பறவை தந்த பரிசு-2/பறவை தந்த பரிசு
ஓர் ஊரில் கண்ணன் என்று பெயருடைய மனிதன் ஒருவன் இருந்தான். அவன் மிக ஏழை. அவன் ஒரு பணக்காரரிடம் வேலைக்குச் சேர்ந்தான். அந்தப் பணக்காரரின் வீடு மிகப் பெரியது. அந்த வீட்டைச் சுற்றிலும் ஒரு பெரிய பூந்தோட்டம் அமைந்திருந்தது. அந்தத் தோட்டத்தைப் பார்த்துக் கொள்வதுதான் கண்ணனுடைய வேலை.
காலையில் எழுந்ததும் பூஞ் செடிகளுக்கெல்லாம் தண்ணீர் ஊற்றுவதும், பூத்த மலர்களைப் பறித்துச் சென்று வீட்டுக்கார அம்மாவிடம் கொடுப்பதும், தோட்டத்தைப் பெருக்கிக் குப்பை இல்லாமல் அழகாக வைத்துக் கொள்ளுவதும் கண்ணனுடைய அன்றாட வேலைகளாகும். இதற்கு அந்தப் பணக்காரர் கண்ணனுக்கு மாதம் நூறுருபாய் சம்பளம் கொடுத்து வந்தார்.
இந்தச் சம்பளத்தில் கண்ணன், அவன் மனைவி வள்ளி, அவர்கள் மகள் பொன்னி மூவரும் வாழ்க்கை நடத்த வேண்டும். நாளுக்கு நாள் ஏறிவரும் விலையில் சாப்பாட்டுச் செலவுக்கே வரும்படி போதாமலிருந்தது ஆகவே கண்ணன் தான் வேலை செய்யும் வீட்டுக்காரரிடம் மிகுதியாகக் கடன் வாங்கியிருந்தான். தவிர ஒரு ரூபாய் கூடச் சேமித்து வைக்க முடியவில்லை.
கண்ணனுக்கு மனத்திற்குள் ஓர்ஆசை இருந்தது. தான் வேலை செய்யும் பணக்காரருடைய வீட்டைப் போல் ஒரு பெரிய வீடு கட்டி அதைத் தன் மகள் பொன்னிக்குக் கொடுக்க வேண்டும். அவள் பெரிய பெண்ணாக வளர்ந்து வருவதற்குள் எப்படியாவது ஒரு பெரிய வீடு கட்டி விட வேண்டும். ஆசை தான் பெரிதாக இருந்ததே தவிர அவனால் ஐந்து ரூபாய் கூடச் மிச்சம் பிடிக்க முடியவில்லை.
ஒரு நாள் அந்தப் பணக்காரர் குடும்பத்தோடு வெளியூர் போயிருந்தார். அன்று காலையில் தோட்ட வேலையெல்லாம் முடிந்தது. பகல் சாப்பாட்டுக்குப் பிறகு கண்ணன் ஊருக்குப் பக்கத்தில் இருந்த மலையை நோக்கி நடந்தான். அந்த மலையின் மீது ஒருமுருகன் கோயில் இருந்தது. முருகனை வணங்கித்தன் ஆசைகளையெல்லாம் மனம் விட்டுச் சொல்லி வரம் கேட்க வேண்டும் என்றுதான் கண்ணன் அந்த மலைக்குச் சென்றான்.
மலையின்உச்சியில் ஒருசிறிய கோயில் இருந்தது.அந்தக் கோயிலின் உள்ளே அழகான மயிலின் மீது கையில் வேலுடன் கம்பீரமாக முருகன் உட்கார்ந்திருந்தான் கண்ணன் முருகன் முன்னால் அப்படியே விழுந்து வணங்கினான். கை நிறையத் திருநீறு அள்ளி நெற்றியில் பூசிக் கொண்டான்.
“முருகா, இந்த ஏழையின் குறையைத் தீர்த்து வையப்பா. என் மகள் பொன்னிக்கு அழகான ஒரு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். அதற்கு நீ தான் உதவி செய்ய வேண்டும். உன்னைத் தான் மலையைப் போல் நம்பியிருக்கிறேன்” என்று கண்ணன் முழுநம்பிக்கையோடு முருகனை வேண்டிக் கொண்டான். ஆயிரக் கணக்கான பக்தர்களின் இலட்சக் கணக்கான வேண்டுதல்களைக் கேட்டுக் கேட்டுச் சிரித்துக் கொண்டிருந்த முருகன் கண்ணனின் வேண்டுகோளைக் கேட்ட பிறகும் சிரித்துக் கொண்டிருந்தான்.
கண்ணன், எப்படியும் முருகன் தனக்கு உதவி செய்வான், அருள் புரிவான் என்ற முழுநம்பிக்கையோடு அந்த மலைக்கு வந்து அடிக்கடி வேண்டுவது வழக்கம். முருகனின் சிரித்த முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் கண்ணனுக்கு அந்த நம்பிக்கை மேலும் உறுதிப்பட்டு வளரும்.
கண்ணன் மகள் பொன்னி வளர வளர கண்ணனின் வேண்டுதலும், முருக பக்தியும் மேலும் மேலும் வளர்ந்தது. தோட்டத்து வேலை இல்லாத நேரங்களிலெல்லாம் மலைக்கோவிலுக்குச்செல்வதும் முருகன் முன்னால் வேண்டுவதுமாகத் தன் பொழுதைக் கழித்து வந்தான்.
பொன்னி வளர்ந்து பெரியவளாகி விட்டாள். பொன்னியின் அம்மா வள்ளி தன் மகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று திட்டம் போட்டாள். கண்ணனுக்கோ தன் மகளை வசதியோடு கூடிய பெரிய செல்வர் வீட்டில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் ஒரு தோட்டக்காரன் மகளை எந்தப் பணக்காரன் திருமணம் செய்து கொள்ள விரும்புவான்?
ஒரு நாள் கண்ணன் முருகன் கோயிலை நோக்கி நடந்து கொண்டிருந்தான். இவ்வளவு வேண்டியும் முருகன் கருணை காட்ட வில்லையே என்ற வருத்தத்தோடு அவன் நடந்து கொண்டிருந்தான். நம்பினவர்களை முருகன் கைவிட மாட்டான் என்ற நம்பிக்கையுடன் அவன் கோவிலை நோக்கி நடந்தான்.
“கண்ணா, கண்ணா” என்று யாரோ மெல்லிய குரலில் அழைப்பது கேட்டது. கண்ணன் சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தான். யாரையும் காணவில்லை. சிறிது தூரத்தில் கோயிலைச் சேர்ந்த மயில் ஒன்றுதான் நின்று கொண்டிருந்தது.
கண்ணன் நடக்கத் தொடங்கினான். மறுபடியும் “கண்ணா, கண்ணா” என்று அழைக்கும் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தான். யாரும் காணப்படவில்லை. மீண்டும் நடக்கத் தொடங்கினான். கண்ணா,கண்ணா என்ன அவசரம்? நான் சொல்வதைக் கேட்டு விட்டுப் போ என்றது அந்தக் குரல்.
பேசும் குரல் மிக அருகிலேயே கேட்டாலும் யாரையும் காணவில்லை. “யார் என்னைக் கூப்பிடுவது' எதிரில் வாருங்கள்?” என்று கண்ணன் கூக்குரலிட்டான்.
உடனே அவன் எதிரில் பறந்து வந்து நின்றது கோயில் மயில்.
வியப்புடன் “நீயா என்னைக் கூப்பிட்டாய்?” என்று கேட்டான் கண்ணன்.
“ஆம் நான்தான் உன்னை அழைத்தேன். உன் நன்மைக்காக உன்னிடம் பேசவே உன்னை அழைத்தேன்” என்று அந்த மயில் கூறியது. அந்த மயில் பார்க்க அழகாயிருந்தது. அது பேசியது வியப்பாய்இருந்தது. ஆனால் அதுசொன்னகருத்தைத் தான் கண்ணனால் நம்ப முடியவில்லை. மலையடி வாரத்தில் வாழும் ஒருசின்ன மயில் தனக்கு என்ன நன்மை செய்து விட முடியும் என்று அவன் நினைத்தான்.
“கண்ணா, ஐயப்படாதே. நீ அடிக்கடி கோயிலுக்கு வருவதையும், ஆண்டவனை வேண்டு வதையும் நான்பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். உன் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று உனக்கு வழி சொல்லவே நான் விரும்புகிறேன்” என்றது அந்த மயில்.
“நீ எனக்கு வழி சொல்கிறாயா? சொல் பாாக்கலாம்” என்று மேலும் அவநம்பிக்கையோடு கண்ணன் பேசினான்.
“கண்ணா, அவநம்பிக்கை கொள்ளாதே. முருகன் திருவருளால் உன் மகள் பொன்னிக்கு நல்ல வாழ்வு கிடைக்கும். நான் சொல்கிறபடி கேள். பக்கத்திலுள்ள பாலப்பட்டி என்ற ஊரில் வாழும் பண்ணையார் மகன் கந்தசாமிக்கு இந்த வட்டாரத்தில் யாரும் பெண் கொடுக்க விரும்பவில்லை. நீ போய்ப் பண்ணையாரைப் பார்த்து உன் மகளைத் திருமணம் செய்து தருவதாகச் சொன்னால் உடனே ஒப்புக் கொள்வார். ஏழை என்பதற்காக வெறுத்து ஒதுக்க மாட்டார். அவருக்கு உன் முதலாளி வீட்டைப் போல் இரண்டு பங்கு பெரிய வீடும், நிறைய நிலபுலன்களும், பிற சொத்துக்களும் இருக்கின்றன. நீ கனவு கண்டது போல் உன் மகள் மிகப் பெரிய வீட்டில் எல்லா வளன்களோடும் வாழ்க்கை நடத்த இது நல்ல வாய்ப்பு. உடனே நீ போய்ப் பாலப்பட்டிப் பண்ணையாரைப் பார்” என்று சொல்லி விட்டு அந்த மயில் தன் அழகிய இறக்கைகளை விரித்துக் கொண்டு தாவிப் பறந்து சென்றது.
குழம்பிப்போய் நின்ற கண்ணன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு மலை மேல் ஏறிச் சென்றான். முருகன் முன்னால் சென்று வணங்கினான். நிமிர்ந்து கடவுளை நோக்கினான். சிரித்த முகத்தோடு தோன்றிய முருகன், மயில் சொன்னபடி செய் என்று சொல்வது போல் இருந்தது. ஆண்டவனை வணங்கிய பின் கண்ணன் வீட்டுக்குத் திரும்பினான்.
தன் மனைவி வள்ளியிடம் மயில் சொன்ன செய்தியைக் கூறினான். வள்ளி அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களிடம் இந்தச் செய்தியைச் சொன்னாள்.
'பாலப்பட்டிப் பண்ணையார் மகன் கந்தசாமி பெரும் குடிகாரன். அவன் கூட்டாளிகளோ படு முரடர்கள். அந்தக் கூட்டத்தைக் கண்டாலே குலை நடுங்கும். அப்படிப்பட்ட முரடனுக்குப் பச்சைக்கிளி போன்ற பொன்னியைக் கட்டிக் கொடுக்கலாமா? இது பெரும் பாவம்' இப்படி எல்லாரும் கருத்துத் தெரிவித்தார்கள்.
வள்ளி கண்ணனிடம் “நம் பெண்ணை யாராவது ஏழைப் பையனுக்குக் கொடுத்தாலும் கொடுக்கலாம்; அந்த கந்தசாமிக்கு வேண்டவே, வேண்டாம்” என்று கூறினாள். இதைக் கேட்டதும் கண்ணனுக்கு மேலும் குழப்பமாய் இருத்தது. நினைத்துப் பார்க்கப் பார்க்க வள்ளி சொல்வதே சரி என்று தோன்றியது. அந்தக் கோயில் மயில் மேல் கோபம், கோபமாக வந்தது. முருகனிடம் வரம் கேட்க தெய்வமே என்று பேசாமல் சென்ற என்னை வழி மறித்து இந்த மயில் தவறான ஒரு வழியைக் காட்டி விட்டது என்று வருந்தினான்; மறுபடிகோயிலுக்குப் போகும்போது அந்த மயிலோடு பேசக் கூடாது என்று உறுதி செய்துகொண்டான்.
ஐந்தாறு நாள் கழித்து முருகனிடம் தன் மகளுக்கு நல்ல கணவனாகவும், செல்வம் உள்ளவனாகவும் உள்ள ஒருவனையே தர வேண்டும் என்று வரம் கேட்பதற்காகக் கண்ணன் மலைக் கோவிலுக்குச் சென்றான்.
மலையடிவாரத்தை அடைந்த போது எதிரில் அந்த மயில் வந்தது. அத்துடன் பேசக் கூடாது என்று நினைக்கும்போதே “கண்ணா!” என்று அது கூப்பிட்டது. அன்பான அந்தக் குரலைக் கேட்ட போது அதன் மேல் இருந்த சினம் எல்லாம் மாயமாய் மறைந்து விட்டது.
அன்போடு அந்த மயில் “கண்ணா, பண்ணையாரைப் பார்த்தாயா?” என்று கேட்டது.
கண்ணனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. கோபத்துடன் மயிலோடு பேசக் கூடாது என்று வந்தவன் அன்போடு கேட்கும் அந்த மயிலுக்கு என்ன பதில் சொல்லுவான். பண்ணையார் மகனை வேண்டாம் என்று சொல்வதா, மயில் சொல்கிறபடி போய்ப் பார்ப்பதா? அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. வாய் பேசாத ஊமையாக நின்று கொண்டிருந்தான்.
அவன் மனத்துக்குள் நினைப்பதையெல்லாம் தெரிந்து கொண்டது போல் மயில் பேசியது.
“கண்ணா, நீயோ மிகுந்த ஏழை. உனக்கு இருக்கும் ஆசையோ மிகப் பெரிது. உன் ஆசை நிறைவேற வேண்டுமானால் நான் சொல்கிறபடி செய். பண்ணையார் தன் மகனுக்கு வேறு திருமணம் ஏற்பாடு செய்வதற்கு முன்னால் நீ அவரைப் போய்ப் பார்த்து விடு. காலத்தை நழுவவிடாதே. அன்றன்று நடக்க வேண்டியது நடக்கா விட்டால் எல்லாம் குழப்பமாகி விடும். நான் சொல்வதைக் கேள். பொன்னியின் எதிர்காலம் நன்றாக இருக்கும். எல்லாம் முருகன் செயல்” என்று கூறியது அந்த மயில்.
கண்ணன் முருகனை வணங்கிவிட்டுத் தன் வீடு சென்றான்.
வீட்டை அடைந்தவுடன் மனைவி வள்ளியிடம் அன்று நடந்த நிகழ்ச்சிகளைக் கூறினான். வள்ளியோ அவனைத் திட்டத் தொடங்கிவிட்டாள்.
“உங்களுக்கும் புத்தி இல்லை. அந்த மயிலுக்கும் புத்தியில்லை. பெண்ணைப் பெற்றுப் பச்சைக் கிளியைப் போல் வளர்த்து அந்தக் குடிகாரனிடம் கொண்டு போய்க் கொடுப்பதை விட என் பெண் திருமணம் ஆகாமலே இருந்து விட்டுப் போகட்டும். இனிமேல் அந்த மயிலின் பேச்சை எடுத்தால், எனக்குச் சினம் பொங்கி வரும். பேசாமல் இருங்கள்” என்று பொரிந்து தள்ளி விட்டு வள்ளி வறட்டி தட்டச் சென்று விட்டாள்.கண்ணன் மகள் பொன்னிக்கு மாப்பிள்ளை கிடைப்பதற்குள் அவள் கிழவி ஆகி விடுவாள் போலிருந்தது.
கண்ணன் நாள்தோறும் மயிலைச் சந்திப்பதும், மயில் பண்ணையாரைப் பார்க்கச் சொல்லுவதும், கண்ணன் வள்ளியிடம் ஏச்சு வாங்குவதும் நடந்ததைத் தவிர எவ்வித முன்னேற்றமும் இல்லை. காலம் கடந்து கொண்டிருந்தது.
ஆடிக் கார்த்திகை வந்தது. மலைக் கோயில் முருகனுக்கு மிகச் சிறப்பாகப் பூசை நடந்தது. சுற்று வட்டாரத்தில் இருந்த மக்கள் எல்லாரும் மலையில் கூடி விட்டார்கள். திருவிழா வேடிக்கைகள் மிகக் கவர்ச்சியாக நடந்தன. திருவிழாப் பார்ப்பதற்காக கண்ணன் தன் மனைவி வள்ளியையும், மகள் பொன்னியையும் அழைத்துச் சென்றான்.
கூட்டத்தோடு, கூட்டமாக அவர்கள் கோயிலை நோக்கிச் சென்ற போது பொன்னியின் காலில் ஒரு முள் குத்தி விட்டது. அவள் குனிந்து முள்ளை எடுப்பதற்குள் பெற்றோர்கள் மாயமாய் மறைந்து விட்டார்கள். கூட்டத்தில் கலந்து விட்டார்கள். எடுத்த முள் பாதியில் ஒடிந்து ஒரு பாதி காலுக்குள்ளேயே இருந்து விட்டது. ஆகவே அவள் காலடி எடுத்து வைக்கும் போதெல்லாம் உள்ளே ஒடிந்திருந்த முள், மேலும், மேலும் குத்தி வேதனை தந்தது. எனவே பொன்னியால் தொடர்ந்து நடக்க முடியவில்லை.
பொன்னிக்கு ஒன்றும் புரியவில்லை. பெற்றவர்களோ கூட்டத்துக்குள் மறைந்து விட்டார்கள். காலில் முள்குத்திய வலியோ பெரும் துன்பத்தைக் கொடுத்து கொண்டிருந்தது. அவள் அழுது கொண்டு வழியில் கிடக்கும் கல்லின் மேல் உட்கார்ந்தாள்.
அந்த வழியாக வந்த ஓர் இளைஞன் பொன்னியைப் பார்த்தான்,
“பெண்ணே ஏன் அழுகிறாய்?” என்று கேட்டான்.
“காலில் முள் குத்தி விட்டது. ஒரே வலியாய் இருக்கிறது. அப்பாவும், அம்மாவும் கூட்டத்தோடு சென்று விட்டார்கள். நான் தனியாக இருக்கிறேன். அழுகை, அழுகையாக வருகிறது” என்று வருத்தத்தோடு கூறினாள் பொன்னி.
உடனே அந்த இளைஞன் பக்கத்திலிருந்த முள் செடியிலிருந்து ஒரு முள்ளை ஒடித்துக் கொண்டு வந்தான். பொன்னி வேண்டாம், வேண்டாம் என்று சொல்ல அவள் காலைப் பிடித்து அதில் குத்தி இருந்த முள்ளைத் தன் கையில் இருந்த முள்ளால் குத்தி வெளியில் எடுத்து விட்டான்.
முள் வெளியே வந்ததும் வலியெல்லாம் பறந்து விட்டது.
“ஐயா, உங்களுக்கு மிக நன்றி” என்று கூறிக் கொண்டே எழுந்த பொன்னி அவன் பதில் சொல்வதற்குள் கூட்டத்திற்குள் பாய்ந்தோடி மறைந்து விட்டாள்.
வேக, வேகமாக ஓடி முன்னால் சென்று கொண்டிருந்த தன் பெற்றோர்களை அடைந்து விட்டாள்.
அன்று திருவிழா மிக நன்றாக நடந்தது. பாலப் பட்டிப் பண்ணையார் செலவில் திருவிழா அமர்க்களம் என்று மக்கள் பேசிக் கொண்டார்கள்.
முருகனுக்கு தீப வழிபாடு நடந்து கொண்டிருந்தது. முருகன் சந்நதியில் நின்று பய பக்தியோடு பொன்னி வணங்கிக் கொண்டிருந்தாள். சற்று தூரத்தில் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான் அந்த இளைஞன். இதைப் பாலப்பட்டிப் பண்ணையார் கவனித்து விட்டார். உடனே அவர் தன் ஆள் ஒருவனை அழைத்து அந்தப் பெண் யாரென்று கேட்டார்.
அந்த ஆள், தோட்டக்காரக் கண்ணனை நெருங்கி “ஐயா, பண்ணையார் உங்களை அழைத்து வரச் சொன்னார். கொஞ்சம் வருகிறீர்களா?” என்று கூப்பிட்டான். கண்ணன் அவனோடு சென்றான்.
அப்பொழுது அந்தஇளைஞனைப் பார்த்து விட்ட பொன்னி தன் அம்மாவிடம் அவனைச் சுட்டி காட்டி, அவன் தனக்கு உதவி செய்ததைக் கூறிக் கொண்டிருந்தாள்.
அந்தப் பையனை நிமிர்ந்து பார்த்த வள்ளி, நல்ல பையனாக இருக்கிறான். இவனைப்போல் ஒரு பையன் என் பொன்னிக்குக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தாள்.
அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே கண்ணனும் பண்ணையாரும் அவள் அருகில் வந்தார்கள்.
“வள்ளியம்மா, என் பையனுக்கு உன் பெண்ணைத் தர மறுக்கிறாயாமே?” என்று கேட்டுக் கொண்டே வந்தார் பண்ணையார்.
கேட்பவரோ பண்ணையார், பெரிய பணக்காரர். நேருக்கு நேர் முடியாதென்று எப்படிச்சொல்வது என்று திக்குமுக்காடிப் போனாள் வள்ளி.
அப்போது அந்த இளைஞனும் அவர்கள் அருகில் நெருங்கி வந்தான். அப்படிப்பட்ட இளைஞனைப் பார்த்தப் பிறகு அந்தப் பண்ணையாரின் குடிகாரப் பையனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று வள்ளி நினைத்தாள். வாய்விட்டுச் சொல்ல அவளால் முடியவில்லை.
அதற்க்குள் பண்ணையார் அந்த இளைஞனைச் சுட்டிக் காட்டி, “இதோ பார், இவன் தான் என் மகன். உன் பெண்ணை அருமையாக வைத்துக் கொள்வான். நீ சரி என்று சொன்னால் போதும்.திருமணத்திற்கு ஏற்பாடு செய்து விடுகிறேன்” என்று கட கடவென்று பேசினார் பண்ணையார். வள்ளிக்கு என்ன சொல்வதென்றே புரிய வில்லை. பையனைப் பார்த்தால் நல்லவனாகத் தான் தெரிகிறது. ஊரில் அவனைப் பற்றிப் பேசுவது கேட்டால் பயமாக இருக்கிறது. எதிரில் நின்று கேட்பவரோ பெரிய மனிதர். ஒரே குழப்பமாக இருந்தது. பொன்னியைத் திரும்பிப் பார்த்தாள். அவளோ அந்த இளைஞனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“எல்லாம் முருகன் செயல்” என்று நினைத்துக் கொண்டே பண்ணையாரை நோக்கி “ஐயா, உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்” என்று சொன்னாள் வள்ளி.
வள்ளியின் பதிலைக் கேட்டுப் பண்ணையார் மிக மகிழ்ச்சி அடைந்தார். பண்ணையார் மகன் கந்தசாமியும் மகிழ்ச்சியோடு காணப்பட்டான். தனக்கு உதவி செய்த அந்த நல்ல இளைஞனே தன் கணவனாக வரப்போகிறான் என்று அறிந்து பொன்னியும் மிக மகிழ்ச்சியடைந்தாள். தான் ஆசைப் பட்ட படி பொன்னி ஒரு பெரிய வீட்டில் வாழப் போகிறாள் என்று கண்ணன் மகிழ்ச்சியடைந்தான்.
அடுத்த மாதமே நல்ல நாள் ஒன்றில் திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆன பிறகு பொன்னி முருகன் கோயிலுக்கு வந்தாள். அவள் முகம் வாடியிருந்தது. வருத்தத்தோடு வந்த அவள் எதிரில் கோயில் மயில் வந்தது.
பொன்னி ஏன் வருத்தமாக இருக்கிறாய் என்று மயில் கேட்டது.
“எல்லாம்உன்னால் வந்தவினை. உன்பேச்சைக் கேட்டு நான் திருமணம் செய்துகொண்ட மாப்பிள்ளை திருந்தாத பிள்ளையாய் இருக்கிறார். வீட்டுக்கு வரும் போதெல்லாம் குடித்து விட்டு வருகிறார்; என்னை அடித்து நொறுக்குகிறார். இந்த துன்பமான வாழ்வை நான் அனுபவிக்க வேண்டும் என்று நீ திட்டமிட்டாய் போலிருக்கிறது” என்று துயரத்தோடு பொன்னி கூறினாள்.
“பொன்னி, அறிவாளியின் கையில்உலகம் இருக்கிறது. நீ அறிவுள்ளவள், நான் உனக்கு என்ன சொல்ல இருக்கிறது” என்று சொல்லி விட்டு அந்த மயில் பறந்து போய் விட்டது. மயில் சொன்ன சொற்களை நினைத்துக் கொண்டே மலை மீது ஏறினாள். முருகனை வணங்கிய பின் வீட்டுக்குத் திரும்பிச் சென்றாள்.
அன்று கந்தசாமி நன்றாகக் குடித்து விட்டு வந்திருந்தான். பொன்னியை அடியடியென்று அடித்தான். முருகா முருகா என்று கூவிக் கொண்டே அத்தனை அடிகளையும் பொறுத்துக் கொண்டாள்.
இரவு நீங்கிப் பொழுது விடிந்தது. பொன்னி கந்தசாமியை எழுப்ப வந்தாள். படுக்கையிலிருந்து எழுந்த கந்தசாமி பொன்னியின் உடையில் அங்கங்கே இரத்தக் கறையிருப்பதை நோக்கினான். துணியை விலக்கிப் பார்த்த போது உடம்பெல்லாம் காயம் பட்டு வீங்கியிருந்ததைக் கவனித்தான்.
“பொன்னி, இதெல்லாம்என்ன? நீ யாரிடம் அடி வாங்கினாய்?” என்று கேட்டான்.
“அத்தான், அடித்ததும் நீங்கள்-விசாரிப்பதும் நீங்கள்-நான் என்ன சொல்லுவேன். இவ்வளவு அன்பாக இருக்கும் நீங்கள் அந்த நேரத்தில் மட்டும் ஏன் அப்படி மாறிவிடுகிறீர்கள் என்றாவது ஒரு நாள் நீங்கள் அடிக்கும்போது நான் இறந்துபோகத்தான் போகிறேன். அப்போதுதான் எனக்கு அமைதி கிடைக்கும்” என்றாள்.
கந்தசாமி கண் கலங்கினான். அவன் பொன்னியின் மீது உயிரையே வைத்திருந்தான். குடிதான் அவனைக் கொடுமைக்காரனாக்கி விட்டது.
இனிமேல் குடிப்பதில்லை என்று முடிவுசெய்தான்.
“பொன்னி, முருகன் மீது ஆணை! நான் இனிக்குடிக்க மாட்டேன்! உன்னைப் பொன் போல் வைத்துக் காப்பாற்றுவேன்” என்றான்.
பொன்னி மிக மகிழ்ச்சி யடைந்தாள். தன்னை வாழ வைத்த தெய்வம் முருகனை வணங்கினாள். வழி காட்டிய மயிலை நினைத்து நன்றி சொன்னாள்.
மாப்பிள்ளை குடியை விட்டு விட்டார் என்ற செய்தி கேட்டு கண்ணனும் வள்ளியும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
மறுநாளே மலைக் கோயிலுக்குச் சென்று முருகனுக்கு அபிடேகம் செய்தார்கள். வழியில் பார்த்த மயிலை விழுந்து விழுந்து கும்பிட்டார்கள்.
பாலப்பட்டிப் பண்ணையார், பொன்னியால் தான் தன்மகன் திருந்தினான் என்று கூறிஅளவில்லா மகிழ்ச்சிடைந்தார்.