உள்ளடக்கத்துக்குச் செல்

பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் தனிப்பாடல்கள்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

இவை தனிப்பாடல் திரட்டு நூலில் இடம்பெற்றுள்ள பாடல்கள்

நின்று படியளக்கும் நீலக் கொடிகள்இரண்(டு)
என்றும் உளவாங் குடந்தை யீச்சுரருக்- கொன்றுக்
கரைக்கு மரையீந்தார் ஒன்றதனுக் கென்னோ
வரைக்கு மரையீயா ரவர். (1)
எடுத்த சன்னங்கள் தொறும் ஈன்றெடுத்த தாய்மார்
கொடுத்த முலைப்பால் அனைத்தும் கூட்டில்- அடுத்தமணிப்
பைந்நாகணை துயின்மால் பாலாழியும் சிறிதா
மன்னா சிதம்பர தேவா. (2)
முக்கண்ண னென்றரனை முன்னோர் மொழிந்திடுவார்
அக்கண்ணற் குள்ள தரைக்கண்ணே- மிக்க
உமையாள் கண்ணொன் றரைமற் றூன்வேடன் கண்ணொன்
றமையு மிதனாலென் றறி. (3)
பாணியிலே புள்ளிமான் பாகத்தே பச்சைமான்
வேணிதனி லேயோர் வெள்ளமான்- காணுமலர்ச்
செம்மான் உலவும் திருமறைக் காட்டீசரே
எம்மானுக் கெங்கே யிடம். (4)

கட்டளைக் கலித்துறை

வான் பணிந்தால் அவனென் பேயுரைக்கு மலரிலயன்
தான் பணிந்தால் அவன்றன் தலையே சொல்லுந் தாரணியுண்
பான் பணிந்தால் அவன் கண்ணே பரிந்து பரிந்துரைக்கும்
நான் பணிந்தால் எனக்கார் சொல்லுவார் சொக்க நாயகற்கே. (5)
மெய்க்கே யணியும் பணியேயென் பேமுடிமேற் கிடந்த
கொக்கே வெண்கூன் பிறையே யரைசேர்ந்த கொடும்புலியே
அக்கே உமக்குக் கிடைத்த உபாயங்களாம் எமக்குஞ்
சொக்கேசர் பாதத்தைக் கிட்டும் உபாயத்தைச் சொல்லுங்களே. (6)
தாண்டித் திரியும் விடையேறி ஓடோன்று தாங்கிப் பிச்சை
வேண்டிக் கலியுக காலம் தள்ளாமல் விரும்பிச் சொக்கர்
ஆண்டித் தொழிலை விட்டையோ மதுரைக் கரசிருந்து
பாண்டித் துரைத்தனஞ் செய்தே பிரம்படி பட்டனரே. (7)
ஆகத்திலே யொருபாதி யென்னம்மைக் களித்தவடன்
பாகத்திலே யொன்று கொண்டாயவண் மற்றைப் பாதியுமுன்
தேகத்திற் பாதியுஞ் சேர்ந்தால் இருவருண்டே சிவனே
ஏகத்திராமல் இருப்பாய் களந்தையும் என்னெஞ்சுமே. (8)
துணையான நாரி புவியை யெல்லாம் பெறும் தொல்லைவடிக்
கணையானது புவியெல்லாம் எடுத்துண்ணும் கைச்சிலைகல்
அணையாகி நின்று புவியினைத் தாங்குமென்றால் இனியான்
பணையார் களந்தைப் பதியார் செயலையென் பன்னுவதே. (9)
முன்னானை கூப்பிட வோடி வந்தானை முளரிமலர்ப்
பொன்னானை யேறி யிருப்பானைப் பூழியன் கைக்கரும்பைத்
தின்னானை யென்று கல்லானைக் கிட்டானைத் திருமதுரை
மன்னானை வீதியில் ஏறிவந்தானை வணங்குதுமே. (10)
நமக்கு இன்றொரு வரம்நீர் தரவேண்டும் நலந்திகழ் குங்
குமக்கொங்கை பாகத்துக் கொச்சை யுள்ளீர் கொடுங் கோளரவிற்
கிமைக்கும் பிறையை யளித்தால் அதற்கும் இரும்பசிபோ
முமக்குந் தலைச்சுமை போமெங்கண் மானுமுயிர் பெறுமே. (11)
ஆனையுரித்து மதடனைப் போர்த்திட் டடியும்பட்டு
மானமழிந் தங்கிரந்தே திரிந்த மதுரைச் சொக்கர்
ஞானமிகப் பெற்று வாழ்வதெல்லாம் சொக்க நாயகியாள்
பானைபிடித்த முகுர்த்தத்தினால் வந்த பாக்கியமே. (12)
ஆய்முத்துப் பந்தரின் மெல்லணை மீதுன் அருமிருந்து
நீமுத்தந் தாவென்றவர் கொஞ்சும் வேளையில் நித்தநித்தம்
வேய்முத்த ரோடென் குறைகள் எல்லாம் மெல்ல மெல்லச் சொன்னால்
வாய்முத்தம் சிந்தி விடுமோ நெல்வேலி வடிவன்னையே. (13)
குதியான மனையுதைத்து உள்ளங் காலினிற் கூனிமிர
மதியாகந் தேய்த்தவ் விலங்கேசன் மாமுடி பத்துநக
நுதியான் மிதித்து முயலகன் மேனி நுறுங்க வின்னு
மிதியா நின்றால் அருளெங்கே சொக்கேசர் தம் மெல்லடிக்கே. (14)
மண்ணென்ற மண்டலம் எல்லாம் புரக்கும் வழுதி சற்றுந்
தண்ணென்ற நெஞ்சம் தரித்திலனே தனுவேடன் எச்சில்
உண்ணென்ற போதுண்டவர் சொக்கர் பாதியுடலம் பச்சைப்
பெண்ணென் றறிந்து மடித்தான் எவ்வாறு பிரம்பு கொண்டே. (15)
இன்றொக்க வேண்டில் எவ்வாறு ஒக்குமோ எழில்சேர் களந்தைக்
குன்றொக்குங் கோபுரங் கோபுர மொக்கும் அக்குன்றது போல்
அன்றொக்க வேண்டும் என்னல் வினை தீவினை யாமிரண்டும்
என்றொக்குமோ இனித்தென் களக்காடனை யான் பெறவே. (16)
மாதாம் படியுண்டு மெய் சிவந்தான் குழல் வைத்து இசைத்துச்
சேதாம் பலங் கனிவாய் சிவந்தான் செம்மலர்த் திருவின்
சூதாந் தனத்தைத் துரஞ்சிவந்தான் ஐவர் தூதுசென்று
பாதாம் புயம் சிவந்தான் சிவந்தான் மல்லைப் பல்லவனே. (17)
பாடும் தமிழ்க்குச் சிவந்து எழுந்தான் மல்லைப் பல்லவர் கோன்
காடும் செடியும் திரியாது இரட்டைக் கடுக்கன் செய்து
போடும் பொழுதென்ன பூட்டகமாய் அற்பப் புல்லரைக் கொண்
டாடும் பொழுதிரு கன்னத்திலே நின்று அடிக்கின்றதே. (18)
கால் தெண்டனிட்ட கனங் குழலாளை யென்கண் மணியைத்
தேன் தொண்டை வாய்ச்சியைத் தென்கூடல் வாழ்சிறு பெண்பிள்ளையை
யான் தெண்டனிட்ட பொழுதே இயமம் எனக்குமடி
யேன் தெண்டனிட்ட விண்ணப்பம் என்றோலை யெழுதுவனே. (19)
மற்றோர் ஒருவரைக் கண்டது உண்டோ சத்திய வாசகராய்
உற்றோர் கழஞ்சு வெண்ணெய்க் கீன்றதாய்க் கொருகோடி பொய்கள்
சொற்றேனுந் தாழைமலர் சாட்சி யென்று சொன்னோனும் அல்லால்
கற்றோர்கள் வம்மின்கள் சென்மன்கள் போமின் களந்தையிலே. (20)
அண்டத் தமரரும் மாயனும் வேதனும் அந்தணரும்
பண்டெத்தனை தவம் செய்தனரோ மணப் பந்தலிலே
துண்டப் பிறையணி சொக்கர் கைத்தாலிக்கு நீதுணிந்து
கண்டத்தை நீட்டினையே கூடல் வாழும் கயல் கண்ணியே. (21)
அற்பீன்ற தாயென்று உனைப் பணிந்தால் என்ன வதியெல்லாம்
பொற்பீன்ற பூஷணம் போல் குறித்தாய் புகழ்க் கூடலில் வாழ்
கற்பீன்ற கட்டிக் கரும்பே உனக்குக் கன்னெஞ்சது தான்
வெற்பீன்ற வாசனையோ உள்ளவாறு விளம்பெனக்கே. (22)
பேயல்லவோ ஒருவேளை வரந்தந்து பேசிடுங்கல்
லாயல்லவோ நின்மனம் கெட்டியானது அற்புதந்தான்
நீயல்லவோ மதுரேசர் பங்குற்றவ ணீயெனக்குத்
தாயல்லவோ பிள்ளை நானல்லவோ சிவ சாம்பவியே. (23)
பண்டோதரிய மறை பாடும் கூடல் பசுங்கிளியைக்
கண்டு ஓதினேன் என்கவலை யெல்லாம் இனிக் காலன்றிண்டு
முண்டு ஓதி வந்திடும் போதம்மை கோயின் முன்னே திரியும்
குண்டோதரன் கண்டு கொண்டாற் றுடை தட்டிக் கொள்ளுவனே. (24)
செகத்தாய் எனவந்த தெள்ளமுதே தென்கயிலை யெனு
நகத்தார் பணியும் கயல் கணம்மே நின் நயனத்தினால்
மிகத்தான் கருநிறம் கொண்டமையாலும் விளங்குதிரு
முகத் தாமரைக் கொரு வண்டானது முத்து மூக்குத்தியே. (25)
செகமதின் மிக்க மதுரையின் மாணிக்கஞ் செட்டியதாய்
மிகமதி ரத்தினம் விற்ற சொக்கேசரை மேவி அன்பாச்
சுகமதி தந்தெனை யாள் கயல் கண்ணி நின் சுந்தரமா
முகமதி யீன்ற கதிர் மணியோ முத்து மூக்குத்தியே. (26)
பொன்னே மலையத் துசனாகிய புயல் ஈன்றெடுத்த
மின்னே யுனது வதனத்தையே வெண் மதியமெனத்
தன்னே யத்தால் ஒரு தாரகை யானது தான் விரும்பி
முன்னே கிடந்தினம் பார்க்கின்றதோ முத்து மூக்குத்தியே. (27)
வடிகொண்ட செந்தமிழ்க் கூடலில் வாழ் சொக்கர் வந்திதரும்
பிடிகொண்ட பிட்டுக்கு மண்ணே சுமந்து மகரக்
கொடிகொண்ட வெற்றித் துரைப் பாண்டியன் கைக்கொடு பிறம்பால்
அடிகொண்ட போதில் அடியாரவர் பொன்னடி கண்டதே. (28)
அக்குவடம் புனையானந்த வெள்ளத்தை அங்கயற்கண்
பக்கத் திருந்த பவளா சலத்தைப் பழம் பொருளை
முக்கன் கனியைக் கடம் பாடவிக் கண் முளைத்தெழுந்த
சொக்கைக் கண்டால் அன்றித் தீராது நெஞ்சில் துயரங்களே. (29)
பொன்போலும் கூடல் பிராட்டியைச் சேவிக்கப் போம் பொழுதில்
என்பால் வரவும் எதிர்நின்று பேசவும் என்தலைமேல்
தன்பாதம் சூட்டவும் கேட்டது எல்லாம் தந்தருளவுமே
அனபாக வந்திடுவாள் கலிகாலம் என்றஞ்சுவளே. (30)
உரையேன் உன்பேரை யுணரேன் நின்சீரை உனைக் கருதிக்
கரையேன் எவ்வாறு கடப்பேன் வினையைக் கடந்த குண
வரையே யருள்பெரு வாரிதியே மதுரா புரிக்குத்
துரையே யழகிய சொக்கே தமிழ் தந்த சுந்தரமே. (31)
முக்கட் பராபரை சொக்கப் பிரானெனு முன்னவனோ
ஒக்கச் சிறந்த கயற்கண்ணி சந்நிதி யுற்றுமிகச்
செக்கச் சிவந்த பொற்றாமரைப் பாத தெரிசனைக்கே
பக்கத் தடுத்தவர் சொர்க்கத்தினை யெட்டிப் பார்ப்பவரே. (32)
மட்டார் குழல் அங்கயல் கணம்மே யிம்மட்டென்று தொகைக்
கெட்டா தெனது துயரம் நினபால் சொல்லியே சலிக்க
ஒட்டார நீசெய்யல் ஆகாது பாருன் அடிமை தன்னை
நட்டாற்றில் கைவிட்டிடாதே பழிவெகு நாணிறகுமே. (33)
விரித்தான் சடையை மகாமேரு வாசுகி வில்லை விட்டுச்
சிரித்தான் புரத்தை யெரித்தான் பரகுரு தேசிகன் முன்
உரித்தான் கரியை யுடுத்தான் பகிரண்டத் துள்ளுலகும்
பரித்தான் மதுரை தரித்தான் சவுந்தர பாண்டியனே. (34)
மைக்கார் குழல் பெண் வடிவாளை தென்னவன் மாமகளை
அக்காளை யோன் பங்கில் ஆத்தாளை மாறங்கை யானவளைத்
திக்கார் தொழும் கயல் கண்ணாளை யோர்தினம் சேவை செய்தால்
எக்காலமும் அவர் சொர்க்காதி போகத் திருப்பவரே. (35)
வண்டிட்ட கூந்தலும் வாரிட்ட கொங்கை வரைகளுங்கற்
கண்டிட்ட சொல்லும் கயல் கண்ணி பாதமும் கைதொழுதேன்
தண்டிட்டு அடிக்கும் மறலி வந்தால் சன்னையிட்டு நகைத்
துண்டிட்டுவா சிறு பிள்ளாய் என்று ஊருக்கு அனுப்புவனே. (36)
பொன்னே பொருந் தற்புதமே பொலிந்த மென்பூந் திருவே
தென்னே சிறந்த செந்தேனே திருந்தருள் சின்மயமே
அன்னே அமுதே அருளே அமரர்க் கரும் பொருளே
மின்னே வியன் சுடரே மதுராபுரி மீனம்மையே. (37)
தேட்டேதும் இல்லை கொடுப்பாரும் இல்லை திரத்துழவில்
பூட்டேரும் இல்லை யிதெல்லாம் எம்பாலிலை பூரணவரம்
கேட்டேன் அதற்குப் பிறிது இல்லையே யினிக் கேட்கவும் நான்
மாட்டேன் உன்மேற் பழிபோட்டேன் மதுரை மனோன் மணியே. (38)
உள்ளக் கவலை யெலாம் விள்ளும் போதும் உனது மனம்
எள்ளத் தனை இரங்காது இருந்தா யெளியேன் இனிமேல்
தள்ளப் புரத்தினில் என்றாலும் போவது தானிலைப் பொன்
வள்ளத் தமுது உண்ணும் கிள்ளாய் கடம்பவன வல்லியே. (39)
எப்படி யெப்படிச் சொன்னாலும் நானிரங்கேன் எனவே
அப்படி யப்படி நீயிருக்கின்ற அதிசயத்தை
இப்படி யிப்படி யென்றாகிலும் எனக்கே தெரியச்
செப்படி செப்படி யம்மா மதுரைச் சிவா நந்தியே. (40)
செப்பத்தில் உன்னைத் தொழ ஆயிரம் கண்ணும் செல்லும் பொல்லேன்
தப்பத் தவறத் தொழுதாலும் சொக்கர் தடம் புயத்துக்
கொப்பத் திரண்ட கொங்காயுன் அவயவம் ஒன்றுக் கொன்றா
முப்பத் திரண்டு கண்வேண்டும் கண்டாயென் முகத்தினுக்கே. (41)
துடியார் கரத்து மதுரேசரே உம்மைத் துள்ளியசேற்
கொடியான் அடித்ததும் குற்றமன்றே கிழக்கோதை யிவள்
அடியாள் என்றே சுட்ட பிட்டை யெல்லாம் அள்ளி யள்ளித் தின்று
வடியா ந்தியில் கரைத்து விட்டீர் அவள் வல்வினையே. (42)
கரஞ் சொன்னங் கண்டது எந்நாளோ தொடுத்த கலிக்கெவர்கள்
உரஞ் சொன்னதோ வந்திறுத்த திவ்வேளை யுதவுனக்கே
பரஞ் சொன்னேன் இன்னம் பராமுகமே திதுபத்து லட்சம்
தரஞ் சொன்னதாய் எண்ணுவாய் சிவகாம சவுந்தரியே. (43)
ஒருபாதி மால் கொள மற்றொரு பாதி உமையவள் கொண்
டிருபாதி யாலும் இறந்தான் புராரி யிருநதியோ
பெருவாரி தியில் பெருவானில் சர்ப்பம் பிலத்தில் கற்ப
தருவான போஜ கொடை யுன்கையோடு என்கை தந்தன்னே. (44)
அரும் பாலகா முனம் பூமணம் சொல் பொருளாக உயிர்
கரும்பாம் சுவை எள்ளும் எண்ணையும் போலொத்த காதலரைப்
பெரும்பாலில் நல்லன்னம் கங்கா சலத்தைப் பிரிப்பது போல்
சுரும்பாம் புலவர் யமனாலை செக்கெனத் தோன்றினையே. (45)
அரும்பாக்கிய கொங்கை பாலாக்கியும் உங்கள் அப்பன் நெஞ்சை
இரும்பாக்கி என்னெஞ்சைப் பித்தளை யாக்கியவ் வேந்திழையைக்
கரும்பாக்கி என்னையும் வேம்பாக்கி இவ்வண்ணம் கண்டனையே
பெரும்பாக்கி மல்லவோ மகனே உனைப் பெற்றதுவே. (46)

கலவிமேற் பிரிதல்

விண்ணாக்கு மாமதி காய வெங்காம வெரி கொளுந்தப்
பண்ணாக்கு மாமொழி மாதங்கமாம் பஞ்ச பூதியம் போம்
கண்ணாக்கு மூக்குச் செவி யாக்கை யற்ற கடத்தில் அங்கம்
பெண்ணாக்கு வார்தமைப் போல் ஓதி வாரும் பிரிபவரே. (47)
உனக்கின்றி யான் செய்த குற்றம் ஒன்று இல்லை உனைப் பிரிந்தால்
வனக்குன்றில் ஏறிவிழ அறியேன் வண்மை சேர்மயிலே
எனக்கென்று வட்டம் இட்டு அண்ணாந்து விம்மி யிருக்கும் உன்றன்
தனக்குன்றில் ஏறி விழுவேன் இன்னல் குற்றடாகத்திலே. (48)
சுண்ணாம்பு தீட்ட நல்லாள் காட்ட மோதிரம் சூட்ட மலர்க்
கண்ணாரைக் கூட்ட விரனான் கிருக்கக் கதிர் கம்பி போல்
எண்ணா நடுவிரற்கே தாம் உலோபருக்கு ஏதுகண்டாய்
கண்ணார் நுதல் அண்ணல் சேய் வணிகா செந்தில் காத்தவனே. (49)
நிணம் போதத் தள்ளிப் பெரும் பூதம் போலப் பின்னேற்று செத்த
பிணம் போல் கிடந்து புரளுவர் காண் பிறர்க் கீட்டி வைத்த
பணம் போன பின்பு விவேகம் உண்டாகும் அப்பஞ்சைகள் வங்
கணம் போதும் போதும் கறுப்பா தென்மா வையிற் காவலனே. (50)
ஏவைக்கும் கூன்சிலை தொட்டான் அனங்கன் இருவிசும்பில்
தீவைக்கும் திங்கள் குடை யெடுத்தான் தென்றல் தேருகைத்தான்
காவைக்கும் கண்மணி கஸ்தூரி யீன்ற கறுப்பன் வரை
மாவைக்கும் பாவைக்கும் பூவைக்கும் போது வடு வைக்குமே. (51)
பொன்னாகத் தார்பணி மாயோன் கரந்தைப் பொறுப்பில் வரும்
மின்னாண் முகங் கண்டனஞ் சாயல் போற்பெற வேண்டி யன்றோ
வந்நாட் கமலமலர் கடன்மேரு அணிமயிலும்
தன்னால் அயன் அரி சங்கரன் வேலனைத் தாங்கியதே. (52)
குண்டைக் கொருத்தனைக் கூத்தாடும் பித்தனைக் குண்டுணியைக்
கண்டக் கருப்பனைப் பிள்ளையைத் தின்னியைக் காணவயன்
மண்டைக் கரத்தனைக் கண்ணப்பன் எனச்சிலை வாரியுண்ட
பண்டைப் பறையனையோ தேவனென்று பகருவதே. (53)
அந்தங் கரும் பள்ளி பாசாங்கு சத்தி கண்ணம் படைச்சி
நைந்த விடச்சி குறத்திக்கு மாமி நவில் வலைச்சி
சந்தம் புழுக்கச்சி பாம்பணை யோனுக்குத் தங்கச்சியாம்
இந்தப் பறைச்சியையோ சிவகாமி யென்று ஏத்துவதே. (54)
நிலம் ஏழ் அளந்த நெடுமால் பணியு நிமலர் பொன்னம்
பலமேவு தில்லைப் பதி நடராயர் பனி வரையில்
கலமே திமிங்கலமே சங்கமே நற்கயல் இனமே
சலமே சலம் சலமே யென்று தீரும் என் சஞ்சலமே. (55)
பொரடக் கயம் பிடி யென்றான் மதனுமிப் பூவையுமா
தரடக்கமுஞ் சற்று அறிந்திலளே மலர்த் தாள் வணங்கா
முரடக் கவுடக் கெடி மன்னர் வெற்றி முடி பிடுங்குங்
கரடக் களிற்று அண்ணலே வல்லை மாநகர்க் காளத்தியே. (56)
கவியாகு மாதினைப் பெற்றோன் புலவன் கற்றோன் அனையாம்
செவியாரக் கேட்டங்கு உணர்வான் சகோதரன் செந்தமி.ழ்க்கு
தவியா வருமை யறிவான் பதியவன் தான் இலையேல்
புவியாகு மண்ணுக்குள் என் பலமாம் அந்தப் பூங்கொடிக்கே. (57)
சேராத வேடன் செருப்பால் அடிக்கவும் தீண்ட உந்தண்
நீர்வாய் உமிழவும் உச்சிட்டம் போடவும் நீண்டசிலைத்
தாரால் அடிக்கவும் கண்ணீர் ததும்பவும் தாய் தமர்கள்
ஆராகிலும் இல்லையோ திருக்காளத்தி யப்பனுக்கே. (58)
ஒட்டாக ஒட்டியும் கால் பொன்னின் மாப்பொன் னுபாயமதாத்
தெட்டா திரான் பணி செய்யாது இரான் செம்பொன் மேருவினைக்
கட்டாகக் கட்டிக் கடுகளவா நிறை காட்ட வல்ல
தட்டானுக் கஞ்சியல்லோ அணிந்தான் சவன் சர்ப்பத்தையே. (59)
ஏராட்டும் பூந்தொங்கன் மோகனக் காரற்கு இனியசுகம்
பாராட்ட நானினி ஆள் அல்லவே பசுமென் குழவி
தாராட்டவும் சங்கில் பால் பிள்ளைக் கூட்டித் தடவி மஞ்சள்
நீராட்ட மையிடப் போமே எனக்குள்ள நேரமுமே. (60)

விருத்தம்

மட்டாரும் தென்களந்தைப் படிக்காசன் உரைத்த தமிழ் வரைந்த ஏட்டைப்
பட்டாலே சூழ்ந்தாலும் மூவுலகும் பரிமளிக்கும் பரிந்த வேட்டைத்
தொட்டாலும் கைமணக்கும் சொன்னாலும் வாய்மணக்கும் துய்ய சேற்றில்
நட்டாலும் தமிழ்ப் பயிராய் விளைந்திடுமே பாட்டினிடநளினந்தானே. (61)
ஆலெங்கே அங்கேயரும் பறவையால் துயிலும்
மாலெங்கே அங்கே மலர்மடந்தை – கோலஞ்சேர்
செங்கை தகை மணக்கும் செங்கொன்றை யூரனெங்கே
அங்கே யிரவலர் எல்லாம். (62)
ஊரைச் சுடுமோ உலகம் தனைச் சுடுமோ
ஆரைச் சுடுமோ அறியேனே- நேரே
பொருப்பு வட்டமான முலைப் பூவையரே யிந்த
நெருப்பு வட்டமான நிலா. (63)
நற்றோரண வீதி நண்ணும் வல்லைக் காளத்தி
கற்றோர் தமக்கு அளிக்கும் கையேகை- மற்றோர்கை
வேங்கை யலகை முகை வேட்கை பலகை நகை
காங்கை யழுகை விழுகை. (64)
போச நீயோர் புயலாப் பூமுழுதும் பொன்மாரி
வீசுவாய் அங்கதிலோர் விந்தேனும்- பேசுமென்மேல்
பட்டதிலை யென்வறுமை பாரக் குடையாகி
முட்டக் கவித்திடு தலால். (65)
காலை அரவிந்தம் கழுநீருடன் கலந்தால்
மாலை அரவிந்தம் மயக்காதோ-பாலைப்
பழிக்கின்ற மென் மொழியீர் பாண்டியன் ஆரூரை
அழிக்கின்ற தென்னோ வது. (66)