பல்லவப் பேரரசர்/அரசியல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

12. அரசியல்

நாட்டுப் பிரிவு

பல்லவப் பெருநாடு முண்டராஷ்டிரம், வெங்கோராஷ்டிரம், சாதவாஹனராஷ்டிரம், துண்டக ராஷ்டிரம் எனப் பல ராஷ்டிரங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தது. இராஷ்டிரம் பல விஷயங்களாக (ஜில்லாக்களாகப் பிரிந்திருந்தது. ஆயின், தொண்டைநாடு என்ற துண்டக ராஷ்டிரம் மட்டும் சங்க கால முதலே - இருபத்து நான்கு கோட்டங்களாகப் பிரிந்திருந்தது. அக்கோட்டங்கள்: 1. புழல் கோட்டம் 2. ஈக்காட்டுக் கோட்டம். 3. மணவிற் கோட்டம் 4. செங்காட்டுக் கோட்டம் 5. பையூர்க் கோட்டம் 6. எயில் கோட்டம் 7. தாமல் கோட்டம் 8. ஊற்றுக் காட்டுக் கோட்டம் 9. களத்தூர்க் கோட்டம் 10. செம்பூர்க் கோட்டம் 11 ஆம்பூர்க் கோட்டம் 12. வெண்குன்றக் கோட்டம் 13. பல்குன்றக் கோட்டம் 14. இலங்காட்டுக் கோட்டம் 15.கலியூர்க்கோட்டம் 16.செங்கரைக்கோட்டம் 17.படுவூர்க் கோட்டம் 18. கடிகூர்க் கோட்டம் 19. செந்திருக்கைக் கோட்டம் 20. குன்றவட்டான கோட்டம் 21. வேங்கடக் கோட்டம் 22.வேலூர்க்கோட்டம் 23.சேத்தூர்க்கோட்டம் 24. புலியூர்க்கோட்டம் என்பன.

அரச முறை

பல்லவர் அரச முறை, தந்தையிடத்திலிருந்து முதல் மகனுக்கே உரிமையாக வந்து கொண்டிருந்தது. மகன் இல்லாத இடத்துப் பங்காளிகள் அரசவுரிமை ஏற்பது வழக்கம். அரசன் திடீரெனப் பிள்ளை இன்றி இறப்பின்.அமைச்சர் முதலிய அரசியல் பொறுப்புள்ளவர் அரச் மரபில் தக்கார் ஒருவரைத் தேர்ந்தெடுத்தல் மரபு.

அரசர் குடும்பம்

பல்லவ அரசர் உத்தம அரச இலக்கணங்கள் அமையப் பெற்றவர்கள், மணிமுடி தரித்த மன்னர்கள். இக்குறிப்புகளை மாமல்லப்புரத்தில் உள்ள சிம்மவிஷ்ணு, மஹேந்திரவர்மன் இவர் தம் உருவச் சிலைகள் கொண்டு உணரலாம். பல்லவ அரசர் ஒழுக்கமும் கல்வியும் ஒருங்கே பெற்றவர்கள். மஹேந்திர்வர்மன் சிறந்த வடமொழிப் புலவன்: நூலாசிரியன், இசையாசிரியன், சிற்பம், ஒவியம் போன்ற நாகரிகக் கலைகளை வளர்த்தவன். நரசிம்மவர்மன் சிறந்த வைணவ பக்தன், செங்கோல் அரசன். மஹேந்திரன் அறிவு, ஆண்மை, அரசியல் முறை இவற்றில் ஒரளவும் குறையாமல் நரசிம்மவர்மன் பெற்றிருந்ததைக் காணில், இளவரசர் இளமையில் நல்ல முறையில் தக்க பயிற்சி பெற்று வந்தனர் என்பது அறியப்படும். அவர்களை ஈன்ற அரச மாதேவியர் கல்வி, ஒழுக்கம், சமயப்பற்று முதலியவற்றிற் சிறந்திருந்தனர் என்பது வெளியாகும்.

பல்லவர் இலச்சினை

சேரனுக்கு இலச்சினை வில்; சோழற்குப் புலி, பாண்டியற்கு மீன் சாளுக்கியர்க்குப் பன்றி. இவ்வாறே பல்லவர்க்கு நந்தி இலச்சினை ஆகும். கொடியும் நந்திக் கொடி நாணயங்களும் நந்தி முத்திரை கொண்டவை. சில் முத்திரைகளில் நந்திமீது லிங்கம் பதியப் பட்டுள்ளது. இதனால், பல்லவரது அரசியல் சமயம் சைவ சமயம் என்பது பெறப்படும். தனிப்பட்ட முறையில் பல்லவ அரசர் வைணவராகவோ, சமண ராகவோ இருக்கலாம். அரசாங்க முத்திரை கொண்ட ஒலை நந்தி முத்திரையோடுவிடப்பட்ட ஒலை ஆகும்.

அமைச்சர்

பல்லவ அரசருக்கு உதவியாக இருந்து அரசியல் நடத்தலில் அமைச்சர் சிறந்த பங்கு கொண்டிருந்தனர். மஹேந்திரன் திருநாவுக்கரசரை அழைத்துவர அமைச்சரைத் திருவதிகைக்கு அனுப்பினான் அல்லவா?

அரசன் - அவை

அரசன் அவையில் அமைச்சர், கற்றறிந்த சான்றோர். சேனைத்தலைவர், தூதுவர் முதலியோர் இடம் பெற்றிருந்தனர். சேனைத் தலைவரான பரஞ்சோதியார் அரச அவையில் ஆலோசனைச் சபையில் இடம் பெற்றவராவர்.

பல்லவர் படை

பல்லவ வேந்தர் யானை குதிரை, காலாட் படைகளை வைத்திருந்தனர். அப்படைகள் பல்லவப் பெரு நாட்டைச் சுற்றியிருந்த எல்லா அரசர். படைகளையும் வெல்லவல்ல பேராற்றல் பெற்றிருந்த்ன என்பதை முற்பகுதிகளிற் படித்தீர்கள் அல்லவா? போரில் வல்ல சாளுக்கியர் படைகளையே சிதற அடித்த ஆற்றல் பெற்ற பல்லவர் படைகளையும், அவற்றின் தலைவர்களான் பரஞ்சோதியார் போன்ற பெருவீரரையும் என்னென மதிப்பிடக் கூடும்!

படைத்தலைவர்

பல்லவர் படைத்தலைவரான பரஞ்சோதியார் வடமொழி, தென்மொழிகளில் வல்லவராக இருந்தார்; பல வகைச் சாத்திரங்களில் தேர்ச்சி பெற்றிருந்தார்; மருத்துவக்கலை நிபுணராக இருந்தார் என்ற் விவரங்களை நோக்கப் பல்லவர் படைத்தலைவர் சாதாரண வீரர் மட்டும் அல்லர் என்பதறியப்படும்.

கடற்படை

மஹேந்திரன், நரசிம்மன் காலத்தில் பல்லவரது கடற்படை நன்னிலையில் இருந்தது; கடல் வாணிகம் செழிப்புற நடந்தது; தீவுகள்மீது படையெடுத்துச் செல்லும் வன்மை பெற்றிருந்தது. அக்காலத்தில் மஹாமல்லபுரமே மிகச்சிறந்த கடற்றுறைப் பட்டினமாக இருந்தது. பூம்புகார் எனப்பட்ட காவிரிப்பூம் பட்டினமும் நாகப்பட்டினமும் துறைமுக நகரங்களாக இருந்தன. பல்லவ நாட்டு மக்கள் கிழக்கிந்தியத் தீவுகளுடனும் சீன நாட்டுடனும் வாணிகம் செய்தனர்.

ஆட்சி முறை

சிற்றரசர்

இராஷ்டிரங்களை ‘மண்டலீகர்’ என்பவர் ஆண்டுவந்தனர். பல்லவ நாட்டின் வடபகுதியான ஆந்திர நாட்டைச் சிம்மவிஷ்ணுவின் தம்பியான பீமவர்மன் மரபினர், மஹேந்திரவர்மன் முதலிய பேரரசர்க்கு அடங்கி ஆண்டுவந்தனர். தெற்கே திருக்கோவலூரைத் தலை நகராகக்கொண்டு மலைநாட்டை மலையமான்கள் என்ற ‘சித்தவடவர்’ எனப்பட்டோர் ஆண்டனர். அதற்கு அப்பாற்பட்ட திருநாவலூரைத் தன்னகத்தே பெற்ற நிலப்பகுதி திருமுனைப்பாடி நாடு எனப்பட்டது. அதனை ‘முனையரையர்’ என்பவர் ஆண்டு வந்தனர். வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு ஜில்லாக்களின் பெரும்பகுதியைப் பாண அரசர்கள் ஆண்டுவந்தனர். புதுக்கோட்டைச் சீமையைக் கொடும்பாளுரைத் தலைநகரமாகக் கொண்டு வேளிர் மரபினர் அரசாண்டனர். ‘கொல்லிமலைப் பகுதியை மழவர் மரபினர் ஆண்டுவந்தனர். கடப்பை, கர்நூல் ஜில்லாக்களின் பெரும்பகுதியை ரேநாண்டுச் சோழர் அரசாண்டனர். அவர்கள் தங்களைக் ‘கரிகாலன் மரபினர்’ என்று கூறிக்கொண்டனர். இச்சிற்றரசர் பல்லவப் பேரரசர்க்கு அடங்கியே தம் நாட்டை ஆண்டனர். பல்லவப் பேரரசர் சங்க காலத் தமிழகத்தையோ அதன் அரசியல் அமைப்பையோ சிதைக்கவில்லை; சிற்றரசர்களை ஒழித்துவிடவில்லை; சோழரது பழமையை மதித்து அவர்களைத் தனி அரசர்களாகவே மதித்துவந்தனர்.

நாடும் ஊரும்

நாடு என்பது கோட்டத்தை விடச் சிறியது; பல ஊர்களைத் தன்னகத்தே பெற்றது. அவ்வூர்கள் அடங்கிய நாட்டை ஆண்டவர் ‘நாட்டார்’ எனப்பட்டனர். ‘ஊரார்’ என்பவர் தனித்தனி ஊரவையினர். ‘ஆள்வார்’ என்பவர் பல்லவ அரசாங்க அதிகார சபையினர். இம் மூவரும் சேர்ந்தே நாடு ஊர்களைப்பற்றிய விவகாரங்களைச் செய்துவந்தனர். தனிப்பட்டமுறையில் நாட்டார்க்குச் சில அதிகாரங்கள் உண்டு; ஊரார்க்கும் அங்ஙனமே. அரசனது ஆணை வருமாயின், இம்முத்திறத்தாரும் இருந்தே அதனை நிறைவேற்றல் வழக்கம் ஊர் அவையினர் ‘பெருமக்கள்’ எனப்பட்டனர். அவர்கள் ஊர் ஆட்சியைத் திறம்பட நடத்திவந்தனர்.

கோவில் ஆட்சி

ஊர்களிலிருந்த சிறிய கோவில்களை ஊரவையாரே கவனித்துவந்தனர்; அவற்றின் வருவாய் - செலவு - விழா நடத்தல் முதலிய எல்லாவற்றையும் கவனித்துவந்தனர். பெரிய கோவில்களைத் தனி அவையார் மேற்பார்த்து வந்தனர். அவர்கட்கு ‘அமிர்த கணத்தார்’ என்பது பெயர். அவர்கள் கோவில் சம்பந்தமான எல்லாக் காரியங்களையும் கவனித்துவந்தனர். கோவில் நிலம், கிராமத் தொடர்பாகக் கோவிலில் செய்யவேண்டிய காரியங்கள் முதலியவற்றில் ஊர்ச்சபையாரைக் கலந்தே காரியங்களைச் செய்துவந்தனர். சிற்றுரர்களில் கோவில்களே உயிர்நாடியாக இருந்தன. தேவைப்பட்டபொழுது இருந்த ஊரவையாரும் தனிப்பட்டவரும் கோவில் பண்டாரத்திலிருந்து கடன்பெறல் வழக்கம். இசை, நடனம், நாடகம், சிற்பம், ஒவியம் என்ற கலைகளை வளர்க்கும் கலைக்கூடமாகக் கோவில் விளங்கியது. முக்கியமான வழக்குகள் கோவில் மண்டபத்தில் விசாரிக்கப்பட்டு வந்தன. சமய சம்பந்தமான சொற்பொழிவுகள் கோவில்களிற்றான் நடந்தன.

மடங்கள்

பெரிய கோவில்களை அடுத்து மடங்கள் இருந்துவந்தன. அவற்றில் சமயநூற் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. அவற்றைப் படித்த மாணவர்க்கும் ஆசிரியர்க்கும் உணவு வழங்க நிலதானம் செய்யப்பட்டிருந்தது. மடத்து ஆட்சியைக் கவனிக்க ஒரு வட்டத்தினர் இருந்தனர். அவர்கள் மடத்துச் சத்தப் பெருமக்கள் எனப்பட்டனர். சிறிய மடங்கள் ஆளுங்கணத்தார் அல்லது ஊரவையார் மேற் பார்வையில் நடைபெற்றன்.

தான வகை

பல்லவப் பேரரசர் வேதங்களில் வல்ல மறையவர்க்குப் பல ஊர்களை வழங்கினர். அவை ‘பிரம்ம தேசம்’ எனப் பெயர் பெற்றன. அவர்களால் கோவில்கட்கு விடப்பட்ட கிராமங்கள் ‘தேவதானச் சிற்றுார்கள்’ எனப்பட்டன. சமணர் கோவில்கட்குப் பெற்றிருந்த வரியற்ற நிலங்கள் ‘பள்ளிச் சந்தம்’ எனப் பெயர்பெற்றன. தனிப்பட்டவர் கல்விக்கு மதிப்பீந்து அளிக்கப்பட்ட நிலங்கள் அல்லது ஊர்கள் ‘பட்ட விருத்தி’ எனப்பட்டன.

அறங்கூர் அவையம்

பல்லவப் பெருநாட்டில் இருந்த பெரிய அறங்கூர் அவையங்கள் ‘அதிகரணங்கள்’ எனப் பெயர்பெற்றன. சிற்றூர் அவையங்கள் ‘கரணம்’ எனப்பட்டன. உயர் நீதிமன்றம் ‘தர்மாஸனம்’ எனப் பெயர் பெற்றது.

பலவகை வரிகள்

பல்லவ அரசாங்கம் குடிகளிடமிருந்து பலவகை வரிகள் பெற்று வந்தது. அவற்றுள் மிகச் சிறந்தது. நிலவரி ஆகும். மொத்த வருவாயில் ஆறில் ஒரு கடமை வாங்கி வந்தது. தென்னை பனைமரங்களில் கள் இறக்க வரி விதிக்கப்பட்டிருந்தது. செங்கொடி, கருசராங் கண்ணி முதலிய மருந்துச் செடிகளைப் பயிராக்கப் பணம் செலுத்தி உரிமை பெறவேண்டி இருந்தது. மருக்கொழுந்து, நீலோற்பலம் (குவளை மலர்) முதலியன அரசாங்க உரிமை பெற்றே (வரி செலுத்தியே) பயிரிட வேண்டியனவாக இருந்தன. கால்நடைகளாற் பிழைப்பவர், வேட்கோவர், வண்ணார், புரோகிதர், பலவகைக் கொல்லர் தரகர், ஒடக்காரர், செக்கார், நூல் நூற்பவர், ஆடை நெய்பவர், ஆடைவிற்பவர், பனஞ்சாறு எடுப்பவர், வலைஞர் முதலிய தொழிலாளர் தத்தமது தொழிலுக்கே ஏற்றவாறு வரி செலுத்திவந்தனர். அரசாங்கத்தில் ஒர் இடத்திலிருந்து பிறிதோர் இடத்துக்கு ஒலை போக்க வசதி இருந்தது போலும்! அவ்வசதிக்காகச் செலுத்தப்பட்ட வரி ‘திருமுகக் காணம்’ என்பது. கத்தி முதலிய போர்க் கருவிகளைச் செய்தவர் ‘கத்திக் காணம்’ என்ற ஒருவகை வரியைச் செலுத்தி வந்தனர். பறையடிப்பவர் ‘நெடும் பறை’ என்ற ஒருவகை வரி செலுத்தினர். மன்றங்களில் வழக்காளிகட்கு விதிக்கப்பட்ட தண்டம் ‘மன்றுபாடு’ எனப்பட்டது. இவை அனைத்தையும் நோக்கப் பல்லவ அரசாங்கம் குடிமக்களிடமிருந்து பல வழிகளிலும் வரியைப் பெற்றுவந்தது என அறியலாம்.

அரசாங்கப் பண்டாரம்

இதன் தலைவன் நிறைந்த கல்வியும் சிறந்த ஒழுக்கமும் உடையவனாக அமர்த்தப்பட்டான். பண்டாரத்திலிருந்து பொருள்கொடுக்க ஆனையிடுபவன் ‘கொடுக்கப்பிள்ளை’ எனப்பட்டான். அரசாங்கப் பண்டாரம் ‘மாணிக்கப் பண்டாரம்’ என்றும் பெயர் பெற்றிருந்தது.

அளவைகள்

நாழி, உறி, உழக்கு, பிடி, ஜோடு, மரக்கால், பதக்கு, குறுணி, காடி, கலம் முதலியன முகத்தல் அளவைக்கருவிகள். நிவர்த்தனம், பட்டிகா (பட்டி), பாடகம், குழி, வேலி என்பன நீட்டல் அளவைப் பெயர்களாம். கழஞ்சு, மஞ்சாடி, குன்றிமணி என்பன நிறுத்தல் அளவைப் பெயர்கள்.

நீர்ப்பாசன வசதிகள்

பல்லவ அரசர் ‘காடு வெட்டிகள்’ ஆதலால், நீர்ப்பாசன வசதிகளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்தனர். இராஜ தடாகம், மஹேந்திர தடாகம் (மகேந்திரவாடி ஏரி), சித்ரமேக தடாகம் (மாமண்டூர் ஏரி) முதலிய பெயர்களைக் காண்கையில் இவ்வுண்மை விளங்கும். தொண்டை நாடு முழுவதும் பெரிய ஏரிகள் நிரம்பிய இடமாகும். ஏரிகளிலிருந்தும் ஆறுகளிலிருந்தும் நீரைக் கொண்டு செல்ல வாய்க்கால்கள் வெட்டப்பட்டிருந்தன. பெரும்பிடுகு வாய்க்கால், வைரமேகன் வாய்க்கால் என்ற பெயர்களைக் காண்க. இந்த ஏரிகளையும் கால்வாய்களையும் கவனிக்க ஏரி வாரியப் பெருமக்கள் ஊர்தோறும் இருந்துவந்தனர்.

நாணயங்கள்

பல்லவர் நாணயங்கள் செம்பு, வெள்ளி, பொன் இவற்றால் ஆனவை. மஹேந்திரன் காலத்தில் பொற்காசுகள் வழக்கில் இருந்தன; நரசிம்மன் காலத்திலும் அங்ஙனமே. அவற்றுள் பழங்காசு என்பது வாசி (வட்டம்) இன்றிச் செல்லவல்லது. புதுக்காசுகள் வாசியோடு செல்லுபடி ஆயின. நரசிம்மவர்மன் காலத்தவரான திருஞானசம்பந்தரது,

“வாசி திரவே காசு நல்குவீர்”

என்னும் திருவிழிமிழலைத் திருப்பதிகம் இவ்வுண்மையை உணர்த்தவல்லது.

***