பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி/இரண்டாம் பதிப்பின் முன்னுரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இரண்டாம் பதிப்பின் முன்னுரை

இந்நூலின் முதல் பதிப்பினைச் சென்னைத் தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கத்தார் இன்றைக்குப் பத்து ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டனர். இடைப்பட்ட காலத்தில் தமிழகத்திலும் பரந்த இந்திய நாட்டிலும் எத்தனையோ மாற்றங்கள் உண்டாகியுள்ளன. எனினும் தமிழ் மொழியில் போதுமான ஆய்வு நூல்கள் இன்னும் வெளிவராதிருப்பது எண்ணத்தக்கதாக உள்ளது. தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகங்களும் பிறபொதுநிலையங்களும் நல்ல ஆய்வுநிலைக்களன்களாக அமைந்து, பல ஆய்வு நூல்களை வெளியிட வேண்டும் என அறிஞர் பலர் அடிக்கடி கூறி வருகின்றமையை ஈண்டு எண்ணுகிறேன்.

இந்நூலினைத் தமிழ் நாட்டுப் பல்கலைக்கழகங்களும் பிற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களுள் சிலவும் தமிழ் முதுகலை, புலவர் முதலிய வகுப்புகளுக்குப் பாடநூலாகவும் வழி காட்டும் துணை நூலாகவும் கொண்டுள்ளனர். அவர்களுக்கு என் வணக்கமும் நன்றியும்.உரியன.

தமிழ் உரைநடை வளர்ச்சியில் தொடர்ந்து ஆய்வு தேவை. வல்லார் அத்துறையில் வழி காட்டவேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

முதல் பதிப்பு விற்பனையாவதற்குப் பத்து ஆண்டுகள் கழிந்தனவாயினும் இதன்படிகள் அனைத்தும் தக்கார் கைப்பட்டுச் சிறந்துள்ளமை அறிந்து மகிழ்கின்றேன். தொடர்ந்து இப்பதிப்பினையும் தமிழுலகம் ஏற்று ஆதரிக்கும் எனும் துணிபுடையேன். இந்நூல் வெளிவருவதற்கு உதவிய அனைவருக்கும் நன்றியுடையேன்.

தமிழ்க்கலை இல்லம்:
சென்னை-30
25—2—66
பணிவுள்ள,
அ. மு. பரமசிவானந்தம்
 


மூன்றாம் பதிப்பு

இந்நூலின் மூன்றாம் பதிப்பு இன்று வெளிவருகிறது; பிற அண்ணாமலை, மதுரை பல்கலைக் கழகச் சொற்பொழிவுகளுடன் இணைக்கப் பெற்றுள்ளது. தமிழுலகம் ஏற்றுப் புரப்பதாக.

30-11-78
ஆசிரியன்