாக!

அவ்வாறு நீதான் நின் மாதேவியைக் காணச் செல்வதனாலே, நின்னோடு பொருதிய போர்முனையையும் விட்டுச் சென்றவராக, நின் முன்பாக வந்து வணங்கியும் போகாதவராக, நின்னோடு பொருதலையே கருதியும் அதனைச் செய்யப் பெறாதவராக, வலியற்று விளங்கும் தம் மறவரோடு தம் பழமையாக வரும் குலத்தினையும் நீதான் அழித்தலைச் செய்வாயென அஞ்சியவராக அரணிடத்தேயே தம் இருப்பிடமாகக் கொண்டு, நீ அதனைத் தாக்குதலை நோக்கித் துஞ்சாதிருப்பாராகிய வேந்தரும், தம் அச்சத்தை மறந்தாராகித் துயில் கொள்வாரக. நின் பெருத்த தோள்கட்கு, நின் தேவியைத் தழுவிப் பெறுகின்ற விருந்தும் வாய்ப்பதாக, பெருமானே!

சொற்பொருளும் விளக்கமும்: புரக்கும் - பாதுகாக்கும். உருகெழு - அச்சம் பொருந்திய. கமஞ்சூல் - நிறைந்த சூல்; நீரான் நிறைந்து விளங்கும் நிலை. வண்ணம் - அழகு; கார் வண்ணம். கருவி - தொகுதி. கமம் - நிறைவு. சிலைத்தல் - முழங்குதல். நிவத்தல் - மேலெழல். காலை - கார்காலம். பொழுது - பருவம். புலம்பு - வருத்தம்.

பாய்ந்து இயல - பரந்து செல்ல. கடுமா - விரைந்து செல்லுங் குதிரைகள். நுடங்க - அசைய். அதிர்வு - நடுக்கம். வாயில் - இடம். வாயில் கொள்ளா - ஓரிடத்தில் நிலைகொள்ளாத. மைந்து - வலிமை. சுடர் வரல் -ஒளியெறித்தல். மீகையர் - மேலெழுந்த கையினர். புகல் - விருப்பம். நாளும் - நாள்தோறும். நிறுமார் - நிலைபெறுத்தும் பொருட்டு ஏணி - எல்லை. அறை - பாசறை.

நாடு - பகைவர் நாடு. அடிப்படுத்தல் - வென்று அடிமை கொள்ளல். கொள்ளை மாற்றல் - கொள்ளையிடல் என்னும் மரபினை மாற்றல்; அடிப்பட்டபின் அந்நாடும் தனதாகவே யாதலின், அதனைக் காக்கும் கடமையோனும் தானே யாதலின், அந்நாட்டைக் கொள்ளையிடல் பொருந்தாது என மாற்றினன் என்க. ஆயின் பகைவர் திறையளந்த பொன்னை மட்டும் கட்டிகளாக்கித் தன் படைமறவர்க்கு வழங்கினான் என்க. கட்டளை - தரம். வலித்தல் - ஆய்ந்து கூறல். புலம் - நாடு.

முழவு - மத்தளம், 'பெரும்பழம்' என்றது பெரிதான பலாப்பழத்தை. மிசைந்து - உண்டு. சாறு - திருவிழா. அயர்தல் - கொண்டாடுதல். கார் - கருமை. தூம்பு - மூங்கிற் குழாய். பழுனிய - முற்றிய. தீம்பிழி - இனியர்கள். கண்ணி தலைமாலை கலிமகிழ் - மிக்க மகிழ்ச்சி. மேவார் - பொருந்திய வராய். சுரும்பு - வண்டினம். பெயல்-மழை.

'பெருவாய் மலர்' என்றது இருவாட்சி மலரை. பசும்பிடி - பச்சிலைக் கொத்து; சண்பகக் கொத்தும் ஆம். ‘நிறம் கரந்து' என்றது, பிரிவால் மாறுபட்ட தன் மேனிவண்ணத்தை மறைத்துக் கொண்டு என்றதாம். கதுப்பு - கூந்தல். 'ஒடுங்கீர் ஓதி' என்றது சுருளென்னும் தலையணியினை. அணி கொளல் - அழகு கொள்ளல். குழை - குண்டலம். நயவர் - விருப்பம் உண்டாக. தகை - தகைமை ; மேம்பாடு. திரு முகம் - அழகிய முகம். 'மாள': முன்னிலை யசை. முனை - போர்முனை. முன்னிலைச் செல்லல் - முற்போந்து பணிந்து போதல். தூ - வலி. பெறாஅ - வெற்றி பெறாத. தாவில் - வலியற்ற. மள்ளர் - போர் மறவர். தொல் மருங்கு - பழையதாக வரும் தம் குலம். அரண் கொண்டு - அரணிடத்துப் புகுந்திருத்தலை மேற்கொண்டு. 'துஞ்சா வேந்தர்’ என்றது, பகையரசரை. விருந்து - புதியவின்பம்; இதுபிரிவால் வாடியிருந்தாளைச் சென்று தழுவுதலால் உண்டாவது.

இஃது, அவன் அரிவையான சேரமாதேவியின் கற்பு முல்லை பற்றி வந்தது; இதனால் துறை முல்லை ஆயிற்று என்பது பழைய உரைக் குறிப்பு.


82. வினைநவில் யானை !

துறை: காட்சி வாழ்த்து. வண்ணம்: ஒழுகு வண்ணமும், சொற்சீர் வண்ணமும். தூக்கு: செந்தூக்கு. பெயர்: வினைநவில் யானை. இதனாற் சொல்லியது: இளஞ்சேரலின் வென்றிச் சிறப்பு.

[பெயர் விளக்கம்: 'நின்னைக் காண்கு வந்திசின்' என்று கூறி வாழ்த்துதலால் காட்சி வாழ்த்து ஆயிற்று. 'முன்னே போர்வினை செய்து பழகின யானை' எனவும், 'முன்னின்ற செல்சமஞ் தொலைத்த யானை’ எனவும் கூறிய சிறப்பால் இப்பெயர் வந்தது.]



பகை பெருமையின் தெய்வஞ் செப்ப
ஆரிறை யஞ்சா வெருவரு கட்டூர்ப்
பல்கொடி நுடங்கும் முன்பின் செறுநர்
செல்சமந் தொலைந்த வினைநவில் யானை
கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி 5

வண்டுபடு சென்னிய பிடிபுணர்ந் தியல
மறவர் மறல மாப்படை யுறுப்பத்
தேர்கொடி நுடங்கத் தோல்புடை யார்ப்பக்
காடுகை காய்த்திய நீடுநாள் இருக்கை
இன்ன வைகல் பன்னா ளாக

பாடிக் காண்கு வந்திசின் பெரும!
பாடுநர், கொளம்கொளக் குறையாச் செல்வத்துச்செற்றோர்
கொலக்கொலக் குறையாத் தானைச் சான்றேர்


வண்மையும் செம்மையும் சால்பும் மறனும்
புகன்று புகழ்ந்து அசையா நல்லிசை 15
நிலந்தரு திருவின் நெடியோய், நின்னே!

தெளிவுரை: நின் மெற்கொண்ட பகையினது பெருமை காரணமாகத் தமக்கு நின்னால் யாதேனும் தீங்கு நேரற்கு அஞ்சியவரான நின் பகைவர்கள், தம் குல தெய்வங்களை வழிபட்டு வேண்டிக் கொள்வர். நின் படைமறவர் அரிதாகத் தங்கியிருத்தற்கு அஞ்சாததும், ஆயின் நின் பகைவர் நெருங்குதற்கு அஞ்சத்தக்கதுமான பாசறைக்கண்ணே நீயும் தங்கியுள்ளனை. அவ்விடத்தே பலவான கொடிகள் அசைந்தாடிப் பரந்தவண்ணம் உள்ளன. வலியோடு முன்னர்ப் பகைத் தெழுந்தாரது போர்களைத் தொலைத்த போர்வினைப் பயிற்சியுடைய யானைகள். மதத்தினை ஒழுகவிட்டவாய்க், கடுஞ்சினம் மூளப்பெற்றவாய், வண்டினம் மொய்க்கும் சென்னியினவாய்த், தத்தம் பிடிகளோடும் கூடியவாய்த் திரிந்து கொண்டிருக்கின்றன. நின் படைமறவர் மாறுபட்டு நிற்கின்றனர். நின் குதிரைப்படைகள் சேணமிட்டவையாய் நிற்கின்றன. நின் தேர்களில் கொடிகள் அசைந்தாடிப் பறந்து கொண்டிருக்கின்றன. கேடகங்கள் ஒன்றோடொன்று உரைசுதலால் ஆரவாரம் எழுந்தபடி இருக்கின்றது. பகைவரின் காவற்காடுகளைச் சுட்டெரித்து நின் மறவர் குளிர்காய்ந்தபடி யுள்ளனர். இவ்வாறு நெடுநாட்கள் அவர்கள் பாசறையிலே இருந்து வருகின்றனர். இத்தகைய நாட்களும் பன்னாளாகக் கழிந்து கொண்டிருக்கின்றன.

நின் புகழைப் பாடிவருவோரான பாணரும் புலவரும் தாமாகவே வேண்டுமளவு எடுத்துக்கொண்டு போகப்போகவும் குறையாத செல்வத்தை உடையோனே! நின்னைச் சினந்து வந்தோர் போரிடையிற் கொல்லக் கொல்லக் குறையாது மீளவும் பெருகும் படைப்பெருக்கினை உடையோனே! நின் கொடையினையும், செம்மையினையும். பிறவான சால்புகளையும், மறமேம்பாட்டையும் விரும்பிப் புகழ்ந்து, சான்றோர் நாளும் போற்றுதலில் குறைவுபடாத நற்புகழைக் கொண்டோனே! நிலம் தருகின்ற திருவினைக் கொண்ட நெடியோனாகிய திருமாலைப் போன்றோனே! நின்னைப் பாடிக் காண்பதன் பொருட்டாக, யானும் வந்தனென் பெருமானே!

சொற்பொருளும் விளக்கமும்: பெருமை - மிகுதி. தெய்வம் - வழிபடு தெய்வம். செப்ப - தம்மைக் காக்குமாறு முறையிட்டுக் கொள்ள. இறை - தங்குதல். கட்டூர்- பாசறை. முன்பு - வலிமை. செறுநர் - பகைவர். செல்சமம் - கழிந்த போர். வினை - போர் வினை. நவில் யானை - பயின்ற யானை. கடாஅம் - மதநீர். பொத்தி - மூளப்பெற்று. 'பிடி புணர்ந்து இயலினும் மதநீர் மாறாதாயிற்று' என்றது அத்துணைச் சினம் கொண்ட யானைகள் எனற்கு. மறல - மாறு படல்; போரின்றி வாளாவிருத்தல் பொறாராய் மனங்கவலல். மா - குதிரை. தோல் - கேடகம். காடு - காவற்காடு. புடை - பக்கம். கை காய்த்தல் - குளிர் பொறுக்க மாட்டாராய்க் கைகளை நெருப்பிற் காட்டிச் சூடேற்றல்.

காண்கு - காணற்பொருட்டு. பாடுநர் - பாடி வருவாரான புலவரும் பாணரும். செற்றோர் - பகைவர். தானை - படைவீரர். சான்றோர்- சான்றாண்மையாளர். வண்மை - கொடைக் குணம். செம்மை - நடுநிலை பிறழாச் செங்கோன்மை. சால்பு - அன்பும் அறனும் பிறவுமாகிய நற்பண்புகள். மறன் - வீரச்செறிவு. புகன்று- விரும்பி. அசையா - குறைவு படாத. நல்லிசை - நற்புகழ். எனக்கும் நின் கருணையாற் பரிசில் பல நல்கி உதவுக என்பது கருத்து.


83. பஃறோற் றெகுதி !

துறை: தும்பை யரவம். வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: பல்தோல் தொகுதி. இதனாற்சொல்லியது: சேரனின் படையெழுச்சியது சிறப்பு.

[பெயர் விளக்கம்: மழை மேகங்களோடு ஒப்பான களிறுகளோடு தோல்களின் தொகுதிகளையும் ஒப்பிட்டுப் பெரியவாகக் கூறிய சிறப்பால் இப்பெயர் அமைத்தனர்.]


கார்மழை முன்பின் கைபரிந் தெழுதரும்
வான்பறைக் குருகின் நெடுவரி பொற்பக்
கொல்களிறு மிடைந்த பஃறோற் றொழுதியொடு
நெடுந்தேர் நுடங்குகொடி அவிர்வரப் பொலிந்து
செலவுபெரி தினிதுநின் காணு மோர்க்கே: 5

இன்னா தம்ம! அதுதானே பன்மாண்
நாடுகெட எருக்பி நன்பலம் தரூஉம்நின்


போரருங் கடுஞ்சினம் எதிர்ந்து
மாறுகொள் வேந்தர் பாசறை யோர்க்கே!.

தெளிவுரை: கார்மேகங்களின் முன்பாக ஒழுங்கு குலைந்தவாய் எழுந்து செல்லும், வெண்ணிறச் சிறகுகளையுடைய பறவைகளின் நெடிய வரிசையைப் போலப், போரிற் பகைவரைக் கொல்லும் களிறுகள் நெருங்கிய, பலவகைக் கேடகங்களைத் தாங்கிய மறவரின் கூட்டத்தோடு, செல்லும் நெடுந்தேர்களின் மீது விளங்கும் அசைந்தாடும் கொடிகள் விளக்க முடையவாக அழகுடன் தோன்ற, நீ செல்லும் படைச்செலவு நின்னைக் காண்பவர்க்குப் பெரிதும் இனிதாவ தேயாகும், ஆனால், அதுதான்-

பலவகை மாண்புகளையும் கொண்ட பகைநாடுகள் கெடுமாறு அழித்து, அவர் நாட்டு நன்கலங்களையும் கவர்ந்து தரூஉம் நின் போர்ச்செலவாகிய தடுத்தற்கரிய சினத்தின் செயலாதலால், நின்னை எதிர்த்தாராக, நினக்கு மாறுபாடு கொள்ளும் வேந்தரது பாசறைக்கண் உள்ளாரான பகை மறவர்க்குத் துன்பந் தருவதாயிருக்கும் பெருமானே! இது தான் என்னையோ?

சொற்பொருளும் விளக்கமும்: கிடுகேந்திய வீரர் கூட்டத்தோடு செல்லும் களிற்றின் தொகுதிகளைக் கார் மேகத்தின் தன்மைக்கு ஒப்பிட்டனர். கிடுகுகளின் தொகுதியும் களிறுகளும் செல்வது அலையலையாகக் கார்மேகம் வானிற் செல்வதுபோல நிறைந்திருந்தன என்க. அவற்றுக்கு முற்பட்டுச் செல்லும் தேர்களின் வரிசைகளைக் கார்மேகங்களுக்கு முன்னாக வளைவுவளைவான வரிசையோடு செல்லும் பறவைகளின் செலவுக்கு ஒப்பிடுகின்றனர்.

கார் மழை - கார்மேகம்; கார்காலத்து மழைமேகமும் ஆம். கைபரிதல் - ஒழுங்கு குலைதல். எழுதரும் - செல்லும். வான்பறை - வெண்சிறகு. குருகு - கடற்குருகு; கொக்கினத்துள் ஒன்று. நெடுவரி - நெடிய வரிசை. பொற்ப - ஒப்பாகத் தோன்ற. தோல் - கேடகம்: இதன் நிறம் கருப்பு என்பது இதனால் விளங்குதலால், இருப்புத் தகடாற் செய்யப்பெற்றதாகலாம்; தொடக்ககாலத்தில் தோற்கேடகங்களே வழக்கிலிருந்ததனால் ’தோல்' என்று பெயரையும் இது பெற்றிருக்கலாம். மிடைதல் -நெருங்கல்; களிறுகளும் கிடுகுடைப் படைமறவரும் நெருங்கிச்சென்றனர் என்பதாம். நெருக்கம் திரளின் மிகுதியினால் ஏற்பட்டது என்க. அவிர்வர - ஒளியிட்டு விளங்க. பொலிவு - அழகு. காணுமோர்-காண்போர். ’தானே' என்பது இசைநிறை. பன்மாண் – பல வகை மாண்புகள். எருக்கல் - அழித்தல்; வெம்மையால் அழியச் செய்தல். எதிர்ந்து - எதிர்த்து வந்து. மாறுகொள் வேந்தர் - பகைகொண்ட வேந்தர்.

[தும்பை அரவம்: இருபெரு வேந்தரும் புகழ்குறித்துச் செய்வதற்குக் குறித்த போரின்கண், அவர்தம் படையெழுச்சியிடையே எழும் ஆரவாரம்.]

இதனாற் சேரமானின் படைப் பெருக்கின் மிகுதி கூறினார்; புகழ் குறித்துப் போர்மேற்கொள்ளும் அவனது மறமேம்பாடும் கூறினார்.

84. தொழில் நவில் யானை !

துறை: வாகை. வண்ணம்: ஒழுகுவண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: தொழில் நவில் யானை. சொல்லியது: சேரமானின் வெற்றிப் பெருமிதம்.

[பெயர் விளக்கம்: போர்க்குரிய யானையென அதன் பயிற்சியாலும், முன் பழக்கத்தாலும் பெயர்பெற்ற யானை தொழில் நவில் யானையாகும். இச்சிறப்பாலும், 'மேகமுழக்கினைப் போர்முரசத்தின் முழக்கமெனக் கருதிக் கட்டுத்தறியி னின்றும் அவிழ்த்துக்கொண்டு செல்லும்' என்னும் அடைச்சிறப்பாலும் இப்பெயர் தந்தனர். சேரனின் வென்றிச் சிறப்பைக் கூறியதனால் வாகைத் துறையாயிற்று.]


எடுத்தேறு ஏய கடிப்புடை அதிரும்
போர்ப்புறு முரசம் கண்ணதிர்ந் தாங்குக்
கார்மழை முழக்கினும் வெளில்பிணி நீவி
நுதலணந் தெழுதரும் தொழில்நவில் யானைப்
பார்வல் பாசறைத் தருஉம் பல்வேல் 5

பூழியர் கோவே! பொலந்தேர்ப் பொறைய!
மன்பதை சவட்டும் கூற்ற முன்ப!
கொடிநுடங் காரெயில் எண்ணுவரம் பறியா
பன்மா பரந்த புலமென் றெண்ணாது
வலியை யாதல்நற் கறிந்தன ராயினும் 10
வார்முகில் முழக்கின் மழகளிறு மிகீஇத்தன்
கான்முனை மூங்கில் கவர்கிளை போல


உய்தல் யாவதுநின் உடற்றி யோரே!
வணங்கல் அறியார் உடன்றெழுந்து உரைஇப்
போர்ப்புறு தண்ணுமை ஆர்ப்பெழுந்து நுவல 15

நோய்த்தொழில் மலைந்த வேலீண்டு அழுவத்து
முனைபுகல் புகல்வின் மாறா மைந்தரொடு
உரும்எறி வரையின் களிறுநிலம் சேரக்
காஞ்சி சான்ற செருப்பல செய்துநின்
குவவுக்குரை இருக்கை இனிதுகண் டிகுமே. 20

காலை மாரி பெய்துதொழி லாற்றி
விண்டு முன்னிய புயல்நெடுங் காலைக்
கல்சேர்பு மாமழை தலைஇப்
பல்குரல் புள்ளின் ஒலியெழுந் தாங்கே!

தெளிவுரை: எடுத்து எறிதலைப் பொருந்திய குறுந்தடியால் தாக்குண்டு அதிர்தலைச் செய்யும், தோலால் போர்க்கப்பெற்ற முரசத்தினது, கண்ணிடத்திருந்து அடிக்கப்பட்ட ஒலியானது எழுந்தாற்போலக் கார்காலத்து மேகங்கள் இடிமுழக்கினைச் செய்தாலும், கட்டுத்தறியினின்றும் கட்டவிழ்த்துக்கொண்டு, நெற்றியை நிமிர்த்தபடி போர்க் களத்தை நோக்கி புறப்படும், போர்த்தொழிலிற் புகழுடைய யானைகளையும். பகைவரை ஒற்றியிருந்து பார்த்தறிதற்கு உரியவராகப் பாசறைக்கண் இருக்கும் பலரான வேற்படை வீரர்களையும் கொண்ட, பூழிநாட்டரின் கோமானே! பொன்னணிகளாற் புனையப்பெற்ற தேரினையுடைய இருஞ்சேரல் இரும்பொறையே! பகைமறவர் கூட்டமாகிய அதனை அழித்தலிலே, மக்களைத் தவறாது கொல்லும் கூற்றத்தைப்போன்ற பிழைத்தலற்ற வலிமையினைக் கொண்டோனே!

நின் பகையரசர்க்கு உரியவான கொடிகள் பறக்கும் கடத்தற்கரிய கோட்டைகள் எண்ணிப்பார்த்து முடிவுகாண முயலாதபடி மிகப் பலவாகும். குதிரைகளும் யானைகளும் பகைப்புலத்தில் பலவாகப் பரந்துள்ளன. அத்தகையதேனும், ’இப்புலம் கொள்ளுதற்கரிய ஒன்றென்று' எண்ணார் நின் பகைவர். அவரினும் நீ வலிமையுடையை. இதனை அவரும் நன்றாக அறிந்துள்ளனர். எனினும், நின்னை வணங்கி வாழ்தலை அவர் உணராராயினர். நின்னோடு மாறுபட்டு எழுந்து உலவிப் போரிடவும் துணிந்தனர். நெடுமேகம் போன்ற தோற்றத்தையும், இடியனைய முழக்கையும் உடையவான இளங்களிறுகள், வலிமை மிகுந்தவாய்ச் செல்லுங் காலத்து, அவற்றின் காலடிப்பட்ட முளைத்த மூங்கில்கள் தம் கிளைகளோடும் அழிவெய்தும். அதனைப்போலவே, நின்னை பகைத்தோரும் தம் கிளையோடும் அழிவை அடைவர்!

தோலாற் போர்த்தலையுடைய தண்ணுமைகளின் ஆர்ப்பொலியானது எழுந்து போரினை மேற்கொள்ளுமாறு ஏவிற்று. படைமறவரும் துன்பத்தையுடைய தொழிலான போரிடுதலைச் செய்தனர். வேற்படைகள் நெருங்கிய அத்தகைய போர்க்களத்திலே, போரை விரும்புகின்ற விருப்பத்தினையும் நீங்காத வலிமையினையும் உடையவரான மறவர்கள், சாவினை ஏற்று நிலத்தே வீழ்ந்தனர். இடியினால் தாக்குண்ட மலைகளைப்போலக் களிறுகள் நிலத்தே பட்டு வீழ்ந்தன. நிலையாமையே பொருந்திய இத்தகைய போர்கள் பலவற்றைச் செய்து வெற்றிபெற்றவரான நின்படைமறவர் கூடி நின்று ஆரவாரிக்கும் பாசறையிருக்கையினை, யாமும் இனிதாகக் கண்டோம்.

பெய்தற்குரிய காலத்தே மழை பெய்து, அதனால் உழவு முதலாகிய தொழில்கள் முறையே நிகழச்செய்து, மலையினை அடைந்த மேகமானது, நெடுங்காலம் அம்மலையிடத்தேயே தங்கியிருந்து பின்னர்ப் பெருமழையையும் பெய்யத் தொடங்கவும், அதனால் களிப்புற்ற பலவகைக் குரல்களையுடைய பறவைகளின் ஆர்ப்பொலி எழுந்தாற்போல, நின்னைச் சூழ ஆரவாரித்திருக்கும், நின் மறவர் திரளின் ஆரவாரமான இருப்பினையும் யாம் இனிதாகக் கண்டேம்!

சொற்பொருளும் விளக்கமும்: ஏறுஏய் - எறிதலைப் பொருந்திய. கடிப்பு - குறுந்தடி; முரசினை முழக்குவதற்குப் பயன்படுவது. போர்ப்புறு முரசம்- கொல்லேற்றுத்தோலால் போர்க்கப் பெற்றுள்ள வெற்றி முரசம். கண் - அடிக்கும் இடம்; முரசின் நடுப்பாகம். அதிர்தல் - விட்டு விட்டு ஒலித்தல். கார்மழை - கார்காலத்து மேகம். முழக்கு - இடிமுழக்கம். வெளில் - கட்டுத்தறி. நீவி - கட்டினை அறுத்து. அணந்து - நிமிர்ந்து. தொழில்நவில் - தொழிற் சிறப்புடையதென்று சொல்லப்படுகின்ற. பார்வல் - பார்வை; ஆகு பெயராய்ப் பார்த்தற்குரிய இடங்களைக் குறித்தது. பூழியர் - பூழி நாட்டார். பொறை - இரும்பொறை நாட்டினனே. சவட்டும் - அழிக்கும். முன்பு - வலிமை. கூற்றம் - உயிரைக் கூறுபடுத்துவது.

நுடக்கம் - அசைவு. பல்மா - பலவான குதிரைகளும் யானைகளும். புலம் - பகைப்புலம். வார்முகில் - நெடிய கருமேகம்; தோற்றத்தாலும் முழக்கத்தாலும் களிறுக்குஉவமை. மழக்களிறு - இளம்பருவத்து ஆண் யானைகள். கால் கவர் - காலால் அகப்படுத்தப்பெற்ற. உய்தல் - பிழைத்தல். உடற்றியோர்- போரிடத் துணிந்த பகைவர்.

நின்னை எதிர்த்த பகைவர் மழகளிற்றின் காலிடை அகப்பட்ட மூங்கில்போலக் கிளையோடும் அழிந்து போவர் என்பதாம். இதனை அறிந்தும், அவர்கள் நின்னைப் பணிந்து போகாதிருக்கின்றனரே என்றதுமாம். உய்தல் யாவது என்றது, அழிதலின் உறுதிபற்றிக் கூறியதாம்.

'தண்ணுமை’ ஒரு வகை முரசம்; மத்தளம் என்பர். ஆர்ப்பு - ஆர்ப்பு ஒலி. நுவல -சொல்ல; சொல்வது போர்க்கு எழுமின் என்பது. நோய்த்தொழில் - துன்பந்தரும் தொழிலாகிய போர்த்தொழில்; போரிடும் இருசாராருக்கும் துன்பந் தருவதாகலின் நோய்த்தொழில் என்றனர். ஈண்டு - பெருகிய. மைந்தர் - வலிமையுடையரான வீரர். முனை - போர்முனை. புகல் - விரும்புகின்ற. புகல்வின் - விருப்பத்தையுடைய. உரும் - இடி. எறி - தாக்கிய. காஞ்சி - நிலையாமைபற்றிய சிந்தனை. இதனைப் போர்க்களத்து வீரருக்கு ஏற்றிக் கூறினர். குரை - ஆரவாரம். குவவு - வீரர் கூட்டம். இருக்கை - இருப்பு, மாரி - மழை. காலை - காலம். மழை பெய்யத் தலைப்பட்டதும் புள்ளினங் களிப்பால் ஆரவாரித் தாற்போல், வெற்றி கொண்ட வீரர்களும் கூடி நின்று ஆர்ப்பரித்தனர் என்க.


85. நாடுகாண் நெடுவரை !

துறை: செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகுவண்ணம். தூக்கு: செந்தூக்கு. இதனாற் சொல்லியது: இரும்பொறையின் முன்னோரது கொடைச் சிறப்போடு சேர்த்து, அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறு ஆம்.

[பெயரும் விளக்கமும்: தன்மேல் ஏறிநின்று நாட்டைக் கண்டு இன்புறுவதற்கு ஏதுவாகிய உயர்ச்சியுடைய மலை என்றதன் சிறப்பால் இப்பெயரைத் தந்தனர்.]


நன்மரம் துவன்றிய நாடுபல தரீஇப்
பொன்னவிர் புனைசெயல் இலங்கும் பெரும்பூண்


ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்
இட்ட வெள்வேல் முத்தைத் தம்மென
முன்திணை முதல்வர் போல நின்று 5

தீஞ்சுனை நிலைஇய திருமா மருங்கின்
கோடுபல விரிந்த நாடுகாண் நெடுவரைச்
சூடா நறவின் நாள்மகிழ் இருக்கை
அரசவை பணிய அறம்புரிந்து வயங்கிய
மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின் 10

உவலைச் கூராக் கவலையில் நெஞ்சின்
நனவிற் பாடிய நல்லிசைக்
கபிலன் பெற்ற ஊரினும் பலவே.

தெளிவுரை: "நல்ல மரங்கள் நெருக்கமாகச் சேர்ந்துள்ள நாடுகள் பலவற்றையும் வென்று வருவீராக! பொன்னாற் செய்யப்பெற்றதும், புனைதல் தொழில் விளங்குவதுமாகிய பெரிய பூணாரத்தை உடையவன்; என்னோடும் பொருந்தாத ஒரு மேற்கோளையும் கொண்டவன் சோழர் பெருமான். அவனை வென்று, அவன் படையினர் நமக்குப் பணிந்து களத்திலே இட்ட வெள்ளிய வேல்களையும் முன்னே கொண்டு வருவீர்களாக!" என்று நின் மறவரை நீதானும் ஏவினை.

நின் குலத்து முன்னோனான செல்வக்கடுங்கோ வாழியாதனைப் போலவே நீயும் அறநெறிக்கண்ணே நிலைபெற்றனை! இனிய சுவையுடைய நீரால் நிலைத்துள்ள சுனைகளையுடையதும், சிறந்த வளங்களைக் கொண்ட பக்கமலைச் சாரல்களை யுடையதும், மலையுச்சிகள் பலவாகப் பரந்து கிடப்பதுமான நாடனைத்தையும் காணக்கூடிய நெடியவரையிடத்தே யுள்ளது நறவுப் பேரூர். அதனிடத்தே நாள்தோறும் நிகழும் நின் மகிழ்வான கொலுவிருக்கையும் நிகழும். அவ்விடத்தே நின்னைக் காணவந்துள்ளாரான நினக்கு உட்பட்ட குறுநில வரசரும், அவையினரும் நின்னைப் பணிந்து நின் தொழில் கேட்டிருப்பர். அவ்விடத்தே, நீயும் அறங்கள் பலவற்றையும் விரும்பிச் செய்திருப்பாய். விளங்கிய மறச்செயல்களை மேற்கொள்ளும் கோட்பாட்டுடனும் இருப்பாய்.

விளங்கிய செவ்விய நாவினையும், இழிவு மிகுதிப்படாத கவலையற்ற நெஞ்சினையும், நல்ல புகழையும் உடையவர் கபிலர் பெருமான். அவர், உண்மை விளங்கச் செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பாடினர். அவன் அவருக்கு நன்றா என்னும் குன்றின்மீது ஏறி நின்றவனாகத், தன் கண்ணிற் கண்ட ஊர்களை எல்லாம் வழங்கினான். அவன் வழங்கியதனாற் கபிலன் பெற்ற ஊர்களிலும் பலவாக, நின் பகைவர் தோற்று நிலத்திலிட்ட வேல்களும் விளங்கினவே!

சொற்பொருளும் விளக்கமும்: திணை - குலம். முதல்வர் - முன்னோர்; குலத்து முன்னோர். திருமா மருங்கு - பெருவளங் கொண்ட மலைப்பக்கங்கள். கோடு - மலையுச்சி; சிகரம். நறவு - ஒருபூ ; சூடா நறவு – ’நறவு' என்னும் ஊர். நறவு- கள்ளும் ஆம்; அப்போது கள்ளையுடைய நாள்மகிழ் இருக்கை என்க. அரசவை பணிய - அரசும் அவையும் பணிந்து போற்ற. புரிதல் - விரும்பிச் செய்தல். வயங்குதல் - விளங்குதல்.

’அறம் புரிந்து மயங்கிய மறம்புரி கொள்கை' என்பதற்கு அறத்தின்மாறுபட்டாரை அழித்து மறச்செயலாற்றும் கோட்பாட்டினால் அறநெறி நிலைநிற்கச் செயல்புரிந்து விளங்கிய தன்மை எனவும் பொருள் கூறலாம். கொள்கையைப் பாடிய கபிலன் என, இப்புகழைச் செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு ஏற்றியும் கூறலாம். உவலை - இழிவு. கூர்தல் - மிகுதல். நனவின் - மெய்யாக

இளஞ்சேரலிரும்பொறை ’சென்னியர் பெருமானை வென்று வருக' வென்று ஏவினன். அவன் படையெறிந்து ஆற்றாது சோழப் படையினர் களத்திற் படையெறிந்து ஓடினர். அவர் அவ்வாறு போட்டுச்சென்ற வேலின் அளவு, செல்வக்கடுங்கோ தன்னைப் பாடிய கபிலனுக்கு வழங்கிய ஊரினும் பலவாகும் என்பதாம்.

86. வெந்திறல் தடக்கை !

துறை: செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. சொல்லியது: இளஞ்சேரலிரும்பொறையின் போர் வன்மையும், மென்மையும்.

[பெயர் விளக்கம்: ’உறல் உறு குருதிச் செருக்களம் புலவக்கொன்று, அமர்க் கடந்து' என்னும் முன் நின்ற அடைச் சிறப்பாலும், கையினை வெந்திறல் தடக்கை எனச் சிறப்பித்துக் கூறியமையானும், இப்பாட்டிற்கு இப்பெயரைத் தந்தனர்.]


உறலுறு குருதிச் செருக்களம் புலவக்
கொன்றமர்க் கடந்த வெந்திறல் தடக்கை
வென்வேற் பொறையன் என்றலின், வெருவர
வெப்புடை ஆடூஉச் செத்தனென் மன்யான்;
நல்லிசை நிலைஇய நனந்தலை உலகத்து 5

இல்லோர் புன்கண் தீர நல்கும்
நாடல் சான்ற நயனுடை நெஞ்சின்
பாடுநர் புரவலன் ஆடுடை அண்ணல்
கழைநிலை பெறாக் குட்டத் தாயினும்
புனல்பாய் மகளிர் ஆட ஒழிந்த 10

பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும்
சாந்துவரு வானி நீரினும்
தீந்தண் சாயலன் மன்ற தானே!

தெளிவுரை: 'பகைவரது வெட்டுப்பட்ட உடல்களினின்றும் ஒழுகுதலுறுகின்ற செந்நீராற் செருக்களம் புலவு நாற்றத்தை உடையதாகுமாறு, அவரைக் கொன்றுகுவித்த வெம்மையான திறலினைப்பெற்ற பெரிய கையினை உடையோனே! வெற்றி வேலினை ஏந்திய பொறையனே!' என்று பலரும் அவனைக் கூறுதலால், யானும் 'அஞ்சத்தக்க கொடுமையினையே தொழிலாகவுடைய ஓர் ஆண்மகன்' என்றே அவனைப்பற்றி முன்பெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தேன்.

அவன் நல்ல புகழாலே நிலைபெற்ற பரந்த இடத்தையுடையது இவ்வுலகம். இதனிடத்தே வறுமையாளரின் வறுமைத் துன்பம் அறவே அகன்று போகுமாறு கொடுக்கும் அறச் செயலை நாடுதலைப் பொருந்திய அன்புடைய நெஞ்சத்தோடு, தன்னைப் பாடிவருவாருக்குப் புரவலனாகவும் அவன் விளங்குவான். வெற்றிபொருந்திய ஒழுக்கத்தையுடைய தலைவன் அவன். ஓடக்கோலும் நிலைக்கமாட்டாத ஆழத்தை உடையதாயினும், புனலிற் பாய்ந்தாடும் மகளிர் குதித்து ஆடுதலாலே கழன்று வீழ்ந்த பொன்னாற் செய்யப்பெற்ற அழகிய காதணிகள், நீருக்கு மேலேயிருந்து காண்பாருக்கும் தெளிவாகத் தோன்றுவதும், சந்தனமரங்களை அடித்துக் கொண்டு வருவதுமான வானியாற்றுத் தெளிந்த நீரினுங் காட்டில், அவன் குளிர்ந்த இனிய மென்மையினன் என்பதனையும் இப்போது யானும் அறிந்தேன்!

சொற்பொருளும் விளக்கமும் ; உறல் உறு குருதி - ஒழுகுதல் உறுகின்ற குருதி; குருதி - செந்நீர். புலவ - புலால் நாற்றம் எழ. அமர்க்கடந்த - போரிலே வஞ்சியாது எதிர்நின்று வெற்றி பெற்ற. வெந்திறல் - கோடிய போர்த்திறல். தடக்கை - பெரிய கை. பொறையன் - பொறையர் மரபினன். வெருவர - அஞ்சும்படியாக. ஆடூஉ -ஆண்மகன். 'மன்’ ஒழியிசைப் பொருளில் வந்தது; இப்போது அவ்வெண்ணம் ஒழிந்தது என்பதாம். நனந்தலை - பரந்த இடம். இல்லோர் - பொருளற்றோர்; வறியவர். புன்கண் - துன்பம். நாடல் ஆராய்தல். சான்ற - அமைந்த. ஆடுநடை - வெற்றி யொழுக்கம். கழை - ஓடக்கோல். குட்டம் - ஆழம். பூங்குழை - அழகிய குண்டலம் என்னும் மகளிர் காதணி. வானி - ஓர் யாறு; சேரநாட்டது. சாயல்- மென்மை.

வானியாற்றுத் தெளிந்த நீரின் தன்மையும் தெளிவும் போல, இளஞ்சேரலும் இரவலர் பாடுநர்மாட்டுத் தண்ணளியும் அன்பும் உடையவன் என்பதாம். பகைவருக்கு வெம்மையாளனாகிய அவன் எம்போல்வாருக்கு அன்பினனாதலையும் கண்டேன் என்பதுமாம்.


87. வெண்தலைச் செம்புனல்!

துறை: விறலியாற்றுப்படை. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: வெண்தலைச் செம்புனல். இதனாற் சொல்லியது: இளஞ்சேரலின் அருட் சிறப்பு.

[பெயர் விளக்கம்: ’வெண்தலைச் செம்புனல்' என முரண்படக் கூறியவற்றானும், முன்னின்ற அடைச்சிறப்பானும் இப்பெயரைத் தந்தனர்: 'சென்மோ பாடினி' என விறலியை ஆற்றுப்படுத்திக் கூறலால் விறலியாற்றுப்படை ஆயிற்று.)


சென்மோ பாடினி! நன்கலம் பெருகுவை
சந்தம் பூழிலொடு பொங்குநுரை சுமந்து
தெண்கடல் முன்னிய வெண்தலைச் செம்புனல்
ஒய்யும் நீர்வழிக் கரும்பினும்
வல்வேற் பொறையன் வல்லனால் அளியே

தெளிவுரை: சந்தன மரங்களையும் அகில் கட்டைகளையும் பொங்கும் நுரையோடு சேரச் சுமந்தவாறு தெளிந்த கடலை நோக்கிக் செல்வது யாறு. வெண்மையான மேற்பரப்பை யுடைய சிவந்த புனலாகச் செல்லும் அதன் நீரோட்டத்தினைக் கடக்கச் செலுத்தப்படும் வேழக் கரும்பாலாகிய தெப்பத்தைக் காட்டினும், வலிய வேற்படை ஏந்தியவனாகிய பொறையன் அருள்செய்தலில் வல்லவனாவான். ஆதலால் விறலியே! நீயும் அவனிடத்தேயே செல்வாயாக; சென்றால் நல்ல அணிகலன்களை நீயும் பரிசிலாகப் பெறுகுவை!

சொற்பொருளும் விளக்கமும்: கலம் - அணிகலன். சந்தம்- சந்தனம். பூழில் - அகில். தெண்கடல் - தெளிந்த கடல்: செம்புனல் - சிவந்த புதுப்புனல். ஒய்யும் - செலுத்தும். கரும்பு - வேழக் கரும்பாலான ஓடம். அளி - அளித்தால்.

வேழக்கோற் புணை ஆற்றுநீரைக் கடத்தற்குப் பயன்படுவதுபோல, இரவலருக்குச் சேரனும் வறுமை வெள்ளத்தைக் கடந்து கரையேறுவதற்கு உதவுவான் என்றனர்.


88. கல்கால் கவணை !

துறை: செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: கல்கால் கவணை. இதனாற் சொல்லியது: இளஞ்சேரலின் கொடைச் சிறப்பும் இன்பச்செவ்வியும் உடன்கூறி வாழ்த்தியது.

[பெயர் விளக்கம்: கற்களைக் கான்றாற்போல இடையறாது விடும் கல்லெறி வில்லாகிய கவணை என்ற கூறிய அடைச்சிறப்பால் இப்பெயரைத் தந்தனர்.]


வையகம் மலர்ந்த தொழின்முறை ஒழியாது
கடவுட் பெயரிய கானமொடு கல்லுயர்ந்து
தெண்கடல் வளைஇய மலர்தலை உலகத்துத்
தம்பெயர் போகிய ஒன்னார் தேயத்துத்
துளங்கிருங் குட்டம் தொலைய வேலிட்டு 5

அணங்குடைக் கடம்பின் முழுமுதல் தடிந்து
பொருமுரண் எய்திய கழுவுள் புறம்பெற்று
நாம மன்னர் துணிய நூறிக்

கால்வல் புரவி அண்டர் ஒட்டிச்
சுடர்வீ வாகை நன்னன் தேய்த்துக் 10

குருதி விதிர்த்த குவவுச்சோற்றுக் குன்றோடு
உருகெழு மரபின் அயிரை பரைஇ
வேந்தரும் வேளிரும் பின்வந்து பணியக்
கொற்றம் எய்திய பெரியோர் மருக!
வியலுளை அரிமான் மறங்கெழு குருசில்! 15

விரவுப்பனை முழங்கும் நிரைதோல் வரைப்பின்
உரவுக்களிற்று வெல்கொடி நுடங்கும் பாசறை
ஆரெயில் அலைத்த கல்கால் கவணை
நாரரி கறவின் கொங்கர் கோவே!
உடலுநர்த் தபுத்த பொலந்தேர்க் குருசில்! 20

வளைகடல் முழவின் தொண்டியோர் பொருந!
நீநீடு வாழிய பெரும! நின்வயின்
துவைத்த தும்பை நனவுற்று வினவும்
மாற்றருந் தெய்வத்துக் கூட்டம் முன்னிய
புனல்மலி பேரியாற்று இழிதந் தாங்கு 25

வருகர் வரையாச் செழும்பல் தாரம்
கொளக்கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப
ஓவத் தன்ன உருகெழு நெடுநகர்ப்
பாவை யன்ன மகளிர் நாப்பண்
புகன்ற மாண்பொறிப் பொலிந்த சாந்தமொடு 30

தண்கமழ் கோதை குடிப் பூண்சுமந்து
திருவிற் குலைஇத் திருமணி புரையும்
உருகெழு கருவிய பெருமழை சேர்ந்து
வேங்கை விரிந்து விசும்புறு சேண்சிமை
அருவி அருவரை யன்ன் மார்பின் 35

சேண்நாறு நல்லிசைச் சேயிழை கணவ!
மாகம் சுடர மாவிசும்பு உகக்கும்
ஞாயிறு போல விளங்குதி பன்னாள்!


ஈங்குக் காண்கு வந்தனென் யானே
உறுகால் எடுத்த ஓங்குவரல் புணரி 40
நுண்மணல் அடைகரை உடைதரும்
தண்கடல் படப்பை நாடுகிழ வோயே!

தெளிவுரை : இவ்வையகமானது நானிலப் பகுதியாக அமைந்து வளம்பெற்ற காலத்திருந்தே, அரசுத் தொழிலில் முறைமை நீங்காது ஆண்டு வந்தவர் நின் முன்னோர். விந்தை யென்னும் கடவுளுடைய பெயரைக் கொண்டதான விந்தாடவி என்னும் காட்டுப்பகுதியோடு கூடியதாக விந்திய மலையும் உயர்ந்து நிற்கின்றது. தெளிந்த நீரையுடைய கடலாற் சூழப்பட்டு உள்ளது அகன்ற இடத்தையுடைய இவ்வுலகம்.

இதன்கண்ணே, தம் புகழ் பரவப்பெற்ற பகைவரின் தேயத்தும் சென்று, அவர்க்குரிய அசையும் பெருங்கடலினது பெருமை கெடுமாறு வேற்படையைச் செலுத்தினன் ஒருவன். தெய்வத்தன்மையுடைய கடம்பாகிய பகைவரது காவன் மரத்தை வேரோடும் வெட்டி வீழ்த்தினான் ஒருவன். போரிடுதற்கான முரண்பாட்டை அடைந்தவனாகிய கழுவுள் என்பானைப் புறங்கொடுத்துத் தோற்றோடச் செய்தான் ஒருவன். அஞ்சத்தக்க வலிகொண்ட பகைமன்னர்களை எல்லாம் அவர் வெட்டுண்டு வீழ அழித்து வெற்றிபெற்றான் ஒருவன். காற்றினும் கடிதாகச் செல்லுதற்கு வல்லவராகிய யாதவரைத் தோற்றோடுமாறு செய்தான் ஒருவன். ஒளி சுடரும் பூக்களைக் கொண்ட வாகையினைக் காவன்மரமாக உடையவனாகிய நன்னனைக் கொன்றான் ஒருவன்! பகைவரது குருதியைத் தூவிக்கலந்த குருதிச் சோற்றுக் குன்றத்தோடு அஞ்சத்தக்க முறைமையினையுடைய அயிரை மலையிலுள்ள துர்க்கைக்குப் படையலிட்டுப் போற்றினான் ஒருவன். பிற வேந்தர்களும் வேளிர்களும் தமக்குப் பணிந்து பின்னிற்குமாறு இவ்வாறு வெற்றிப் புகழினை அடைந்தவர் நின் முன்னோரான நின் குலத்துப் பேரரசர்கள்.

அவர்கள் வழிவந்தவனே! விரிந்த பிடரி மயிரைக் கொண்ட ஆண்சிங்கத்தினது மறத்தன்மையைப் பொருந்திய தலைவனே!

ஒன்றோடொன்று விரவியபடி பலவகையான முரசங்களும் முழங்குவதும், வரிசையாக அமைந்த கேடகத்தைத் தாங்கிய தரைப்படை காத்து நிற்கும் எல்லைப்புறத்தை யுடையதும், வலிகொண்ட களிற்றின்மீது அமர்ந்தபடி நின் வெற்றிக்கொடியை யானைமறவர் உயர்த்துப் பிடிக்க, அது தான் அசைந்தாடிக் கொண்டிருப்பதுமான், பாசறை யிடத்தே வீற்றிருப்பாய். அப் பாசறையிடத்திருந்து இடை யறாது கல்லெறி பொறியினின்றும் எறியப்படும் கற்களாற் பகைவரது கடத்தற்கரிய அரணிடத்தே உள்ளாரையும் வருத்துகின்றவனே! நாரினாலே அரிக்கப்பெற்ற கள்ளினை யுடைய கொங்கு நாட்டினரின் கோமானே!

நின்னோடும் பகைத்து வந்தாரை எல்லாம் அழித்த சிறப்புடைய பொற்றேரினையுடைய தலைவனே!

சங்கினங்களைக் கொண்ட கடலாகிய முழவின் ஒலியானது ஓயாதே விளங்கிக் கொண்டிருக்கின்ற தொண்டிப் பட்டினத்தாரின் வேந்தனே! நீதான் நெடுங்காலம் வாழ்வாயாக!

ஆராவாரித்தலையுடைய தும்பைப் போரிலே நினக்கு வெற்றி தேடித்தருதலின் பொருட்டாக, நேராகவே நின்னிடத்தே தோன்றி வந்து, நீக்குதற்கரிய வலியுடைய தெய்வங்களின் தொகுதியெல்லாம், நின் கருத்தை வினவியபடியிருக்கும் சிறப்பை உடையாய்!

அத்தெய்வக்கூட்டம் சேர்ந்திருக்கும் அயிரை மலையில் தோன்றி வருகின்ற, புனல்மலிந்த பேரியாறானது நிலத்தை நோக்கி இறங்கிவந்து உதவுமாறுபோல, நின்பால் வந்து இரக்கும் இரவலர்க்கு வரையாது கொடுத்தற்குரிய செழுமையான பலவாகிய பண்டங்களும், அவர்தாம் கொள்ளக் கொள்ளக் குறையாதே இடங்கள்தோறும் மிக்குப் பெருகுவனவாக! சித்திரத்தே தீட்டினாற்போல அழகுபொருத்தியதாக விளங்கும் நெடிய நின் அரண்மனையின் கண்ணே, சித்திரப் பாவை போன்ற பணிமகளிரின் நடுவிலே—

தன் பிரிவு நோயைச் சொல்லிய மாண்பமைந்த பொறிந்துபோயின தன்மையாற் பொலிவுபெற்ற சந்தனக் குழம்பு விளங்கும் மார்பினள்; குளிர்மணம் கமழும் மலர் மாலையைத் தன் கூந்தலிலே சூடியிருப்பவள்; பல்வேறு அணிகளையும் மிகுதியாகப் பூண்டு அவற்றைச் சுமந்து வருபவள் போல விளங்குபவள்; அழகிய இந்திரவில்லானது விளங்க, அழகிய நீலமணிபோல விளங்கும் நிறம்பொருந்திய தொகுதி கொண்ட பெரிய மேகங்கள் சேர்ந்ததும், வேங்கை மரங்கள் பூத்து இதழ் விரிந்துள்ளதுமாக விளங்கும், வானத்தைத் தொடுவது போன்ற உயர்ந்த சிகரங்களினின்றும் வீழ்கின்ற அருவியானது, அரிய மலைப்பக்கத்தே வீழ்வதுபோல மார்பிடையே ஓடியபடியிருக்கும், நெடுந்தூரம் விளங்கித் தோன்றும் நல்லபுகழையுடையவள், நின் தேவி. அச் சேயிழை யாளின் கணவனே!

மிக்க காற்றானது எழுப்பிய, உயர்ந்து வருதலையுடைய அலையானது, நுண்மணல் பொருந்திய அடைகரையிடத்தே சேர்ந்து சிறுதிவலைகளாக உடைந்து போகின்ற தன்மையினை யுடைய, குளிர்ச்சி கொண்ட கடற்பக்கத்தையுடைய நாட்டின் தலைவனே! நின்னை நின் அரண்மனையிற் காணாதே. நின்னைக் காணும் பொருட்டாக இப் பாசறையிடத்தேயும் யான் வந்துள்ளேன்! அவள்பாற் சென்று அவளுக்கு உதவுவாயாக! எட்டுத் திசையும் ஒளிபெற்று விளங்கப் பெரிய வானிடத்தே உயர்ந்து செல்லும் ஞாயிற்றைப்போல, நீயும் பலகாலம் சிறப்போடும் விளங்குவாயாக!

சொற்பொருளும் விளக்கமும் : மலர்தல் - புதுமலர்ச்சி பெறுதல்; வளமுறுதல். தொழில் - அரசுத் தொழில்; அது செம்மையின் வழுவாது ஆட்சி நடாத்தல். 'கடவுள்' என்றது விந்தா தேவியை; இவள் துர்க்கை. கல்-மலை. தெண்கடல் - தெளிந்த கடல். வளைஇய - சூழ்ந்த மலர்தலை உலகம் - பரந்த இடத்தையுடைய உலகம்; வடதிசைக்கண் விந்திய மலை உயர்ந்து நிற்கவும், முப்புறமும் கடலாற் சூழப் பட்டிருக்கவும் விளங்கும் தென்னிந்தியப் பகுதியைக் குறித்தது. பெயர் போகிய - புகழ் பரவிய ஒன்னார். பகைவர். துவங்கல் - அசைதல். குட்டம் - கடல். தொலைய கெட; இது கடற்கொள்ளையரை வென்றதைக் குறித்தது; கடற்பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்பதும் நினைக்க. அணங்கு - வெற்றித் தெய்வம். கடம்பு - கடம்பர்க்குரிய காவன் மரம்; கடம்பறுத்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பர் (பதிற். 2 :12-13). பொருமுரண் போர், செய்வதற்குரிய வலிமை. கழுவுள் - காமூர்க்குரிய இடையர்குடித் தலைவன். நாம் - அச்சம். துணிய - துணிபட அண்டர் - இடையர்; இவரை ஓட்டியவன் பெருஞ்சேரல் இரும்பொறை. வாகை -நன்னனின் காவன் மரம்: நன்னனை அழித்தவன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல். அயிரை- அயிரை மலையிலுள்ள கொற்றவை; இவளைப் பரவியவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன். பின்வருதல் - பணிந்து வருதல். பெரியோர் - குலத்து முன்னோரான பெருவேந்தரை. உளை - பிடரிமயிர். அரிமான் - சிங்கம். குருசில் - தலைவன்.

விரவுப்பணை முழங்கும் - பல்வேறான முரசங்களும் கலந்து ஒலிக்கும். தோல் - கிடுகு; அதனை ஏந்தி நிற்பாரான வீரரைக் குறிக்கும்.உரவு வலிமை. நுடங்கும் - அசைந்தாடும். பாசறை - கட்டூர். அலைத்த- வருத்திய காலுதல் - கக்குதல். கல்கால் கவணை - கற்களைக் கக்குமாறுபோலத் தொடர்ந்து எறிந்தபடியிருக்கும் கவணை என்னும் கல்லெறி பொறி, நார் - பன்னாடை. நறவு - கள். உடலுநர் -பகைத்தோர். தடித்த - அழித்த; வெட்டி வீழ்த்திய பொலம் - பொன். வளை - சங்கம். வளைகடல் முழவு- வளைகளைக் கொண்ட கடலின் முழவுபோன்ற ஒலி முழக்கம். தொண்டி- தொண்டிப் பட்டினம். துவைத்தல் - ஆரவாரித்தல். தும்பை. தும்பைப் போர்; இருபெரு வேந்தரும் புகழ் கருதிப் போராடும் போர். நனவுற்று - நனவிலே வந்து தோன்றி. மாற்றரும் - நீக்குதற்கரிய வலியுடைய. தெய்வத்துக் கூட்டம் - கொற்றவையும் அவள் ஏவலருமாகிய கூட்டம். முன்னிய - தங்கிய. இழிதந்தாங்கு - விரைந்து இறங்கி வரு தலைப்போல; புனல்மலி பேரியாறு மலையினின்றும் விரைந்தோடி வந்தாற்போல இரவலரும் நின்னை நாடி வருவர் என்பதாம். வரை - அளவு; எல்லை. ஓவம் - ஓவியம். நகர்- அரண்மனை. பாவை - கொல்லிப் பாவைபோல விளங்கும் அழகிற் சிறந்த பணிமகளிர்.

புகன்ற - சொல்லிய. பொறி - பொறிந்த துகள்கள். சாந்தம் - சந்தனக் குழம்பு. கோதை - தலைமாலை. பூண் - பூண் பவை அணிகலன்கள். திருவில் - இந்திரவில். திருமணி- அழகிய நீலமணி புரையும் - ஒக்கும். கருவிய - தொகுதி கொண்ட. மழை - கார்மேகம். வரை - பக்கமலை. சேண்நாறு நல்லிசை- நெடுந்தொலைவுக்கும் பரவிய நல்ல புகழ்: அது கற்பின் செவ்வி- சேயிழை - செவ்வையான அணிகலன் உடையாள்: தேவியைக் குறித்தது; அன்மொழித் தொகை. கால் காற்று. புணரி - அலை. படப்பை - கடற்கரை நாட்டுப் பகுதி.

சோல் பாசறையிடத்துள்ளான். அவன் பிரிவுக்கு ஆற்றாளாகத் தேவி வருந்துகின்றாள். தன் குறையை மறைக்கப் பூசிப் புனைந்து கொள்ளுகின்றாள். எனினும் அவள் மார்புச் சாந்தம் காய்ந்து பொறிபடுகின்றது. அவள் கண்களின்றும் பெருகி வழிந்தோடும் நீர் மார்பிடை வீழ்ந்து, இரு நகில்களுக் இடையே பாய்ந்து ஓடுகின்றது. இதனை நயமாக, இந்திர வில்லிட்டு, நீலமணிபோலத் தொகுதி கொண்டு, வானை முட்டும் மலைமுகட்டைச் சேர்ந்து மழை பொழிந்ததாக, அதனால் பக்க மலையிடத்தே அருவி வீழ்வதற்கு உவமித்து உரைக்கின்றனர். மாகம்-திசை. உகக்கும் - உயர்ந்து செல்லும்.

கார் தோன்றியது; இனியும் அவள் பிரிவுத் துயரத்தினை பொறுத்திருக்கல் ஆற்றாள் என்பதும் ஆம்.


89. துவராக் கூந்தல் !

துறை: காவன்முல்லை. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. இதனாற் சொல்லியது : இளஞ்சேரல் இரும்பொறையின் நாடுகாவற் சிறப்புக் கூறியது.

[பெயர் விளக்கம்: எப்பொழுதும் தகரச் சாந்து முதலியன தடவுகையால் ஈரம்புலராத கூந்தல் என்று உரைத்த சிறப்பால் இப்பாட்டுப் இப்பெயர் பெற்றது. நாடுகாவலைக் கூறியமையால் காவன்முல்லை ஆயிற்று.)

வானம் பொழுதொடு சுரப்பக் கானம்
தோடுறு மடமான் ஏறுபுணர்ந்து இயலப்
புள்ளும் மிஞிறும் மாச்சினை யார்ப்பப்
பழனும் கிழங்கும் மிசையறவு அறியாது
பல்லான நன்னிரை புல்லருந்து உகளப் 5

பயங்கடை அறியா வளங்கெழு சிறப்பின்
பெரும்பல் யாணர்க் கூலம் கெழும்
நன்பல் ஊழி நடுவுநின்று ஒழுகப்
பல்வேல் இரும்பொறை! நின்போல் செம்மையின்
நாளின் நாளின் நாடுதொழுது ஏத்த 10

உயர்நிலை உலகத்து உயர்ந்தோர் பரவ
அரசியல் பிழையாது செருமேந் தோன்றி
நோயிலை யாகியர் நீயே நின்மாட்டு
அடங்கிய நெஞ்சம் புகர்படுபு,அறியாது
கனவினும் பிரியா உறையுளொடு தண்ணெனத் 15

நகரம் நீவிய நுவராக் கூந்தல்
வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்து வாழ்நாள் அறியும் வயங்குசுடர் நோக்கத்து மீனொடு புரையும் கற்பின்
வாணுதல் அரிவையொடு காண்வரப் பொலிந்தே. 20

தெளிவுரை : பலவான வேற்படை மறவர்களையுடைய இரும்பொறையே; நின் ஆட்சிமுறைதான் மிகச்செவ்விது. அதனாலே, மழையும் காலத்தோடு தவறாமற் பெய்கின்றது. காட்டிடத்தே. கூட்டங்கொண்ட இளமான்கள் தத்தம் ஏறுகளோடும் கூடியவையாய்த் திரிகின்றன. பறவையினங் களும் வண்டினங்களும் பெரிய மரக்கிளைகளிலே அமர்ந்து ஆரவாரிக்கின்றன. பழங்களும் கிழங்குவகைகளும் மக்களும் பிறவும் உண்ணுதலால் ஒழிதலை அறியாவாய் மிகுந்திருக்கின்றன. பலவகைப்பட்ட பசுக்களைக் கொண்ட நல்ல மாட்டு மந்தைகள் புல்லை மேய்ந்துவிட்டுத் துள்ளி மகிழுகின்றன. விளைபயன் அறுதலை அறியாதபடி வளம்பொருந்திய பலவகைத் தானியங்களும் எங்கணும் நெருங்கிக் கிடக்கின்றன. இவை எல்லாம் நல்லபல ஊழிகளாக நடுவுநிலையோடு நிலையாக நிகழ்ந்து வருகின்றன. நாள்தோறும் பல நாட்டு மக்களும் தொழுது போற்றுகின்றனர். உயர்நிலை உலகத்தே உயர்வு பெற்றோராகிய தேவர்களும் நின்னைப் போற்றுகின்றனர்.

ஆட்சியை நடத்துதலிலே பிழைத்தலின்றியும், போர்க் களங்களிலே பகைவரை வெல்லும் வெற்றியால் மேம்பட்டுத் தோன்றியும், நீதான் எவ்வகைத் துன்பமுமின்றி விளங்குவாயாக!

நின்னிடத்தே அன்பு பூண்டு அடங்கிய நெஞ்சம் எந்நேரமும் குற்றப்படுதலை அறியாதவள்; கனவினும் நின்னைப் பிரியாதே உறையும் வாழ்க்கையினள்; குளிர்ச்சியாகத் தகரச்சாந்து தடவிய ஈரம் புலராத கூந்தலையுடையவரான மணமகளிரால் பார்க்கப்படுவதும், பின்னரும் தம் வாழ் நாளின் அளவை அறிவதற்குப் பார்க்கப்படுவதுமாகிய, விளங்கும் ஒளியுடைய அருந்ததி என்னும் விண்மீனோடு ஒப்பாகும் கற்பினை உடையவள்; ஒளிபொருந்திய நெற்றியை உடையவள்; நின் தேவி யாவாள்!

அவளோடும் அழகு பொருந்தக் கூடிவாழ்பவனாக, நீயும் நெடுநாள் நோயின்றி வாழ்வாயாக!

சொற்பொருளும் விளக்கமும் : வானம் - மழை. பொழுதோடு - காலத்தோடு; அதாவது பெய்வதற்குரிய காலத்துப் பெய்தல். சுரப்ப - பெய்ய. தோடு - தொகுதி; கூட்டம். மடம் - இளமை. ஏறு - ஆண்மான். புணர்ந்து - கூடியவை யாய். இயல் - திரிய. ஞிமிறு - வண்டு. மாச்சினை - பெரிய மரக்கிளை. மிசையறவு - மிசைதலால் அற்றுப் போதல்; உண்ணல். பல்லான் - பலவகைப் பசுக்கள். உகள் - துள்ளித் திரிய. பயங்கடை - விளைவறுதல். யாணர் புதுவருவாய். கூலம் - தானிய வகைகள். ஊழி - ஊழிக்காலம்; நெடுங் காலம். நடுவுநின்று - நடுநிலையோடு நிலைபெற்று. நாடு- நாட்டு மக்கள். உயர்நிலை உலகம் - வானுலகம். உயர்ந்தோர் - தேவர்; உயர்நிலை பெற்றோரும் ஆம். அரசியல் ஆட்சியொழுக்கம். பிழையாது - பிழைபடாது. மேந்தோன்றி- மேம்பட்டு விளங்கி ஆகியர் - ஆகுக; வியங்கோள் முற்று. புகர் - குற்றம். கனவினும் பிரியா உறையுள் - கனவிலும் தம் காதலரைப் பிரியாதே கூடியுறைவதாக இன்புறுதல்; நனவினும் அவ்வாறே கூடியிருத்தலும் ஆம். மயிர்ச்சாந்து கூந்தலுக்குத் தடவும் மணநெய். துவரா - உலராத. வதுவை மகளிர் - மணப்பெண்கள்.

அருந்ததியை 'வாழ்நாள் அறியும் வயங்கு சுடர்' என்றமை அறிக. மணக்காலத்து அவளின் ஆசியால் தாமும் கற்புடைமை பூண்டு உயர்தல் வேண்டும் என்று நினைத்து அருந்ததியைப் பார்க்கும் மகளிர், பின்னரும் தம்முடைய பிரியாது உறையும் கற்புவாழ்வு நீடித்தலை அறிதற்கும் அவளையே நோக்குவர் என்பதாம். அவள் தோற்றம் மறையின் தம் வாழ்வும் முடியும் என்பது மகளிரது நம்பிக்கை. வாள்நுதல் - ஒளிபொருந்திய நெற்றியையுடைய.அரிவை பெண். காண்வர - அழகு பொருந்த.

90. வலிகெழு தடக்கை !

துறை : காட்சி வாழ்த்து. வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும். தூக்கு : செந்தூக்கும் வஞ்சித் தூக்கும்.

[பெயர் விளக்கம்: 'மாண்வினைச் சாபம் மார்புற வாங்கி, ஞாண்பொர விளங்கிய வலிகெழு தடக்கை' எனக் கையின் செவ்வியைச் சிறப்பித்தமையால் இப்பெயர் அமைத்தனர்.]

மீன்வயின் நிற்ப வானம் வாய்ப்ப
அச்சற்று ஏமமாகி இருள்தீர்ந்து
இன்பம் பெருகத் தோன்றித் தம்துணைத்
துறையின் எஞ்சாமை நிறையக் கற்றுக்
கழிந்தோர் உடற்றும் கடுந்தூ அஞ்சா 5

ஒளிறுவாள் வயவேந்தர்
களிறொடு கலந்தந்து
தொன்றுமொழிந்து தொழில்கேட்ப
அகல்வையத்துப் பகலாற்றி
மாயாப் பல்புகழ் வியல்விசும்பு ஊர்தர 10

வாள்யுலி வறுத்துச் செம்மை பூஉண்டு
அறன்வாழ்த்த நற்காண்ட
விறன்மாந்தரன் விறல்மருக!
ஈரம் உடைமையின் நீரோர் அனையை!
அளப்பரு மையின் இருவிசும்பு அனையை! 15

கொளக்குறை படாமையின் முந்நீர் அனையை!
பன்மீன் நாப்பண் திங்கள் போலப்
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை!
உருகெழு மரபின் அயிரை பரவியும்
கடலிகுப்ப வேலிட்டும் 20

உடலுநர் மிடல்சாய்த்தும்
மலையவும் நிலத்தவும் அருப்பம் வௌவிப்
பெற்ற பெரும்பெயர் பலர்கை இரீய
கொற்றத் திருவின் உரவோர் உம்பல்!
கட்டிப் புழுக்கின் கொங்கர் கோவே! 25

மட்டப் புகாவின் குட்டுவர் ஏறே!
எழாஅத் துணைத்தோள் பூழியர் மெய்ம்மறை?
இரங்குநீர்ப் பரப்பின் மாந்தையோர் பொருந!
வெண்பூ வேளையொடு சுரைதலை மயக்கிய
விரவுமொழிக் கட்டூர் வயவர் வேந்தே! 30

உரவுக்கட லன்ன தாங்கருந் தானையொடு
மாணவினைச் சாபம் மார்புற வாங்கி
ஞாண்பொர விளங்கிய வலிகெழு தடக்கை
வார்ந்துபுனைந் தன்ன ஏந்துகுவவு மொய்ம்பின்
மீன்பூத் தன்ன விளங்குமணிப் பாண்டில் 35

ஆய்மயிர்க் கவரிப் பாய்மா மேற்கொண்டு
காழெஃகம் பிடித்தெறிக்கு
விழுமத்தின் புகலும் பெயரா ஆண்மைக்
காஞ்சி சான்ற வயவர் பெரும!
வீங்குபெருஞ் சிறப்பின் ஓங்குபுக ழோயே! 40

கழனி உழவர் தண்ணுமை இசைப்பின்
பழன மஞ்ஞை மழைசெத்து ஆலும்
தண்புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி
வெம்போர் மள்ளர் தெண்கிணை கறங்கக்
கூழுடை நல்லில் ஏறுமாறு சிலைப்பச் 45

செழும்பல இருந்த கொழும்பல் தண்பணைக்
காவிரிப் படப்பை நன்னாடு அன்ன
வளங்கெழு குடைச்சல் அடங்கிய கொள்கை
ஆறிய கற்பின் தேறிய நல்லிசை
வண்டார் கூந்தல் ஒண்டொடி கணவ! 50

நின்னாள், திங்கள் அனைய வாக; திங்கள்
யாண்டோர் அனைய வாக: யாண்டே

ஊழி யனைய வாக; ஊழி
பதிற்றுப்பத்து தெளிவுரை
வெள்ள வரம்பின ஆக; என உள்ளிக்
காண்கு வந்திசின் யானே: செருமிக்கு 55

உருமென முழங்கும் முரசின்
பெருநெல் யானை இறைகிழ வோயே!

தெளிவுரை : வானத்துக் கோள்கள் அவையவை மழை பெய்வதற்கு உரியவான இடங்களிலே முறையாக நிற்க, அதனால் மழையும் முறையாகப் பெய்யும். அதனால், எங்கணும் வளம்பெருக, உயிர்கள் அச்சமற்றுத் துன்பத்தின் நீங்கி இன்பத்தில் திளைக்க, அவைகட்குக் காப்பாளனாக அமைந்தவன். எங்கணும் இன்பம் பெருகுதற்குச் செய்வதற் கென்றே தோன்றியவன். தமக்குத் துணையாக அமைந்த துறையினிடத்தே யாதும் குறைவின்றி அனைத்தையும் நிறைவாகக் கற்றவன்.

மிகுதியான ஆற்றலுடைய பகைவர் செய்யும் போரிடத்தே, அவரது கடுமையான வலிமைக்கு அஞ்சாதே எதிர் நின்று,ஒளி செய்யும் வாளையுடைய அவ்வெற்றி வேந்தரது போர் யானையோடு, அவரது கலங்களையும் பறித்து வரும் வெற்றிச்சிறப்புடையவன். அவரிடமிருந்து பறித்து அவற்றை அவர் பணியவும் மீளவும் அவருக்கே தந்து, 'யாம் பழைய நட்பினேம்' என நட்புக்கூறி, அவர்க்கு அருள்பவன். அவரும் பின்னர்த் தன் ஏவலின்படி கேட்டு நடக்க, அகன்ற உலகிடத்தே கதிரவனைப்போல நடுநிலையோடு நின்று ஆட்சிசெய்தவன்.

கெடாத தன் பலவான புகழ்களும் அகன்ற வானிடத்தும் சென்று பரவுமாறு, தன் வாளின் வலிமையாலே பகைவரை அழித்துச் சிறந்தவன். செம்மையே பூண்டு ஒழுகியவன். அத்தகையோனாகி, அறக்கடவுளும் தன்னை வாழ்த்த, நன்னெறியோடு அரசாண்ட வெற்றியாளனாகிய மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் ஆற்றலமைந்த குடிவழியில் தோன்றியவனே!

அனைத்துயிரிடத்தும் குளிர்ச்சியான அன்புடைமை பாராட்டுதலை உடைமையினாலே நிதான் நீரினை ஒப்பவனாவாய். நின் திறந்தான் அளந்தறியப்படாத அருமையினை உடைத்தாதலினாலே பெரிதான வானத்தை ஒப்பவனாவாய். இரவலர் கொள்ளக் கொள்ளக் குறைவுபடாச் செல்வ வளத்தை உடைமையினாலே கடலினை ஒப்பவனாவாய்.

பலவான விண்மீன்களுக்கு இடையே பொலிவோடு தோன்றும் திங்களைப்போல, நீயும் பொலிவுபெற்ற நின் அரசச் சுற்றத்தோடுங் கூடியவனாக, அவர்களிடையே அவர்கட்கும் மேம்பட்டுப் பொலிவோடும் தோன்றுகின்றனை!

அச்சம் பொருந்திய மரபினையுடைய அயிரைமலைக்கண் கோயில் கொண்டிருக்கும் கொற்றவையை வழிபட்டும், கடலின் செருக்கு அழியுமாறு வேலினை ஏவியும், மாறுபட்டுப் போரிட வந்தாரது வலிமையை அழித்தும் விளங்குவாய்!

மலையிடத்துள்ளவும், நிலத்திடத்துள்ளவுமான பகையரசரது அரண்களைக் கைக்கொண்டு, அதனாற் பெற்ற பெருமை வாய்ந்த பலபொருள்களையும், நின்னை இரந்துவந்த பலர்க்கும் ஈத்த, வெற்றிச் செல்வத்தினையுடைய வலிமையாளரின் வழித் தோன்றியவனே!

வெல்லக் கட்டியுடன் வேகவைத்துப் பெறும் உணவினை உண்பாராகிய கொங்கரின் கோமானே! கள்ளாகிய உணவினை யுடையவரான குட்டநாட்டாரின் ஆண்சிங்கமே! புறமிட்டார்மேற்படை கொண்டு செலுத்தாத இரு தோள்களையுடையவரான பூழிநாட்டாருக்குக் கவசம் போன்றவனே! ஒலிக்கும் நீர்ப்பரப்பினையுடைய மாந்தைப் பட்டினத்து மக்களின் மன்னனே! வெள்ளிய பூக்களையுடைய வேளையோடு சுரைக் கொடிகளும் பின்னிக்கிடக்கும், பல மொழிகளைக் கலந்து பேசும் மறவர் நிறைந்துள்ள பாசறையிடத்து உள்ளாரின் வேந்தனே!

பகைவரால் தடுத்தற்கரிய வளமிகுந்த கடலைப்போன்ற பெரிய தானையினை உடையவனே! மாட்சி கொண்ட செய்வினைத் தொழிலையுடைய வில்லை நிறுத்தி, மார்போடும் பொருந்துமாறு இழுத்து வளைத்து, அவ்வில்லின் நாண் பொருதலாலே ஏற்பட்ட காய்ப்பு விளங்குகின்ற வலிமை பொருந்திய பெரிய கையினை உடையோனே! ஒப்ப வகுத்துப் புனைந்தாற்போல விளங்கும் உயர்ந்து திரண்ட தோள்களை உடையவனே! விண்மீன்கள் பூத்தாற்போல மணிகளால் இழைக்கப்பெற்று விளங்கும் வட்டச் சேணத்தையுடையதும், அழகிய கவரிமயிராலாகிய குச்சியை அணிந்துள்ளதுமான, பாய்ந்து செல்லும் போர்க்குதிரைமேல் ஏறிக்கொண்டவனாகக், காம்பையுடைய வேலைப் பிடித்துப் பகைவரை நோக்கிச் செலுத்தி, அவருக்குத் துன்பஞ் செய்தலிலே விருப்பமும், நீங்காத போராண்மையும் கொண்டவனே! நிலையாமையை நன்கறிந்த மறவர்களின் பெருமானே! மிக்க பெருஞ்சிறப்பினாலே ஓங்கும் புகழினை உடையோனே!

வயல்களை உழுகிறவரான உழவர்கள் தண்ணுமைப் பறையை முழக்கினால், அதனை மேகத்தின் இடிமுழக்கமாகக் கொண்டு மருதநிலச் சோலையிலுள்ள மயில்கள் ஆடத் தொடங்கும். குளிர்புனலிலே ஆடிக்களிப்போரது ஆரவாரத்தோடு கலந்தாற்போலக் கொடும்போரைச் செய்யும் படை மறவரது தெளிந்த ஓசைகொண்ட கிணைப்பறையும் சேர்ந்து முழங்கும். செல்வம் பொருந்திய நல்ல வீடுகளிலேயுள்ள ஆனேறுகள் ஒன்றோடொன்று மாறுபட்டு முழக்கமிட்டிருக்கும். செழுமையான பலவகை நலங்களும் நிலையாகவிருந்த, கொழுமையான பல குளிர்ச்சியான வயல்களைக் கொண்ட காவிரியாற்றின் பக்கங்களைக்கொண்ட நல்ல சோணாட்டைப் போன்றவள்; அழகு பொருந்திய, உள்ளிடு பரல்கள் அமைந்த சிலம்புகளையும், அடக்கமான கொள்கைகளையும், அறக்கற்பினையும், தெளிவான நற்புகழையும் கொண்டவள்; வண்டு மொய்க்கும் கூந்தலையும், ஒளிபொருந்திய வரைகளையும் கொண்டோளான நின் சேரன்மாதேவி. அவளின் கணவனே!

போர்க்களத்தே பகைவரினும் மேம்பட்டு இடிபோல முழங்கும் வெற்றி முரசத்தையும், பெரியவான நல்ல யானைப் படையினையும், தலைமைக்குரிய உரிமையினையும் உடையோனே! நின் வாணாளின் ஒவ்வொரு நாளும், மாதத்தை யொத்த காலவளவினை உடையதாகுக! நின் வாணாளின் ஒவ்வொரு மாதமும் யாண்டை யொத்த காலவளவினை உடையதாகுக!

அந்த ஆண்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் ஊழிக் காலத்தின் அளவினை உடையனவாகுக! அவ்வூழிகள் ஒவ்வொன்றும் வெள்ளம் போன்ற காலவரம்பினை உடையன வாகுக!" என நினைந்து வாழ்த்தியபடியே, நின்னைக் காண்பதற்கென யானும் வந்துள்ளேன், சேரமானே!

சொற்பொருளும் விளக்கமும்: மீன் - விண்மீன். வயின்- இடம். வானம் - மழை. வாய்ப்ப - பெய்ய. அச்சற்று – அச்சமற்று. ஏமம் - பாதுகாப்பு. இருள் - துன்பம். தம்துணை - தமக்குரிய துணையாக அமைந்த: துணையென்றது அரசனுக்குரிய ஆட்சியுறுப்புக்களை. நிறைய - நிறைவாக. கற்று - கற்றறிந்து. சுழி - மிகுதி. உடற்றும் - போரிடும். கழிந்தோர் -வளமிகுந்த பகையரசர்; வினையாலணையும் பெயர். தூ - வலிமை. ஒளிறு - விளக்கம். வயம் - வலிமை. களிறு - போர்க்களிறு. கலம் - அணிகலன்கள். தொன்று மொழிதல் - பழமை பாராட்டல்; பழைய நட்புறவை மீண்டும் புதுப்பித்தல். பகல் - நடுநிலைமை. செம்மை - செவ்விய பண்புகள். விறல் - வெற்றி மேம்பாடு. நற்கு – நன்கு; வலித்தல் விகாரம். அறன் - அக்கடவுள்.

ஈரம் - அருள் நெஞ்சம். ’அளப்பு அருமை' என்றது அவனது திறத்தை. 'கொளக்குறைப்டாமை' என்றது அவனது செல்வத்தை. நாப்பண் - நடுவே. பூத்த - பொலிவு பெற்ற. சுற்றம் - அரசச்சுற்றமும்; உறவினருமாம். உருகெழு மரபு: அச்சந்தருதலையுடைய முறைமை. அயிரை - அயிரை மலைக்கண்ணுள்ள கொற்றவை. இகுப்ப - பெருமை குன்ற. உடலுநர் - பகைத்துப் போரிட்டோர். மிடல் - வலிமை. அருப்பம் - அரணிடம். பெரும்பெயர் - பெருமை கொண்ட பொருள்கள். பலர் கை இரீஇய - இரவலர் பலருக்கும் கொடுத்துதவிய. கொற்றத்திரு - வெற்றிச் செல்வம். உரவோர் - வலிமையாளர். உம்பல் - வழித்தோன்றல். புழுக்கு - வேகவைத்துப் புழுக்கிய உணவு; இவை பயறுவகைகளாற் செய்யப் பெறுபவை. மட்டம் - கள். புகா - உணவு. எழாஅ - புறமிட்டார்பாற் படைகொண்டு எழாத. மாந்தை - மாந்தைப் பட்டினம். வேளை - வேளைச்செடி. விரவுதல்- கலத்தல். கட்டூர் - பாசறை. வயவர்- வீரர்.

உரவு - வலிமை. தாங்குதல் - தடுத்தல். தானை - படை. சாபம் - வில். ஞாண் - நாண். வார்ந்து - வகுத்து; நீண்டும் ஆம். ஏந்து குவவு - உயர்ந்து திரண்ட. பாண்டில் -வட்டச் சேணம். மொய்ம்பு - தோள். பூத்தன்ன – விளங்கினாற்போல. கவரி - கவரிமயிர்த் தலையாட்டம். மேல்கொண்டு- மேலேறிக் கொண்டு. காழ் - காம்பு. எஃகம் - வேல். விழுமம் - துன்பம். புகலும் - விரும்பும். ஆண்மை - மறமாண்பு. காஞ்சி -நிலையாமை. சான்ற - நிறைந்த. வயவர் - மறவர். களத்திற்குச் செல்வார் மீண்டு வருவாரென்பது நிலையற்றது ஆதலின் மறவரைக் 'காஞ்சி சான்ற வயவர்' என்றனர்; பிறரினும் நிலையாமையை நன்கு அறிந்தவர் அவரே யாகலின்.

‘தண்ணுமை, தெண்கிணை' என்பன பறைவகைகள். மழை செத்து- மேகத்து இடிமுழக்காகக் கருதி. மயங்கி - கலந்து. பழனம் - மருதநிலத்துச் சோலை. கறங்கல் - ஒலித்தல். கூழ் - செல்வம். ஏறு - ஆனேறு. படப்பை - பக்கம். நன்னாடு - சோழ வளநாடு. வளம் - அழகு; செய்வினைத் தொழில்வளமையும் ஆம். தேறிய - தெளிந்த. ஒண்டொடி- ஒளிவளை யணிந்தவள்; அன்மொழித்தொகை.

'நாள் திங்களாகவும், திங்கள் யாண்டாகவும், யாண்டு ஊழியாகவும், ஊழி வெள்ளமாகவும் நின் வாணாள் பெருகிப் பல்க, நீயும் நெடிது வாழ்வாயாக' என்பதாம். இறை - தலைமை. கிழவோய் - உரியவனே!