பல்லவப் பேரரசர்/குடைவரைக் கோவில்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

6. குடைவரைக் கோவில்கள்

குடைவரைக் கோவில்கள்

மஹேந்திரவர்மன் திருவதிகையில் குணபர ஈஸ்வரம் கட்டியதுபோலவேறெந்தக் கோவிலையும் கட்டியதாகத் தெரியவில்லை. ஆனால், அவன் மலைச்சரிவுகளைக் குடைந்து கோவில்களாக அமைத்தான். அத்தகைய பல கோவில்கள் தமிழ் நாடெங்கும் பரந்து இருக்கின்றன. அவை ‘குடைவரைக் கோவில்கள்’ (மலைகளிற் குடைந்த கோவில்கள்) எனப்படும். அவை பல்லாவரம், திருவல்லம், மாமண்டூர், மஹேந்திரவாடி, தளவானூர், மண்டபப்பட்டு, சீயமங்கலம், திருச்சிராப்பள்ளி, சித்தன்னவாசல், முதலிய இடங்களிற் பரவி இருக்கின்றன. இவற்றுள் மாமண்டூர், மஹேந்திரவாடி என்னும் இடங்களில் குடையப்பட்டவை பெருமாள் கோவில்கள் ஆகும். சியமங்கலம், பல்லாவரம்,திருவல்லம், தளவானுர், திருச்சிராப்பள்ளி - என்னும் இடங்களில் குடையப்பட்டவை. சிவன் கோவில்கள் ஆகும்: மண்டபப்பட்டில் உள்ளது மும்மூர்த்தி கோவில்; சித்தன்னவாசலில் இருப்பது சமணர் கோவில் ஆகும்.

கோவில் அமைப்பு

மஹேந்திரன் கோவில்களைக் கண்டவுடன் எளிதிற் கூறிவிடலாம். அவை மலை உச்சியிலோ, மலை அடியிலோ இரா; மலைச்சரிவில் சிறிது உயரத்திலேயே குடையப் பட்டிருக்கும். அங்ஙனம் குடைந்தமைத்த கோவில் நீள் சதுரமானது தூண்களும் மூர்த்தங்களை வைக்க அறைகளும் விடப்பட்டிருக்கும். மஹேந்திரன் காலத்துத் தூணின் உயரம் ஏறத்தாழ ஏழு முழம்; மேற்சதுரமும் கீழ்ச்சதுரமும் ஏறக்குறைய இரண்டிரண்டு முழம் இருக்கலாம். சில கோவில் தூண்களில் உள்ள சதுரங்களில் தாமரை மலர்கள் செதுக்கப்பட்டிருக்கும். தூண் இடையில் எட்டு முகங்கள் (பட்டைகள்) இருக்கும். தூண்களின் மேற்புறங்களிலும் விட்டத்தின் மேலும் மஹேந்திரனுடைய பட்டப்பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கும். சில கோவிற் சுவர்கள்மீது சித்திர வேலைப்பாடு காணப்படுகிறது. வாயிற்காவலர் இரண்டு கைகளை உடையவர்; அவர் வலக்கை, இடக்கைமீது இருக்கும். இடக்கை ஒரு கதை[1] மீது பொருந்தி இருக்கும். அவர்கள் உருவங்கள் ஒவ்வொரு கோவிலில் ஒவ்வொரு வகையாக இருக்கும். சில கோவில்களிற் பாகை அணிந்த காவலர் இருப்பர். கோவிற் சுவர்களிற் புராணக் கதைகளை விளக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும். லிங்கங்கள் உருண்டை வடிவின; பட்டைவடிவின அல்ல. சில கோவில், மாடங்களின் மேலுள்ள தோரணங்கள் ‘இரட்டைத் திருவாசி’ ஆகும். அவற்றில் கந்தர்வர் முதலியவர் உருவச் சிலைகள் காணப்படும்.

1. பல்லாவரம்[2]

சென்னையை அடுத்த பல்லாவரம் புகைவண்டி நிலையத்திற்கு எதிர்ப்புறம் உள்ள குன்றுகட்கு இடையே பல சிற்றுார்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று ஜமீன் பல்லாவரம் என்பது. அவ்வூரின் எதிரில் உள்ள குன்றின் சரிவில் மஹேந்திரன் குடைவித்த கோவில் இருக்கின்றது. அஃது இப்பொழுது முஸ்லிம்கள் தொழுகை இடமாக இருக்கின்றது. கோவிற் சுவர்கள் வெண்மை அடிக்கப் பட்டுப் பாறைக்கோவில் என்ற எண்ணமே உண்டாக வழியற்றிருக்கிறது. கோவிலின் நீளம் ஏறத்தாழ இருபத்து நான்கு அடி அகலம் சுமார் பன்னிரண்டு அடி. ஐந்து கற்றுண்கள் இருக்கின்றன. கோவிற் சுவரில் ஐந்து உள்ளறைகள் இருக்கின்றன. அவற்றில் மூர்த்தங்கள் வைக்கப்பட்டிருந்தன. இப்பொழுது ஒன்றுமில்லை. ஐந்து அறைகள் இருப்பதால் ஊரார் அக்கோவிலைப் பஞ்ச பாண்டவர் கோவில் என்கின்றனர். விட்டத்தின் மீது மஹேந்திரனுடைய விருதுப்பெயர்கள் வடமொழியிலும் தெலுங்கிலும் காணப்படுகின்றன.

பழைய நகரம்

இந்தக் கோவிலுக்கு எதிரே உள்ள ஜமீன் பல்லாவரம் பழைய தோற்றம் கொண்டதாகும். தெருக்கள் சிதறிக் கிடக்கும் காட்சி அதன் பழைமையை நன்குணர்த்துகிறது. ஆங்காங்குத் தோண்டும்பொழுது நாணயங்கள், பழைய பானை ஒடுகள், சவப்பெட்டிகள் கிடைத்தபடி இருக்கின்றன. இப்பழைய நகரம் மஹேந்திரன் காலத்தில் ‘பல்லவபுரம்’ என்ற பெயருடன் சிறப்புற்றிருந்தது என்பதில் ஐயமில்லை.

2. வல்லம்

இவ்வூர் செங்கற்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் போகும் பாதையில் இரண்டு கல் தொலைவில் இருப்பது. இங்கு ஒரு பாறையில் மஹேந்திரனது குடைவரைக் கோவில் இருக்கின்றது. அதன் வாயிலில் உள்ள இரண்டு தூண்களில் ஒரு கல்வெட்டுக் காண்கிறது. அது,

“பகாப்பிடுகு லளிதாங்குரன்
சத்துருமல்லன் குணபரன்
மயேந்திரப் போத்தரசன் அடியான்
வயந்தப்பிரி அரசர் மகன் கந்தசேனன்
செய்வித்த தேவகுலம்”

என்பது. இதனால், அக்கோவில் மஹேந்திரனது. சிற்றரசனான வசந்தப்பிரியன் என்பவன் மகனான கந்தசேனன் குடைவித்த கோவில் என்பது தெரிகிறது. கோவில் சிறிய உள்ளறையையும் முன் மண்டபத்தையும் உடையது. வாயிலுக்கு இரு பக்கங்களிலும் சிலைகள் இருக்கின்றன; வலப்பக்கம் ஜேஷ்டாதேவியின் சிலையும் இடப்புக்கம் பிள்ளையார் சிலையும் உள்ளன. உள்ளறையில் உள்ள லிங்கம் வட்டவடிவமானது. அறையின் வெளிப்பக்கத்தில் வாயிற்காவலர் நேர்ப் பார்வையினராய் நிற்கின்றனர். அவர்கள் கால்கள் ஒன்றன்மேல் ஒன்றாகக் குறுக்கிட்டுள்ளன; தலையில் இரண்டு கொம்புகள் காண்கின்றன. கைகள் கதைமீது பொருந்தியுள்ளன.

3. மாமண்டூர்

இவ்வூர் காஞ்சிபுரத்திற்குத் தெற்கே ஆறு கல் தொலைவில் உள்ளது. இங்கு நான்கு கோவில்கள் ஒரே குன்றில் குடையப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று மஹேந்திரன் கல்வெட்டைப்பெற்றிருக்கிறது.அங்குள்ள தூண்களும் அவற்றில் உள்ள தாமரை மலர்களும் மஹேந்திரவாடியில் உள்ளவற்றை ஒத்துள்ளன. உள்ளறையில் இருந்த பெருமாள் சிலை இப்பொழுது இல்லை. மாமண்டுர் ஏரி மஹேந்திரன் வெட்டுவித்ததாகும்.

4. மஹேந்திரவாடி

இஃது ஆர்க்கோண[3]த்திற்கு அண்மையில் உள்ள சோழசிங்கபுரம் (சோளிங்கர்) என்னும் புகைவண்டி நிலையத்திற்குத் தென்கிழக்கே மூன்று கல் தூரத்தில் இருப்பது. ஊருக்குப் பின்புறமுள்ள வெளியில் உள்ள சிறிய குன்றில் மஹேந்திரன் குடைவித்த கோவில் அழகொழுகக் காட்சி அளிக்கின்றது. வலப்புறத் தூணில் வடமொழிக் கல்வெட்டொன்று காண்கிறது. உள்ளறையில் பெருமாள் சிலை இருந்தது; இப்பொழுது இல்லை. அக்கோவில் ‘மஹேந்திர விஷ்ணுக்ருஹம்’ எனப்பட்டது. அங்கு இருந்த பழைய ஏரி மஹேந்திரன் எடுப்பித்ததாகும். அங்குள்ள கல்வெட்டில், “நல்லவர் புகழ்வதும் மக்கட்கு இன்பம் பயப்பதுமாகிய அழகிய மஹேந்திர விஷ்னுக்ருஹம்” என்னும் முராரியின் பெருங்கற்கோவில் மஹேந்திரனது பேரூரில் மஹேந்திர தடாகத்தின் கரையில் - பாறையைப் பிளந்து குணபரன் அமைத்தான்” என்பது வெட்டப் பட்டுள்ளது. இதனால் இன்றைய மஹேந்திரவாடி என்னும் சிற்றுார் மஹேந்திரன் காலத்திற் பேரூராக இருந்தது என்பதும், அக்கோவில் மஹேந்திரனால் உண்டாக்கப் பட்ட ஏரியின் கரையில் இருந்தது என்பதும் தெளிவாகும். இன்று கோவில் அருகில் ஏரி இல்லை. அது பழுதுபட்டுப் போய்விட்டது.

5. தளவானூர்

இதுதென் ஆர்க்காடு ஜில்லாவில் இருக்கிறது: பேரணி என்னும் புகைவண்டி நிலையத்திலிருந்து மேற்கே ஐந்து கல் தொலைவில் உள்ளது. இத்தளவானூருக்கு வடக்கே மாம்பட்டு என்னும் இடத்தில் பஞ்சபாண்டவர். மலையில் குடைவரைக் கோவில் இருக்கின்றது. அது ‘சத்ருமல்லேஸ்வரம்’ என்பது. உள்ளறையில் லிங்கம் இருக்கின்றது. இடப்புற வாயிற்காவலர் ஒரு கையை வணக்கம் தெரிவிப்பவரைப்போலத் தலைக்குச் சரியாக உயர்த்தி நிற்கின்றனர். மற்றவர் கதைமீது கைவைத்து நிற்கின்றனர். தூண்கள் மீது திருவாசி எனப்படும் ஒருவகைத் தோரணம் செதுக்கப்பட்டுள்ளது. அஃது இரு பக்கங்களிலும் உள்ள மகரமீன்களின் வாய்களிலிருந்து வெளிப்பட்டு நடுவில் உள்ள ஒரு சிறிய மேடையில் கலக்கின்றது. அம்மேடைமீது கந்தர்வர் இருக்கின்றனர். மகரமீன்களின் கழுத்து மீதும் அவர்கள் காண்கின்றனர்.

திருவாசியில் இரண்டு வளைவுகள் காண்பதால் அதனை ‘இரட்டைத் திருவாசி’ என்பர். கோவிலில் இரண்டு கல்வெட்டுகள் இருக்கின்றன; ஒன்று வடமொழிக் கல்வெட்டு, மற்றது தமிழ்க் கல்வெட்டு.

“தொண்டையந் தார்வேந்தன் நரேந்திரப் போத்தரையன் வெண்பேட்டின் தென்பால் மிகமகிழ்ந்து - கண்டான் சரமிக்க வெஞ்சிலையான் சத்ருமல் லேசமென்[4](று) அரனுக் கிடமாக அன்று”

என்பது தமிழ்க் கல்வெட்டாகும்.

6. மண்டபப் பட்டு

இவ்விடம் புதுவைக்கு அடுத்த சின்னபாபு சமுத்திரம் என்ற புகைவண்டி நிலையத்திற்குத் தெற்கே இரண்டு கல் தொலைவில் உள்ளது. இங்குள்ள மஹேந்திரனது வடமொழிக் கல்வெட்டு, கோவில் வாயிலிற் பொறிக்கப்பட்டுள்ளது. அது தென் இந்தியக் கோவில் வரலாற்றுக்கு மிகவும் முககியமானதாகும்.

“பிரம்மா, ஈஸ்வரன், விஷ்ணு ஆகியவர்கட்கு இருப்பிடமாகிய இக்கோவில் கல் இல்லாமலும், மரம் இல்லாமலும், உலோகம் இல்லாமலும், சுண்ணாம்பு இல்லாமலும் விசித்திரசித்தன் என்னும் அரசனால், செய்யப்பட்டது.”

இக்கோயிலில் மூன்று உள்ளறைகள் உள்ளன. வாயிற் காவலர் பிடித்துள்ள கதைகளிற் பாம்புகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

7. சீயமங்கலம்[5]

இது வட ஆர்க்காடு ஜில்லாவில் வந்தவாசித் தாலுகாவில் தேசூருக்கு ஒரு கல் தெற்கே உள்ளது. இங்குள்ள கோவில், பல இருட்டறைகளைத் தாண்டி அப்பால் உள்ளது. இங்குள்ள தூணில், ‘அவனிபாஜன பல்லவேஸ்வரம் என்னும் பெயர் கொண்ட இக்கோவில், லளிதாங்குரனால் குடையப்பட்டது’ என்பது வெட்டப் பட்டிருக்கிறது. இங்குள்ள லிங்கமும் வாயிற்காவலர் உருவங்களும் வல்லத்தில் உள்ளவற்றை ஒத்துள்ளன. குகையின் இருபுறங்களிலும் சிலைகள் சில காணப் படுகின்றன. அவை உள்ள மாடங்களின் உச்சியில் ‘இரட்டைத் திருவாசி’ என்னும் தோரணங்கள் செதுக்கப் பட்டிருக்கின்றன.


8. திருச்சிராப்பள்ளி மலைக்கோவில்

இக்கோவில், உச்சிப்பிள்ளையார் கோவிலுக்குப் போகும் பாதையில் இடப்புறம் குடையப்பட்டுள்ளது. மஹேந்திரன் சைவனாக மாறினவுடன் இங்குப் பெரிய சிவலிங்கம் வைத்துச் சிறப்பித்தான் என்பதைச் சென்ற பகுதியில் கூறினோம் அல்லவா? இங்குள்ள சுவர்களில் மிக அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. அவற்றிற் சிறந்தது கங்காதரனைக் குறிப்பது. அதன் முக ஒளியும் நிறமும் நிலையும் கவனிக்கத்தக்கவை. அது, கங்கையை அணிந்த சிவபிரானே நம் எதிரில் நிற்பது போன்ற காட்சியை அளித்து நிற்றல் வியப்பூட்டுவதாகும். சடையிலிருந்து விழுகின்ற கங்கையை வலக்கையில் தாங்கியும், பூனூலாகப் போட்டுள்ள பாம்பின் தலையை மற்றொரு கையாற் பிடித்தும், உருத்திராக்ஷ மாலையைப் பிறிதொரு கையில் பற்றியும், மற்றோர் இடக்கையை இடுப்பில் வைத்தும் சிவபெருமான் நிற்கின்ற காட்சி காணத்தக்கது. கி.பி.7-ஆம் நூற்றாண்டில் நமது தமிழகத்தில் இவ்வளவு அருமையாகக் கற்களில் உருவங்களை அமைக்கும் ஆண்மையாளர் இருந்தனர் எனின், நம் முன்னோர் நாகரிகச் சிறப்பை என்னென்பது!

9. சமணர் குகைக்கோவில்

சித்தன்ன வாசல்[6] என்பது புதுக்கோட்டைச் சீமையைச் சேர்ந்தது; திருச்சிராப்பள்ளிக்குத் தெற்கே இருபது கல் தொலைவில் இருப்பது. இது நாரத்தாமலைப் புகை வண்டி நிலையத்திலிருந்து இரண்டு கல் தூரத்தில் இருக்கின்றது. இங்குள்ள சிறிய மலைமீதுள்ள சரிவில் மஹேந்திரன் குடைவித்த சமணர் கோவில் இருக்கின்றது. முன் மண்டபத்தில் நான்கு தூண்கள் உண்டு. அவற்றுள் நடுப்பட்ட இரண்டே தனித்து நிற்கின்றன. மற்றவை பாறையின் பகுதியாக இருக்கின்றன. முன்மண்டபச் சுவரில் உள்ள இரண்டு மாடங்களில் சமணப்பெரியார் சிலைகள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று சமண தீர்த்தங்கரரான சுபார்சவநாதர் உருவம் உள் அறையின் நடுவில் தீர்த்தங்கரர் மூவர் சிலைகள் வரிசையாகக் காண்கின்றன.சுபார்சவநாதர் சிலை, உள்ளறையில் உள்ள இரண்டு சிலைகள் இவற்றின் முடிகள்மீது முக்குடைகள் காணப்படுகின்றன. முக்குடைகளைப் பெற்றவர் தீர்த்தங்கரர் என்பதும் அவர்கள் பிறவா வரம் பெற்றவர்கள் என்பதும் சமணர் கொள்கை.

தூண்கள்மீது அழகிய நடனமாதர் சிலைகள் காண்கின்றன. மேற்கூரைமீது சிறந்த ஒவிய வேலைப்பாடு காணப்படுகிறது. இவற்றின் விவரங்களை அடுத்த பிரிவிற் காண்க.


  1. கதாயுதம்
  2. ‘பல்லவபுரம்’ என்பது ‘பல்லாவரம்’ என மருவியது.
  3. ‘அரக்கோணம்’ என்பது மருவி வழங்கும் பெயர்.
  4. ‘சத்ருமல்லன்’ என்ற விருதுப்பெயருடைய மஹேந்திரன் - அமைத்த ஈஸ்வரம் (சிவன் கோவில்).
  5. ‘சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம்’ என்பது இவ்வாறு குறுகிவிட்டது.
  6. “சித்தானம் -வாஸஹ்” என்பது சிதைந்து ‘சித்தன்ன வாசல்’ என்றாயிற்று. ‘துறவிகள் இருப்பிடம்’ என்பது இதன் பொருள்” என்று அறிஞர் கூறுவர்.