பல்லவப் பேரரசர்/சமய நிலை

விக்கிமூலம் இலிருந்து

11. சமய நிலை

பல்லவ நாட்டுச் சமயங்கள்

மஹேந்திரவர்மன் வரைந்துள்ள மத்தவிலாசத் தாலும் சைவ சமயக் குரவர் பாடியருளிய முதல் ஆறு திருமுறைகளாலும் ஹியூன்-ஸங் எழுதிவைத்த குறிப்புகளாலும் - பல்லவப் பெருநாட்டில் சமணம், பெளத்தம், சைவம், வைணவம் என்னும் சமயங்கள் இருந்தமை தெளிவாகும். சைவத்தில் காபாலிகம், பாசுபதம், காலா முகம் முதலிய உட்பிரிவுகள் இருந்தன என்பதும் வெளியாகின்றது.

சமண சமயம்

இது சுவேதாம்பர சமணம், திகம்பர சமணம் என இருவகைப்படும். இவற்றில் திகம்பர சமணமே தீவிரமான சமயக்கொள்கைகைள உடையது. அதனைச் சேர்ந்த துறவிகளில் ஒருவராகவே திருநாவுக்கரசர் இருந்தார். திருநாவுக்கரசர் சைவராகத்திற்குமுன் இவர்கள் செல்வாக்கு தமிழ்கம் முழுவதும் நன்றாகப் பரவி இருந்தது. இவர்களை மஹேந்திரன் உள்ளிட்ட பல்லவ அரசர் சிலர் ஆதரித்துவந்தனர். மஹேந்திரன் சைவன் ஆனது முதல் சமணர் செல்வாக்கு ஒடுங்கிவிட்டது. ஆயினும், தென்னார்க்காடு ஜில்லா, வடஆர்க்காடு ஜில்லா, புதுக்கோட்டைச்சிமை, தஞ்சாவூர் ஜில்லா, செங்கற்பட்டு ஜில்லா ஆகிய இவ்விடங்களில் அங்கங்குச் சமணர் வாழ்ந்துவந்தனர். சமணருள் பெண் துறவிமார் உண்டு. அவர்கள் கந்தியர், குர்த்திமார் எனப்பட்டனர். அவர்களைக்கொண்ட மடங்கள் சில: பல்லவ நாட்டில் இருந்தன. சமணர்கள் பாலி, வடமொழி நூல்களில் வல்லவர்கள் தர்க்கவாதத்தில் இணையற்றவர்கள்.

பெளத்த சமயம்

பெளத்தர்கள் அசோகன் காலமுதல் தமிழ்நாட்டில் வாழ்ந்துவந்தார்கள். அவர்கள் சமயக் கொள்கைகள் நாட்டில் நன்றாகப் பரவி இருந்தன. சங்க காலச் சோழர், காஞ்சியில் பெளத்த சம்யத்தைப் பெருமைப் படுத்தினார்கள். மணிமேகலை என்பவள் பெளத்த பிக்ஷுணியாக இருந்து காஞ்சியில் புத்தபீடிகை ஒன்றை அமைத்தாள்; அறம், செய்துவந்தாள். ஹியூன்-ஸங் காலத்தில் காஞ்சி நகரத்தில் பெளத்த ஸ்தூபிகள் பழுதுபட்டுக் கிடந்தன; பல்லவ நாட்டில் நூறு பெளத்த மடங்கள் இருந்தன. பதினாயிரம் துறவிகள் இருந்தனர். எனினும், பெளத்தம் அப்பொழுது வீழ் நிலையிற்றான் இருந்தது. பெளத்த துறவிகளுட் பலர் ஒழுக்கம் கெட்டிருந்தனர் என்பது மஹேந்திரன் கருத்து என்பது, அவனது நாடக நூலிலிருந்து வெளிப்படுகின்றது.

பல்லவ மன்னர் சமணம், சைவம், வைணவம் ஆகிய சமயங்கட்கு ஆதரவு காட்டினர் - கோவில்கள் அமைத்தனர் என்பதற்குச் சான்றுகள் கிடைக்கின்றன; ஆயின்; அவர்கள் பெளத்தத்தை ஆதரித்தனர் என்பதற்குச் சான்று கிடைப்பது அரிதாக இருக்கின்றது. இதனால், பல்லவர் காலத்தில் பெளத்தம் அரசியல் செல்வாக்கை இழந்துவிட்டது என்னலாம். பல்லவர் செல்வாக்குப் பெற்ற சம்யங்கள் இரண்டே ஆகும்.அவை சைவம், வைணவன் என்பன.

வைணவம்

நிலத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம்,நெய்தல் என்று தமிழன் பிரிவினை செய்த அன்றே திருமால் முல்லை நிலக் கடவுளாக வழிபடப்பட்டான். அஃதாவது, தமிழர்க்கு அறிவு வந்து திணை வகுக்கத் தொடங்கிய காலமுதல் இன்றுவரை தமிழ் நாட்டில் வைணவம் இருந்து வருகின்றது என்பதாம். அச்சமயம் இருந்ததைச் சங்கநூல்களாலும் அறியலாம். முதல் ஆழ்வார். மூவர் அருளிய அருட்பாடல்களால் வைணவ சமயம் நாட்டிற் பெற்றிருந்த செல்வாக்கை நன்குணரலாம். பல்லவ மன்னருள் முதற் காலப் பல்லவன் ஒருவன் மனைவியான சாருதேவி என்பவள் நாராயணன் கோவிலுக்கு நிலதானம் செய்ததை முன்னரே குறிப்பிட்டோம் அல்லவா? இடைக்காலப் பல்லவருள் விஷ்ணுகோபன் முதலியோர் தங்களைப் பரம ‘பாகவதர்’ என்று கூறிக்கொண்டனர். சிம்ம விஷ்ணு பாகவத உத்தமன். அவன் மகனான மஹேந்திரன் சைவன். அவன் மகனான நரசிம்மவர்மன் பரம பாகவதன். பல்லவ் அரசருள் பெரும்பாலும் தந்தை சைவனாயின் மகன் வைணவனாக இருந்துவந்தான் என்னலாம். பல்லவ அரசர் இந்த இரண்டு சமயங்களையே தம் கண்களாகக் கருதி வளர்த்துவந்தனர்.

சைவம்

சைவ சமயம் பல்லவர் காலத்தில் பெருஞ்சிறப்புற்றது. மஹேந்திரன் கால முதல் பல்லவப் பெருநாட்டில் சைவம் புத்துயிர் பெற்று வேரூன்றித் தழைத்துச் சிறப்படைந்தது. அவன் காலத்தவரான திருநாவுக்கரசர் தம் திருப்பதிகங்களாலும், தீவிரத் தொண்டினாலும், பிரயாணத்தாலும் தொண்டை நாட்டையும் சோழநாட்டையும் சைவசமயம் ஆக்கினார். அவருக்கு முனிவரும் பல்லவனும் செய்த கொடுமைகள், அவற்றை அவர் தமது திருத்தொண்டின் உறைப்பாலே வென்றமை ஆகிய செய்திகள் நாடெங்கும் பரவின; மக்கள் திருநாவுக்கரசரைக் கண்கண்ட தெய்வமாகக் கொண்டாடினர். அரசனும் சைவனானான் என்றது கேட்ட மக்கள் உள்ளம் சைவத்திற் பாய்தல் இயல்புதானே திரளான மக்கள் சைவத் தொண்டர்கள் ஆயினர். நாடு முழுவதும் சைவப் படையெழுச்சி ஏற்பட்டது. சிவத்தலங்கள் சிறப்படையத் தொடங்கின. அக்காலத்தில் சீகாழியிற் பிறந்த திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசர்க்கு உதவியாக இருந்து, சோணாடு முழுவதும் பன்முறை சுற்றிச் சைவப்பயிரைத் தழையச் செய்தனர். இவ்விருவரைச் சூழ்ந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அணி அணியாக நாடு முழுவதும் நடந்தனர்; இருநூற்றுக்கு மேற்பட்ட சிவத்தலங்களைத் தரிசித்துப் பாடல்கள் பாடினர். இவர்கள் பண்ணோடு பாடி ஆடினதால் மக்கள் பண்ணிலும் பக்தியிலும் ஈடுபட்டு மகிழ்ந்தனர். சைவனான மஹேந்திரவர்மனும் வைணவனான நரசிம்மவர்மனும் கோவில்களை நன்முறையில் வைத்துக் கோவில் ஆட்சியைக் கவனித்து வந்தமையாற்றான், இந்நாயன்மார்சென்ற கோவில்களில் எல்லாம் சிறப்புப் பெற்றனர்.

பிற நாயன்மார்கள்

திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் வாழ்ந்த, காலத்தில் மஹேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த நாயன்மார் இவராவர்:(1) பரஞ்சோதியார் என்ற சிறுத்தொண்டர், (2) குங்கிலியக்கலய நாயனார், (3) முருக நாயனார், (4) திருநீலகண்ட யாழ்ப்பாணர், (5) திருநீலநக்கர், (6) அப்பூதி அடிகள், (7) நெடுமாறன், (8) மங்கையர்க்கரசியார், (9) பாண்டியன் அமைச்சர். குல்ச்சிறை நாயனார். முற்சொன்ன இருவரையும் கூட்டினால் நாயன்மார் பதினொருவர் ஆவர்.

நாயன்மார் - சமயத் தொண்டர்

இந்த நாயன்மாருட் பலர் தாம் தாம் வாழ்ந்த இடங்களில் இருந்த சிவன் கோவில்களில் தொண்டு செய்துவந்தனர்; மடங்கள் வைத்துச் சைவ சமயக் கல்வியைப் பரப்பி வந்தனர். தண்ணிர்ப்பந்தல், உணவுச் சாலைகளை வைத்துப் பொதுமக்கட்குத் தொண்டு செய்தனர்; வெளியூர் அடியார்கள் வந்து தங்க மடங்களில் வசதி செய்துவந்தனர். சிவனடியார்களைச் சிவபெரு மானாகவே கருதி மரியாதையுடன் நடந்து வந்தனர். இத்தகைய் நற்செயல்களால் சைவர்க்குள் ஒற்றும்ையும் சமயப்பற்றும் ஓங்கி வளர்ந்தன. சைவ சமயம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துவந்தது.

கோவில்கள்

கோவில்கள் செங்கல், மண், மரம், உலோகம் இவற்றால் ஆகியவை. இவை ஏறத்தாழ இருநூற்றுக்கு மேற்பட்டவை. இவை பல்லவர்க்கு முற்பட்ட கோவில்கள் ஆகும். இவற்றுட் பல கோவில்களில் இசையும் நடனமும் வழக்கில் இருந்தன.

“பண்ணியல் பாடல அறாத ஆவூா
“மாதர் விழாச் சொற்கவிபாட ஆவூர்”
“கோவில் விழாவில் அரங்கேறிக்கொடியிடை
மாதர்கள் மைந்தரோடும்
பாலென வேமொழிந் தேத்தும் ஆவூர்”
“தையலார் பாட்டோவாச் சாய்க்காடு”

என வரும் சம்பந்தர் கூற்றால் கோவில்களில் இசை வளர்க்கப்பட்டமை அறியலாம்.

“தேனார் மொழியார் திளைத்தங் காடித் திகழும்
குடமூக்கில்”
“வலம் வந்த மடவார்கள் நடம் ஆட....”
“முழவம் மொந்தை குழல்யாழ் ஒலி
சீராலே பாடல் ஆடல் சிதைவில்லதோர்
ஏரார்பூங் கச்சி”

எனவரும் தேவார அடிகளால் கோவில்களில் நடனம் வளர்ச்சி பெற்றதை நன்கறியலாம். இவையன்றித் திங்கள்தோறும் விழாக்கள் நடைபெற்றன. இவை அனைத்தும் மக்கள் உள்ளத்தை ஈர்த்தன. மக்கள் சைவ சமயத் தேனைப் பருகும் ஈக்கள் ஆயினர்.

சைவக் கிளைச் சமயங்கள்

சமயம் வளரவேண்டும் என்ற முறையில் அக்காலச் சமயக் குரவர் பலவகைப்பட்ட சைவக் கிளைச் சமயத்தாரையும் கலந்துகொண்டனர் போலும் அச்சமயங்கள் வடநாட்டிலிருந்துவந்து புகுந்தவை. அவையே காபாலிகம், பாசுபதம், காலாமுகம் முதலியன. அவற்றைப் பின்பற்றிய மக்களின் பெயர்களைக் காணின், அவை தேவ சோமா முதலிய வடநாட்டுப் பெயர்களாகவே காண்கின்றன. அவர்கள் சமயக் கொள்கைகட்கும். பழக்கவழக்கங்கட்கும் திருநாவுக்கரசரது அன்பு கலந்த சைவ சமயக் கொள்கைகட்கும் பழக்கங்கட்கும் சிறந்த வேறுபாடுகள் காண்கின்றன.

காபாலிகர்

இவர்கள் பைரவரை வழிபட்டவர்: மண்டை ஒடுகளை மாலைகளாக அணிந்தவர்; எல்லா உயிர் களையும்பைரவருக்குப் பலியிட்டவர்; இறைச்சியையும் மதுவையும் உட்கொண்டவர்; பெண்களைச் சக்தி என வழிபட்டவர். இவர்களால் சக்தி வணக்கம் வளர்ந்தது. காபாலிகர்க்குக் கபாலம் இன்றியமையாதது. அஃது இல்லாமல் காபாலிகன் தனித்து இரான். இவர்கள் உடல்முழுவதும் சாம்பலைப் பூசிக்கொண்டவர்.இவருள் பெண்பாலரும் இருந்தனர். இருபாலரும் வேற்றுமை இன்றிப் பழகினர். சிறுத்தொண்டர் காபாலிகச் சைவரே ஆவர்.

பாசுபதர்

இவர்கள் ‘மஹேஸ்வரர்’ என்றும் கூறப்படுவர். இவர்கள் திருநீறு அணிந்து லிங்க பூசை செய்பவர்; சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டிருப்பவர். இவருட் சிலர் மொட்டை அடித்திருப்பர் சிலர் குடுமி வைத்திருப்பர் வேறு சிலர் மயிரைக் கத்திரித்து விடுவர். சிலர் உடம்பு முழுவதும் நீறணிந்து நடமாடுவர். இவர்கள் தவமுயற்சி மேற்கொண்டவர்கள்; சிவ கணங்களிடம் நம்பிக்கை கொண்டவர்கள்; அவற்றைத் திருப்தி செய்ய உயிர்களைப் பலியிடுவார்கள், இறைச்சி படைத்து அதனையே உண்பார்கள்.

காலாமுகர்

இவர்கள் சிறந்த படிப்பாளிகள் சமய நூல்களைக் கற்ற பேரறிஞர்கள் பக்தி முறையைப் பின்பற்றியவர்கள்: இறைவனைப்பற்றிப் பாடலும் மெய்ம்மறந்து ஆடலும் மேற்கொண்டவர்கள், மந்திரம் செபிப்பவர்கள். இவருள் ஒரு சாரார் மஹாவிரதியர் (கடுநோன்பிகள்), எனப்பட்டனர். அவர்கள் மண்டை ஒட்டில் உணவு கொள்வர்; உடல் முழுவதும் பினச் சாம்பலைப் பூசுவர் அச்சாம்பலைத் தின்பர் மதுப் பாத்திரம் வைத்திருப்பர் தண்டேந்தித் திரிவர்.

இங்ஙனம் பலதிறப்பட்ட சைவர்களும் பல்லவ நாட்டில் இருந்தனர். இவர்கள் நிலையைத் திருநாவுக்கரசரும் தமது தேவார்த்திற் குறித்துள்ளனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து பல்லவ நாட்டுச் சைவத்தை வளம்பெற வளர்த்தனர் என்னல் தவறாகாது.

சைவத் திருமுறைகள்

திருநாவுக்கரசர் பாடிய திருப்பதிகங்களும் திருஞானசம்பந்தர் பாடிய திருப்பதிகங்களும் பல்லவர்கால சமய இலக்கியம் என்னலாம். இவை ஏறத்தாழ 6000-க்கு மேற்பட்ட பாடல்கள் கொண்டவை. இவை பக்திச் சுவையை ஊட்டுவதுடன், நாட்டின் ஊர்களின் இயற்கை அழகு, வரலாற்றுக் குறிப்புகள், சமணர்-பெளத்தர்-பிற நாயன்மார்களைப் பற்றிய குறிப்புகள், அக்காலத் தமிழ்நடை முதலிய பல சிறந்த பொருள் பற்றிய குறிப்புகளை நமக்கு உதவுகின்றன. இவை அனைத்திற்கும் மேலாக, அவை; ‘தமிழ்ப் பண்கள் இவை என்பதை நமக்கு எடுத்துக் காட்டும் இசை நூல்களாகவும் உதவுகின்றன. சமய நிலையை மட்டும் நோக்குமிடத்து, இவ்விரண்டு பல்லவ வேந்தர் காலமும் சைவ சமய வளர்ச்சியின் பொற்காலம் என்னலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பல்லவப்_பேரரசர்/சமய_நிலை&oldid=505286" இலிருந்து மீள்விக்கப்பட்டது