பதிற்றுப்பத்து/ஐந்தாம்பத்து

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பாடப்பட்டோன்: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்

பாடியவர்: காசறு செய்யுட் பரணர்

பாட்டு - 41[தொகு]

புணர்புரி நரம்பின் தீம்தொடை பழுனிய
வணர்அமை நல்யாழ் இளையர் பொறுப்பப்
பண்அமை முழவும் பதலையும் பிறவும்
கண்அறுத்(து) இயற்றிய தூம்பொடு சுருக்கிக்
5  காவில் தகைத்த துறைகூடு கலப்பையர்
கைவல் இளையர் கடவுள் பழிச்ச
மறப்புலிக் குழூஉக்குரல் செத்து வயக்களிறு
வரைசேர்(பு) எழுந்த சுடர்வீ வேங்கைப்
பூவுடைப் பெருஞ்சினை வாங்கிப் பிளந்துதன்
10 மாஇருஞ் சென்னி அணிபெற மிலைச்சிச்
சேஎர் உற்ற செல்படை மறவர்
தண்(டு)உடை வலத்தர் போர்எதிர்ந் தாங்கு
வழைஅமல் வியன்காடு சிலம்பப் பிளிறும்
மழைபெயல் மாறிய கழைதிரங்(கு) அத்தம்
15 ஒன்(று)இரண்(டு) அலபல கழிந்து திண்தேர்
வசைஇல் நெடுந்தகை காண்குவந் திசினே
தாவல் உய்யுமோ மற்றே தாவாது
வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர்
முர(சு)உடைப் பெருஞ்சமத்(து) அரசுபடக் கடந்து
20 வெவ்வர் ஓச்சம் பெருகத் தெவ்வர்
மிள(கு)எறி உலக்கையின் இருந்தலை இடித்து
வை(கு)ஆர்ப்(பு) எழுந்த மைபடு பரப்பின்
எடுத்தே(று) ஏய கடிப்(பு)உடை வியன்கண்
வலம்படு சீர்த்தி ஒருங்(கு)உடன் இயைந்து
25 கால்உளைக் கடும்பிசிர் உடைய வால்உளைக்
கடும்பரிப் புரவி ஊர்ந்தநின்
படுந்திரைப் பனிக்கடல் உழந்த தாளே. (41)


பெயர்: சுடர்வீவேங்கை
துறை: காட்சி வாழ்த்து
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
செந்துறைப் பாடாண்பாட்டு


பாட்டு - 42[தொகு]

இரும்பனம் புடையல் ஈகை வான்கழல்
மீன்தேர் கொட்பின் பனிக்கயம் மூழ்கிச்
சிரல்பெயர்ந் தன்ன நெடுவெள் ஊசி
நெடுவசி பரந்த வடுஆழ் மார்பின்
5  அம்புசேர் உடம்பினர்ச் சேர்ந்தோர் அல்லது
தும்பை சூடாது மலைந்த மாட்சி
அன்னோர் பெரும நல்நுதல் கணவ
அண்ணல் யானை அடுபோர்க் குட்டுவ
மைந்(து)உடை நல்அமர்க் கடந்து வலம்தரீஇ
10 இஞ்சிவீ விராய பைந்தார் சூட்டிச்
சாந்துபுறத்(து) எறித்த தசும்புதுளங்(கு) இருக்கைத்
தீம்சேறு விளைந்த மணிநிற மட்டம்
ஓம்பா ஈகையின் வண்மகிழ் சுரந்து
கோடியர் பெரும்கிளை வாழ ஆ(டு)இயல்
15 உளைஅவிர் கலிமாப் பொழிந்தவை எண்ணின்
மன்பதை மருள அரசுபடக் கடந்து
முந்துவினை எதிர்வரப் பெறுதல் காணியர்
ஒளிறுநிலை உயர்மருப்(பு) ஏந்திய களி(று)ஊர்ந்து
மான மைந்தரொடு மன்னர் ஏத்தநின்
20 தேரொடு சுற்றம் உல(கு)உடன் மூய
மாஇருந் தெள்கடல் மலிதிரைப் பெளவத்து
வெண்தலைக் குரூஉப்பிசிர் உடையத்
தண்பல வரூஉம் புணரியின் பலவே. (42)


பெயர்: தசும்புதுளங்(கு) இருக்கை
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 43[தொகு]

கவரி முச்சிக் கார்விரி கூந்தல்
ஊசல் மேவல் சேய்இழை மகளிர்
உரல்போல் பெருங்கால் இலங்குவாள் மருப்பின்
பெரும்கை மதமாப் புகுதரின் அவற்றுள்
5  விருந்தின் வீழ்பிடி எண்ணுமுறை பெறாஅக்
கடவுள் நிலைய கல்ஓங்கு நெடுவரை
வடதிசை எல்லை இமய மாகத்
தென்னங் குமரியொ(டு) ஆயிடை அரசர்
முர(சு)உடைப் பெரும்சமம் ததைய ஆர்ப்(பு)எழச்
10 சொல்பல நாட்டைத் தொல்கவின் அழித்த
போர்அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ
இரும்பணை திரங்கப் பெரும்பயல் ஒளிப்பக்
குன்றுவறம் கூரச் சுடர்சினம் திகழ
அருவிஅற்ற பெருவறல் காலையும்
15 அருஞ்செலல் பேராற்(று) இருங்கரை உடைத்துக்
கடிஏர் பூட்டுநர் கடுக்கை மலைய
வரைவில் அதிர்சிலை முழங்கிப் பெயல்சிறந்(து)
ஆர்கலி வானம் தளிசொரிந் தாஅங்(கு)
உறுவர் ஆர ஓம்பா(து) உண்டு
20 நகைவர் ஆர நன்கலம் சிதறி
ஆடுசிறை அறுத்த நரம்புசேர் இன்குரல்
பாடு விறலியர் பல்பிடி பெறுக
துய்வீ வாகை நுண்கொடி உழிஞை
வென்றி மேவல் உருகெழு சிறப்பின்
25 கொண்டி மள்ளர் கொல்களிறு பெறுக
மன்றம் படர்ந்து மறுகுசிறைப் புக்குக்
கண்டி நுண்கோல் கொண்டுகளம் வாழ்த்தும்
அகவலன் பெறுக மாவே என்றும்
இகல்வினை மேவலை ஆகலின் பகைவரும்
30 தாங்காது புகழ்ந்த தூங்குகொளை முழவின்
தொலையாக் கற்பநின் நிலைகண் டிகுமே
நிணம்சுடு புகையொடு கனல்சினந்(து) அவிராது
நிரம்(பு)அகல்(பு) அறியா ஏறா ஏணி
நிறைந்து நெடி(து)இராத் தசும்பின் வயிரியர்
35 உண்(டு)எனத் தவாஅக் கள்ளின்
வண்கை வேந்தேநின் கலிமகி ழானே. (43)


பெயர்: ஏறாவேணி
துறை: இயன்மொழிவாழ்த்து
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 44[தொகு]

நிலம்புடைப்(பு) அன்னஆர்ப் பொடுவிசும்பு துடையூ
வான்தோய் வெல்கொடி தேர்மிசை நுடங்கப்
பெரிய ஆயினும் அமர்கடந்து பெற்ற
அரிய என்னா(து) ஓம்பாது வீசிக்
5  கலம்செலச் சுரத்தல் அல்லது கனவினும்
களை(க)என அறியாக் கச(டு)இல் நெஞ்சத்(து)
ஆடுநடை அண்ணல்நின் பாடுமகள் காணியர்
காணி லியரோநின் புகழ்ந்த யாக்கை
முழுவலி துஞ்சு நோய்தபு நோன்தொடை
10 நுண்கொடி உழிஞை வெல்போர் அறுகை
சேணன் ஆயினும் கேள்என மொழிந்து
புலம்பெயர்ந்(து) ஒளித்த களையாப் பூசற்(கு)
அரண்கடா உறீஇ அணங்குநிகழ்ந் தன்ன
மோகூர் மன்னன் முரசம் கொண்டு
15 நெடுமொழி பணித்(து)அவன் வேம்புமுதல் தடிந்து
முரசுசெய முரச்சிக் களிறுபல பூட்டி
ஒழுகை உய்த்த கொழுஇல் பைந்துணி
வைத்தலை மறந்த துய்த்தலைக் கூகை
கவலை கவற்றும் குராலம் பறந்தலை
20 முர(சு)டைத் தாயத்(து) அரசுபல ஓட்டித்
துளங்குநீர் வியல்அகம் ஆண்(டு)இனிது கழிந்த
மன்னர் மறைத்த தாழி
வன்னி மன்றத்து விளங்கிய நாடே. (44)


பெயர்: நோய்தபு நோன்தொடை
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 45[தொகு]

பொலம்பூந் தும்பைப் பொறிகிளர் தூணிப்
புற்(று)அடங்(கு) அரவின் ஒடுங்கிய அம்பின்
நொசி(வு)உடை வில்லின் ஒசியா நெஞ்சின்
களி(று)எறிந்து முரிந்த கதுவாய் எஃகின்
5  விழுமியோர் துவன்றிய அகன்கண் ணாட்பின்
எழுமுடி மார்பின் எய்திய சேரல்
குண்டுகண் அகழிய மதில்பல கடந்து
பண்டும் பண்டும்தாம் உள்அழித்(து) உண்ட
நாடுகெழு தாயத்து நனம்தலை அருப்பத்துக்
10 கதவம் காக்கும் கணைஎழு அன்ன
நிலம்பெறு திணிதோள் உயர ஓச்சிப்
பிணம்பிறங்(கு) அழுவத்துத் துணங்கை ஆடிச்
சோறுவே(று) என்னா ஊன்துவை அடிசில்
ஓடாப் பீடர் உள்வழி இறுத்து
15 முள்இடு(பு) அறியா ஏணித் தெவ்வர்
சிலைவிசை அடக்கிய மூரி வெண்தோல்
அனைய பண்பின் தானை மன்னர்
இனியார் உளரோநின் முன்னும் இல்லை
மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது
20 விலங்குவளி கடவும் துளங்(கு)இரும் கமம்சூல்
வயங்குமணி இமைப்பின் வேல்இடுபு
முழங்குதிரைப் பனிக்கடல் மறுத்திசி னோரே. (45)


பெயர்: ஊன்துவை அடிசில்
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 46[தொகு]

இழையர் குழையர் நறுந்தண் மாலையர்
சுடர்நிமிர் அவிர்தொடி செறித்த முன்கைத்
திறல்விடு திருமணி இலங்கு மார்பின்
வண்டுபடு கூந்தல் முடிபுனை மகளிர்
5  தொடைபடு பேர்யாழ் பாலை பண்ணிப்
பணியா மரபின் உழிஞை பாட
இனிதுபுறந் தந்(து)அவர்க்(கு) இன்மகிழ் சுரத்தலின்
சுரம்பல கடவும் கரைவாய்ப் பருதி
ஊர்பாட்(டு) எண்ணில் பைந்தலை துமியப்
10 பல்செருக் கடந்த கொல்களிற்(று) யானைக்
கோடுநரல் பெளவம் கலங்க வேல்இட்(டு)
உடைதிரைப் பரப்பில் படுகடல் ஓட்டிய
வெல்புகழ்க் குட்டுவன் கண்டோ ர்
செல்குவம் என்னார் பாடுபு பெயர்ந்தே. (46)


பெயர்: கரைவாய்ப் பருதி
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 47[தொகு]

அட்(டு)ஆ னானே குட்டுவன் அடுதொறும்
பெற்(று)ஆ னாரே பரிசிலர் களிறே
வரைமிசை இழிதரும் அருவியின் மாடத்து
வளிமுனை அவிர்வரும் கொடிநுடங்கு தெருவில்
5  சொரிசுரை கவரும் நெய்வழி(பு) உராலின்
பாண்டில் விளக்குப் பரூஅச்சுடர் அழல
நன்நுதல் விறலியர் ஆடும்
தொல்நகர் வரைப்பின்அவன் உரைஆ னாவே. (47)


பெயர்: நன்நுதல் விறலியர்
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 48[தொகு]

பைம்பொன் தாமரை பாணர்ச் சூட்டி
ஒண்நுதல் விறலியர்க்(கு) ஆரம் பூட்டிக்
கெடல்அரும் பல்புகழ் நிலைஇ நீர்புக்குக்
கடலொ(டு) உழந்த பனித்துறைப் பரதவ
5  ஆண்டுநீர்ப் பெற்ற தாரம் ஈண்(டு)இவர்
கொள்ளாப் பாடற்(கு) எளிதின் ஈயும்
கல்லா வாய்மையன் இவன்எனத் தத்தம்
கைவல் இளையர் நேர்கை நிரைப்ப
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை
10 முனைசுடு கனைஎரி எரித்தலின் பெரிதும்
இகழ்கவின் அழிந்த மாலையொடு சாந்துபுலர்
பல்பொறி மார்பநின் பெயர்வா ழியரோ
நின்மலைப் பிறந்து நின்கடல் மண்டும்
மலிபுனல் நிகழ்தரும் தீநீர் விழவின்
15 பொழில்வதி வேனில் பேர்எழில் வாழ்க்கை
மேவரு சுற்றமோ(டு) உண்(டு)இனிது நுகரும்
தீம்புனல் ஆயம் ஆடும்
காஞ்சிஅம் பெருந்துறை மணலினும் பலவே. (48))


பெயர்: பேர்எழில் வாழ்க்கை
துறை: இயன்மொழிவாழ்த்து
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 49[தொகு]

யாமும் சேறுக நீயிரும் வம்மின்
துயிலுங் கோதைத் துளங்(கு)இயல் விறலியர்
கொளைவல் வாழ்க்கைநும் கிளைஇனி(து) உணீஇயர்
களிறுபரந்(து) இயலக் கடுமா தாங்க
5  ஒளிறுகொடி நுடங்கத் தேர்திரிந்து கொட்ப
எஃகுதுரந்(து) எழுதரும் கைகவர் கடும்தார்
வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து
மொய்வளம் செருக்கி மொசிந்துவரு மோகூர்
வலம்படு குழூஉநிலை அதிர மண்டி
10 நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர்
நிறம்படு குருதி நிலம்படர்ந்(து) ஓடி
மழைநாள் புனலின் அவல்பரந்(து) ஒழுகப்
படுபிணம் பிறங்கப் பாழ்பல செய்து
படுகண் முரசம் நடுவண் சிலைப்ப
15 வளன்அற நிகழ்ந்து வாழுநர் பலர்படக்
கருஞ்சினை விறல்வேம்(பு) அறுத்த
பெருஞ்சினைக் குட்டுவன் கண்டனம் வரற்கே. (49)


பெயர்: செங்கை மறவர்
துறை: விறலியாற்றுப்படை
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 50[தொகு]

மாமலை முழக்கின் மான்கணம் பனிப்பக்
கால்மயங்கு கதழ்உறை ஆலியொடு சிதறிக்
கரும்(பு)அமல் கழனிய நாடுவளம் பொழிய
வளம்கெழு சிறப்பின் உலகம் புரைஇச்
5  செங்குணக்(கு) ஒழுகும் கலுழி மலிர்நிறைக்
காவிரி அன்றியும் பூவிரி புனலொரு
மூன்றுடன் கூடிய கூடல் அனையை
கொல்களிற்(று), உரவுத்திரை பிறழ அவ்வில் பிசிரப்
புரைதோல் வரைப்பின் எஃகுமன்ண அவிர்தர
10 விரவுப்பணை முழங்(கு)ஒலி வொணஇய வேந்தர்க்(கு)
அரணம் ஆகிய வெருவரு புனல்தார்
கல்மிசை யவ்வும் கடலவும் பிறவும்
அருப்பம் அமைஇய அமர்கடந்(து) உருத்த
ஆள்மலி மருங்கின் நா(டு)அகப் படுத்து
15 நல்இசை நனந்தலை இரிய ஒன்னார்
உருப்(பு)அற நிரப்பினை ஆதலின் சாந்துபுலர்பு
வண்ணம் நீவி வகைவனப்(பு) உற்ற
வரிஞிமி(று) இமிரும் மார்புபிணி மகளிர்
விரிமென் கூந்தல் மெல்அணை வதிந்து
20 கொல்பிணி திருகிய மார்புகவர் முயக்கத்துப்
பொழுதுகொள் மரபின் மென்பிணி அவிழ
எவன்பல கழியுமோ பெரும பல்நாள்
பகைவெம் மையின் பாசறை மாணஇப்
பா(டு)அரி(து) இயைந்த சிறுதுயில் இயலாது
25 கோடு முழங்(கு) இமிழ்இசை எடுப்பும்
பீடுகெழு செல்வம் மாணஇய கண்ணே. (50)


பெயர்: வெருவரு புனற்றார்
துறை: வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு: செந்தூக்கு


பதிகம்[தொகு]

வடவர் உட்கும் வான்தோய் வெல்கொடிக்
குடவர் கோமான் நெடுஞ்சேர லாதற்குச்
சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்
கடவுள் பத்தினிக் கற்கோள் வேண்டிக்
5  கான்நவில் கானம் கணையின் போகி
ஆரிய அண்ணலை வீட்டிப் பேரிசை
இன்பல் அருவிக் கங்கை மண்ணி
இனம்தெரி பல்ஆன் கன்றொடு கொண்டு
மாறா வல்வில் இடும்பின் புறத்(து)இறுத்(து)
10 உறுபுலி அன்ன வயவர் வீழச்
சிறுகுரல் நெய்தல் வியலூர் நூறி
அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து
பழையன் காக்கும் கரும்சினை வேம்பின்
முழாரை முழுமுதல் துமியப் பண்ணி
15 வால்இழை கழித்த நறும்பல் பெண்டிர்
பல்இருங் கூந்தல் முரற்சியால்
குஞ்சர ஒழுகை பூட்டி வெந்திறல்
ஆராச் செருவின் சோழர்குடிக்(கு) உரியோர்
ஒன்பதின்மர் வீழ வாயில்புறத்(து) இறுத்து
20 நிலைச்செருவின் ஆற்றலை அறுத்துக்
கெடல் அரும் தானையொடு
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் கரணமமைந்த காசறு
செய்யுட் பரணர் பாடினார் பத்துப்பாட்டு.
அவைதாம்:
சுடர்வீவேங்கை, தசும்புதுளங்கிருக்கை, ஏறாவேணி, நோய்தபுநோன்றொடை,
ஊன்றுவையடிசில், கரை வாய்ப்பருதி, நன்னுதல் விறலியர், பேரெழில்வாழ்க்கை,
செங்கை மறவர், வெருவருபுனற்றார்.
இவை பாட்டின் பதிகம்.
பாடிப் பெற்ற பரிசில்:
உம்பற்காட்டு வாரியையும் தன்மகன் குட்டுவன் சேரலையுங் கொடுத்தான் அக்கோ.
கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான்.