பறவைகளைப் பார்/கூடுகளும் அடைகாத்தலும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

VII. கூடுகளும் அடைகாத்தலும்

உயிர் வாழ்வதற்காகப் பறவைகள் எப்பொழுதும் போராட வேண்டியிருக்கிறது. குஞ்சு பொரிக்கும் பருவந்தான் அதிக ஆபத்தானது. பாம்பு, எலி, அணில், ஓணான், குரங்கு இவற்றோடு மனிதனும் கூடப் பறவைகளின் முட்டைகளைக் களவாடுவதுண்டு. மற்றப் பறவைகளையும் கூட நம்ப முடியாது. சாதாரணக் காக்கைகளும், கடற் காக்கைகளும் திருடுவதிலே பெயர் வாங்கியவை.

தேவைக்கேற்றபடி பறவைகள் நல்ல கூடுகளையோ, செப்பனிடாத ஒழுங்கற்ற கூடுகளையோ கட்டுகின்றன.

பொதுவாக ஆறு வகையான கூடுகளைக் காணலாம்.

(1) மேலே திறந்த கூடுகள்: இவை ஆழமாகவும் கிண்ணம் போலவும் இருக்கும். அதனால் முட்டைகளோ, குஞ்சுகளோ கீழே விழாமல் பாதுகாப்பாக இருக்கும். அடியிலே மெத்தென்று இருக்க நார், சிறு குச்சி, இறகுகள் இருக்கும். கூடுகளைப் பாதுகாக்க ஜோடியாகவோ, கூட்டமாகவோ பறவைகள் வசிக்கும், காக்கை, கொக்கு, புறா போன்ற பறவைகளின் கூடுகள் இப்படிப்பட்டவை.

(2) மூடிய கூடுகள்: முழுதும் மூடிய கூடுகளுக்கு ஒரு பக்கத்தில் மட்டும் சிறிய வழி இருக்கும். கூட்டின் உள்ளே சுற்றிலும் சுவர்போல உள்ள பகுதி சிறிய இறகுகளாலும், ரோமத்தாலும் மூடப்பட்டு இருக்கும்.

(3) சுரங்கக் கூடு : மீன் கொத்தி, பஞ்சுருட்டான் போன்ற பறவைகள் ஆற்றங்கரைகளில் தமது அலகால் சுரங்கங்களோ, குழிகளோ உண்டாக்கிக்கொள்ளும்.

(4) பொந்துக் கூடுகள் : மரம், பாறை, சுவர் இவற்றிலுள்ள பொந்துகளில் மரங்கொத்தி,

(Upload an image to replace this placeholder.)

ஆந்தை, கிளி, மைனா, மலைமொங்கான் போன்ற பறவைகள் கூடு அமைக்கும். இயற்கையாக உள்ள பொந்துகளை அவை பயன்படுத்துவதோடு தாமாகவே பொந்துகளை உண்டாக்கவும் செய்யும். மலைமொங்கான் ஒரு விநோதமான வழக்க முடையது. மரத்திலுள்ள பொந்திலே முட்டையிட்டுப் பெண் பறவை அடைகாக்கும் பொழுது ஆண் பறவை கூட்டை முழுவதும் அடைத்துவிடும். ஒரு சிறிய ஓட்டை மட்டுமே அதில் இருக்கும். ஆண் பறவை இரைதேடிக் கொண்டு வந்து அதன் வழியாகப் பெட்டைக்குக் கொடுக்கும்.

(5) வெளியே செல்லும் பொழுது மூடப்படும் கூடுகள்: முக்குளிப்பான், நீர்க்கோழி, காட்டு வாத்து இவற்றின் கூடுகள் மேலே திறந்து இருக்கும். ஆனால் கூட்டைவிட்டுப் போகும்பொழுது ஆண் பெண் பறவைகள் முட்டைகளை நன்றாக மூடிவைத்து விட்டுப் போகும். முக்குளிப்பானுடைய கூடு, களைகளாலும் நாணல் தட்டுகளாலும் ஆன சிறு தெப்பம்போலக் காணப்படும். வறண்ட தழைகளைப் போலவே இக் கூடுகள் தோன்றும்.

(6) கூடென்றே சொல்லமுடியாத கூட்டுகள் : ஆலா, ஆள்காட்டி, கரைக்கோழி இவை உண்மையில் கூடு கட்டுகட்டுவதாகவே சொல்ல முடிாது. இவை தரையில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன. இவற்றின் முட்டைகள் நிறத்திலே சுற்று புறத்தின் நிறத்தைப் போலவே இருப்பதால் அவற்றைக் கண்டுபிடிக்க முடியாது. கரைக் கோழி கிளிஞ்சல்களையும், கூழாங்கற்களையும், கரையிலுள்ள பாறைமீது சேர்த்து வைத்து அவற்றின் மேலே முட்டையிடுகின்றது.

சாதாரணமாகப் பெண் பறவைதான் அடைகாக்கும். ஆனால் ஆண் பறவையும் பெட்டைக்கு இப்பணியில் உதவ முன்வருவதுண்டு, சில வேளைகளில் ஆண் அடைகாத்துக் கொண்டு, பெட்டை இரை தேடி உண்பதற்கு வழி செய்யும். பெரும்பாலான பறவைகள் ஆண்டிற்கு ஒரு முறையே முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும்.

எல்லாப் பறவைகளின் முட்டைகளும் முட்டை வடிவமாகவே இருப்பதில்லை. முட்டைகள் உருண்டுவிடாதவாறு பாதுகாப்பான மரப்பொந்துகள், பாறைகள், பாழடைந்த இடங்கள் இவற்றில் பல பறவைகள் முட்டையிடுகின்றன. அம்முட்டைகள் உருண்டை வடிவமாக இருக்கும். ஆள் காட்டியும் அதன் இனத்தைச் சேர்ந்த பறவைகளும் இடும் முட்டை பேரிக்காய் வடிவத்திலிருக்கும். தட்டையான பாறை மீதோ கடலின் மேலெழுந்து தோன்றும் பாறை உச்சியிலோ முட்டையிடும் பறவைகள், நீள்வடிவமான ஒரே ஒரு முட்டையை இடும்.

வெவ்வேறு இனப் பறவைகள் ஒரு சமயத்தில் இடும் முட்டைகளின் எண்ணிக்கை உணவு நன்றாகக் கிடைப்பதைப் பொருத்தும், பாதுகாக்கும் திறமையைப் பொருத்தும் இருக்கும். சில பறவைகள் ஒரே ஒரு முட்டைதான் வைக்கும் சில இரண்டு, சில நான்கு முட்டையிடும் பருந்து ஒன்று முதல் நான்கு முட்டைகளும், காட்டுவாத்து

(Upload an image to replace this placeholder.)

ஐந்து முதல் பதினாறு முட்டைகளும் வைக்கும். நன்றாகப் பறக்கும் திறமையற்ற தரைவாழ் பறவைகளுக்கு ஆபத்து அதிகமாக நேருவதால் பொதுவாக அவை இருப்பது முட்டைகள் வரை இடும்.

முட்டைகளின் நிறமும் அவற்றின் மேல் உள்ள புள்ளிகளும் அவற்றைப் பாதுகாக்க உதவுகின்றன. மரங்கொத்தி, மீன் கொத்தி, சின்னக்கிரி, ஆந்தை இவைகள் பாதுகாப்பாக மூடிய கூடுகளைக் கட்டுவதால் முட்டைக்குப் பாதுகாப்பு நிறக் தேவை இல்லை. ஆகையால் இவை வெண்மையான முட்டைகள் இடுகின்றன. திறந்த கூடுகள் கட்டும் பறவைகள் இடும் முட்டைகள் சுற்றுப்புற நிறம்போல அடையும். இதனால் தீங்கு நேராமல் முட்டைகள் பாதுகாக்கப்படுகின்றன. மங்கிய மஞ்சள், பச்சை, நீலம், பழுப்பு, ஊதா ஆகிய நிறங்களில் பல முட்டைகள் இருக்கும்.

பெரும்பான்மையான முட்டைகளின் மேற்பரப்பு மிருதுவாக இருக்கும். சில முட்டைகள் வழுவழுப்பாக இருக்கும்.

தாய்ப் பறவை அடைகாத்து முட்டைகளுக்கு வெப்பம் தருகின்றது. ஒரே வகையான வெப்பத்தைக் கொடுப்பதற்காகத் தாய் பறவை தன் அடிவயிற்றில் உள்ள இறகுகள் சிலவற்றை உதிர்த்து விடும். சொட்டையான இந்த இடங்களில் முட்டைகளை அடக்கி நல்ல வெப்பம் தரும் இரை தேடுவதற்காகக் கூட்டைவிட்டு வெளியே போகும் சமயத்தில் முட்டைகளுக்கு வெப்பம் இல்லாமல் இருப்பதால் அவை பாதிக்கப்படுவதில்லை. ஏனென்றால் மிகக் குறுகிய காலத்திற்கே தாய்ப் பறவைகள் கூட்டைவிட்டு வெளியே செல்லும். சிறு பறவைகள் குஞ்சு பொரிப்பதற்கு 11 நாட்கள் வரை ஆகும். ஆனால் பெரிய பறவைகள் குஞ்சு பொரிக்க 80 நாட்கள் வரை கூட ஆகும். மிருதுவான அலகுகளை உடைய பூச்சி தின்னும் பறவைகளும், கெட்டியான அலகுகளை உடைய தானியம் தின்னும் பறவைகளும் காலையிலிருந்து மாலைவரை தமது குஞ்சுகளுக்கு இரைதேடும் வேலையில் ஈடுபட்டிருக்கும். ஓரளவு தாமே ஜீரணம் செய்த உணயைச் சில பறவைகள் குஞ்சுகளுக்கு ஊட்டும். புறாக் குஞ்சுகள் தமது தாயின் வாய்க்குள் அலகைத் துருத்தி ஓரளவு ஜீரணமான உணவை எடுத்துத் தின்னும். தாய்ப் பறவையிடமிருந்து வரும் ஒருதச் சுரப்பும் அதில் கலந்திருக்கும். குஞ்சுகளுக்கு உணவு கொடுப்பது கடினமான வேலை. ஆனால் குஞ்சுகள் தாமே இரை தேடிக் கொள்ளும் வரையில் இப்பணி சலியாது நடை பெறுகின்றது.

சிட்டுக்குருவி, வானம்பாடி போன்ற பறவைகளின் குஞ்சுகளின் கண்கள் முட்டையிலிருந்து வெளிவரும் போது மூடியேயிடுக்கும். அதனால் அக்குஞ்களால் எதுவுமே செய்யமுடியாது. ஒரு வாரமோ இரண்டு வாரமோ ஆன பிறகுதான் அவை கூடுகளை விட்டு வெளியே செல்ல முடியும். இதற்கு மாறாக வாத்துக்குஞ்சு. கோழிக்குஞ்சு, கரைக்கோழிக்குஞ்சு முதலியவை முட்டையிலிருந்து வெளிவரும்போதே திறந்த கண்களுடனும், மென்தூவி நிறைந்தும் இருக்கும். உடனே

இவற்றல் ஓடவும் நீந்தவும் இரையைக் கொத்தித் தின்னவும் முடியும்.

குஞ்சுகளைக் காப்பாற்றுவதற்காகப் பறவைகள் பகைவரை எதிர்த்து மிகத் துணிச்சலுடன் போராடும். சிறிய கொண்டைக்குருவி ஒன்று பருந்தொன்றைத் தாக்கி துரத்தியடித்ததை நான் பார்த்திருக்கிறேன். ஆபத்து வரும் என்று தெரிந்தால் பறவைகள் ஓர் எச்சரிக்கை ஒலி கொடுக்கும். உடனே சிறு குஞ்சுகள் தங்கள் தாயின் சிறகுகளுக்குள் புகுந்து கொள்ளும்.

கடற்கரையிலும், மரஞ்செடி கொடிகள் குறைவாக உள்ள இடங்களிலும் வசிக்கும் பறவைகள் ஆபத்து வரும் என்று தோன்றினால் தரையிலே அசையாமல் படுத்துக் கொள்ளும் இயல்புடையவை. தாயின் எச்சரிப்புக் குரல் கேட்டதும் குஞ்சுகள் தரையோடு தரையாகப் படுத்துக் கொள்ளும்.

குஞ்சுகளைக் கவரவரும் பகைவரைக் கவுதாரி போன்ற பறவைகள் ஏமாற்றி அவற்றைக் காப்பதுண்டு. இவை காயமுற்றவை போலவோ நொண்டியானவை போலவோ நடிக்கும். உடனே பகைப் பறவைகள் குஞ்சுகளை விட்டு இவற்றைப் பிடிக்க ஓடிவரும். சிறிது தூரம் அவற்றை இவ்வாறு திசைமாற்றி இழுத்துக்கொண்டு சென்று இந்தப் பறவைகள் பறந்தோடிவிடும்.

இவ்வாறு அன்புடனும் எச்சரிக்கையுடனும் இருந்தபோதிலும் ஆயிரக்கணக்கான குஞ்சுகள் ஒவ்வொரு ஆண்டிலும் மடிகின்றன.