உள்ளடக்கத்துக்குச் செல்

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்/நகரமைப்பு

விக்கிமூலம் இலிருந்து

இயல் ஐந்து

நகரமைப்பு

புதிய கற்காலத்தின் தொடக்கத்தில் ஓரிடத்தே தங்கி வாழப் பழகிப் பயிர்த் தொழில் செய்யத் தொடங்கிய மனிதன் வீடுகள் கட்டினான். பல வீடுகள் கட்டப்பட்ட போது, ஒரு வீட்டுக்கும் மற்ற வீடுகளுக்கும் இடையே தகராறுகள் எழாமல், போக வரப் பொதுவான வீதி தேவைப்பட்டது. நடுவே சாவடி,அம்பலம்,கோயில் போன்ற பொது இடங்களுக்கு நிலம் ஒதுக்கினார்கள்.

வீடுகளின் வரிசைக்கு நடுவே ஆறு போல் கிடைத்த அகன்ற நெடிய இடம் தெரு ஆயிற்று. இவ்வாறு பலப்பல தெருக்கள் ஊரில் உண்டாயின. ஊர்கள் ஏற்பட, ஏற்பட முந்திய ஊரிலே நேர்ந்த பொது வசதிக் குறைகள் அடுத்த ஊரிலே நேராமல், வீடுகளும், வீதிகளும், பொது இடங்களும் பொருத்தமாகக் கட்டப்பட்டன. ஊரின் பொது வசதிகள் கவனிக்கப்பட்டன. கட்டப்பட்ட முறையும், திட்டமும் (Planning) நாளுக்கு நாள் மெருகேறின. இந்த மெருகும், அநுபவமும் நகரங்களை அமைப்புதற்குப் பெரிதும் பயன் பட்டன. நகரங்களை விட அதிகமான அக்கறை பின்பு, கோநகரங்களின் (இராசதானி) அமைப்பில் செலுத்தப்பட்டது.

இவ்வாறு நகரமைப்பு (Town Planning or urban Planning) என்பது ஒரு கலையாகவே உருவாயிற்று. பழந் தமிழர்களைப் பொறுத்தவரை கட்டடக் கலையைப் போலவே இக்கலையிலும் சிறந்து விளங்கியிருக்கிறார்கள்.

புகழ் பெற்ற பூம்புகார், மதுரை, காஞ்சி போன்ற கோநகரங்களே இதற்குச் சான்றாகும். நகரமைப்புக் கண்ணோட்டத்திலும், பண்பாட்டுக் கண்ணோட்டத்திலும்; பாதுகாப்புக் கண்ணோட்டத்திலும் இந்நகரங்கள் குறைவற அமைந்திருந்தன. நகரமைப்பு, ஊரமைப்புக் கலைகளில் பழந்தமிழர் சிறந்திருந்தனர் என்பதைப் பற்றிப் பல அறிஞர்களும், ஆய்வாளர்களும் குறிப்பிட்டுள்ளவை ஏற்கெனவே கூறப்பட்டுள்ளன.

தமிழர் நாகரிகம் மிகவும் பழமையானது என்ற உண்மையை உலகினர் அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். “சீனம், மிசிரம், யவனம் இன்னும் தேசம் பலவும் புகழ் வீசிக் கலை ஞானம் படைத் தொழில் வாணிகமும் மிக நன்று வளர்ந்த தமிழ்நாடு". கட்டிடக் கலை, இயந்திரக் கலை, நீர்ப்பாசனக் கலை, நகரமைப்புக் கலை, துறைமுக வளர்ச்சி, கப்பல் கட்டும் கலை, சிற்ப வேலைப்பாடுகள் முதலிய பல வகையான பொறியியல் கலைகளின் சிறப்புகளைப் பழந்தமிழ் மக்கள் பெற்றிருந்தனர்1 என்று. பொறியியல் வல்லுநரான அறிஞர் டி. முத்தையன் கூறுகிறார்.

"முதல் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க யாத்திரிகர்கள் இருவருள் ஒருவரான தாலமி காவிரிப்பூம்பட்டின நகரமைப்பின் சிறப்பைப் பாராட்டிக் கூறி விட்டுச் சென்றிருக்கிறார்”.2

"தமிழர்கள் கட்டடக் கலையில் உயர்திறன் பெற்றிருந்தனர். அவர்கள் வீடுகளும், பிற கட்டடங்களும் கலைத் திறன் மிக்கவையாயிருந்தன. அவர்களது சிறப்பாகத் திட்டமிடப்பட்ட நகரங்களும் கோயில்களும் புதை குழாய்களும், பிறவும், அவர் திறமை, பொறியியல் ஞானப் பெருமையைப் பற்றிப் பகுதி பகுதியாகப் பேசும்.”3 சில நகரமைப்பு முறைகள் பற்றியும் கூட அறிஞர் எஸ். வி. சுப்பிரமணியம் தம் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

"பரிபாடல் மதுரை நகர் தாமரை வடிவில் அமைந்திருந்ததாகக் கூறுகிறது. உள்ளே யானைகள் நுழையுமளவு பெரிய புதைகுழாய்களைப் பூமிக்கடியில் பதித்திருந்தமையைச் சிலம்பு செப்புகிறது. அது பாதாள வடிநீர் வழியாகப் (Under ground drainage) பயன்பட்டது எனத் தெரிகிறது.4

அவ்வாறு யானை புகுந்து புறப்படத்தக்க பெரிய பெரிய பாதாள வழிச் சாக்கரைகள் இன்றும் பம்பாய் போன்ற பெருநகரங்களில் அமைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.

இவ்வாறு பழந்தமிழர் நகரமைப்புத் திறன் பற்றிப் பலரும் கூறியுள்ளனர்.

மயமதத்தின் ஒரு பிரிவான சிற்பநூலே நகரமைப்புப் பற்றியும் விவரிப்பதாக வை. கணபதி அவர்கள் கருதுகிறார்கள்.5

சிலப்பதிகாரத்தில் பூம்புகார் நகர நிருமாணமே ‘மய மதம்’ என்னும் சிற்பநூல் இலக்கணப்படி அமைந்ததாகக் கூறப்படுகிறது.6

சிலம்பில் கோவலனும் கண்ணகியும் தங்கியிருந்த மாளிகையிலே அவர்களது கட்டில் வருணிக்கப்படுகையில் “மயன் விதித்தன்ன மணிக்கால் அமளிமிசை” 7என்கிறார் இளங்கோவடிகள். ஆகவே கட்டடக் கலைக்கு மட்டுமின்றி நகரமைப்புக் கலைக்கும் மயமதமே ஆதார நூல் ஆகிறது. மயன், பாண்டவர்க்கு நகரமைத்துக் கொடுத்த விவரம் பாரதக் கதையில் வருவதை யாவரும் அறிவர். மயன் சமைத்த நகரையும், மண்டபங்களையும் கண்டு, ஒரு கையின் ஐந்து விரல்களையும் விரித்து எண்ணத் தொடங் கியவர்கள் ஒன்று என்று அந்த ஒரு நகரை எண்ணி விரலை மடக்கிய பின், மற்ற நான்கு விரல்களும் எண்ணக் கட்டடமோ, நகரமோ அகப்படாமல், அப்படியே விரித்தபடி நிக்க நேரும் என்னும் பொருள்பட 'மண்மிசை நால் விரல் நிற்கும்'8 என்பார் பாரதம் பாடிய வில்லிபுத்துாரார்.

வரலாறு

தொடக்கத்தில் எடுத்த எடுப்பிலேயே நகரமைப்பு அமைந்து விடவில்லை. முதலில் சிறுசிறு குடியிருப்புகளைக் கொண்ட கிராமங்களையும், சிற்றுார்களையும் அமைக்கும் ஊரமைப்புத் (Rural Planning)தான் ஏற்பட்டது. பின்பு அது படிப்படியாய்ப் பெருகி நகரமைப்பு வரை விரிவடைந்தது என்பதே பொருத்தமாக இருக்கும். பரிணாம வளர்ச்சியும் அவ்வாறே நிகழ்ந்துள்ளது.

ஊரமைப்பும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து நிலங்களைச் சார்ந்தே நிகழ்ந்தது எனலாம்.

‘மயமதம்' சார்ந்த கருத்துகளின்படி ஊரமைப்பு, ஊரின் சுற்றளவை ஆதாரமாகக் கொண்டு ஐந்து வகையாகப் பிரிக்கப் பட்டிருந்தது.9

அக்கால அளவு முறைப்படி ஒரு தண்டம் என்பது நான்கு முழம் அல்லது பதினோரடி ஆகக் கணக்கிடப்பட்டிருந்தது.10

இந்த அளவுப்படி இத்தனை இத்தனை தண்டங்கள் கொண்ட கிராமங்களை நிறுவலாம் என்கிறார் மயன்.

அ. 20,000 தண்டங்கள் அளவு கொண்ட கிராமம்.
ஆ. 40,000 தண்டங்கள் கொண்ட கிராமம்
இ. 60,000 தண்டங்கள் சுற்றளவு கொண்ட கிராமம்.

ஈ. 80,000 தண்டங்கள் சுற்றளவு கொண்ட் கிராமம்.
உ, 1,00,000 தண்டங்கள் சுற்றளவு கொண்ட கிராமம்.

இந்தச் சுற்றளவிலும் கூட முழுப்பரப்பிலும் வீடுகளைக் கட்டிவிட முடியாது.

இதில் 20இல் ஒரு பாகமே வீடுகள் கட்டவும், கட்ட டங்கள் நிறுவவும் உரிய பகுதி.11

இப்படிக் குடியிருப்புக்கு ஒதுக்கப்படும் பகுதி குடும்ப பூமி என்று அழைக்கப்படும்.

எஞ்சிய இடம் விளை நிலங்கள், நீர் நிலைகள், ஏரி, குளம், மேய்ச்சல் நிலம், பயன்தரும் (காற்றோட்டமுள்ள) நல்ல மரஞ்செடி கொடிகள் இருக்க, தோப்புத் துரவுகள் அமைய ஒதுக்கப்படும்.12

இங்கே தமிழரின் ஊரமைப்பில் உள்ள அழகும், அறிவியலும் கவனிக்கப்பட வேண்டும். சுற்றுப்புறத் தூய்மை (Ecology) அழகு, பசுமை, தண்ணீர் வசதி ஆகியவற்றுக்கு ஒரு குறைவும் வரலாகாது என்று பத்தொன்பது பங்கு இம்முக்கியப் பிரிவுகளுக்கு ஒதுக்கி, ஒரு பங்கே கட்டடங்க்ளுக்கு ஒதுக்கியிருக்கும் நுணுக்கம் மிகப் பெரிதும் பாராட்டத் தக்கது.

இன்று மரம்,செடி கொடிகளுக்கும், நீர் நிலைகளுக்கும் நல்ல காற்றோட்டத்திற்கும் கூட இடமே விடாமல், கிடைக்கிற ஒவ்வொரு பகுதியையும் கட்டடக்காடு செய்து விடும் அநாகரிகத்தைக் காண்கிறோம். அதே சமயம் பழைய நகரமைப்பிலுள்ள இந்தப் பகுதி நம்மை வியக்கச் செய்கிறது.

அக்கால ஊரமைப்பில் மக்கள் வசிப்பதற்குரிய ஊர்கள். ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டன.13 அவையாவன:

1. கிராமம், 2. கேடம், 3. கர்வடம், 4. துர்க்கம், 5. நகரம்14 இந்த வரிசை முறை வளர்ச்சியில் நிறைந்த நிலையாகக் காணப்படும் நகரம் என்பது ஊரமைப்புக் கலையின் உள்ளது சிறத்தலாகப் (Evolution) படிப்படியாய் வளர்ந்திருக்கிறது எனக் கொள்ள வேண்டும். 'கிராமம்’ என்ற எல்லையில் ஊரமைப்பாகத் தோன்றிய கலை வளர்ச்சியின் நிறைவை, நகரமைப்பு என்ற உச்ச நிலையில் பெற்றுச் சிறந்திருக்கிறது.

மக்கள் தொகையும், நாகரிகமும், வாழ்க்கை வசதிகளும், வாணிகமும், சாலைகளும் பெருகப் பெருக நகரங்கள் ப்ல்கி வளர்ந்து வந்திருக்கின்றன.

இனிக் கிராமங்கள் எப்படி அமைக்கப்பட்டன. ஊரமைப்புத்திறன் எவ்வாறு படிப்படியாய் வளர்ந்து மேம்பாடுற்றது என்பனவற்றைக் காணலாம்.

கிராமங்களின் வடிவங்கள் (Blue Print) பழைய சிற்ப நூல்களில் விவரமாக விளக்கிக் கூறப்படுகின்றன.

அவ்வடிவங்களாவன:

1. தண்டகம், 2. சுவஸ்திகம், 3. பிரஸ்தரம், 4. பிரகீர்ணம், 5. நந்தியாவர்த்தம், 6. பராகம், 7. பத்மம், 8. ஸ்ரீபிரதிஷ்டிதம்

இப்பெயர்களும், பகுப்புகளும், ஊரில் அமையும் வீதிகளின் எண்ணிக்கை, போக்கு இவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தன.

தண்டகம்

ஊரின் வீதிகள் ஒரு தண்டத்தைப் போல (நீளக்கோல் போல) நீண்டு கிழக்கு முகமாகவாவது, வடக்கு முகமாகவாவது சென்று அச்சாலையின் நடுவில் நான்கு சந்துகள் இருப்பின் அக்கிராமம தண்டகம் என்று அழைக்கப்படும்.

சுவஸ்திகம்

ஊரின் வீதிகள் ஸ்வஸ்திக வடிவத்தில் போக்குடையவையாக இருப்பின் அவ்வூரமைப்பு சுவஸ்திகம் எனப்படும். காண அழகியதும் ஊரமைப்பிலேயே அரியதுமான் வடிவமைப்புச் சுவஸ்திகம் என்று அறிஞர் கருதுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரஸ்தரம்

ஊரின் கிழக்கு மேற்குப் பாகங்களில் வடக்குநோக்கிக் செல்லுகின்ற வழிகள் மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது இருப்பின் அது பிரஸ்தரம் என்று கூறப்படும். பிரஸ்தரம் என்பது இரத்தினம்.

பிரகீர்ணம்

கிழக்கு நோக்கி நான்கு வழிகளிலும், வடக்கு நோக்கி எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது, பதினொன்றாவது, பன்னிரண்டாவது வழிகளிலும் அமைப்பு வாய்த்தால் அது பிரகீர்ண வடிவாகும். பிரகீர்ணம் என்பது வீசுகிற, சாமரம் போல் பிடிசிறுத்து மேல் விரிவது.

நந்தியாவர்த்தம்

கிழக்கு மேற்காக ஐந்து வழிகளும் வடக்கு நோக்கிப் பதின்மூன்று முதல், பதினேழுவரை வழிகளும் நான்கு. திசைகளிலும் முக்கிய வழிகளும் அமைந்தது நந்தியா வர்த்தம். இவ்வூரின் உட்புறம் நந்தியாவர்த்தமாகச் சிறுசிறு விதிகளும் சந்துகளும் அமைந்திருக்கும். இது ஒரு பூ.

பராகம்

வடக்கு நோக்கிச் செல்லுகின்ற வழிகள் பதினெட்டு முதல் இருபத்திரண்டு வரையிலும் கிழக்கு மேற்காகச் செல்லுகின்ற வழிகள் ஆறும் அமைந்திருந்தால் அதற்குப்

பராகம் என்று பெயர். பராகம் என்றால் ஒரு மலை என்று. பொருள்படும். - -

பத்மம்

கிழக்கு மேற்கான போக்குடைய வழிகள் ஏழும் தெற்கு வடக்காகச் செல்லுகிற வழிகள் மூன்று முதல் ஏழு வரையும் அமையின் அது பத்மம் என்று கூறப்படும். பத்மமாவது தாமரைப்பூ.

ஸ்ரீபிரதிஷ்டிதம்

கிழக்கு மேற்கான போக்குடைய வழிகள் எட்டும், தென் வடலாகச் செல்லும் வழிகள் இருபத்தெட்டும் அக் கிராமத்தில் இருந்தால் அது ஸ்ரீபிரதிஷ்டிதம் எனப்படும். தெற்கு வடக்காகப் பதினாறு வழிகளும் கிழக்கு. மேற்காகப் பதினாறு வழிகளும் இருந்தாலும் அதுவும் ஸ்ரீபிரதிஷ்டிதம் எனப்படும். ஸ்ரீபிரதிஷ்டிதம் என்றால் திருமகளைத் தங்கச் செய்தல் எனப்படும்.

ஊர் வீதிகளின் அகலங்களும், அமைப்புக்களும். விரிவாக விளக்கிக் கூறப்பட்டுள்ளன. மழை நீரையும் கழிவு நீரையும் வெளியேற்றுவதற்காக நீர்த்தாரைகள் (Storm water drain) அமைக்கும் முறையும் கூறப்பட்டுள்ளது. சிற்ப நூல்களின் இவ்விவரங்கள் இன்றைய நவீன நகரமைப்பு முறையோடு பெரிதும் ஒத்து வருகின்றன.

மேலே கூறிய எட்டு வகை தவிர மயூரம் என்றொரு வகையும் இருந்திருக்க வேண்டுமென உய்த்துணரலாம். ஏனெனில், காஞ்சிபுர நகர் அமைப்பு மயிலின் உடலமைப் போடு ஒப்பிடப்பட்டுள்ளது. மேலும் நகரங்களில் எல்லாம் சிறந்தது காஞ்சி என்னும் பொருள்பட வடமொழிக் கவிஞர் பாரவி எழுதிய சுலோகம் ‘நகரேஷி காஞ்சி’ என்று கூறுகிறது.

இவ்வளவு புகழ் பெற்றுள்ள காஞ்சி நகரம் மயில் போன்ற அமைப்பை உடையது என்று வியந்து கூறப்பட் டிருக்கிறதெனின் நகரமைப்புக் கலை நூல்களின் பல்வேறு பிரிவுகளில் எங்காவது மயூரபாணி’ அல்லது மயூரம் என ஓர் வடிவமைப்பு இருக்க வேண்டுமென்பது ஆய்வாளர் களின் கருத்தாக இருக்கிறது. அக்கருத்தையும் இங்கே குறிப்பிடுதல் பொருத்தமானது.

கோட்டைச் சுவர்

எல்லாவிதமான கிராமங்களுக்கும் ஊர்களுக்கும் வெளியில் புறக்காவலாக அகழி சூழ்ந்த கோட்டைச் சுவர்கள் இருக்க வேண்டும் என்கிறது ஊரமைப்பு விதி.

இப்படி முழு அளவில் உள்ள ஒரே கிராமம் தென் தமிழகத்தில் நெல்லைப் பகுதியில் உள்ள ஸ்ரீ வைகுண்டத்தின் அருகிலுள்ள கோட்டைப் பிள்ளைமார் குடியிருப்பு’ என்பதாகும். அது கோட்டைச் சுவர்கள் சூழ உள்ளேதான் உள்ளது.

ஆற்றின்கரை ஊர்

பொதுவாக ஒரு கிராமம் அல்லது ஊர் ஆற்றின்,தென் கரையில் அமைந்திருந்தால் அவ்வூர் ஆற்றின் போக்கை ஒட்டி நீண்டு அமைந்திருத்தல் வேண்டும். அதுவே நல்லிலக்கணம்.

தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களும் ஊர்களும் ஆற்றின் கரைகளிலேயே அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

ஊர்ப் பகுப்பு முறை

ஒர் ஊரை அல்லது கிராமத்தை அமைத்து உருவாக்கும்பொழுது முழு இடத்தையும் எண்பத்தொரு சதுரங்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.

நடுவிலுள்ள இடத்தைப் பிரம்மபதம் என்று பிரித்துக் கொள்ள வேண்டும். அதைச் சுற்றிலும் உள்ள பதங் களைத் தெய்வபதம் என்று கொள்ள வேண்டும். அதைச் சுற்றியுள்ள இடங்களை மானுடபதம் என்று கொள்ள வேண்டும். இறுதியாக உள்ள பதங்கள் பைசாச பதம் எனப்படும்.

பிரம்ம பதம் நீங்கிய தெய்வ பதம் மானுட பதங்களில் மக்கள் வசிப்பதற்கான வீடுகளைக்கட்டலாம். இறுதியாக எஞ்சிய பைசாச பதங்களில் தொழிலாளர்களின் குடியிருப் புக்களைக் கட்டிக் கொள்வது வழக்கமாக இருந்து வந்தது15. ‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது தமிழ்ப் பழமொழி.

அது ஊர் அமைப்பு ஆயினும், சிற்றுார் அமைப்பு ஆயினும், நகரமைப்பு ஆயினும், கோநகரமைப்பு ஆயினும் நகரைக் கம்டுமுன் நல்ல இடத்தில் ஒரு கோயிலைக் கட்டிக்கொண்டு பிற பணிகளைத் தொடங்க வேண்டும் என்பது மயன் வகுத்த நகரமைப்பில் முதலிடம் பெறும் விதியாகும். 16

வீதிகள்

ஊரைச் சுற்றித் தேர்கள் முதலிய பெரிய வாகனங் களும் அரசர் வருவதற்கு ஏற்ற அகன்ற வீதிகள் அமைத் திருக்க வேண்டும். நகர இலக்கணத்தில் இது மிகவும் இன்றியமையாதது. இப்படி வீதிகள் அரச வீதி (இராச வீதி) என்றும் மங்களவீதி என்றும் குறிப்பிட்டுச் சிறப்பாகக் கூறப்படும். 17

ஊராயினும், சிற்றூராயினும், பேரூராயினும் எல்லா விதமான தேவதைகளுக்கும் கோயில்களை இடமறிந்து நிறுவ வேண்டும்.

மாடவீதிகள்

அமைப்பு முறை

கோயிலமைப்பிலும் திசை முறைகள், இடமுறைகள் போன்ற வரன்முறைகள் உண்டு. ஊருக்கு வடகிழக்கில் சிவன் கோயிலும், மேற்கே விஷ்ணு கோயிலும், தெற்கே முருகன் கோயிலும், கிழக்கே சூரியன் கோயிலும், தென் மேற்கு மூலையில் ஐயனார், பிள்ளையார் கோயில்களும், தென்கிழக்கே காளி கோயிலும், வடக்கே குபேரன், ஏழு கன்னிமார் கோயில்களும் நிர்மாணிக்கப்படலாம் என நகரமைப்புக் கலை விதிகள் உள்ளன.18

கிராமத்தின் மேற்கே சமணக் கோயில்களைக் கட்டலாம். ஊரின் குடியிருப்பு வீடுகள் தவிர மன்றம், அம்பலம், சாவடி, கோசாலை, பூந்தோட்டங்கள், இளமரக்கா, துறவியர் மடங்கள், அறக் கோட்டங்கள், மயானம், கடைகள் ஆகியவற்றுக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஒர் ஊரில் எந்தெந்தப் பகுதியில் யார் யார் குடியிருக்க வேண்டும் என்ற வரையறையும் நகரமைப் புக்குள் சொல்லப்பட்டிருக்கிறது.

பெருநகர் அமைப்பு

இனிப் பெருநகரங்களின் அமைப்பு அடுத்து வருகிறது. பரிணாம வளர்ச்சியின் அடுத்த இடம் என்பது நகரங்களும், கோநகரங்களும் ஆகும். அவை இடப் பரப்பினாலும், மக்கள் தொகையினாலும், வகையினாலும் பெருக்கமுடையவையாக அமைந்தன.

அ. சிறு நகரம்
ஆ. பெரு நகரம்
இ. கோநகரம் (இராசதானி)

என மூன்று பிரிவுகளைக் காண முடிகிறது. நகரமைப்பு இலக்கணப்படி ஒரு சிறிய நகரத்தின் சுற்றளவே பதினாறாயிரம் தண்டம் அல்லது 6,76,000 அடி ஆகும்.

நகரின் நான்கு திசைகளிலும் நான்கு எடுப்பான கோபுர வாயில்கள் இருக்க வேண்டும். மதிற்கூவர்களைப் பெற்றிருக்க (Walled city) வேண்டும் பல பொருள்களை வாங்கியும் விற்றும் வாணிபம் செய்யும் வணிகர்கள் பல ரைக் கொண்டதாயிருக்க வேண்டும். பலவகை மக்களுக் கான பல்வேறு தெருக்களும், வீதிகளும் நிறைந்திருக்க வேண்டும். பலவகைத் தெய்வங்களுக்கும் உரிய பல கோயில்களைக் கொண்டிருக்க வேண்டும். அத்தகுதிகள் உடையதே நகரம் எனப்படும். இனி ‘புரம்’ என்ற சிறப்புக்குரிய ஊர் எவ்வாறிருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. காடு அல்லது தோப்புக்கள் நிறைந்ததும் பலவகை மக்கள் வசிக்கக் கூடியதும் வணிகர்கள் நிறைந் ததுமாகிய நகரத்தைப் புரம் என்று கூறலாம்.

(உ-ம்.) காஞ்சிபுரம், சிங்கபுரம், கபாடபுரம், திரிசிரபுரம் .

சுற்றுப்புறத்திலே நதிகளாலும், மலைகளாலும் சூழப்பட்டு உழுதுண்டு வாழ்வோரும், தொழில் செய்வோரும் வசிக்கும் ஊர் கேடம் என்று அழைக்கப்படும், நான்கு பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்டு மக்கள் வாழ்க்கைக்குத் தகுதியுள்ள ஊர் கர் வடம் என அழைக்கப்படும்.

பட்டினம்-கோநகரம்

அயல் நாடுகளிலிருந்து இறக்குமதியான பல்வேறு பொருள்களை யுடையதும் பல திறப்பட்ட மக்கள் வாழ் வதும், வணிகர்கள் மிகுந்ததும், துறைமுகமுடையதும் கடற்கரை சார்ந்ததும், முத்து இரத்தினம், மணிகள்: பொற்காசுகள் புழங்குவதும் பட்டாடைகள் நிரம்பிக் கிடப் பதும் வெளிநாட்டு மக்கள் பலரும் குடியேறியுள்ள குடியிருப்புக்களை உடையதும் ஆன நகரம் பட்டினம் என்று சொல்லப்படும். 19 இத்தகைய இலக்கணம் முழுமையாகப் பெற்றது காவிரிப்பூம் பட்டினம் என்னும் பெயரையுடைய பூம்புகார் நகராகும்.

கோநகரங்கள் சுற்றிலும் கோட்டைச் சுவர்கள் கொண்டது. புறநகரில் படைகள் தங்கும் இடங்கள் கொண்டது. வானுயர் மாடமாளிகைகள் கூடகோபுரங்கள் கொண்டது. நால்வகைப் படை இருக்கைகள் கொண்டது. பலவகையான கோயில்களும் அம்பலங்களும் அறக்கோல் டங்களும் கொண்டது. அரசனின் அரண்மனையும் தோட் டமும், பூங்காக்களும் இளமரக்காவும் உடையது. இது மதுரை நகருக்குப் பொருந்தும். இதனை இராஜதானி’ என வடமொழியில் கூறுவர். ஆகக் கிராம அமைப்பு, ஊரமைப்பு, நகரமைப்பு என இக்கலை தோன்றி வளர்ந்த வரலாற்றினை ஒருவாறு அறிகிறோம்.

இனி நகரமைப்பையே நேர்முகமாகக் காணலாம். பூம்புகார், மதுரை ஆகிய இரு நகரங்கள் பற்றி முழுமை யாகவும், உறந்தை வஞ்சி, காஞ்சிபுரம் பற்றி ஒரளவு காண்பதும் இவ்வாய்வின் நோக்கமாகும்.

பூம்புகார், மதுரை ஆகிய இரு நகரங்களையும் நன்கறியச் சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு என்னும் இரு நூல்களே போதுமெனினும் தேவையான பிற மேற்கோள்களையும் நாடிக் கொள்ள வாய்ப்புக்கள் உள்ளன. மதுரை நகரின் புராண முறையான அமைப்பு வரலாற்றினைத் திருவிளையாடற் புராணம் கூறுகிறது.

உரிய தகுதிகளும் பட்டினம் என்கிற பெருமையும் இருப்பதால் முதலில் காவிரிப்பூம்பட்டினம் என்னும் பூம்புகாரை ஆராயலாம்.

வாணிகச் சிறப்பு, பல நாட்டினர் குடியிருப்பு-கலைப் பெருமைகள், அமைப்பு முறை ஆகியவற்றால் இந்நகரின் பெருமை முதன்மையானதாக அமைகிறது என்பதில் ஐயமில்லை. குறிப்புகள் :

1. டி. முத்தையன், தமிழர் நாகரிகம், ப.60.
2. ம. ரா. இளங்கோவன், தமிழர் தலைநகரங்கள், ப.45
3. The Tamil had a great skill in architecture. Their houses and other constructions speak of their concern for blending utilitarian aspects with artistic values. Their highly planned cities, temples, tunnels and so, speak volumes for their mastery in the field of Engineering.

—Dr. S. v. Subramanian, Tamil Culture-A Multi Dimensional phenomenon V world Tamil Conference Number, p. xxiii.

4. “Paripaadal talks about the lotus-shaped Madurai city. According to Cilampu, the underground drainages were wide and high enough for an elephant to pass through.”.

—Dr. s. v. Subramanian, V World Tamil Conference Number Tamil Culture-A Multi Dimensional Phenomenon, p. xxvii.

5. வை. கணபதி, 'ஊரமைப்புக் கலை’, இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டு மலர் கையேடு. ப.228
6. """ப.228
7. சிலப்பதிகாரம் 1:2:12
8. வில்லிபுத்தூரார் பாரதம். 1, இராசசூயச் சருக்கம் 13
9. வை. கணபதி, இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டு மலர் கையேடு ப.228
10. """ ப.228
11. """ ப.228
12. """ ப.228
13. """ ப.229
14. """ ப.229
15. """ ப.229
16. """ ப.229
17. """ ப.229
18. """ ப.229
19. """ ப.230


♫♫