பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி/சொற்பொழிவு ௨- (16-2-1965)

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


சொற்பொழிவு ௨- (16-2-1965)

முன்னுரை

சென்ற நூற்றாண்டில் தமிழ்நாடு இருந்த நிலையினையும் அதன் சூழ்நிலையும் ஒருவாறு முதற் சொற்பொழிவில் கண்டோம். அந்தச் சூழல்களுக்கு இடையில் நாட்டு மொழியாகிய தமிழ் பல்வேறு வகைகளில் வளர்ச்சியடையத்தக்க வாய்ப்பினைப் பெற்ற நிலையினையும் ஓரளவு தெளிந்தோம். இன்று அதே நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ந்த வகைகளை ஆராய்தல் பொருத்தமுடைத்து என எண்ணுகிறேன்.

பொது மக்கள் இலக்கியம்

இலக்கிய அமைப்பில் வளர்வன மட்டுமின்றி, பொது மக்கள் வாழ்வை விளக்குவனவும் வாழ்வில் இடம் பெறுவனவும் உரைநடையின் பால் சார்த்தி எண்ணத்தக்கனவே என்று ஓரளவு கண்டோம். எனவே இறையனார் களவியலுரை போன்றும், சிவஞான பாடியும் போன்றும், பெருங்காப்பியங்களின் உரைநடை போன்றும் உள்ளன. ஒருபுறம் இலக்கிய உரை நடையென தோன்றி வீறுநடையிட்டு வளர்ந்து தமிழ்நாட்டில் வாழ்ந்துவந்த அதே வேளையில், கல்லா மக்களிடத்தும் நன்கு எழுத படிக்கத் தெரியாத பாமர மக்களிடத்தும் தத்தம் கருத்து பரிமாற்றத்துக்காகவும் பொதுமக்கள் நலனுக்காகவும், அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பை வளர்ப்பதற்காகவும், பல்வேறு நாட்டு நலன்களுக்காகவும் வாழ்ந்து வளர்ந்து வந்த உரைநடையையும் நாம் எண்ணிப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம். இவை பேரிலக்கியங்களெனக் காலத்தை வென்று வாழத் தக்கன எனக் காண முடியாவிட்டாலும், இவைதாம் அவ்வக்காலங்களில் வாழ்ந்த மக்களின் உண்மையான வாழ்க்கை முறை, பண்பாடு, நாகரிகம் இன்னபிறவற்றை உலகுக்கு உணர்த்துகின்றன. எனவே, இவற்றைப் ‘பொதுமக்கள் உரைநடை’ அல்லது 'பொதுமக்கள் இலக்கியம்’ என பகுத்துக் காணல் சாலப்பொருத்தமானதாகும். மக்கள் வாழ்க்கை முறையில் எத்தனை எத்தனை பிரிவுகளுண்டோ-அவர்தம் சூழல் எத்தனைக் கெத்தனை மாறுபடுகின்றதோ-அத்தனைக்கத்தனை வகையில் அவர்தம் பேச்சும் வழக்கும்-சாதாரண எழுத்து வழக்கும் மாற்றம் பெறுகின்றன. அவற்றை ஆங்கில முறைப்படி ‘கொச்சை மொழி’ என்றாலும் அம்மொழியே நாட்டுப் பெறும்பான்மையான மக்களின் வாழ்வைப் படம்பிடித்துக் காட்டுகின்றமையின் அது பற்றிய ஆய்வு இன்றியமையாததாகின்றது. இன்று மொழித்துறையை ஆராய்கின்ற உலக அறிஞர்கள் பலரும் இத்தகைய மக்கள் மொழியாகிய கொச்சைமொழியை ஆராய்ந்து உணர்த்தும் நெறியிலேயே பாடுபடுகின்றனர் என்பதும் கண்கூடு.எனவே இன்று நாம் பொதுமக்களிடையே கருத்துப் பரிமாற்றத்துக்காகவும்: விளக்கம், விளம்பரம் முதலியவற்றிற்காகவும், வேடிக்கை பொழுதுபோக்கு முதலியவற்றிற்காகவும் வழங்கப் பெற்ற உரைநடை வகைகளையும் கதை, நாவல். நாடகம் முதலியவற்றையும் ஆராயலாம் எனக் கருதுகிறேன்.

மெக்கன்சி துறையின் பணி

பொது மக்களோடு தொடர்பு கொண்டு அவர் தம் மொழி நலத்தையும் பிற வாழ்வியல்புகளையும் ஆராய்ந்த அறிஞர் பலர் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்திருந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் அதற்கு முன்னும் வாழ்ந்த மக்கள் வாழ்க்கையை ஆராய்ந்த அதே வேளையில் அவர் தம் இலக்கிய வளனையும் வழக்கு மொழியையும் ஆராய்ந்த மேலை நாட்டவர் நாட்டில் பலர் இருந்தனர். அவருள் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்து, சிறந்த பணியாற்றி திகழ்ந்த-தம் ஊதியப் பணியையும் தமிழ் உணர்வுப் பணியையும் திறம்படச் செய்த-லெப்டினண்ட் கர்னல் காலின் மெக்கன்சி (Lient. Col.Colin Mackenzie) அவர்கள் சிறந்தவர் என்பது மறக்க முடியாத உண்மை. அரசியல் துறைப் பணியாளராக ஆங்கில நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு 1782-இல் வந்த அவர், தம் பணியோடு பணியாகச் செல்லுமிடங்களிலெல்லாம் வாழ்ந்த கல்லா மக்களோடு கலந்து உறவாடி, அவர் தம் கொச்சை மொழியையும் வளமுற்ற இலக்கிய வளனையும் ஆராய்ந்து எழுதி வைத்துள்ளார். முப்பத்தெட்டு ஆண்டுகள் (1783—1821) பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றிப் பணியாற்றிய நாட்களில் அவர் தொகுத்துத் தந்தன பல. அவர் தம் அலுவல் நிலை உயர உயர-அவர் தம் ஆட்சிப் பொறுப்பின் எல்லை விரிய விரிய. அவர்தம் மொழியாய்வும் விரிந்துகொண்டே வந்தது. தமிழ் நாட்டில் மட்டுமின்றி இலங்கை, ஜாவா முதலிய இடங்களிலும் பணியாற்றிய அவர் இறுதியில் இந்தியப் பெரு நிலப்பரப்பிற்கே, ஒரு துறைக்கு-அளவை ஆய்வுத்துறைக்கு- (Surveyor General of India) தலைவரானார். எனவே அவர் செயலகம் கல்கத்தாவிற்கு மாற்றப்பட்டது. எனினும், அவர்தம் தமிழ்மொழி ஆய்வு முற்றுப்பெறாது, அவரது 68 வது வயது வரை, அவர் இறுதி நாள் வரை (1821) வளர்ந்து கொண்டே தான் இருந்தது. அவர்தம் ஆய்வுக்கு உதவியவருள் ‘கர்னல் வில்க்ஸ்’ (Col.Wilks) என்ற அறிஞரும் ஒருவராவர். அவர்தம் ஆய்வுகள் பல ஆங்கில நாட்டிற்கு அனுப்பப் பெற்றன. அவற்றை வெளியிட அக்காலக் ‘கவர்னர் ஜெனரலான’ வாரன் ஹேஸ்ட்டிங் அவர்களால் உத்தரவும் தரப்பெற்றது. அவர்தம் அத்தகைய தமிழ், தெலுங்கு முதலிய ஏட்டுப் பிரதிகளைச் சேர்க்கப் பதினையாயிரம் பவுண்டு (E15,000/–) செலவாயிற்றெனவும் கணக்கிடப்பெற்றது. அவர்தம் மறைவுக்குப் பிறகு 1828-இல் போராசிரியர் வில்சன் (Prof. Wilson) அவர்கள் தாமே வலிய வந்து அத்தொகுப்பை வெளியிட்டார் அந்த வெளியீட்டில் பெரும்பான்மை தமிழிலேயே உள்ளன. ஒரு சில தெலுங்கும் கன்னடமும் இடம் பெற அமைகின்றன. இவற்றுள் சில ஆங்கில நாட்டு ‘இராயல் ஏசியாட்டிக் சொசைட்டி’ (Royal Asiatic Society) யினரால் பெயர்க்கப் பெற்று வெளியிடவும் பெற்றுள்ளன. இத்தொகுப்பைப் பற்றி ‘மார்க் வில்க்ஸ்’ என்பார்.

The collection gives all that is necessary to illustrate the antiquities, the civil, military and religious institutions and ancient History of South India.

(Col. Mark Wilks-History of Mysore)

என்று பாராட்டியுள்ளார். ரெவரெண்டு வில்லியம் டெய்லர் (Rev. William Taylor) முதலிய பலர் அவற்றை ஆராய்ந்து அடிக்கடி ஆய்வுக் கட்டுரைகளும் ஆய்வு நூல்களும் வெளியிட்டனர். அவற்றுள் 1837-38 இல் சில தொகுக்கப் பெற்றன. பிறகு 1858இல் ‘கிழக்கிந்திய மனை’யும் (EastIndia House) பிரவுசு மனுஸ்கிரிப்ட்சுடன் (BrownesManuscripts) தொடர்பு கொள்ள இந்த 'மெக்கன்சி சேர்க்கை' (Collection) வெளிவந்தது. சென்னை அரசாங்க உடைமையாக (1847) ஆன பிறகு, 1882-ல் இத்தொகுதி கீழ்த்திசைக் கையேட்டுப் பிரதித் தொகுப்பில் இடம் பெற்றது. அக்காலத்தில் அதில் 8,000 வகைகள் இருந்தனவாம். மெக்கன்சி அவர்களே இத்தொகுப்பைக் கொண்டு வரத்தாம்பட்ட பாட்டைக் கூறுவதைக் காணலாம்.

“From 1792 to 1799 it were tedious to relate the difficulties, the accidents and the discouragements that impeded the progress of this design. The slender means allottted from the necessity of a rigid, no doubt just, economy, the doubts and hindrance ever attendant on new attempts; difficulties arising from the nature of the climate of the country, of the Government, from conflecting interest and passions and prejudices, difficult to contend with, and unpleasant to recollect.”

“In the whole of this period, in which I have marched or wandered, ower the most of the provinces south of the ‘Krishna’, I look back with regret to objects now known to exist, that could have been then examined, and to trace of customs and of institutions that could have been explained, had time or means admitted of the enquiry.

“It was only after my expedition to Ceylon in 1796, that accident rather than design, though ever searching for light that were denied to my situation, threw in any way, those means that I have since unceasingly pursued (not without some Success, I hope) of penetrating beyond the common surface of the Antiquities, the History and the Institutions of the South of India.”

“How for the idea suggested was fulfilled it is not for me to say; for adverse cireumstance one part was nearly defeated;and the ‘Natural History’ was never analyzed in the manner I proposed and expected in concert with the survey; the suspense I was placed in from the reduction of the slender stipend allotted to myself, both for salary and to provide for increasing contingencies, was not only sufficiently modifying, but was aggravated by the overthrow of the establishment first arranged for the work, while other branches were favoured, in the application of the Director’s order. The efforts of these measures on the public mind and even on my assistants contributed to paralise every effort for its completion, but not withstanding these difficulties the success attending the first researches, and a convicition of its utility, induced me to persevere till 1808.”இவ்வாறு அவரே இத்துறையில் தாம் மேற்கொண்ட முயற்சியையும் அதற்கு உண்டான பல்வேறு இடையூறுகளையும் விளக்கிக் காட்டுகின்றர். அவர்தம் வெளியீட்டுத் தொகுப்பில் தமிழில் 192[1] கையேட்டுப்படிகள் அப்போது தொகுக்கப் பெற்றன. புராணம், கட்டுக்கதை, உள்நாட்டு வரலாறு, வாழ்க்கை வரலாறு, கதை, நாடகம், தத்துவம், வான நூல், மருத்துவம், கலை முதலிய பல்வேறு பிரிவுகளும் இதில் இடம் பெற்றுள்ளன. இவையன்றி ஒவ்வோர் ஊரிலும் வழங்கும் சிறுகதைகள் பழக்க வழக்கங்கள் பற்றியும் (local tracts) தமிழில் 255 தொகுக்கப் பெற்றுள்ளன. இவ்வாறு அவர் தம் காலத்தில் தமிழ் நாட்டு மூலை முடுக்குகளில் வழங்கப்பெற்றுள்ள பல்வேறு வகை வாழ்வு முறைகள் பற்றிய குறிப்புகள் அனைத்தையும் தாமே நேரில் சென்று கண்டு, கேட்டு, எழுதித் தரச்செய்து வெளியிட்டுள்ளார். அவற்றுள் ஒரு சில நாம் காண இருக்கிறோம். அவை அனைத்தும் (மிகச் சில தவிர்த்து) உரைநடையில் உள்ளமையின் நமது ஆய்விடையில் இடம் பெறுகின்றன. அவற்றால் நாம் வெறும் உரைடையைப் பற்றி மட்டும் அறியவில்லை. அத்துடன் அக்காலப் பழக்கவழக்கங்களையும் மொழி அமைப்பு, பிறமொழிக் கலப்பு, கொச்சை வழக்கின் அளவு முதலிய பலவற்றையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

ஜான் மொர்டாக் பணி

இத்துறையில் சென்ற நூற்றாண்டு பாடுபட்ட அறிஞர்கள் பலர் என்றாேம். அவர்கள் அனைவரைப்பற்றியும் எண்ணவும் எழுதவும் நமக்கு நேரமும் இடமும் இல்லை. எனவே அவருள் சிறந்தவராகிய மெக்கன்சி பற்றியே குறிப்பிட்டேன். அவர்தம் தொகுப்பனைத்தும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாட்டில்வாழ்ந்தன பற்றியனவேயாம். இதே துறையில் சென்ற நூற்றாண்டின் இடைகாலத்தில் அயராது உழைத்த மற்றெருவரை இங்கே எண்ணிப் பார்த்தல் சாலும் எனக் கருதுகிறேன். அவரே ஜான் மொர் டாக் (John Mordoch) என்பவர். இற்றைக்குச்சரியாக ஒரு நூற்றாண்டுக்கு முன், 1865-இல், நாட்டில் தமிழ்மொழியில் அச்சேறி வெளிவந்த நூல்களையெல்லாம் தொகுத்து, அத்தொகுதிக்குத் தெளிந்த தேவையான ஒரு முன்னுரையையும் எழுதி அவர் வெளியிட்டுள்ளார். எனவே, சென்ற நூற்றாண்டின் இடைக்காலத்தில் எழுதப்பெற்ற தமிழ் நூல் பற்றிய விளக்கம் தரும் ஒரு நல்ல விளக்காக இவர் தம் தொகுப்பு அமைகின்றது. 'கிறித்தவக் கீழ்த்திசைக் கல்விக் குழு’ என்ற அமைப்பின் முயற்சியால் சென்னையில் இவர்தம் நூல் 1865-இல் வெளியாயிற்று. இதில் பல துறைகளும் நன்கு பகுக்கப் பெற்று ஒவ்வொன்றிலும் வெளியான நூல்களைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. முதலில் ‘சமயம்’ என்ற தலைப்பிலும், பின் பிற தலைப்புகளிலும், அவை உள்ளன. 1755 நூல்கள் இத்தொகுப்பில் உள்ளன.

‘அ’ சமயம். எண்ணிக்கை, 100க்கு மொத்தம். 100க்கு
1. புராட்டஸ்டன்ட்
கிறித்தவம்
587 33.4
2. கத்தோலிக்க கிறித்தவம் 87 4.9
3. இந்து சமயம் 508 28.9
4. இசுலாம் 36 2.0 1218 69.2
ஆ. சட்டம் 19 1.1 19 1.1
இ. தத்துவம்
(அளவையில்) 2 .1
(மெய்யுணர்வு) 46 2.7 50 2.9
ஈ. அறிவியல்
(இயற்கை அறிவியல்) 14 .8
(மருத்துவம்) 44 2.5
(கணிதம்) 4 .2 62 3.5
உ. கலைகள் 6 .3 6 .3
இலக்கியம் 152 8.6 152 8.6
எ. மொழியியல் 176 10.0 166 19.0
ஏ. நிலநூலும் வரலாறும் 12 .6 12 .6
ஐ. இதழ்கள் (17+9) 26 1.5 26 1.5
ஓ. ஆங்கிலேயர் பயிற்சி நூல்கள் 34 1.0 34 1.9


1755 1755
இந்நூல்கள் பற்றி ஜான் மொர்டாக் அவர்கள் தொகுத்துக் காண விரும்பிய வகையினை அவர் வாக்கிலேயே தருகிறேன்.

The following might each form the subject of a volume.

1. The rise of the Saiva system in South India, notices of the Principal Saiva temples, a full list of Saiva books, with summaries of their content and some illustrative extracts.

2. A corresponding work on the Vaishnava system.

3. An account of the works on Philosophical Hinduism which analyses of their contents and copious extracts.

4. A complete account of the work on Astrology, Divination and Magic.

5. An account of Tamil Medicine.

6. A work on Tamil poetry specimens of versification should be given (Translation like Kambar). -

A book on the above subjects, will got up, would meet with remunerative sales in India, Europe and America and gain some name for the author.

இவ்வாறு 1865 இல் இவர்தம் முன்னுரையில் தமது ஆசையை வெளியிட்டுள்ளார். எனினும் - சரியாக ஒரு நூற்றண்டு கழிந்தும் - உரிமை பெற்று மொழி வளர்க்கின்றாேம் என்று கூறிக்கொள்ளும் இன்று வரையும்-இவர் காட்டிய வகையில் செயலாற்றுவோரை நாட்டில் இன்னும் காண இயலவில்லை. இவர்தம் முயற்சியால் காணக் கூடிய வகையில் உள்ள நூல்களுள் பெரும்பாலான உரைநடை நூல்களே. எனவே சென்ற நூற்றாண்டின் உரைநடையைக் காண இவர் தம் தொகுப்பும் நன்கு பயன்படத் தக்கதாகும்.

அரசாங்க நூற்பதிவுச் சட்டம்

1867க்குப் பிறகு அன்றைய அரசாங்கத்தார் அச்சுச் சட்ட அடிப்படையில், நாட்டில் அச்சாகும் நூல்களில் ஒவ்வொன்றின் படியும் அரசாங்கத்திற்கு (Registrar of Books) அனுப்பிவைக்க வேண்டுமென ஆணையிட்டனர். எனவே சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளியான நூல்கள் அனைத்தும் அரசாங்க முத்திரையைப் பெற்று, வரிசைப்படுத்தப் பெற்று வகையாக எண்ணிடப் பெற்றுச் சேர்த்துவைக்கப் பெற்றன. அண்மையில் தமிழ் நாட்டு அரசாங்கத்தார் அவற்றைத் (1867–1900) தொகுத்து மூன்று பகுதிகளாக வெளியிட்டுள்ளனர். அத்தொகுப்பிலும் பல உரைநடை நூல்கள் உள்ளன. எனவே சென்ற நூற்றாண்டில் வளர்ந்த தமிழ் உரைநடை வளர்ச்சியை இடையீடின்றி ஆராய இவையும் இவை போன்ற வேறு சிலவும் நமக்கு ஆதாரமாக உள்ளன.[2] அவற்றின் துணை கொண்டு இன்று "பொது மக்கள் இலக்கிய" உரைநடை பற்றி ஆராய்ந்து எடுத்துக் காட்டுகளுடன் விளக்கலாம் என எண்ணுகிறேன்.

வெற்றியும் கொடையும்

வெளியான நூல்களும் ஏட்டுப் பிரதியில் உள்ளன போக நாட்டில் அங்கங்கே வழக்கத்தில் உள்ள பல்வேறு எழுத்துக்களையும் எண்ணுதல் பொருந்தும். அரசாங்கத்தாரும் பிறரும் வடித்த கல்வெட்டுக்களும் கடந்த நூற்றாண்டில் சில உள்ளன. வெற்றி குறித்தும், வேறு பாலம் முதலியன அமைத்தும் உண்டாக்கிய சாசனங்கள் நாட்டில் உள்ளன. அவற்றில் ஓரிரண்டினைக் ஈண்டுக் காட்டல் நலம் பயப்பதாகும்.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் நெப்போலியன் வீழ்ச்சியுற்றதும் ஆங்கிலேயர் வெற்றி பெற்றதும் நாடறிந்த வரலாறு. அவ்வெற்றியைக் கொண்டாடு முகத்தான் ஆங்கிலேயர் தம் ஆணை சென்ற இடங்களிலெல்லாம் வெற்றித்தூண் நாட்டி, அவ்வெற்றியைக் கல்லிலும் பொறித்தனர். அவற்றுள் ஒன்று தஞ்சைச் சரபோசி மன்னன் ஆட்சி எல்லைக்கு உட்பட்ட சாளுவன்குப்பத்தில் உள்ளதை இன்றும் காணலாம். ஆங்கிலத்திலும் தமிழிலும் அக்குறிப்புக்கள் அமைந்துள்ளன. தமிழ்க்குறிப்பு உரை நடையாகவே உள்ளது. இரண்டையும் அப்படியே தருகிறேன்.

His Highness Maharaja Serfojee, Rajah of Tanjore, the friend and Ally of British Government, erected this column to commemorate the Triumphs of the British Army and Downfall of Bonaparte—1814.

தமிழில்

இங்கிலீசு சாதியார் தங்கள் ஆயுதங்களினாலடைந்த செய சந்தோஷங்களையும் 'போனபாற்தெயின்' தாழ்த்தப்படுதலையும் நினைவு கூர்தற்காக

இங்கிலீசு துரைத்தனத்தின் சிநேகிதரும் படைத் துணைவருமாகிய தஞ்சாவூர் சீர்மை மகாராசா சத்திரபதி சரபோசி மகாராசா அவர்கள் இந்த உப்பரிகையை கட்டி வைத்தார்கள்.

-சகம் ௬௭௱௩௪சுஎாங்ச 1814)
(தமிழ்ப் பொழில், குரோதி-ஆடி 1964)


இவ்வாறு எழுதப்பெற்ற தமிழ் உரைநடை, இலக்கிய வளம் பெற்றது அன்று என்றாலும், மக்கள் தம் கருத்தை ஓலையிலும் கல்லிலும் வடித்துக் காட்டவும் விளக்கிச் சொல்லவும் நன்கு பயன்பட்டது என்பதைக்காண முடிகின்றது. நான் முதலிலே சொல்லியபடி இன்று இத்தகைய பொது மக்கள் இலக்கியமாகிய உரைநடையே நம் ஆய்வுக்குக் கொள்ளப் பெறுகின்றது. இவர்கள் உரைநடை இலக்கியத்தில் பல சொற்கள் புரியா நிலையிலும் உள்ளன. சில ஆங்கிலச் சொற்கள் அவ்வவ்வாறே தமிழில் எழுதப் பெற்றுள்ளன. சில பெயர்களும் வினை முடிபுகளும் மிகக் கொச்சையாகவே வழங்கப் பெறுகின்றன. சில மெய் எழுத்துக்கள் புள்ளி பெறவும் இல்லை. எனினும் இவற்றால் மக்கள் தங்கள் கருத்தைத் தாராளமாகப் பரிமாறிக்கொண்டார்கள் என்பது தெளிவு.

1844-இல் பாளையங்கோட்டை நெல்லை நெடுஞ்சாலையில் தாமிர வருணி ஆற்றுக்குக் கட்டப்பட்ட பாலத்தைப் பற்றிய குறிப்புத் தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ளது. தமிழ்க்குறிப்பு இதுவாகும். இஃது ஒரு கருங்கல் தம்பத்தில் பொறிக்கப் பெற்றுள்ளது.

இஃது தேசவுபகாரியாகிய திருநெல்வேலிச் சில்லா நாயிபு சிரேஸ் ஸ்ரீ சுலோசன முதலியாரவர்கள் முகுந்த உதாரமாய்ச் சொந்தச் சிலவு செய்து இதற்கடுத்த பாலத்தையும் அதைச் சேருகிற வழிகளையும் உண்டு பண்ணின தருமத்தை ஞாபகம் படுத்துவதற்கு இஸ்திந்தியா கும்பினியை

நடத்துகிற மகிமை பொருந்திய கோட் டவ் டிரேகட்ட[3] ரென்னுஞ் சபையார் அருளிச் செய்த உத்தர விேைல நிறுத்தியிருக்கிறதென்று அறியுங்கள்.

௲௮௱௪௰-௵.
திருச்சினாப்பள்ளி ஜே. எப். மார்ட்டினால்

இவ்வாறு நாட்டில் பல பகுதிகளில் பல நிகழ்ச்சிகளையும் செயல்களையும் உதவிகளையும் பிறவற்றையும் பொது மக்கள் என்றென்றும் அறிந்து கொள்வதற்காகப் பல தம்பங்களும் நினைவுச் சின்னங்களும் எழுப்பப்பெற்று, தமிழ் உரைநடையில் எழுதப்பெற்ற விளக்கங்களை அவற்றில் பொறிக்கப் பெற்றுள்ளமையைக் காண்கிறோம்.

ஆங்கிலேயர் கல்வி

1858-க்குமுன் கும்பினி ஆட்சி நடைபெற்றது. அதற்குப் பிறகு ஆங்கிலேயர் நாட்டு நேரடி ஆட்சியாகிய விக்டோரியா இராணியின் ஆட்சி தொடர்ந்தது. அக்காலங்களிலெல்லாம் ஆங்கிலேயர் பலர் வாணிபம் பொருட்டும் ஆளுதற் பொருட்டும் இந்நாட்டுக்கு வந்தனர். வந்தவர் இந்நாட்டு மொழியைக் கற்றனர். அவர்கள் கற்ற நூல்களும் பல; கற்பித்தோரும் பலர். அவர்களைப் பற்றிய அன்றைய குறிப்பொன்றைக் காணலாம்.

தமிழ் இலக்கணத் தெளிவு 1893

அங்கிலேயர் வியாபார மாளிகைகளைச் சென்னை, கடலூர் முதலிய இடங்களில் கட்டி வியாபாரத்தைப் பெருக்கி, அரசும் கைபற்றுகின்ற சமயத்தில், அங்கில உத்தியோகஸ்தர்கள் தமிழைக் கற்பது யுக்தமென அதிகாரிகள் தீர்மானித்து, சென்னையில் ‘காலேஜ்’ என்ற ஓர்

வித்தியாசாலையை ஸ்தாபித்தார்கள். இதுதான் ‘Old College’ எனப்பட்ட இடம். இதில் இப்போது வித்தியாசாலைத் தலைவராகிய ‘Director’ தமது கச்சேரியை வைத்து நடத்தி வருகிறார். இதில் முதல் அங்கிலேயருக்குத் தமிழ் உபாத்தியாயராக நியமிக்கப்பட்டவர் செங்கற்பட்டுத் தாண்டவராய முதலியார். இவர் அக்காலத்தில் பட்டணத்தில் விஜயம் செய்து, நன்னூலுக்குக் காண்டிகை உரை யியற்றின இராமானுஜக் கவிராயரின் சீஷனும், கற்றுச் சொல்லியுமாயிருந்து, மேற்படி கவிராயரிடம் நன்னூற்பாடம் கேட்டவர். இவர் மூலமாய்த்தான் அங்கிலேயர் நன்னூல் சிறந்த தமிழ் இலக்கணம் எனத் தெரிந்து கொண்டது மன்றி, சர்வகலாசாலைப் பரிஷைகட்கும் (University Examinations) இந் நன்னூலே நல்ல இலக்கணம் என விதிக்கவும் தலைப்பட்டது.

இத் தாண்டவராய முதலியாரே வாசக புஸ்தகம் (Prose) அங்கிலேய மாணாக்கருக்கு வேண்டியதாயிருந்த பொழுது, ஹிதோபதேசத்தைச் சமஸ்கிருதத்தினின்று மொழிப் பெயர்த்துப் பஞ்ச தந்திரம் என்ற புஸ்தகம் உண்டு பண்ணிக் கொடுத்தவர். நன்னூலிலுள்ள புணர்ச்சி விதிகள் புலப்படத்தக்கதாய் அப்புஸ்தகத்தைக் கொடும் புணர்ப்பா யெழுதிவிட்டார். இவர் செங்கற்பட்டில் சதுரமீனாக உத்தியோகஞ் செய்து அங்கிலேயரால் நன்கொடை பலவும் பெற்று, தேக வியோகமானார். இவருடைய குமாரன் கிறிஸ்தவராகப் பட்டணத்திலிருக்கிறார்.

ஐரோப்பிய குருமாரும் இந் நன்னூலையே விசேஷமெனப் போற்றியதால் இதற்கு இங்கிலீஷ் உரை சங். பிரதர்ட்டன் ஐயர் அவர்களாலும் (Rev. Brotherton M.A., Cambridge), உவால்ற்றர்

ஜாயிஸ் துரையாலும் (Mr. Walter Joyes). கனம் பவர் ஐயராலும் (Rev. H. Bower. D.D), டவுடன் காலேஜ் (Doveton College) மினிஷியாகிய சாமுவேல் பிள்ளையாலும் எழுதப்பட்டது. இந்நன்னுால் சாஸ்திர யுக்கத்தைப் புகழ்ந்து கனம். பவர் ஐயரவர்கள் ஒரு புஸ்தகம் எழுதியிருக்கிறார்கள். இவர்களை மேற் கோளாகக் கொண்டுதான் கனம் ஜான் லாசரு ஐயரவர்கள் (Rev. John Lazrrus B.A.) நன்னூல் இலக்கணம் முதலியன எழுதி அச்சியற்றியது.

ஆகவே நன்னூல் விசேஷமென்று, அதை விரித்து விளக்கியும் சுருக்கித் தீட்டியும் பலரும் சால்பு நூல்கள் பலவும் செய்ய ஆரம்பித்தனர். கனம் போப்பையரவர்கள் (Dr. G. U. Pope) மாத்திரம் நன்னூலிலும் விசேஷ நூல் தமிழிலக் கணத்துக் குண்டெனத் தெரிந்து, பல இலக்கணங்களையும் ஆராய்ந்து, தமது போங்காய் மூன்றாம் இலக்கணம் (Pope's Third Grammar) ஒன்றியற்றி, அதில் யாப்பருங்கலம், குவலயானந்தம், இலக்கணக் கொத்து முதலிய பல நூல்களினின்றும் சிறிது சிறிதெடுத்துக் கூறியிருக்கிறார்.

பட்டணத்தில் தட்டார் குல திலகராய்ப் பிறந்து, அநேக வருஷங்களாய்த் திருச்சிராப்பள்ளியில் தமிழ் கற்பித்து வந்த முத்துவீரக் கவிராயர், முதல் யாப்பிலக்கணம் சூத்திரப்பாவில் இயற்றி அச்சிட்டார். பின் பஞ்ச விலக்கணங்களையும் சவிஸ்தாரமாய்ச் சூத்திரப்பாவில், சுயமாய் எழுதி அச்சியற்றும் சமையத்துத் தேகவியோகமானர். இவர் தொல்காப்பியம், அகத்தியம், இலக்கண விளக்கம் என்ற நூல்களின் சூத்திரங்களைக் கோத்து, உரையில் காண்பவற்றைச் சுயமான சூத்திரங்களைக் கொண்டு காண்பித்து,

அரும்பிரயாசையாய் முன்னோர் மொழிகளைப் பொன் போற் போற்றி நல்ல நூலொன்று முடித்தார்.

தமிழ் வழுவறக்கற்று, அநேக இலக்கியங்கள் பார்வையிட்டு, சமஸ்கிருதமும் தெரிந்துகொண்டு, ‘இலக்கணத்திரட்டு’ எனச் சிறந்த வாசக இலக்கணம் இயற்றியவர் கனம். மார்டின் உவில்பிரெட் (Mr. Martyn Wilfred) என்றவர். இவர் வெகுநாள் உபாத்தியாயராகச் சர்க்கார் பள்ளிக்கூடங்களில் நல்ல வேலை செய்து, பள்ளிக்கூட விசாரணைசெய் (Deputy Inspector) வேலையிலிருக்கிறபோதே தேக வியோகமானர்.

தற்காலத்தில் தமிழ் அபிவிருத்திக்காக அதிகமாய் உழைத்து வருபவர்கள் (Mr.W.Thamotharam Pillai, B.A., B. L., Mr. P. Ranganatha Mudaliar, M. A., Mr. J. M. Vellu Pillay) யாழ்ப்பாணிகளான கனம். தாமோதரம் பிள்ளை, கனம். ஜே. வேலுப்பிள்ளை, பெரியபட்டம் பெற்ற கனம் இரங்கநாத முதலியார் முதலியவர்களே. இவருள் கனம். தமோதரம்பிள்ளை ஏட்டுப்பிரதிகள் மங்கிமறைந்து கிடந்த தமிழ் இலக்கண இலக்கியங்களில் அநேகத்தைக் கண்ணும் திருஷ்டி குறையத்தக்கதாக வெகு கஷ்டத்துடன் வாசித்துத் திருத்திப் பேர்த் தெழுதி, மிகுந்த பொருட் செலவும் செய்து, அச்சியற்றித் தமிழ் பாஷையின் சிறப்புப் பிறருக்கு விளங்க மிக்க கருத்தோடு உழைத்து வருகிறார்.

இது 1893 ஆம் ஆண்டு தாவிது யோசேபு உபாத்தியாயரால் எழுதப்பெற்ற ‘தமிழ் இலக்கணத் தெளிவு’ என்ற நூலிலிருந்து எடுக்கப்பெற்றது. அக்காலத்திய உரைநடைக்கும் இதுவே சான்றாகின்றது. இதில் அக்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்து மொழியையும் உரைநடையையும் வளம்படுத்திய பலரை அவர் குறிப்பிட்டுள்ளார். சிலர் ஆங்கிலேயரைச் சார்ந்தும் சிலர் அவர்களைச் சாராதும் சிறக்க வாழ்ந்துள்ளனர். ஆங்கிலேயரைச் சாராது வாழ்தலே பெருமையுடையதென அக்காலத்தில் கருதப்பட்டதென்பதை அறிகிறோம். ஆங்கிலேயரைச் சாராது உரிமையோடு தமிழ்த் தொண்டு செய்து வாழ்ந்த பெரியவர்களைச் ‘சிங்க’ங்களெனவே அவர் அழைக்கிறார்.

ஆங்கில அரசு தமிழ் நாட்டில் பிரபல்யமாயிருக்கும் போது, ஆங்கிலேயரால் நன்கு மதிக்கப்பட்டுவந்த தமிழ்ப்பண்டிதர்கள் இராமாநுஜக்கவிராயர், விசாகப் பெருமாளையர், தாண்டவராய முதலியார், அ. சபாபதி முதலியார், அ. வீராசாமி செட்டியார், வேலாயுத முதலியார், சரவணப் பெருமாளையர்.

ஆங்கிலேயரை அடுத்துறவாடாதிருந்த தமிழ் சிங்கங்கள் நல்லூர் ஆறுமுக நாவலர், மாயவரம் மீட்னாசி சுந்தரம் பிள்ளை, வடலூர் இராமலிங்கப் பரதேசியார், திரிசிரபுரம் முத்துவீரக் கவிராயர். இவர்கள் கொஞ்ச காலத்துக்கு முன்தான்[4] காலவி யோகமானர்கள். இச்சிங்கங்களிடம் கற்றுச் சொல்லிகளாயிருந்தவர்கள் இப்போது கலாசாலைகளில் தமிழ் முன்ஷிகளாக விருக்கிறார்கள்.

இவ்வாறு அக்காலப் புலவர்கள் பாராட்டப் பெறுகிறர்கள். இவர்களுள் பெரும்பாலோர் தமிழ் உரைநடையை வளம்படுத்தியவர்களே. எனவே இவர் தம் உரைநடைச் சிறப்புகளை இன்றும் நாளையும் காணலாம். ஆங்கிலேயருக்காக அமைக்கப்பட்ட சங்கமே சென்னைக் கல்விச் சங்கமாகும்.

ஊர் வரலாறுகள்

மெக்கன்சி துரை அவர்கள் பலவிடங்களுக்கு நேரில் சென்று கண்டவைப்பற்றி மேலேயறிந்தோம். அவற்றுள் பெரும்பாலானவை அவ்வப் பகுதி பற்றிய கதைகளும் வரலாறும் முதலியனவுமேயாம். சிலவற்றை மக்களே எழுதிக் கொடுத்தார்கள். சிலவற்றை நேரில் சொல்ல அதிகாரிகள் குறித்துக் கொண்டார்கள். ஒன்று காண்போம்.

கேவை மாவட்டத்து அந்தியூர் தாலுக்காவைச் சேர்ந்த வரதநல்லூர் கிராம மக்கள் அவ்வூரின் பழையவரலாற்றினை “மெக்கன்ஸி' துரைக்கு நேரில் சொன்னது ஒன்று. இது அவர் தொகுப்பில் சிதையாது உள்ளது. தொடக்கமும் முடிவும் மட்டும் ஈண்டுக் குறிக்கின்றேன்.

௲௮௱௭௵ (1807) ஏப்ரல்௴ ௰௯௨ மேஜர் கர்னல் மெக்கன்ஸி சாகிபு அவர்கள் சர்க்காருக்குக் கோயமுத்தூர் ஜில்லா அந்தியூர் தாலுக்காவிற் சேர்ந்த அக்ரகாரம் ஒபனி 'பாவாணிகூடல்’ மிட்டர் பயிசிமவுசே ‘வரதநல்லூர்’ அக்கிரகாரம் மகா ஜனங்கள் எழுதிக்கொடுத்த ‘கைபீயத்து’ என்னவென்றால்:—

பூருவத்தில் சாலிவாகன சகாப்தம் ௲ ௱ (1100). வருஷத்துக்குமேல் ஊராட்சிக்கோட்டை கிராமத்துக்குச் சேர்ந்தது ‘அல்லப்பச் செட்டி’ பாளையம் என்று ஒரு பேட்டையிருந்தது. ௸ பேட்டைப் பாளையக்கார ராஜிகத்தில் காலியாய்ப் போயிற்று.

அப்புறம் சகாப்தம் ௲௩௱ காளயுத்தி வருஷ்ம் தேவராய மகராய மேற்படி அல்லப்பச் செட்டி பாளையத்தில் அல்லாளப்பட்டர். சங்கம பட்டர் வகையரா பிராமணர்களுக்கு அக்கிரகாரமும் கட்டு வித்துக் கொடுத்து ‘சோமக்கிரஹன’ புண்ணிய காலத்தில் மேற்படி பிராமணர்களுக்கு முப்பத்து நாலு பங்கும் தானம் பண்ணிச் சிவப்பிரதிஷ்டையும் பண்ணுவித்துக் கொடுத்தார்.அது முதல் வெகுதானிய வருஷம் வரையில் நிருபாதிக சருவ மானியமாய் நடந்து வந்தது.

இவ்வாறு தொடங்கிய வரலாறு, பின் பல்வேறு விளக்கங்கள் காட்டி அடியிற் கண்டபடி முடிகின்றது.

நின்ற சர்க்கார் இரண்டு பங்குக்குச் சர்க்கார் மானியம் போட்டுக் கொண்டார்கள். அதுமுதல் எதத்கக்ஷணம் வரையில் ௸ பூமி அனுபவித்து வருகிறோம். இது நடந்த கைபீயத்து. இக் கைபீது எழுதினது ௸யூர் ஜனம் பேர். குப்பன் எழுத்து. இராமையன் கையெழுத்து. இரங்கையின் ருசுவு, திருமலைராயன் ருசுவு. நாராயணய்யன் ருசுவு (Mec. collections, D. 2877)

இவ்வாறு இவ்வரலாற்றுக் குறிப்பு முடிகின்றது. இதில் காணும் ஆண்டுக் கணக்குச் சரியாக இல்லை. இதைக் கைபியத்து அல்லது கைபீது என்று குறித்துள்ளனர். இச்சொற்களுக்கு விவரக் குறிப்பு என்றும் statement, report, detailed account, particulars, என்றும் பொருள் உள்ளன. கைபீயத்து நாமா என்றால் பிராமணப் பாத்திரம் அல்லது ‘Affidavit’ என்று பொருள்.[5] 1839 இல் வெளியான நூலில் 'news, particulars' என்ற பொருள்கள் உள்ளன[6]. எனவே இச்சொல் இன்று நாட்டில் அதிகமாக வழக்கத்தில் இல்லை என்றாலும் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் கிராம மக்களிடத்தில் மிகச் சாதாரணமாக வழங்கிய ஒன்று எனத் தெரிகின்றது. இதில் எழுதினவர், சாட்சி தந்தவர் ஆகியோர் பெயர்களும் இறுதியில் இடம்பெற்றுள்ளன. ‘ருசுவு’ என்பது சாட்சியாகும். ‘மிட்டாபயிசி மவுசே’ என்பது அக்கிராமம் தானமாகக் கொடுத்த வகையை விளக்கும் தொடர்போலும், இத்தகைய ‘கைபீது’கள் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் நாட்டில் அதிகமாக வழங்கி வந்தமையின் இச் சாசன முறையால் தமிழ் உரைநடை ஓரளவு வளர்ச்சி பெற்றுள்ளதை மறுக்க முடியுமோ?

இவ்வாறான கைபீதுகள் எண்ணற்றவை எனக் கண்டோம். மேலே நாம் கண்டது நேரில் சொல்லியது; ஊர் வரலாறு பற்றியது. இனி இந்த அடிப்படையில் மெக்கன்சி துரை அவர்கள் ‘ரயிட்டர் பாபு ராயர்’ அவருடன் சென்று அவ்வந் நிலத்து மக்களைக் கேள்வி கேட்டுப் பதில் பெறும் வழக்கமும் உண்டு எனக் காண்கிறோம். துரை அவர்கள் எழுத்தருடன் (writer) சென்று மக்களுடன் கலந்து பழகி, அவர்களை கேள்விகள் கேட்டுப் பெற்ற பதில்கள் பல. அவற்றுள் சீரங்க வினாவிடையைக் காண்போம்.

விவிைடை-பிரதியுத்தரம்

௧. வது கேள்வி: தர்மவர்மா எனப்பட்டவர் யார்? அவர்தானா தர்மராசர்? அவராலேதானா ஆதியில் ஸ்ரீரங்கம் கோயில் ஏற்பட்டது? ‘வர்மா’ என்பதற்கு அர்த்தம் என்ன?

உத்தரம்:—தர்மவர்மா வென்கிறவர் சோள தேசத்து ராஜா. அவர் தர்மராஜா அன்று. இந்தக் கலியுகத்துக்கு முன் துவாபரார்த்தத்தில் தர்ம ராஜாவினுடைய காலம். தர்ம வர்மாவினுடைய காலம் ௩௰௬ சதுர்யுகத்துக்கு முன் திரேதாயுகத்து ராஜா, விபீஷணருக்குக் கொடுத்த ஸ்ரீரங்க திவ்ய விமானத்துக்குத் தர்மவர்மா சப்தப்காரம், மண்டபம், கோபுராதிகள் கட்டினவர். ‘வர்மா’ என்ற சப்தத்துக்குக் கவசம் என்று அர்த்தம். ஆகச்(சே) செய்த தர்மத்தைக் கவசமாக உடையவர், (வர்ம சப்தம் க்ஷத்திரியரைக் குறிக்கும் ஒரு குறிப்புப் பேராம். அது சர்மா என்பது பிராமணரைக் குறிப்பது போலா மென்க.) தர்ம வர்மாவினுடைய வாசஸ்தானம் உறையூர். அதற்கு நிகளாபுரி என்றும் பெயர். அவர் துரைத்தனம் முதல்தான் அந்தப் பட்டணத்துக்குப் பிரசித்தி. (Mec. Collections D. 3186) இவ்வாறு திருவரங்க அந்தணர்கள் ‘மெக்கன்ஸி’க்கு முன் விளக்கும் பொழுது சோழர் காலத்தை 36 யுகத்துக்கு முன்பு (சுமார் 60 லட்சம்x36) ஈர்த்துச் செல்லுகின்றனர். இதுபோன்ற விளக்கங்கள் பல அவர் குறிப்பில் உள்ளன. சில சாதிகள் பற்றிய கைபீதுகளும் உள்ளன. ஒன்று குறும்பர் பற்றியது. அவர் ஊர்கள் அனைத்தும் இன்றும் சென்னைக்குப் பக்கத்திலேயே உள்ளன.

குறும்பர்களுடைய ௨௪ கோட்டைகள் உண்டாயிருந்தன. அவைகளில் உப கோட்டைகள் அதிக விசேஷ கீர்த்திகளைப் பெற்றது. இந்த இருபத்தினாலுக்கும் புழல் கோட்டை ராஜதானி எனப்பட்டிருக்குது. இந்தக் குறும்பர்கள் பஞ்ச பாண்டவர்களின் யுத்தத்தில் அளனாகாளர் ஆக்கப்பட்டு படுகளத்தில் தீகமாய் தொண்டுபட்டதனால் யுத்தத்துக்கு அதிக பண்பட்டவர்களானார்கள் ஆனாலிவாளந்த யுத்தத்தில் முறியடிக்கப்பட்டு எங்கும் பரவி சிதறடிக்கப்பட்டார்கள்.

இவர்கள் கொல்லப்பட்டவிடம் நெடும்பூரில். அந்த இடம் இன்றும் குறும்பரைக் கொன்றவிடம் என்று சொல்லப்படுது. குறும்பருக்குண்டான கோட்டைகளின் விவரம் பொழில்–சாலப் பாக்கம்–நெடும்பூர் – அணைக்கட்டு – பட்டிபுலம் – ஆமூர் – புலியூர் – மறயிசீகுளம் – களத்தூர் – செம்பூர்–தமுணுார்–யீகார்டு.

(Mec. Collection D. 867)

வரலாற்றுக் கதைகள்

இவர் தொகுப்பில் மாணிக்க வாசகர் பற்றிய ஒரு வரலாற்றுக் குறிப்பும் காணப்பெறுகின்றது. அதன்

முகவுரையையும் முதலாவது பத்தியையும் மட்டும் ஈண்டுக் காணலாம்.

முகவுரை: கனம் பொருந்திய மேசர் காலன் மெகன்ஸி துரையவர்கள் வேதநாயக வேதாகம சிரோமணியாருக்குக் குடுத்த திட்டம் அல்லது மெமோரண்டத்தின்படி மாணிக்கவாசகர் சரித்திரம் ஏதென்பதைத் திட்டமாய் விசாரித்தெழுத வேண்டியதாமே. இதைத் தொட்டு அறிய வேண்டியது.

(க. வது) மாணிக்கவாசகர்தெட்சண ராச்சியத்தில் மதுரைப்பட்டணத்தில் பிராமண வங்கி சத்திலே பிறந்து தென்னவன் பிரமராயன் என்கிற பாண்டியனுக்கு மந்திரியாயிருந்து அவருடைய திரவியத்தைக் கொண்டு ஆவிடையார் கோவிலென்று சொல்லப்படுகிற திருப்பெருந்துறையிலிருக்கப்பட்ட திருப்பணிகளைக் கட்டினரென்றும் கடைசியிலே சிதம்பரத்துக்கு வந்து அவ்விடத்திலே யீழத்து ராசாவினிடத்திலிருந்து வந்த புத்தர் சமயத்தாரை வாது பண்ணி அல்லது தர்க்கம் பண்ணியழித்துப் போட்டாரென்றுஞ் சைவ மதத்தாரெல்லாம் வாய் விசேஷமாகச் சொல்லு கிறார்கள்.

ஆலைவர் எந்த வருஷம் எந்த ஆண்டிலே யிருந்தாரென்று வாய் விசேஷமாகச் சொல்லுகிற வர்களையுங் காணோம், புராணத்திலும் காணோம்.

இவ்வாறு மாணிக்கவாசகர் வரலாறு கூறப்படுகிறது. இதில் மொழித் தவறு மட்டுமல்லாது இடம், வரலாறு, பெயர் முதலியனவும் பிழைபட்டிருப்பதையும் காண்கின்றோம். எனினும் இவைபற்றி யெல்லாம் விளங்க அறியாதவராகிய ஆங்கிலேயராகிய மெக்கன்சி அவர்கள் அவரவர் எழுதியதையும் கூறியதையும் அப்படியே வகுத்துத் தொகுத்து வைத்தார். இவ்வாறு சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் செவி வழியாகவும் எழுத்து வழியாகவும் நாட்டில் வாழ்ந்து வளர்ந்து வந்த உரைநடையை நம்மால் காண முடிகின்றது. இந்த உரைநடையில் பல பிழைகள் உள்ளனவேனும் இதுவும் தமிழ் உரைநடை வரலாற்றில் இடம் பெற்றுப் பின் நன்கு வளர இருக்கும் உரைநடைக்கு வழிகாட்டியாக அமையவில்லையா!

மக்கள் பிணக்கு

இனிச் சில மக்களின் வரலாறு பற்றிய குறிப்புக்களையும் கிராமங்கள் தோறும் மக்கள் சாதிவெறிகொண்டு மாறுபட்ட வரலாறுகளையும் இக்குறிப்புக்களில் காண்கின்றாேம். இத்துறையில் பல இவர் தொகுப்பில் உள்ளன. ஒன்றை மட்டும் காணலாம். இன்றும் சதுரங்கப்பட்டினத்தை அடுத்த நிலப்பகுதிக்குக் குறும்பரை நாடு என்றும் குறும்பர் நாடு என்றும் பெயர் இருப்பதை அறிவோம். ஆயினும் குறும்பர் என்ற மரபினர் வாழ்வைக் காணல் அரிது. இதற்கான காரணத்தை இன்றும் நம்மால் அறிய முடியவில்லை. பின்வரும் வரலாற்றுக் குறிப்பு- அதன் உரைநடையில் பல்வேறு தவறுகள் பெற்றிருந்தபோதிலும்-குறும்பர் வாழ்வு வீழ்ந்த வரலாற்றை அப்படியே படம் பிடித்துக் காட்டுவது போன்று அமைந்துள்ளது.

குறும்பர் என்ற இடவமிஸத்தாருடைய

சரித்திரம்:


றாயர் சமஸ்தானத்திலே குறும்பர் என்ற யிடச் சாதிகள் வெகுஇடங்களிலே றாட்சியபாரம்பண்ணினார்கள். அவாள் நெடுமரம், அணைக்கட்டு, சால பாக்கம், நெரும்பூர், என்ற யிடங்களிலேயும் யின்னம் மத்த இடங்களிலேயும் கோட்டைகள் கட்டிக்கொண்டு பிரபலியமாய் வாழ்ந்தார்கள்=அன்னாள்களிலே குறும்பர் குடிமக்கள் முதலிக்குடிகளையும் வெள்ளாளகுடிகளையும் தங்களை வணங்கும்படியான பிறையத்தினம் பண்ணினார்கள் ஆனல் முதலிகளும் வெள்ளாளரும் அதுக்குச் சம்மதி கொடுக்கவில்லை அப்போ குறும்பர்கள் அவாளுக்கு வெகுயிடுக்கங்கள் பண்ணினார்கள்

ஆனாலவாளதற்குச் சம்மதிகுடுக்கவில்லை-அதின் பேரில்லவர்கள் தெருவிலும் முச்சந்திகளிலும் வெத்திலை தோட்டங்களிலும் யின்னம் வெகு யிடங்களிலும் திட்டி வாசல் போலே கட்டி அதுக்கெதிறிக் குறும்பர் உளுக்கார்ந்து கொண்டு சறுவத்திறாளும் அதில் தலை குனிந்து நுழையும்படியாகவும் அதினாலே தங்களுக்கு வணக்கம் நடக்கவும் எத்தினம் பண்ணினர்கள்-அப்போ முதலிமாரும் வெள்ளாளமாரும் தலைகுனிந்து நுழைகிறதுக்கு வதிளாக முதல் காலை விட்டு நுழைந்து யிதனலே யவாளை அவசங்கை பண்ணினர்கள்-என்ற போதைக்கும் அவாளதிகாரஸ்தர்களானபடியினலே பலவிதத்திலும் வெள்ளாளரையும் முதலிகளையும் துன்பப்படுத்தினர்கள். அப்போ துன்பம் அதிகரித்தபடியினலே யிவாளெல்லாரும் யோசினை பண்ணி ஒன்றிலேயும் முடியாமல் கடைசியிலே யொரு அம்பட்டனிடத்திலே போய அவனுக்கு மான்னிய சான்னியம் பண்ணி விக்கிருேம் குறும்பரை யதம்பண்ண யோசினை கேட்டார்கள் அப்போ அவன் சமாளிப்புச் சொல்லி தானதுக்கு உபாயம் பண்ணுகிறேன் என்று திடாரிக்கஞ் சொல்லி யிவாளை வீட்டுக்கு அனுப்பி விட்டான் அதின் பிறகு அவன் தன்னினத்தாராகிய அம்மட்டர் வீடுகளுக்கெல்லாம் போய் அவாளெல்லாரும் தனக்கு உதவி செய்ய வேணுமென்று கேட்டுக் கொண்டான் அந்தப்படியே அவாளெல்லாரும் உதவி செய்கிறோமென்று வாக்குக் குடுத்தார்கள் குறும்ப சாதியாருக்குள்ளே ஒருவன் சென்றுபோனல் இழவுக்கு வருகிற வாளக் கூட்டத்தாரனைவோரும் தலையேகச் சவரம் பண்ணுகிறது வழக்கமாயிருந்தது—

அப்படி ஒருநாள் தறுவாயிலே குறும்பர்களுக்குள்ளே மூப்பாயிருக்கிற ஒருவன் விழுந்து போனன் அப்போ குறும்பர்கள் எல்லோரும்

ஏகோபித்துக் கூடியிருந்து அவனிழவு சடங்கு நடப்பிக்கிறதிலே எல்லாரும் மாமூலப் படிக்கு சவரம் பண்ணிக்கொள்ள ஒரு மிக்க உளுக்கார்ந்தார்கள் அப்போ யிந்த அம்மட்டனனவன் தான் பந்து கட்டு பண்ணியிருந்த அம்மட்டர்கள் எல்லோருக்கும் தாக்கிதை பண்ணி அவாளவாள் சிறைக்கிற மனுஷரை அவாளவாள் கொன்று போடக் கற்பித்திருந்தான் அந்தப்படியே யவாளவாள் சிறைத்த மனுஷனை அவனவன் தலையை சிரைத்து கழுத்தண்டையில் வருகிறபோது குரவளைகளை அறுத்துக் கொன்று போட்டார்கள் அப்போயிங்கே மாண்டுபோன குறும்பறுடைய ஸ்ரீகளெல்லாரும் பெலத்த அக்கினி வளத்து அதில் குதித்து பிருணசேதம் பண்ணிக்கொண் டார்கள்-அப்போ ஸ்ரீகள் நெரும்பூரிலே முப்போகம் விளைந்தாலும் உப்புக்கு நெற் கிடையால் போகவென்று சாபமிட்டார்களாம்-குறும்பராலே கட்டப்பட்ட கோட்டைகளின்னம் மேலாகச் சொல்லப்பட்ட யிடங்களிலே முழுதும் யிடிந்து தவிழ்ந்து மண்மேடாய்க் கிடக்குது அதை போய்ப் பார்த்தவர்களிருக்கிறார்கள் அவாளால் கட்டப்பட்ட கேணிகள் அந்தந்த யிடங்களிலே பாழாய்ப் போய்க் கிடக்குது அது யிந்த சதுரங்கப் பட்டணத்திலேயும் யிருக்குது அந்தக் கல்கள் பூறுவங்கண்ட வெகு நாளையின் கல்லுகளாயிருக்குது—

(Mec, Collection, D. 3838)


பஞ்ச தந்திரம்

இந்த அளவோடு இத்தகைய குறிப்புக்களை நிறுத்தி வேறு வகையில் உரைநடை வளர்ந்த வரலாற்றைக் காண்போம். பஞ்சதந்திரக் கதையானது தாண்டவராய முதலியார் என்பவரால் ஆங்கிலேயர் பொருட்டுச் செய்யப் பெற்ற ஒரு நூல் என்பதைக் கண்டோம். இந்நூலை 1825–இல் அவர் எழுதி முடித்தார். எனினும் 1850-இல் அவர் மறைந்தார் என்றும் காண்கிறோம். அவரே கீதா மஞ்சரி என்ற மற்றாெரு வசன நூலும் இலக்கண வினா விடை என்றாெரு நூலும் எழுதினார் என்பர். அந்தப் பஞ்சதந்திரம் என்ற கதை ஆங்கிலேயருக்காகப் படிப்படியாக இலக்கணப் புணர்ச்சிகள் பொருந்த அமையப் பெற்றுள்ளமையும் மேலே கண்டோம். முதலில் வரும் கதைகள் எளிய இயல்புப் புணர்வுடைய வாக்கியங்களாக அமைய, பின் வரவரப் பல்வேறு இலக்கணப் புணர்வுகளையுடைய வாக்கியங்கள் இடம் பெற்றன. இந்தக் கதையே சென்ற நூற்றாண்டிலும் இந் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பல்வேறு பாடநூல்களில் தவறாது இடம் பெற்றமையை அறிகிறோம். அதன் நடை முன் கண்டமை போலன்றிச் செம்மை நலம் சார்ந்திருக்கின்றது. சென்ற நூற்றாண்டின் உரைநடைக்கு அதில் ஒரு சிறு பகுதியையேனும் காணல் தேவையாகின்றது. இதோ அந்த நடைக்குப் புணர்ச்சி இலக்கணம் நிரம்பிய ஓர் எடுத்துக் காட்டு:—

ஐந்தாவது. அசம்பிரேஷிய காரியத்துவம்–கதை 1.

உச்சயினி புரத்தில் வதிந்த தேவநாம வேதியனொருவன் மனைவியோடு இல்லறம் நடாத்தும் நாளிற் குழவியில்லாக் குறையால் இருவரும் ஒரு கீரிப்பிள்ளையை மைந்தனைப்போற் கருதி வளர்ப்புழி ஒரு மகவுண்டாயிற்று. மனைவி அம்மதலையை ஓர் நாள் தூங்குவித்துக் கணவனைப் பார்த்து, “யான் உதகத்தின் பொருட்டுச் செல்லா நின்றேன். நீர் நங் கான் முளையைப் பார்த்திரும், ஒரு வேளை கீரி கடிக்கும்” என்றிங்ஙனம் வகுத்துத் தண்ணீர்க்குச் செல்ல, பின்னர் அக்குழந்தை தொட்டிலிற் கண் வளர்ந்தது அவ்வந்தணனும் ஒரு தடாகக் கரும வயத்தனய்ப் புறஞ் செல்ல, அத்தருணத்தில் ஒரு கிருஷ்ண சருப்பம் பிலத்தினின்றும் புறம்போந்து தொட்டிலின் மேற் செல்லா நிற்கக் கண்ணுற்ற நகுலம் அதை அக்கணமே விரைந்து பற்றி உதறிக் கொன்று பல

கண்டலாங்கண்டு குருதியாற் பூசுற்ற முகத்துடனே தனது ஆற்றலைக் காட்ட விரும்பி விரைந்து துவார முகமாக வருகையில், வந்த பார்ப்பினி செந்நீரால் நிறைந்த அதன் வதனத்தைப் பார்த்த வளவில் அது தன் பிள்ளையைக் கடித்து மடித்ததென்று உள்ளித் துள்ளித் துணுக்குற்று நீர்க்குடஞ் சிதைவுறும்படி அதன் தலைமேற் போட்டுக் கொன்று உடனே உட்புகா நிற்கையில், மகன் உறங்குதலையும் அருகே கரும்பாம்பின் துணிக்கைக் குவையையுங் கண்டு அந்தோ! கெட்டேன், யான் என் அருங்குழவியை நன்காராய்தலின்றிக் கொலை செய்தேனெனச் சோனமுற்றுப் புலம்பா நிற்புழி அவள் தலைவன் ஆண்டு எய்தி, ‘குழந்தை இதோ இருக்கையில் நீ வெறுமையென மகவிழந்தே னென்றேன் கதறிக் கலுழ்கின்றன? என்னடி பேதாய்!” என மனைவி, “நீர் யாதோ பேரவாவால் என் மொழி தள்ளிப் போனமையால் அதன் பயன் இந்தோ வாய்த்தது, இது மிக்க அவாவினன் மூடி மேற் சக்கிரம் சுழன்றதை யொத்தது” என, அவன் ‘அஃதெவ்வண்ணம்? உரைத்தி’ என உரைப்பான்.

–பக். 131, 132.

கதைகள்

இப்படியே வேறு சில கதைகளும் வழக்கத்தில் உள்ளன. அவற்றில் ஒன்று மரியாதைராமன் கதை. 1847–இல் சைதாப்பேட்டை தேசப்ப செட்டியார் குமாரர் வீரபத்திர செட்டியாரால் ஜீவரக்ஷாமிர்த அச்சகத்தில் பதிப்பிக்கப் பெற்ற கதா சிந்தாமணி என்ற நூலில் ஒரு பகுதி இது. இந் நூல் பல சிறு கதைகளைத் தன்னகத்தே கொண்டது. இதில் நடை அவ்வளவு சிறந்ததாக இல்லை யெனினும் இத்தகைய கதைகளைப் பொது மக்கள் விரும்பிப் படித்தார்கள் எனக்காண முடிகின்றது. எனவே அதையும் இங்கே தருகின்றேன்.

மரியாதை ராமன் கதை:

௰௮ வது. ஒருவன் காதுக் கடுக்கனை மற்றாெவன் திருடியது.

ஒரு சத்திரத்தல் இரண்டுபேர் வழிப்போக்கர் ஒருவனுக்கொருவன் எதிர்முகமாகத் தலைவைத்துப் படுத்துக் கொண்டார்கள் நித்திரை வேளையிலே வலது காது கீழாப் படுத்திருந்தவனுடைய இடது காது கடுக்கனை இடது காது கீழாகப் படுத் திருந்தவன் கழற்றித் தன் வலது காதிலேபோட்டுக் கொண்டான். விழித்துக்கொண்ட பிற்பாடு கடுத்கனை யிழந்தவன் என் கடுக்கனை ஏன் கழற்றிக் கொண்டா யென்று கேட்க அவனும் என் காதுக் கடுக்கனை நீதான் கழற்றிக் கொண்டாயென்றான், இப்படிக் கலகப்பட்டுக் கடுக்கனை யிழந்தவன் மரியாதை ராமனிடத்திலே சொல்லிக் கொண்டான். நியாயாதிபதியாகிய அவன் திருடனை அழைத்துக் கேட்டவிடத்தில் அவனும் அப்படியே சொன்னபடியினலே நீங்கள் இருவரும் எப்படிப் படுத்துக் கொண்டீர்களோ அப்படி பகுத்துக் கொண்டு காண்பியுங்களென்றான். அப்படியே காண்பித்தபோது திருடனைப் பார்த்து உன் இடதுகாது கீழே இருந்த படியால் அதிலிருந்து எப்படி கழற்றலாம். அவன் இடது மேலே இருந்தபடியால்எளிதாகக் கழற்றிக் கொண்டாய். நீதான் திருடனென்று சொல்லி உடமைக்காரனுக்குக் கடுக்கனை வாங்கிக் கொடுத்துத் திருடனே இருபத்துநாலு அடி அடிப்பித்து ஆறு மாதம் காவலிருக்கச் செய்தான். அத்திருடன் பொய் சொன்னலும் பொருந்தச் சொல்லவேனும் என்றபடி காத்துக் கொள்ளவும் தெரியாமற் போயிற்றேயென்று துன்பமடைந்தான்.இவைகளேயன்றி நடேச சாஸ்திரிகள் எழுதிய திராவிட நாட்டுப் பூர்வகாலக் கதைகள், மத்தியகாலக் கதைகள் முதலியனவும் படித்து மகிழத்தக்கன. நல்ல உரைநடையில் அமைந்துள்ளன்.

இவ்வாறு சென்ற நூற்றாண்டில் எத்தனையோ வகையான கதைகள் எழுதப்பெற்றும் அச்சிடப்பெற்றும் நாட்டில் உலவிவந்தன. எழுதப்பெறாது செவி வழியாகச் சென்ற நூற்றாண்டுவரை வந்த பல்வேறு கதைகளும் அச்சுச் சாதனம் உண்டான கராணத்தாலே நாட்டில் நூல்களாக உருப்பெற்று உலவின. அவை அனைத்தையும் வரிசைப் படுத்திக் கூறுவதென்பது இயலாத ஒன்று. மரியாதைராமன் கதை (1812). விக்கிரமாதித்தன் கதை, முப்பத்திரண்டு பதுமை கதை (1804), சதமுக ராவணன் கதை (1818), தாடி வெண்ணெய்க்காரன் கதை (1843) விறலிமாறன் கதை (1828), தமிழறியும் மடந்தை கதை (1812) முதலியவை சில. இவற்றுள் சில ஏட்டுப் படிகளாகவும் இருந்து இந்த நூற்றாண்டில் அச்சிடப்பெற்றுள்ளன. இவையுங் இவை போன்ற எண்ணற்ற பிற கதைகளும் நாவல்களும், வளர்ந்து வருகின்ற தமிழ் உரைநடை வரலாற்றில் இடம் பெறத்தக்கவையே என்பது மட்டும் உறுதி.

நாவல்

பத்தொன்பதாம் நூற்றண்டிலே, இத்தகைய கதைகள் மட்டுன்றி இன்று நாட்டில் வழங்கும் ‘நாவல்’ என்னும் புதுவகை நூலும் இடம் பெறலாயிற்று. தமிழில் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்னும் நாவலை எழுதி (1835 இல்) வெளியிட்ட மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் இத்தகைய நாவல்கள் பற்றியும் தமிழில் உரைநடை வளர வேண்டிய தேவை பற்றியும் தம் முகவுரையில் குறித்துள்ளார். அதுவரையில் தமிழ் உரைநடை வளராமைக்கு உரிய பல காரணங்களை விளக்கி, ஏட்டில் எழுத்தாணி கொண்டு எழுதும் முறையில் நீண்ட விளக்க உரை எழுத இயலாத் தன்மையைத் தொட்டுக்காட்டி, தாம் உரை நடையில் இந்நாவலை எழுதியதற்குரிய காரணந்தை அவர் விளக்குகிறார்.

My object in writing this work of fiction is to supply the want of prose works in Tamil, a want which is admitted and lamented by all.

(முன்னுரை)

உரைநடையின் தேவையை அவர் தமது நூலின் மற்றொரு பகுதியிலும் எழுதிக்காட்டியுள்ளார். ‘வசனம்’ என்பதையே அவர் ஆண்டுள்ளார். சென்ற நூற்றாண்டில் உரைநடைக்கு இவர் எழுத்தும் ஓர் எடுத்துக்காட்டு.

வசன காவியங்களால் ஜனங்கள் திருத்த வேண்டுமே யல்லாது செய்யுட்களைப் படித்துத் திருந்துவது அசாத்திய மல்லவா? ஐரோப்பிய பாஷைகளில் வசன காவியங்கள் இல்லாமலிருக்குமானால் அந்தத் தேசங்கள் நாகரிகமும் நற்பாங்கும் அடைந்திருக்கக் கூடுமா? அப்படியே நம்முடைய சுய பாஷைகளில் வசன காவியங்கள் இல்லாமலிருக்கிற வரையில் இந்தத் தேசம் சரியான சீர்திருத்தம் அடையாதென்பது நிச்சயம்.

(42 ஆம் அதிகாரம்.)
இதில் ஆசிரியர் கூறிய அடிப்படையிலேயே பல உரைநடை நூல்கள் சென்ற நூற்றண்டில் தோன்றி வளர்ச்சியுற்றன. இவ்வுரைநடைபற்றியும் நாவல் பற்றியும் சென்ற நூற்றாண்டின் இறுதியிலும் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலும் எழுந்த சில விளக்கங்கள் சென்ற நூற்றாண்டில் இருந்த அதன் நிலையை நன்கு விளக்குவனவாகும். ‘சாவித்திரி சரித்திரம்’ ‘பத்மாவதி சரித்திரம்’ முதலிய நாவல்கள் எழுதிய மாதவையா அவர்கள் 1903 இல் ‘பத்மாவதி சரித்திரம்’ இரண்டாம் மதிப்பின் முன்னுரையில் நாவல்பற்றியும் அதன் நடைபற்றியும் குறிக்கின்றார்.

மற்றெல்லா உயர்தர கிரந்தங்களையும் போலவே நாவலென்னும் கிரந்தமும் படிப்பவர்

மனதைக் கவர்ந்து மகிழ்வூட்டலை முற்கருத்தாகவும் அத்துடன் நல்லறிவூட்டலை உட்கருத் தாகவும் கொண்டது. கிரந்தத்தில்இடையிடையே கீழ்த்தரப்பட்டபாத்திரங்கள் பேசநேரும்பொழுது இலக்கணவழுச் செறிந்த அவர்தம் வாய்மொழிகளை அவ்வண்ணமே எழுதுவது வழக்கமாயினும், கிரந்த கர்த்தா நேரிற் கூறும் வரலாறுகள் வழுவின்றிருத்தல் வேண்டும். கல்வி தேர்ச்சியில்லாதாரும் பயன் பெறும்படி எழுதப்படும் கிரந்தம் ஆதலின், எவ்வளவு இலேசான நடையில் எழுதப்படினும் நலமே ஆயின் எளிதில் பொருள் தெளிதல் கருதி இலக்கண வழுக்களோடு எழுதப்படின் படிப்பவருள் இலக்கணம் பயின்றார் வெறுப்பையும், அப்பயிற்சியில்லார்—அவர்களுள் முக்கியமாய் இவ்விதக் கதைகளைப் பெரும்பாலும் வாசிப்போராகிய இலக்கண மறியாத பெண்பாலர்—வழுக்களை அறியமாட்டாராய் மயக்கத்தையும் அடைவாராதலின் நன்னடையில் எழுதுவதே தகுதியாகும்.

(பத்மாவதி சரித்திரம். முன்னுரை)


இவ்வாறு உரைநடை எழுதும் போது மக்கள் கையாளவேண்டிய வகையினையும் அவற்றின் வழியே சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றி உரைநடையை வளர்த்தவர் திறத்தையும் காட்டிய, இந்த நூற்றண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த மற்றெரு புலவர் கருத்தையும் இங்கே காணலாம். அவர் யாரென்று நமக்குத் தெரியாது. அவர் கருத்தும் யாவருக்கும் ஏற்கத்தக்கதா என்பதும் ஆராய்ச்சியில்லை. ஆயினும் சென்ற நூற்றண்டின் பிற்பகுதியில் உரைநடை வளர்த்தவர் பற்றி இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த இந்தக் கருத்தை மட்டும் காணலாம்.

வசனமெழுதுவோர் பிரம்மஸ்ரீ சூரியநாராயண சாஸ்திரியாரின்வழிச்சென்றுவசனமெழுதாமலிருந் தால்தான் பயனடையலாம். சாஸ்திரிகள் எழுதிய

வசனம் மிகவும் கடின நடையுடையது. அம்மாதிரியான கடின வசனம் பெரும்பாலார்க்குப் பயன் படாது. “விளங்க வைத்தல்” என்பதைக் கொண்டு வசனம் எழுத வேண்டும். கவியானது கடினமாயிருந்தாலும் குற்றமில்லை. வசனம் கடினமாயிருந்தால் பெரும் பயன் அளியாது. ஆதலின் எளிய நடையில் எழுதுவதுதான் உசிதம். ஸ்ரீமான் வேதநாயகம் பிள்ளை, ஸ்ரீமான் செல்வக் கேசவராய முதலியார் ஆகிய வித்துவான்கள் எழுதிய வசனந்தான் நமக்கு வழிகாட்டக் கூடியது. அவர்களுடைய வசன நடை மிகவும் பாராட்டற்பாலது. ஏனெனில், எளிய நடையில் எழுதுவது கடின நடையில் எழுதுவதைப் பார்க்கிலும் வருத்தமான காரியம்.

(ராமதாஸ் என்னும் புதிய கட்டுக் கதை—முன்னுரை, 1908)

இவ்வாறு இன்னும் பலரும் சென்ற நூற்றாண்டின் நாவல் பற்றியும் உரைநடை பற்றியும் பல கருத்துக்களைக் கூறியுள்ளார்கள். ருபின்சன் குருசோ (1869), தசகுமார சரித்திரம், பிரேம கலாவதியம் முதலிய மொழிபெயர்ப்பு நாவல்களும் வெளிவந்துள்ளன. ‘தீனதயாளு’ முதலிய நாவல்களும் சென்ற நூற்றாண்டின் இறுதியில் வந்தன. கிருபை சத்தியநாதன் என்ற கிறுத்துவ அம்மையாரும் இரு நாவல்கள் எழுதியுள்ளார். ஒன்று கிறித்தவ சமயச் சார்பானது; மற்றது இந்து சமயச் சார்பானது. ‘விநோத சரித்திரம்’ என்று உயர்ந்த இலக்கிய நடையில் நாராயணசாமிப் பிள்ளை என்பார் நாவல் எழுதியுள்ளார் எனவும் அறிகிறோம். இராஜம் ஐயர் அவர்கள் எழுதிய ‘கமலாம்பாள் சரித்திரம்’ நாடறிந்த ஒன்று. 1875 முதல் 25 ஆண்டுகளில் சுமார் 50 நாவல்கள் வந்துள்ளன. சில இதழ்களும் பல்வேறு தொடர்கதைகளைச் சிறுகச் சிறுக வெளியிட்டு வந்தன. இவ்வாறு சிறுகதையும் நாவலும் தாமும் வளர்ந்து தமிழ் உரைநடை வளரவும் உதவின. மக்களும் ஓரளவு அறிவு விளக்கம் பெற்றனர்.

திரட்டு நூல்கள்

இவ்வாறு தனித்தனியான கதைகளின் அமைப்பு மட்டுமன்றி, பல சிறு கதைகளைத் தொகுத்து வெளியிட்ட நூல்களும் சில இருந்தன. நல்ல புலவர் எழுதிய கதைகள் சிதறுண்டுபோகா வகையில் பல அறிஞர் அவற்றைத் தொகுத்து வைத்துள்ளனர். அவற்றுள் சில அச்சிடப் பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று அறிஞர் எம். எஸ். பூரணலிங்கம் பிள்ளை அவர்கள் தொகுத்தது. 1896இல் அவர் ‘வாசகத் திரட்டு’ என்ற பெயரில் பல கதை கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டார். அவற்றுள் சில பேரிலக்கியங்களிலிருந்து சுருக்கமாக எழுதப் பெற்றன; சில மொழிபெயர்ப்புகளும் உள்ளன. அவை வருமாறு:

1. மனோன்மணி கதை ஜே. பி. வாசுதேவ பந்துலு (சுந்தரம்பிள்ளையின் மனோன்மணியம்)
2. சாதுமதி சரிதை கே. குப்புசாமி முதலியார் (King Lear)
3. மனோகரவல்லி கதை எம். எஸ். பூரணலிங்கம் பிள்ளை (Teynnyson’s Princess)
4. தற்காப்பு நியமம் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் (Herbert Spen-cer’s Principle of Ethics)
5. வளநாடு வித்வான் ஜெகராவ் முதலியார் (தேம்பாவணி)
6. மாணிக்கம் விற்றப் படலச் சுருக்கம் ஞானப்பிரகாச வள்ளளார் (திருவிலையாடல் புராணம்)
7. அரசனும் புலவனும் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் (ரூபாவதி நாடகம்)
8. பிரகலாத சரித்திரம் சீனிவாசராகவாசாரியார் (விஷ்ணு புராணம்)
9. சாவித்திரி கதை டி. எஸ். கலசலோசன செட்டியார் (பாரதம்)
10. ஸ்ரீ ராமரும் வாலியும் அருணாசலக் கவிராயர் (இராமாயணம்)
11. பாண்டவர் வெளிப்படுதல் சண்முகக் கவிராயர் (பாரதம்)
12. தந்திரம் எஸ். சுப்பிரமணியப் பிள்ளை (by Sri John Lubbork)
13. சீவகாருண்ய விளக்கம் சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை (அருட்பா)

இக்கட்டுரைகளை உதவிய அனைவரும் சென்ற நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர உதவி செய்தவர்களே. இவருள் சிலர் பல பெருநூல்களையும் யாத்துள்ளமை அறிவோம். இவர்களுள் ஒரு சிலரைப் பற்றி நாளை தெளிவாகக் காணலாம். இவற்றில் ஒரிரு சான்று காட்டி இன்று அமையலாம். மொழிபெயர்ப்பால் உரைநடை வளர்த்தமைக்கும் இது ஒரு சான்றாகும். கதைகள் வழங்கிய வகைக்கும் அவை சான்று பகரும்.

சாதுமதி கதை

இப்பூதலப் பூவைக்குத் திலகம் போல விளங்கா நின்ற விருதை மாநாடு என்னும் திவ்விய தேசத்தை மனுநீதி தவறாமலும், செங்கோல் வழுவாமலும் மன்னுயிரைத் தன்னுயிர் போல் பாதுகாத்து அரசு புரிந்து வந்த வேந்தனொருவன் இருந்தான். சூசை வர்மன் என்னும் பெயர் பூண்ட இவ்வரசன் தன் மனைவியுடன் இல்லறம் வழுவாது நடத்தி, பூர்வ சன்மாந்தரத்திற் செய்த கன்ம வசத்தாற் புத்திர பாக்கியம் பெறாது மனவருத்தமுறுங் காலத்துக் கண்மணிகள் போன்ற புத்திரிகள் மூவர் தோன்றினர்.
(முதல் பகுதி)

மனோகரவல்லி கதை

தென் தேசமாண்டு வந்த குண வீரனென்னும் வேந்தனுக்கு மனேகரவல்லி என்ற அருமைப் புதல்வி உதித்தனள். அவள் தாலாட்டுப் பருவத்திலேயே தன் அன்னையை இழக்கப் பெற்ற நிமித்தம, அவள் பிதா அவளை நாளொரு மேனியாய் வளர்த்துத் தாயிழந்த தனி நிலை மனத்திற் சிறிதும் புகாவண்ணம் அவள் அவாக் கொண்டு கேட்கும் அனைத்தையும் அட்டியின்றி அவட்குச் சேகரித்துக் கொடுத்து அவள் மனோஷ்டப் படியே நடந்து வந்தான்,

இத்தகைய தொகை நூல்களால்-சிறப்பாகக் கதை நூல்களால்-சென்ற நூற்றாண்டில் தமிழ் உரைநடை நன்கு வளர்ந்தது என்பது உறுதி.

நாடகம்

சிறுகதைகள், நாவல்கள் மட்டுமின்றி நாடகங்கள் பல சென்ற நூற்றாண்டில் வெளிவந்தன. அவை பெரும்பாலும் உரைநடை நூல்களே. ஒரு சில பாடல்கள் இடையிடையே விரவப் பெற்றன. சில நாடகங்கள் முழுவதும் பாடலால் ஆனபோதிலும் தொடக்க உரை, அறிமுக உரைகள் அனைத்தும் உரைநடையிலேயே அமைந்துள்ளன. அத்தகைய நாடகங்கள் பலவாக நாட்டில் நடிக்கப்பெற்றன. என்றாலும் ஒரு சிலவே அச்சிடப்பெற்று நூல் வடிவில் வந்துள்ளன. அவற்றுள் ஒன்று ‘தாசில்தார்’ என்னும் நாடகம். இதன் ஆசிரியர் மாவட்ட நடுவராக (District Munsift) இருந்தவர். அரசாங்க ஊழியர்களில் சிலர் நடந்து கொண்ட வகையை நேரில் கண்டு கண்ணீர் வடித்தவர் எனத் தெரிகிறது. இதன் முதல் பதிப்பு 1857லும் இரண்டாம் பதிப்பு 1868லும் வெளி வந்துள்ளன. இந்நூல் அவர் மகனாரால் வெளியிடப் பெற்றுள்ளது. அவரும் ஓய்வுபெற்றிருந்தார் எனக் காண்கின்றாேம். நூலின் முகப்புப் பக்கத்தில் பின்வரும் குறிப்பு உள்ளது.

தாசில்தார் நாடகம்

சைதாபுரம் காசி விஸ்வநாத முதலியார் இயற்றியது

இஃது கோயம்புத்துார் ஜில்லா உடுமலைப் பேட்டை முனிசீபாயிருந்து இப்போது கெவர்ன்மெண்டு உபகாரச் சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கிற சைதாபுரம் காசிவிஸ்வநாத முதலியார் அவர்களாலியற்றப்பட்டு அவர் புத்திரனாகிய சோமசுந்தர முதலியாரது 'ஸ்டார் ஆப் இந்தியா பிரஸில்' இரண்டாவது முறை அச்சிற் பதிப்பிக்கப்பட்டது.

௲௮௱௰௮ ௵ ஜனவரி மாதம்.
103, Armenian Street,
Copy right.

இந்த முதற் பக்க விளக்கம் அக்கால உரைநடைக்கும் சான்றாக அமைகின்றது. இதன் முன்னுரையில் ஆசிரியர் இந்நாடகம் எழுத நேர்ந்த வரலாற்றைக் கூறுவதும் அறிய வேண்டுவதாகும்.

முகவுரை: சிலர் ஒரு எருமையானது தண்ணீர் குடிக்கப் போன குட்டையைக் கலக்கிச் சேராக்கித் தன்னுடலெலாஞ் சேற்றைப் பூசிக்கொண்டு நடக்கிற வழியெலாஞ் சேறாக்கி, வழியிற் போகிறவர்கள் வருகிறவர்கள் பேரிலுஞ் சேற்றைப்

பூசித்தன்னைக் கட்டுகிற கொட்டத்தில் – கட்டுத்தறி – புல் – இதுகளையெல்லாஞ் சேறாக்கி – கட்டிப் புல் போட வந்த தன் எஜமானனுக்குஞ் சேறு பூசி வைப்பது போலக் கிடைத்த உத்தியோகத்தில் பண ஆசையினால் லஞ்சம் வாங்க ஆரம்பித்துத் தங்களுடைய பேர்களையும் துரைத்தனத்தார்களுடைய பேர்களையும் கெடுப்பதுமல்லாமல் அநேக அக்கிரமங்களுக்கு உட்பட்டு அநேக ஜனங்கள் அநியாயமும் துன்பமும் நஷ்டமும் அடையும்படி செய்து வருகையால் அவைகளைப் பல விவகாரங்களிலும், அவரவர் நடத்தைகளிலுமறிந்தும் அனுபவமுடைய அநேகராலும் நொந்தவர்களாலும் சொல்லக் கேட்டும் உணர்ந்தவனா யிருக்கிறேன்.

இந்த நாடகத்தில் பாடல்களுக்கிடையில் உள்ள உரைநடைப் பகுதிகள் சிலவற்றால் உரைநடை பற்றியும் நாட்டு நிலை பற்றியும் அறிகின்றாேம்.

(1) ௬வது பக்கம், ௫ வது வரியில் சேர வேண்டிய நோட்டு,

குடிகளுடைய சவுக்கியத்துக்காகக் குடிகிணறுகளை மராமத்துச் செய்யச் சர்க்காரில் ௫௰–௬௰ ரூபாய் கொடுத்த போதிலும் வீட்டுக்கொரு ஒட்டன் வெட்டிக்கு வந்து வேலை செய்து போகிறதுண்டு. ௲௮௱௪௰௪ ஆகஸ்டு ௴ ௮௨ ரிவின்யூ போர்ட்டு சர்க்கியுலர் உத்தரவினால் கூலிக்காரரைப் பலவந்தமாகப் பிடித்து வேலைவாங்கிவரும் வாடிக்கையை நிறுத்தக் கட்டளை. ௲௮௱௪௰௨ ௵ மே ௴ ௯௨ உத்தரவினல் தண்டு சரபராவுக்கு வண்டிக்காரரைத் தொந்தரவுபடுத்தக் கூடாது. வாடகை சரியாயும் தாமசமில்லாமலும் பட்டவாட செய்யக் கட்டளை.

(2) ௮-வது பக்கம், ௰௪-வது வரியில் சேரவேண்டிய நோட்டு, ௲௮௱௫௰௬ ௵ மே ௴ ௪௨ ரிவினியு போர்ட்டு சர்க்கியுலர் உத்தரவினால்

கல்வியும் நன்னடத்தையுமுள்ளோரைப் பார்த்துத் தாசீல் உத்தியோகத்துக்கு நியமித்து அலுவல்களை நிதானமா யோசித்து நடத்தும்படிச் செய்யக் கட்டளை.

(3) ௰–வது பக்கம், ௨௭–வது வரியில் சேர வேண்டிய நோட்டு. ரிவின்யு டிபார்ட்டுமெண்டில் பெரும்பாலும் தேசஸ்த பிராமணாள் இருக்கிறார்களென்பதைக் காட்டத் கூறியது. ௲௮௱௫௰௫ ௵ மார்ச்சி ௴ ௫௨ ரிவினியு போர்ட்டு உத்தரவினால் கலக்ட்டர் கச்சேரியில் இரண்டு சிரஸ்தாதாரர்களும் தேசஸ்த பிராமணாளாக இருக்கக் கூடாது. பிராமணாளைப் போலவே மற்ற ஜாதி ஜனங்களும் தாசீல்தாரர்களாக நியமிக்க வேணுமென்று கட்டளை.

(4) ௰௨–வது பக்கம், ௪–வது வரியில் சேர வேண்டிய நோட்டு. ௲௮௱௫௰ ௵ நவம்பர் ௴ ௰௪௨ உத்தரவினால் முன் எச்சரிக்கை கொடாமல தாலுகா கஜானாவை அப்போதைக் கப்போது கலட்டர்கள் ஜட்தி பார்த்து வரவேண்டுமெனக் கட்டளை.

(இதில் வரும் எண்கள் அனைத்தும் தமிழ் எண்களாகவே உள்ளன.)

(5) குறிப்பு: தாசில்தார் மிகுந்த கோபத்தோடு ஏமக்காளை உதைக்கச் சொல்லிச்சொன்ன மாத்திரத்தில் யமகிங்கிரர்கள்போல அவரிடத்திலிருக்கும் சேவகரில் – ரங்கன் – ஏமக்காளைக் கன்னத்திலடிக்க, கவனப்பன் – அடிவயிற்றில் காலாலுதைக்க, ஏமக்காள்–பேச்சற்று மூச்சித்துத் தரையில் விழுந்தபோது சேவகர் சொல்லுகிற விதங் காண்க.

— அடுத்தது பாட்டு (தாளராகத்துடன்)

இதுபோன்ற நாடகங்கள் சென்ற நூற்றாண்டில் வெளி வந்துள்ளன. அண்மையில் மறைந்த பம்மல் சம்பந்த முதலியாரது நாடகங்களும் சென்ற நூற்றாண்டிலேயே நாட்டில் உலவத் தொடங்கிய நிலையையும் அறிகிறாம். அவர்தம் லீலாவதி சுலோசனா நாடகம் 1895இல் அச்சிடப் பெற்றதாகும். அதில் ஆசிரியர் தம் முன்னுரையில்,

தென்னாட்டிற்குரிய தமிழ் இலக்கியமானது இயல் இசை நாடகமென நமது முன்னேரால் மூவகையாகப் பிரிக்கப்பட்டிருந்த போதிலும் தற்காலத்தில் யாது காரணம் பற்றியோ நாடகத் தமிழ் அதிக வழக்கத்தில் இல்லாமை கண்டு சிறியேன் எனது சிற்றறிவைக் கொண்டு ‘லீலாவதி-சுலோசனா அல்லது இரண்டு சகோதரிகள்’ என்னும் ஓர் நவீன நாடகத்தை இயற்றினேன். தற்காலத்திய நிலைமைக்குத் தக்கதாயிருக்கும் வண்ணம் ஆங்கிலேய பாஷையிலுள்ள நாடகங்களின் தன்மை வாய்ந்ததாயும் நம்மவர் எல்லோரும் வாசித்தறியும்படி எளிய நடையாக வசனத்திலும் இந்நாடகம் எழுதப்பட்டிருக்கிறது.

என்று கூறுகின்றார். இவர் நடை மிக எளிதாக எல்லோரும் அறிந்து கொள்ளக்கூடியது. இதுபற்றி ஒன்றும் காட்டத் தேவையில்லை.

தமிழில் பாடநூல் எழுதப் பரிசு

பம்மல் சம்பந்த முதலியாரின் தந்தையாராகிய விஜயரங்க முதலியாரும் தமிழ் உரை வளர்ச்சிக்கு உதவினார் என்பதையும் இங்கே குறிப்பிடல் பொருத்தமானதாகும். ‘அமெரிக்கா கண்டத்தைக் கண்டுபிடித்த வரலாறு’ பற்றிய நூல் ஒன்று விஜயரங்க முதலியாரால் 1852இல் எழுதி வெளியிடப் பெற்றுள்ளது. அவர்தம் முன்னுரையில் தம் ஆசிரியர் திருத்தணிகை விசாகப் பெருமாளையர் எனக் குறிப்பிடுகிறார். இந்நூலும் அவரால் பரிசோதிக்கப்பட்டது எனக் குறிக்கின்றார். அவர் தமது முகவுரையில்,

இந்நூல் இராபர்ட்சன் என்பவரால் இங்கிலீஷில் எழுதப்பட்ட அமெரிக்கக் கண்டத்தின் சரிதத்திலிருந்து எடுத்தெழுதப்பட்டது. இஃது சென்னப் பட்டணம் யூனிவர்சிடி என்னும் சாஸ்திரக் கல்விச் சாலையில் இங்கிலீஷ் முதலிய பாஷையைக் கற்கும் மாணாக்கரில், இங்கிலீஷ் பாஷையிலிருந்து யாதொருபயோகமான நூலைத் தமிழ் முதலிய பாஷைகளில் நன்றாக எழுதுவோருக்கும் அளிக்கப்படும்படி கா. பச்சையப்ப முதலியார் அவர்கள் தருமத்தை விசாரணை செய்யுஞ் சபையாரால் மேற்படி சாஸ்திரக் கல்விச்சாலை அக்கிரா சனாதிபதி அத்தியக்ஷர் களிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் பொருள் தொகையில் விலைபெற்ற புஸ்தகங்களைப் பெறும்படி இந்த வருஷாரம்பத்தில் என்னால் எழுதப்பட்டது: (1852)

என்று விளக்கந்தருக்கின்றார். எனவே அக்காலத்திலேயே பாடநூல்களைத் தமிழாக்குவோருக்குப் பரிசளிக்கப் பச்சையப்பர் அறநிலையத்தார் இப்பல்கலைக் கழகத்தாரிடம் ஒரு தொகையைத் தந்துள்ளார்கள் எனக் காண்கிறோம். அது பற்றி ஆய்ந்து அறிதல் தேவையான ஒன்று.

சம்பந்த முதலியார் நாடகங்களுடன் வைத்து எண்ணத் தக்க வகையில் பல நாடகங்கள் சென்ற நூற்றாண்டின் இறுதியில் தோன்றின. அவற்றுள் பிரதாப சந்திர விலாசம் என்பது சமூக சம்பந்தமான ஒன்று. ப. வ. இராமசாமி ராஜூ, பி. ஏ., பாரிஸ்டர்-அட்-லா என்பவர் எழுதிய நாடகம் இது. இது எழுதப்பெற்ற காலம் திட்டமாக அறிய முடியாவிட்டாலும் அவர் மறைவு 17—8—1897 என அறிவதால் அதற்கு முன்பே இது எழுதப்பட்டது என்பது துணிபு. இத்தகைய நாடகங்களன்றி வள்ளியம்மை நாடகம், இடம்பாச்சாரி விலாசம், மதனசுந்தர பிரதாப சந்தான விலாசம் முதலிய சுமார் 35 நாடகங்கள் நாட்டில் வழக்கத்தில் இருந்தன. இவை அனைத்தும் சென்ற நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு உதவின என்பது கண் கூடு.

இத்தகைய நாடகங்கள், நாவல், சிறுகதைகள் தவிர்த்துச் ‘சரித்திரங்கள்’ எனப்பட்டனவும் சில அச்சிலும் ஏட்டிலும் சென்ற நூற்றாண்டில் உலவி வந்துள்ளன. தேரூர்ந்த சோழன் சரித்திரம், சிவாஜி சரித்திரம், நாசிகேது சரித்திரம் (1880), மதுரைச் சங்கத்தார் சரித்திரம், நாலு மந்திரி சரித்திரம் (1839), டில்லி ராஜாக்கள் சரித்திரம் முதலிய வரலாறு கலந்த கதைகள் உரைநடையில் இடம்பெற்று நாட்டில் வாழ்ந்து வந்தன. அவை இன்றைய சரித்திர நாவல்கள் போன்றனபோலும். இவ்வாறு, பொதுமக்கள் எளிதில் உணர்ந்து அறிந்து கொள்ளும் வகையில் பல சிறுகதைகளும் நாவல்களும் நாடகங்களும் சென்ற நூற்றாண்டில் தோன்றி மக்கள் அறிவை வளர்த்ததோடு தமிழ் உரை நடை தழைக்கவும் சாதனமாக இருந்தன. பொதுமக்களின் கடிதப்போக்கு வரவு வளர்ந்த காரணத்தால் அத்துறையின் வழியும் உரைநடை வளர்ந்தது என்பதை நாளை காணலாம். இத்துறைகளில் கடந்த பல நூற்றண்டுகளைக்காட்டிலும் சென்ற நூற்றாண்டில் தமிழ் உரைநடை அதிக வளர்ச்சி அடைந்தது எனலாம்.

அரசாங்க வெளியீடுகள்

இனி, அரசாங்கத்தார் தமிழ் உரைநடை வளர்த்த வகையினைக் காண்போம். அரசாங்க விளம்பரங்கள், உத்தரவுகள், பத்திரங்கள், சட்டங்கள், கிராமக் கணக்குகள், வெளியீடுகள் முதலிய பல சென்ற நூற்றாண்டில்–தமிழில்–உரைநடையில் வெளிவந்துள்ளன. அவற்றுள் பல வடசொற்கள் மட்டுமன்றி அரபிய, உருது, பர்சியச் சொற்களும் இடம் பெற்றுள்ளன. முகலாய ஆட்சியை ஒட்டி அமைந்த காலமாதலால் அந்த வாடையினை அங்கே காணமுடிகின்றது. அத்தகைய சொற்களுள் சிலவற்றைப் பின் தந்துள்ளேன். அரசாங்க வெளியீடுகளை ஒன்றன்பின் ஒன்றாகக் காணலாம். அவை பொதுவாகவும் சிறப்பான ஒன்றைப் பற்றியனவுமாக வுள்ளன; விளம்பரம், ‘டெண்டர்’, நலத்துறை, சட்டம், மீன்பண்ணை, காவல்துறை வணிகத்துறை, சாலைத்துறை, ஊராட்சி, நாட்டாட்சி . நகராட்சி முதலிய பல துறைகளைப் பற்றியனவாக உள்ளன. பொதுவாகச் சென்ற நூற்றாண்டில் எல்லாத்துறைகளிலும் அரசாங்கத்தார் ஆங்கிலத்தில் மட்டுமன்றித் தமிழிலேயும் எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர் என்பது தெளிவு.

(1) சட்டநூல் முன்னுரை: 1882 ஆம் ௵த்திய 8வது ஆக்டினால் திருத்துபாடான இந்திய பீனல் கோடானது 1883ம் ௵ ஐனவரி ௴ 12௳ முதல் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது.

அப்போதைக்கப்போது ௸ ஆக்டை திருத்துவதற்குண்டான 1870ம் ௵த்தில் 27வது ஆக்ட் 1872ம் ௵த்தில் 19வது ஆக்ட் 1882ம் ௵த்திய 8வது ஆக்ட்டுகளும் இந்தப் பதிப்பில்......

(2) 1835 ௵த்து பதினேழாவது ஆக்டு என்னும் சட்டம் (தமிழில்)

1835 ௵ ஆகஷ்டு ௴ 17ம் ௳ ஆலோசனை சபையால்-ஈந்தியாவின் ஆனரபில் கவர்னர் ஜெனரலவர்களாலே விதிக்கப்பட்டது.

௲௮௱௨௰௫ம்௵ செப்டம்பர் ௴ ௧௨ முதற் கொண்டு கம்பெனியாருடைய தேசங்களுக்குள்ளேயிருக்கப்பட்ட தங்கச்சாலைகளில் அடியிற் சொல்லியிருக்கிற வெள்ளி நாணயங்கள் அச்சடிக்கப்படுமென்று விதிக்கப்பட்டது—ருபாயானது – கம்பெனியாருடை ரூபாயென்று சொல்லப்படும் அரை ரூபாய்–கால் ரூபாய்–இரட்டை ரூபாய்–சொன்ன ரூபாய் ௱௮௰ கிரெயின்ஸ் திராய் நிறையுள்ளதுமாய் அடியிற் சொல்லியிருக்கிறபடி மாற்றுள்ளதுமாயிருக்க வேண்டியது.

௱௯௰௫ கிரெயின்ஸ்கள் சொக்கவெள்ளி

௰௫ கிரெயின்ஸ்கள் செம்பு முதலான கலப்படம்


மற்ற நாணயங்கள் அததற்குத் தகுந்த நிறையும் அத்தினுடைய மாற்றையுங் கொண்டிருக்க வேண்டியது.

J. C. Mooris

(3) கமிசேரியாட்டு விளம்பரம் மதிறாசு ௲௮௱௫௨ ௵ அக்டோபர் ௴ ௨௰௮ ௳.

இதுனாலே பிரசித்தப் படுத்துகிற தென்னமென்றால் செனவரி மாதம் முதல் தேதி முதல் வருகிற வருஷத்துக்கு தேவையான முதல் தறம் நாட்டரிசியும்-இறண்டாந்தரம் தெற்கித்தரிசியும்-வெள்ளைச் சர்க்கரையும்-உப்பும்-சற்பறா பண்ணுவதற்காக குத்தகை ௲௮௱௫௰௨ ௵ நவம்பர் மாதம் ௰௫௨ திங்கள் கிழமை பகல் பன்னிரண்டு மணிக்கு யிந்த ஆபீசில் பிறசித்தமான யேலம் போட்டு யேலத்தில் இத்தகைய குறைந்த விலையாக கேழ்க்குறவருக்கு கமிசேரி செனறல் துரையவர்கள் ஒத்துக்கொண்டதின் பேரில் குத்தகை கொடுக்கப்படும்.

பிரதிதினம் தேவையானது யிவ்வள வென்று குத்தகைகாரருக்கு தெரிவெத்ததின் பேரில்-பிரசை டென்சியிலும் - பறங்கிமலையிலும் - பல்லாவரத்திலும்-பூந்தமல்லியிலுமிருக்கிற யீறோபியான் றா ணுக்களுக்கும்-ஆசுபத்திறியன் முதலிய யிடங்களுக்கும் குத்தகைகாரன் மேல் கண்ட தினுசுகள் சற்பறா பண்ணவேண்டியது.

மாதாந்தரம்-தேவையான சறாசறி மொத்தம் யிதினடியில் வவறித்திக்குறபடி.முதல் தறம் னாட்டசி மரக்கால் இரண்டாம் தரம் தெற்கத்தரிசி மரக்கால் வெள்ளை சர்கரை றாத்தல் உப்பு றாத்தல்
போற்ட்டு செயிண்டு சாற்ச்சில் ... ௨௱௮௰௫ 0 ௨௲௪௱ ௫௪௰௨-க்கு
பறங்கிமலையில் ... ௨௱௭ 0 ௨௲௮௰௯ ௱௩-க்கு
பூந்தமல்லியில் ... ௫௱௫௰௭ 0 ௫௱௯௰ ௭௰௮-க்கு
பல்லாவரத்தில் ... ௩௱௧ 0 ௱௮௰௧ ௰௫-க்கு
கிண்டி செயிலில் ... 0 ௩௱௩௰ 0 0
அர் மெஜ்ஷ்டிசு செயிலில் ... 0௱ 0 0 0
சஷ்சைசு (Justice) செயிலில் ... 0 0 0
அவுசாப் கறக்‌ஷனில் ... ௨௱௭௫ 0 0 0
அம்மைகுத்துகிற ஆஸ்பத்திறியில் ... 0 0 0
அவுசாப் பாண்டஸ்டிரியில் ... ௯௰ 0 0 0
கண்ணோவு ஆஸ்பத்திரியில் ... ௭௰ 0 0 0
சனல் ஆஸ்பத்திரியில் ... ௰௨ 0 0 0
லிபற் (Leper) ஆஸ்பத்திறியில் ... ௮௰௨ 0 0 0
திருவிளக்கண்ணி ஆசுபத்திரியில் ... 0 ௫௰௭ 0 0
பயித்திக்காற ஆசுபத்திறியில் ௪௰௭ 0 0 0 0
கமிசேரி சென்றல் ஆபீசு ஆசுபட்டால் யிஷ்டொரியில் ... 0 0 ௲௨௱௫௰ 0
கப்பலின் பேரில் போகிற றாணாக்களுக்காகறோவிலிருக்கும் கனம் பொருந்திய கும்பினியாருடைய கிறெனேறியில்
அந்தந்த சாமான் தேவையான மொத்தம்

தன்னுடைய குத்தகையை செம்மையாக நிறைவேத்துவதற்காக குத்தகைதாரன் ஆயிறம் றூபாயி கும்பனி பத்திறமாயாவது பாங்கு ஷேரறா யாவது அல்லது மெத்த யோக்கியமான சாமீனா வது இந்த ஆபீசில் டேவணி வைக்கவேண்டியது.

குத்தகையை யேலத்தில் கேழ்க்குறதுக்கு முன்னுதாக யிறனூறு றூபாயி டேவிணி வைக்க வேண்டியது. யேலத்தில் குத்தகையை யெடுக்குறவர் குத்தகையை யெடுத்துக்கொள்ள தவிர்ந்து போனால் தன்னுடைய யிறனூறு றூபாயி டேவிணியையும் போக்கடித்துக் கொள்ளுவர்-மைத்தவர்களுடைய டேவிணிகள் யேலம் முகிந்த பின்பு திருப்பி விடப்படும்.

கமிசேரி செனரல்துரையுடைய உத்தரவுபடிக்கு
C. J. Elphinstone
A. C. General

(4)கல்வி பற்றி

இதினாலே சகலமான ஜனங்களுக்கும் தெரியப்படுத்துகிற தென்னவென்றால் வருகிற ஜனவரி மாதம் முதல் தேதி முதல் ஹைஸ்கூலில் படிக்கும் வித்தியார்த்திகளின் சம்பளம் மாதம் ஒன்றுக்கு இரண்டு ரூபாயாகக் குறைக்கப்படும்- மேலும் ஒரே குடும்பத்தில் ஒருவனுக்கு அதிகமாகப் படிக்கும் பக்ஷத்தில் அப்படிக்கு அதிகமாக வரும் வித்தியார்த்திகளிடத்தில் ௴ ௧-க்கு ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொள்ளப்படும்.

வருகிற வருஷம் பிறந்த மேல் கூடியது வரையில் ஆரம்ப சிக்ஷையின் பொருட்டு ஹையிஸ்கூலைச் சார்ந்ததாய் பிரைமேரீஸ்கூல் என்னும் ஒரு கல்விச்சாலை யேற்படுத்தப்படும். அது சிலகால பரியந்தம் ஹைஸ்கூ லிப்போதிருக்கும் இடத்திலேயே வைக்கப்படும்.

மேற்கண்ட பிரைமேரி ஸ்கூல் என்னும் கல்விச்சாலையில் கற்குஞ் சிறுவனிடத்தில் மாதம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் சம்பளம் வாங்கிக் கொள்ளப்படும் . பாலர்கள் படிக்கும் புத்தகங்களை வருகிற ஜனவரி மாதம் முதல் அவாளே சொந்தமாய் வாங்கிக்கொள்ள வேண்டியது.

யூனிவர்ஸிடி போர்டார் விசாரணையின் கீழிருக்கிற கல்விச் சாலைகளின் ஆறு மாசத்திற்கொருதரங் கொடுக்கும் விடுமுறை திநங்களுக்கடுத்த ஒரு ஒரு பக்ஷத்திற்குள்ளாக மாத்திரமே வித்தியார்த்திகளை அங்கீகரிக்கும்படியாய் அந்த சபையாருக்கு எண்ணமுண்டாயிருக்கிறது. அதைக் குறித்தினிமேல் தெரியபடுத்துப்வார்கள்-ஆனாலிப்போது தெரிவிக்கிற தென்னவெனில் வருகிற ஆறு மாதத்தில் ஹையிஸ்கூலுக்காவது பிரைமேரி ஸ்கூலுக்காவது புத்திரர்களேயாவது பந்துக்களையாவது அனுப்ப விரும்புகிறவர்களெல்லாம் ஹைஸ்கூல் எட்மேஸ்டருக்கு வருகிற மீ ௰௮௨ யிலாவது அதற்கு முன்னாவது தெரியப்படுத்த வேண்டியது.

சென்னப் பட்டன யூனிவர்சிட்டி
கவர்னர்கள் உத்திரவுபடிக்கு
சென்னப்பட்டணம் யூனிவர்சிட்டி
௲௮௫௨ ௵ நவம்பர் ௴ ௰௫௨
எ. ஜே. ஆர்பத்துநட்டு
செக்கீரிடேரி

(5) விளம்பரப் பத்திரிகை

செனங்களில் யேழைகளாயிருக்கப்பட்டவர்கள் யேதாவது வியாதிகளால் துன்பப்படும்போது அவர்களை செனல் ஆசுபத்திரியில் அங்கீகரிக்கிற விஷயத்தில் நானாவித அதிகார ஸ்தானங்களிலே யிருந்து யெந்த வகையாயாவது ஒரு சீட்டுப் பெற்றுக் கொண்டே போக வேணுமென்று பொதுப்பட ஒரு பெசகான யெண்ணங் கொண் டிருப்பதாக காணப்படுகிற படியினாலே யிதினால்

அறிவிக்கிறதென்னவென்றால் இரோப்பு தேசத்தாராகிலும் பறங்கிக்காராகிலும் அல்லது இந்த தேசத்தாராகிலும் யாராவது ஆதிரவத்து வயித்தியங் கோரப்பட்டவர்கள் ஆசுபத்திரியை சார்ந்த யெந்த டாக்டர் துரையவர்களிடத்துக்காவது தாங்களே போய் ஆஜராகுவதே போதும் மைத்த யாதொரு சீட்டு முதலானதும் தேவையில்லை அப்படி (வியாதியிலிருந்து யேழை செனங்கள் யெந்த வியாதிக்காவது வயித்தியங் கோறினாலும் றண வயித்தியங் கோறினாலும் யெந்த நேரத்திலும் அவாளவாள் சொல்லிக் கொண்ட உடனே ஒப்புக்கொண்டு உதவி செய்யப்படும்.

உத்தரவின் படி
மிடைகால் போற்டு ஆபீஸ்[7]
(ஒப்பம்) அலக்ஜாண்டர் லாசுமெர்
மிடிகல் போற்டு செகிரிடேரி

A true translation:—N. Somasoondram, Translator

(6)‘டெண்டர் விளம்பரம்’
8—1—1852
 

இதனால் அறிவிக்கிற தென்னவென்றால், பிளாக் டவுனில் மீதியாய் நிற்கும் தண்ணீர் பழய நாற்றமான கால்வாய் வழியாய்ப் போகாமல் சென்னப் பட்டணங் கோட்டைக்கு மேல்பாரிசத்திலுள்ள பல்சட்டி (Esplanade) வழியாய் கூவம் ஆற்றுக்குப் போகும்படி ௸ செங்பூவிலிருந்து தற்காஸ்துகள் (Tenders)௲௮௱௫௨௵ ஜனவரி ௴ ௨௰௩ ௳ வெள்ளிக்கிழமை வரைக்கும் இந்த ஆபீசில் வாங்கப்படும்.

எ. எச். வோப்

ஆக்டிங் செக்ரெடேரி, மிலிடேரி போர்டாபீசு

W. H. Bayley,
Tamil Translation of Govt. Gazette,
6–1–1852

{7) பிரசித்தமான ஏலம்

இதனால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்னவெனில் நாளது நவம்பர் ௴ ௨௯௨ சனிக்கிழமை சாயந்திரம் ௪ மணிக்கு கோட்டை கடைகளுக் கெதிரில் போற்டு செயின்ட் ஜார்ஜி காரீசன் சபைகளின் ஒவ்வொரு கடையை ௲௮௱௬௩ ௵ டிசம்பர் ௴ முதற்கொண்டு ௲௮௱௬௩ ௵ பிப்ரவரி ௴ ௨௮௨ வரையிலாகிற மூன்று மாதத்துக்கு அனுபவிக்கும்படியான சுவதத்திரத்தை பிரசித்தியாக ஏலம் போடப்படும்.

G. Baldock மேஜர்,
17. Nov. 1862
போற்டு எஜிட்டர்.
 

(8) சென்னப்பட்டணம் ௲௮௱௩௰௫ம் ௵ சூலை ௴ ௨௰௧௨

செனரல் போஸ்டாபீசு

௲௮௱௩௰௪ம் ௵ அக்டோபர் ௴ ௰ ௳ பங்சிச் சிப்பங்களை குறித்துஇந்த ஆபீசிலிருந்து பிரசித்தப் படுத்திய அடியிற்கண்டபிரசித்தப் பத்திரிகையையும்-போஸ்டாபீசு சட்டங்களிலேயிருந்து எடுத் தெழுதினதையும்-எல்லோரும் அறியும்படி மறுபடி பிரசித்தம் பண்ணுகிறதிலே லா பேப்பர்கள் முலதானதுகளை அனுப்புகிறவர்களுக்குத் தக்கபடி பண்ணியிருக்கிற ஏற்பாட்டை மீறி அபராதத்தைச் சுலுவாக்கிக் கொள்ளுகிற நிமித்தம் நடந்து வருகின்ற விதிகள் தங்களுக்குத் தெரியாதென்று சொல்லுகிற எவ்வித போக்கையும்–அங்கீகரிக்கிறதில்லை யென்கிறது கவர்மெண்டாருடைய தீர்மானமாயிருக்கிற தென்று இதனாலே தெரிவித்திருக்கிறது.

நதானிலே வெப்
போஸ்டு மேஸ்டர் செனரல்.

(9) முத்துக்குளியல் பற்றி

திருநெல்வேலிச் சீமையின் கலைக்கிட்டuqகிய மேஸ்தர் ருபர்ட்டு யீடன் துரையவர்கள்

இதுனாலே சகலமான பேர்களுக்குத் தெரியும்படி பிரசித்தம் பண்ணுகிறதென்னவென்றால் திருநெல்வேலி சீமையைச் சேர்ந்த கடல் துரைமுகத்தில் வருகிற அக்டோபர் ௴ ௰௫௨ முதல் இங்கு குளிக்கிறதற்காக ஒரு வருஷம் ரெண்டு வருஷம் அல்லது மூன்று வருஷம் குத்தகைக்கு நாளது ௲௮௱௩௫ ௵ அக்டோபர் ௴ ௫௳ வரைக்கு நம்முடைய அசூர் கச்சேரியில் தற்காஸ்து குடுத்தால் வாங்கித் கொள்ளப்படும்.

(17–8–1885).
R. Eden. Collector
 


இவ்வாறாக அரசாங்க ஆணை முதலியனவன்றி, தனிட்பட்டவர்கள் நிலம், வீடு முதலியன வாங்கவும் விற்கவும் பதிவு செய்ய ஆவணக்களரியில் எழுதிய பத்திரங்களுள் பல தமிழ் உரைநடையிலேயே இருக்கின்றன.

(10) அளம் கணக்கு:—(பல எழுத்துக்களுக்குப் புள்ளியில்லை)

சென்னப்பட்டணம் கலெக்டராகிய ம-௱-௱ ஏ ரோபர்ட்சன் துரையவர்கள் சமுகத்துக்கு எண்ணூர் அளம் கணக்கு முத்தப்பிள்ளை எழுதிக் கொடுத்த அத்தாட்சி.

என்னவென்றால் எண்ணூர் அளங்குடியாகிய தோணி சின்னவெங்கட்டராமன், இருங்குன்றம் கிருஷ்ணப்ப நா. கையில் மதத்துவாங்கிக் கொண்டதாய், தன் பேரிலிருக்கிற அளம்-கதெ-உம் அவன் பேராலும் சர்க்கார் கணக்கில் தாக்கல் செய்து கொடுக்க வேணுமென்று ஆசூரில் அர்ஜி கொடுக்க அந்த அரிஜிப் படிக்குச் செய்து கொடுக்கக் கூடா தென்று, முன்னே அக்ஷேபித்திருந்தவர்களாகிய, மேற்படி சின்ன வெங்கட்ட

ராமனுடைய தகப்பன் தோணிமல்லா ரெட்டியும் மேற்படி வெங்கட்டராமன் பெண் சாதியாகிய காமாக்ஷியம்மாளும், இப்போது சம்மதிப்பட்டு, மேற்படி கிருஷ்ணப்ப நா. பேரையும் சர்க்கார் கணக்கில் தாக்கல் செய்துகொள்ளலாமென்று மறுபடியும் உஜூரில் அர்ஜ் கொடுத்துக் கேட்டுக் கொள்ளுகிறபடியாலும் ௸ அளத்துக்காக வேறே ஆஷேபணை ஒன்றுமில்லாத படியாலும் ௸ கிருஷ்ணப்ப நா. பேரையும் சர்க்கார் கணக்கில் தாக்கல் செய்துகொள்ளுகிற தினாலே யாதொரு வித்தியாசமு மில்லை. இந்தப்படி நான் சம்மதித்து அத்தாட்சி

அளத்துக் கணக்கு
எண்ணூர்
௲௮௩௭ ௵ டிசம்பர் ௴ ௰௭ ௳
(17—12—1837)
முத்த பி.

இதற்குத் தந்த அரசாங்க உத்தரவினையும் உடன் காணல் நன்று:-

இஜதாசார் முத்துசாமி பிள்ளை அளத்து அதிகாரி கொட்டார் எண்ணூர்.

தரிவில்லா எண்ணூர் அளங்குடி தோணி சின்ன வெங்கட்டராமன் பேராலிருக்கிற-க தெ-உம், இருங்குன்றம் கிருஷ்ணப்ப நா. பேராலும், கூட்டாய் சர்க்கார் கணக்கில் தாக்கல் செய்வதற்கு, யாதொரு ஆக்ஷேபணையுமில்லை யென்று நீர் ௸ ௴ ௰௮௨ உம்முடைய அாஜ் ரிப்போர்டு செய்திருக்கிற படிக்கு ௸ சின்ன வெங்கட்டராமன் பேரால் சர்க்கார் கணக்கில் தாக்கலாயிருக்கிற-கதெ-அது இருங் குன்றம் கிருஷ்ணப்ப நா. பேரும் ௸ தேதியில் அர்ஜ் ரிஜிஷ்டர் புஸ்தகத்தில் தக்கல் செய்திருக்கிறோம் ஆகையார் கொட்டார் மஜ்கூர் அளம் ஆசாமி

வாரி புஸ்தகத்திலும், கணக்குப்பிள்ளை கணக்கிலும், அந்தப்படிக்கு தாக்கல் செய்வித்து, அவர்களைக் கொண்டு வாரக்கம் சாகுபடி முதலான காரியமும் ஜாக்கிரதையாய் நடப்பித்துக் கொண்டு வரவும்.

௲௮௱௩௭ ௵ டிசம்பர் ௴ ௰௯௳
முகாம்,
சென்னப்பட்டனம்
முகாபிலா களாத்தி பி.
ஹெட் ஜவாப் நவீஸ்
ஏ. ரோபர்ட் சன்.
கலெக்டர்

சில வழக்குச் சொற்கள்

அக்காலத்தில்-சென்ற நூற்றண்டில்-வழங்கிய சில சொற்களுக்குரிய பொருள்களை அறிதலும் நலமாகும். அவற்றுள் ஒரு சிலவற்றைக் கீழே தருகிறேன். இக்காலத்திலும் பெரும்பாலும் வழக்கத்தில் உள்ள சொற்களை ஈண்டு நான் காட்டவில்லை. இவை பிறமொழிகளிலிருந்து தமிழில்-சிறப்பாக அரசாங்கத்துறையில்-வழங்கிய சொற்களாகும். ‘அறமனை வார்த்தைகள்’ எனவே அவை குறிக்கப் பெற்றுள்ளன.

A அபர்-new
A அக்கல்-understanding
A அக்கீது-statement of a CaSC
P அப்தா-a week
P அப் ஜூத்-excess, in CICASC
A அனாமத்து-a deposit
A அர்ஜ்-petition
A அசூர்-presence
A அலாயிதா-separate
A அவால்-custody
A அவவல்-first, principal
S ஆனாஸ்-grain produce
P ஆமத்-income
S ஆமிஷம்-estimate
T ஆயம்-customs
A இசுமுகள்-names
M இசாப்-accounts
A இத்திலா information
A இன்சாப்-justice
A இஸ்தியார்-notice
A இஸ்தியார்-நாமா-a pro clamation
A உக்கும் அல்லது உக்கூம்—permission, an order
M ஏகூன்-whole
P ஐந்தாசால்-ensuing year
A ஜவேஜ்-substitute
A கசுபா-a principal village
A கபர்-news
A கபூல்-concent, approval
A கபூலேத்து-a written agreement
p கமாமிக-affairs, business
A கவுள்-agreement
A கஜான்ஜி-a treasurer
p கஜ்ஜியா-quarrel
A காமுகா-positively
A காமுகாரி-work
H காம்வார்-village settlement
A காய்தா-rule, custom
p காவிந்து-master
A கிபாய்த்து-profit
A குல்-crime
A குனா-crime
H கோத்து-a field
H சம்ஜாயஷ்-Satisfaction
p சர்பரா-provision, supply
p சன்வாது-yearly
A சாதர்-issue
A சாயர்-custom, taX
G சால்பயிக்கு–in a year
A சுபா-a district or province
P சுஸ்தி-laziness
H டவுல்-estimate
A தபா-time
A தமசூக்-a note on land
A தப்சீல்-detail
P தரியாப்த்-investigation, enquiry
P தரோபஸ்து-all
P தஸ்கக்-signature
P தஸ்தக்-summons or orders
A தாகத்து-ability power
A தாபோ-a dependent
A தாலாப்-a tank
H துக்கடி-a district
G தேரீஜ்—an account showing particulars and the result
H தைலி–purse
P.S. நவாடா—a boat
A பயாம்வார்-a detail of items
H. M. பர்காவாணி– examination of money
P பர்வானா—an order
H பஸ்தி-a village
G பைகஸ்த்து-an overseer
A மகத்து-aid
A மசிலி, மசீல்-a day"s journey
A மவுஜெ—a village
A மஷாத்து-survey of land
A மால்தார்-a proprietor
A முகாபிலா-examination, confession
A முபாதலா-money in advance
P ஜவாப்நவீஸ்—a secretary, a clerk
A ஷாமீல்-included
A முசகதி—accountant
P ரோஜ்கார்-service
P ஜிந்தகி-property


A-Arabic
G-Common usage (கிராமியம்)
H-Hindustani
M-Mahratta
P-Persian S-Sanskrit
ழல்-முதலியார்
நா-நாயகர்
பி-பிள்ளை
௸-மேற்படி
௵-ஆண்டு
௴-திங்கள்
௳-நாள் (தேதி)

சமுதாய நூல்கள்

இவைமட்டுமன்றி மக்கள் சமுதாய வாழ்வு பற்றிய பல நூல்கள் உரைநடையில் வந்துள்ளன. 1898இல் ‘இந்தியன் கிரிமினல் லாச் சுருக்கம்’ என்ற நூல் தமிழில் வெளியாயிற்று. இந்நூல் கும்பகோணம் என். வைத்தியநாத ஐயரால், போலீசு ஆபீசர்கள், கிராம முனிசிபுகள், பிரை வேட் வக்கீல்கள் முதலிய கிரிமினல் வியவகார ஞானமடைய விரும்புவோர் யாவருக்கும் முக்கிய உபயோகப்படும்படி இயற்றப்பட்டது’ இவ்வாறு 1897இல் எஸ். குமாரசாமி முதலியார் எனபவரால் 'ஜமீந்தாரி என்று வழங்குகின்ற ஸ்திதியைச் சார்ந்த சங்கிரக கிரந்தம்’ என்ற நூல் ஜமீந்தார் முறை பற்றி எழுதப் பெற்றுப் பதிவு செய்யப் பெற்றது. இவை மட்டுமின்றி, 'விதவா விவாகம்’ போன்ற சீர்திருத்தங்கள் பற்றிய நூல்களும் எழுந்தன. அந்நூல்களுக்கு அடிப்படை அக்காலத்து அத்தகைய திருமணங்கள் நடைபெற்றமையே என்பது அந்நூல்களைப் பயில்வார் நன்கு உணர்வார்கள். நாகர்கோயிலைச் சேர்ந்த சேஷையங்கார் தம் மகனுக்கு இத்தகைய மணம் செய்தார் என்றும் அதை ஆதரித்து 1874இல் 'விதவோத்வாக விவேகம்’ என்ற நூல் எழுதப்பட்டதென்றும் அறிகிறோம். அந்நூலை மறுத்து அடுத்த ஆண்டே (1875இல்) ரங்காச் ரங்காச்சாரி என்பார் ‘விதவோத்வாக கண்டனம்’ என்ற நூலை எழுதி அச்செயலைக் கண்டித்திருக்கிறர்.

கணவனை இழந்த கைம்பெண்ணைச் சுற்றி அழுவதைப் பற்றிய குறிப்பு ஒன்று அமரம்பேடு முத்துசாமி முதலியார் எழுதிய சமூக இயல் பற்றிய ‘அபிமானம் என்பது என்ன?’ என்ற 1886இல் வெளியான நூலில் உள்ளது. இதுபோன்றே வாழ்வியலைப் பற்றிய பல குறிப்புகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

அழுகை:- பெண்கள் மயிரிழவு, மாரிழவு, காலடவு, கட்டியழல் என்னும் ஆசாரங்களை நடத்துகையில், கட்டியழும் போது வாசல் பெரிதாயிருக்குமாயின், திட்டுதிட்டாகப் பத்துப் பதினைந்து பேர் வட்டமாக நின்று, கைகோத்து அசைந்தாடி ஒருவித ராகத்தோடு பாடிக் கொண்டு, கொஞ்ச காலங் கழிந்த பிறகு, வேறு நடைச் சந்தத்தோடு பாடிக்கொண்டு, காலடவு போட்டு மார்பிலடித்துக் கொண்டு சுற்றி வருகையில் புதிதாய்க் கற்றுக் கொள்ளுகிறவளாவது விதரணை இல்லாதவளாகவாவது இருந்து, அடவு சரியாய்ப் போடாதவளைக் கையைப்பிடித்திழுத்து வெளியில் விட்டு விடுகிறர்கள். இழவுக்கு அழப்போகையில் தலைமயிரை சிக்கலில்லாமல் உடைத்துக் கோதிக்கொண்டு போய், எதிரெதிர் முகமாக நின்று, எதுகை மோனை தவறாமல் அதற்கிசைந்த வேறு ராகத்துடனே பாட்டுக்கள் பாடிக்கொண்டு தலைமயிரை இரண்டு கைகளாலும் விரல்களைக் கொண்டு சீவுகிறார்கள். கணவனைப் பறிகொடுத்துத் தவிக்கின்றவளைக் கீழே தள்ளி மற்றவர்கள் அவளைச் சூழ்ந்து ‘லபலப'வென்று வாயிலடித்துக் கொள்ளுகிறர்கள். மார்மேலிருக்கும் துணியை எடுத்து இடுப்பில் வரைந்து கட்டிக் கொண்டும் மார்பிலடித்துக் கொள்ளுகிறார்கள்.

இவ்வாறே பெண்கள் மலடாக உள்ளனரா, ஆண்கள் மலடாக உள்ளனரா என்பதை அறியச் ‘சிற்றின்பச் சிரோன்மணி’ என்ற வசன நூலில் வழிவகுத்துள்ளனர். இந்நூல் ‘வ. உ. சி.’ அவர்களால் அவர்தம் தொடக்க காலத்தில் எழுதப்பட்டதாம். இந்த முறை இன்றுள்ள பல டாக்டர்கள் அறியாத ஒன்றாகும்.

சிற்றின்பச் சிரோன்மணி நூல்:-ஆண் பெண்ணிருவரில் மலடர் இன்னார் என அறியும் தந்திரம் மொச்சை விரையை இரண்டு பாத்திரங்களிற் போட்டு, புருஷனுடைய சிறுநீரை ஒரு பாத்திரத்திலும் ஸ்திரீயினுடைய சிறுநீரை ஒரு பத்திரத்திலும் தனித்தனி விட்டு வந்து 5 தினத்திற்குப் பிறகு யாருடைய நீர்விட்ட கொட்டை முளைக்கவில்லையோ அவர்களை மலடென்று கண்டு தகுந்த சிகிச்சை செய்ய வேண்டியது. இவ்வாறே சுரைக்கொடிப் பயிரிலும் திருஷ்டாந்தங் காணலாம். ஆனால் ஒரு நீர் விட்டு ஒரு மாதம் கழிந்த பின்னர்தான் மறு நீர் விட்டுப் பார்க்க வேண்டும். வெவ்வேறு கொடிகளானால் ஒரே காலத்தில் பக்ஷீக்கலாம்.

இதுபோன்ற பலப்பல வகையான கருத்துக்கள் சென்ற நூற்றாண்டில் வெளியான தமிழ் உரைநடை நூல்களின் வழி நமக்கு விளங்குகின்றன.

இவை மட்டுமன்றிச் சாட்சிகள் பற்றிய ‘ருஜு சாஸ்திர சங்கிரகம்’, குடும்பத்தில் மக்கள் வாழ வேண்டிய வகை பற்றிய 'இல்லத் தோழன்’ (1845), போலீஸ் நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றிய 'போலீஸ் நிபுணன்’ (1894) முதலிய பல நூல்கள் ஒவ்வொரு துறைக்கும் எடுத்துக் காட்டாகவும் விளக்கங்களாகவும் அனைவரும் எளிதில் உணர்ந்து கொள்ளும் வகையிலும் எழுதப் பெற்றுள்ளன. ஆசிரியத் தொழிலியற்றுவோருக்கு உதவி செய்யும் வகையில் பல நூல்களும் எழுதப்பெற்றுள்ளன. இவை அனைத்தும் மக்கள் எளிதில் உணர்ந்து கொள்ளும் பொருட்டு உரைநடை நூல்களாகவே அமைந்துள்ளன. பழமொழி, வேடிக்கை, விடுகதைகள் முதலியவற்றைச் சார்ந்த உரைநடை நூல்களும் நாட்டில் சென்ற நூற்றாண்டில் உலவின.

காங்கிரஸ் சென்ற நூற்றாண்டிலேயே நாட்டில் தோன்றினமையின் அது பற்றிக் ‘காங்கிரஸ் வினா-விடை’யும் (1890), ஆசியாவின் ஐக்கியமும் (1888) வெளிவந்தன.

பாட நூல்கள்

இவையன்றி, கல்லூரியிலும் பள்ளியிலும் கற்கும் மாணவர்களுக்கென எண்ணற்ற நூல்கள் சென்ற நூற்றாண்டில் சிறப்பாகப்-பிற்பகுதியில்-வெளிவந்துள்னன. அவை பல நூற்றுக் கணக்கில் இருப்பதால் அவைபற்றி விளக்கம் தேவையில்லை. அவற்றை வெளியிட அரசாங்கத்தார் பல சட்டதிட்டங்களும், வறையறைகளும் செய்திருந்தார்கள் என நம்மால் அவற்றின் முன்னுரைகளிலிருந்து அறியமுடிகின்றது. ‘பால பாடம்’ முதலிய நூல்களை ஆறுமுக நாவலர் முதலிய நல்லறிஞர்கள் எழுதி-அரசாங்கப் பாடத் திட்டத்தில் இல்லையாயினும்-இளம்பிள்ளைகள் உள்ளத்தில் ஒழுக்கம், பண்பாடு, சமய உணர்வு முதலிய நல்லியல்புகள் அரும்புமாறு ஆக்கப்பணி செய்துள்ளனர். அவைபற்றியெல்லாம் விரிப்பிற் பெருகும். (ஒரு சில நாளை காணலாம்)

பொது மக்கள் படித்தறியத் தக்கதாக அறிவியல், தாவரம், நிலம், மருந்து, வரலாறு பற்றிய நூல்களும் பல சென்ற நூற்றாண்டில் வெளியாயின. அவற்றுள் பெரும்பாலான ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்புகளாகவே அமைகின்றன. அவற்றுள் சில கலப்பு மொழியில் அமைந்துள்ளன எனினும் ஒரு சில நல்ல தமிழில் எழுதப் பெற்றுள்ளதையும் காணமுடிகின்றது. சில பள்ளிகூட நூல்களில் பல விளக்கங்கள் முதலில் ஆங்கிலத்திலும், பிறகு தமிழிலும் எழுதப்பெற்றுள்ளன. சில நூல்களில் பொருளடக்கம் முதலியனவும் ஆங்கிலத்திலேயே . அமைந்துள்ளன. சென்னைப் பல்கலைக் கழகத்தார் சென்ற நூற்றாண்டின் இறுதியில் பள்ளி இறுதித் தேர்வுக்கெனப் (Metriculation Examination) பல நூலகள் வெளியிட்டுள்ளளனர். ஆண்டுதோறும் தமிழ்ப்பாட நூல் ஒன்று பாட்டும்உரையும் கலந்து வெளிவந்தது. உரைநடை எழுதியவர்கள் பெயர் காட்டப்பெறவில்லை. கிடைத்த குறிப்புக்களிலிருந்து, அவை அனைத்தும் ஆங்கிலத்திலிருந்து-பல்வேறு ஆங்கில நூற்பகுதிகளிலிருந்து பொறுக்கி எடுக்கப் பெற்றனவாகி-ஒருவராலேயே மொழிபெயர்க்கப் பெற்று நூலாக்கப் பெற்ற நிலையை அறிய முடிகின்றது. இவ்வாறே பல மொழிபெயர்ப்பு நூல்களும், கட்டுரைகளும் தமிழில் உரைநடை வளர்க்க உதவியுள்ளன.

பாடநூல்களைப் பற்றி எண்ணும்போது அத்துறையிலுள்ள பல்வேறு நூல்களும் நம் நினைவுக்கு வருகின்றன. தமிழ்ப்பாட நூல்கள் மட்டுமன்றி, எல்லாப் பாடங்களையுமே தமிழில் சொல்லிக் கொடுத்தார்கள் என்பது அக்காலத்தில் உண்டாயிருந்த பாடத் திட்டங்களின் அமைப்பிலிருந்து உணர்கிறோம். நில நூல், வரலாறு முதலிய பாடங்கள் பற்றிய நூல்கள் ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்புகளாகவே அமைந்தன. எனவே மொழி பெயர்ப்பு வகையில் கதைகளும் பாடநூல்களும் அமைந்து உரைநடையை வளர்த்தன.

வினவிடை வகையிலும் மக்களுக்கு எளிய வகையில் உயர்ந்த பொருள்களை விளக்கும் சில உரைநடை நூல்கள் சென்ற நூற்றாண்டில் உண்டாயின. அவற்றுள் ஒன்று ‘சாரீர வினவிடை’ என்பது 1866இல் வெளிவந்தது. இந் நூல் சென்னப்பட்டணத்து வைத்திய உத்தியோக வகுப்பைச் சேர்ந்த ம. ஜகந்நாத நாயுடு அவர்களால் இயற்றப்பட்டது. பல உயர்ந்த பொருள்களைப் பற்றி எளிய வகையில் வினாவிடுத்து விடை பெறும் வகையில் இந்நூலும் இதுபோன்ற பிற வி-ைவிடை நூல்களும் பயன் அளித்தமையைக் காண்கின்றாேம். இத்தகைய நூல்களுள் பெரும்பாலானவற்றைத் தமிழாசிரியர்கள் அல்லாத பிற துறைகளில் பணியாற்றியோரே எழுதியிருக்கின்றனர்.

ஆங்கிலேயர் கல்வி பெறுவதற்காக அமைக்கப்பெற்ற. கல்லூரி ஒன்றினைப்பற்றி முதலில் (The College of Fort St. George) கண்டோம். அதைத் தமிழில் ‘சென்னைக் கல்விச் சங்கம்’ என்ற பெயரிட்டு அழைத்தனர். அது 1812இல் தொடங்கப்பெற்று, 1854 வரை பணிபுரிந்தது. அதன் வழியாகவும் பல நல்ல தமிழ் உரைநடை நூல்கள் நாட்டு மக்களுக்காகவும்-சிறப்பாக ஆங்கில நாட்டிலிருந்து இங்கு வந்து பணி புரிந்தவர்களுக்காகவும் அச்சிடப் பெற்றன எனக் காண முடிகின்றது. பஞ்ச தந்திரக் கதை (1826), கதா மஞ்சரி (1826), மிருதி சந்திரிகை (1826), தமிழ் அரிச்சுவடி (1827) ஆகியவை அவற்றுள் சில. 'சென்னை செந்தமிழ் உரை சங்கம்’ எனவும் ஒரு சங்கம் இருந்து உரைநடையை வளர்த்தமை காண்கிறோம்.

தன் முயற்சி என்ற நூல் ‘ஸாமியுயல் ஸ்மைல்ஸ்’ என்பார் ஆங்கிலத்தில் எழுதியதன் மொழிபெயர்ப்பு நூலாகத் தமிழில் (1882) வந்துள்ளது. நாடு உண்மையில் நாடாக வேண்டுமானல், தனி மனிதனும் சமுதாயமும் மேற்கொள்ளவேண்டிய பல உண்மைகளும், விளக்கங்களும் இதில் காட்டப்பெறுகின்றன. அப்படியே சி. விருத்துப் பிள்ளை அவர்கள் எழுதிய ‘ஏராண்மை நூல்’ (1885) என்பது நாட்டின் அச்சாணியாகிய உழவு பற்றிக் கூறுவது. இதுவும் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலேயாகும். இந் நூலின் முன்னுரையில் கிரந்தச் சொற்களைத் தழுவாமல் ஆங்கிலச் சொற்களை அதிகமாக வழங்கியுள்ளமைக்கு, மொழிப்பெயர்ப்பாளர் காரணம் காட்டுகிறர். இப்படியே வானமண்டலத்தை விளக்கச் சோதி சாஸ்திரம் (1848) ஒன்று யாழ்ப்பாணத்தில் வெளியாயிற்று. வைத்திய முறை பற்றியும் (1863), வரலாறு, நில நூல் பற்றியும் (1858) உரை நடை நூல்கள் வெளிவந்தன. இவ்வாறு மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பற்றிய தமிழ் உரை நடை நூல்கள் வெளிவந்த காலம் சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டே எனலாம். இன்று அதிகமாக வளர்ந்துவிட்டதாக எண்ணும் நம் காலத்தைக் காட்டிலும் சென்ற நூற்றாண்டில் எல்லாத் துறைகளும் வளம் பெற்றிருந்தன எனக் கூறுவேன்.

இதழ்கள்

இனி, இன்று நாட்டின் முதுகெலும்பாகக் கருதும் பத்திரிகை வளர்ச்சியைப் பற்றிக் கண்டு அமையலாம் என எண்ணுகின்றேன். கடந்த நூற்றண்டில் நூற்றுக்கு மேற்பட்ட இதழ்கள் தோன்றியுள்ளன. அவற்றிற்குப் பல சமயங்களில் அரசாங்கம் அஞ்சல் குறைப்பு முதலிய வசதிகளைச் செய்து தந்துள்ளது. இருந்தும் அவற்றுள் பல சில ஆண்டுகளே இருந்து மறைந்துவிட்டமையைக் காண்கின்றாேம்.

சில இதழ்கள் மக்களுக்கு நல்ல தொண்டாற்றி வந்தன. பல்வேறு பகுதிகளைத் தன்னகத்துக் கொண்ட பத்திரிகைகள் சில. சமய சம்பந்தமான விளக்கங்களும் மறுப்புகளும் சில பத்திரிகைகள் வழங்கியுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து தோன்றிய உதய தாரகை பற்றிய குறிப்பினைக் கண்டு அமையலாம்.

உதயதாரகை 1841: Morning Star (gp36b L;#6b 2–6i 6m (5.6LLI) (Published in the 1st and 3rd Thursday of every month at one shilling a Quarter, payable in advance).

சஞ்சிகை ௩.௲௮௱௪௧ ௵ மாசி ௴ ௪ திகதி வியாழக்கிழமை.

கடைசிப் பக்கத்தில் உள்ள குறிப்பு:

Printed and Published at the American Mission Press, Jaffna, by Eastman Strong Minor— Edited by Henry Marly and Seth Payson.

பக்க எண்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் தொடர் எண்களாக உள்ளன.

இவ்விதழில் இந்து தேசசரித்திரம், பிரபஞ்ச நூல் (நில நூல்),காரிகை, விலங்கியல், பஞ்சதந்திரக் கதை, கல்விப் பொருள், புதினச் செய்திகள் முதலியன இடம் பெற்றுள்ளன. பஞ்சதந்திரக் கதையும், புதினச் செய்திகளும் ஆங்கிலத்திலும் எழுதப்பெற்றுள்ளன. சில தனித்த ஆங்கிலக் கட்டுரைகளும் உள்ளன.

பத்திரிகை பற்றி அதன் குறிப்பு: உதய தாரகை பத்திரத்தில் கற்கை, சரித்திரம், பொதுவான கல்வி, பயிர்ச்செய்கை, அரசாட்சி மார்க்கம் முதலானவை பற்றியும் பிரதான புதினச் செய்திகளைப் பற்றியும் அச்சடிக்கப்படும். அது தமிழ்ப் பாஷையிலும் இடைக்கிடையே தமிழும், இங்கிலிசும் கூடினதாயும் எட்டுப்புற முள்ளதாக நான்காய் மடித்த தாள் அளவில் ஒவ்வொரு மாதம் முதலாம் மூன்றாம் வியாழக்கிழமைகளில் பிரசித்தம் பண்ணப்படும்.

இதன் விலை பத்திரம் ஒன்றுக்கு 2 பென்சு அல்லது ௰௬ வெள்ளைச் சல்லி அல்லது மூன்று மாதத்திற்கும் மூன்றைக் கொடுத்திருந்தால் அப்பத்திரங்களின் விலை ஒரு சிலிங்கு.

இவ்வாறு அதன் விளக்கம் விரிந்து கொண்டே போகிறது.

இது இதழ் உரைநடைக்கு ஒரு சான்றாகும்.

தமிழ் நாட்டு இதழ்களும் இந்த அமைப்பிலேயே சென்றன. சில சமய வளர்ச்சிக்கும், சில பெண்கள், இளைஞர் பகுதிக்கும், சில தத்துவம் போன்றவைகளுக்கும் சிறப்பாகப் பயன்பட்டன. அவற்றுள் ஒரு சிலவற்றை உடன் தொகுத்துள்ளேன். இன்னும் பல நாட்டில் உலவின என்பது தேற்றம்.

சென்ற நூற்றாண்டில் வெளிவந்த இதழ்களில் சில:

1. உபாத்தியாயர் (1887) ஆசிரியருக்கு வேண்டிய பல செய்திகள்
2. கிராம வியவஹாரினி (1899) முதற் பகுதியில் இலக்கியச் செய்திகளும் வேடிக்கை விநோதங்களும் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் பகுதி கிராம நிர்வாகம் பற்றிக் கூறுகிறது.
3. ""
முத்திங்களுக்கொரு முறை (1900)
பொதுச் செய்திகளும் கிராம விவகாரம் பற்றிய தனிச் செய்திகளும்.
4. கிராமாதிகாரி (திங்கள்) (1900) ‘சென்னை இராஜதானியின் கிராம பரிபாலனம் சீர்படும் பொருட்டுப் பிரசுரிக்கப் படுவது’.
5. கோயமுத்துர் கலாநிதி (திங்கள்) (1890)
6. சித்தாந்த ரத்நாகரம் ஆதிசைவப் பிர பாவம்) (1880) ஆதிசைவ மரபினர் பற்றறிய செய்திகளை வகைப்படுத்தி உரைப்பது.
7. சித்தாந்த ரத்நாகரம் (சித்தாந்த பூஷணம்) (1881) சித்தாந்த பூஷணம் பற்றிப் பல நூல் மேற்கோள்காட்டி விளக்கும் ஆராய்ச்சி.
8. சித்தாந்த ரத்நாகரம் பற்பல மத (உத்தம வாததூப வாதூலம்) (1881) பற்பல மத உண்மைகளும் இணைந்தவை என ஆசிரியர் ஆய்ந்து அளவிட்டுரைக்கிறார்.
9. சித்தாந்த ரத்நாகரம் (சமரச ஞான தீபம்) (1881) ‘சைவ சமயமே சமயம்’ எனத் தொடங்கும் தாயுமானவர் பாடல் கருத்தை விளக்கி அமைந்த பிரசங்கக் கட்டுரை.
10. சித்தாந்த ரத்நாகரம் (ஆபாச ஞான நிரோதம்) (1883)
11. சித்தாந்த ரத்நாகரம் (ஆசார்யப் பிரபாவம்) (1884) ஆசாரியனின் பெருமை பற்றிப் பேசுவது.
12. சிவரத்ந மகுடம் (1891) ஞான சதுஷ்டய தர்ப்பணமும், ‘திருக்கண்ணப்பர் பிரபாவமும்’ அமைந்துள்ளன.
13. " (1892) 'பிரஹபாதுபதி, ‘பரமதபங்க வினாவிடை’ என்னும் இரண்டும் அடங்கியுள்ளன.
14. சுகாதார போதினி (1891)
15. திராவிட ரஞ்ஜனி (திங்கள்) (1887) “நீதி, பூர்வ சரித்திரம், விநோதக் கதைகள் முதலிய விஷயங்களைக் கொண்டிருக்கிற பத்திரிகை."
16. பகவத்கீதா பாஷ்யார்த்த போதினி (1895) வடமொழி மூலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.
17. ஞானபோதினி (1897-1905) இலக்கிய, அறிவியல், தத்துவ, சமய இதழ்.
18. பரதத்வ ப்ரகாசிகை (1881) வைணவ சித்தாந்தம் குறித்த கட்டுரைகள் உள
19. போலீசு தூதன் (திங்கள் இருமுறை) தமிழ் தெரிந்த போலீசார், கிராம முனிசீப்புகள், பிரைவேட்டு வக்கீல்கள் முதலிய கிரிமினல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட யாவருக்கும் மிகவும் உபயோகமுள்ளது.
20. மனோரஞ்சித விநோதம் (1886)
21. மாதர் மித்திரி (1889) பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பல செய்திகள் அமைந்துள்ளன.
22. ஞானப் பிரியன் (1900) இலக்கியம், அறிவியல்.
23. மாதாந்த சட்டப் பத்திரிகை பத்திரிகை. திங்கள் (1893) தமிழில் வெளிவந்த சட்டப் பத்திரிகை
24. ஜனவிநோதினி (1870) கதைகளும், பொதுக் கட்டுரைகளும் உள்ளன.
25. ஸ்ரஸ்வதி பீடாதிபதி வசந கிரந்தத்திற்கு மொழிபெயர்ப்பு (1897) சாரதா பீடம் பற்றிய குறிப்புகள்
26. ஷண்முக விஜயம்(1894)
27. சைவ உதய பாது (கிழமை) (1882)
28. மகாவிகட தூதன்"
29. திரிபுரத் தமிழ்ச் செல்வன் (கிழமை) (1880)
30. ஞான நீலலோசனி (கிழமை) (1890)
31. திருச்செங்கோட்டு விவேகாதிலகன் (கிழமை) (1894)
32. லோகேயபகாரி (கிழமை) (1896)
33. பிரபஞ்சமித்திரன் (கிழமை) (1898)
34. கலாதரங்கிணி (கிழமை) (1886-89)
35. நடுத்தர, உயர்தரப்பள்ளி நண்பன் (1879)
36. சுகுணபோதினி (1883)
37. சன்மார்க்க போதினி (1885)
38. சுக சீவனி (1887) பெங்களுர்.
39. பிரம வித்யா (1887)
40. ஞானாமிர்தம் (1883)
41. விசயத் துவசம் (1893)
42. தேசாபிமானி (1877) கிறிஸ்தவ இதழ்.
43. தேசோபகாரி (திங்கள்) (1860) நாகர்கோயில்
44. தத்துவபோதினி (திங்கள்) (1864)
45. சுகத்திய வர்த்தமானி (திங்கள்) (1870) பசுமலை
46. நற்போதகம் (திங்கள்) (1849) பாளையங்கோட்டை.
47. சத்தியதூதன் (திங்கள்) (1887)
48. ஸ்ரீலோகரஞ்சனி (திங்கள்) (1887)
49. பெண்மதி போதினி (திங்கள்) (1891)
50. விவேகசிந்தாமணி (திங்கள்) (1892)
51. ஞான பானு (திங்கள்) (1894)
52. மாணவர் போதகம் (திங்கள்) (1895)
53. சித்தாந்த தீபிகை (திங்கள்) (1897)
54. தர்மபள்ளி போதம் (திங்கள்) (1850–61) நாகர்கோயில்
55. மாதர் மனேரஞ்சனி (திங்கள்) (1899)
56. விநோத விசித்திர பத்திரிகை (1900)
57. சோம ரவி (முத்திங்களிதழ்) (1895)
58. சிவபக்தி சந்திரிகை (1890–92) திருவையாறு
59. தமிழ்ப் பத்திரிகை (திங்கள்) (1831) கிறித்தவ சமய இதழ்.
60. பால தீபிகை (முத்திங்கள்) (1840-52) . சிறுவர் இதழ்
61. சிறுபிள்ளையின் தேசத் தோழன் (1849) சிறுவர் இதழ்
62. பாலியர் நேசம் (1851) யாழ்ப்பாணம்
63. அமிழ்தவசனி (1865) பெண்மணிகளுக்கு.
64. திராவிடரஞ்சனி (திங்கள்) (1887) திருச்சி.
65. லோக ரஞ்சனி (திங்கள்) (1817) வேலூர்.
66. கலாவர்த்தினி (திங்கள்) (1866)

தமிழ் நாட்டுக் கப்பால் :

1. உதயதாரகை (திங்கள் இருமுறை) (1845-55) யாழ்ப்பாணம்.
2. ஞாதீபம் (திங்கள்) (1892) கண்டி:அச்சகம் கொழும்பு
3. இந்துநேசள் (1888) பினாங்கு
4. பினங்கு வர்த்தமானி (1897) பினாங்கு
5. பினங்கு விஜயகேதனன் (1888-89) பினாங்கு
6. உலக நேசன் (1897) பினாங்கு
7. தேஜோபீமானி (1896-97) பேராக் (மலேயா)
8. சிங்கை நேசன் (1887-1890) சிங்கப்பூர்
9. The Indian Antiquity (1872) பம்பாய்-தமிழ்நாடு,மொழி, சமயம், வரலாறு, இலக்கியம் பற்றிய தமிழ் ஆங்கிலக் கட்டுரைகன்.
10. Deutsche Morgenlaen-dische ceseleschaft செர்மனி.
11. Oriental Translation fund of Great Britain & Ireland. இலண்டன்
12. Bibiiotheque Nationale-Manuscripts-Tamouls (National Library). பாரிசு
13. Ecole speciale des Langnes.Orientales Viwantes. (1736-1746. 1883 1886, 1889, 1894.) பாரிசு
14. இலங்கை நேசன் (திங்க ளிருமுறை) (1848) கொழும்பு

நாளிதழ்:

1. சுதேசமித்திரன் (1880)

இன்னும் சில பத்திரிகைகள் பற்றிய குறிப்புகளும் உள்ளன, இவற்றுள் பெரும்பாலன காலமெனும் கடுங் காற்றின் எதிர் நிற்கமாட்டாமல் தலைசர்ய்ந்து விட்டன. ஒரு சில, சில ஆண்டுகள் வெற்றிமுரசு கொட்டி வாழ்ந்தன. இவற்றுள் ஒன்றையும் இன்று காண்பது அரிதாகி விட்டது அல்லவா? இவற்றில் சில ஆண்டு மலர்களும் வெளியிட்டன. 'சுதேசமித்திரன்’ தோன்றிய நாள்தொட்டு (1880) இன்று வரை நம்மிடையே வாழ்ந்து வருகின்றது. தற்போது (1978) நிறுத்தப்பெற்றுள்ளது.

இவ்வாறு மக்களொடு தொடர்பு கொண்டுள்ள பல்வேறு துறைகளிலும் அவர் தம் வாழ்வொடு வாழ்வாய் வழக்கொடு வழக்காய்க் கேள்வியொடு கேள்வியாய்ச் சொல்லொடு சொல்லாய் எல்லா நிலைகளிலும், செயல் களிலும், முறைகளிலும் தமிழ் உரை கலந்து அவர்களை வாழவைத்து, தமிழ் வாழ்வை வளமுறச் செய்து, தானும் வளர்ந்து வாழ்ந்து இந்த நூற்றாண்டின் எதிர்காலத்தை நோக்கி 1901 இல் கால் வைத்தது.

இதன் வேறு சில பிரிவுதளை நாளை காணலாம்.

 1. தமிழில் 192 கையேட்டுப் படிகள்
  புராண, கட்டுக்கதைகள் 44
  உள்நாட்டு (அ) ஊர் வரலாறு 39
  கதை, பாட்டு, நாடகம் (சமய அற வாழ்வுபற்றி) 72
  தத்துவம் 10
  வான சாத்திரம், சோதிடம் 14
  மருந்து 10
  கலை 3

  192

  தமிழில் மட்டுமன்றிப் பிற மொழிகளிலும் அவர் தொகுத்துள்ளார். அவை:

  தெலுங்கு 156
  பழைய கன்னடம் 39
  புதுக் கன்னடம் 3
  மலையாளம் 6
  மராட்டி 12
  ஒரியா 23
  இந்தி 12
 2. 1. A catalogue of the Tamil Books in the library of the British Museum.
  2. Classified catalogue of the Public Reference Library Published by Registrar of Books, 1894.
  3. Tamil Manuscripts in the Tanjore Maharaja Serfoji’s’ Saraswathi Mahal Library-comiled by Loganatha Piai.
  4. A Descriptive catalogue of the Tamil Manuscripts of the Government Manuscripts Library by M. Rangacharya, 1912.
  An Alphabetical Index of Tamil Manuscripts by S. Kuppuswamy Sastry, 1932.
 3. Court of Directors.
 4. 1893 க்கு முள்.
 5. Tamil lexicon-vol. II, P. IIII.
 6. A compilation of papers in the Tamil language by Andrew Colerson, 1837, P. 202.
 7. Medical Board Coffice.