உள்ளடக்கத்துக்குச் செல்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி/சொற்பொழிவு—க— (15-2-1965)

விக்கிமூலம் இலிருந்து



சொற்பொழிவு—க— (15-2-1965)

முன்னுரை

பேராசிரியர் அவர்களே! பெரியோர்களே!

மறைந்த திருவாளர் ‘கல்கி’ அவர்களுடைய நினைவுச் சொற்பொழிவினை எனக்கு இப்பல்கலைக் கழகத்தார் அளித்து, இவ்வாண்டு என்னைப் பேசுமாறு பணித்துள்ளார்கள். முதலாவதாக அவர்கட்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இச் சொற்பொழிவுத் தொடருக்கு அமைந்த பொருள், ‘பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரை நடை வளர்ச்சி’ (Development of Tamil Prose in the 19th Century) என்பதாம் நூற்றாண்டில் உரைநடை வளர்த்த பெருமைக்குரிய ‘கல்கி’ அவர்களின் நினைவுச் சொற்பொழிவு அல்லவா! அவர் வாழ்ந்த நூற்றாண்டிற்கு முன் இருந்த உரைநடை வளர்ச்சியைப் பற்றி ஆராய்வதாக அமைதல் பொருந்து வதுதானே? ஒரு நூற்றண்டில் நம் மொழியில் உண்டான நூல்கள்-இலக்கிய நூல்கள்-எண்ணில. அவற்றுள் உரை நடை நூல்களாகவும் இதழ்களாகவும் ஏடுகளாகவும் வேறு பலவகைகளாகவும் அமைந்தன உள்ளன. அவை அனைத்தும் உரைநடை வளர்ச்சியில் பங்கு கொண்டுள்ளனவேயாம். இங்கு அவற்றை ஆராய்ந்து பார்ப்பதன் முன். ‘தமிழ் இலக்கிய வளர்ச்சி’ காலங்கடந்த வரலாற்று எல்லையை உடையதாகையால், அக்கால அளவில் இவ்வுரைநடை தோன்றி வளர்ந்த வரலாற்றை அறிய வேண்டுவதும் இன்றியமையாததாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைவாயிலில் கால்வைப்பதன்முன், அதற்கு முன் பல நூற்றண்டுகளில் இவ்வுரை நடை எவ்வாறு தோன்றி வளர்த்து வளம்பெற்று வந்ததென்பதைக் காணல் ஏற்புடைத்தாகும்.

தமிழ் மொழி

தமிழ் மொழி தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே வளம் பெற்ற மொழியென்பதும், அவர் காலத்துக்கு முன்பே இம்மொழியில் உரைநடையும் பாட்டும் பல்கி இருந்தன என்பதும் அவர்தம் நூல் வழியாகவே நம்மால் அறிய முடிகின்றது. தமிழில் உரைநடை என்று தோன்றிற்று என வரையறுக்க முடியாது. அதன் வரலாற்றை ஆயு முன் உரைநடை என்பது என்ன என்பதையும் அது வாழ்வின் தேவையை எவ்வெவ்வாறு நிறைவு செய்கிறது என்பதையும் ஆராயவேண்டுவதும் தேவையான ஒன்றல்லவா?

எது உரை நடை?

எது உரை நடை? ஏன் உரை நடை? இவை பதில் இறுக்கப்பெற வேண்டிய வினாக்கள், தமிழில் மட்டுமின்றி ஆங்கிலம் முதலிய பிற மொழிகளிலும் இத்தகைய கேள்விகளுக்கு விடை காணல் தேவையே. மேலைநாட்டு ஆய்வாளர்களுள் சிலர் இவற்றிற்குரிய விடைகளையும் ஆய்ந்து கண்டு அறுதியிட்டு எழுதியுள்ளார்கள். மனிதன் பிற உயிரினத்தினும் வேறுபட்டவன்; தன் உள்ளக் கருத்தை உடன் வாழும் மற்றவருக்கு உணர்த்தக் கடமைப்பட்டவன். வாய் திறந்து பேசும் வாய்ப்பு இவனுக்கு உண்டு அந்த வாய்ப்பே ‘மொழி' என்ற ஒன்றை உலகுக்கு அளித்தது. இருபதாம் நூற்றாண்டின் இடைபட்ட நாகரிக உலகில், மொழி அடிப்படையில் பல்வேறு சண்டைகளை நாம் காண்கின்றாேமாயினும், இந்த மொழியே மனிதனை மனிதனாக வாழ வழி காட்டி வழி வகுத்து, வாழ வைத்த ஒன்று என்பதை நம்மால் மறக்க முடியாது. இந்த மொழிகளின் அமைப்பு நாடுதோறும் வேறுபடுவது என்றாலும், மொழி சமுதாயத்தை இணைக்கும் ஒரே சாதனம் அல்லது கருவி என்பதை யாராலும் மறுக்க இயலாது. இம்மொழிகள் தத்தம் தோற்ற வளர்ச்சி அடிப்படையில் சிறந்தும் சிதைந்தும், வளர்ந்தும் வாடியும், உயர்ந்தும் தாழ்ந்தும் இன்று உலகில் உலவுகின்றன. நல்ல திருந்திய மொழிகளுள் பல்வேறு இலக்கியங்கள் வாழ்கின்றன். கடந்த கால வரலாற்று வாழ்வையும் இயற்கை வளத்தையும் காட்டி, அன்று வாழ்ந்த மக்கட் சமுதாயத்தையும் இன்று வாழும் நம்மையும் வருங்காலச் சமுதாயத்தையும் வாழ வைப்பனவே இலக்கியங்கள். இந்த அடிப்படையில் தோன்றிய இலக்கியங்களே காலத்தை வென்று வாழ்வன. மற்றவை ...? நாம் சொல்ல வேண்டா.

இவ்விலக்கிய அடிப்படைகளாக அமைந்தனவும் பேச்சு வழக்கில் உள்ளனவுமாகிய உரையும் பாட்டும் நாம் எண்ணத்தக்கன. உரை என்றால் என்ன? இந்த 'உரை' என்ற சொல் நெடுங்காலமாகவே தமிழில் வழக்கத்தில் இருந்து வருகின்றது. 'உரைக்கப்படுவது உரை' என்று சுருக்கமாகப் பதில் சொல்லிவிடலாம். 'உரை' என்ற சொல்லுக்குத் தமிழில் பல பொருள்கள் உள்ளமை அறிஞர் அறிந்ததே. முதல் முதல் வெறும் ஒலிக்கே இந்த உரை என்ற சொல் பயன்படுத்தப்பட்டதென்பதை உணர்கின்றாேம் 'குன்றம் குமுறிய உரை' (பரிபாடல்,8-35) என்றே பரிபாடல் காட்டுகின்றது. விண்ணின்றிரங்கித் தண்மழை பொழியும் எழிலி தன் வரவுகாட்ட எழுந்த ஒலி அது. அது உரைக்க மழை வரும் என்பதை உலகம் உணர்கின்றது. இந்த வகையில் மக்களுக்கு உணர்த்தட உணர்வினை அளிக்கப் பயன்பட்டது-பயன்படுவது உரையாகும்.

உரை என்பது பொருளின் தன்மையை உள்ளவாறு உரைப்பதாகும். இதை விளக்க ஒரு சான்று பயன்படும். தட்டான் பொன்னுக்கு உரை காணும் வழக்கம், பலகட்டுப்பாடுகளுக்கிடையில், நம் நாட்டில் இன்றும் உள்ளத்தை அறிவோம். பொன் சிறந்ததா இல்லையா என்பதை-அதன் உண்மை நிலை, பண்பு, தரம் முதலியன இன்ன வகையன என்பதை-உரைத்துக் காண்பது நாடறிந்த ஒன்று. அதன் தன்மையை உணர்த்தும் கல்லுக்கு 'உரை கல்' என்றே பெயர் உண்டு அல்லவா? எனவே பொருள்களின் இயல்பை உள்ளது உள்ளவாறே உலகுக்கு உணர்த்துவது உரையாகும். இதைத்தான் ‘அடிப்படை மொழி’ என்பர் ஆய்வாளர். கற்பனை கலவாததாய்-உணர்ச்சியோ, பிற உள்ள நெகிழ்ச்சிகளோ, காய்தல் உவத்தல் என்ற வேறுபாடுகளோ கலவாததாய்-ஒரு பொருளின் தன்மையை உரையிட்டு உணரத்தக்க வகையில் காட்டுவதே உரை. (தட்டான் பொன்னை உரையிட்டுக் காட்டுவது போன்று) ஆனால் பாட்டோ இதற்கு நேர்மாறக உணர்ச்சி. கற்பனை முதலியவற்றின் இடையிலே தோய்ந்து அணிநலம் முதலியன பெற்றுப் பாடுவோன் உள்ளத்தளவு உயர்வோ அன்றித் தாழ்வோ பொருந்தப் பொருளை விளக்குவதாகும். இந்த உண்மையை மேலை நாட்டு அறிஞர்கள் நன்கு விளக்கியுள்ளார்கள். மொழி, இலக்கியம் இரண்டையும் வரையறுத்த ஆய்வாளர் எண்ணத்தை உணர்த்துவது மொழியென்றும் உணர்வை உணர்த்துவது இலக்கியம் என்று கூறுவர்

I convey my thought to you—this is language
I have emotion —that is literature
If the primary object be to convey the thought and the emotion where with it is touched by a secondary consideration, serving only to make the thought apprehended more pleasantly and more completely, the writing is some form of Prose Literature, as history or criticism. If on the other hand, the emotion be of first importance, and the thought seems to take place in the mind through the avenues of feeling, then the writing is some form of better letters—probably in the poetry or fiction. (Winchester, P. 182)

இவ்வாறு எழுத்துக்கு வரிவடிவம் கொடுக்கும் நிலையிலேயே ‘உரை’ உண்டாகியிருக்க வேண்டும் என்பது உண்மையன்றே உள்ளத்துத் தோன்றிய எண்ணத்தை மற்றவருக்கு உணர்த்த நினைத்த மனிதன் எண்ணி எண்ணி எழுத்தெழுத்தாக உச்சரித்து, சொல்லின் பின் சொல்லாக மெல்ல உரைத்திருப்பானன்றாே? எனவே முதலில் தோன்றியது உரை எனக்கொள்ளல் பொருத்தமானதாகும். ஆயினும் சில மேலை நாட்டு ஆய்வாளர்கள் பாட்டு முதலில் தோன்றிற்று என எழுதுகின்றனர். அது எவ்வாறு பொருத்தும் எனத் தெரியவில்லை. குழந்தை முதலில் பிறந்ததும் அழுகிறது; பிறகு பேசுகின்றது. அழும் இசை முன்னாதலின் அது பாட்டாக முன் தோன்றியிருக்கும் என்பது அவர் வாதம். குழந்தை அழுவது இசையாக இருக்கலாம் - ஆனால் அது மொழியிடைப்பட்ட பாட்டோ செய்யுளோ எப்படியாகும்? அந்த அழுகையில்-இசையில்மொழியே இல்லையே. குழந்தை வளர வளர மெல்ல மெல்ல, பெற்றேர் உணர்த்த ஒவ்வொரு சொல்லாகப் பேசிப் பேசியன்றோ உரை நடையைக் கற்றுக் கொள்கிறது. பின் வேண்டுமாயின் இசையும் பாட்டும் இயையப் ‘பெறலாம். எனவே இக்கூற்று ஏற்றுக்கொள்ளக் கூடியது தான? அறிஞர்களே ஆய்ந்து முடிவு காணட்டும்.

“செய்யுள்“ என்பது முற்கால வழக்கில் இலக்கியச் செறிவுள்ள உரையையும் தழுவி யிருந்தது. 'உரைச் செய்யுள்’ என்ற வழக்கு இதற்குச் சான்று.

இலக்கணம் இலக்கியம் உரையெனப் பெயர்பட்
டிருக்குமென் றெண்ணுக செய்யுளின் இயல்பே

என்பது இலக்கணக்கொத்து. உலக வழக்காகப் பேசப்படுவதும் எழுதப்படுவதும் உரைநடை, உரை வாசகம் என வழங்கும். உரை வாசகம் என்பது இரு பெயரொட்டு. தமிழில் வசனம் என்ற வடமொழியே, சில காலமாய் உரை நடையைக் குறிப்பதாய்ப் பெருவழக்கினதாயிற்று. உறுதிச் சொல், ஏற்ற சொல், பொருளுற்ற சொல் எனப் பொருள்படும் கட்டுரை என்னும் வார்த்தையும், உரைநடையைக் குறிக்கிறது. இது ‘கட்டுரை வன்மை’ என் பதனால் போதரும். 'கட்டுரை வகையான் எண்ணோடு புணர்ந்து’ எனத் தொல்காப்பியத்திலும் வருகிறது.

“பழைய சங்க நூல்களெல்லாம் பாக்களால் ஆனவை. முற்றும் உரை நடையான வசன நூல் யாதொன்றுமில்லை. அடிவரை யின்றி வரும் செய்யுளின் வகை நூலும், உரையும், பிசியும், முதுமொழியும், மந்திரமும், கூற்றிடை வைத்த குறிப்பும் என ஆறென்றும், அவற்றுள் உரைப் பகுதி, வழக்கு, பாட்டிடை வைத்த குறிப்பும், பாவின்றெழுந்த கிளவியும், பொருளொடு புணராப் பொய்ம்மொழியும், பொருளொடு புணர்ந்த நகைமொழியும் என நான்கென்றும், வகைப்படுத்துரைத்தார் தொல்காப்பியர் அவற்றுள் பாட்டிடை வைத்து குறிப்பென்பது,'ஒரு பாட்டு இடையிடை கொண்டு நிற்கும் கருத்தினால் வருவது என்று திரு. செல்வக்கேசவராய முதலியார், தம் ‘தமிழ் வியாசங்கள்'என்ற நூலில் இவ்வுரை நடையின் தொன்மை பற்றி விளக்கங் காட்டிச் செல்லுகின்றார்.

தொல்காப்பியர், உரைக்கு இலக்கணம் கூறவந்தவர்.

'தொன்மை தானே
உரையொடு புணர்ந்த பழமை மேற்றே' (செய். 229)

என விளக்கம் தருகின்றார். இதன் கருத்தென்ன? இதற்கு உரை எழுதிய இளம்பூரணர், 'நிறுத்த முறையானே தொன்மைச் செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று’ என்று கூறித் 'தொன்மையாவது உரையொடு பொருந்திப் போந்த பழைமைத்தாகிய பொருள் மேல் வருவது’ என்கிறார். பேராசிரியரும், 'தொன்மை யென்பது உரை விராய்ப் பழைமையவாகிய கதைப் பொருளாகச் சொல்லப்படுவது’ என்கின்றார். எனவே, இவற்றால் உரைநடை பாட்டிலும் பழையது என்பது நன்கு விளக்கப் பெறும். நாம் மேலே கண்ட 'வெற்றாெலியும் உரை' யெனக் காட்டிய பரிபாடல் இவ்விளக்கத்துக்குச் சான்றாகலாம்.


உரையும் பாட்டும்

தமிழ் இலக்கியத்தில் இவ்வுரைநடை முன் தோன்ற, நெடுகாலத்துக்குப் பின் இவ்வுரைநடை போன்று அமைந்த சூத்திரங்கள்-நூற்பாக்கள்-தோன்றின. பின்னரே பாட்டுத் தொன்றிற்று எனல் பொருந்தும். பொதுவாகச் சூத்திரங்கள் உண்டான காலம் கிறித்துப் பிறப்பதற்கு ஐந்தாறு நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது என்பர் ஆய்வாளர்.[1] வடமொழிச் சூத்திரங்களும் ஏறக்குறைய அந்த நூற்றாண்டுகளில்தான் தோன்றியிருக்கவேண்டும்.[2] எனவே உரைநடையை அடுத்து இச்சூத்திரங்கள் தோன்றியிருக்க வேண்டும். தொல்காப்பியமும் ஏறக்குறைய இக்காலத்திற்குச் சற்று முன்பு தோன்றிய ஒன்று என்பது அறிஞர் பலரும் ஒருசேர ஏற்றுக் கொள்ளுகின்ற உண்மையாகும் இனி, இத்தொல்காப்பியத்தின் செய்யுளியலில் உரையும் பாட்டும் உள்ள நிலைமை நம்மால் காணமுடிகின்றது. மற்றும் இத்தொல்காப்பியத்தின் வழியே இதற்கு முன்னும் பல இலக்கிய நூல்கள் தோன்றி வாழ்ந்து வந்தன என்பதையும் உணர முடிகின்றது தமிழ் மொழியின் தொன்மை பல பேரறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பெற்ற ஒன்றானமையால், இந் நாட்டுப் பிறமொழிகளைக் காட்டிலும் தமிழில் பழங்காலத்திலேயே உரையும், சூத்திரமும், பாட்டும் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றி வளர்ந்து வாழ, அவற்றைத் தொல்காப்பியர் தொகுத்துக் கூறி இலக்கண வரம்பினை உறுதி செய்தார் எனக் கொள்வது பொருத்தமானதாகும். எனவே உரைநடை பாட்டிலும் முந்தியது என்பது தேற்றம். இனி, இது பற்றி நாம் இங்கே அதிகம் ஆராயத் தேவையில்லை; அது வேண்டாததும்கூட. இத்தகைய உரைநடையிலக்கியம் தமிழில் தோன்றி வளர்ந்த வகையைக் காணவேண்டுவது நமது இன்றைய கடமையாகும்.

‘தமிழில்’ ‘செய்யுள்’ என்ற ஒரு சொல் உள்ளது என மேலே கண்டோம். செய்யப்படுவன அனைத்தும் செய்யுளே. எனவே உரைநடையும் செய்யப்படுவது தானே. ‘ஆம்’ எனவே உரைச் செய்யுள் எனக் கொள்ளலாமா? கொள்ளலாம். பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதி இதை நமக்கு எடுத்துக் காட்டுடன் விளக்குகின்றது. செய்யுள் என்பதற்கு உரை என்றே பொருள் உள்ளது என்பதை அது காட்டுகிறது.[3] தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் இந்த விளக்கம் நன்கு காட்டப் பெறுகின்றது. ஆங்கிலத் ‘Prose’ என்ற சொல்லுக்கு ‘Straight forward arrangement of words”[4] என்றும் ‘Plain matter of fact quality’& “ordinary nonmetrical form of written or spoken language”[5] என்றும் பொருள் உண்டு. நாம் மேலே பொன்னுரையோடு பொருத்திக் காட்டிய உண்மை விளக்கம் தரும் உரைநடைக் கருத்தினை இவை வலியுறுத்துகின்றன. மேலும், செய்யுள் என்ற சொல்லை உரை, பாட்டு இரண்டுக்கும் பயன்படுத்தினர்கள் எனவும் காணமுடிகிறது. உரைச் செய்யுள், பாச் செய்யுள் எனவே அவை வழங்கப் பெற்றன-பெறுகின்றன. இரண்டும் விரவியவற்றையே இளங்கோவடிகள், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ எனக் காட்டிச் செல்கின்றார். ‘Poem’ என்ற ஆங்கிலச் சொல் தமிழில் உள்ள ‘செய்யுள்’ என்ற சொல்லுக்கு நேர் பொருத்தமான ஒன்று என்று கொள்வது தகும். ‘Poem’ என்ற சொல்லுக்கு ‘elevated composition in prose or verse’[6] என்றும் ‘a composition of high beuaty of thought or language, although not in verse” [7] என்றும் விளக்கம் தரப்பெறுவதை காண்கிருேம். மேலும் ‘Poetry’ என்ற சொல்லுக்கு work of the poet’s elevated expression or elevated thought or feelings”[8] என்றும், “The art of expressing in melodious words, the thoughts which are the creation of feeling and imagination”[9] என்றும் உரைகள் எழுதப் பெற்றுள்ளன. எனவே 'உரை' யெனப்படுவது சாதாரண வழக்கத்தில் உள்ளதாகவும் செய்யுள் என்பது பாட்டினையும் இறையனர் களவியல் உரை போன்ற உயர் நடை உரைகளையும் குறித்ததாகவும் கொள்ளல் சாலும் என அமைகின்றேன்.

இனி, உரை நடையை (Prose) இவ்வாறு அகராதிகள் காட்டுவதோடு 'Encyclopaedia Britanicca' என்ற பெரு விளக்க நூல் எவ்வாறு விளக்குகின்றது என்பதையும் ஈண்டுக் காணல் நலம் பயப்பதாகும். அதன் விளக்கம் வருமாறு:-

‘பாட்டுக்கு அமைந்த இலக்கண வரம்பின்றி, மக்களால் எளிமையாக ஒளிவு மறைவு இன்றி எழுதவும் பேசவும் பயன்படும் ஒன்றே உரையாகும். பாட்டிலிருந்து (Poetry) உரைநடையைப் பிரித்துக் காட்டுவது எளிதாயினும் இன்னும் திட்டமாக இரண்டையும் வரையறுக்க இயலாது. ஏனெனில், உயர்ந்த நடையில் பாட்டின் இலக்கணத் தோடு கலவாமல் நல்ல ஓசை நயத்துடன் எழுதும் உரைநடையை 'உரைச் செய்யுள்’ என்று கொள்வதும் உண்டு. எனவே, பாட்டிலிருந்து உரைநடையைப் பிரித்துக் காண்பதைவிட்டு, உரைநடை என்பதை உள்ளவாறு விளக்க முயலலாம். உரைநடை என்பது, இலக்கிய மரபு கெடாத நல்ல நடையில், ஆழ்ந்த கருத்தோடு, பாட்டுக்குள்ள சந்தச் சேர்க்கை இன்றியே நல்ல ஓசை நயம் உடையதாகி, ஒளிவு மறைவு இன்றி உள்ளதை உள்ளபடி உரையிட்டுக் காட்டும் வகையில் நேரிய முறையில், கருத்துக்கும் காரணத்துக்கும் பொருத்தமானதாக — ஒன்றினைப் பற்றியோ ஒருவரைப் பற்றியோ— விளக்கி உரைப்பதாகும்.

‘எனினும், உரை நடை என்பது கட்டுக்கடங்காது பேசும் அல்லது எழுதும் சாதாரண எல்லா வசனங்களையும் கொள்வதாகாது. உரைநடைத் தொடர்கள் இன்மொழியால் நல்ல ஒழுகிசை நடையால், தொடர் நலமுடன், ஓசை யுணர்த்தும் நெறியான் நன்கு வளர்ச்சியுற்ற தெள்ளிய நடையில் தெளிந்து செல்லுவனவாக அமைய வேண்டும். மொழிக்கு இன்றியமையாத பெயர் வினைகளுடன் சேரும் உரிச்சொற்களின் தகுதி அளவறிந்து அவற்றைச் சேர்த்து வழங்கும் முறையும் உரைநடையில் வரையறை செய்யப் பெறல் வேண்டும். தேவையற்ற சிலவற்றை விட்டொழித்தலும் உரைநடைக்கு இன்றியமையாதது. எனவே, உரைநடை யென்பது பாட்டின் விதிகளுக்கு விலக்காய் நின்று, இலக்கிய நலம் கெடாவகையில் மக்கள் உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளை உலகுக்கு எடுத்துக் காட்டப் பயன்படுவது என்று கொள்ளல் பொருந்தும்’[10].


இக்கூற்றும் நாம் மேலே காட்டிய கருத்தினை நன்கு வலியுறுத்துவதாகும். தமிழ்மொழியில் இத்தகைய உயர்ந்த செம்மொழியின் பாலதாகிய உரைநடையும் சாதாரண மக்கள் பேச்சு வழக்கில் உள்ள உரைநடையும் மிகப் பழங் காலந்தொட்டே வளர்ந்து வாழ்கின்றன என்பது தேற்றம். இப்பேச்சு வரிசையில் நாம் இரண்டு வகை ‘உரை’ நடைகளையும் காணலே பொருத்தமானதாகும்.


இனி, இத்தகைய நலம் வாய்ந்த உரைநடை இருக்க, பாட்டு ஏன் எழுந்தது? இவ்வுரை நடைக்கு இலக்கணம் ஏன் இல்லை? இவற்றிற்கு விடை கண்டு மேலே செல்லலாம். சாதாரண எளிய மக்கள் தத்தம் கருத்தைப் பரிமாறிக் கொள்ளப் பயன்பெற்ற உரைநடை இருக்கப் பாட்டு ஏன் எழுந்தது? அறிவு வளர வளர, உள்ள உணர்வும் கற்பனைத் திறனும் மிக்கு ஓங்கப் பாட்டு உருவாயிற்று. தாம் உள்ளத்துக் கொண்ட கருத்தோடு கற்பனைத் திறன் கலக்க, அவை உருப்பெற, சொல்லடுக்குகளும் அணி நலன்களும் கலந்து பொருந்தப் பாட்டு உருவாயிற்று. மேலும், தாம் விளக்க வந்த கருத்தினைப் பாட்டாக வடித்து வைப்பின் அப்படியே மனத்தில் பன்னெடுங் காலம் நினைத்து நிலை நிறுத்தவும் அப்பாட்டே பயன்பட்டது. உரைநடையை அப்படியே மனத்தில் உருவிட்டு நிலைநிறுத்துவதனினும் பாட்டினை மனத்திடைப் பதித்தல் எளிதல்லவா? எனவே, இவைபோன்ற பல காரணங்களால் பாட்டு உருப் பெற்றிருக்கலாம். மற்றும் உணர்வும் தெய்வநெறியும் பிற பண்பாடுகளும் வளர வளர, உளங் குளிர்ந்த போதெலாம் உணர்ந்துணர்ந்து பாடும் நெறியும் வளர்ந்திருக்கலாம். எனவே, உரைநடைக்குப் பின் பாட்டு வளரக் காரணங்கள் பல. விரிப்பிற் பெருகும்.


பாட்டிற்கு இருப்பது போன்று ஏன் உரைநடைக்கு இலக்கணம் இல்லை என்ற வினாவிற்கு விடை காணலும் தேவையே. உலகில் அன்றாடம் சாதாரணமாக நிகழும் செயல்களைப் பற்றி யாரும் எழுதி வைக்க விரும்புவதில்லையல்லவா? நாட்குறிப்பினைத் தவறாது விடாது எழுதுபவர்களும்கூட, அன்றாடம் முறையாகத் தாம்செய்யும் நித்தியக் கடன்களையும் எழுதுவது அரிதல்லவா? அந்த முறையிலே தான் இந்த உரைநடைப் பற்றியும் யாரும் எழுதி வைக்க விரும்பவில்லை. மக்கள் நாள்தோறும் ஒருவரை ஒருவர் காணும்போதும் கலக்கும்போதும் சாதாரண உரைநடையில் போசுவது மரபு. இப்பேச்சு வழக்கு இடந்தோறும்மாறுவது முண்டே! எனவே அவைபற்றி இலக்கண மரபினை ஏட்டில் எழுதாது எங்கோ யாரோ சில வேளைகளில் சிறப்பாக எழுதும் பாட்டினுக்கு மட்டும் இலக்கணம் எழுதி வைத்தார்கள். எனினும் உரையைப் பற்றிய பல்வேறு குறிப்புக்கள் பழங்காலத்திலேயே உள்ளமையை நாம் அறிகிறோம். தமிழில் மட்டுமின்றி, தமிழ் நாட்டோடு பழங்காலத்திலேயே தொடர்பு கொண்டிருந்த யவன நாடுகளிலும் இந்த வகையில் உரைநடைக்குத் தனி இலக்கணம் இல்லையாயினும், அது பற்றிய குறிப்புக்களைப் பரவலாகக் காண முடிகின்றது. கி.மு. ஐந்தாம் நூற்றண்டிலேயே கிரேக்க இலத்தீன் மொழிகளில் உரைநடை இலக்கியங்கள் இருந்தன எனவும் அவ்வுரைநடை கண்டவருள் சிறந்தவர் சிசரோ[11] எனவும் நம்மால் அறிய முடிகின்றது.[12] இரு நாடுகளிலும் தோன்றி வளர்ந்து வாழ்ந்த இருவேறு வகைப் பட்ட (தமிழ், கிரேக்க) இலக்கியங்களில் உரையும் பாட்டும் இருந்தன என்பதை ஆய்வாளர் நன்கு அறிவர். ‘உரையும் பாட்டும் உடையோர் சிலரே' (புறம். 27) எனப் புறநானூறு இரண்டையும் இணைத்தே பேசுகின்றது. 'பாட்டும் உரையும் பயிலாதன இரண்டு, ஒட்டைச் செவி யும் உள’ என்ற பிற்காலப் பாட்டும் இதை வலியுறுத்துகின்றது. மேலும் தொல்காப்பியமும் வெளிப்படையாக உரைக்குப் பேரிலக்கணம் வகுக்கவில்லை என்றாலும் உரையின் தொன்மையைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை என்பதை முன்னரே கண்டோம். இவ்வாறு தொல்காப்பியர் காலந்தொடங்கி-ஏன்?-அதற்கு முன்பிருந்துகூட-இன்று வரை தமிழில் உரைநடை வளர்ந்துகொண்டே வருகிறது. இனியும் தொடர்ந்து வளரும் என்பதில் ஐயமில்லை.

வரலாறு எங்கே?

தமிழ் உரைநடை வளர்ந்தாலும் அதன் வரலாற்றைத் தொடர்ச்சியாக அறியமுடியவில்லையேஎன்பதை எண்ணும் போது சற்றே வருத்தம் உண்டாகத்தான் செய்கிறது. எழுதப்பெற்ற, வரையறுத்த திட்டமான வரலாறு இல்லையாயினும் தமிழில் உரைநடை மிகப் பழங்காலந்தொட்டே தொடர்ந்து வாழ்ந்து வருகின்ற ஒன்று என்பதைக் காட்ட ஆதாரங்கள் உள்ளன. தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்பும் இருந்த உரைநடையை நம்மால் காண முடியாவிட்டாலும், அந் நூற்பாவாலும் அதன் உரைகளாலும், அவ்வுரையின் விளக்கங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறும், இன்றில்லாது, அழிந்த சில நூற்பெயர்களாலும் (இராம சரிதமும், பாண்டவ சரிதமும், பெருந்தேவனார் பாரதமும், தகடூர் யாத்திரையும் முதலியன என்று தொல்காப்பிய உரையாசிரியர்களால் காட்டப் பெறுவன) உரை தொன்மை வாய்ந்ததே என உணர முடிகின்றது. மேலும் சங்க இலக்கியங்களுள் சில உரை நடையைப் போன்றே தனிச்சொல் பெற்றும் பெறாமலும் அமைந்து செல்வதையும் காண முடிகின்றது. கடைச் சங்க காலத்து இறுதி எல்லையில் தோன்றிய சிலப்பதிகாரத்திலேயே நம்மால் உரைநடையைத் தெளிவாகக் காண முடிகிறது. இதனாலேயே தொல்காப்பியச் சூத்திரத்துக்கு (செய். 238) உரை காண வந்த நச்சினர்கினியர் அதற்குச் சிலப்பதிகாரத்தையே மேற்கோளாகக் காட்டியுள்ளார்.

சிலம்பில்

தொல்காப்பியர் காலங்கடந்து, சிலப்பதிகாரக் காலத்தில் நம்மால் தெளிந்த உரைநடையைக் காணமுடிகின்றது அல்லவா? அச்சிலப்பதிகாரக் காலத்தைக் கி. பி. இரண்டாவது நூற்றாண்டு எனக் கணக்கிட்டுள்ளனர் அறிஞர். எனவே அந்த நூற்றாண்டு தொடங்கிச் சென்ற நூற்றாண்டின் தலைவாயில் வரையில் வந்தோமானல் தமிழ் உரை நடை வளர்ச்சியை ஒருவாறு உணர்ந்தோமாவோம். சிலப்பதிகாரத்திற்கே 'உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்ற பெயர் உள்ளதை மேலே கண்டோம். சிலப்பதிகாரத்தே தொடர்ந்து உரைநடையைக் காண இயலாது என்பதை இக்குறிப்பே உணர்த்தும். எனினும், அதில் தெளிந்த உரைநடை இருப்பதை இடையிடையே காண்கிறோமே. 'உரை பெறு கட்டுரை.' 'உரைப் பாட்டு மடை' என்ற வகையில் சிலம்புக்கு இடையிடையே உரை தன் ஒலியை எழுப்பி நம்மையும் எழச் செய்கிறது அல்லவா? இந்தச் சிலம்பின் உரைநடையைக் காணும் போதுதான் அதன் ஏற்றமும் நமக்கு நன்கு விளங்குகின்றது. இன்று சிலர் சாதாரணப் பேச்சு வழக்கில் நம் வழக்கத்தில் உள்ளவாறே எழுதுவது தான் உரைநடை என்று வாதித்து நின்றதைக் கண்டோம். அந்தப் பேச்சு நடை 'உரைநடை'யேயாயினும் அது இலக்கிய உரைநடையாகவோ, காலத்தை வென்று கவிதையென வாழும் உரைநடையாகவோ இருக்க வழியில்லை. அத்தகைய உரைநடை, நம்முன் நிற்கும் கடந்த ஒரு நூற்றண்டில் பலவகையில் வளர்ந்துள்ளது. (அவற்றையே அடுத்த நாட்களில் விளக்கமாகக் காண இருக்கின்றாேம்.) எனினும், சிலம்பினை நோக்கும்போது அதன் உரையைப் பற்றி ஆராயும் நமக்கு அவையும் தேவையானமையின் அவைபற்றி ஆங்காங்கே காணலாம்.


சிலப்பதிகாரத்தின் தொடக்கத்திலே அதன் உரை மணம் கமழ்கின்றது. அந்த உரைநடை, பாட்டினும் கடினமானது போன்று காட்சியளிக்கின்றது. சிலம்பின் அகவலை அறிந்து உணர்வதிலும் உரைநடையை உணர்வது கடினமே எனவும் நினைக்க வேண்டியுள்ளது. எனினும், அவ்வுரையின் ஏற்றத்தையும் ஏறுபோற் பீடுநடையிட்டுப் பெருமை பெற்றுச் சிறப்பதையும் என்றென்றும் நம்மால் மறக்க இயலாதே. இளங்கோவடிகள் வாக்கில் ஒன்று காணல் பொருந்துவதாகும். அதுவும் விழாவோடு பொருந்தியதாக நாட்டை வளங்கொழிக்க வழிகாட்டுவதாக அமையட்டும். ‘உரை பெறு கட்டுரை’ என்ற தலைப்பிலே கண்ணகிக்கு விழா ஆற்ற, முடியுடை வேந்தர் மட்டு மன்றிப் பிறநாட்டவரும் பத்தினித் தெய்வத்தைப் பரவிப் பயன் பெற்ற வகையைக் கூறுவது அது. இதோ அவர் வாக்கை நீங்களே கேளுங்கள்.


"அன்றுதொட்டுப் பாண்டிய நாடு, மழை வளம் கரந்து, வறுமை எய்தி, வெப்பு நோயும் குருவும் தொடரக் கொற்கையில் இருந்த வெற்றி வேற்செழியன் நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய, நாடு மலிய மழைபெய்து நோயும் துன்பமும் நீங்கிற்று.

அதுகேட்டு, கொங்கிளங் கோசர், தங்கள் நாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய மழை தொழில் என்றும் மாறாதாயிற்று.

அதுகேட்டு, கடல்சூழ் இலங்கைக் கயவாகு என்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகைக் கோட்ட முந்துறுத்து, ஆங்கு 'அரந்தை கெடுத்து வரம் தரும் இவள்' என, ஆடித் திங்கள் அகவையின் ஆங்கோர் பாடி விழாக்கோள் பன்முறை எடுப்ப, மழை வீற்றிருந்து, வளம்பல பெருக்கி, பிழையா விளையுள் நாடாயிற்று.

அதுகேட்டு, சோழன் பெருங்கிள்ளி, கோழியகத்து, 'எத்திறத்தானும் வரந்தரும் இவள் ஓர் பத்தினிக் கடவுளாகும்' என நங்கைக்குப் பத்தினிக் கோட்டமும் சமைத்து நித்தம் விழாவணி நிகழ்வித்தோனே."

இவ்வுரைநடையைப் படிக்கும் யாரும் உள்ளத்து உயர்வு பெறுவரன்றே? இந்த அளவுக்குச் சிலம்பில் உரைநடை உயர்ந்திருக்கவேண்டுமாயின் அதற்கு முன் எத்தனை எத்தனை நூற்றாண்டுகள் அவ்வுரைநடை தவழ்ந்து, வளர்ந்து, தழைத்து, ஓங்கி, உயர்ந்து, உற்ற பெருநிலையில் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை உணர முடிகின்றதன்றாே?

களவிய லுரை

காப்பிய காலத்துக்குப் பிறகு தமிழ் நாட்டின் இருண்ட காலம் வரலாற்றில் இடம் பெற்றுள்ளதை யாவரும் அறிவர். எனவே இலக்கியமும் அத்துணை ஏற்றம் பெறவில்லை என்பதைக் காணமுடிகின்றது. ஆகையால் உரை நடையின் நிலையையும் நம்மால் உணர்ந்துகொள்ள இயலவில்லை. எனினும், தமிழர் தம் வாழ்வும், வளமும், பண்பாடும், நாகரிகமும் பிறநாட்டார் படையெடுப்பாலும் பிற சூழல்களாலும் நீறுபூத்த நெருப்பென மங்கியிருந்து காலம் மாறிய நாளில் மறுபடியும் வீறுபெற்றமை போன்றே உரைநடையும் மங்கித் தவழ்ந்து எட்டாம் நூற்றண்டளவில் தன்னை விளக்க, ஒரு சிறந்த உரை நூலாக உருப் பெற்றது. இரண்டாம் நூற்றண்டை ஒட்டிய காலத்தில் தோன்றிய அவ்வுரைநடை, செவிவழியாக ஒருவர் வாய் ஒருவர் கேட்டுக் கேட்டு—ஆறு நூற்றாண்டு எல்லையை மெல்லக் கடந்து—எட்டாம் நூற்றண்டில் ‘இறையனர் களவியல் உரை’ என்ற பெயரொடு உலகில் உருப்பெற்றது. தமிழ் உரைநடையை விளக்கவே அந்நூல் எழுந்ததோ என்னும் அளவில்தானே அது அமைகின்றது! இரண்டடி நூற்பாவிற்குப் பல பக்கங்கள் உரை விளக்கங் காணப்பெறுகிறோம். அது பற்றிய ஆய்வு இங்கே நமக்கும் தேவையில்லை. அந்த உரைநடையின் அமைப்பையும், போக்கையும், அழகையும் கண்டு மேலே செல்லலாம்.

தலைமகள்—பல நூறு தோழியரோடு கூடி வாழ்ந்த தலைமகள் —எப்படித் தமியளாய் நிற்கின்றாள் என்பதை விளக்கும் நக்கீரர் நாநலம் காண நலம் பயப்பதாகும்.

யாங்ஙனம் நிற்குமோவெனின், சந்தனமும் சண்பகமும் தேமாவும் தீம்பலாவும் ஆசினியும் அசோகும் கோங்கும் வேங்கையும் குரவமும் விரிந்து, நாகமும் திலகமும் நறவும் நந்தியும் மாதவியும் மல்லிகையும் மெளவலொடு மணங் கமழ்ந்து, பாதிரியும் பாவை ஞாழலும் பைங் கொன்றையும் பிணி யவிழ்ந்து, பொரிப்புன் கும்புன்னாகமும் முருக்கொடு முகை சிறந்து, வண்டறைந்து தேனோர்ந்து வரிக்குயில்கள் இசைபாட, தண்தென்றல் இடைவிராய்த் தனியவரை முனிவு செய்யும் ஒரு பொழிலது நடுவண்; ஒரு மாணிக்கச் செய்குன்றின் மேல், விசும்பு துடைத்துப் பசுப்பொன் பூத்து, வண்டு துவைப்பத் தண்தேன் துளிர்ப்பதோர் வெறியுறு நறிமலர் வேங்கை கண்டாள்; கண்டு பெரியதோர் காதல் களிகூர்ந்து, தன் செம்மலர்ச் சீறடி மேல் சிலம்பு கிடந்து சிலம்பு புடைப்ப, அம்மலர் அணிக்கொம்பர் நடை கற்பதென நடந்து சென்று, நறைவிரி வேங்கை நாண்மலர் கொய்தாள்; கொய்தவிடத்து மரகதமணி விளிம்படுத்த மாணிக்கச் சுனை மருங்கினதோர் மாதவி வல்லி மண்டபத்துப் போது

வேய்ந்த பூநாறு கொழுநிழற் கீழ்க் கடிக்குருக் கத்திக் கொடி பிடித்துத் தகடுபடு பசும் பொற் சிகரங்களின் முகடு தொடுத்து வந்து இழிதரும் அருவி ஆடகப் பாறை மேல், அதிர்குரல் முரசின் கண்ணிரட்ட, வண்டும் தேனும் யாழ் முரல, வரிக் குயில்கள் இசை பாடத் தண்தாது தவிசுபடப் போர்த்ததோர் பளிக்குப் பாறை மணித்தலத்து மீமிசை, நீல ஆலவட்டம் விரித்தாற்போலத் தன் கோலக் கலாவம் கொள விரித்து, முளை இளஞாயிறு இளவெயி லெறிப்ப, ஓர் இளமயிலாடுவது நோக்கி நின்றாள்.”

என்பது நக்கீரர் வாக்கு. ஆம்! அவள் நிற்கும் அழகினைக் காட்டிலும் அவளை ஈர்த்து ஆடும் மயிலினைக் காட்டிலும் அவற்றை விளக்கிய உரைநடையின் அழகன்றோ அனைவர் உள்ளத்தையும் கவர்ந்து உருக்குகின்றது.

உரையாசிரியர்கள்

இறையனார் களவியலுரைக்குப் பின் நாட்டில் பல் வேறு நூல்களுக்கு உரைகள் எழுதப்பெற்றன. உரை நடை இலக்கியம் வேறு வகையிலும் வளர்ச்சியுற்றது. அவ்வளர்ச்சிக் கிடையில் எத்தனையோ மாற்றங்களும் ஏற்றத் தாழ்வுகளும் இடம் பெற்றன. வேற்றுமொழிக் கலப்பினால் தமிழ் உரைநடை உருமாறிற்று—பிறழ்ந்தது—பின் சிறந்தது. எத்தனையோ வகைகளில் உரைநடை வளரலாயிற்று. ஒன்றன்பின் ஒன்றாகத் தொட்டுக் கண்டு விரைந்து நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைவாயிலுக்கு வரலாம்.

சங்ககாலத்திலும் அச் சங்கம் மருவிய காலங்களிலும் பின் இருண்ட காலத்திலும் பல இலக்கியங்கள் எழுந்தன. அவற்றிற்கும் தொல்காப்பியம் என்னும் இலக்கணத்திற்கும் நாட்டில் உரை கண்ட நல்லவர்கள் பல்லோர். அவர்களுள் தலைசிறந்தவராகப் போற்றப் பெறுபவர் பேராசிரியர், நச்சினர்க்கினியர், இளம்பூரணர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகர், சேனவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர் என்பவர்களே. இவர்தம் உரைகள் இன்றளவும் தமிழை உரையிட்டு ஏற்றங்கண்டு போற்றும் வகையில் அமைந்துள்ளதை யாவரே அறியாதார்? உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் உரை, இலக்கணம் இலக்கியம் என்ற இரண்டற்கும் உள்ளது. இவர் தொல்காப்பியம் முழுதுக்குமே உரை எழுதினர் என்பர் (அதில் கடைசி நான்கு இயலுக்கு உரை காணக்கிடைக்கவில்லை போலும்). இளம் பூரணர், சேவைரையர், பேராசிரியர், தெய்வச்சிலையார், கல்லாடர் என்ற பெருமக்கள் தொல்காப்பியத்துள் சிற்சில பகுதிகளுக்கு உரை எழுதினவர்கள் என்பதை இன்றும் அவர்தம் உரைவழியே காண்கிறோம். சீவகசிந்தாமணி, பத்துப் பாட்டு, கலித்தொகை என்ற காப்பிய, சங்க இலக்கியங்களுக்கும் நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார். குறுந்தொகைக்கும் இவர் உரை எழுதினார் என்று ஐயர் அவர்கள் அந்நூலின் முன்னுரையில் குறித்துள்ளார்கள். இவர்களையன்றி இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லாரும், திருக்குறளுக்குப் பரிமேலழகரும் எழுதிய உரைகள் உலகம் உள்ளளவும் வாழும் திறன் பெற்றுவிட்டன. குறளுக்குப் பதின்மர் உரைகண்டனர் எனவும் அவற்றுள் சிலவே கிடைக்கப்பெற்றன எனவும் அறிகிறோம் சிலம்பின் அரும்பத உரையாசிரியரும் நம்மால் போற்றத் தக்கவரன்றாே? திருக்கோவையார் முதலிய சமய இலக்கியங்களுக்கும் உரை கண்ட பெருமை அக்காலத்தியதே. இவ்வாறு,தமிழக வரலாற்றின் இடைக்காலத்தில் பண்டைத் தமிழ் நூல்களை உலகுக்கு உணர்த்தவும் அவற்றை எல்லையற்ற காலம் நிறைவுற்று வாழ வைக்கவும் கருதிப் பல நல்லவர்கள் உரை எழுதினர்கள். அவர்கள் தமிழ் உரைநடையை வளர்த்ததோடு அப்பழம் பெரும் இலக்கியங்களையும் வாழவைத்த பெருமைக்கும் இலக்காகி விளங்குகின்றார்களன்றாே? இவர்தம் உரைநடைகளுள் ஒரு சிலவற்றைக் கண்டு மேலே செல்லல் பொருத்தமானதாகும். இவர்தம் காலம் ஏறக்குறையக் கி. பி. பதினேராம் நூற்றாண்டிற்கும் பதினான்காம் நூற்றாண்டிற்கும் இடைபட்ட காலமே என்பர் ஆய்வாளர். ஓரிருவர் காலத்தான் முன்னே செல்ல வாய்ப்பும் உண்டு. இக்காலத்தில் தமிழில் வேற்று மொழிகள், சிறப்பாக வடமொழி, விரவிக் கலந்துள்ளமையை நம்மால் காணமுடிகின்றது; என்றாலும் சில உரையாசிரியர்கள் பழையதிலும் பழையதான வகையில் தம் உரைப்போக்கை அமைத்துள்ளமையை அறிகின்றாேம். இவர் தம் உரைகள் மூலங்களுக்கு உரைகளே என்னும் நினைவை மறப்பித்து, தாமே பேரிலக்கியங்களோ என்னும் நினைவையும் சிற்சில இடங்களில் உண்டாக்குகின்றன என்பதைப் பயின்றாேர் நன்கு உணர்வர். ஒரு சில இடங்களை நோக்கின் 'நூலாசிரியர் இத்தகைய நுண்ணுணர்வுடன் பாடினரா? அன்றி உரையாசிரியர் உளவண்ணமும் உரை வண்ணமும் இத்தகைய ஏற்றத்தைத் தருகின்றனவா?’ என்று வியக்கத் தோன்றும். எனவே, உரையாசிரியர்கள் ஆய்ந்தமைந்த கல்வி அறிவும் முடிவிலா ஆற்றலுடைமையும் பெற்றமையே அவர்தம் சிறந்த உரைகளை உலகில் அன்று மட்டுமன்றி இன்றும் என்றும் வாழவைக்க உதவின—உதவுகின்றன—உதவும் என்பது பொருந்தும். ஒரு சில காணலாம்.

இளம்பூரணர் இலக்கணத்துக்கு உரை வகுக்கின்றார். களவியல் முதற் சூத்திரத்தில் தொல்காப்பியர் தம் நூலில் முப்பொருளை வைத்த முறைமையை இவர்,

‘அறனும் பொருளும் இன்பமும்' என்னாது ‘இன்பமும் பொருளும் அறனும்' என்றது என்னை யெனின், பலவகை உயிர்கட்கு வரும் இன்பம் இருவகைப்படும். அவையாவன போகம் நுகர்தலும் வீடு பெறுதலும் என. அவற்றுள் வீடுபேறு துறவறத்தில் நின்றர்க் கல்லாது எய்தல் அரிதாயிற்று. போக நுகர்தல் மனையறத்தார்க் கெய்துவது. அவரெய்தும் இன்பமும் அவ்வின்பத்திற்குக் காரணமாய பொருளும் அப்பொருளுக்குக்

காரணமாய அறனும் எனக்காரிய காரணம் நோக்க வைத்தார் என்க,

என விளக்குவது சிறந்தன்றாே?

'கிளவியாக்கம்' என்ற தொடருக்குப் பொருள் கூற வந்த சேனாவரையர்.

'வழுக்களைந்து சொற்களையாக்கிக் கொண்டமையான் இவ்வோத்து 'கிளவியாக்கம்' ஆயிற்று. ஆக்கம் - அமைத்துக் கோடல். நொய்யும் நூறுங்கும் களைந்து அரிசி அமைத்தாரை அரிசியாக்கினர் என்பவாகலின். சொற்கள் பொருள் மேல் ஆமாறு உணர்த்தினமையால் கிளவியாக்கம் ஆயிற்று எனினும் அமையும். பொதுவகையாற் கிளவி என்றமையால், தனி மொழியும் தொடர் மொழியும் கொள்ளப்படும். கிளவி, சொல், மொழி என்னும் தொடக்கத்தன வெல்லாம் ஒரு பொருட் கிளவி

என விளக்குவார்.

பேராசிரியரோ, தொல்காப்பியர் காட்ட நினைத்த பொருள் நிலைகளை நன்கு உணர்ந்தவர். அவர் புல்லையும் மரத்தையும் தொல்காப்பியர் காட்டிய வழியே சென்று காட்டுகிறார்.

'புறக்காழன எனவே, அவ்வழி வெளிறென்ப தறியப்படும். அவை பனையுந் தெங்கும் கமுகும் முதலாயின புல்லெனப்படும்: இருப்பையும் புளியும் ஆச்சாவும் மரமெனப்படும். இங்ஙனம் வரையறை கூறிப் பயந்ததென்னே? புறத்தும் அகத்தும் கொடி முதலாயின காழ்ப்பின்றியும் அகின் மரம் போல் வன இடையிடைப் பொய்பட்டும் புல்லும் மரனும் வருவன உளவாலெனின்-இரண்டிடத்தும் ஏகாரம் பிரித்துக் கூறினமையாலும் 'என மொழிப’ என்று இருவழியும் சிறப்பித்து விதந்தமையானும் சிறு பான்மை அவையும் புல்லும் மரனுமென அடங்கு மென்பது’

என்பது அவர் விளக்கம்.

நாச்சினர்க்கினியர் முல்லைப்பாட்டிற்கு விளக்கங்கூற வந்தகாலை,

‘இப்பாட்டிற்கு முல்லையென்று பெயர் கூறினார், முல்லை சார்ந்த கற்புப் பொருந்தியதனால், இல்லறம் நிகழ்த்துதற்குப் பிரிந்து வருந்துணையும் ஆற்றியிருவென்று கணவன் கூறிய சொல்லைப் பிழையாமல் ஆற்றியிருந்து இல்லறம் நிகழ்த்திய இயற்கை முல்லையாமென்று கருதி இருத்த லென்னும் பொருடர முல்லையென்று இச்செய்யுட்கு நப்பூதனார் பெயர் கூறினமையின், கணவன் வருந்துணையும் ஆற்றியிருந்தாளாகப் பொருள் கூறலே அவர் கருத்தாயிற்று. ‘தானே சேறல்’ (தொல். அக. 27) என்னும் வழியால், அரசன் தானே சென்றது இப்பாட்டு’

என விளக்கங் காட்டுகின்றார். இவ்வாறே, அடியார்க்கு நல்லார், பரிமேலழகர் முதலிய உரையாசிரியர்கள் கூறிய உரை விளக்கங்கள் பல. வேறுபல உரையாசிரியர்களும் அக்காலத்தில் பல்வேறு நூல்களுக்கு உரைகள் எழுதித் தமிழ் உரைநடையை வளர்த்தனர் எனல் பொருந்தும். இத்துறையில் இன்னும் விரிப்பிற் பெருகுமாதலால் மேலே செல்லலாம்.

கல்வெட்டின் உரைநடை

இருபதாம் நூற்றண்டின் பல ஆராய்ச்சிகளுள் ஒன்று பழமையைத் துருவி ஆராய்தல். தமிழ்நாட்டுப் பழைய வரலாற்றை அவ்வாறு துருவி ஆராயப் பயன்படுவதற்கு மிக்க உதவியாக இருப்பன இடைக்காலத்தில் உண்டான கல்வெட்டுக்களே யாகும். கல்மேல் வெட்டப்பட்டு இன்றளவும் வாழ்கின்ற அவ்விலக்கியங்களை ஆராய்ந்து இன்று வெளியிடுகின்றனர். அவை பாட்டும் உரையும் விரவியனவாகவே அமைந்துள்ளன. தமிழ் நாட்டுப் பல்வேறு பகுதிகளிலும் கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் முற்பகுதி அவ்வக் காலத்து அரசர்தம் புகழ் பரப்பும் மெய்க்கீர்த்திகளா யமையப் பிற்பகுதிகள் பெரும்பாலும் அறமாற்றும் நிலையை விளக்குவன. முற்பகுதி பெரும்பாலும் அகவற் பாக்களால் அமைய, பிற்பகுதிகள் உரைநடையாகவே உள்ளன. தமிழ் நாட்டில் படி எடுத்த கல்வெட்டுக்கள் சில; எடுக்க வேண்டுவன பல. எனவே, தமிழ் உரைநடை, செவிவழியாக வந்து, ஓலை ஏட்டிலேயும் உதட்டிலேயும் தன் வாழ்வை அமைத்துக்கொண்ட தோடமையாது, என்றும் நிலைபெறும் கல்லிலும் தன் வாழ்வை அமைத்து, அக்கற்களையே தன் புகழ் பாடும் கவிக் கூடங்களாக மாற்றிக் கொண்டது. மிகப் பழங்காலந் தொட்டு வந்த இந்த வழக்கம் பிற்காலச் சோழர் பாண்டியர் காலத்தில் மிகுந்த உச்ச நிலையில் இருந்தது. நாம் காண இருக்கும் கால எல்லையிலும்—ஏன்? இன்றும் கூடக் கல்லில் உரைநடையையும் பாட்டையும் செதுக்கிப் பரப்பும் நிலையைக் காணுகின்றோம். சோழ பாண்டியர் காலக் கல்வெட்டுக்களில், அவற்றின் உரைநடை நலத்தைக் கண்டு மேலே செல்லலாம். இது சற்றே புதியதாகவும் மாறுபட்டதாகவும்கூடத் தோன்றும்.

‘ஸ்ரீ திருபுவநச் சர்கிர விற்த்திகள் ஸ்ரீ ராச ராச தேவருக்கு யாண்டு பதினாறாவதற்கெதிராம் ஆண்டு நாள் இருநூற்றெழுபத்திரண்டு காங்கய ராயனும் திருமஞ்சனம் அழகியனும் தென்னவன் பிரமராயனும் ஆளுடையயையனாயனாற்ற் கோவிலுக்கு ஸ்ரீ காரியம் செய்வார்களும் சமுதாயம் செய்வாற்களும் கோவில் நாயகம் செய்வாற்களும் சமுதாயம் செய்வாற்களும் செய்யத் திருவாய் மொழிந்தருளினபடி, உய்யக்கொண்டார் வள நாட்டு அம்பர் நாட்டு அம்பாருவந்தை அரயன் சிவேத வன பெருமானை தொண்டமான் பெரும் பெற்றப் புலியூற் முடித்தலைக் கொண்ட பெருமாள் திருவீதி மேலைத் திருவீதி கீழைச் சிரகில் யெடுப்பித்த அறப் பெருஞ் செல்வி சாலையில் உண்ணும் ஆதுலற்கு அரிசியும் கறி விறகு உள்ளிட்ட விஞ்சனத்துக்கும் அடுவார்த் தண்ணீர் வார்ப்பாற்க்குஞ் சாலை அழுவு கொரவும்

உன்னிட்டு வேண்டுவன வையரத்துக்கு இரை மிகுதி கொண்டு செய்ய இவன் காணியான நிலத்துக்குத் தந்த ராசாதிராச வளனாட்டு பாண்டூரான குலோத்துங்க சோழன் வல்லத்து நிலமாய் ராச ராசன் அம்பர் யென்னும் பெறவேணு மிடுக்கச் சொன்ன நிலம் நாற்பத்திநாலேகாலும் பதினாராவதினெதிராமாண்டு பிசான முதல் யிச்சாலைக்குக் காணிக்கைக் கொள்ளவும், இந்த நிலத்துக்கு இவன் தந்த சாதனம் திருக்கை ஒட்டியிலே ஒடுக்கி வைத்துக்கொண்டு இப்படிக் குலோத்துங்க சோழன் திருமாளிகையிலே கல்வெட்டவும் கடவதாகப் பெறவேணும் யென்று இவன் நமக்குச் சொன்னமையில் யிப்படி செய்யக் கடவதாகச் சொன்னோம். இப்படி செய்யப்பண்ணுவது, யெழுதினான் திருமந்திர ஓலை நெறியுடைய சோழ வேந்த வேளாயென்றும் திருவாய் மொழிந்தருளினார் இவை செதிராயன் எழுத்தென்றும் இவை விழுப்பாதிராயன் யெழுத்தென்றும் இவை காலிங்கராயன் யெழுத்தென்றும் இவை செகுதிராயன் யெழுத்தென்றும் இவை காங்கெயராயன் யெழுத்தென்றும் பிரதாசம் செயிதருளி வந்த செய்யும்படி கல்வெட்டியது.’[13]

மணிப் பிரவாளம்

இக்கல்வெட்டுச் சிதம்பரம் கோயிலில் உள்ளது என அறிகிறோம். இதன் நடையில் பெரு மாறுதல் நம்மாள் உணர முடிகின்றது. எழுத்துப் பிழைகளும் நிரம்ப உள்ளதையும் காண்கின்றாேம். இதுவரை நாம் கண்டு வந்த உரைகளுக்கும் இதற்கும் உள்ள வேற்றுமையினையும் நம்மால் உணர முடிகின்றது. இவை கல்வெட்டுகளானமையின் கல்லில் செதுக்க முடியாதநிலையிலோ அன்றிச் செதுக்கினவன் நல்ல எழுத்தறிவற்றவன் என்ற காரணத்தாலோ இக்குறை நேர்ந்திருக்கலாம் என எண்ணவும் முடியாது. தமிழ் நாட்டு வரலாற்றின் இடைக்காலத்திலே இத்தகைய மாற்றங்கள் மொழியில் மட்டுமன்றி வாழ்வு, பண்பாடு, நாகரிகம், சமுதாய நிலை இன்ன பிறவற்றிலும் உண்டாகியிருப்பதைக் காணமுடிகின்றமையின் இம்மாற்றமும் அவற்றை ஒட்டி வந்தது எனக் கொள்வதே பொருந்தமாகும். பிற மொழிச் சொற்களும் இதில் அதிகம் இடம் பெற்றிருப்பதைக் காண முடிகின்றது. ஏறக்குறைய இக்காலத்தில் எழுந்த உரைநடை நூல்களிலும் இத்தகைய வாடை வீசக் காணலாம். நாலாயிரப் பிரபந்தத்துக்குப் பேருரைகள் எமுந்த காலத்திலே வடமொழி அதில் அதிக இடம் பெற்றிருப்பதை நம்மால் காணமுடிகின்றது. அதை ‘ஈடு’ என்று நாம் போற்றிப் பாராட்டுகின்றோம். அந்த நடையையே மணியும் பவளமும் கலந்த நடை என்று பொருள்படும்படியான ‘மணிப்பிரவாள’ நடை என அழைக்கின்றாேம். அக்காலத்தில் அத்தகைய நடை எழுதுவதுதான் சிறந்தது என மக்களும் மன்னரும் கருதியிருக்கக்கூடும். தமிழ் உரைநடை வரலாற்றில் இது ஒரு திருப்பமேயாகும். எனினும், இந்த நடை அதிகமாக வழக்கத்தில் இல்லை. வைணவப் பெரு நூல்களுக்கு அமைந்த உரைகளிலும், கல்வெட்டுகளிலும் வேறுசில சமய வேதாந்த நூல்களிலும் இந்நடையைக் காணமுடிகின்றது. இந்த அமைப்பும் பத்தொன்பதாம் நூற்றண்டிலும் உள்ளதைப் பின்னர்க் காணலாம். அதற்குமுன் ‘மணிப்பிரவாள’ உரைநடைக்குச் சான்றாகவும்-ஈட்டுரையிலிருந்து இரண்டொரு பகுதிகள் இங்கே காணல் பொருத்தமானதாகும்.

தெய்வத் திருப்பாசுரமாகிய திருவாய் மொழிக்கு 'ஈடு’ உயர்ந்த உரையாக அமைகின்றது. என்றாலும் விளங்கிக் கொள்ள முடியாத-பிற உரைகளுக்குமாறுபட்ட-வகையில் மணிப்பிரவாள நடையில் அது அமைந்தகாரணத்தாலேயே நாட்டில் அவ்வளவு விளக்கம் பெறவில்லையோ என எண்ண வேண்டியுள்ளது. எனினும் நம் உரைநடை வளர்ச்சி எல்லையில் அதுவும் ஒரு மைல் கல்லாக அமைகின்ற காரணத்தால் அந்த நடையிலேயும் நாம் ஒன்று காணல் தேவையே. நம் பல்கலைக் கழக முயற்சியினால் அது படித்து உணரத்தக்க வகையில் வெளிவந்துள்ளமை மகிழ்ச்சிக்குரியதே. ‘அஞ்சிறைய மடநாராய்’ என்ற பாட்டின் ‘நல்கித்தான் காத்தளிக்கும்’ என்ற தொடருக்கு உரிய உரையைக் காண்போம்.

‘(நல்கி) விபூதி ரக்ஷணம் பண்ணும்போது கர்த்தவ்ய புத்தியாவன்றிக்கே பேறு தன்னத்தாகக் கிடீர் ரக்ஷிப்பது. எனக்குத் தன் பக்கல் உண்டான வியா மோகம் தனக்கு விபூதியிலே உண்டாயிற்று. ரக்ஷிப்பது (தான்) அபேக்ஷிப்பாரின் றிக்கே யிருக்கத் தானே ரக்ஷிக்கும் அவன். (பொழிலேழும்) கீழும் மேலும் ஒன்றாக நினைத்துச் சொல்லுகின்றதால், ஸ்வ சரீர ரக்ஷணம் பண்ணுவது ஸ்நேக புரஸ்ஸரமாகையிறே. ‘நல்கி தான்’ இத்யாகி) நாமரூப விபாகா நர்ஹமாய் கிடந்தவன்று யாரிடமிருந்து அபேக்ஷிக்க இத்தை உண்டாக்கிற்று. சக்திய வஸ்த பிரபை (நீறுபூத்த நெருப்பு) போல, தான் என்கின்ற சொல்லுக்கு உள்ளேயாய்த் தன்னையிட்டு விவரிக்கவேண்டின அன்று தன்மேலே ஏறிட்டுக் கொண்டு நோக்கினானாயிற்று (காத்தளிக்கும்) காத்துக் கொடுக்கு மென்னுதல் (‘வினையேற்கே நல்கத்தா னாகாதோ’) இல்லாதவன்று உண்டாக்கினாய், உண்டாக்கினதற்குப் பலம் கர்மத்தை ஏறிட்டுக் கைவிடுகையோ? ஸ்வ ஜனரக்ஷணம் பண்ணவாகாதோ? நாட்டுக் கிட்ட நினைப்பு அந்தப்புரத்துக்கு அரிதாக வேணுமோ? (‘வினையேற்கே’) கடலிலே ஏற்ற மிட்டுத் தண்ணீர் அரிதாம்படியான பாவத்தைப் பண்ணுவேனே. (‘நாரணனைக் கண்டக்கால்’) ஜீவ சமூகத்தினுடைய ஸ்வரூப ஸ்திதியாதிகள் ஸ்வாதனமாய் இவை ப்ரகாரமாக, தான் பிரகாரியாய், இவற்றிலே ஒன்று குறையிலும் தம்

இழவாம்படி இருக்கையாலே நாராயணன் என்று விருதுழதித் திரிகிறவரைத் கண்டக்கால், இப்பேர் யோக ரூடியோ என்றிருந்தோம் மஹா விருட்சத்தோபாதியோ என்று கேளுங்கள் (கள்ளி, மல்குநீர் இத்யாதி) உன்செயல் பரார்த்தமாய் இருந்ததீ: பெருகா நின்றுள்ள நீரை உடைத்தான நீர் நிலம் உண்டு—கொடித் தோட்டம் அதிலே (இரை தேர்) பெடையின் வாய்க்கு அடங்குவது தேடா நின்றது. புள்ளுப் பிள்ளைக்கு இரைதேடும் எனக் கடவதிறே? கயலுகளா நிற்கச் செய்தேயிறே, பிள்ளை வாய்க்கடங்குவது தேடுகிறது.’

இதில் கடவதிறே, செய்தேயிறே என்ற சொல்லமைப்பு முறைகளையும் வடமொழிச் சொற்கள் மட்டுமின்றி எழுத்துக்களும் அப்படி அப்படியே எடுத்தாளப் பெறுவதையும் காண முடிகின்றது.

திருப்பம்

ஏறக்குறைய பதினாறாம் நூற்றாண்டிற்குப் பின் தமிழ் உரைநடை மறுபடியும் வீறுநடையிட்டு வளரத் தொடங்கியது எனலாம். எனினும், அந்த நூற்றாண்டில் சிறந்த உரைநூல்களைக் காண முடியவில்லை. ஆயினும், அடுத்த நூற்றாண்டில் காணும் உரைநடையை நோக்கும்போது அதற்குமுன் நூற்றாண்டிலும் அதன் செழுமை புலப்படாமல் போகாது. பிற்காலத்திய உரையாசிரியர் நிலையில் சிறு மாறுதல்கள் காண்கின்றாேம். நூலெழுதியவர்களே உரை எழுதல் நலம் பயக்காது என்ற காரணத்தினலோ ஏனோ பழங்காலத்தில் உரையாசிரியர்கள் நூலாசிரியரினும் வேறு பட்டவராக இருந்து அவ்வந் நூல் பற்றிய ஆய்வுகளைத் தெள்ளத் தெளிய வெளியிட்டனர். ஆயினும், பதினேழாம் நூற்றாண்டை ஒட்டி வாழ்ந்த இலக்கண நூல்கள் இயற்றிய வைத்தியநாத தேசிகர், சாமிநாத தேசிகர் முதலியோர் தாமே தம் நூல்களுக்கு உரையும் எழுதினர் என்பர். அதன் காரணத்தாலேதான் அவை இத்துணை விரைவில் வழக்கொழியத் தொடங்கிவிட்டனவோ என நினைக்க வேண்டியுள்ளது. அக்காலத்தில் கல்லாடத்துக்கு உரை எழுதிய மயிலேறும் பெருமாள் என்பவரும் வாழ்ந்திருந்தனர். அவர்கள் உரைகளையெல்லாம் ஈண்டு விளக்கத் தேவையில்லை. அக்காலத்தை ஒட்டி வாழ்ந்த சங்கர நமச்சிவாயர் நன்னூலுக்குச் சிறந்த உரை கண்டுள்ளனர். இவை அனைத்தும் தமிழ் உரைநடைக்கு ஊற்றமாக இருந்தன எனக் கொள்வதில் தவறு இல்லை.

மேலை நாட்டார்

அடுத்து வரும் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மேலை நாட்டு மக்கள் நம் நாட்டில் வாணிபத்தின் பொருட்டும் அடுத்து ஆட்சி செய்தற் பொருட்டும் காலூன்றி வளர ஆரம்பித்த காலம் அது. அவற்றுடன் அம்மேலை நாட்டிலிருந்து கிறத்தவ சமயத்தைப் பரப்ப வந்த பாதிரியர் சிலர், தம்நாட்டு நிலையையையும் வாழ்வையும் விட்டு, தமிழ் நாட்டு அற வாழ்வின் அடிப்படையில் மக்களொடு மக்களாய் வாழ்ந்து, ஏழைகளொடு ஏழைகளாக நின்று அவர்களிடையில் தம் சமயத்தைப் பரப்பினர். அவர்கள் தமிழையும் நன்கு கற்று, தமிழிலே மக்களோடு கலந்து உறவாடி, தமிழில்-உரைநடையிலும் பாட்டிலும்-இலக்கியங்களையும் தம் சமய உண்மைகளையும் எழுதி வைத்துள்ளனர். அத்தகைய மேலைநாட்டு அறிஞருள் அக்காலத்தவர்களாகச் சிறந்த வகையில் போற்றத்தக்கவர் ராபர்ட்-டி-நோபிலி என்ற இயற் பெயருடைய தத்துவ போதகரும், பெஸ்கி என்ற வீரமாமுனிவரும் ஆவர். அவர்கள் தமிழ் உரைநடையை வளர்த்த பெருமைக்கு உரியவர்கள் என்றும் சொல்லலாம். அவர்தம் உரைநடையில் வடமொழி அதிகமாக விரவிக் காண்கின்ற காரணத்தால், அவர்கள் இந்நாட்டில் கோயில்களில் வாழ்ந்த அர்ச்சகர் போன்று தாமும் வாழ நினைத்தார்கள் எனக் கொள்ள இடமுண்டு அப்படியே போதகர், முனிவர் என்ற பெயர்களையும் பூண்டு உயர்ந்தார் என்ற நிலையில் பிறர் நினைக்க வாழ்ந்தனர். எனினும் அவர்கள் ஏழைகளோடு கலந்து உறவாடி நின்ற காரணத்தாலேயே அவர்தம் சமயத்தைத் தாழந்த மக்களிடம் பரப்ப முடிந்தது. அவருள் தத்துவ போதகர் பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (20-5-1605) இந்நாட்டுக்கு வந்தார். அவர் செய்த தொண்டுகள் பல அவை பற்றிய ஆய்வு நமக்குத் தேவையில்லை. அவர் எழுதிய உரைநடை நூலுள் ஒருசிலவற்றை எண்ணலே சாலும். அவர், ஞான உபதேச காண்டம், ஆத்தும நிர்ணயம், புனர்சென்ம ஆக்ஷேபம், தூஷணத்திக்காரம், நித்திய சீவன சல்லாபம், ஞானதீபிகை, போதக பரீட்சை, ஞான சங்க்ஷேபம், விசுவாச சல்லாபம், உபதேச சல்லாபம், பத்துச் சல்லாபம், சிலுவையின் விசேஷ சல்லாபம் முதலிய பல நூல்களை இயற்றியுள்ளார். இவற்றின் பெயர்களைக் கொண்டே இவர்தம் உரைநடை எந்தவகையில் அமைந்திருக்கும் என்பதை ஓரளவு உணரமுடியும். எனினும் ஓரிரு மேற்கோள்களைக் கண்டு செல்லலாம். இவர் தம் நூல்களுள் சில பத்தொன்பதாம் நூற்றண்டிலும் (ஆத்தும நிர்ணயம் 1889; அக்கிலான நிவாரணம் 1891) சில இந்த நூற்றாண்டிலும் அச்சாகியுள்ளன. இப்பெரு நூல்களைத் தவிர்த்து அவ்வப்போது அமைந்த சிறுசிறு துண்டுப் பிரசுரங்கள் போன்ற பல சிறு உரைநடைத் தாள்களும் எழுதியுள்ளார் என அறிகின்றாேம் இவர் நூல்களிலும் இக்காலத்தில் வேறு சில நூல்களிலும் மாற்றுச் சமய மாறுபட்ட கருத்துக்கள் மலிந்துள்ளமை காண்கின்றாேம். இந்த அடிப்படையில் 17ஆம் நூற்றண்டில் பல உரைநடை நூல்கள் வளர்ந்துள்ளன. அவர் உரைநடைக்கு ஓரிரு சான்று காணலாம்.

பிற மதத்தினர் தூஷணங்களை மறுக்கும் வகையில் அமைந்த நூலே ‘தூஷணத் திக்காரம்’ என்பர். இந்நூலில் பல சொற்களின் வழக்குகள் நமக்கு விளங்காதனவாகக் கூட உள்ளன. அவற்றின் ஆய்வு நமக்குத் தேவையில்லை அதிலிருந்து அவரது உரைநடைக்கு ஒரு சிறு மேற்கோள் மாட்டும் காணலம். அவர் நடையில் வடமொழிக் கலப் பு இருப்பது மட்டுமன்றி, அந்த நடை கொச்சைமொழி நடையாகவும் அமைந்துள்ளமை அறியலாம்.

‘கடவுளுக்கு எதிராகச் செய்யும் பாவத்தைக் கடவுளே மன்னிக்க வேண்டும். ஆதலாலே கர்த்தருக்கு மனுஷனைவன் துரோகியுமாய் அவருடைய இஷ்டப் பிரசாரத்தைப் போக்கடித்தவனுமாய் இருக்கையிலே, இப்படிப்பட்ட கர்த்தரானவருக்குப் பாவியினலே பண்ணப்பட்ட குற்றமாகிய பாவத்தை அவர் மாத்திரம் போக்கடிக்கிறதுக்கும் தன் இஷ்டப் பிரசாதத்தை மனுஷனுக்குக் கொடுக்கிறதுக்கும் வல்லவராய் இருக்கிருரொழிய, வேறெ பொருளிலே தேவ இஷ்டப் பிரசாதமானது மனுஷனுக்குப் பிரதான காரணமான மேரையாகக் கொடுக்கப்படலாம் என்றும் அல்லது பாவத்தைப் போக்கடிக்கலாம் என்றும் முழுமதி கெட்டவன் சொன்னால் சொல்லுவா னொழியப் புத்திமானாய் இருக்கிறவன், அப்படிப்பட்ட வார்த்தையைப் பரிகாசத்துக்கு இடமாய் இருக்கிற முதிர்ந்த பயித்தியம் என்று எண்ணிக் கொண்டு வருவான் என்கிறதுக்குத் தப்பாது.’

மக்களோடு மக்களாய்க் கலந்து பழகிய இவரும் பிறரும் பல பேச்சு வழக்குச் சொற்களை அப்படியே ஆண்டுள்ளனர். (பக். 401). இவர் காலத்தில் சாதாரண வழக்கத்திலிருந்த சில சொற்களையும் அவற்றின் பொருள்களையும் அறியின் அவை பத்தொன்பதாம் நூற்றண்டில் வழக்கத்தில் இருந்தமை காணும்போது, எளிதில் உணர்ந்து கொள்ள வாய்ப்பாகும். (அகோசரம்—எட்டாதது; அங்கிஷம்—அன்னப்பறவை. அசனம்-உணவு; அடைசி-செறிந்து; அநுமானம்-உடன் கட்டையேறல்: அம் மருவாதியே—அப்படியே; அப்பிரதானம்—அற்பம்; அர்ச்சயம்-கட்டின்மை; இங்கிரேசி-ஆங்கிலேயர்; இதமித்தல்-இன்புறுத்தல்; உத்தாம்-பிறகு; எக்கச்சக்கம்-தாறுமாறு: கஷ்டம்-மலம்;கட்டு வர்க்கம்-ஆடை அணிகலன்; சஞ்சிதம்-புதையல்; சபலம்-பயனொடு; சரப்பளி-தங்கச் சங்கிலி; சூசனை-போதனை, சைக்கம்-மென்மை; தப்பளை-தவளை; தரும சரித்திரம்-நற்செயல்; தாவடம்-கழுத்தணி, துரிதம்-துன்பம்; பத்துப்பத்தாய்-கவனமாய், பறங்கி-போர்த்துக்கீசியர்; பள்ளுவிலி-ஒரு சாதி (யாழ்ப்பாணம்) பிரமாணிக்கம்-ஒழுங்கு பூர-புக: பூத-புக; பூதிலம்-பூமி; போரும்-போதும்; மச்சியம்-மீன்; மொக்கிஷம்-மோட்சம்; வங்காரம்-பொன்; வர்ச்சித்து-விலக்கி; வருந்து-முயற்சி செய்; வித்துவாங்கிஷர்-கவிஞர்; விரத்தர்-பிரமச்சாரி, வைதுஷ்யம்-கல்வி; லாவகம்-எளிமை; லேக்கின்-எழுது வோன்; லேகினி-எழுதுகோல்; க்ஷூதிக-கெட்ட).

இனி, அத் தத்துவ போதகர் தம் பிரசங்கம் ஒன்றனை இங்கே காட்டி அமையலாம் என எண்ணுகிறேன்.

‘இற்றைவரைக்கும் சொல்லப்பட்ட பிரசாரங்களிலே சர்வேசுவரன் உண்டென்றும், ஒருத்தராய் இருக்கிறாரென்றும், தானாய் அனாதியாய் சரீரமில்லாமல் இருக்கிறாரென்றும், அளவில்லாத சகல நன்மையாய் இருக்கிறார் என்றும், ஞானத்தினலேயும், பெலத்தினலேயும், காரணமாய் எங்கும் நிறைந்திருக்கிருரென்றும் வெளிப்படுத்தினோம். இந்த பிரகாரமாய் இந்தப் பிரசங்கத்திலே சர்வேசுரன் எல்லாத்திற்கும் ஆதிகாரணமாயிருக்கிறார் என்று வெளிப்படுத்துவோம்.

‘அதெப்படியென்றல், பரமன் பலத்தையும், பூலோகத்தையும் அதுகளில் உண்டாயிருக்கிற சகல வஸ்துக்களையும் சகலத்துக்கும் வல்லவராயிருக்கிற சர்வேசுவரன் உண்டாக்கினாரென்கிறது அவர் எல்லாத்திற்கும் ஆதி காரணமாயிருக்கிறார் என்கிறதுக்கு... இதிலே சர்வேசுரனைவர் இந்த உலோகத்தை உண்டாக்கினர் என்றும் அதை

உண்டாக்கிறபோது எதாலே எப்படி எதுக்காக
உண்டாக்கினர் என்றும் சொல்லிக் காட்டுவோம்.
(ஐந்தாம் பிரசங்கம்)’

இவர் ‘சல்லாபம்’ என்று குறிக்கும் நூல்களெல்லாம் வினவிடையாக அமைகின்றன. இவற்றின் நடை இன்னும் கொச்சையாகவும் மிகச் சாதாரணமாகவும் அமைந்துள்ளது.

   குரு: இரண்டாஞ் சல்லாபத்திலே நம்மாலே உபதேசிக்கப்பட்டதெல்லாம் நன்றாய்த் தெளிஞ் சாயானால், இப்பாலும் அறிய வேண்டியதை சங்கோசப்படாமல்க் கேட்பாயாக;-

   சீஷன்: பராபர வஸ்துவினிடத்திலே படைப்புண்ட புத்திக்குள்ளே அடங்காத சத்தியங்கள் உண்டென்றும் அப்படிப்பட்ட அடங்காத சத்தியங்களை அறிய வேண்டினதாயிருக்கு மென்றும் அருளிச் செய்தீர். பிரத்தியக்ஷ தெரிசனத்திலே யானாலும் (அனுமான தெரிசனத்திலே என்கிலும்?) அதுகளைப் புத்தியானது சென்று புடிக்கக் கூடாமலிருக்கச் செய்தே, அதுகளை யெந்தக் காரணத்தினலே அறியலாம்?

இவ்வாறாக அவர் நடை செல்லுகின்றது. அவர் நடையைக் கண்ட அதே நிலையிலே விரமாமுனிவருடைய உரைநடையிலேயும் இரண்டொன்று கண்டு தெளியலாம், அவர் தம் நூலுள்ளும் பல சென்ற நூற்றாண்டில் அச்சேறினவேயாம். ‘அறன்’ எனும் பொருள் பற்றி அவர் காட்டிய விளக்கம் சிறந்ததாக உள்ளமையின் அதைக் காணலாம்.

‘வேதநூல் முதலெவ்வகை நூலுக் கல்லா துணரவுஞ் சொல்லாலுணர்த்தவும் வல்லவராகி, மெய்ஞ் ஞானத் திருக்கடலாகிய வொருமெய்க் கடவுடன் றிருவடிமலரே தலைக் கணியெனக் கொண்டேத்தி, இருளிராவிடத்து விளங்கியவொரு

மீன் போலவும், பாலைச்சுரத் தரிதலர்ந்த பதுமம் போலவும் மெய்யாஞ் சுருதி விளக்காதிருளே மொய்த்த நாட்டின் கண்ணுங் கடவுளேற்றிய ஞானத் திருவிளக் கெரிப்பத் தெளிந்து, உணர்ந் தெங்கும் ஒரு விளக்கென நின்றுயர்ந்த திருவள்ளுவருரைத்த பலவற்றென்றை நான் தெரிந்துரைப்பத் துணிந்தேன். அந்நாயனர் தந்த ‘பயன்’ எனும் பெருங்கடலாழத்தின் மூழ்கியாங்குடை யருமணி யொருங் கெடுத்தொரு சிறு செப்பினடைத்தாற் போலத் திருவள்ளுவரது பயனெல்லாம் விரித்துப் பகரும்படி நான் வல்லனல்லே னாகயின், அக்கடற்றுறை நேர்ந்தொரு மணியெடுத்துக் காட்டலுணர்ந்தேன். அவர் சொன்ன குறளினொன்றே யிங்ஙன நான் விவரித்து ரைப்பத் துணிந்தேன். அஃதாவது,

மனத்துக் கண் மாசில னாத லனைத்தறன்
ஆக நீர பிற

என்பது. இல்லறத் துறவற மென்ற இவ்விரண்டனுள்ளும் அடங்கி நிற்குமெல்லாவறங்களும் மனத்தின் தூய்மையாற் பெறும் பெருமையே தரும மெனவும், மனத்தினுள் மாசு கொண்டவன் செய்யுந் தவமும் தானமும் மற்றை யாவு மறத் தினரவமாவதன்றி யறத்தின் பயனுளவல்லவெனவு மக்குறளிரு பயனிவையென விரித்துக் காட்டுதும். விரிப்பவே, மெய்யும் பொய்யும் விளக்கியுட் பயன்றரு மெய்யறத்தின் நன்மையே வெளி யாவிஃதொன்றுணர்ந்து நாமதற்கொப்ப நடந்தாலிது வீடெய்தும் வழியெனக் காணப்படும். பெரும் பொருணேர்ந்து பொய்ம்மணி கொள்வது கேடாயினும் பொருளை நேர்ந்தும் உடலினை வாட்டியும் உயிரை வருத்தியு மேற்கதி வீட்டிற் செல்லாச் சில பொய்யறங்களை யீட்டுவத்திலுங் கேடாமன்றாே? இதனை விலக்கித் தனது

உயிராக்கங் காப்பது வேண்டியிக் குறட்பயனராய்
வது நன்றே.

இவ்வாறு மேலைநாட்டுக் கிறித்தவர்கள் பதினேழாம் நூற்றண்டிலும் அதற்குப் பிறகும் தத்தம் சமய உண்மைகளைப் பரப்பப் பல்வேறு வகையில் முயன்று உரைநடை நூல்களை எழுதிய ஞான்று இந்நாட்டில் தோன்றிய அறிஞருள் சிலரும் சிறந்த உரை விளக்கங் கண்டுள்ளமையினையும் நம்மால் அறிய முடிகிறது. அவருள் சிறந்தவர் ‘சிவஞான முனிவர்' ஆவர். இலக்கண இலக்கியத்திலும் சைவ சித்தாந்தச் சமய நெறியிலும் இவர் சிறந்த புலமை பெற்றவர். இவர்தம் சிவஞான போத உரை ‘சிவஞான பாடியம்’ எனப் போற்றப் பெறுகின்றது. ஒவ்வொரு துறையிலும் இவர் ஆக்கியுள்ள உரைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைவாயிலில் நிற்கும் நமக்கு நல்ல விளக்கங்ககளாக அமைகின்றன.

சமய இலக்கண சாத்திர நூல்கள்

சங்கரநமச்சிவாயர் நன்னூலுக்கு நல்ல உரை கண்டமை மேலே குறித்தோம். அந்த உரையோடு தம் கருத்தையும் நிரப்பி இவர் அந்த விருத்தியை முழுமை பெறச் செய்தார். அதில் ஒன்று காணலாம்:

மக்களாகப் பிறந்து புண்ணிய பாவ மியற்றிப் புண்ணிய மிகுதியால் தேவராயும் பாவ மிகுதியால் நரகராயும் பிறத்தலின், மக்கள் தேவர் நரகரெனக் சாதன சாத்திர முறையே வைத்தாரென்க. அன்றியும், ஆசிரியர் தொல்காப்பியர், “உயர் திணை என் மனார் மக்கட் சுட்டே” என முன்னர்க் கூறிப் பின்னர் 'இவ்வென வறியு மந்தந் தமக்கில’ வாகிய 'தெய்வஞ் சுட்டிய பெயர்' முதலியனவும் “உயர்திணை மருங்கிற் பால் பிரிந்திசைக்கும்' எனக் கூறலின், உயர்திணைப் பாற் படுத்து, “மக்கள் தேவர் நரகர் உயர்திணை” என முறை தெரிந்து ஓதினரெனக் கோடலுமாமென்க.



இவர் தொல்காப்பியப் பாயிரத்துக்கும் முதற் சூத்திரக்திற்கும் விருத்தி உரை செய்துள்ளார். அஃது ஒரு பெரு நூலாகவே அமைந்துள்ளது. அதில் ஒரு காட்டு:

இங்ஙனம் வழக்கும் செய்யுளும் பயின்றார்க்கு அவற்றின் கண் ஒரு நிகரானவாய சொற்களும் ஒன்றாேடொன்று ஒவ்வாததுமாகியசெய்கைவேறு பாடுகளும் சொன் முடிபு பொருண் முடிபு வேறு பாடுகளும் நோக்கும் வழி, ‘இவையெல்லாம் வழா நிலையோ? சில வழுவமைதியோ? வழுவோ? கட்டளை யில்லையோ?’ எனவும் ஆசங்கை நிகழு மன்றே? அவ்வாசங்கை நீங்க எழுத்து முதல் மூன்றும் ஆராய்ந்து செந்தமிழியற்கை சிவனுதற்கு, இந்நூல் ஒரு தலையான் வேண்டப்படும் என்பதூஉம், அவை பயிலாதார்க்கு ஆசங்கையே நிகழாமையின் இந்நூல் பயன்படாது என்பதூஉம் விளக்கிய, ‘ஆயிரு முதலின் நாடிச் சிவணிய கண்டு எண்ணித் தொகுத்தான்’ என்றார். எனவே, வழக்கும் செய்யுளும் ஆராய்ந்து பின்னர் இந்நூல் கேட்டற்பாற்று என்பது புலப்பட்டது.[14]

நாடிச் சிவணிய, என்பது ‘ஓதி உணர்ந்தான்’ என்பது போலக் காரண காரியப் பொருட்டாய் நின்றது. ‘சிவணிய’ என்பது ‘செய்யிய’ என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம். இஃது உணரமாட்டாதார், 'நாடிக்கண்டு எண்ணித் தொகுத்தான்'எனக் கூட்டி, ஒரு வினைமுதல் வினையாக்கி நாடிய ஆராய்ச்சியிற் குறைபாடு உடையவற்றிற்கு, முந்து துால் கண்டு என்றும், ‘ஆயிரு முதலிற் செந்தமிழ் இயற்கை சிவணிய’ எனக் கொண்டு கூட்டியும் இடர்ப் படுப.[15]

அற்றேல் ‘அகத்தியம் நிறைந்த தொல்காப்பியன்’ என்னாது, ‘ஐந்திரம் நிறைந்த

தொல்காப்பியன்’ என்ற தென்னை எனின், அகத்தியம் நிறைந்தமை எல்லாராலும் தெளியப்பட்டமையின், வடமொழியிலும் வல்லவனாயினான் என்பது விளக்கிய அங்ஙனம் கூறினர் என்பது. இவ்வாறு அன்றி ஐந்திரத்தின் வழித் தோன்றிய நூல் என்பது விளக்கிய ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனவே, ஐந்திரம் முதல் நூல் என்று அமைந் திருப்ப முந்து நூல் கண்டு எனக் கூறியது எற்றுக்கு எனவும் கூறி மறுக்க.[16]

இவர் தம் திராவிட மாபாடியத்துக்கு ஒரு சான்று வேண்டாமா? இதோ கேளுங்கள்:

மறைப்பாவது, அநாதியாய மூலமலத்தின் காரியமாகலின், அது முதல்வனாற் செய்யப்படுங் காரியமென்பது என்னையெனின், கூறுதும்-; முதல்வனாவான் முற்றுணர்வுடைமையின், உலகத் துயிர்கள் படுந்துன்ப முழுவதும் உணர்ந்தோனாகியும், பேராற்றலுடைமையான், உயிர்களையெல்லாம் ஒருங்கே வீடு பேறடைவிக்க வல்லவனாகியும், சிவன், சங்கரன் முதலிய பெயர்களாலும் அறியப்படுவதாய், விருப்பு வெறுப்பின்றி, எல்லா உயிர்கண் மாட்டும் ஒப்ப நிகழ்வதாய், தொடர்பு பற்றாது. பிறர் துன்பங்கண்டுழி அதனை அக்கணமே நீக்குதற்கு விளையும் மனவெழுச்சியாகிய பெருங் கருணையுடைமையான், அவற்றை ஒருங்கே வீடு பேறடைவித்தற்கண் ஒருப்பாடு மிக்குடையனாகியும் இத்தன்மைகளெல்லாமுடைய இறைவன் உயிர்களால் அனாதிமுதல் ஈட்டப்பட்டுப் பல்வேறு வகைப்பட்ட துன்பங்களையெல்லாம் விளைவிக்கும் வினை வலியினையும், எல்லாப் பெருங்கொடுமைக்கும் மூலமாகிய சகச மல சக்திகளையும் அவற்றன் பெறுந்துன்பங்களையும் கெடுத்து, எல்லா உயிர்களையும் ஒருங்கே வீடுபேறு அடைவியாமைக்குக் காரணம்

குடங்கையினேந்திய தீயின் சூட்டினை நிகழ வொட்டாது தனக்கு மாறாகிய மந்திர முச்சரிக்குங்காறுந் தடுத்து நிற்குங் குளிகை போல, அம்முதல்வனைச் சிறப்பியல்பான் உணரும் மெய்யுணர்வு தோன்றுங்காறும் அவனது பெருங்கருணை உயிர் கண் மாட்டு ஒருங்கே நிகழாத வண்ணம் தடுத்து நிற்கும் உயிர்க் குற்றமாகிய அவ்வம் மல சக்தியின் வழி நின்று அவற்றை நடத்துவதாகிய அவனது சங்கற்பமே யன்றிப் பிறிதில்லையென்பது பெறப்படுதலின், அங்ஙனம் நடத்துவதாகிய முதல்வனது சங்கற்பமே ஈண்டு மறைப்பெனப்படும் (பாடியம், இரண்டாம் சூத்திர உரை, பக். 126)

நாட்குறிப்பு நடை

இவ்வாறு தொல்காப்பியர் காலந்தொட்டுப் பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் தமிழ் உரை வளர்ந்து வந்தது. இனிப் பத்தொன்பதாம் நூற்றண்டில் உரைநடை வளர்ந்த வரலாற்றைக் காணல் நன்றே. இந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இதுவரை வளராத அளவுக்குத் தமிழ் உரை நடை வளர்ந்துள்ளது. அது எவ்வெவ்வகையில் எவ்வெத்துறையில் எவ்வெவ்வாறு வளர்ந்துள்ளதென்பதைத் தொடர்ந்து இரு நாட்களிலும் காண இருக்கின்றோம். இங்கு அவ்வாறு உரைநடைமிக்கு வளரக் காரணமாயிருந்த நாட்டுச் சூழ்நிலை, அரசியல், சமயநிலை, பொருள் நிலை, பிறநிலைகளின் வேறுபாடு முதலியவற்றைச் சற்றே எண்ணிப் பார்க்கலாம். அவையே நாட்டு இலக்கிய வளர்ச்சிக்கும் பிற உணர்வுகளுக்கும் காரணங்களாக அமைகின்றமையின் அவற்றை எண்ணல் இன்றியமையாததாகும். அதற்குமுன் பதினெட்டாம் நூற்றாண்டில் மேலை நாட்டார் இங்கு நிலைபெற்ற காலத்து நாட்டில் சிலர் மேற்கொண்ட ‘நாட்குறிப்பு’ எழுதும் பழக்கத்தையும் எண்ணல் சாலும்; அவர்களும் உரைநடை வளர்த்தவர்களாதலின். அவ்வாறு குறிப்பு எழுதியவர்களுள் சிறந்தவர் ஆனந்தரங்கம் பிள்ளை அவர்கள். அவர் நாட்குறிப்பிலிருந்து ஓரிரு பக்கங்கள் இவை:

காலமே துவக்கி சாயங்கால பரியந்திரம் ஆற்காடு வேலூர் வந்தவாசியிலே யிருந்தும் பின்னையும் சுத்துப் பட்டிலே யிருந்தும் பிராம்மணரும், கோமுட்டிகளும், தத்துவாதிகளுமாய் வந்த பேர் ஆயிரம் சனத்துக்கு அதிகமே உண்டு. அதிய செட்டியார் ஆனந்த செட்டி மனுஷன் வெள்ளைச் செட்டியும் நம்முடைய சகலாத்து மத்ததுகளை எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தார். அவர் சொன்ன சேதி என்ன வென்றால், நிசாம் பின்னை இருபதியிைரங் குதிரையுடன் பிரகாலே வருகிறதாகவும் இன்னே நாற்பதியிைரம் ஐம்பதியிைரம் குதிரையை அனுப்பி வைத்தாரென்றும் அந்தக் குதிரைகள் கணவாய்க்கிட்ட வந்திருக்கிறதென்றும் கணவாயிலே அப்துல் நபியினுடைய பிள்ளைகளுடனே சண்டை செய்து அப்துல் பிள்ளைகளை யெல்லாம் முறிஞ்சுபோய் அதன் பேரிலே அப்துல் நபிகான் சமாதானம் பேசி லக்ஷத்தைம்பதினாயிரம் ரூபாய் தீர்த்துக் கொண்டு திரமத்துகளெல்லாம் கொடுத்து பேட்டி பண்ணிக்கொண்டதாகவும், மராட்டியர் இப்புறம் வருகிறது ஊர்ச்சிதமாய்த் தானே சொன்னார்களென்று சொன்னால் நவாபு அசனல்லி-மக்கோ சாயபு இவர்களெல்லாம் இரண்டாயிரங் குதிரையுடனே போய் கணவாய் மகா பத்திரமாய் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் இப்படிப்பட்ட சேதிகளாய்ச் சொன்னார். இருக்கிறதனால் காரியமோ பாதியாயிருக்கிற தென்று சொன்னர்.


காலமே எட்டு மணிக்கு சின்ன துரையவர்களுக்குப் பெரிய துரையவர்கள் பெரிய துரைத்தனம் கொடுத்து 21 பீரங்கிப் போட்டு சகலமான வெள்ளைக்காரர் குமிசெலியேர் மற்றப் பேர் அனைவரும் வந்து பேட்டி பண்ணிக் கொண்டார்கள்.

சாவியும் ஒப்பிக்கப்போட்டு தம்மிட அதிகாரமும் அவர் வசம் பண்ணினார்கள்.

காலமே சீர்மையாகிய பிரான்சுக்கு ஒரு கப்பல் பாயெடுத்து ஓடிப்போனான் அந்தக் கப்பல் பேர் பினிச்சு. கப்பல் கப்பித்தான் பேர் முசேபு ரோசேல். இந்தக் கப்பலிலே ஏற்றிய தட்டு 1001.  செம்மரம் பாரம் 2000, மிளகு பாரம் 600. பின்னையும் சில்லறை தினுசுகளும் ஏற்றி காலமே கப்பல் பாயெடுத்துச் சீர்மைக்குப் பயணம் போனான். கோட்டைக்குப் பதினொரு பீரங்கியும் போட்டுப் பாயெடுத்தார்கள்.

இலங்கையில்

தமிழ் நாட்டில் மட்டுமின்றி அண்டை நாடாகிய இலங்கையிலும் 18 ஆம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை இருந்த நிலையைக் காணல் நல்லதன்றாே! ஓரிரு மேற்கோள் கண்டு செல்லலாம்;

இராசசியததின நனமைப பகுதிககாக வெணடி அபபடிக கொததவிதமாகச செயகிறது நலல தெனறு எங்களுககுத தொறறபபடுகுது ஆகாபடியால இததைச சகலரும அறிநது கொணடிருககும படிககும இததைக கொண்டு யாதொருததரும அறியமாடடோமெனறு சொலலக கூடாத விதததுககும சகலமான பெரும தங்கள தங்களுடைய நடடததுக்குப பரவசமாயிருககும படிககும உலாநதா பாஷையில உடபடப பாவிககபபடட இந்த ஊரட பாஷைகளாலும இந்த எங்களுடைய பணக காததை இங்கெயுடபட இதறகடுதத கொடடை ஸரதங்களிலும் பிற சிததம பணணவும் ஆணியறைநது வைககவும படுகிறதுண்டு.

இபபடிககு இலங்கைத தீவிலே ௯௭௱௰௫ ஆணடு அறபசி மாதம ௨௪ திகதி கொழுமபுக கோடடையிலே கொடுககபபடடது.

இந்த நடை பெரும்பாலும் அந்த நூற்றாண்டில் வழங்கியதேயாம்; எழுத்துக்களும் பெரும்பாலும் இத் தன்மையாகவே இருந்தன. நாம் முன்னர் மேலே கண்ட தத்துவப் போதகர், வீரமாமுனிவர் முதலியவர்தம் எழுத்துக்களும் இந்த வகையிலேயே அமைந்திருந்தன. இன்று அவற்றைத் திருத்தி அமைப்பவர்கள் புள்ளியிட்டும் கொம்பினைச் கழித்தும் எழுதுகிறார்கள். ஓலையில் புள்ளி இடல் அருமையானமையின் பெரும்பாலும் புள்ளி ஒதுக்கப்பட்டிருக்கலாம். ‘ஏ’ ‘ஓ’ என்று இரண்டும் முன்பு சுழி யும் கோடுமின்றி ‘ஏ’ ‘ஒ’ என்று புள்ளி பெறாது நெடிலோசை பெற்றமையும் ‘எ’ ‘ஒ’ என்று புள்ளி பெற்றுக் குறிலோசை பெற்றமையும் அறிவோம். ‘எய்தும் எகரம் ஒகரம் மெய் புள்ளி’ என்பது இலக்கணமல்லவா? எனவே உயிர்மெய் ஏகார ஓகாரங்கள் கொம்பின் சுழி இன்றி நெட்டொலியைப் பெற்று வரும் வகையிலே அவற்றை எழுதினர். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சிடப் பெற்ற சில நூல்களிலும் இந்த எகர ஒகர அமைப்பைக் காண இயலும். உலாந்தக்காரர்கள் (Dutch) பதினெட்டாம் நூற்றண்டின் இடையில் இலங்கையில் இதுபோன்று பல ஆணைகளை அவர் மொழியிலும் சிங்கள மொழியிலும் எழுதியது மட்டுமின்றித் தமிழிலும் எழுதிக் கோட்டை முதலிய பொது இடங்களில் நிலை பெறுமாறு செய்துள்ளார்கள். நம் நாட்டுக் கல்வெட்டு, செப்பேடுகள் போன்று அவை இன்றளவும் வாழ்கின்றன. 1727 ஆம் ஆண்டு மே 17 ஆம் நாளிட்ட அவர்தம் மற்றாெரு செப்பேட்டின் (Palakkaat) வாசகத்தில் ஒன்றிரண்டு கானலாம். (திருந்திய அமைப்பிலேயே அவற்றைத் தருகிறேன்; இதில் ஒன்றிலும் புள்ளியும் நெடிற்குறியும் கிடையா).

3. இதைக் காண்கிற அல்லது வாசிக்கிறதை கேட்கிற சகலமான பேர்களுக்கும் ஆரோக்கியமாக அறியப் பண்ணுகிறதாவது.

4. இந்த இலங்கையிலே கோப்பி யுண்டு பண்ணு தவிப் பேர் கொஞ்சக் காலத்திலே நின்று

பலபல சம்ப (வீ)ப்புக்களினாலேயும் பாரபரிப்பில்லாததினாலேயு மெத்தவுந் தேவையாயிருக்கிற கோப்பி யுண்டாக்குதல்.

[17]

இவ்வாறு அது தொடர்ந்து செல்லுகின்றது. இதன் அமைப்பினையும் சொல் வழக்கினையும் பிற ஒலியியல்புகளையும் அந்நாட்டு அறிஞர்கள் ஆய்ந்து வருகின்றனர். தமிழ்நாடு, இலங்கை என்ற மேற்கண்ட இரு நாடுகள் மட்டுமின்றித் தமிழ் வழங்கிய-தமிழ் மக்கள் வாழ்ந்த மலேயா, தென்னாப்பிரிக்கா, பர்மா முதலிய பல்வேறு இடங்களிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே தமிழ் உரைநடை இந்த வகையில் வளர்ச்சி அடைந்தது என்பதை நன்கு காணலாம். அவற்றையெல்லாம் ஈண்டு நாம் தொகுத்து விளக்கப்பெறின், அவை எல்லையற்றுப் பெருகிக்கொண்டே செல்லுமாதலின், தொல்காப்பியர் காலந் தொடங்கிப் பத்தொன்பதாம் நூற்றண்டின் தலைவாசலில் கால்வைக்கும் வரையில் தமிழ் உரைநடை வளர்ந்த வரலாற்று ஆய்வினை இந்த அளவோடு நிறுத்தி அமைவோம். இனித் தமிழ் உரைநடை மிக அதிகமாக வளர்ந்த காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டு என அறிவோம். அதற்குரிய காரணங்களையும் சூழல்களையும் ஆராய்வோம்.

நாட்டு நிலை

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அதற்குமுன் ஒரு சில நூற்றாண்டுகளிலும் தமிழ் நாட்டு வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் பெரும் மாற்றங்கள் உண்டாகியிருப்பதைக் காண்கிறோம். முசுலீம் ஆட்சியில் நாட்டுத் தலைமை 'தில்லி'யில் அமைய, அதன் அடிப்படையில், பலர், நாட்டின் பல்வேறு பாகங்களையும் அங்கங்கே இருந்துகொண்டு ஆண்டார்கள். மேலை நாட்டிலேயிருந்து போர்ச்சுக்கேசியரும் அவருக்குப்பின் டச்சுக்காரரும் பிரெஞ்சுக்காரரும், அங்கிலேயரும் ஒருவர்பின் ஒருவராக வாணிபத்தின் பொருட்டு இந்நாட்டில் கால்வைத்து, பின் தம் வளம்பெருத்கி, பிறகு ஆட்சியையே இங்கு நிலை நிறுத்தப் போட்டியிட்டனர். மேலும் கிறித்தவ சமயம் பரப்ப வந்த பாதிரிமாருள் பலர் தமிழ் நாட்டில் வந்து பல்வேறு இடங்களில் தங்கி, அவர்தம் சமயம் வளரத் தக்க வகையில் பாடுபட்டனர் என்பதையும் முன்னரே கண்டோம். அவர்களுடன் புதுவகையான சாதனங்களும் வளரலாயின. ஓலையில் எழுதிய நிலைமாறிக் காகிதத்தில் எழுதவும், காகிதத்தில் அச்சடிக்கவும் தக்க பல்வேறு வசதிகள் உண்டாயின. நாட்டுப் பொருளாதார, சமுதாய, அரசியல் வாழ்வு முறைகளிலும் பல்வேறு வேறுபாடுகள் உண்டாயின. நில அளவை, மக்கட் பிரிவு முதலியவற்றிலும் சில வேறுபாடுகள் உண்டாயின. தமிழ் நாட்டில் இன்னும் உண்டான மாற்றங்கள் எத்தனை எத்தனையோ! இவற்றுக்கிடையில் அரசாங்கத்தாரும் சமயத் தலைவர்களும் சமுதாய அமைப்பாளர்களும் பிறரும் தத்தம் கொள்கை, சமயநெறி, வாழ்வியல், அரசியல் முதலியவற்றை மக்களிடையே பரப்ப முயன்றனர். அந்த முயற்சிக்கு இந்நாட்டு மொழியே அடிப்படைத் தேவையாக அமைந்தது. பிற நாட்டு அரசாங்கம் கால்கொள்ளத் தொடங்கிய அந்நூற்றாண்டின் தொடக்கத்திலே மக்கள் தம் தாய் மொழியாகிய தமிழிலேயே அவருடன் தொடர்பு கொள்ள முடிந்தது. அதற்குப் பாட்டு நன்கு பயன்படவில்லை; உரை நடையே உற்றுழி உதவிற்று. எனவேதான் சென்ற நூற்றாண்டில் உரைநடை தமிழ்நாட்டில் அதிகமாக வளரத் தொடங்கிற்று. மேலும் கல்வி முறையும், கதை எழுதுதல், நாளிதழ், கிழமை, திங்கள் வெளியீடுகள் முதலியன அச்சிட்டு மக்களிடை அறிவைப் பரப்பும் நல்லியக்கமும் பத்தொன்பதாம் நூற்றண்டில் நன்கு வளர்ச்சியடைத்தமையைக் காண்கிறோம். இவற்றின் அடிப்படையிலேயும் பல உரைநடை நூல்கள் எழுந்தன. பண்டைத் தமிழ் இலக்கியங்களை உலகுக்கு உணர்த்தப் பல நூல்களுக்குசிறப்பாக அறநூல்களுக்கு உரைகள் எழுதத் தொடங்கினர் காவியங்களாக இருந்த பல இலக்கியங்களை எல்லா மக்களும் உணர்ந்து கொள்ளுமாறு ‘வசன’ நடையில் எழுதிய அறிஞரும் பலர் பண்டமாற்று, விற்பனை முதலியன பற்றி ஏற்பாடு செய்துகொள்ளவும், விண்ணப்பம் அறிக்கை முதலியன அமையவும் உரைநடையே இடந்தந்தது. அறிவியல் வளர்ச்சி பற்றிய பல்வேறு கருத்துக்களை மக்களிடம் பரப்பத் துணைசெய்ததும் இவ்வுரைநடையேயாகும். இவ்வாறு சென்ற நூற்றாண்டில் பல்வேறு சூழல்களால் உரைநடை வளர்ந்ததோடு, தன் வளர்ச்சியுடன் தமிழ் நாட்டில் பல்வேறு அமைப்புக்களையும் கலைகளையும் சமயநெறி முறைகளையும் அறிவியல் உண்மைகளையும் பிறவற்றையும் வளர்த்து உதவியது.

பல மாற்றங்கள்

தமிழ் நாட்டின் இதயமாகிய தஞ்சை, 1799-இல்-பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைவாயிலில்-மராட்டிய மன்னரிடமிருந்து ஆங்கிலேயர் கையில் வீழ்ந்தது. அதற்கு முன்பும் பின்பும் தமிழ்நாடு முழுவதும் அண்டை நாடுகளாகிய மைசூர், ஆந்திரம் முதலிய பகுதிகளும் அவர் வசமாயின. தஞ்சையில் வாழ்ந்த சரபோசி மன்னன் (1798-1833) தன் வாழ்நாளில் மொழிக்கும் அறிவு வளர்ச்சிக்கும் பல ஆக்கப் பணிகள் செய்துள்ளான். இன்றும் தஞ்சையிலுள்ள பெருநூல் நிலையம்-சரஸ்வதி மஹால் நூல் நிலையம் - அவன் உருவாக்கியதேயாகும். எனவே நம் ஆய்வில் அமையும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உண்டான அந்த நூல்நிலையம் இன்றும் நிலைத்து-இனியும் ஓங்கி வளரத்தக்க வகையில்-பல்வேறு துறைகளில் நாட்டு மக்கள் அறிவு ஆக்கம் பெறப் பணி புரிவதறிய மகிழ்ச்சி உண்டாகின்றதன்றாே? அக்காலத்திலேயே அதில் தமிழ், வடமொழி முதலியவற்றில் 22000 நூல்கள் இருந்தனவாம். நாணயப் பொருட்காட்சியும் அவன் அமைத்திருந்தான். பல நாடகங்கள் எழுதவும் அவன் உதவினன்; அந்தணர்களுக்குத் தானங்கள் செய்தான். கிராமங்களில் ‘நாட்டுக் கணக்கு’ அமைக்க அவன் உண்டாக்கிய கிராம முனுசீப், கணக்கப்பிள்ளை அமைப்பே இன்றளவும் வாழ்ந்து வருகின்றது. நாட்டில் பல பாகங்களிலும் நில அமைப்பு, நிலப்பிரிவு, நிலதானம் அளித்து வரையறுத்தல் ஆகிய பல சீர்திருத்தங்கள் அந்த நூற்றண்டின் தொடக்கத்தில் ஆங்கிலக் கம்பெனி ஆட்சியாளரால் ஏற்றுச் செயலாக்கப்பெற்றன. அக்காலத்தை ஒட்டியும் அதற்குமுன் ஆண்ட விசயநகர, நாயக்க மன்னர் ஆட்சியை ஒட்டியும் அதுவரை நாட்டில் காணப்பெறாத நானாவித சாதிகள் நாட்டில் உண்டாயின. அவை பற்றிய வரலாறு முதலியனவும் தமிழ் உரைநடையில் எழுதப் பெற்றுள்ளன.

வந்தவர் கற்றனர்

வந்தவருள் பிற நாட்டவராகிய ஆங்கிலேயர் இந்நாட்டை ஆளத் தொடங்கும்போது ஓர் உண்மையை உணர்ந்தனர். முதலில் ‘நாட்டு மக்கள் தாய் மொழியிலேயே தம் வழியை அமைத்துக் கொள்ளலே நல்ல வழி’ என அவர்கள் உணர்ந்தனர், சமய வரலாற்று உண்மைகளை ஆராய்ந்து உணர்வார் கண்ட முடிவும் அதுதானே.[18] இந்த அடிப்படையில் ஆளவந்த ஆங்கிலேயர் மட்டுமின்றி, சமயம் பரப்ப வந்த சமய போதகர்களும் தம் செயல்களையும் எழுத்துக்களையும் தமிழரோடும் தமிழோடும் இணைத்துக் கொண்டனர். இவ்வுண்மையைப் பதினேழாம் நூற்றாண்டில் சமயப் போதகராக வந்த தத்துவ போதகர் (Robert de Nobili) வாழ்வைக் குறிக்கும்போது, மறைத் திரு ச. இராசமாணிக்கம் அவர்கள் குறித்துள்ளார்கள்.

தமிழ் மக்களோடு பழக இன்றியமையாது துணை புரியும் தமிழ் மொழியை இராப்பகலாகப் பயின்றார். ஆறு மாதத்திற்குப் பிறகு எவர் உதவியுமின்றி எந்தத் தலைப்புப் பற்றியும் பல மணிக் கணக்காக உரையாட அவரால் முடிந்தது. அந்த அளவுக்கு மொழிப் பயிற்சி பெற்றர். .. தமிழ் மொழி முனிவரது மனத்தைக் கவர்ந்தது. ‘அழகு மிகுந்து வளப்பம் பொருந்தி மிகவும் பண்பட்டு விளங்குவது’ என்று மேலை நாட்டவருக்குத் தமிழை அறிமுகப்படுத்துகிறார். விரைவில் தாய் மொழியான இத்தாலிய மொழியும், படித்த போர்த்துக்கீசிய மொழியும் மறந்து போயின. அவற்றிற்குப் பதிலாகத் தமிழ்மொழி ஒன்றே அவர் கருத்துக்களை வெளியிடும் கருவி மொழியாக அமையலாயிற்று. இம்மொழியில் பேசுவதோடு அமையாது 1607ஆம் ஆண்டு தொடங்கி 1656ஆம் ஆண்டு சனவரி 16ஆம் நாள்–உயிர் துறக்கும் வரை அரிய பெரிய நூல்களைத் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் தெலுங்கு மொழியிலும் இயற்றினர்.[19]

இந்த நிலை தத்துவ போதகர் மாட்டு மட்டுமின்றி, அந்த நூற்றாண்டிலும் அடுத்த ஓரிரு நூற்றாண்டுகளிலும் இந்தியாவுக்கு வந்த மேலை நாட்டு அறிஞர் மாட்டு உண்மையாக விளங்கிற்று. இந்த அடிப்படையில், நாம் மேலை நாட்டிலிருந்து, பல்வேறு வகையில் இத்தமிழ் நாட்டுக்கு வந்த மெக்கன்சி (Mackenzie), வில்சன் (H. M. Wilson) ஜான் முர்டாக் (John Murdock) முதலிய அறிஞர்தம் அரிய தொண்டினைக் காண முடிகின்றது. பத்தொன்பதாம் நூற்றண்டின் தொடக்கத்தில் தமிழ் நாட்டில் நிலவிய பல்வேறு இலக்கிய இலக்கண நூல்களையும், உரைநடை வளர்ச்சியினையும், பிறநாட்டு எழுத்துக்களையும் இவர்கள் வழியே நம்மால் அறிந்துகொள்ள முடிகின்றது.அப்படியே இவர் போன்றாேர்—சிறப்பாக கால்டுவெல், போப், வீரமா முனிவர், சீகன்பால்கு முதலியோரால் தமிழின் சிறப்பு, தொன்மை, வளன். வற்றாநிலை பற்றியும் அறிந்துகொள்ள முடிகின்றது. இவர்களைப் பற்றியெல்லாம் தொடர்ந்து காண இருக்கின்றாேமாதலின் இன்று இந்த அளவில் இவர்களைப்பற்றி நின்று மேலே செல்லலாம்.

மேலை நாட்டு ஆட்சியாளர்கள் தமிழ் நாட்டில் மட்டுமன்றித் தமிழர் பெரும்பான்மையினராக வாழ்ந்த இலங்கை, மலேயா முதலிய பகுதிகளிலும் தமிழில் அறிக்கை முதலியவற்றை வெளியிட்டனர். இலங்கை அறிக்கை ஒன்றை முன்னரே கண்டோம். மற்றும் இரயில்வே, தபால், தந்தி முதலிய வசதிகள் உண்டான காரணமும் கடந்த நூற்றாண்டில் உண்டான பல்வேறு நாட்டு, சமுதாய மாறுதல்களும் தமிழ் உரைநடை வளர உதவின. மேலை நாட்டினர் வாணிபம், தொழில், வங்கி (பணவகம்) முதலியன வளர்த்த காரணத்தாலும் எடை (நிறுத்தல், முகத்தல்), அளவு, நாள் காட்டி, பஞ்சாங்கம், நாணயம் முதலியன நாட்டு நிலைக்கேற்ப அமைந்த புழக்கத்தில் வந்து விட்டதாலும் அவ்வத்துறை பற்றிய தமிழ் அறிக்கைகள் வெளி வரக் காரணமாயின; அவையும் பெரும்பாலும் உரைநடையிலேயே அமைந்தன. இவையெல்லாம் திப்புசுல்தான் காலத்திலும் அதற்கு முன்பும் இருந்தன வென்றாலும், 1799-இல் சரபோசி-வெல்லஸ்லியின் தஞ்சை ஒப்பந்தத்துக்குப் பிறகே—தமிழ் நாட்டின் பெரும்பகுதி ஆங்கிலக் கம்பெனி ஆட்சிக்கு வந்த பிறகே —செப்பம் செய்யப் பெற்றன; இவற்றுடன் அறங்கூறு அவையங்களாகிய நீதி மன்றங்களும், நாட்டாட்சி, ஊராட்சி, நகராட்சி மன்றங்களும் தோன்றி வளர்ந்து நிலைபெற்ற காரணத்தால் அவ்வத்துறை பற்றிய அறிக்கைகள், விண்ணப்பங்கள், விளக்கங்கள் முதலியன தமிழ் உரை நடையில் தோன்ற, உரைநடை வளர்ச்சி பெற்றது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாட்டு மக்களோடு பழகிய மேலை நாட்டார்–சிறப்பாக ஆங்கிலேயர் தாம்—இவ்வாறு இந்நாட்டு மக்களைப் பற்றியும் அவர்தம் சமுதாயச் சீர்கேடுகளைப் பற்றியும் குறித்துள்ளனர். “நல்ல இயற்கை வளமுடைய நாட்டு மக்கள் பல சூழல்களால்—வாழ்க்கை அமைப்பு முறைகளால் சமுதாய வேறுபாடுகளால் நிலைகெடுகின்றனர்”[20] என்றும், “அரச அரண்மனையைக் காணாது ஏழை மக்கள் குடிசையைக் காணல் வேண்டும்; அவர்களுக்கு உரிமை வழங்கும் ஆட்சி அமைய வேண்டும்”[21] என்றும், “மக்கள் அடிமை வாழ்வு நாட்டு வாணிபத்தை வளர்க்கவில்லை; அம்மக்களிடையில் படிக்கும் நிலையிலும் கல்வி அமைப்பிலும் ஏற்றத் தாழ்வு கூடாது“[22] என்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆளுவோர் கொள்ள வேண்டிய வரன்முறை, நாட்டுநிலை முதலியவற்றை விளக்கியுள்ளனர். இந்தச் சூழலிலேதான் நாமும் நுழைந்து அந்த நூற்றண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சியைக் காண நிற்கின்றாேம். 1797 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் இந்நாட்டுப் பல்வேறு வகை நிலைகளை ஆராய ஒரு குழுவினை ஏற்படுத்திப் பல உண்மைகளைக் கண்டனர். சிவில், கிரீமினல் அமைப்பு முறை செம்மை செய்யப்பெற்ற காலமும் அதுவே.

கல்வி, தொழில் முதலியலற்றிலும் அக்காலம், நாடு தலைதூக்கி வளர ஆரம்பித்த காலமாகும். கிறித்துவ சமயத்தவர் அக்காலத்தில் நாட்டின் பல பாகங்களிலும் கால் கொண்டு வளரத் தொடங்க, 'செல்விருந்தோம்பி வருவிருந்து நோக்கும்' தமிழ் மக்களும் மன்னரும் அவர்கள் இருக்கவும் வளரவும் தம் சமயத்தை வளர்க்கவும் உதவினர். மேலே கண்டபடி நம் நாட்டிற்கு வந்த பல்வேறு மேலை நாட்டு மக்கள் இந்நாட்டுக் கலை, வாழ்வு, செயல் முறைகளை ஆராய்ந்து வெளியிட்டுத் தாமும் பயன் பெறலாயினர். நாட்டு ஆட்சி முறையிலேயும் பல மாற்றங்கள் நேர்ந்தன. 1784 இல் கவர்னர்–ஜெனரலுக்கு முழு உரிமை தந்தனர் ‘கம்பெனியார்’. 1858 இல் விக்டோரியா மகா ராணியார் நேரடியாக நாட்டாட்சியை ஏற்றவரையில், கம்பெனியின் கீழ், கவர்னர்–ஜெனரல் ஆட்சியே தொடர்ந்து வந்தென அறிகிறோம்.

பத்தொன்பதாம் நூற்றண்டில் நாட்டு நீதி பற்றிய பல திருத்தங்கள் உண்டாயின. பலப்பல சட்டங்களும் நீதி மன்றங்களும் உண்டாக்கப் பெற்றன. அவை பற்றிய குறிப்புக்கள் பல தமிழில் — உரைநடையில் — பொது மக்கள் உணர்ந்து கொள்ள அவ்வப்போது வெளிவந்துள்ளன. 1802-06 இல் நாட்டு நீதி பற்றிய பொது அமைப்புச் சட்டமே உருவாயிற்று. 1700இல் சிவில் கிரிமினல் சட்டம் வந்தபோதிலும் அது செம்மையாக்கப் பெற்றது சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயாம், சென்னை மாநிலம் 1,40,000 சதுரமைல் உடையதாய் 1808 இல் (பல மொழி மாநிலமாய்) அமைக்கப் பெற்றது, அரசாங்கக் கவர்னர், இருவர் அல்லது மூவர் கொண்ட குழுவோடு தம் ஆட்சியை நடத்தினர். ‘சூரி’ (Jury) முறை 1827 இல் நாட்டில் கொண்டுவரப் பெற்றது. 1816 இல் நடுவர், குற்ற விசாரணையாளர் (Judge & Magistrate) வேறுபடுத்தப் பெற்றனர். 1845 இல் மாவட்ட நீதி மன்றங்கள் உருவாயின. நில உரிமையும் செம்மைப் பகுப்புச் சட்டமும் (Land Settlement) 1820-27 இல் உருவாயின. 1833 இல் நாட்டு மக்கள் யாரும் எப்பதவியும் பெறலாம் எனச் சட்டத்தால் உரிமை வழங்கினர். ஆங்கிலேயப் பாராளுமன்ற நேரடி ஆட்சி 1858 இல் தொடங்கிற்று கிராம ஆட்சி அமைப்பு 1877 இல் உருவாயிற்று. இரெயில் வேக்கள் 1853 இல் தோன்றலாயின. இந்திய பீனல்கோடு சட்டம் 1861 இல் அமைக்கப் பெற்றது. இவ்வாறு நாட்டாட்சியிலும் ஆணை அறப் பிரிவுகளிலும் உண்டான பல்வேறு மாறுதல்களைத் தமிழ் உரைநடையிலே அவ்வப் போது வந்த அரசாங்க இதழ்களிலும், தனி அறிக்கைகளிலும் வெளியிட்டனர். அவற்றுள் ஒருசில பின்பு காணலாம்.

அச்சுப்பொறி

மொழியின் அடிப்படைக்கு ஆதாரமான மற்றென்றை ஈண்டு எண்ணலாம். இந்த ஆய்வுக்குரிய நூற்றண்டில் மொழி வளர்ச்சியை அளவில் அதிகமாக வளர்த்த பெருமை அச்சுப் பொறிக்கும் உண்டு. மேலை நாட்டிலிருந்து கிறித்துவ சமயம் வளர்க்க வந்தவர்கள் தம் சமயம் வளர்க்க வேண்டி நூல்கள் அச்சிட, சில அச்சுச்சாலைகளை முன்னரே அமைத்தனர் என்றாலும் இந்த நூற்றாண்டில் அது பெருகிற்று. இந்தியாவிலேயே முதல் முதல் அச்சான நூல் தமிழ் நூலே (6–9–1556 இல் முதல் முதல் கோவாவில் அச்சகம் அமைக்கப்பெற்றது). 1578 ஆம் ஆண்டிலே இந்தியாவிலேயே கொல்லத்தில் செய்யப்பட்ட எழுத்துக்களைக்கொண்டு (Indian Type of Malabar letters) ஓரு நூலை மேலைக் கடற்கரையில் (அம்பலக்காடு) அச்சிட்டனர் (அக்காலத்தில் மேலை நாட்டினர் தமிழ் நாட்டை ‘மலபார்’ என்றும் தமிழை ‘மலபார் மொழி’ என்றும் அழைத்தனர்). அந்த முதல் நூல் கத்தோலிக்கர் நூலாகிய ‘தம்பிரான் வணக்கம்’[23] என்பதாகும். அதன் பிரதி ஒன்று அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஹார்வர்டு[24] பல்கலைக் கழகத்தில் உள்ளதாம். பின் 1586 இல் வேறுசில நூல்கள் அச்சாயின. நகரங்களிலும் சென்னையில்தான் 1711 இல் முதல் முதல் அச்சகம் உண்டாயிற்று. (கல்கத்தாவில் 1779 இல் உண்டாயிற்று.) 16ஆம் நூற்றாண்டில் பதின் மூன்று உரைநடை நூல்களும் 17 ஆம் நூற்றாண்டில் 21 உரைநடை நூல்களும் ஆகியவை, தமிழ்க் கத்தோலிக்க நூல்களாக வெளியாயின எனக் கணக்கிட்டுள்ளனர். தரங்கம்பாடி[25], யாழ்ப்பாணம் முதலிய இடங்களிலும் சென்னையிலும் கிறித்துவ சமய நூல்கள் சென்ற நூற்றாண்டில் பல அச்சாயின. தரங்கம் பாடியில் சீகன் பால்கு ஜயர் (1683-1719) நல்ல நூல்களை அச்சிட்டனர். 3–1–1714 இல் புதிய ஏற்பாடு அச்சிடப்பெற்றது. 1761 இல் புதுவையில் அச்சகம் தோன்றிற்று. சென்னையில் புதிதாக 1786 இல் வேப்பேரியில் அச்சகம் உண்டாக அதில் சென்ற நூற்றாண்டில் பல உரைநடை நூல்கள் அச்சாயின. அக்காலத்திய அச்செழுத்துக்கள் 1870 வரை வழக்கத்தில் இருந்தன. இதன் வளர்ச்சி அடிப்படையை ஆராயின் சென்னை மாநிலத்தில் சென்ற நூற்றாண்டில் சுமார் இருநூறு (198) அச்சகங்கள் இருந்தன எனக் காண ழுடிகின்றது. தனியார் மட்டுமின்றி அரசாங்கச் சார்பான குறிப்புகள் முதலியவற்றை அச்சிட, அவர்களும் அச்சகங்கள் அமைத்தமை அறிகிறோம். அவ்வச்சகங்களையும் அவற்றின் வழி வெளி வந்த இதழ் தூல்களையும் பற்றி ஆராய 1878 முதல் 1900 வரை இரகசியத் தனிக் குழுக்கள் (C. I. D.) இருந்தனவாம். இவைபற்றி யெல்லாம் சிறு நூல்களும் ஆய்வுகளும் தற்போது வெளிவருகின்றன.[26]

இதழ்கள்

இந்த அச்சக அடிப்படையில் பல்வேறு இதழ்களும் செய்தித்தாள்களும் சென்ற நூற்றண்டில் வெளி வந்தன. தமிழில் இருபதுக்கு மேலான இதழ்கள் இருந்தன. அரசாங்க இதழ்கள் ஆங்கிலத்தில் மட்டுமின்றி, தமிழ் முதலிய இந்நாட்டு மொழிகளிலும் விளக்கம் தந்தன. அவ்வப்போது உண்டான சட்டங்கள், விதிகள், விளக்கங்களைத் தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளார்கள்.முதலில் இதழ்கள் வெறும் செய்திகள் மட்டும் தாங்கி வெளிவந்தன. 1775 இல் முதல் முயற்சி நடைபெற்றது. பிறகு முதல் இதழ் சர் ஆர்சிபால்டு காம்பல் (Sir Archibald Compball) கவர்னராக இருந்த காலத்தில் (1786—1789) பெரும்பாலும் ஆங்கிலமும் ஓரளவு தமிழும் கொண்டு வெளிவந்தது[27] (இந்தியாவில் முதல் ஆங்கில இதழ் 1780 இல் கல்கத்தாவில் வெளிவந்தது). 1830 வரை தமிழில் தனி இதழ்கள் தொடங்கப் பெறவில்லை. அதற்குப் பிறகு, சில இதழ்கள் வெளிவந்தன. (வங்காள மொழில் தான் முதல் நாட்டு மொழி இதழ் 1816 இல் வெளிவந்தது). சென்ற நூற்றாண்டின் தலைவாயிலில், 1799இல் (13—5—1799), கவர்னர்-செனரல்,பத்திரிகை உரிமையாளர், ஆசிரியர் முதலியோர் பற்றிய குறிப்புககள் (கடைசி பக்கம் அச்சிடுவது) வெளிட வேண்டிய உத்தரவைப் பிறப்பித்தனர்.அரசாங்க வெளியீடு (Fort St. George Gazette) 4—1—1832 இல் வெளிவந்தது. அக்கால ஆட்சியாளர் லூஷிங்டன் (S. R. Lushington) ஆவார். இத்தகைய இதழ்கள் பற்றி அரசாங்கம் சென்ற நூற்றாண்டில் பல்வேறு கட்டுபாடுகளை உண்டாக்கியும், தளர்த்தியும், வளர்த்தும் வந்துள்ளது. அவற்றால் சிற்சில வேளைகளில் நலிவும் தாழ்வும் உண்டான போதிலும் அக்கால உணர்வுடை மக்களின் விடாமுயற்சியே இன்று தமிழ் நாட்டில் எண்ணற்ற தமிழ் இதழ்களையும் அவற்றின்வழித் தமிழ் உரைநடை வளர்ச்சியையும் காணமுடிகின்றது. அவற்றுக்குப் பலவகை அஞ்சல் சலுகை முதலியனவும் தரப்பெற்றமை காண்கின்றோம். இலவச அஞ்சல் முறையும் சில காலம் இருந்திருக்கிறது.

சென்னை மாநிலத்தில் தமிழிலும் தெலுங்கிலும் ஆங்கிலத்திலும் சில பத்திரிகைகள் வெளிவரலாயின, வித்தியார்த்தி (1838 அல்லது 40), இந்து (1878), சுதேசமித்திரன் (1882), மெயில் (15–12–1867), ராஜவர்த்தி போதினி (1855), தினவர்த்தமானி (2–12–1814), கிறிஸ்தவ மறுப்பு (1814) முதலியன அவை. காங்கிரஸ் 1885 இல் தோன்றிய பிறகு உரிமை உணர்ச்சிமிக்குத் தமிழில் பல கட்டுரைகள் வந்தன. சென்ற நூற்றாண்டு முழுதும் பத்திரிகைக் கட்டுப்பாடு அதிகமாக இருந்தது எனலாம். 'கம்பெனி' ஆட்சியில் (1785-1857) பல கட்டுப்பாடுகள் இருந்தன. 1816 வரை அதிகக் கட்டுப்பாடுகள் இருந்தன; 1818-23 இல் சில தளர்த்தப்பெற்றன. 1823–28 வரை மிகக் கடுமையாக இருந்தது. 1835–57 இல் பல சீர்திருத்தங்கள் செய்யப்பெற்றன. ஆங்கிலப் பாராளுமன்ற நேரடி ஆட்சிக்கு வந்த பிறகும் (1857) இத்துறையில் பல மாறாட்டங்கள் வந்தன.[28] இவைகளுக்கிடையில் பல இதழ்கள் தமிழையும் தமிழ் உரைநடையையும் வளர்த்தன. தமிழ் நாட்டில் மட்டுமன்றி இலங்கை, மலேயா முதலிய நாடுகளிலும் இதழ்கள் பல தோன்றி வாழ்ந்தன.

சமயத் துறை

சமயத் துறையும் சென்ற நூற்றாண்டில் தமிழ் வளர்ச்சிக்கு–சிறப்பாக உரைநடை வளர்ச்சிக்கு–உதவியது. கிறத்தவர் அச்சக வழியும் விவிலிய நூல்மொழி பெயர்ப்பு வழியும் செய்த தொண்டினைக் கண்டோம். தஞ்சைச் சரபோசி அச்சமயத்தாருக்கு நன்கு உதவினன். கிறித்தவ சமய அச்சகம் (Society for the Propagation of Christian knowledge) 1711 இல் அச்சகம் அமைத்தது. தம் சமய நூல்களை எழுதி வெளியிட்டது. அந்நூல்கள் யாவும் உரை நடை நூல்களே. செத்வார்ட் (Setwartz 1728–1798) பல வகையில் இத்துறையில் உழைத்தமை காண்கிறோம். நாகையில் டேனிஷ் மிஷன், தரங்கம்பாடி அச்சகம், புதுவையில் அச்சுக்கூடம் இவ்வாறு பலவிடங்களில் கிறித்தவர் சென்ற நூற்றாண்டின் முன்னும் தொடக்கத்தும் பல உரைநடை நூல்களை வெளியிட்டனர். மேலும் அதற்கு முன் வாழ்ந்த வீரமாமுனிவர் முதலியவர் எழுதிய நூல்களை வெளியிட்டனர். பிற்பகுதியில் பல மொழி பெயர்ப்பு நூல்களும், பாட நூல்களும், அறிவியல் நூல்களும் இவர்களால் வெளியிடப் பெற்றன. புராட்டஸ்டண்டு கிறித்தவர்களும் தம் நூல் வெளியீடுகளால் சிறந்த தொண்டினை இந்நூற்றண்டின் பிற்பகுதியில் செய்துள்ளனர். புதிதாக வந்த இந்தச் சமயத்தார் இவ்வாறு வெளியீடுகளைக் கொண்டு வந்தபோது, இங்கேயே தோன்றி வளர்ந்த சைவ சமயத்த வரும் பிற வேதாந்த வைதீக சமயத்தாரும் வாளாயிருப்பார்களோ? கிறித்தவ சமயத்துக்கு மாறாகப் பல்வேறு உரை நடை நூல்களை உண்டாக்கியதோடு, தம் சமய உண்மைகளின் அடிப்படையில் சில நல்ல எளிய உரைநடை நூல்களை மக்கள் முன் வைத்தனர். ஆறுமுக நாவலர் முதலியவர்கள் விவிலிய நூலைத் தமிழில் மொழிபெயர்த்து உதவிய தோடு, சைவசமயம் பற்றி எளிய வகையில் பல நூல்களை வெளியிட்டுள்ளனர். தமக்கெனச் சொந்த அச்சகம் அமைத்துக் கொண்டு அவர் வெளியிட்ட நூல்களுள் பல இன்றும் வாழ்கின்றன. அவை பற்றிப் பின்பு காணலாம். வைணர்களும் வேதாந்த வைதீகரும் அவ்வாறே பல நூல்களை உரைநடையில் எழுதினர். இவையனைத்தும் வடமொழிச் சொற்களை அதிகம் பெற்றுள்ளன. வரவர அதன் அளவு குறைந்துள்ளமையினையும் அறிகிறோம். இவ்வாறு சமயத்துறையும் சென்ற நூற்றண்டின் தமிழ் உரைநடையை வளர்த்தது.

இலக்கியம்

இலக்கியமும் அதன் வளர்ச்சியும் உரைநடைக்குத் தொண்டாற்றிய தறிவோம். பல பாட நூல்கள் உரை நடை அல்லது வசனத்தில் எமுதப் பெற்றன. பலவற்றிற்கு உரைகளும் இந்த நூற்றண்டில் எழுதினவர் பல்லோர். சொற்களுக்கும், தொடர்களுக்கும் நூற்பாவிற்கும் பேருரைகள் எழுதிக் குவித்த காலம் இந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டேயாம். இவற்றை யன்றி, மேலை நாட்டினர் சார்பால் அறிவியல் வளர வளர அவற்றின் வழி வெளிவந்த ஆங்கிலம் முதலிய மொழிகளில் வரும் நூல்களை மொழி பெயர்த்தோ, விளக்கியோ, சுருக்கியோ பலப்பல உரைநடை நூல்கள் வெளிவந்தன. பல மேலை நாட்டு இலக்கியங்களையும் இலக்கிய வளம் செறிந்த நாடகம் முதலியவற்றையும் தழுவியும் தொட்டும், ஏற்றும் குறைத்தும் பல்வேறு உரை நடை நூல்களும் வெளிவந்தன. தமிழ் நாட்டு மருத்துவம், சோதிடம் முதலிய பல்வேறு கலைகள் பற்றியும் பல நூல்கள் மக்கள் முன் வைக்கப்பெற்றன. பொதுவாகச் சமயம், இலக்கியம், கலை, வாழ்வியல், மொழி, அரசியல் முதலிய எல்லாத்  துறைகளிலும் அறிவும் விளக்கமும் பெற்ற அறிஞர் ‘தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற உணர்வில் தத்தம் கருத்தை ஏட்டில் வடித்து அச்சுப் பொறியின் துணையால் நாட்டில் உலவ விட்டனர். (அந்நூல்களின் சொற்களை விளக்கும் அகராதிகளும் அக்காலத்தில் வெளி வந்தன.) அவை மக்கள் மனத்தை-பெரும்பாலும் பொதுமக்கள் மனத்தை-கவரும் வகையில் அமைய வேண்டுமென முயன்றமையால் அவ்வாசிரியர்கள் பெரும்பாலானவற்றை உரைநடையிலேயே எழுதி வெளியிட்டுள்ளனர். கிராமங்களில் வழங்கும் சிறுகதைகள், கற்பனைக் கதைகள், கதைப் பாட்டுகள், வேடிக்கை விடுகதைகள், நல்லதங்காள் கதை முதலியன பாட்டா உரையா எனப் பகுக்க முடியாதவை என எத்தனையோ வகையில் தமிழ்நாட்டு மூலைமுடுக்குகளிலெல்லாம், தமிழில் எழுதி வெளியிட்ட நூல்கள் சென்று, சென்ற நூற்றாண்டில் உலாக் கொண்டன. அவற்றுள் சிலவே நாம் இன்று பெற்றிருக்கின்றாேம். இன்றும் பெறாத எத்தனையோ கேட்டறியாக் கிராமங்களின் பரண்களில் படுத்து உறங்கிக் கிடக்கின்றன. பல செல்லுக்கும் செல்லும் வெள்ளத்திற்கும் இலக்காயின. இவற்றின் அருமை பெருமைகளை உணராத பல்லோர், கிராமங்களில் வெள்ளக் காலங்களில் இந்த ஏடுகளை ஆற்று நீரில் ஆழ்த்தி, விடுதலை தந்து அனுப்பி விடுவார். இத்துறையில் பல வகையில் ஆராய அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

  1. The general period of Sutras (g;#37th) extends from the Sixth or Seventh Century B.C. to about the Second Century B.C. (Cambridge History of India, Vol. I, . 227).
  2. 2. The Principle ‘Dharmasutra” can hardly be dated from later than about 500 B.C. (History of Ancient India - By Prof. R.S. Tripathi in ‘A History of Sanskrit Literature’ p. 260).
  3. Tamil Lexicon, Vol. III, p. 1602.
  4. Chambers Twentieh Dictionary, p. 738.
  5. Oxford Dictionary, p. 925.
  6. Oxford Dictionary, p. 881.
  7. Chambers Dictionary, p. 707.
  8. Oxford Dictionary, p. 882.
  9. Chambers Dictionary, p. 707.
  10. Encyclopaedia Britanicca, vol. 18, pp. 591-592.
  11. Cicero
  12. Encyclopaedia Britanicca, vol. 18, p. 593.
  13. தென்னிந்தியக் கோயிற் சாசனங்கள், தொகுதி, பக் 32, 33, சிதம்பரம் கோயிற் கல்வெட்டு, எண்: 266-1913.
  14. தொல், பாயிர விருத்தி, பக். 5.
  15. தொல், பாயிர விருத்தி, பக். 6
  16. தொல், பாயிர விருத்தி, பக். 8.
  17. Tami1 Culture, vol. XI, No. 2, PP. 173, 174.
  18. (a) The Conquerors continue, for generations, to speak their language, but find it more and more necessary to use also to that of conquered (Language, Bloomfield, P. 463)
    (b) The application of western methods of study to oriental literature had an intensely stimulating effect (India-By H. C. Rowlingdon, P. 406).
  19. ஞானோபதேசம்-முன்னுரை III & IV.
  20. Charles Grant, 1797.
  21. William Tester, 1813.
  22. James Mill, 1820.
  23. டெளட்ரினா சிஸ்டா (Dowtrian Christa கிறிஸ்தியானி வணக்கம்)
  24. Harvard. 3. வணக்கம்—புதிய பதிப்பு—1963, முன்னுரை
  25. By Danish Mission in 25-6-1683.
  26. The Printing Press in lndia By Anant Kakba Biolker (Bombay).
  27. Madras Courier in I785.
  28. The Press in India, J. C. Nirmal, M.A.