பல்லவப் பேரரசர்/நரசிம்மவர்மன் போர்ச் செயல்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

8. நரசிம்மவர்மன்
போர்ச் செயல்கள்

நரசிம்மவர்மன்

இவன் ஏறத்தாழ, கிபி 635இல் பட்டம் பெற்றான் என்னலாம். இவனது வரலாறு மிகவும் முக்கியமான நிகழ்ச்சிகளைக் கொண்டது. இவன் இரண்டாம் புலிகேசியை வென்ற பெருவீரன்; அவனை வென்று, சாளுக்கியர் கோநகரையே கைப்பற்றியவன்; இரண்டுமுறை இலங்கை மீது படையெடுத்தவன்; சிறந்த கடற்படை பெற்றவன் மஹாபலிபுரத்தைப் புதுப்பித்து அதற்கு ‘மஹாமல்லபுரம்’ என்று தன் பெயரிட்டவன்; பல்லவப் பெருநாட்டின் பல பகுதிகளில் ஒற்றைக்கல் கோவில்களை அமைத்தவன்; கோட்டை கொத்தளங்களைக் கட்டியவன். இவன் காலத்திற்றான் புகழ்பெற்ற சீன யாத்ரிகரான ஹியூன்ஸங் என்பவர் காஞ்சிக்கு வந்து தங்கி இருந்தார். இப்பேரரசன் காலத்திற்றான் திருஞான சம்பந்தர் பல்லவர்க்குட்பட்ட சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் சைவத்தைப் பரப்பினார். ஆனால் நரசிம்ம வர்மனோ, தன் பெயருக்கேற்ப, வைணவத்தைப் பேணி வளர்த்தான்.

பல்லவர் - சாளுக்கியர் போர்

புலிகேசி படையெடுப்பு

மஹேந்திரனிடம் தோற்றோடின இரண்டாம் புலிகேசி அவன் இறக்கும்வரை காத்திருந்தான்; அவன் மகனான நரசிம்மவர்மன் பட்டம் பெற்ற சில ஆண்டுகட்குள், பண்பட்ட படை ஒன்றைத் திரட்டிக் கொண்டு, பல்லவ நாட்டின்மீது படையெடுத்தான்.

பல இடங்களிற் போர்

புலிகேசி முன்போலவே காஞ்சிக்கருகில் வந்துவிட்டான். பகைவனை வேறு இடங்களில் தாக்காது, தன் பெருநாட்டிற்குள் நன்றாகப் புகவிட்டுப் பிறர் உதவி அவனுக்குக் கிடைக்காதபடி செய்து, சுற்றிவளைத்துக் கொண்டு போரிடலே தக்கது என்ற முறையை முன்னர் மஹேந்திரன் கையாண்டான். சாளுக்கிய சேனை நெடுந்துாரம் வந்ததால் களைப்புற்றிருத்தல் இயல்பே அல்லவா? வழி நடந்து களைத்த படையுடன் சுறுசுறுப்பான பல்லவர் படை போரிடல் ஒரளவு எளிதன்றோ? காஞ்சியை அடுத்துள்ள பரியலம், மணிமங்கலம், சூரமாரம் என்னும் இடங்களில் போர்கள் நடைபெற்றன. போரின் கடுமை கூறுந்தரத்ததன்று. முடிவில் சாளுக்கியன் படை நிலைதளர்ந்து வடமேற்கு நோக்கி ஒடத் தொடங்கியது. பல்லவன் அதனை விட்டிலன். அவன் சாளுக்கியனை விரட்டிச் சென்றான்; புலிகேசி பல்லவ நாட்டைக் கடந்து தன் நாட்டிற்குள் ஒடி ஒளிந்தான். எனினும், பல்லவர் படை விட்டிலது. அது சாளுக்கிய நாட்டைப் பாழாக்கி, அதன் தலைநகரமான புகழ்பெற்ற வாதாபியைக் கைப்பற்றியது; நகர நடுவிடத்தில் வெற்றித்துாண் ஒன்று நாட்டப்பட்டது. அதனில். நரசிம்மவர்மன் பெயர் பொறிக்கப்பட்டது.

இப்போரில் கலந்துகொண்டவர்

‘இரண்டாம் புலிகேசி பகை அரசர் மூவரால் தோற்கடிக்கப்பட்டான்’ என்று சாளுக்கியர் பட்டயம் கூறுகின்றது. அதில் குறிக்கப்பட்ட மூவர் யாவர்? ஒருவன் பல்லவப் பேரரசனான நரசிம்மவர்மன், மற்றொருவன் அவனது மரபினனும் ஆந்திரநாட்டைப் பல்லவனுக் கடங்கி ஆண்டுவந்த (சிம்மவிஷ்ணு தம்பி மரபினனான பல்லவ அரசனாக இருக்கலாம். மூன்றாம் அரசன் யாவன்? அவனே மானவன்மன் என்ற இலங்கை அரசன். அவன் பகைவனால் அரசிழந்து இலங்கையை விட்டுப் பல்லவனிடம் உதவிக்காக வந்தவன். அவன். பல்லவனுடன் காஞ்சியில் தங்கியிருந்த பொழுதுதான் இரண்டாம் புலிகேசி படையெடுத்தான். ஆகவே, மானவன்மன் பல்லவன் படைகளில் ஒரு பகுதிக்குத் தலைமை பூண்டு போர் புரிந்திருக்கலாம்.

பல்லவர் பட்டயங்கள்

இப்பல்லவர் சாளுக்கியர் போரைப்பற்றிப் பல்லவர் ப்ட்டயங்கள் கூறுவன கவனிக்கத்தக்கன.

1. “இப்பல்லவர் மரபில், கீழ்மலையிலிருந்து! சூரியனும் சந்திரனும் தோன்றினாற்போல நரசிம்மவர்மன் தோன்றினான். அவன் வணங்காமுடி மன்னர்களுடைய முடியில் இருக்கும் சூடாமணி போன்றவன்; தன்னை எதிர்த்த யானைக் கூட்டத்திற்குச் சிங்கம் போன்றவன்; நரசிங்கப் பெருமானே அவதாரம் எடுத்தாற் போன்றவன்; சேர, சோழ, பாண்டிய, களப்பிரரை அடிக்கடி முறியடித்தவன்; பல போர்கள் புரிந்தவன். அப்பெருமகன் பரியலம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடங்களில் நடந்த போர்களில் புலிகேசியைத் தோற்றோடச் செய்தவன். அவன் ஒடும்பொழுது ‘வெற்றி’ என்னும் சொல்லை. அவனது முதுகாகிய பட்டயத்தில் எழுதியவன்.”[1]

2. “நரசிம்மவர்மன் வாதாபியை அழித்த அகத்தியனைப் போன்றவன் அடிக்கடி வல்லப அரசனைப் பரிய்லம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடங்களில், நடந்தபோர்களில் வென்றவன் வாதாபியை அழித்தவன்”[2]

3. “விஷ்ணுவைப் போன்ற புகழ்பெற்ற - நரசிம்மவர்மன் தன் பகைவரை அழித்து, வாதாபியின் நடுவில் தன் வெற்றித்துணை நாட்டியவன்.”[3]

வாதாபி கொண்டது

“வாதாபி என்ற அசுரனைக் கொன்றழித்த அகத்தியனைப் போன்றவன் நரசிம்மவர்மன்” என்று பட்டயம் குறிப்பதால், நரசிம்மவர்மன் வாதாபியை அழித்தான் என்பது பெறப்படுகின்றது. இதனால், பல்லவன், சாளுக்கியன் மீதிருந்த பகைமையை அவனது தலைநகரத்தை அழித்துத் தீர்த்துக்கொண்டான் என்பது தெரிகிறது. ஆனால் முழு நகரமும் அழிக்கப்படவில்லை. அழகிய பழைய கட்டடங்கள் பல பிற்காலத்திலும் இருந்தன. இப்படையெடுப்பு ஏறத்தாழ கி.பி. 642இல் நடந்தது. நரசிம்மவர்மன் நாட்டி வைத்த வெற்றித் தூணில் அவனது 13-ஆம் ஆட்சியாண்டு குறிக்கப்பட்டுள்ளது. எனவே, வாதாபி நரசிம்மவர்மன் கையில் 13 ஆண்டுகளேனும் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. இவ்வெற்றிக்குப் பிறகு நரசிம்மவர்மன், “வாதாபி கொண்ட நரசிம்மவர்மன்” என்று அழைக்கப்பட்டான்.

படைத்தலைவர் பரஞ்சோதியார்

“நரசிம்மவர்மன் ஆட்சியில் படைத்தலைவராக இருந்தவர் பரஞ்சோதியார் என்பவர். அவர் மஹாமாத்திரர் மரபில் வந்தவர். அவரே பல்லவர் சாளுக்கியர் போரில் கலந்துகொண்டவர்; சாளுக்கியனைத் துரத்திக்கொண்டே சென்று வாதாபியைக் கைப்பற்றி யானைகளைக் கொண்டு அழித்தவர்; அங்கிருந்த யானைகள் - பரிகள் - பொன் - மணிகள் முதலியவற்றைக் கைப்பற்றித் தம் அரசனிடம் சேர்ப்பித்தனர்” என்று பெரிய புராணத்துள் சேக்கிழார் கூறியுள்ளார்.

“மன்னவர்க்குத் தண்டுபொய் வடபுலத்து வாதாபித்
தொன்னகரம் துகளாக்த் துளைநெடுங்கை வரையுகைத்தும்
பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும்
இன்னன எண்ணிலகவர்ந்தே இகலரசன் முன்கொணர்ந்தார்.”

இப்போருக்குப் பின்னர் இப்பரஞ்சோதியார் அரசனிடம் பல வரிசைகள் பெற்றுத் தம் சொந்த ஊராகிய திருச்செங்காட்டங்குடியிற் குடியேறினார்; அங்குக் ‘கணபதி ஈஸ்வரம்’ என்ற சிவன் கோவிலைக் கட்டிச் சிவ வழிபாட்டில் காலம் கழித்து வந்தார்.

பல்லவர் - பாண்டியர் போர்

நரசிம்மவர்மன் ‘சோழ, பாண்டிய, களப்பிரரை வென்றவன்’ என்று முன்சொன்ன பல்லவர் பட்டயம் பகர்கின்றது. அக்காலத்தில் இருந்த பாண்டிய மன்னன் நெடுமாறன் (கி.பி.640-680) என்பவன். அவன் மனைவியே சைவப் பெண்மணியாரான மங்கையர்க்கரசியார். ஆகவே, நெடுமாறன் காலத்தில் மங்கையர்க்கரசியார் தந்தை அல்லது உடன்பிறந்தான் சோழ அரசனாக இருந்திருத்தல் வேண்டும். இவர்கள் சோழ நாட்டைக் கவர்ந்த பல்லவரை எதிர்க்கத் தக்க சமயம் பார்த்து வந்தனர் போலும்! புலிகேசி வடக்கே இருந்து பல்லவ நாட்டைத் தாக்கிய பொழுது, இவர்கள் ஒன்றுசேர்ந்து தெற்கே இருந்து பல்லவனைத் தாக்கி இருக்கலாம். அதனாற் போலும், நரசிம்மவர்மன் சாளுக்கியனைத் துரத்திக் கொண்டு வாதாபி செல்லாமல், பரஞ்சோதியாரை அனுப்பிவிட்டுத் தான் தமிழரசரை எதிர்க்க நின்றுவிட்டான் ‘நெடுமாறன் சங்கரமங்கையில் பல்லவனைப் புறங்கண்டவன்’ என்று பாண்டியர் பட்டயம் குறிக்கின்றது. இதனால், இரண்டோர் இடங்களில் பாண்டியன் வெற்றி பெற்றிருக்கலாம்; ஆயினும் தமிழரசர் முயற்சி பலன் அளித்திலது.

பல்லவர் - கங்கர் போர்

நரசிம்மவர்மன் காலத்தில் கங்க அரசனாக இருந்தவன் துர்விநீதன் என்ற முதியவன். அவன் சிம்மவிஷ்ணு காலத்திலும் மஹேந்திரவர்மன் காலத்திலும் கங்க அரசனாக இருந்தவன். அவன் தன் மகளை இரண்டாம் புலிகேசிக்குக் கொடுத்து உறவு கொண்டாடினான். இரண்டாம் புலிகேசி மாண்ட பிறகு அரச பதவியைப்பற்றி அவன் மக்கள் மூவர்க்குள் போர் நடந்தது. அவர்கள் சந்திராதித்தன், ஆதித்தவர்மன், (முதலாம்) விக்கிரமாதித்தன், என்பவர்கள். சந்திராதித்தன் திடீரென இறந்தான். எஞ்சியிருந்த இருவரும் பூசல் இட்டனர். அவருள் விக்கிரமாதித்தன் தன் பாட்டனான கங்க அரசன் துணையை நாடினான். ஆதித்தவர்மன் பல்லவன் உதவியை விரும்பினான். பல்லவன். ஒரு படையை அவனுடன் அனுப்பினான் போலும் முடிவில் விக்கிரமாதித்தன் சாளுக்கிய அரசன் ஆனான். பல்லவனால் அனுப்பப் பட்ட படையுடன் ஆதித்தவர்மனைத் துர்விநீதன் வென்றமையால், தான் நரசிம்மவர்மனையே வென்று விட்டதாக அவன் பட்டயத்திற் குறித்துக்கொண்டான். அவன் பல்லவனையே வென்றது உண்மையாக இருப்பின், கங்கனது செல்வாக்குப் பல்லவ நாட்டிற் பர்வி இருக்கவேண்டும் அல்லவா? அங்ஙனம் ஒன்றும் - ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

இலங்கைப் போர் - I

புலிகேசியுடன் நடந்த போரில் நரசிம்மவர்மனுக்கு உதவியாக இருந்த மானவன்மன் இலங்கை அரசன் என்று சொன்னோம் அல்லவா? அவனை அட்டதத்தன் என்றவன் துரத்திவிட்டு அரசைக் கைப்பற்றிக் கொண்டான். அதனால் மானவன்மன் பல்லவன் உதவியை நாடினான். பல்லவன் அவனுடைய நற்பண்புகளில் ஈடுபட்டு மகிழ்ந்தவன்; ஆதலால் அவனுக்கு உதவிசெய்ய விரும்பித் தன் கப்பற்படையை அவனுடன் இலங்கைக்கு அனுப்பினான். படை உதவிபெற்ற மானவன்மன் இலங்கையில் இறங்கிப் பகைவனுடன் போரிட்டான் முதற்போரில் வெற்றி பெற்றான்; அடுத்த போரில் தோல்வியுற்றான். தம் வேந்தன் நேரே இல்லாததால் பல்லவன் படையும் கடுமையாகப் போர்புரியவில்லை போலும்! மானவுன்மன் மீட்டும் காஞ்சிக்குத் திரும்பினான்.

இலங்கைப் போர் II

அவனது தோல்வியைக் கேட்ட பல்லவன் மனம் வருந்தினான்; வன்மை மிக்க படைவீரரை மாமல்லபுரத்திற்கு அனுப்பினான். அரசனும் அங்குச்சென்றான். கப்பல்கள் வீரரை ஏற்றிச்செல்லக் காத்திருந்தன. வேந்தன் தானும் அவ்வீரருடன் கப்பலில் வருவதாக நடித்தான். எல்லா வீரரும் உணர்ச்சியோடு பிரயாணம் செய்தனர்; இலங்கையை அடைந்தனர். தம் அரசன் கப்பலில் இருப்பதாக எண்ணிக்கொண்டு, கடுமையாகப் போரிட்டனர்; அட்டதத்தன் படைகளை அலற அடித்தனர். அட்டதத்தன் மறைந்தான். மானவன்மன் முன்போல் இலங்கை அரசனாக முடிசூட்டப்பட்டான்.

நரசிம்மவர்மனது இலங்கை வெற்றியைப்பற்றிப் பல்லவர் பட்டயம் ஒன்று, “நரசிம்மவர்மன் இலங்கையில் பெற்ற வெற்றி, இராமன் இலங்கையில் பெற்ற வெற்றியைப் போன்றது,” என்று பாராட்டியுள்ளது.


  1. கூரம் பட்டயம்.
  2. உதயசந்திர மங்கலப் பட்டயம்.
  3. வேலூர்ப் பாளையப் பட்டயம்.