பல்லவப் பேரரசர்/கலை வளர்ச்சி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

7. கலை வளர்ச்சி

நாகரிகக் கலைகள்

ஒவியம்,சிற்பம், இசை, நடனம், நாடகம் என்பன நாகரிகக் கலைகள் எனப்படும். இவற்றை வளர்க்கும் மக்கள் நாகரிக மக்கள் எனப்படுவர். இவற்றிற் பண்படாதவர் அநாகரிக மக்கள் என்று வரலாற்றிற் குறிக்கப் பெறுவர். ஒரு நாட்டு நாகரிகத்தை அளக்க இவை ஐந்தும் பயன்படுகின்றன. இவற்றைக்கொண்டு காணின், மஹேந்திரன் காலத்துத் தமிழகம் சிறந்த நாகரிகத்தில் விளங்கியது என்பதறியலாம். பல்லவப் பேரரசனான மஹேந்திரவர்மன் குடைவித்த வரைக் கோவில்களில் உள்ள ஒவியங்கள், சிற்பங்கள் இவற்றைக் கொண்டு அவன் ஒவியம், சிற்பம், நடனம் இவற்றில் ஆர்வம் உடையவன் என்பதறியலாம்; அவனுடைய கல்வெட்டுகள் சிலவற்றைக் கொண்டு அவனது இசைப் புலமையை நன்குணரலாம்; அவன் இயற்றிய மத்தவிலாஸப் பிரஹஸனம் என்னும் வடமொழி வேடிக்கை நாடகத்தைக் கொண்டு அவன் நாடகப் பிரியன் என்பதை அறியலாம். அரசனே இந்த நாகரிகக் கலைகளிற் பற்றுக் காட்டினன் எனின், அவை அவனது பெருநாட்டில் நன்முறையில் வளர்ச்சியுற்றன என்பதைக் கூறவும் வேண்டுமோ?

ஓவியக் கலை

சென்ற பகுதியிற் கூறப்பட்ட சித்தன்ன வாசல் கோவில் ஒன்றே மஹேந்திரன் கால ஒவிய வளர்ச்சியை விளக்கப் போதுமானது. அக்கோவில் தூண்கள்மீது நடனமாதர் இருவர் உருவங்கள் தீட்டப்பட்டுள்ளன. அவ்வுருவங்கள் மிகவும் அழகாக அமைந்துள்ளன. அவை இரண்டும் கோவிலுக்கு வருபவரை மலர்முகத்தோடு வரவேற்பனபோல அமைந்துள்ள அருமைப்பாடு வியப்பூட்டுவதாகும்.

கூந்தலும் அணிகளும்

வலத்துரண் மீதுள்ள ஒவியம் நன்னிலையில் இருக்கின்றது. நடிகையின் தலை வேலைப்பாடு கொண்டுள்ளது. கூந்தல், நடுவில் பிரிக்கப்பட்டு வாரித் தலைமீது முடியப் பட்டுள்ள்து. அம்முடிப்புச் சில நகைகளாலும் பல நிற மலர்க் கொத்துகளாலும் கொழுந்து இலைகளாலும் அழகு செய்யப்பட்டுள்ளது, கண்ணைக் கவரத்தக்கதாக இருக்கின்றது. கல் இழைக்கப்பெற்ற காதணிகள் வளையங்களாகத் தொங்குகின்றன. பலதிறப்பட்ட கழுத்தணிகள் சிறந்த வேலைப்பாட்டுடள் விளங்குகின்றன. கையில் வளையல், கடகம் முதலியன அணி செய்கின்றன. கைவிரல்களில் மோதிரங்கள் விளக்கம் செய்கின்றன.

மேலாடை

இரண்டு மேலாடைகள் காண்கின்றன. அவற்றில் ஒன்று மேலாக இடையிற் கட்டப்பட்டிருக்கிறது. மற்றொன்று. தோள் சுற்றிப் பின்னே சுற்றப்பட்டிருக்கிறது. இந்த மேலாடைகள் மிக்க வனப்புடைய தோற்றத்தை அளிக்கின்றன. இவற்றின் சுருக்கம் முதலிய அமைப்புகள் தெளிவாகவும் ஒழுங்காகவும் ஒவியத்திற் காட்டப் பட்டிருத்தல், அக்கால ஓவியக்கலை நுட்பத்தை நன்கு விளக்குவதாகும்.

மற்றொரு நடிகை

இடப்பக்கத் தூண்மீதுள்ள நடிகை உருவம் முன் சொன்னதைவிட அழகாகவும் மென்மைத் தோற்றம் உடையதாகவும் இருக்கின்றது. அவள்து மயிர்முடி முன்னதைவிடச் சிறிதளவு வேறுபட்டுக் காண்கிறது. அணி, உடைவகைகளில் வேறுபாடு இல்லை. இவ்விரு நடனமாதர்க்கும் மூக்கணி இல்லை. பல்லவர் காலப் பெண் ஒவியங்களுக்கு மூக்கணியே இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

இவற்றால் அறியத்தக்கன

இவ்விரண்டு ஒவியங்களாலும் அக்காலப் பெண்மணிகள் அணிந்துவந்த நகை வகைகள், உடுத்துவந்த உடை விசேடங்கள், செய்துகொண்ட கூந்தல் ஒப்பனை முறைகள், நடனக்கலை நுட்பங்கள் முதலியவற்றை ஒருவாறு அறிந்து இன்புறலாம்.

அரசன்-அரசி ஒவியங்கள்

வலப்பக்கத்துத் தூணின் உட்புறத்தில் அரசன் ஒருவனது தலையும் அவன் மனைவி தலையும் ஓவியமாகத் திட்டப்பட்டுள்ளன. அரசன் கழுத்தில் பலவகை மணிமாலைகள் இருக்கின்றன. காதுகளில் குண்டலங்கள் தொங்குகின்றன. தலைமீது மணிமகுடம் அழகுறக் காண்கிறது. முகம் பெருந்தன்மையும், பெருந்தோற்றமும் கொண்டதாகக் காணப்படுகிறது. இம்முகம் ஆதிவராகர் கோவிலில் உள்ள மஹேந்திரவர்மன் முகத்தை ஒத்துள்ளது. அரசி மஹேந்திரனுடைய பட்டத்து ராணியாவள். அவளது கூந்தல் ஒப்பனை செய்யப்பட்டுத் தலைமீது முடியப்பட்டுள்ளது.

கூரையில் உள்ள ஒவியம்

சித்தன்னவாசல் சிறந்த ஒவியக்கூடம் என்பதற்குப் பெரும் சான்றாக இருப்பது முன் மண்டபக் கூரை மீது
பல்லவப் பேரரசர்.pdf
பல்லவப் பேரரசர்.pdf

அழகொழுகக் காட்சியளிக்கின்ற ஒவியமே ஆகும். அவ்வோவியம் தாமரை இலைகளையும் தாமரை மலர்களையும் கொண்ட தாமரைக் குளமாகும். மலர்கட்கும் இலைகட்கும் இடையில் மீன்கள், அன்னங்கள், யானைகள், எருமைகள் இவற்றின் ஒவியங்கள் காண்கின்றன. கையில் தாமரை மலர்களைத் தண்டுடன் தாங்கியுள்ள சமணப்பெரியார் இருவரும், இடக்கையில் பூக்கூடை கொண்டு வலக்கையால் தாமரை மலரைப் பறிக்கும் சமணப் பெரியார் ஒருவரும் சித்திரிக்கப்பட்டுள்ள்னர். இந்த ஒவியக் காட்சி மிகவும் அழகானது. இது சமணர் துறக்கத்தைத் குறிப்பதாகச் சிலர் கூறுகின்ற்னர். ஒவியத்தில் காட்டப்பட்டுள்ள குளத்து நீர் அழகிய தோற்றத்துடன் விளங்குகிறது. தாமரைமலர் ஒவியங்கள் இயற்கை மலர்களைப் பெரிதும் ஒத்திருக்கின்றன. சுருங்கக் கூறின், அங்குள்ள ஒவியங்கள் காண்பவர் கண்ணையும் கருத்தையும் கவரத்தக்கவை. மஹேந்திரன் குடைவித்த முன் சொன்ன எல்லாக் கோவில்களிலும் அவன் காலத்திய ஓவியங்கள் திட்டப்பட்டு இருந்தன. அவை பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டமையால் அழிந்துபட்டன. எனினும் அவை இருந்தன என்பதற்கு அடையாளமாகக் கோவிற் சுவர்களில் வர்ணப்படைகள் இருத்தலை இன்றும் காணலாம்.

ஓவியம் திட்டும் முறை

‘கற்பாறைகள் மீது இந்த ஒவியங்கள் எவ்வாறு தீட்டப்பட்டன?’ என்று நீங்கள் கேட்கலாம் அல்லவா?

“சுவர்ப்புறம் மேடு பள்ளம் இல்லாமல் சமமாக இருப்பதற்காகச் சுவர் மீது ஒரு நெல் அளவுக்குச் சுண்ணாம்புச் சாந்து பூசப்படும். பாறை, தன் மீது திட்டப்படும் நிறத்தை ஏற்றுக்கொள்ளும் தன்மை இல்லாததாதலால், சுண்ணச்சாந்து பூசப்படும். சலித்து எடுக்கப்பட்ட பூமணல், வைக்கோல், கடுக்காய் முதலியவற்றுடன் கல்ந்து வெல்ல நீருடன் அல்லது பனஞ்சாற்றுடன் அரைக்கப்பட்ட சாந்து சுவரில் அல்லது கூரையில் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும், அதை எளிதில் பெயர்க்க முடியாது. ஈரம் காயுமுன்பே ஒவியக்காரன். மஞ்சள் கிழங்கைக்கொண்டு இரேகைகளை வரைந்துகொள்வான். சுண்ணாம்புடன் கலந்த மஞ்சள் நிறம் மாறிச் சிவப்பாகத் தோன்றும், அழியாமலும் இருக்கும்.ஒவியப்புலவன் இரேகைகட்கு நிறங்களைத் தீட்டுவான். அவன் சிவப்பு, மஞ்சள் முதலிய நிறங்களைத் தரும் பச்சிலை நிறங்களையே பயன்படுத் துவான். ஈரம் காய்ந்த பிறகு, சுவர் நன்றாய் உலர்வதற்கு முன்பே, கூழாங்கற்களைக் கொண்டு சுவர்களை வழவழப்பாக்கி மெருகிடுவான். இவ்வாறு திட்டப்படும் ஒவியம் அழியாது நெடுங்காலம், இருக்கத் தக்கதாகும்”[1]

சிற்பக் கலை

மஹேந்திரன் குடைவித்த வரைக்கோவில்கள். அவன் காலத்துச் சிற்பத்திறனை விளக்குவனவாகும். ஒவ்வொரு கோவிலிலும் உள்ள உருவச்சிலைகள், சுவர்கள் மீதுள்ள வாயிற்காவலர் உருவங்கள், புராணக் கதைகளை விளக்கும் சிற்பங்கள், திருச்சிராப்பள்ளி மலைக் கோவிலில் உள்ள அழகிய வேலைப்பாடு கொண்ட சிற்பங்கள் ஆகிய அனைத்தும் ஏழாம் நூற்றாண்டின் சிற்பக்கலை உணர்வை உலகறியச் செய்வனவாகும்.
பல்லவப் பேரரசர்.pdf

திரிசிரபுரம் மலைக்கோவிலில் உள்ள கங்காதர உருவச்சிலையின் பேரழகு ஒன்றே போதுமன்றோ? அதன் வலக்காலின்கீழ் முயலகனைக் குறிக்கும் சிறிய கற்சிலை ஒன்று காண்கிறது. கங்காதரனைச் சுற்றிலும் அடியார் நால்வர் வணங்குவது போலவும் மேற்புறம் கந்தர்வர் இருவர் பாட்டிசைத்தல் போலவும் உள்ள சிற்பங்கள் அழகியவை. சிற்றுளியால் கல்லும் தகர்ந்து கோவிலாக மாறியது; அழகும் பக்தியும் ஒருங்கே ஊட்டும் தெய்வச் சிலைகளும் அமைந்தன. இச்சிலைகள் இற்றைக்குச் சற்றேறக்குறைய 1300 ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்டவை. எனினும், இன்று செய்தனபோல வசீகரத் தோற்றத்துடன் இவை காணப்படல், தமிழ்நாட்டுச் சிற்பக்கலையின் பழைய தேர்ச்சி முறையை நன்குணர்த்துவதாகும்.

இசைக் கலை

மஹேந்திரவர்மனது பல்லாவரம் குடைவரைக் கோயில் கல்வெட்டில் ‘சங்கீர்ண ஜாதி’ என்பது. காணப்படுகிறது. அது பல்லவனுடைய விருதுப் பெயர்களுள் ஒன்றாகும். தாளவகை ஐந்தாகும். அவற்றுள் ஐந்தாவது சங்கீர்ணம் என்பது. மஹேந்திரன் அதனைப் புதிதாகக் கண்டறிந்து, அதன் வகைகளையும் ஒழுங்குகளையும் அமைத்தவன் ஆதலால், தன்னைச் . ‘சங்கீர்ண ஜாதி’ என்று அழைத்துக்கொண்டான் என்று அறிஞர் கூறுகின்றனர். இவனது குடுமியான்மலைக் கல்வெட்டு ஒன்று பலவகைப் பண்களையும் தாளவகை களையும் விளக்கி முடிவில், “இவை எட்டிற்கும் (எட்டு நரம்புகளைக் கொண்ட வீணைக்கும்) ஏழிற்கும் (ஏழு) நரம்புகளைக் கொண்ட வீணைக்கும்) உரிய” என்று முடிந்துள்ளது. இதனால், மஹேந்திரன் கண்டறிந்த பண்கள் இருவகை வீணைகட்கும் பயன்படும் என்பது தெரிகிறது.ஏழு நரம்புகளைக் கொண்டவீணையே எங்கும் இருப்பது எட்டுநரம்புகளையுடைய வீணை புதியது. அது மஹேந்திரன் கண்டு பிடித்துக் கையாண்டதுபோலும்! மஹேந்திரனை ‘இசைப்பித்தன்’ என்று சொல்லலாம். இவன் இயற்றியுள்ள மத்தவிலாசப் பிரஹசனத்தில் ஒரு நடிகன் கூறுவதாக இசை நடனங்களின் சிறப்பைக் கீழ்வருமாறு குறித்துள்ளான்: “இசை எனது செல்வம். - ஆஹா, நடிப்பவரது அழகிய நடனம் பார்க்க இன்பமாக இருக்கிறது. தாளத்திற்கும் இசைக்கும் ஏற்ப அவர்கள் திறம்பட மெய்ப்பாடுகளை விளக்கி நடிக்கின்றனர்.”

நாயன்மார் இசை

பல்லவர் வருகைக்கு முன்பே நமது தமிழ்நாட்டில் இசை மிக உயர்ந்த நிலையில் இருந்தது. தமிழுக்கே உரிய குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற ஏழு வகைப் பண்கள் வழக்கில் இருந்தன; பலவகை இசைக்கருவிகள் இருந்தன. அவை தோற்கருவி, துளைக்கருவி, கஞ்சக்கருவி என்பன. தமிழகத்தில் மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ், பேரியாழ் முதலிய யாழ் வகைகள் இருந்தன. யாழில் பாடுநர் “யாழ்ப்பாணர் எனப்பட்டனர். திருநாவுக்கரசர் காலத்தில் திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்பவர் சிறந்த யாழ் மீட்டுபவராக இருந்தார். நாயன்மார் பாடிய திருப்பதிகங்கள் பெரும்பாலும்தமிழ்ப்பண்களில் அமைந்துள்ளன. எனவே, மஹேந்திரன் காலத்தில் வீணையும் யாழும் வழக்கில் இருந்தன. தமிழிசை தமிழகத்திற் சிறப்பிடம்பெற்றிருந்தது என்பன அறியலாம்.

நடனக் கலை

இசையுள்ள இடத்தில் நடனக்கலை நன்கு வளர்ச்சியுறும், மஹேந்திரன் காலத்தில் நடனக்கலை சிறந்திருந்தது என்பதற்கு முன்சொன்ன நடனமாதர் ஒவியங்களிலிருந்தும் மத்தவிலாச நாடகக் கூற்றிலிருந்தும் நன்கறியலாம். மஹேந்திரன் காலத்தில் தில்லையில் நடராசர் சிறப்புற்று விளங்கினார். அவரது நடனத்தில் ஈடுபட்ட திருநாவுக்கரசர் பலவாறு'நடனக்கலையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். நீங்கள் பெரியவர்கள் ஆகிய பிறகு திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர். இவருடைய பதிகங்களை ஆராயின், நடனக்கலை பற்றிய உண்மைகள் பலவற்றை அறியலாம்.

நாடகக் கலை

நாடகம் என்பது தமிழிற் ‘கூத்து’ எனப்படும். அஃது அரசர்க்காடும் (வேத்தியல்) கூத்து என்றும், பொதுமக்கட்கு ஆடும் (பொதுவியல் கூத்து என்றும், இருவகைப்படும். இக்கூத்து வகைகள் தமிழ் நாட்டிற் பழையனவாகும். மஹேந்திரன் சிறந்த நாடகப்பிரியன் என்பதை அவனது நாடகநூல் உணர்த்துகிறது. இந்நூல், மஹேந்திரன் காலத்தில் பல சமயத்தாரும் தனிப்பட்ட நிலையில் வாழ்க்கை நடத்திய முறையை ஒரளவு விளங்க உரைப்பதாகும்.

கதைச் சுருக்கம்

ஒழுக்கம் கெட்ட காபாலிக சமயத்தவன்[2] ஒருவன் தன்னைப் போன்ற காபாலினி ஒருத்தியுடன் குடித்து மயங்கிக் கிடத்தல், அப்பொழுது அவன் கையிலிருந்த கபாலத்தை ஒரு நாய் கவர்ந்து ஒடுதல், அதனை அறியாத காபாலிகன் அவ்வழியே சென்ற ஒழுக்கம் கெட்டபெளத்த துறவியை வழிமறித்துப் பூசலிடல், அப்பூசலைத் தீர்க்க ஒழுக்கம் கெட்ட பாசுபதன் ஒருவன் தோன்றுதல்.இவர்கள் உரையாடல், இறுதியில் வெறியன் ஒருவனிடமிருந்து கபாலத்தைப் பெறுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நாடக ரூபமாக வரையப் பட்டுள்ளன.


  1. 1. பி.நா. சுப்பிரமணியன் ‘பல்லவ மஹேந்திரவர்மன்’, பக்.107-109.
  2. கபாலிகம், பாசுபதம் முதலியன சைவ சமயத்தின் உட்பிரிவுகள். இவற்றைச் சமயநிலை என்னும் பிரிவிற் காண்க.