உள்ளடக்கத்துக்குச் செல்

பல்லவப் பேரரசர்/மஹாமல்லன் ஆட்சி

விக்கிமூலம் இலிருந்து

10. மஹாமல்லன் ஆட்சி

கட்டடப் பிரியன்

மஹாமல்லனான நரசிம்மவர்மன் கட்டடங்கள் அமைப்பதில் பேரவாக் கொண்டவன். அவன் சிறந்த வைணவன் ஆதலின், தந்தை எடுப்பித்த குடைவரைக் கோவில்களுக்கு அண்மையிலேயே பெருமாள் கோவில்களைக் குடைவித்து மகிழ்ச்சி கொண்டான் மல்லையை, மஹாமல்லபுரம் என்று பெயரிட்டுப் புதுக்கி அமைத்தான். அஃது அவனது ஆட்சியில் முதல்தரமான கடற்றுறைப் பட்டினமாக விளங்கியது: பல்லவர் கடற்படை தங்குவதற்கேற்ற வசதிபெற்று இருந்தது. மஹாமல்லன் பல் இடங்களிற் கோட்டைகளைக் கட்டினான். அவற்றுள் ஒன்று பல்லவப் பெருநாட்டின் தென்கோடியில் அமைந்திருந்தது. திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் உள்ள லால்குடியை அடுத்துப் பெருவள நல்லூர் இருக்கின்றது. அதனை அடுத்துப்பல்லவரம் (பல்லவ புரம்) என்னும் சிற்றுார் உள்ளது. அங்குள்ள பாறைமீது நரசிம்மவர்மன் அமைத்த கோட்டை ஒன்று இருந்தது. அஃது இப்பொழுது முழுவதும் அழிந்து மறைந்து விட்டதெனினும், அதன் அடிப்படையை இன்றும் அங்கு காணலாம். பல்லவர் காலத்துப் பெரிய செங்கற்கள் இன்றும் கிடைக்கின்றன. அப் பல்லவபுரக் கோட்டை பல்லவப் பெருநாட்டின் தென்பகுதியைக் காக்க உதவியாக இருந்தது.


சீன யாத்ரிகர்

புத்தர் பெருமான் அருள் சமயமாகிய பெளத்த சமயம் சீன நாட்டில் பரவினது. சீனர் பலர் பெளத்த பிக்ஷுக்கள் ஆயினர். அவருட் சிலர் புத்தர் பெருமான் பிறந்து வளர்ந்த இந்திய நாட்டை நேரில் கண்டு மகிழ இந்தியாவிற்கு வந்தனர்; வட இந்தியாவில் பெளத்த க்ஷேத்திரங்களாக இருந்த இடங்கட்கெல்லாம் சென்று பார்வையிட்டனர்; அங்ஙனமே தென் இந்தியாவையும் பார்வையிட முனைந்தனர். பெளத்த சமயம் பரவியிருந்த சுமத்ரா, ஜாவா முதலிய தீவுகளுக்கும் சென்றனர்: அங்கங்குத் தாம் தாம் கண்டவற்றைத் தம் குறிப்புப் புத்தகத்தில் எழுதிச் சென்றனர். அங்ஙனம் யாத்திரை செய்த சீன பிக்ஷுக்களில் குறிப்பிடத்தக்கவர் இருவர்; ஒருவர் கி.பி. நான்காம் நூற்றாண்டில் இந்தியா வந்த பாஹியான் என்பவர் மற்றவர் ஹியூன்-ஸங் என்பவர். இவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இன்டப்பகுதியில் யாத்திரை செய்தவர்.


ஹியூன்-ஸங்

இவர் இந்தியா வந்தபொழுது வட இந்தியாவில் ஹர்ஷன் பேரரசனாக இருந்தான். அவன் பெளத்த அரசன். ஹியூன்-ஸங் அவனது ஆதரவில் இருந்து வடஇந்தியா முழுவதும் பார்வையிட்டார். பிறகு இவர் தென்னாட்டை அடைந்து, சாளுக்கியன் விருந்தினராகத் தங்கி இருந்தார். அப்பொழுது சாளுக்கியப் பேரரசனாக இருந்தவன் இரண்டாம் புலிகேசி என்பவன். ஹியூன் ஸங் அங்கிருந்து பல்லவ நாட்டை அடைந்தார். இவர் காஞ்சி மாநகரில் நரசிம்மவர்மன் விருந்தினராகத் தங்கி இருந்தார். இவர் காஞ்சிக்கு வந்தது ஏறத்தாழ கி.பி. 640இல் என்னலாம். இவர் காஞ்சியைப் பற்றியும் அதனைச் சுற்றியுள்ள நாட்டைப் பற்றியும் எழுதியிருப்பவற்றுள் குறிக்கத்தக்கவை இவையாகும்.

சீனர் குறிப்பு

“திராவிட நாடு செழிப்புள்ளது; நல் விளைச்சல் தருவது; வெப்பமுள்ளது. மக்கள் அச்சம் அற்றவர்; உண்மை பேசுபவர் ஒழுக்கம் உள்ளவர்; கல்வியாளரையும் சான்றோரையும் மதித்து நடப்பவர். இந் நாட்டில் நூறு பெளத்த மடங்கள் (சங்கிராமங்கள்) இருக்கின்றன. அவற்றில் பதினாயிரம் பெளத்த பிக்ஷுக்கள் வாழ்கின்றனர். சைவ-வைணவ சமணர் கோவில்கள் ஏறத்தாழ எண்பது இருக்கின்றன. இங்குத் திகம்பர சமணர் பலர் உள்ளனர். புத்தர் பெருமான் காஞ்சிக்கு வந்து பலரைப் பெளத்தராக்கினார் என்று இந்நாட்டவர் கூறுகின்றனர். அசோக மன்னன் இங்குப் பல ஸ்தூபிகளை நாட்டுவித்தான். அவற்றுட் சில காஞ்சியைச் சுற்றிலும் பழுதுபட்டுக் கிடக்கின்றன. நாலந்தாப் பல்கலைக்கழகப் பேராசிரியரான தர்மபாலர் இக்காஞ்சிப் பதியினராம். காஞ்சி மாநகரம் ஆறு கல் சுற்றளவுடையது. அது கடற்கரையை நோக்கி இருபது கல் விரிந்துள்ள பெரிய நகரமாகும். இங்கிருந்து (மஹாமல்லபுரத்திலிருந்து) பல கப்பல்கள் இலங்கைக்குப் பிரயாண்மாகின்றன. நான் பாண்டிய நாடு சென்று கண்டேன். அங்குச் சிலரே. உண்மைப் பெளத்தராக இருக்கின்றனர். பலர் பெயர் அளவில் பெளத்தராக இருந்துகொண்டு வாணிபத் துறையில் பொருளீட்டுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். அங்குப் பெளத்த சமயம் வீழ்நிலை அடையத் தொடங்கிவிட்டது. பல இடங்களில் பெளத்த மடங்கள் இருந்தமைக்குரிய அடையாளங்கள் தெரிகின்றன.”

அக்கால அரசர்

சாளுக்கியர்

இவர்கள் விந்தியமலைக்குத் தெற்கே துங்கபத்திரை யாறு வரை பேரரசை ஏற்படுத்தி ஆண்டவர்கள். இவர்கள் பல்லவர்க்குக் கொடிய பகைவராக இருந்து, அவர்களுடன் ஒயாது போரிட்டு வந்தனர். இரண்டாம் புலிகேசி வரலாறு முன்பே குறிக்கப்பட்டதன்றோ? நரசிம்மவர்மனது நீண்ட ஆட்சியில் (கி.பி. 635-668) இரண்டாம் புலிகேசியும் அவன் மகனான முதல் விக்கிரமாதித்தனும் சாளுக்கிய அரசராக இருந்தனர். முதல் விக்கிரமாதித்தன் ஏறத்தாழ கி.பி, 655இல் அரசுகட்டில் ஏறினான். 680 வரை அரசாண்டான்.

கங்கர்

காவிரிக்குத் தென்பாற்பட்ட குடகு நாட்டையும் தென்மைசூர்ப் பகுதியையும் துர்விநீதன் ஆண்டு வந்தான். அவனுக்குப் பிறகு பூவிக்கிரமன் (கி.பி.640-670) ஆட்சி புரிந்தான்.

சேரர்

சங்க காலத்திற்குப் பிறகு இவர்கள் செல்வாக்கும் உரிமையும் மறைந்தன. இவர்கள். பாண்டியர்க்கு அடங்கிப் பெரும்பாலும் சிற்றரசர் நிலையில் இருந்து வந்தனர். பாண்டியர்க்கும் சேரர்க்கும் ஒயாது போர்கள் நடந்த வண்ணம் இருந்தன.

சோழர்

நரசிம்மவர்மன் காலத்துச் சோழன் மங்கையர்க் கரசியாரின் தந்தை அல்லது உடன்பிறந்தான் ஆவன். அவனது தலைநகரம் உறையூர். அவன் பாண்டியர்க்கு உடந்தையாக இருந்தவன்; பாண்டியன், பல்லவனை எதிர்த்த பொழுதெல்லாம். இவன் பாண்டியனுடன் சேர்ந்திருந்தான்.

பாண்டியர்

இக்காலத்துப் பாண்டியன் மாறவர்மன் அரிகேசரி என்ற நின்றசீர் நெடுமாறன் என்பவன். இவன் கி.பி. 640-இல் பட்டம் பெற்றவன் சுமார் 40 ஆண்டுகள் அரசாண்டவன். இவன் மங்கையர்க்கரசியார்க்குக் கணவன். இவன் பல்லவனைச் சங்கரமங்கை என்னும் இடத்தில் வென்றதாகப் பாண்டியர் பட்டயம் குறிக்கின்றது. இவன் மகன் கோச்சடையன் ரணதீரன் என்பவன்; மங்கையர்க்கரசியார் மகன்; அதனால் தன்னை ‘சோழ-பாண்டியன்’ என்று. கூறிக்கொண்டவன். நெடுமாறன் சைவ நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவன்.

களப்பிரர்

இவர்கள் சிம்மவிஷ்ணு காலமுதல் வலிகுன்றிச் சிற்றரசர் ஆயினர். இவருள் ஒரு பகுதியினர் தஞ்சாவூர், சந்திரலேகா (செந்தலை) முதலிய சோழ நாட்டுப் பகுதிகளை ஆண்டுவந்தனர். இவர்கள் தமிழ் அரசருடன் சேர்ந்து ப்ல்லவரை எதிர்த்து வந்தனர்.

கீழைச் சாளுக்கியர்

கோதாவரி, கிருஷ்ணையாறுகட்கு இடைப்பட்ட வேங்கை நாட்டை இரண்டாம் புலிகேசியின் தம்பியான விஷ்ணுவர்த்தனன் ஆண்டுவந்தான் அல்லவா? அவனுக்குப் பின், அவன் மகன் பட்டம் அடைந்தான். அவனைப் பட்டத்தில் ஏற்றும்பெழுதுதான் நரசிம்மவர் மனுக்கும் துர்விநீத கங்கனுக்கும் போராட்டம் நடை பெற்றது என்பது முன் கூறப்பட்டதன்றோ? அதனால், கீழைச் சாளுக்கியர் பல்லவ நாட்டின் பகைவரேயாவர்.

சுற்றிலும் பகைவர்

இங்ஙனம்பல்லவப் பெருநாட்டிற்கு வட திசையில் கீழைச்சாளுக்கியரும் மேலைச்சாளுக்கியரும் அரசாண்டு வந்தனர்; மேற்கில் கங்கரும் சேரரும் . ஆண்டு வந்தனர். தெற்கே சோழர், களப்பிரர், பாண்டியர் இருந்து வந்தனர். இவர் அனைவரும் பல்லவனுக்குப் பகைவர்களே ஆவார்கள். இப்பகைவர்களில் சாளுக்கியரும் கங்கரும் சேர்ந்து எதிர்க்கையில் தென்னாட்டரசர் தெற்கிலிருந்து எதிர்த்துவந்தனர். இங்ஙனம் பல்லவப் பேரரசர் முப்புறங்களிலும் பகைவரைப் பெற்று, அவர்கட்கு இடையில் ஏறத்தாழ முன்னூறு வருடகாலம் பேரரசராக இருந்து வாழ்ந்தனர் எனின், அவர் தம் பேராற்றலை என்னென்பது! இத்துணைப் பகையரசரையும் வென்று, வன்மைமிக்க சாளுக்கிய அரசனான இரண்டாம் புலிகேசியைத் தொலைத்துச் சாளுக்கியர் தலைநகரில் தன் வெற்றித் துணை நாட்டிய நரசிம்மவர்மன் ஆற்றலை என்னெனப் பாராட்டுவது!

சமரச சமய நிலை

மஹாமல்லன் இவ்வளவு பெரு வெற்றி பெற்றதற்கு அவனுடைய மனவலிமையும் படைவலிமையும் செங்கோலுமே காரணமாகும். அவன் சிறந்த வைணவனாக இருந்தும், அரசன் என்ற முறையில் எல்லாச் சமயங்களையும் சம நோக்குடன் கவனித்து வந்தான் இதனை, ஹியூன்-ஸங் அவனைப் பற்றிக்குறிப்பதால் அறியலாம். திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் ஆகிய சைவ சமய குரவர் இவ்வைணவ அரசன் காலத்தில்தான் தங்கள் சைவு சமயப் பிரசாரத்தை நாடு முழுவதும் செய்தனர். குடிகள் தங்கள் விருப்பத்திற்கிசைந்த சமயங்களைத் தழுவி மன அமைதியுடன் வாழ்ந்தார்கள்.