உள்ளடக்கத்துக்குச் செல்

பதிற்றுப்பத்து/மூன்றாம்பத்து

விக்கிமூலம் இலிருந்து

பாடப்பட்டோன்: பல்யானைச் செல்கெழு குட்டுவன்

பாடியவர்: பாலைக் கெளதமனார்

பாட்டு - 21

[தொகு]
சொல்பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம்என்(று)
ஐந்(து)உடன் போற்றி அவைதுணை ஆக
எவ்வம் சூழாது விளங்கிய கொள்கைக்
காலை அன்ன சீர்சால் வாய்மொழி
5  உருகெழு மரபின் கடவுள் பேணியர்
கொண்ட தீயின் சுடர்எழு தோறும்
விரும்புமெய் பரந்த பெரும்பெயர் ஆவுதி
வருநர் வரையார் வார வேண்டி
விருந்துகண் மாறா(து) உணீஇய பாசவர்
10 ஊனத்(து) அழித்த வால்நிணக் கொழும்குறை
குய்யிடு தோறும் ஆனா(து) ஆர்ப்பக்
கடல்ஒலி கொண்டு செழுநகர் நடுவண்
அடுமை எழுந்த அடுநெய் ஆவுதி
இரண்(டு)உடன் கமழும் நாற்றமொடு வானத்து
15 நிலைபெறு கடவுளும் விழைதகப் பேணி
ஆர்வளம் பழுனிய ஐயம்தீர் சிறப்பின்
மாரிஅம் கள்ளின் போர்வல் யானைப்
போர்ப்(பு)உறு முரசம் கறங்க ஆர்ப்புச்சிறந்து
நன்கலம் தரூஉம் மண்படு மார்ப
20 முல்லைக் கண்ணிப் பல்ஆன் கோவலர்
புல்உடை வியன்புலம் பல்ஆ பரப்பிக்
கல்உயர் கடத்(து)இடைக் கதிர்மணி பெறூஉம்
மிதிஅல் செருப்பின் பூழியர் கோவே
குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை
25 பல்பயம் தழீஇய பயம்கெழு நெடுங்கோட்டு
நீர்அறல் மருங்கு வழிப்படாப் பாகுடிப்
பார்வல் கொக்கின் பரிவேட்(பு) அஞ்சாச்
சீர்உடைத் தேஎத்த முனைகெட விலங்கிய
நேர்உயர் நெடுவரை அயிரைப் பொருந
30 யாண்டுபிழைப் பறியாது பயமழை சுரந்து
நோயின் மாந்தர்க்(கு) ஊழி ஆக
மண்ணா வாயின் மணம்கமழ் கொண்டு
கார்மலர் கமழும் தாழ்இரும் கூந்தல்
ஒரீஇயின போல விரவுமலர் நின்று
35 திருமுகத்(து) அலமரும் பெருமதர் மழைக்கண்
அலங்கிய காந்தள் இலங்குநீர் அழுவத்து
வேய்உறழ் பணைத்தோள் இவளோ(டு)
ஆயிர வெள்ளம் வாழிய பலவே. (21)


பெயர் - அடுநெய்யாவுதி (13)
துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணம்


பாட்டு - 22

[தொகு]
சினனே காமம் கழிகண் ணோட்டம்
அச்சம் பொய்ச்சொல் அன்புமிகு வுடைமை
தெறல்கடு மையொடு பிறவும்இவ் வுலகத்(து)
அறம்தெரி திகிரிக்கு வழியடை யாகும்
5  தீதுசேண் இகந்து நன்றுமிகப் புரிந்து
கடலும் கானமும் பலபயம் உதவப்
பிறர்பிறர் நலியாது வேற்றுப்பொருள் வெஃகாது
மைஇல் அறிவினர் செவ்விதின் நடந்துதம்
அமர்துணைப் பிரியாது பாத்(து)உண்டு மாக்கள்
10 மூத்த யாக்கையொடு பிணிஇன்று கழிய
ஊழி உய்த்த உரவோர் உம்பல்
பொன்செய் கணிச்சித் திண்பிணி உடைத்துச்
சிரறுசில ஊறிய நீர்வாய்ப் பத்தல்
கயிறுகுறு முகவை மூயின மொய்க்கும்
15 ஆகெழு கொங்கர் நா(டு)அகப் படுத்த
வேல்கெழு தானை வெருவரு தோன்றல்
உளைப்பொலிந்த மா
இழைப்பொலிந்த களிறு
வம்புபரந்த தேர்
20 அமர்க்(கு)எதிர்ந்த புகல்மறவ ரொடு
துஞ்சுமரம் துவன்றிய மலர்அகன் பறந்தலை
ஓங்குநிலை வாயிதூங்குபு தகைத்த
வில்லிசை மாட்டிய விழுச்சீர் ஐயவிக்
கடிமிளைக் குண்டுகிடங்கின்
25 நெடுமதில் நிரைப்பதணத்
தண்ணலம் பெருங்கோட்(டு) அகப்பா எறிந்த
பொன்புனை உழிஞை வெல்போர்க் குட்டுவ
போர்த்(து)எறிந்த பறையாற் புனல்செறுக் குநரும்
நீர்த்தரு பூசலின் அம்(பு)அழிக்கு நரும்
30 ஒலித்தலை விழவின் மலியும் யாணர்
நாடுகெழு தண்பனை சீறினை ஆதலின்
குடதிசை மாய்ந்து குணம்முதல் தோன்றிப்
பாய்இருள் அகற்றும் பயம்கெழு பண்பின்
ஞாயிறு கோடா நன்பகல் அமயத்துக்
35 கவலை வெள்நரி கூஉம்முறை பயிற்றிக்
கழல்கண் கூகைக் குழறுகுரல் பாணிக்
கருங்கண் பேய்மகள் வழங்கும்
பெரும்பாழ் ஆகுமன் அளிய தாமே. (22)


பெயர் - கயிறுகுறு முகவை (14)
துறை - வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
வண்ணம் - ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்


பாட்டு - 23

[தொகு]
அலந்தலை உன்னத்(து) அங்கவடு பொருந்திச்
சிதடி கரையப் பெருவறம் கூர்ந்து
நிலம்பை(து) அற்ற புலம்கெடு காலையும்
வாங்குபு தகைத்த கலப்பையர் ஆங்கண்
5  மன்றம் போந்து மறுகுசிறை பாடும்
வயிரிய மாக்கள் கடும்பசி நீங்கப்
பொன்செய் புனைஇழை ஒலிப்பப் பெரி(து)உவந்து
நெஞ்சுமலி உவகையர் உண்டுமலிந்(து) ஆடச்
சிறுமகி ழானும் பெருங்கலம் வீசும்
10 போர்அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ
நின்நயந்து வருவேம் கண்டனம் புல்மிக்கு
வழங்குநர் அற்(று)என மருங்குகெடத் தூர்ந்து
பெருங்கவின் அழிந்த ஆற்ற ஏறுபுணர்ந்(து)
அண்ணல் மரைஆ அமர்ந்(து)இனி(து) உறையும்
15 விண்உயர் வைப்பின கா(டு)ஆ யினநின்
மைந்துமலி பெரும்புகழ் அறியார் மலைந்த
போர்எதிர் வேந்தர் தார்அழிந்(து) ஒராலின்
மரு(து)இமிழ்ந்(து) ஓங்கிய நளிஇரும் பரப்பின்
மணல்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு
20 முருக்குத்தாழ்(பு) எழிலிய நெருப்புறழ் அடைகரை
நந்து நாரையொடு செவ்வரி உகளும்
கழனி வாயிற் பழனப் படப்பை
அழல்மருள் பூவின் தாமரை வளைமகள்
குறாஅது மலர்ந்த ஆம்பல்
25 அறாஅ யாணர்அவர் அகன்தலை நாடே. (23)


பெயர் - ததைந்த காஞ்சி (19)
துறை - வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணம்


பாட்டு - 24

[தொகு]
நெடுவயின் ஒளிறு மின்னுப்பரந்(து) ஆங்குப்
புலிஉறை கழித்த புலவுவாய் எஃகம்
ஏவல் ஆடவர் வலன்உயர்த்(து) ஏந்தி
ஆர்அரண் கடந்த தார்அரும் தகைப்பின்
5  பீடுகொள் மாலைப் பெரும்படைத் தலைவ
ஓதல் வேட்டல் அவைபிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல்என்(று) ஆறுபுரிந்(து) ஒழுகும்
அறம்புரி அந்தணர் வழிமொழிந்(து) ஒழுகி
ஞாலம் நின்வழி ஒழுகப் பாடல்சான்று
10 நா(டு)உடன் விளங்கும் நாடா நல்லிசைத்
திருந்திய இயல்மொழித் திருந்(து)இழை கணவ
குலைஇழி(பு) அறியாச் சாபத்து வயவர்
அம்புகளை(வு) அறியாத் தூங்குதுளங்(கு) இருக்கை
இடாஅ ஏணி இயல்அறைக் குருசில்
15 நீர்நிலம் தீவளி விசும்போ(டு) ஐந்தும்
அளந்துகடை அறியினும் அளப்பரும் குரையைநின்
வளம்வீங்கு பெருக்கம் இனிதுகண் டிகுமே
உண்மருந்(து) இன்மரும் வரைகோள் அறியாது
குரைத்தொடி மழுகிய உலக்கை வயின்தோ(று)
20 அடைச்சேம்(பு) எழுந்த ஆ(டு)று மடாவின்
எஃ(கு)உறச் சிவந்த ஊனத்(து) யாவரும்
கண்டுமதி மருளும் வாடாச் சொன்றி
வயங்குகதிர் விரிந்து வான்அகம் சுடர்வர
வறிதுவடக்(கு) இறைஞ்சிய சீர்கால் வெள்ளி
25 பயங்கெழு பொழுதோ(டு) ஆநியம் நிற்பக்
கலிழும் கருவியொடு கையுற வணங்கி
மன்னுயிர் புரைஇய வலன்ஏர்(பு) இரங்கும்
கொண்டல் தண்தளிக் கமம்சூல் மாமழை
கார்எதிர் பருவம் மறப்பினும்
30 பேரா யாணர்த்தால் வாழ்கநின் வளனே. (24)


பெயர் - சீர்கால் வெள்ளி (24)
துறை - இயன்மொழி வாழ்த்து
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணம்


பாட்டு - 25

[தொகு]
மாஆ டியபுலன் நாஞ்சி ல்ஆடா
கடாஅம் சென்னிய கடுங்கண் யானை
இனம்பரந்த புலம் வளம்பரப்(பு) அறியா
நின்படைஞர், சேர்ந்த மன்றம் கழுதை போகி
5  நீ, உடன்றோர் மன்எயில் தோட்டி வையா
கடுங்கால் ஒற்றலின் சுடர்சிறந்(து) உருத்துப்
பசும்பிசிர் ஒள்அழல் ஆடிய மருங்கின்
ஆண்தலை வழங்கும் கான்உணங்கு கடுநெறி
முனைஅகன் பெரும்பாழ் ஆக மன்னிய
10 உரும்உறழ்(பு) இரங்கும் முரசிற் பெருமலை
வரைஇழி அருவியின் ஒளிறுகொடி நுடங்கக்
கடும்பரிக் கதழ்சிற(கு) அகைப்பநீ
நெடுந்தேர் ஓட்டியபிறர் அகன்தலை நாடே. (25)


பெயர் - கானுணங்கு கடுநெறி (8)
துறை - வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
வண்ணம் - ஒழுகு வண்ணமும் சொற்சீர்வண்ணமும்


பாட்டு - 26

[தொகு]
தேஎர் பரந்தபுலம் ஏஎர் பரவா
களி(று)ஆ டியபுலம் நாஞ்சில் ஆடா
மத்(து)உர றியமனை இன்னியம் இமிழா
ஆங்குப், பண்டுநற்(கு) அறியுநர் செழுவளம் நினைப்பின்
5  நோகோ யானே நோதக வருமே
பெயல்மழை புரவின்(று) ஆகிவெய்(து) உற்று
வலம்இன்(று) அம்ம காலையது பண்(பு)எனக்
கண்பனி மலிர்நிறை தாங்கிக் கைபுடையூ
மெலிவுடை நெஞ்சினர் சிறுமை கூரப்
10 பீர்இவர் வேலிப் பாழ்மனை நெருஞ்சிக்
கா(டு)உறு கடுநெறி யாக மன்னிய
முரு(கு)உடன்று கறுத்த கலிஅழி மூதூர்
உரும்பில் கூற்றத்(து) அன்னநின்
திருந்துதொழில் வயவர் சீறிய நாடே. (26)


பெயர் - காடுறு கடுநெறி (11)
துறை - வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
வண்ணம் - ஒழுகு வண்ணமும் சொற்சீர்வண்ணமும்


பாட்டு - 27

[தொகு]
சிதைந்தது மன்றநீ சிவந்தனை நோக்கலின்
தொடர்ந்த குவளைத் தூநெறி அடைச்சி
அலர்ந்த ஆம்பல் அகமடி வையர்
சுரியல்அம் சென்னிப் பூஞ்செய் கண்ணி
5  அரியல் ஆர்கையர் இனிதுகூ டியவர்
துறைநணி மருதம் ஏறித் தெறுமார்
எல்வளை மகளிர் தெள்விளி இசைப்பின்
பழனக் காவில் பசுமயில் ஆலும்
பொய்கை வாயில் புனல்பொரு புதவின்
10 நெய்தல் மரபின் நிரைகள் செறுவின்
வல்வாய் உருளி கதும்என மண்ட
அள்ளல் பட்டுத் துள்ளூபு துரப்ப
நல்எருதும் முயலும் அளறுபோகு விழுமத்துச்
சாகாட் டாளர் கம்பலை அல்லது
15 பூசல் அறியா நன்னாட்(டு)
யாணர் அறாஅக் காமரு கவினே. (27)


பெயர் - தொடர்ந்த குவளை (2)
துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணம்


பாட்டு - 28

[தொகு]
திருவுடைத்(து) அம்ம பெருவிறல் பகைவர்
பைங்கண் யானைப் புணர்நிரை துமிய
உரம்துரந்(து) எறிந்த கறைஅடிக் கழல்கால்
கடுமா மறவர் கதழ்தொடை மறப்ப
5  இளைஇனிது தந்து விளைவுமுட்(டு) உறாது
புலம்பா உறையுள் நீதொழில் ஆற்றலின்
விடுநிலக் கரம்பை விடர்அளை நிறையக்
கோடை நீடக் குன்றம் புல்லென
அருவி அற்ற பெருவறல் காலையும்
10 நிவந்துகரை இழிதரு நனம்தலைப் பேரியாற்றுச்
சீர்உடை வியன்புலம் வாய்பரந்து மிகீஇயர்
உவலை சூடி உருத்துவரு மலிர்நிறைச்
செந்நீர்ப் பூசல் அல்லது
வெம்மை அரிதுநின் அகன்தலை நாடே. (28)


பெயர் - உருத்துவரு மலிர்நிறை (12)
துறை - நாடுவாழ்த்து
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணம்


பாட்டு - 29

[தொகு]
அவல்எறிந்த உலக்கை வாழைச் சேர்த்தி
வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்
முடந்தை நெல்லின் விளைவயல் பரந்த
தடந்தாள் நாரை இரிய அயிரைக்
5  கொழுமீன் ஆர்கைய மரந்தொறும் குழாஅலின்
வெண்கை மகளிர் வெண்குரு(கு) ஓப்பும்
அழியா விழவின் இழியாத் திவவின்
வயிரிய மாக்கள் பண்அமைத்(து) எழீஇ
மன்ற நண்ணி மறுகுசிறை பாடும்
10 அகன்கண் வைப்பின் ஆடுமன் அளிய
விரவுவேறு கூலமொடு குருதி வேட்ட
மயிர்புதை மாக்கண் கடிய கழற
அமர்கோள் நேர்இகந்(து) ஆர்எயில் கடக்கும்
பெரும்பல் யானைக் குட்டுவன்
15 வரம்பில் தானை பரவா ஊங்கே. (29)


பெயர் - வெண்கை மகளிர் (6)
துறை - வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணம்


பாட்டு - 30

[தொகு]
இணர்ததை ஞாழல் கரைகெழு பெருந்துறை
மணிக்கலத் தன்ன மாஇதழ் நெய்தல்
பாசடைப் பனிக்கழி துழைஇப் புன்னை
வால்இணர்ப் படுசினக் குரு(கு)இறை கொள்ளும்
5  அல்குறு கானல் ஓங்குமணல் அடைகரை
தாழ்அடும்பு மலைந்த புணரிவளை ஞரல
இலங்குநீர் முத்தமொடு வார்துகிர் எடுக்கும்
தண்கடல் படப்பை மென்பா லனவும்
காந்தள்அங் கண்ணிக் கொலைவில் வேட்டுவர்
10 செங்கோட்(டு) ஆமான் ஊனொடு காட்ட
மதன்உடை வேழத்து வெண்கோடு கொண்டு
பொன்உடை நியமத்துப் பிழிநொடை கொடுக்கும்
குன்றுதலை மணந்த புன்புல வைப்பும்
காலம் அன்றியும் கரும்(பு)அறுத்(து) ஒழியா(து)
15 அரிகால் அவித்துப் பலபூ விழவின்
தேம்பாய் மருதம் முதல்படக் கொன்று
வெண்தலைச் செம்புனல் பரந்துவாய் மிகுக்கும்
பலசூழ் பதப்பர் பரிய வெள்ளத்துச்
சிறைகொள் பூசலின் புகன்ற ஆயம்
20 முழவிமிழ் மூதூர் விழவுக்காணூஉப் பெயரும்
செழும்பல் வைப்பி பழனப் பாலும்
ஏனல் உழவர் வரகுமீ(து) இட்ட
கான்மிகு குளவிய வன்புசேர் இருக்கை
மென்தினை நுவணை முறைமுறை பகுக்கும்
25 புன்புலம் தழீஇய புறஅணி வைப்பும்
பல்பூஞ் செம்மல் காடுபயம் மாறி
அரக்கத் தன்ன நுண்மணல் கோடுகொண்(டு)
ஒண்நுதல் மகளிர் கழலொடு மறுகும்
விண்உயர்ந்(து) ஓங்கிய கடற்றவும் பிறவும்
30 பணைகெழு வேந்தரும் வேளிரும்ஒன்று மொழிந்து
கடலவுங் காட்டவும் அரண்வலியார் நடுங்க
முரண்மிகு கடுங்குரல் விசும்(பு)அடை(பு) அதிரக்
கடுஞ்சினங் கடாஅய் முழங்கு மந்திரத்(து)
அருந்திறல் மரபின் கடவுள் பேணியர்
35 உயர்ந்தோன் ஏந்திய அரும்பெறல் பிண்டம்
கருங்கண் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க
நெய்த்தோர் தூஉய நிறைமகிழ் இரும்பலி
எறும்பும் மூசா இறும்பூது மரபின்
கருங்கண் காக்கையொடு பருந்(து)இருந் தார
40 ஓடாப் பூட்கை ஒண்பொறிக் கழல்கால்
பெரும்சமம் ததைந்த செருப்புகல் மறவர்
உருமுநிலன் அதிர்க்குங் குரலொடு கொளைபுணர்ந்து
பெருஞ்சோ(று) உகுத்தற் கெறியும்
கடுஞ்சின வேந்தேநின் தழங்குகுரல் முரசே. (30)


பெயர்: புகன்றவாயம் (19)
துறை: பெருஞ்சோற்றுநிலை
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பதிகம்

[தொகு]
இமைய வரம்பன் தம்பி அமைவர
உம்பற் காட்டைத் தன்கோல் நிறீஇ
அகப்பா எறிந்து பகல்தீ வேட்டு
மதிஉறழ் மரபின் முதியரைத் தழீஇக்
5  கண்ணகன் வைப்பின் மண்வகுத்(து) ஈத்துக்
கருங்களிற்(று) யானைப் புணர்நிரை நீட்டி
இருகடல் நீரும் ஒருபகல் ஆடி
அயிரை பரைஇ ஆற்றல்சால் முன்போ(டு)
ஒடுங்கா நல்இசை உயர்ந்த கேள்வி
10 நெடும்பார தாயனார் முந்(து)உறக் காடுபோந்த
பல்யானைச் செல்கெழு குட்டுவனைப்
பாலைக் கெளதமனார் பாடினார் பத்துப்பாட்டு.
அவைதாம்: அடுநெய்யாவுதி, கயிறு குறுமுகவை, ததைந்தகாஞ்சி,
சீர்சால்வெள்ளி, கானுணங்குகடுநெறி, காடுறுகடுநெறி,
தொடந்தகுவளை, உருத்துவரு மலிர்நிறை, வெண்கைமகளிர், புகன்றாவாயம்.
இவை பாட்டின் பதிகம்.
பாடிப்பெற்ற பரிசில்: ஒநீர் வெண்டியது கொண்மின்ஒ என ஒயானும் என் பார்ப்பனியும்
சுவர்க்கம் புகல் வெண்டும்ஒ என, பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது
பெருவேள்வி வேட்பிக்கப் பத்தாம் பெருவேள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பனியையும்
காணாராயினார்.
இமயவரம்பன்றம்பி பல்யானைச்செல்கெழு குட்டுவன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.